கீதை சில குறிப்புகள்

 • பகவத் கீதை மகாபாரதத்தில் பீஷ்ம பர்வத்தில் 25ம் அத்தியாயம் தொடக்கமாக 42ம் அத்தியாயம் முடிய பதினெட்டு அத்தியாயங்கள் இடம் பெற்றுள்ளது.
 • கீதையில் மொத்தம் 700 ஸ்லோகங்கள் உள்ளன. இவற்றில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சொல்வதாக 620 ஸ்லோகங்கள், அர்ஜுனன் பேசுவது 57, சஞ்சயன் பேசுவது 67, ஒரே ஒரு ஸ்லோகம் திருதராஷ்டிரன் சொல்வதாக உள்ளது. இதற்கு ஒரு ஸ்லோகம் கூட உண்டு:

ஷட்சாதநி ஸவிம்சாதி ச்லோகானாம் ப்ராஹ கேசவ: |
அர்ஜுனஸ் ஸப்தபஞ்சாசத் ஸப்தஷஷ்டிந்து ஸஞ்ஜய: ||
த்ருதராஷ்ட்ர: ச்லோகமேகம் கீதாயா: மாநமுச்யதே ||

 • பாரதம் ஐந்தாவது வேதம் (பாரத: பஞ்சமோ வேத:),  என்பது வழக்கு. வேதத்தில் கர்ம காண்டம், ஞான காண்டம் என்று இரு பிரிவாகப் பிரிக்கப் படுகிறது. இதில் ஞான காண்டம், ஆத்மாவைக் குறித்த ஆராய்ச்சிகள் இடம் பெரும். ஞான காண்டத்துக்கு உபநிஷத் என்றும் பெயர் உண்டு.  அதே போல பாரதத்தில் ஞான காண்டமாக கீதை விளங்குகிறது. கீதையை ஓதினால் உபநிஷதங்கள் அனைத்தையும் கற்ற பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
 • சமஸ்க்ருதத்தில் கீதம் என்கிற சொல் நபும்சக லிங்கம். ஆனால் பகவத் கீதா என்ற சொல்லில் கீதா என்பது ஸ்த்ரிலிங்கமாக இருக்கிறது. வேதங்களில் ஞான காண்டமான உபநிஷத் என்கிற பெயர் கூட ஸ்த்ரி லிங்கம் தான்!
 • கீதையில் நான்காம் அத்தியாயம் வரை கிருஷ்ணன், அர்ஜுனனின் நண்பனாக பேசுகிறார். அதற்கு மேல் உள்ள அத்தியாயங்களில் கடவுளாக பேசுகிறார்.
 • கீதையை விண்ணை முட்டுகிற ஒரு அழகிய அலங்கார வளைவு (arch) போல உருவகித்தால், முதலில் போர் சம்பந்தப் பட்ட காட்சிகள் அந்த அலங்கார வளைவின் பூமியில் பதித்த ஒரு காலாக துவங்கி, நடுவில் விண்ணை முட்டுகிற நிலையில் தத்துவ அலசல்களாக வளர்ந்து (அங்கே போர் சம்பந்தமான பேச்சு இல்லை), இறுதியில் பூமியில் பதிந்துள்ள அலங்கார வளைவின் இன்னொரு காலாக போர் சம்பந்தப் பட்ட காட்சிகளுக்கு வந்து சேருகிறது.
 • கீதைக்கு சம்பிரதாய தரிசன உரைகள் தவிர்த்து, தென்னாட்டில் பாரதியாரின் உரை பெருமை வாய்ந்தது. அதே போல ராஜாஜியின் “கைவிளக்கு” என்னும் உரையும்,   பால கங்காதர திலகரின் “கர்ம யோகம்” என்கிற உரையும், மகாத்மா காந்தி எழுதிய “அநாஸக்தி யோகம்” என்கிற உரையும் பல மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டு பிரசித்தமாக உள்ளன.
 • கீதையில் (1:6) மகாரதன் என்று கூறப் படும் வீரன், தன்னையும், தன் தேர் சாரதி, குதிரைகளையும் பகைவரின் ஆயுதங்களால் அடிபடாமல் காப்பாற்றிக் கொண்டு, பதினாயிரம் வீரர்களுடன் போர் செய்பவன்.

மஹாரதா: ஏகாதசஸஹஸ்ராணி யோதயேத் யஸ்து தந்விநாம் |
சஸ்த்ரசாஸ்த்ரப்ரவீண: ச விஜ்ஞேய: ஸ: மஹாரத: ||

 • கீதையில் வரும் யோகம், க்ஷேமம் என்கிற வார்த்தைகளுக்கு பொருளாக, அடையாததை அடைதல் யோகம் என்றும் அடைந்ததைக் காத்தல் க்ஷேமம் என்றும் இவ்விரண்டையும் இறைவன் அளிக்கிறான் என்று கீதையில் சொல்லப் படுகிறது.
 • கீதையின் பதினெட்டு அத்தியாயங்களில், முதல் ஆறு ஜீவாத்ம தத்துவமாகவும், இரண்டாவது ஆறு அத்தியாயங்களில் பரமாத்ம தத்துவமாகவும், மூன்றாவது ஆறில் இவற்றின் தொகுப்பாகவும் அமைந்துள்ளது.
 • துர்யோதந: என்ற பெயருக்கு தீய வழியில் போர் புரிபவன் என்று பொருள் உண்டு. யுதிஷ்டிர: என்ற பெயருக்கு போரில் நிலையாக /யுத்தத்தில் ஸ்திரமாக இருப்பவர் என்று பொருள்.
 • பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சங்குக்கு பெயர் பாஞ்சஜன்யம் – இது பஞ்ச ஜனன் என்கிற அரக்கனைக் கொன்று அவன் எலும்பில் இருந்து செய்யப் பட்டது என்று கூறப் படுகிறது. அர்ஜுனனின் சங்கு தேவதத்தம் தேவர்களால் கொடுக்கப் பட்டது என்று பொருள். பௌண்ட்ரம் என்பது “புடி கண்டநே” என்கிற தாதுவிலிருந்து, எதிரிகள் மனதை பிளப்பது என்று பொருள் படுகிறது.