கற்பதற்கு எளிமையான கேரளத்தின் இரு காவியங்கள்

சம்ஸ்க்ருத மொழியைக் கற்கவேன்றே எழுதப் பட்ட காவியங்கள் பல உள்ளன. முக்கியமாக மகாகவி பட்டியின் ராவணவத காவியத்தைச் சொல்லலாம். இராமாயண கதையை அடிப்படையாக வைத்துக் கொண்டு பாணினியின் சூத்திரங்களை விளக்குமாறு மகாகவி பட்டியால் எழுதப் பட்ட காவியம் இது. ஆனால் இது எளிதில் ஸ்வாத்யாயமாக தனக்குத் தானே கற்பித்துக் கொள்ளும் வகையில் இல்லை. மகாகவி பட்டியே இவ்வாறு சொல்கிறார்:

व्याख्यागम्यमिदं काव्यमुत्सवः सुधियामलम्‌।
हता दुर्मेधसश्चास्मिन्‌ विद्वत्प्रियतया मया ।।

இதன் அர்த்தமாவது, சான்றோர்கள் போற்றும் வகையில் இக்காவியத்துக்கு நல்ல ஒரு ஆசிரியரின் உரையுடனே தான் கற்க முடியும். (தானே படித்துத் தெரிந்து கொள்ள முடியாது) இதனால் மூடர்கள் ஒழிவர் – அதாவது அவ்வாறு ஆசிரியரின் (அல்லது நல்ல உரையின்) துணை கொண்டு கற்பதால் மூடத்தனம் ஒழிந்து சிறந்த சான்றோன் ஆக முடியும் என்று கூறுகிறார். பட்டி காவியத்தை விட மிக எளிமையான முறையில் சம்ஸ்க்ருத மொழியைக் கற்பிக்கும் காவியங்களில் குறிப்பிடத் தக்கவை சில உண்டு.

கேரளத்தில் சம்ஸ்க்ருதம் கற்போருக்கு முக்கியமாக இரண்டு காவியங்களைச் சொல்லித் தருவர். அதில் ஒன்று ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட ஸ்ரீராமோதந்தம் என்கிற லகு காவியம் மற்றும் ஸ்ரீகிருஷ்ண விலாசம் என்கிற மகா காவியம்.

சிறுவர்கள் முதலில் எழுத்துக்கள், ராம: ராமௌ: ராமா: போன்ற விபக்திகள் கற்ற பின்பு இவ்விரு காவியங்களைச் சொல்லித் தருவர். இவற்றுடன் அமர கோசமும் சொல்லித் தருவதுண்டு. இந்த காவியங்களைக் கற்கும்போதே விபக்தி, சந்தி, சமாசம் ஆகியவையும் சொல்லித் தரப் படும். (விபக்தி என்பது வேற்றுமை உருபுகள், சந்தி என்பது எழுத்துக்களைச் சேர்க்கும் முறை, சமாசம் என்பது சொற்களைச் சேர்க்கும் முறை). ஸ்ரீராமோதந்தம் இயற்றிய கவி யார் என்று தெரியவில்லை.

ஸ்ரீராம + உதந்தம் என்பதில் உதந்தம் என்றால் கதை, சரித்திரம் என்று பொருள் படும். பொதுவாக சமஸ்க்ருதத்தை ஒரு சில வகுப்பினர் தான் கற்பார் என்று ஒரு கருத்து பரப்பப் பட்டுள்ளது. இதைப் பொய்யாக்கும்படியாக கேரளத்தில் எல்லா மக்களும் சாதி பாகுபாடின்றி சம்ஸ்க்ருதமும், ராமோதந்தம் முதலிய காவியங்களும் முற்காலத்திலேயே கற்றதற்கு சான்றுகள் உள்ளன. கடந்த சில பத்தாண்டுகள் வரை இது அரசு பாடத்திட்டத்திலேயே சொல்லித் தரப்பட்டது என்றால் இது எத்துணை பரவி இருந்தது என்று அறியலாம். 24000 ஸ்லோகங்கள் கொண்ட வால்மீகி ராமாயணத்தை வெறும் நூற்றி ஐம்பத்து மூன்று ஸ்லோகங்களில் அமைத்திருக்கிறார் கவி.

ஸ்ரீராமோதந்த காவியத்தின் முக்கிய நோக்கம் சமஸ்க்ருதத்தை கற்பிப்பதே. அதாவது ராமனின் கதையை உணர்ச்சி பூர்வமாக இதில் அமைக்கப் படவில்லை. மாறாக ஒரு இலக்கண புத்தகத்தை துணைக்கு வைத்துக் கொண்டு மொழியை கற்கக் கூடிய வகையிலேயே அமைந்துள்ளது. இந்த காவியம் முழுவதும் அனுஷ்டுப் சந்தத்தில் (வால்மீகி ராமாயணத்தைப் போலவே) அமைந்துள்ளது.

श्रीपतिं प्रणिपत्याहं श्रीवत्साङ्कितवक्षसम् ।
श्रीरामोदन्तमाख्यास्ये श्रीवाल्मीकिप्रकीर्तितम् ॥ १॥
पुरा विश्रवसः पुत्रो रावणो नाम राक्षसः ।
आसीदस्यानुजौ चास्तां कुम्भकर्णविभीषणौ ॥ २॥
ते तु तीव्रेण तपसा प्रत्यक्षीकृत्य वेधसम् ।
वव्रिरे च वरानिष्टानस्मादाश्रितवत्सलात् ॥ ३॥

முதல் ஸ்லோகம் தன்மை நிலையில் நிகழ்கால வேற்றுமையுடன் अहं आख्यास्ये என்று துவங்குகிறது. அடுத்த ஸ்லோகம் படர்கை நிலையில் ஒருமை மற்றும் இருமை ஆகிய வேர்ருமைகளுடன் அமைந்துள்ளது. மூன்றாவது ஸ்லோகம் பன்மையில் அமைந்துள்ளது. இதிலிருந்தே இது கற்றுக் கொள்பவர்களுக்காக அமைக்கப் பட்டது என்று தெரிந்து கொள்ளலாம்.
இந்த காவியம் உருவானது குறித்து உறுதியாகத் தெரியாவிட்டாலும், பழைய ஐதீகம் ஒன்று உண்டு. கேரளத்தில் வாசுதேவ பட்டதிரி என்று ஒரு சிறுவன் இருந்தான். அவனுக்கு கல்வி அறிவே இல்லை என்று எல்லோரும் பரிகாசம் செய்வதை எண்ணி வருந்தி ஒருநாள் தர்மசாஸ்தாவின் கோவிலில் சென்று அழுது தொழுதான். அவனுக்கு மனம் இறங்கிய சாஸ்தா அவனை சமையல் அறையிலிருந்து சில வாழைப் பழங்களை எடுத்து வந்து நைவேத்யம் செய்து விட்டு உண்ணுமாறு கூறினார். அவனும் அப்படியே செய்து கோவிலிலேயே இரவு தங்கி விட்டான். காலையில் எழுந்து அவன் பேசிய பேச்சுக்கள் எல்லாமே கவிதை ஆகின. இதைக் கேட்ட கோவிலில் வேலை செய்யும் வரசியர் என்ற பெண்மணி, வாசுதேவ பட்டதிரி தின்று விட்டு போட்ட வாழைப் பழ தோல்களை எடுத்து சாப்பிட்டுப் பார்த்தாள். அவளுக்கும் ஆச்சரியமாக வாக்கு வல்லமை கிட்டிற்று. அவள் தான் ஸ்ரீராமோதந்த காவியத்தை எழுதினாள். வாசுதேவ பட்டதிரி மிகவும் மேம்பட்ட யமக காவியமான யுதிஷ்டிர விஜயம் போன்ற மகா காவியங்களைப் இயற்றினார் என்று கூறுவர்.

***

ஸ்ரீ கிருஷ்ண விலாசம் ஒரு மகா காவியத்துக்குண்டான எல்லா இலக்கணங்களுடன் பன்னிரண்டு காண்டங்களில் அமைந்துள்ளது. அழகிய சொல் நயம், சந்த நயங்களுடன் அமைந்துள்ள இக்காவியத்தின் ஒரே குறை, இது முழுமை அடையாமல் பாதியிலேயே நின்று விட்டது தான். இதனை இயற்றிய சுகுமார கவி இறந்து போனாதால் தான் இக்காவியம் பாதியிலேயே நின்று போனது என்று கருதப் படுகிறது. ஆயினும் இதனுள் அமைந்துள்ள பனிரண்டு காண்டங்களே மிகச்சிறப்பாக உள்ளன.

सुकुमारकवेर्वाचां
विलास: कृष्णगोचर: |
सुकुमारपदार्थश्री: शेमुषी
मे विशोधयेत् ||
(விலாசினி உரை)

இக்காவியம் இயற்றிய சுகுமார கவியின் நிஜப் பெயர் பிரபாகரன் என்று இருக்கலாம் என்பதாக கூறுவர். பிரபல மீமாம்சகரான பிரபாகரரும் இவரும் ஒருவரே என்று கருதுவோரும் உளர். இவர் சோழ நாட்டினர் என்று கருதுவோரும் உளர். ஆனால் கேரளத்தைத் தவிர வெளியே இக்காவியம் பரவவில்லை என்பதால் இவர் கேரளத்தைச் சேர்ந்தவராகவே இருக்க வேண்டும்.

இக்கவிஞர் குறித்து ஒரு சுவாரசியமான ஐதீக கதை நிலவுகிறது.

பிரபாகரன் ஒரு மகா புத்திசாலி மாணவன். ஆனால் அவனது ஆசிரியரோ அவனை மிகவும் கொடுமைப் படுத்துவார். மிகவும் சிக்கலான விஷயங்களை மற்ற மாணவர்களுக்கு சொல்லித் தருவது போல பிரபாகரனுக்கு சொல்லித் தரமாட்டார். மிகவும் கடுமையான தண்டனைகள் கொடுப்பார். உண்மையில் அந்த ஆசான் பிரபாகரனின் அறிவை மெச்சி தானே முயற்சி செய்யட்டும் என்று தூண்டுவதற்காகவே இவ்வாறு செய்து வந்தார். இது தெரியாத அச்சிறுவன், ஒரு நாள் ஆசிரியர் மிகக் கடுமையான தண்டனை கொடுத்த போது தாங்க முடியாமல், அன்று இரவே ஆசானைக் கொன்று விடவேண்டும் என்று முடிவு செய்தான்.

அன்று இரவு ஆசான் தூங்கிய பின்பு அவர் தலையில் போடுவதற்காக ஒரு பெரிய கல்லையும் எடுத்துக் கொண்டு தயாராக ஒளிந்திருந்தான். அவனது ஆசான் அன்று இரவு உணவு உண்ணவில்லை. அவரது மனைவி ஏன் என்று கேட்கவும், இது போல பிரபாகரனுக்கு கடுமையான தண்டனை தந்ததை எண்ணி வருந்துவதாகவும் அவன் மிகச்சிறந்த மாணவன், அவன் மென்மேலும் வளருவதற்காகவே தான் கடுமையாக நடந்து கொள்வதாகவும் கூறினார். இதைக் கேட்ட பிரபாகரன் மனம் வருந்தி அக்கணமே மறைவிலிருந்து வெளியே வந்து அவர் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டான். அவரும் உடனே அவனை மன்னித்தார்.

ஆனால் அதில் சமாதானம் அடையாத பிரபாகரன் மறுநாள் அவ்வூர் பெரியோர்களிடம் இப்படி தன் குருவை கொல்ல முயற்சித்ததற்கு என்ன தண்டனை என்று கேட்கவும் அவர்கள் எல்லோரும் ஆலோசித்து குருத் துரோகத்திற்கு “துஷாக்கினி பிரவேசம்” என்கிற முறையில் தம்மைச் சுற்றி உமியைக் கொட்டி, தீவைத்து, பின் அந்த உமியுடன் கொஞ்சம் கொஞ்சமாக எரிந்து மடிவதே தண்டனை என்று கூறினர். இதனை உடனே ஏற்ற பிரபாகரன் தன் சக மாணாக்கர்களை அழைத்து அவர்கள் உதவியுடன் ஒரு குழியில் நின்ற படி தன்னைச் சுற்றி உமியைக் கொட்டி தீவைத்துக் கொண்டான்.

அதோடு மரணத்திற்குப் பின்பு நற்கதி அடைய விரும்பி இந்த ஸ்ரீ கிருஷ்ண விலாசம் என்ற மகாகாவியத்தை உரைக்கத் துவங்கினான். அவன் சொல்லச் சொல்ல மற்ற மாணாக்கர்கள் எழுதிக் கொண்டனர். ஆனால் முழுவதும் முடிக்கும் முன்பே பிரபாகரனாகிய சுகுமார கவியின் உயிர் பிரிந்தது. இதனாலேயே இக்காவியம் பாதியில் நின்று போனது என்று அந்த ஐதீகக் கதை கூறுகிறது.

“அபூர்ணத்துவம்” என்பது ஒரு குறை தான் என்றாலும் இதனை பின்னர் வந்த கவிஞர்கள் பலர் முயற்சித்தும் ஏனோ முழுமை செய்யப் படவில்லை. காளிதாசனே இம்முயற்சியில் ஈடுபட்டதாகவும் அதை மாகாளியே தடுத்துவிட்டதாகவும் கூட ஒரு ஐதீகம் உண்டு. ஆனால் பார்க்கப் போனால், கிருஷ்ண விலாசம் பெரும்பாலும் காளிதாசனின் முறையை பின்பற்றியே அமைந்துள்ளது. சொற்கள், காட்சிகள் கூட காளிதாச காவியங்களில் உள்ளது போலவே அமைக்கப் பட்டுள்ளது. காளிதாசனுடைய கவிதைகள் வைதர்பி என்னும் பாணியில் மிகவும் கடினமும் இல்லாமல், எளிமையும் இல்லாமல் அமைந்தவை. அதே முறையில் தான் ஸ்ரீ கிருஷ்ண விலாசமும் அமைந்துள்ளது. அழகிய வருணனைகள், கடினமில்லாத சொற்பிரயோகங்கள் இதன் தனிச்சிறப்பு.

சில உதாரணங்கள் பார்ப்போம்.

பிரம்மாவும் தேவர்களும் பாற்கடலுக்கு மகாவிஷ்ணுவை காணச் செல்கிறார்கள். அங்கே நுழையும்போதே துளசியின் மணம் அவர்களை பரவசப் படுத்துகிறது…

आनन्दयमास दिवौकसस्ता-
नाघ्रातशेषो मुनिमण्डलेन |
प्राकामपुण्य: पवनोपनीतो
वैकुण्ठवक्षस्तुलसी सुगन्ध: ||

திருமாலின் இரு கண்களை சூரியனுக்கும் சந்திரனுக்கும் ஒப்பிடுவர். இதனை விளையாட்டாக மகாலட்சுமி ஒரு தாமரை மலரை எடுத்து விஷ்ணுவின் ஒரு கண்ணில் கொஞ்ச நேரமும் மற்றொரு கண்ணில் கொஞ்ச நேரமுமாக காண்பித்து அது மலர்ந்து மலர்ந்து குவிவதை ரசிக்கிறாள்.

पर्यायत: पाणिधृतम् सरोजं
विन्यस्य विन्यस्य दृशो: पदव्याम् |
निद्रां प्रबोधञ्चमुहुर्नियन्तीम्
पद्मासनां सस्मितमीक्षमाणम् ||

குன்றை குடையாவெடுத்தாய் என்று ஆண்டாள் சொல்லுகிற கோவர்த்தன மலையை தூக்கிய சந்தர்பத்தில், அந்த குடையின் ஓரத்தில் முத்துச் சரங்கள் போல தண்ணீர் சிந்துகிறதாம். எதிரியின் அழிப்பு முயற்சி கூட அலங்காரமாகி விட்டதாக கூறுகிறார் கவி.

धारा परिवृतोपान्तो
दोर्दण्डेन धृतो हरे: |
अद्रिर्विडम्बयामास
छत्रं मुक्तागुणावृत्तं ||

காளிதாசனின் குமார சம்பவத்துக்கும் இக்காவியத்துக்கும் மிகுந்த ஒற்றுமை உண்டு. குமார சம்பவம் ஆரம்பிக்கும்போதும் अस्ति என்ற சொல்லில் துவங்குகிறது. ஸ்ரீகிருஷ்ண விலாசமும் அப்படியே. காளிதாசன் தனது குமார சம்பவத்தை ஆரம்பிக்கும்போது இமய மலையை வர்ணிக்கிறார். சுகுமார கவி மேரு மலையை காவியத்தின் துவக்கத்தில் வர்ணிக்கிறார். இதில் இன்னொரு குறிப்பு என்னவெனில் குமார சம்பவத்தைப் போலவே இதிலும் ஒரே சந்தம், ஒரே எண்ணிக்கையில் அந்த மேரு மலை வர்ணிக்கப் படுகிறது. இது போன்று பல இடங்களிலும் பல கட்டங்களிலும் காளிதாச காவியங்களை ஒத்து ஸ்ரீக்ருஷ்ண விலாசமும் அமைந்துள்ளது. எனினும் ஸ்ரீக்ருஷ்ண விலாசத்துக்கேன்றே தனித்துவம் அதன் எளிமையிலும் இனிமையிலுமே உள்ளது. இத்தனை நூற்றாண்டுகள் கடந்தும் இது இன்றும் கற்பிக்கப் படுகிறது என்பதே இதன் தனிச்சிறப்பு.

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)