கீதை – பதினெட்டாவது அத்தியாயம்

மோஷ சந்நியாச யோகம்

சந்நியாசமென்றாலும் தியாகமென்றாலும் ஒன்றே. ஆனால் காம்யகர்மத்தை அடியோடு விட்டுவிடுவது சந்நியாசமென்றும் நித்திய நைமித்திக கர்மங்களில் பற்றுதலையும் பலனையும் துறப்பது தியாகமென்றும் அறிய வேண்டும்.

எல்லாக் கர்மங்களையும் அடியோடு விட்டுவிட வேண்டுமென்று சிலர் கூறுவார்கள். அது கீதையின் கருத்தன்று. நித்திய, நைமித்திக கர்மங்களைச் செய்தே தீரவேண்டும்; செய்யாவிடில் பாபம் நேரிடும். மனிதன் செய்யும் ஒவ்வொரு காரியத்துக்கும் ஈசுவரன் முக்கிய காரணமாவான்.

அப்படியிருக்கத் தானே அவற்றைச் செய்துவிடுவதாக நினைப்பவன் மூடன். ஞானம், கர்மம், உறுதி, இன்பம் என்றிவை ஒவ்வொன்றும் சாத்விகம், ராஜசம், தமசம் என்று மூவகைப்பட்டிருக்கும். கடவுளைத் தமக்குரிய கர்மங்களால் ஆராதித்தால் சித்தி பெறலாம். இவ்விதம் கண்ணனுடைய உபதேசத்தைக் கேட்டு அர்ஜுனன் மயக்கமற்று நல்லறிவு பெற்றுப் போர் புரியத் தொடங்கினான் என்று சஞ்ஜயன் திருதராஷ்டிரனுக்குக் கூறினான்.


अर्जुन उवाच
संन्यासस्य महाबाहो तत्त्वमिच्छामि वेदितुम् ।
त्यागस्य च हृषीकेश पृथक्केशिनिषूदन ॥१८- १॥

அர்ஜுந உவாச
ஸந்ந்யாஸஸ்ய மஹாபா³ஹோ தத்த்வமிச்சா²மி வேதி³தும் |
த்யாக³ஸ்ய ச ஹ்ருஷீகேஸ² ப்ருத²க்கேஸி²நிஷூத³ந || 18- 1 ||

அர்ஜுந உவாச மஹாபா³ஹோ = அர்ஜுனன் சொல்லுகிறான், உயர் புயத்தோய்
ஹ்ருஷீகேஸ² = ஹ்ருஷீகேசா
கேஸி²நிஷூத³ந = கேசியைக் கொன்றவனே
ஸந்ந்யாஸஸ்ய தத்த்வம் = சந்நியாசத்தின் இயல்பையும்
த்யாக³ஸ்ய ச = தியாகத்தின் இயல்பையும்
ப்ருத²க் வேதி³தும் இச்சா²மி = பிரித்துக் கேட்க விரும்புகிறேன்

அர்ஜுனன் சொல்லுகிறான்: உயர் புயத்தோய், கண்ணா, கேசியைக் கொன்றாய் சந்நியாசத்தின் இயல்பையும் தியாகத்தின் இயல்பையும் பிரித்துக் கேட்க விரும்புகிறேன்.


श्रीभगवानुवाच
काम्यानां कर्मणां न्यासं संन्यासं कवयो विदुः ।
सर्वकर्मफलत्यागं प्राहुस्त्यागं विचक्षणाः ॥१८- २॥

ஸ்ரீப⁴க³வாநுவாச
காம்யாநாம் கர்மணாம் ந்யாஸம் ஸந்ந்யாஸம் கவயோ விது³: |
ஸர்வகர்மப²லத்யாக³ம் ப்ராஹுஸ்த்யாக³ம் விசக்ஷணா: || 18- 2 ||

ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்
காம்யாநாம் கர்மணாம் ந்யாஸம் = விருப்பத்தால் செய்யப்படும் கர்மங்களை துறப்பது
ஸந்ந்யாஸம் கவய: விது³: = சந்நியாசமென்று புலவர் தெரிவித்துளர்
ஸர்வகர்மப²ல த்யாக³ம் = எல்லாவிதச் செயல்களின் பலன்களையும் துறந்துவிடுதல்
த்யாக³ம் விசக்ஷணா: ப்ராஹு = தியாகமென்று ஞானிகள் கூறுவர்

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: விருப்பத்தால் செய்யப்படும் சலுகைகளைத் துறப்பது சந்நியாசமென்று புலவர் தெரிவித்துளர். எல்லாவிதச் செயல்களின் பலன்களையுந் துறந்துவிடுதல் தியாகமென்று ஞானிகள் கூறுவர்.


त्याज्यं दोषवदित्येके कर्म प्राहुर्मनीषिणः ।
यज्ञदानतपःकर्म न त्याज्यमिति चापरे ॥१८- ३॥

த்யாஜ்யம் தோ³ஷவதி³த்யேகே கர்ம ப்ராஹுர்மநீஷிண: |
யஜ்ஞதா³நதப:கர்ம ந த்யாஜ்யமிதி சாபரே || 18- 3||

ஏகே மநீஷிண: = சில அறிஞர்
கர்ம தோ³ஷவத் = கர்மங்கள் அனைத்தும் குற்றம் போலே கருதி
த்யாஜ்யம் இதி ப்ராஹு = விட்டுவிடவேண்டும் என்கிறார்கள்
யஜ்ஞ தா³ந தப: கர்ம = வேள்வி, தானம், தவம் என்ற செயல்களை
ந த்யாஜ்யம் இதி ச அபரே = விடக்கூடாது என்கிறார்கள் வேறு சிலர்

சில அறிஞர், செய்கையைக் குற்றம் போலே கருதி விட்டுவிடவேண்டும் என்கிறார்கள். வேறு சிலர், வேள்வி, தானம், தவம் என்ற செயல்களை விடக்கூடாது என்கிறார்கள்.


निश्चयं शृणु मे तत्र त्यागे भरतसत्तम ।
त्यागो हि पुरुषव्याघ्र त्रिविधः संप्रकीर्तितः ॥१८- ४॥

நிஸ்²சயம் ஸ்²ருணு மே தத்ர த்யாகே³ ப⁴ரதஸத்தம |
த்யாகோ³ ஹி புருஷவ்யாக்⁴ர த்ரிவித⁴: ஸம்ப்ரகீர்தித: || 18- 4||

ப⁴ரதஸத்தம = பாரதரில் சிறந்தவனே
புருஷவ்யாக்⁴ர = புருஷப் புலியே
தத்ர த்யாகே³ மே நிஸ்²சயம் ஸ்²ருணு = தியாக விஷயத்தில் நான் நிச்சயத்தைச் சொல்லுகிறேன் கேள்
ஹி த்யாக³: த்ரிவித⁴: ஸம்ப்ரகீர்தித: = தியாகம் மூன்று வகையாகக் கூறப்பட்டது

பாரதரில் சிறந்தவனே, புருஷப் புலியே, தியாக விஷயத்தில் நான் நிச்சயத்தைச் சொல்லுகிறேன்; கேள், தியாகம் மூன்று வகையாகக் கூறப்பட்டது.


यज्ञदानतपःकर्म न त्याज्यं कार्यमेव तत् ।
यज्ञो दानं तपश्चैव पावनानि मनीषिणाम् ॥१८- ५॥

யஜ்ஞதா³நதப:கர்ம ந த்யாஜ்யம் கார்யமேவ தத் |
யஜ்ஞோ தா³நம் தபஸ்²சைவ பாவநாநி மநீஷிணாம் || 18- 5||

யஜ்ஞ தா³ந தப: கர்ம = வேள்வி, தானம், தவம் என்ற செயல்களை
ந த்யாஜ்யம் = விடக் கூடாது
தத் கார்யமேவ = செய்யவே வேண்டும்
யஜ்ஞ: தா³நம் ச தப ஏவ = வேள்வியும் தானமும், தவமும்
மநீஷிணாம் பாவநாநி = அறிவுடையோரைத் தூய்மைப்படுத்துகின்றன.

வேள்வி, தானம், தவம் என்ற செயல்களை விடக் கூடாது. அவற்றைச் செய்யவே வேண்டும். வேள்வியும் தானமும், தவமும் அறிவுடையோரைத் தூய்மைப்படுத்துகின்றன.


एतान्यपि तु कर्माणि सङ्गं त्यक्त्वा फलानि च ।
कर्तव्यानीति मे पार्थ निश्चितं मतमुत्तमम् ॥१८- ६॥

ஏதாந்யபி து கர்மாணி ஸங்க³ம் த்யக்த்வா ப²லாநி ச |
கர்தவ்யாநீதி மே பார்த² நிஸ்²சிதம் மதமுத்தமம் || 18- 6||

து பார்த² = ஆனால் பார்த்தா
ஏதாநி கர்மாணி ஸங்க³ம் த்யக்த்வா = இச் செயல்களைக்கூட ஒட்டின்றியும்
ப²லாநி ச = பயன்களை வேண்டாமலும்
கர்தவ்யாநி இதி = செய்ய வேண்டும் என்பது
மே உத்தமம் நிஸ்²சிதம் மதம் = என்னுடைய உத்தமமான நிச்சயக் கொள்கை.

ஆனால் பார்த்தா, இச் செயல்களைக்கூட ஒட்டின்றியும், பயன்களை வேண்டாமலும் செய்ய வேண்டும் என்பது என் உத்தமமான நிச்சயக் கொள்கை.


नियतस्य तु संन्यासः कर्मणो नोपपद्यते ।
मोहात्तस्य परित्यागस्तामसः परिकीर्तितः ॥१८- ७॥

நியதஸ்ய து ஸந்ந்யாஸ: கர்மணோ நோபபத்³யதே |
மோஹாத்தஸ்ய பரித்யாக³ஸ்தாமஸ: பரிகீர்தித: || 18- 7||

து நியதஸ்ய கர்மண: = ஆனால் நியமத்தின் படியுள்ள செய்கையை
ஸந்ந்யாஸ: ந உபபத்³யதே = துறத்தல் தகாது
மோஹாத் தஸ்ய பரித்யாக³ = மதிமயக்கத்தால் அதனை விட்டுவிடுதல்
தாமஸ: பரிகீர்தித: = தமோ குணத்தால் நேர்வதென்பர்

நியமத்தின் படியுள்ள செய்கையைத் துறத்தல் தகாது. மதிமயக்கத்தால் அதனை விட்டுவிடுதல் தமோ குணத்தால் நேர்வதென்பர்.


दुःखमित्येव यत्कर्म कायक्लेशभयात्त्यजेत् ।
स कृत्वा राजसं त्यागं नैव त्यागफलं लभेत् ॥१८- ८॥

து³:க²மித்யேவ யத்கர்ம காயக்லேஸ²ப⁴யாத்த்யஜேத் |
ஸ க்ருத்வா ராஜஸம் த்யாக³ம் நைவ த்யாக³ப²லம் லபே⁴த் || 18- 8||

யத் கர்ம = எது செய்ய வேண்டிய கருமமோ
து³:க²ம் ஏவ இதி = துன்பமாகக் கருதி
காய க்லேஸ² ப⁴யாத் = உடம்புக்கு வருத்தம் நேருமென்ற பயத்தால்
த்யஜேத் = செய்யாமல் விடுவானேயானால்
ஸ: = அவன்
ராஜஸம் த்யாக³ம் க்ருத்வா = அவன் ராஜஸ தியாகம் செய்து
த்யாக³ ப²லம் ந லபே⁴த் ஏவ = தியாகப் பயனை அடையமாட்டான்

உடம்புக்கு வருத்தம் நேருமென்ற பயத்தால் ஒரு செய்கையைத் துன்பமாகக் கருதி, அதனை விட்டு விடுவோன் புரியும் தியாகம் ரஜோ குணத்தின் பாற்பட்டது. அதனால் அவன் தியாகப் பயனை அடையமாட்டான்.


कार्यमित्येव यत्कर्म नियतं क्रियतेऽर्जुन ।
सङ्गं त्यक्त्वा फलं चैव स त्यागः सात्त्विको मतः ॥१८- ९॥

கார்யமித்யேவ யத்கர்ம நியதம் க்ரியதேऽர்ஜுந |
ஸங்க³ம் த்யக்த்வா ப²லம் சைவ ஸ த்யாக³: ஸாத்த்விகோ மத: || 18- 9||

அர்ஜுந நியதம் யத் கர்ம = அர்ஜுனா நியமத்துக் கிணங்கிய செய்கையை
கார்யம் இதி ஏவ = இது செய்தற்கு உரியது’ என்னும் எண்ணத்தால்
ஸங்க³ம் ப²லம் ச த்யக்த்வா = ஒட்டுதலையும் பயன் வேண்டலையும் விடுத்து
க்ரியதே = செய்தால்
ஸ: ஏவ ஸாத்த்விக த்யாக³: மத: = அதுவே சாத்விக தியாகம் எனப்படும்

நியமத்துக் கிணங்கிய செய்கையை, ‘இது செய்தற்கு உரியது’ என்னும் எண்ணத்தால் செய்து, அதில் ஒட்டுதலையும் பயன் வேண்டலையும் ஒருவன் விட்டுவிடுவானாயின் அவனுடைய தியாகமே சாத்விகம் எனப்படும்.


न द्वेष्ट्यकुशलं कर्म कुशले नानुषज्जते ।
त्यागी सत्त्वसमाविष्टो मेधावी छिन्नसंशयः ॥१८- १०॥

ந த்³வேஷ்ட்யகுஸ²லம் கர்ம குஸ²லே நாநுஷஜ்ஜதே |
த்யாகீ³ ஸத்த்வஸமாவிஷ்டோ மேதா⁴வீ சி²ந்நஸம்ஸ²ய: || 18- 10||

ஸத்த்வஸமாவிஷ்ட: மேதா⁴வீ = சத்வ குணத்திலிசைந்து மேதாவியாய்
சி²ந்நஸம்ஸ²ய: த்யாகீ³ =ஐயங்களையறுத்த தியாகி
அகுஸ²லம் கர்ம = இன்பமற்ற செய்கையை
ந த்³வேஷ்டி = வெறுப்பதில்லை
குஸ²லே ந அநுஷஜ்ஜதே = இன்பமுடைய செய்கையில் பற்றுக் கொள்வதில்லை

சத்வ குணத்திலிசைந்து மேதாவியாய், ஐயங்களையறுத்த தியாகி இன்பமற்ற செய்கையைப் பகைப்பதில்லை. இன்பமுடைய செய்கையில் நசை யுறுவதில்லை.


न हि देहभृता शक्यं त्यक्तुं कर्माण्यशेषतः ।
यस्तु कर्मफलत्यागी स त्यागीत्यभिधीयते ॥१८- ११॥

ந ஹி தே³ஹப்⁴ருதா ஸ²க்யம் த்யக்தும் கர்மாண்யஸே²ஷத: |
யஸ்து கர்மப²லத்யாகீ³ ஸ த்யாகீ³த்யபி⁴தீ⁴யதே || 18- 11||

ஹி தே³ஹப்⁴ருதா = மேலும் உடம்பெடுத்தவனால்
அஸே²ஷத: கர்மாணி = முழுதுமே செய்கைகளை
த்யக்தும் ந ஸ²க்யம் = விட்டுவிட முடியாது
ய கர்ம ப²லத்யாகீ³ = எவன் செய்கைகளின் பயனைத் துறக்கிறானோ
ஸ: து த்யாகீ³ இதி அபி⁴தீ⁴யதே = அவனே தியாகி யெனப்படுவான்

(மேலும்) உடம்பெடுத்தவனால் செய்கைகளை முழுதுமே விட்டுவிட முடியாது. எவன் செய்கைகளின் பயனைத் துறக்கிறானோ, அவனே தியாகி யெனப்படுவான்.


अनिष्टमिष्टं मिश्रं च त्रिविधं कर्मणः फलम् ।
भवत्यत्यागिनां प्रेत्य न तु संन्यासिनां क्वचित् ॥१८- १२॥

அநிஷ்டமிஷ்டம் மிஸ்²ரம் ச த்ரிவித⁴ம் கர்மண: ப²லம் |
ப⁴வத்யத்யாகி³நாம் ப்ரேத்ய ந து ஸந்ந்யாஸிநாம் க்வசித் || 18- 12||

அநிஷ்டம் இஷ்டம் மிஸ்²ரம் ச = வேண்டப்படாதது, வேண்டப்படுவது, இரண்டும் கலப்பானது என
த்ரிவித⁴ம் கர்மண: ப²லம் = மூன்று வகைப்பட்ட கர்மப் பயன்கள்
அத்யாகி³நாம் ப்ரேத்ய ப⁴வதி = தியாகிகளல்லாதோருக்கு இறந்த பின்னர் ஏற்படுகிறது
ஸந்ந்யாஸிநாம் து க்வசித் ந =சந்நியாசிகளுக்கு எங்கும் பயன் கிடைப்பதில்லை

வேண்டப்படாதது, வேண்டப்படுவது, இரண்டும் கலப்பானது என மூன்று வகைப்பட்ட கர்மப் பயன்களைத் தியாகிகளல்லாதோர் இறந்த பின்னர் எய்துகின்றனர். சந்நியாசிகளுக்கு எங்கும் பயன் கிடைப்பதில்லை.


पञ्चैतानि महाबाहो कारणानि निबोध मे ।
सांख्ये कृतान्ते प्रोक्तानि सिद्धये सर्वकर्मणाम् ॥१८- १३॥

பஞ்சைதாநி மஹாபா³ஹோ காரணாநி நிபோ³த⁴ மே |
ஸாங்க்²யே க்ருதாந்தே ப்ரோக்தாநி ஸித்³த⁴யே ஸர்வகர்மணாம் || 18- 13||

மஹாபா³ஹோ = பெருந்தோளாய்
க்ருதாந்தே ஸாங்க்²யே = கர்மங்களின் முடிவிற்கான வழியை கூறும் சாங்கிய சாஸ்திரத்தில்
ஸர்வகர்மணாம் ஸித்³த⁴யே = எல்லாச் செயல்களும் நிறைவேறுதற்கு
ஏதாநி பஞ்சகாரணாநி ப்ரோக்தாநி = ஐந்தாகக் காரணங்கள் கூறப்பட்டன
மே நிபோ³த⁴ = (அவற்றை) என்னிடம் கேட்டுணர்

எல்லாச் செயல்களும் நிறைவேறுதற்குரிய காரணங்கள் சாங்கிய சாஸ்திரத்தில் ஐந்தாகக் கூறப்பட்டன. அவற்றை என்னிடம் கேட்டுணர், பெருந்தோளாய்.


अधिष्ठानं तथा कर्ता करणं च पृथग्विधम् ।
विविधाश्च पृथक्चेष्टा दैवं चैवात्र पञ्चमम् ॥१८- १४॥

அதி⁴ஷ்டா²நம் ததா² கர்தா கரணம் ச ப்ருத²க்³வித⁴ம் |
விவிதா⁴ஸ்²ச ப்ருத²க்சேஷ்டா தை³வம் சைவாத்ர பஞ்சமம் || 18- 14||

அத்ர அதி⁴ஷ்டா²நம் ச = அவை இடமும்
கர்தா ச = செயலை செய்பவன்
ப்ருத²க்³வித⁴ம் கரணம் ச = பலவிதக் கரணங்கள்
விவிதா⁴: ப்ருத²க் சேஷ்டா ச = வெவ்வேறு வகைப்பட்ட செயல் முறைகள்
தை³வம் ச பஞ்சமம் = இயற்கை என ஐந்து (காரணங்கள்)

அவை இடம், கர்த்தா, பலவிதக் கரணங்கள், வெவ்வேறு வகைப்பட்ட செயல் முறைகள், இயற்கை என ஐந்து.


शरीरवाङ्‌मनोभिर्यत्कर्म प्रारभते नरः ।
न्याय्यं वा विपरीतं वा पञ्चैते तस्य हेतवः ॥१८- १५॥

ஸ²ரீரவாங்‌மநோபி⁴ர்யத்கர்ம ப்ராரப⁴தே நர: |
ந்யாய்யம் வா விபரீதம் வா பஞ்சைதே தஸ்ய ஹேதவ: || 18- 15||

நர: ஸ²ரீர வாக் ‌மநோபி⁴: = மனிதன் உடம்பாலும் வாக்காலும் மனத்தாலும்
யத் கர்ம ப்ராரப⁴தே = எந்தச் செயலைத் தொடங்கினாலும்
ந்யாய்யம் வா விபரீதம் வா = அது நியாயமாயினும் விபரீதமாயினும்
தஸ்ய ஏதே பஞ்ச ஹேதவ: = அதற்கு இந்த ஐந்துமே காரணங்கள்

மனிதன் உடம்பாலும் வாக்காலும் மனத்தாலும் எந்தச் செயலைத் தொடங்கினாலும், அது நியாயமாயினும் விபரீதமாயினும், இவ்வைந்துமே அச்செயலின் ஏதுக்களாம்.


तत्रैवं सति कर्तारमात्मानं केवलं तु यः ।
पश्यत्यकृतबुद्धित्वान्न स पश्यति दुर्मतिः ॥१८- १६॥

தத்ரைவம் ஸதி கர்தாரமாத்மாநம் கேவலம் து ய: |
பஸ்²யத்யக்ருதபு³த்³தி⁴த்வாந்ந ஸ பஸ்²யதி து³ர்மதி: || 18- 16||

து ஏவம் ஸதி = இங்ஙனமிருக்கையில்
ய: அக்ருதபு³த்³தி⁴த்வாத் = எவன் புத்திக் குறைவால் ஆத்மாவை
தத்ர கேவலம் ஆத்மாநம் = அங்கே (கர்மங்களைச் செய்வதில்) தனிப்பொருளாகிய ஆத்மாவை
கர்தாரம் பஸ்²யதி = கர்த்தாவாக (தொழில் செய்பவனாக) காணுகிறானோ
ஸ து³ர்மதி: ந பஸ்²யதி = அந்த மூடன் காட்சியற்றவனேயாவான்

இங்ஙனமிருக்கையில், தனிப்பொருளாகிய ஆத்மாவைத் தொழில் செய்வோனாக எவன் புத்திக் குறைவால் காணுகிறானோ அந்த மூடன் காட்சியற்றவனேயாவான்.


यस्य नाहंकृतो भावो बुद्धिर्यस्य न लिप्यते ।
हत्वापि स इमाँल्लोकान्न हन्ति न निबध्यते ॥१८- १७॥

யஸ்ய நாஹங்க்ருதோ பா⁴வோ பு³த்³தி⁴ர்யஸ்ய ந லிப்யதே |
ஹத்வாபி ஸ இமாம்ல்லோகாந்ந ஹந்தி ந நிப³த்⁴யதே || 18- 17||

யஸ்ய அஹங்க்ருதோ பா⁴வ ந = எவருடைய (உள்ளத்தில்) நான் செய்கிறேன் என்னும் எண்ணம் இல்லையோ
யஸ்ய பு³த்³தி⁴ ந லிப்யதே = பற்றுதல்கள் அற்று மதியுடையவன்
ஸ: இமாந் லோகாந் = அவன் இந்த உலகங்கள் அனைத்தையும்
ஹத்வா அபி ந ஹந்தி ந நிப³த்⁴யதே = கொன்ற போதிலும் கொலையாளி யாகான்; பாவத்தில் கட்டுப்பட மாட்டான்

‘நான்’ எனுங் கொள்கை தீர்ந்தான், பற்றுதல்கள் அற்று மதியுடையான், அவன் இவ்வுலகத்தாரை யெல்லாங் கொன்ற போதிலும் கொலையாளி யாகான், கட்டுப்பட மாட்டான்.


ज्ञानं ज्ञेयं परिज्ञाता त्रिविधा कर्मचोदना ।
करणं कर्म कर्तेति त्रिविधः कर्मसंग्रहः ॥१८- १८॥

ஜ்ஞாநம் ஜ்ஞேயம் பரிஜ்ஞாதா த்ரிவிதா⁴ கர்மசோத³நா |
கரணம் கர்ம கர்தேதி த்ரிவித⁴: கர்மஸங்க்³ரஹ: || 18- 18||

ஜ்ஞாநம் ஜ்ஞேயம் பரிஜ்ஞாதா = அறிவு, அறியப்படுபொருள், அறிவோன்
த்ரிவிதா⁴ கர்மசோத³நா = இம்மூன்றும் செயல்களைத் தூண்டுவன
கர்தா கரணம் கர்ம இதி த்ரிவித⁴: = கர்த்தா, கருவி, செய்கை என்று மூன்று விதங்களும்
கர்மஸங்க்³ரஹ: = கர்மத்தின் அமைப்பு ஆகும்

அறிவு, அறியப்படுபொருள், அறிவோன், என இம்மூன்றும் செயல்களைத் தூண்டுவன. கருவி, செய்கை, கர்த்தா எனக் கர்மத்தின் அமைப்பு மூன்று பகுதிப்பட்டது.


ज्ञानं कर्म च कर्ता च त्रिधैव गुणभेदतः ।
प्रोच्यते गुणसंख्याने यथावच्छृणु तान्यपि ॥१८- १९॥

ஜ்ஞாநம் கர்ம ச கர்தா ச த்ரிதை⁴வ கு³ணபே⁴த³த: |
ப்ரோச்யதே கு³ணஸங்க்²யாநே யதா²வச்ச்²ருணு தாந்யபி || 18- 19||

கு³ணஸங்க்²யாநே = குணங்களை யெண்ணுமிடத்தே
ஜ்ஞாநம் கர்ம ச கர்தா ச = ஞானம், கர்மம், கர்த்தா
கு³ணபே⁴த³த: = இவை குண பேதங்களால்
த்ரிதா⁴ ஏவ = மும்மூன்று வகைப்படும் என்று
ப்ரோச்யதே = சொல்லப் படுகின்றன
தாநி அபி யதா²வத் ச்²ருணு = அவற்றையும் உள்ளபடி கேள்

குணங்களை யெண்ணுமிடத்தே, ஞானம், கர்மம், கர்த்தா இவை பேதங்களால் மும்மூன்று வகைப்படும். அவற்றையும் உள்ளபடி கேள்.


सर्वभूतेषु येनैकं भावमव्ययमीक्षते ।
अविभक्तं विभक्तेषु तज्ज्ञानं विद्धि सात्त्विकम् ॥१८- २०॥

ஸர்வபூ⁴தேஷு யேநைகம் பா⁴வமவ்யயமீக்ஷதே |
அவிப⁴க்தம் விப⁴க்தேஷு தஜ்ஜ்ஞாநம் வித்³தி⁴ ஸாத்த்விகம் || 18- 20||

ஏந விப⁴க்தேஷு = எந்த ஞானத்தினால் தனித்தனியான
ஸர்வபூ⁴தேஷு = உயிர்கள் அனைத்திலும்
அவிப⁴க்தம் அவ்யயம் ஏகம் பா⁴வம் = பிரிவற்ற நாசமற்ற ஒரே இயல்பை
ஈக்ஷதே = காணுகிறானோ
தத் ஜ்ஞாநம் ஸாத்த்விகம் வித்³தி⁴ = அந்த ஞானத்தை சாத்வீகமென்றறி

பிரிவுபட்டு நிற்கும் எல்லா உயிர்களிலும் பிரிவற்ற நாசமற்ற ஒரே இயல்பைக் காணும் ஞானம் சாத்வீகமென்றறி.


पृथक्त्वेन तु यज्ज्ञानं नानाभावान्पृथग्विधान् ।
वेत्ति सर्वेषु भूतेषु तज्ज्ञानं विद्धि राजसम् ॥१८- २१॥

ப்ருத²க்த்வேந து யஜ்ஜ்ஞாநம் நாநாபா⁴வாந்ப்ருத²க்³விதா⁴ந் |
வேத்தி ஸர்வேஷு பூ⁴தேஷு தஜ்ஜ்ஞாநம் வித்³தி⁴ ராஜஸம் || 18- 21||

து யத் ஜ்ஞாநம் = ஆனால் எந்த ஞானத்தின் மூலமாக
ஸர்வேஷு பூ⁴தேஷு = உயிர்களனைத்திலும்
ப்ருத²க்³விதா⁴ந் நாநாபா⁴வாந் = வெவ்வேறு வகைப்பட்ட பல இயல்புகள்
ப்ருத²க்த்வேந வேத்தி = பிரித்துக் காணும்
தத் ஜ்ஞாநம் ராஜஸம் வித்³தி⁴ = அந்த ஞானம் ராஜசம் என்றுணர்

உயிர்களனைத்திலும் வெவ்வேறு வகைப்பட்ட பல இயல்புகள் இருப்பதாகப் பிரித்துக் காணும் ஞானம் ராஜசமென்றுணர்.


यत्तु कृत्स्नवदेकस्मिन्कार्ये सक्तमहैतुकम् ।
अतत्त्वार्थवदल्पं च तत्तामसमुदाहृतम् ॥१८- २२॥

யத்து க்ருத்ஸ்நவதே³கஸ்மிந்கார்யே ஸக்தமஹைதுகம் |
அதத்த்வார்த²வத³ல்பம் ச தத்தாமஸமுதா³ஹ்ருதம் || 18- 22||

து யத் ஏகஸ்மிந் கார்யே = ஆனால் எந்த ஞானம் யாதேனும் ஒற்றைக் காரியத்தை
க்ருத்ஸ்நவத் ஸக்தம் = அனைத்துமாகக் கருதிப் பற்றுத லெய்துவதும்
தத் அஹைதுகம் = யுக்திக்கு பொருந்தாததும்
அதத்த்வார்த²வத் = உண்மையில் அறியாததும்
அல்பம் ச = அற்பத் தன்மை உடையதும்
தாமஸம் உதா³ஹ்ருதம் = தாமசமென்று கூறப்படும்

காரணங் கருதாமல், யாதேனும் ஒற்றைக் காரியத்தை அனைத்துமாகக் கருதிப் பற்றுத லெய்துவதும், உண்மையிலறியாததும், அற்பத் தன்மையுடையதும் ஆகிய ஞானம் தாமசமென்று கூறப்படும்.


नियतं सङ्गरहितमरागद्वेषतः कृतम् ।
अफलप्रेप्सुना कर्म यत्तत्सात्त्विकमुच्यते ॥१८- २३॥

நியதம் ஸங்க³ரஹிதமராக³த்³வேஷத: க்ருதம் |
அப²லப்ரேப்ஸுநா கர்ம யத்தத்ஸாத்த்விகமுச்யதே || 18- 23||

யத் கர்ம = எந்த செய்கை
நியதம் ஸங்க³ரஹிதம் = விதிப்படி பற்றுதல் இன்றி
அப²லப்ரேப்ஸுநா = பயனைக் கருதாமல்
அராக³த்³வேஷத: = விருப்பு வெறுப்பின்றி
க்ருதம் = செய்யப் படுகிறதோ
தத் ஸாத்த்விகம் உச்யதே = அது சாத்விக மெனப்படும்

பயன்களை வேண்டாதா னொருவன் பற்றுதலின்றி, விருப்பு வெறுப்பின்றிச் செய்யும் விதி தழுவிய செய்கை, சாத்விக மெனப்படும்.


यत्तु कामेप्सुना कर्म साहंकारेण वा पुनः ।
क्रियते बहुलायासं तद्राजसमुदाहृतम् ॥१८- २४॥

யத்து காமேப்ஸுநா கர்ம ஸாஹங்காரேண வா புந: |

க்ரியதே ப³ஹுலாயாஸம் தத்³ராஜஸமுதா³ஹ்ருதம் || 18- 24||

து யத் கர்ம = ஆனால் எந்த செயல்
புந: காமேப்ஸுநா = விருப்பங்களுக்கு வசப்பட்டவனால்
வா ஸாஹங்காரேண = அல்லது அகங்காரமுடையவனால்
ப³ஹுலாயாஸம் = செய்யப்படும் மிகுந்த ஆயசத்துக்கிடமான செய்கை
தத்³ ராஜஸம் உதா³ஹ்ருதம் = அது ராஜசம் எனப்படும்

விருப்பங்களுக்கு வசப்பட்டவனால் அல்லது அகங்காரமுடையவனால் செய்யப்படும் மிகுந்த ஆயசத்துக்கிடமான செய்கை ராஜசமெனப்படும்.


अनुबन्धं क्षयं हिंसामनवेक्ष्य च पौरुषम् ।
मोहादारभ्यते कर्म यत्तत्तामसमुच्यते ॥१८- २५॥

அநுப³ந்த⁴ம் க்ஷயம் ஹிம்ஸாமநவேக்ஷ்ய ச பௌருஷம் |
மோஹாதா³ரப்⁴யதே கர்ம யத்தத்தாமஸமுச்யதே || 18- 25||

யத் கர்ம அநுப³ந்த⁴ம் = எந்தச் செய்கையின் பின்விளைவையும்
க்ஷயம் = அதனால் பிறருக்கு நேரக்கூடிய நாசத்தையும்
ஹிம்ஸாம் = துன்பத்தையும்
பௌருஷம் ச = செய்வானது திறமையையும்
அநவேக்ஷ்ய = கருதாமல்
மோஹாத் ஆரப்⁴யதே = அறிவின்மையால் தொடங்கப்படுகிறதோ
தத் தாமஸம் உச்யதே =தாமச மெனப்படும்

செய்கையின் பின்விளைவையும், அதனால் பிறருக்கு நேரக்கூடிய நாசத்தையும், துன்பத்தையும், செய்வானது திறமையையும், கருதாமல், அறிவின்மையால் தொடங்கப்படுங் கர்மம் தாமச மெனப்படும்.


मुक्तसङ्गोऽनहंवादी धृत्युत्साहसमन्वितः ।
सिद्ध्यसिद्ध्योर्निर्विकारः कर्ता सात्त्विक उच्यते ॥१८- २६॥

முக்தஸங்கோ³ऽநஹம்வாதீ³ த்⁴ருத்யுத்ஸாஹஸமந்வித: |
ஸித்³த்⁴யஸித்³த்⁴யோர்நிர்விகார: கர்தா ஸாத்த்விக உச்யதே || 18- 26||

முக்தஸங்கோ³ = பற்றற்றவனாகவும்
அநஹம்வாதீ³ = நான் என்னும் எண்ணம் இல்லாதவனாகவும்
த்⁴ருத்யுத்ஸாஹஸமந்வித: = உறுதியும், ஊக்கமும் உடையவனாகவும்
ஸித்³தி⁴ அஸித்³த்⁴யோ நிர்விகார: = வெற்றி தோல்வியில் வேறுபாடற்றவனாகவும்
கர்தா ஸாத்த்விக உச்யதே = உள்ள கர்த்தாவை (செயல் ஆற்றுபவனை) சாத்வீகன் (ஒளியியல்பு) உடையவன் என்பர்.

நசைக ளற்றான், நானென்ப தற்றான்,
உறுதியுங் களிதரும் ஊக்கமு முடையான்,
வெற்றி தோல்வியில் வேறுபா டற்றான்-
இங்ஙன மாகித் தொழில்க ளியற்றுவோன்
ஒளியியல் புடையா னென்ப.


रागी कर्मफलप्रेप्सुर्लुब्धो हिंसात्मकोऽशुचिः ।
हर्षशोकान्वितः कर्ता राजसः परिकीर्तितः ॥१८- २७॥

ராகீ³ கர்மப²லப்ரேப்ஸுர்லுப்³தோ⁴ ஹிம்ஸாத்மகோऽஸு²சி: |
ஹர்ஷஸோ²காந்வித: கர்தா ராஜஸ: பரிகீர்தித: || 18- 27||

ராகீ³ = வேட்கையுடையோன்
கர்மப²லப்ரேப்ஸு = செய்கைப் பயன்களை விரும்புவோன்
லுப்³த⁴: = லோபி (பேராசை உள்ளவன்)
ஹிம்ஸாத்மக: = இடர் செய்வோன்
அஸு²சி: = தூய்மை யற்றோன்
ஹர்ஷஸோ²காந்வித: = இன்பதுன்பத்தால் பாதிக்கப் படுபவன்
கர்தா ராஜஸ: பரிகீர்தித: = இவ் வண்ணமாகித் தொழில் செய்வோன் ரஜோ குணத்தானென்பர்

வேட்கையுடையோன், செய்கைப் பயன்களை விரும்புவோன், லோபி, இடர் செய்வோன், தூய்மை யற்றோன், களிக்குந் துயிலுக்கும் வசப்பட்டோன் – இவ் வண்ணமாகித் தொழில் செய்வோன் ரஜோ குணத்தானென்பர்.


अयुक्तः प्राकृतः स्तब्धः शठो नैष्कृतिकोऽलसः ।
विषादी दीर्घसूत्री च कर्ता तामस उच्यते ॥१८- २८॥

அயுக்த: ப்ராக்ருத: ஸ்தப்³த⁴: ஸ²டோ² நைஷ்க்ருதிகோऽலஸ: |
விஷாதீ³ தீ³ர்க⁴ஸூத்ரீ ச கர்தா தாமஸ உச்யதே || 18- 28||

அயுக்த: = கட்டுப் படுத்தாத மன நிலை உடையவன்
ப்ராக்ருத: = அறிவு முதிர்ச்சி அடையாதவன்
ஸ்தப்³த⁴: = கர்வமுடையவன்
ஸ²ட²: = வஞ்சகம் உடையவன்
நைஷ்க்ருதிக: = பிறருடைய வாழ்க்கையை கெடுப்பவன்
விஷாதீ³ = கவலை கொண்டவன்
அலஸ: = சோம்பேறியும்
தீ³ர்க⁴ஸூத்ரீ ச = காலத்தை நீடித்துக்கொண்டே போவோன்
கர்தா தாமஸ உச்யதே = இவ்வண்ணமாகித் தொழில் செய்வோன் தமோ குணமுடையா னெனப்படுவான்

யோக நிலை பெறாதோன், அநாகரிகன், முரடன், வஞ்சகன், பொறாமையுடையோன், சோம்பேறி, ஏக்கம் பிடித்தவன், காலத்தை நீடித்துக்கொண்டே போவோன், இவ்வண்ணமாகித் தொழில் செய்வோன் தமோ குணமுடையா னெனப்படுவான்.


बुद्धेर्भेदं धृतेश्चैव गुणतस्त्रिविधं शृणु ।
प्रोच्यमानमशेषेण पृथक्त्वेन धनंजय ॥१८- २९॥

பு³த்³தே⁴ர்பே⁴த³ம் த்⁴ருதேஸ்²சைவ கு³ணதஸ்த்ரிவித⁴ம் ஸ்²ருணு |
ப்ரோச்யமாநமஸே²ஷேண ப்ருத²க்த்வேந த⁴நஞ்ஜய || 18- 29||

த⁴நஞ்ஜய = தனஞ்ஜயா
கு³ணத: ஏவ = குண வகையால்
பு³த்³தே⁴: த்⁴ருதே: ச = புத்திக்கும் மன உறுதிக்கும்
த்ரிவித⁴ம் பே⁴த³ம் = மூன்று விதமான வேறுபாட்டை
அஸே²ஷேண ப்ருத²க்த்வேந = முழுமையாகவும் பகுத்தும்
ப்ரோச்யமாநம் ஸ்²ருணு = உரைக்கிறேன், கேள்

குண வகையால் மூன்று விதமாகிய புத்தியின் வேற்றுமைகளையும், மிச்சமின்றிப் பகுத்துரைக்கிறேன்; தனஞ்ஜயா, கேள்.


प्रवृत्तिं च निवृत्तिं च कार्याकार्ये भयाभये ।
बन्धं मोक्षं च या वेत्ति बुद्धिः सा पार्थ सात्त्विकी ॥१८- ३०॥

ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச கார்யாகார்யே ப⁴யாப⁴யே |
ப³ந்த⁴ம் மோக்ஷம் ச யா வேத்தி பு³த்³தி⁴: ஸா பார்த² ஸாத்த்விகீ || 18- 30||

பார்த² = அர்ஜுனா
யா ப்ரவ்ருத்திம் நிவ்ருத்திம் ச = எது ப்ரவ்ருத்தி மார்க்கம், எது நிவ்ருத்தி மார்க்கம்
கார்யாகார்யே ப⁴யாப⁴யே ச = செய்யத்தக்கது யாது, தகாதது யாது, அச்சமெது, அஞ்சாமை யெது
ப³ந்த⁴ம் மோக்ஷம் ச வேத்தி = பந்தமெது, விடுதலை யெது என்பனவற்றைப் பகுத்தறியும்
ஸா பு³த்³தி⁴: ஸாத்த்விகீ = அந்த புத்தியே சாத்விக புத்தியாம்

தொழிலெது, ஒழிவு யாது, செய்யத்தக்கது யாது, தகாதது யாது, அச்சமெது, அஞ்சாமை யெது, பந்தமெது, விடுதலை யெது என்பனவற்றைப் பகுத்தறியும் புத்தியே, பார்த்தா, சாத்விக புத்தியாம்.


यया धर्ममधर्मं च कार्यं चाकार्यमेव च ।
अयथावत्प्रजानाति बुद्धिः सा पार्थ राजसी ॥१८- ३१॥

யயா த⁴ர்மமத⁴ர்மம் ச கார்யம் சாகார்யமேவ ச |
அயதா²வத்ப்ரஜாநாதி பு³த்³தி⁴: ஸா பார்த² ராஜஸீ || 18- 31||

பார்த² = பார்த்தா.
யயா த⁴ர்மம் அத⁴ர்மம் ச = எந்த புத்தியினால் தர்மத்தையும் அதர்மத்தையும்
கார்யம் அகார்யம் ஏவ ச = செய்யத் தக்கது, தகாதது
அயதா²வத் ப்ரஜாநாதி = உள்ளபடி அறியாத
ஸா பு³த்³தி⁴: ராஜஸீ = புத்தி ராஜச மெனப்படும்

தர்மத்தையும் அதர்மத்தையும் காரியத்தையும் அகாரியத்தையும் உள்ளபடி அறியாத புத்தி ராஜச மெனப்படும், பார்த்தா.


अधर्मं धर्ममिति या मन्यते तमसावृता ।
सर्वार्थान्विपरीतांश्च बुद्धिः सा पार्थ तामसी ॥१८- ३२॥

அத⁴ர்மம் த⁴ர்மமிதி யா மந்யதே தமஸாவ்ருதா |
ஸர்வார்தா²ந்விபரீதாம்ஸ்²ச பு³த்³தி⁴: ஸா பார்த² தாமஸீ || 18- 32||

பார்த² = பார்த்தா
யா தமஸா ஆவ்ருதா = எந்த புத்தி இருளால் கவரப்பட்டதாய்
அத⁴ர்மம் த⁴ர்மம் இதி ச = அதர்மத்தை தர்மமாகக் கருதுவதும்
ஸர்வார்தா²ந் விபரீதாந் ச = எல்லாப் பொருள்களையும் நேருக்கு மாறாக
மந்யதே = நினைக்கிறதோ
ஸா பு³த்³தி⁴: தாமஸீ = அது புத்தி தாமச புத்தியாம்

பார்த்தா, இருளால் கவரப்பட்டதாய், அதர்மத்தை தர்மமாகக் கருதுவதும் எல்லாப் பொருள்களையும் நேருக்கு மாறாகக் காண்பதும் ஆகிய புத்தி தாமச புத்தியாம்.


धृत्या यया धारयते मनःप्राणेन्द्रियक्रियाः ।
योगेनाव्यभिचारिण्या धृतिः सा पार्थ सात्त्विकी ॥१८- ३३॥

த்⁴ருத்யா யயா தா⁴ரயதே மந:ப்ராணேந்த்³ரியக்ரியா: |
யோகே³நாவ்யபி⁴சாரிண்யா த்⁴ருதி: ஸா பார்த² ஸாத்த்விகீ || 18- 33||

பார்த² = பார்த்தா
யயா அவ்யபி⁴சாரிண்யா த்⁴ருத்யா: = எந்த பிறழ்ச்சி இல்லாத உறுதியால்
யோகே³ந = யோகத்தின் மூலம்
மந: ப்ராண இந்த்³ரியக்ரியா: = மனம், உயிர், புலன்கள் இவற்றின் செயல்களை
தா⁴ரயதே = நிலை நிறுத்துகிறானோ
ஸா த்⁴ருதி: ஸாத்த்விகீ = அந்த உறுதியே சாத்வீகமாவது

மனம், உயிர், புலன்கள் இவற்றின் செயல்களைப் பிறழ்ச்சியில்லாத யோகத்துடன் தரிக்க வல்லதாகிய மன உறுதியே சாத்வீகமாவது, பார்த்தா.


यया तु धर्मकामार्थान्धृत्या धारयतेऽर्जुन ।
प्रसङ्गेन फलाकाङ्क्षी धृतिः सा पार्थ राजसी ॥१८- ३४॥

யயா து த⁴ர்மகாமார்தா²ந்த்⁴ருத்யா தா⁴ரயதேऽர்ஜுந |
ப்ரஸங்கே³ந ப²லாகாங்க்ஷீ த்⁴ருதி: ஸா பார்த² ராஜஸீ || 18- 34||

து பார்த² = ஆனால் பார்த்தா
அர்ஜுந = அர்ஜுனா
ப²லாகாங்க்ஷீ = பயன்களை விரும்புவோன்
யயா த்⁴ருத்யா = எந்த உறுதியினால்
ப்ரஸங்கே³ந = மிகுந்த பற்றோடு
த⁴ர்மகாமார்தா²ந் தா⁴ரயதே = அறம் பொருளின்பங்களை அடைவதிலே உறுதியாக இருக்கிறானோ
ஸா த்⁴ருதி: ராஜஸீ = அந்த உறுதி ராஜசம் ஆகும்

பார்த்தா, பற்றுத லுடையோனாய்ப் பயன்களை விரும்புவோன் அறம் பொருளின்பங்களைப் பேணுவதில் செலுத்தும் உறுதி ராஜச உறுதியாகும்.


यया स्वप्नं भयं शोकं विषादं मदमेव च ।
न विमुञ्चति दुर्मेधा धृतिः सा पार्थ तामसी ॥१८- ३५॥

யயா ஸ்வப்நம் ப⁴யம் ஸோ²கம் விஷாத³ம் மத³மேவ ச |
ந விமுஞ்சதி து³ர்மேதா⁴ த்⁴ருதி: ஸா பார்த² தாமஸீ || 18- 35||

யயா = எந்த (மன உறுதியினால்)
ஸ்வப்நம் ப⁴யம் ஸோ²கம் = உறக்கத்தையும் அச்சத்தையும், துயரத்தையும்
விஷாத³ம் = ஏக்கத்தையும்
மத³ம் = செருக்கையும்
ந விமுஞ்சதி = விடமுடியவில்லையோ
பார்த² த்⁴ருதி: ஸா தாமஸீ = பார்த்தா, அந்த உறுதி தமோ குணத்தைச் சார்ந்தது

பார்த்தா, உறக்கத்தையும் அச்சத்தையும், துயரத்தையும் ஏக்கத்தையும், மதத்தையும் மாற்றத் திறமையில்லாத மூட உறுதி தமோ குணத்தைச் சார்ந்தது.


सुखं त्विदानीं त्रिविधं शृणु मे भरतर्षभ ।
अभ्यासाद्रमते यत्र दुःखान्तं च निगच्छति ॥१८- ३६॥

ஸுக²ம் த்விதா³நீம் த்ரிவித⁴ம் ஸ்²ருணு மே ப⁴ரதர்ஷப⁴ |
அப்⁴யாஸாத்³ரமதே யத்ர து³:கா²ந்தம் ச நிக³ச்ச²தி || 18- 36||

ப⁴ரதர்ஷப⁴ = பாரதக் காளையே!
இதா³நீம் த்ரிவித⁴ம் ஸுக²ம் = இப்போது மூன்று விதமாகிய இன்பங்களை
மே ஸ்²ருணு = என்னிடமிருந்து கேள்
யத்ர அப்⁴யாஸாத் ரமதே = எதனிலே ஒருவன் பயிலப் பயில உவகை மிகுதியுறப் பெறுவானோ
து³:கா²ந்தம் ச நிக³ச்ச²தி = எதனில் துக்க நாச மெய்துவானோ

பாரதக் காளையே! இப்போது மூன்று விதமாகிய இன்பங்களைச் சொல்லுகிறேன், கேள். எதனிலே ஒருவன் பயிலப் பயில உவகை மிகுதியுறப் பெறுவானோ, எதனில் துக்க நாச மெய்துவானோ,


यत्तदग्रे विषमिव परिणामेऽमृतोपमम् ।
तत्सुखं सात्त्विकं प्रोक्तमात्मबुद्धिप्रसादजम् ॥१८- ३७॥

யத்தத³க்³ரே விஷமிவ பரிணாமேऽம்ருதோபமம் |
தத்ஸுக²ம் ஸாத்த்விகம் ப்ரோக்தமாத்மபு³த்³தி⁴ப்ரஸாத³ஜம் || 18- 37||

யத் அக்³ரே விஷம் இவ = எது தொடக்கத்தில் விஷத்தை ஒத்ததாய்
தத் பரிணாமே அம்ருதோபமம் = அது விளைவில் அமிர்தத்துக்கு ஒப்பாக மாறுகிறதோ
தத் ஸுக²ம் ஸாத்த்விகம் ப்ரோக்தம் = அந்த இன்பமே சாத்விகம் எனக் கூறப் படுகிறது
தத் ஆத்ம பு³த்³தி⁴ ப்ரஸாத³ஜம் = அது தன் (பரமாத்மாவைப் பற்றிய தெளிந்த) அறிவில் பிறப்பது

எது தொடக்கத்தில் விஷத்தை யொத்ததாய், விளைவில் அமிர்தமொப்ப மாறுவதோ, அந்த இன்பமே சாத்விகமாகும்; அஃது தன் மதியின் விளக்கத்திலே பிறப்பது.


विषयेन्द्रियसंयोगाद्यत्तदग्रेऽमृतोपमम् ।
परिणामे विषमिव तत्सुखं राजसं स्मृतम् ॥१८- ३८॥

விஷயேந்த்³ரிய ஸம்யோகா³த்³ யத் தத³க்³ரேऽம்ருதோபமம் |
பரிணாமே விஷமிவ தத்ஸுக²ம் ராஜஸம் ஸ்ம்ருதம் || 18- 38||

யத் விஷயேந்த்³ரிய ஸம்யோகா³த் = எது விஷயங்களிலே புலன்களைப் பொருத்துவதனால்
அக்³ரே அம்ருதோபமம் = தொடக்கத்தில் அமுதைப் போலிருந்து
பரிணாமே விஷமிவ = விளைவில் நஞ்சு போன்றதாய் முடியுமோ
தத்ஸுக²ம் ராஜஸம் ஸ்ம்ருதம் = அந்த இன்பம் ராஜசம் எனப்படும்

விஷயங்களிலே புலன்களைப் பொருத்துவதனால் தொடக்கத்தில் அமுதைப் போலிருந்து விளைவில் நஞ்சு போன்றதாய் முடியும் இன்பம் ராஜசமெனப்படும்.


यदग्रे चानुबन्धे च सुखं मोहनमात्मनः ।
निद्रालस्यप्रमादोत्थं तत्तामसमुदाहृतम् ॥१८- ३९॥

யத³க்³ரே சாநுப³ந்தே⁴ ச ஸுக²ம் மோஹநமாத்மந: |
நித்³ராலஸ்யப்ரமாதோ³த்த²ம் தத்தாமஸமுதா³ஹ்ருதம் || 18- 39||

யத் ஸுக²ம் அக்³ரே ச அநுப³ந்தே⁴ ச = எந்த சுகம் தொடக்கத்திலும் இறுதியிலும்
ஆத்மந: மோஹநம் = ஆத்மாவுக்கு மயக்கம் விளைவிப்பதாய்
நித்³ரா ஆலஸ்ய ப்ரமாத³: உத்த²ம் = உறக்கத்தினின்றும் சோம்பலினின்றும் தவறுதலின்றும் பிறக்கும்
தத் தாமஸம் உதா³ஹ்ருதம் = அது தாமசமென்று கருதப்படும்

தொடக்கத்திலும் இறுதியிலும் ஒருங்கே ஆத்மாவுக்கு மயக்கம் விளைவிப்பதாய், உறக்கத்தினின்றும் சோம்பலினின்றும் தவறுதலின்றும் பிறக்கும் இன்பம் தாமசமென்று கருதப்படும்.


न तदस्ति पृथिव्यां वा दिवि देवेषु वा पुनः ।
सत्त्वं प्रकृतिजैर्मुक्तं यदेभिः स्यात्त्रिभिर्गुणैः ॥१८- ४०॥

ந தத³ஸ்தி ப்ருதி²வ்யாம் வா தி³வி தே³வேஷு வா புந: |
ஸத்த்வம் ப்ரக்ருதிஜைர்முக்தம் யதே³பி⁴: ஸ்யாத்த்ரிபி⁴ர்கு³ணை: || 18- 40||

ப்ரக்ருதிஜை: = இயற்கையில் தோன்றும்
ஏபி⁴: த்ரிபி⁴: கு³ணை: = இம்மூன்று குணங்களினின்றும்
முக்தம் = விடுபட்ட
யத் ஸத்த்வம் ஸ்யாத் = எந்த உயிர் இருக்குமோ
தத் ப்ருதி²வ்யாம் வா = அது மண்ணுலகத்திலோ
தி³வி தே³வேஷு வா = வானுலகத்தில் தேவருள்ளேயொ
புந: ந அஸ்தி = வேறு இடங்களிலோ இல்லை.

இயற்கையில் தோன்றும் இம்மூன்று குணங்களினின்றும் விடுபட்ட உயிர் மண்ணுலகத்திலுமில்லை; வானுலகத்தில் தேவருள்ளேயுமில்லை.

ब्राह्मणक्षत्रियविशां शूद्राणां च परन्तप ।
कर्माणि प्रविभक्तानि स्वभावप्रभवैर्गुणैः ॥१८- ४१॥

ப்³ராஹ்மணக்ஷத்ரியவிஸா²ம் ஸூ²த்³ராணாம் ச பரந்தப |
கர்மாணி ப்ரவிப⁴க்தாநி ஸ்வபா⁴வப்ரப⁴வைர்கு³ணை: || 18- 41||

பரந்தப = எதிரிகளை வாட்டுபவனே
ப்³ராஹ்மண க்ஷத்ரியவிஸா²ம் ஸூ²த்³ராணாம் ச = பிராம்மணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் இவர்களுடைய
கர்மாணி = தொழில்கள்
ஸ்வபா⁴வப்ரப⁴வை: கு³ணை: = அவரவரின் இயல்பில் விளையும் குணங்களின்படி
ப்ரவிப⁴க்தாநி = வகுப்புற்றனவாம்

பரந்தபா! பிராம்மணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் இவர்களுடைய தொழில்கள் அவரவரின் இயல்பில் விளையும் குணங்களின்படி வகுப்புற்றனவாம்.


शमो दमस्तपः शौचं क्षान्तिरार्जवमेव च ।
ज्ञानं विज्ञानमास्तिक्यं ब्रह्मकर्म स्वभावजम् ॥१८- ४२॥

ஸ²மோ த³மஸ்தப: ஸௌ²சம் க்ஷாந்திரார்ஜவமேவ ச |
ஜ்ஞாநம் விஜ்ஞாநமாஸ்திக்யம் ப்³ரஹ்மகர்ம ஸ்வபா⁴வஜம் || 18- 42||

ஸ²மோ த³ம: தப: = மன அடக்கமும், புலனடக்கமும், தவமும்
ஸௌ²சம் = தூய்மை,
க்ஷாந்தி = பொறுமை,
ஆர்ஜவம் = நேர்மை
ஆஸ்திக்யம் = ஆத்திகம்
ஜ்ஞாநம் விஜ்ஞாநம் ஏவ = ஞானம், அனுபவம் மூலம் உணர்தலும்
ஸ்வபா⁴வஜம் ப்³ரஹ்ம கர்ம = இயல்பிலே தோன்றும் பிராம்மண கர்மங்களாகும்

அகக் கரணத்தை யடக்குதல், புறக் கரணத்தை யடக்குதல், தவம், தூய்மை, பொறுமை, நேர்மை, ஞானம், கல்வி, ஆத்திகம் இவை இயல்பிலே தோன்றும் பிராம்மண கர்மங்களாகும்.


शौर्यं तेजो धृतिर्दाक्ष्यं युद्धे चाप्यपलायनम् ।
दानमीश्वरभावश्च क्षात्रं कर्म स्वभावजम् ॥१८- ४३॥

ஸௌ²ர்யம் தேஜோ த்⁴ருதிர்தா³க்ஷ்யம் யுத்³தே⁴ சாப்யபலாயநம் |
தா³நமீஸ்²வரபா⁴வஸ்²ச க்ஷாத்ரம் கர்ம ஸ்வபா⁴வஜம் || 18- 43||

ஸௌ²ர்யம் = சூரத் தன்மை,
தேஜ: = ஒளி,
த்⁴ருதி: = உறுதி,
தா³க்ஷ்யம் ச = திறமை,
யுத்³தே⁴ அபி அபலாயநம் = போரில் புறங்காட்டாமை,
தா³நம் ஈஸ்²வரபா⁴வ: ச = ஈகை, இறைமை (ஆளும் தன்மை)
ஸ்வபா⁴வஜம் க்ஷாத்ரம் கர்ம = இயற்கையிலே தோன்றும் க்ஷத்திரிய கர்மங்களாகும்

சூரத் தன்மை, ஒளி, உறுதி, திறமை, போரில் புறங்காட்டாமை, ஈகை, இறைமை – இவை இயற்கையிலே தோன்றும் க்ஷத்திரிய கர்மங்களாகும்.


कृषिगौरक्ष्यवाणिज्यं वैश्यकर्म स्वभावजम् ।
परिचर्यात्मकं कर्म शूद्रस्यापि स्वभावजम् ॥१८- ४४॥

க்ருஷிகௌ³ரக்ஷ்யவாணிஜ்யம் வைஸ்²யகர்ம ஸ்வபா⁴வஜம் |
பரிசர்யாத்மகம் கர்ம ஸூ²த்³ரஸ்யாபி ஸ்வபா⁴வஜம் || 18- 44||

க்ருஷி கௌ³ரக்ஷ்ய வாணிஜ்யம் = உழவு, பசுக்காத்தல், வணிகம்
வைஸ்²யகர்ம ஸ்வபா⁴வஜம் = இவை இயற்கையிலே பிறக்கும் வைசியக் கர்மங்களாம்
பரிசர்யாத்மகம் கர்ம = மக்கள் அனைவருக்கும் தொண்டு புரிதல்
ஸூ²த்³ரஸ்ய அபி = சூத்திரனுக்கு
ஸ்வபா⁴வஜம் = அவனியற்கையாய் ஏற்பட்ட தொழில்

உழவு, பசுக்காத்தல், வணிகம் இவை இயற்கையிலே பிறக்கும் வைசியக் கர்மங்களாம். தொண்டு புரிதல் சூத்திரனுக்கு அவனியற்கையாய் ஏற்பட்ட தொழில்.


स्वे स्वे कर्मण्यभिरतः संसिद्धिं लभते नरः ।
स्वकर्मनिरतः सिद्धिं यथा विन्दति तच्छृणु ॥१८- ४५॥

ஸ்வே ஸ்வே கர்மண்யபி⁴ரத: ஸம்ஸித்³தி⁴ம் லப⁴தே நர: |
ஸ்வகர்மநிரத: ஸித்³தி⁴ம் யதா² விந்த³தி தச்ச்²ருணு || 18- 45||

ஸ்வே ஸ்வே கர்மணி = தனக்குத் தானே உரிய கர்மத்தில்
அபி⁴ரத: நர: = மகிழ்ச்சியுறும் மனிதன்
ஸம்ஸித்³தி⁴ம் லப⁴தே = ஈடேற்றம் பெறுகிறான்
ஸ்வகர்மநிரத: = தனக்குரிய தொழிலில் இன்புறுவோன்
யதா² ஸித்³தி⁴ம் விந்த³தி = எங்ஙனம் சித்தியடைகிறான் என்று
தத் ஸ்²ருணு = அதைக் கேள்

தனக்குத் தானே உரிய கர்மத்தில் மகிழ்ச்சியுறும் மனிதன் ஈடேற்றம் பெறுகிறான். தனக்குரிய தொழிலில் இன்புறுவோன் எங்ஙனம் சித்தியடைகிறானென்பது சொல்லுகிறேன் கேள்.


यतः प्रवृत्तिर्भूतानां येन सर्वमिदं ततम् ।
स्वकर्मणा तमभ्यर्च्य सिद्धिं विन्दति मानवः ॥१८- ४६॥

யத: ப்ரவ்ருத்திர்பூ⁴தாநாம் யேந ஸர்வமித³ம் ததம் |
ஸ்வகர்மணா தமப்⁴யர்ச்ய ஸித்³தி⁴ம் விந்த³தி மாநவ: || 18- 46||

யத: பூ⁴தாநாம் ப்ரவ்ருத்தி = எதிலிருந்து உயிர்கள் உண்டாயினவோ
யேந இத³ம் ஸர்வம் ததம் = எதனால் அனைத்தும் வியாபிக்கப் பட்டிருக்கிறதோ
தம் = அந்த பரமாத்மாவை
ஸ்வகர்மணா அப்⁴யர்ச்ய = தனக்குரிய கர்மத்தால் பூஜை செய்யும்
மாநவ: விந்த³தி = மனிதன் ஈடேறுகிறான்

உயிர்களுக்கெலாம் பிறப்பிடமாய், இவ்வையக மனைத்திலும் நிறைந்திருக்கும் கடவுளைத் தனக்குரிய கர்மத்தால் பூஜை செய்யும் மனிதன் ஈடேறுகிறான்.


श्रेयान्स्वधर्मो विगुणः परधर्मात्स्वनुष्ठितात् ।
स्वभावनियतं कर्म कुर्वन्नाप्नोति किल्बिषम् ॥१८- ४७॥

ஸ்²ரேயாந்ஸ்வத⁴ர்மோ விகு³ண: பரத⁴ர்மாத்ஸ்வநுஷ்டி²தாத் |
ஸ்வபா⁴வநியதம் கர்ம குர்வந்நாப்நோதி கில்பி³ஷம் || 18- 47||

ஸ்வநுஷ்டி²தாத் பரத⁴ர்மாத் = பிறர்க்குரிய தர்மத்தை நன்கு செய்வதைக் காட்டிலும்
விகு³ண: ஸ்வத⁴ர்ம: ஸ்²ரேயாந் = தனக்குரிய தர்மத்தை குணமின்றிச் செய்தலும் நன்று
ஸ்வபா⁴வ நியதம் குர்வந் = இயற்கையி லேற்பட்ட தொழிலை
கில்பி³ஷம் ந ஆப்நோதி = பாவமடைய மாட்டான்

பிறர்க்குரிய தர்மத்தை நன்கு செய்வதைக் காட்டிலும் தனக்குரிய தர்மத்தை குணமின்றிச் செய்தலும் நன்று. இயற்கையி லேற்பட்ட தொழிலைச் செய்வதனால் ஒருவன் பாவமடைய மாட்டான்.


सहजं कर्म कौन्तेय सदोषमपि न त्यजेत् ।
सर्वारम्भा हि दोषेण धूमेनाग्निरिवावृताः ॥१८- ४८॥

ஸஹஜம் கர்ம கௌந்தேய ஸதோ³ஷமபி ந த்யஜேத் |
ஸர்வாரம்பா⁴ ஹி தோ³ஷேண தூ⁴மேநாக்³நிரிவாவ்ருதா: || 18- 48||

கௌந்தேய = குந்தி மகனே
ஸஹஜம் கர்ம ஸதோ³ஷம் அபி = இயல்பான தொழில் குறையுடையதாயினும்
ந த்யஜேத் = கைவிடலாகாது
ஹி தூ⁴மேந அக்³நி: இவ = ஏனெனில் புகையால் சூழப் பட்ட தீ போல
ஸர்வாரம்பா⁴ = எல்லா தொழில்களிலும்
தோ³ஷேண ஆவ்ருதா: = சூழ்ந்தே நிற்கின்றன

குந்தி மகனே, இயல்பான தொழில் குறையுடையதாயினும், அதை கைவிடலாகாது. எல்லாத் தொழில்களையும் குறைகள் சூழ்ந்தே நிற்கின்றன.


असक्तबुद्धिः सर्वत्र जितात्मा विगतस्पृहः ।
नैष्कर्म्यसिद्धिं परमां संन्यासेनाधिगच्छति ॥१८- ४९॥

அஸக்தபு³த்³தி⁴: ஸர்வத்ர ஜிதாத்மா விக³தஸ்ப்ருஹ: |
நைஷ்கர்ம்யஸித்³தி⁴ம் பரமாம் ஸந்ந்யாஸேநாதி⁴க³ச்ச²தி || 18- 49||

அஸக்தபு³த்³தி⁴: = பற்றற்ற மதியுடன்
விக³தஸ்ப்ருஹ: ஸந்ந்யாஸேந = விருப்பம் தவிர்த்தவனாக
ஜிதாத்மா = தன்னை வென்றவன்
ஸர்வத்ர = எங்கும்
பரமாம் நைஷ்கர்ம்யஸித்³தி⁴ம் = செயல் இல்லாத பெரிதும் உயர்ந்த வெற்றியை (கர்மத்தளையிலிருந்து விடுபடும் வெற்றி)
அதி⁴க³ச்ச²தி = அடைகிறான்.

யாங்கணும் வீழ்விலா மதியுடையோனாய், தன்னை வென்று விருப்பந் தவிர்ந்து, பின்னர் செயலிலாப் பெரிதுயர்ந்த வெற்றியைத் துறவினால் எய்துவான்.


सिद्धिं प्राप्तो यथा ब्रह्म तथाप्नोति निबोध मे ।
समासेनैव कौन्तेय निष्ठा ज्ञानस्य या परा ॥१८- ५०॥

ஸித்³தி⁴ம் ப்ராப்தோ யதா² ப்³ரஹ்ம ததா²ப்நோதி நிபோ³த⁴ மே |
ஸமாஸேநைவ கௌந்தேய நிஷ்டா² ஜ்ஞாநஸ்ய யா பரா || 18- 50||

ஜ்ஞாநஸ்ய பரா நிஷ்டா² = ஞானத்தினுடைய உயர்ந்த நிலை
யா = எதுவோ
ஸித்³தி⁴ம் ப்ராப்த: = (அந்த) நிலையை அடைந்த மனிதன்
யதா² ப்³ரஹ்ம ஆப்நோதி = எங்ஙனம் பிரம்மத்தை அடைகிறானோ
ததா² = அந்த நிலையை
ஸமாஸேந ஏவ = சுருக்கமாக
மே நிபோ³த⁴ = என்னிடமிருந்து தெரிந்து கொள்
கௌந்தேய = குந்தி மைந்தனே!

சித்தியடைந்தவன் எங்ஙனம் பிரம்மத்தில் கலப்பதாகிய மிகச் சிறந்த ஞான நிலை யெய்துவா னென்பதைக் கூறுகிறேன், கேள்.


बुद्ध्या विशुद्ध्या युक्तो धृत्यात्मानं नियम्य च ।
शब्दादीन्विषयांस्त्यक्त्वा रागद्वेषौ व्युदस्य च ॥१८- ५१॥

பு³த்³த்⁴யா விஸு²த்³த்⁴யா யுக்தோ த்⁴ருத்யாத்மாநம் நியம்ய ச |
ஸ²ப்³தா³தீ³ந்விஷயாம்ஸ்த்யக்த்வா ராக³த்³வேஷௌ வ்யுத³ஸ்ய ச || 18- 51||

விஸு²த்³த்⁴யா பு³த்³த்⁴யா யுக்த: = தூய்மை பெற்ற புத்தியுடையோனாய்
த்⁴ருத்யா ஆத்மாநம் நியம்ய ச = உறுதியால் தன்னைக் கட்டுப்படுத்தி
ஸ²ப்³தா³தீ³ந் விஷயாந் த்யக்த்வா = ஒலி முதலிய புலன் நுகர் பொருட்களை துறந்து
ராக³ த்³வேஷௌ வ்யுத³ஸ்ய ச = விருப்பு வெறுப்புகளை எறிந்துவிட்டு

தூய்மை பெற்ற புத்தியுடையோனாய், உறுதியால் தன்னைக் கட்டுப்படுத்தி, ஒலி முதலிய விஷயங்களைத் துறந்து, விருப்பு வெறுப்புகளை எறிந்துவிட்டு,


विविक्तसेवी लघ्वाशी यतवाक्कायमानसः ।
ध्यानयोगपरो नित्यं वैराग्यं समुपाश्रितः ॥१८- ५२॥

விவிக்தஸேவீ லக்⁴வாஸீ² யதவாக்காயமாநஸ: |
த்⁴யாநயோக³பரோ நித்யம் வைராக்³யம் ஸமுபாஸ்²ரித: || 18- 52||

விவிக்தஸேவீ = தனி இடங்களை நாடுவோனாய்
லக்⁴வாஸீ² = எளிய உணவு உண்பவனாக
யதவாக்காயமாநஸ: = வாக்கு மனம் இவற்றை வசப்படுத்தி
நித்யம் த்⁴யாநயோக³பர: = தியான யோகத்தில் ஈடுபட்டிருந்து
வைராக்³யம் ஸமுபாஸ்²ரித: = பற்றின்மையை நன்கு பற்றியவனாய்

தனி இடங்களை நாடுவோனாய், ஆசைகள் குன்றி, வாக்கையும் உடம்பையும் மனத்தையும் வென்று, தியான யோகத்தில் ஈடுபட்டு, அப்போதும் பற்றின்மையை நன்கு பற்றியவனாய்,


अहंकारं बलं दर्पं कामं क्रोधं परिग्रहम् ।
विमुच्य निर्ममः शान्तो ब्रह्मभूयाय कल्पते ॥१८- ५३॥

அஹங்காரம் ப³லம் த³ர்பம் காமம் க்ரோத⁴ம் பரிக்³ரஹம் |
விமுச்ய நிர்மம: ஸா²ந்தோ ப்³ரஹ்மபூ⁴யாய கல்பதே || 18- 53||

அஹங்காரம் ப³லம் த³ர்பம் காமம் க்ரோத⁴ம் பரிக்³ரஹம் = அகங்காரம், வலிமை, செருக்கு, காமம், சினம், இரத்தல்
விமுச்ய = விடுத்து
நிர்மம: ஸா²ந்த: = மமகாரம் நீங்கி சாந்தநிலை கொண்டவன்
ப்³ரஹ்மபூ⁴யாய கல்பதே = பிரம்மமாகத் தகுவான்

அகங்காரம், வலிமை, செருக்கு, காமம், சினம், இரத்தல் இவற்றை விட்டும் மமகாரம் நீங்கி சாந்தநிலை கொண்டவன் பிரம்மமாகத் தகுவான்.


ब्रह्मभूतः प्रसन्नात्मा न शोचति न काङ्क्षति ।
समः सर्वेषु भूतेषु मद्भक्तिं लभते पराम् ॥१८- ५४॥

ப்³ரஹ்மபூ⁴த: ப்ரஸந்நாத்மா ந ஸோ²சதி ந காங்க்ஷதி |
ஸம: ஸர்வேஷு பூ⁴தேஷு மத்³ப⁴க்திம் லப⁴தே பராம் || 18- 54||

ப்³ரஹ்மபூ⁴த: ப்ரஸந்நாத்மா = பிரம்ம நிலை பெற்றோன், ஆனந்த முடையோன்
ந ஸோ²சதி ந காங்க்ஷதி = துயரற்றோன், விருப்பற்றோன்
ஸர்வேஷு பூ⁴தேஷு ஸம: = எல்லா உயிர்களையும் சமமாக நினைப்போன்
பராம் மத்³ப⁴க்திம் லப⁴தே = உயர்ந்ததாகிய என் பக்தியை அடைகிறான்

பிரம்ம நிலை பெற்றோன், ஆனந்த முடையோன், துயரற்றோன், விருப்பற்றோன், எல்லா உயிர்களையும் சமமாக நினைப்போன், உயர்ந்ததாகிய என் பக்தியை அடைகிறான்.


भक्त्या मामभिजानाति यावान्यश्चास्मि तत्त्वतः ।
ततो मां तत्त्वतो ज्ञात्वा विशते तदनन्तरम् ॥१८- ५५॥

ப⁴க்த்யா மாமபி⁴ஜாநாதி யாவாந்யஸ்²சாஸ்மி தத்த்வத: |
ததோ மாம் தத்த்வதோ ஜ்ஞாத்வா விஸ²தே தத³நந்தரம் || 18- 55||

மாம் ய: ச = என்னை யார் எனவும்
யாவாந் அஸ்மி ச = எத்தன்மை உடையவன் என்றும்
ப⁴க்த்யா தத்த்வத: அபி⁴ஜாநாதி = பக்தியாலேயே உள்ளபடி அறிகிறான்
தத: மாம் தத்த்வத: ஜ்ஞாத்வா = என்னை உள்ளபடி அறிந்து கொண்டபின்னர்
தத³நந்தரம் விஸ²தே = ‘தத்’ (அது) எனப்படும் பிரம்மத்தில் புகுவான்

யான் எவ்வளவுடையேன், யாவன் என என்னை யருவன் உள்ளபடி பக்தியாலேயே அறிகிறான். என்னை உள்ளபடி அறிந்து கொண்டபின்னர் ‘தத்’ (அது) எனப்படும் பிரம்மத்தில் புகுவான்.


सर्वकर्माण्यपि सदा कुर्वाणो मद्व्यपाश्रयः ।
मत्प्रसादादवाप्नोति शाश्वतं पदमव्ययम् ॥१८- ५६॥

ஸர்வகர்மாண்யபி ஸதா³ குர்வாணோ மத்³வ்யபாஸ்²ரய: |
மத்ப்ரஸாதா³த³வாப்நோதி ஸா²ஸ்²வதம் பத³மவ்யயம் || 18- 56||

மத்³வ்யபாஸ்²ரய: = என்னையே சார்பாகக் கொண்டோன்
ஸர்வ கர்மாணி = எல்லாத் தொழில்களையும்
ஸதா³ குர்வாண: அபி = எப்போதும் செய்து கொண்டிருந்தாலும்
மத்ப்ரஸாதா³த் = எனதருளால்
ஸா²ஸ்²வதம் அவ்யயம் பத³ம் = அழிவற்ற நித்தியப் பதவியை
அவாப்நோதி = எய்துகிறான்

எல்லாத் தொழில்களையும் எப்போதும் செய்து கொண்டிருந்தாலும், என்னையே சார்பாகக் கொண்டோன் எனதருளால் அழிவற்ற நித்தியப் பதவியை எய்துகிறான்.


चेतसा सर्वकर्माणि मयि संन्यस्य मत्परः ।
बुद्धियोगमुपाश्रित्य मच्चित्तः सततं भव ॥१८- ५७॥

சேதஸா ஸர்வகர்மாணி மயி ஸந்ந்யஸ்ய மத்பர: |
பு³த்³தி⁴யோக³முபாஸ்²ரித்ய மச்சித்த: ஸததம் ப⁴வ || 18- 57||

ஸர்வகர்மாணி = செயல்களை யெல்லாம்
சேதஸா = அறிவினால்
மயி ஸந்ந்யஸ்ய = எனக்கெனத் துறந்துவிட்டு
பு³த்³தி⁴யோக³ம் உபாஸ்²ரித்ய = புத்தி யோகத்தில் சார்புற்று
மத்பர: = என்னிடத்தே ஈடுபட்டு
ஸததம் மத் சித்த: ப⁴வ = எப்போதும் என்னைச் சித்தத்தில் கொண்டு இரு

அறிவினால் செயல்களை யெல்லாம் எனக்கெனத் துறந்துவிட்டு, என்னிடத்தே ஈடுபட்டு, புத்தி யோகத்தில் சார்புற்று, எப்போதும் என்னைச் சித்தத்தில் கொண்டு இரு.


मच्चित्तः सर्वदुर्गाणि मत्प्रसादात्तरिष्यसि ।
अथ चेत्त्वमहंकारान्न श्रोष्यसि विनङ्क्ष्यसि ॥१८- ५८॥

மச்சித்த: ஸர்வது³ர்கா³ணி மத்ப்ரஸாதா³த்தரிஷ்யஸி |
அத² சேத்த்வமஹங்காராந்ந ஸ்²ரோஷ்யஸி விநங்க்ஷ்யஸி || 18- 58||

மத் சித்த: = என்னைச் சித்தத்தில் கொண்டிருப்போனாய்
ஸர்வது³ர்கா³ணி = எல்லாத் தடைகளையும்
மத்ப்ரஸாதா³த் = எனதருளால்
தரிஷ்யஸி = கடந்து செல்வாய்
அத² அஹங்காராத் த்வம் ந ஸ்²ரோஷ்யஸி சேத் = அன்றி நீ அகங்காரத்தால் இதனைக் கேளாது விடுவாயாயின்
விநங்க்ஷ்யஸி = அழிந்து போவாய்

என்னைச் சித்தத்தில் கொண்டிருப்போனாய் எல்லாத் தடைகளையும் எனதருளால் கடந்து செல்வாய். அன்றி நீ அகங்காரத்தால் இதனைக் கேளாது விடுவாயாயின், பெரிய நாசத்தை அடைவாய்.


यदहंकारमाश्रित्य न योत्स्य इति मन्यसे ।
मिथ्यैष व्यवसायस्ते प्रकृतिस्त्वां नियोक्ष्यति ॥१८- ५९॥

யத³ஹங்காரமாஸ்²ரித்ய ந யோத்ஸ்ய இதி மந்யஸே |
மித்²யைஷ வ்யவஸாயஸ்தே ப்ரக்ருதிஸ்த்வாம் நியோக்ஷ்யதி || 18- 59||

யத் அஹங்காரம் ஆஸ்²ரித்ய = எந்த அகங்காரத்தின் வசப்பட்டு
ந யோத்ஸ்யே இதி மந்யஸே = நான் யுத்தம் செய்ய மாட்டேன் என்று நினைக்கிறாயோ
தே ஏஷ: வ்யவஸாய: மித்²யா = இந்தத் தீர்மானம் பொய்யானது
ப்ரக்ருதி: த்வாம் நியோக்ஷ்யதி = (ஏனெனில்) இயற்கை உன்னை வலுவில் ஈடுபடுத்தும்

நீ அகங்காரத்திலகப்பட்டு “இனிப் போர் புரியேன்” என்று துணிவாயாயின், நினது துணிவு பொய்மைப்பட்டுப்போம். இயற்கை உன்னைப் போரிற் பிணிக்கும்.


स्वभावजेन कौन्तेय निबद्धः स्वेन कर्मणा ।
कर्तुं नेच्छसि यन्मोहात्करिष्यस्यवशोऽपि तत् ॥१८- ६०॥

ஸ்வபா⁴வஜேந கௌந்தேய நிப³த்³த⁴: ஸ்வேந கர்மணா |
கர்தும் நேச்ச²ஸி யந்மோஹாத்கரிஷ்யஸ்யவஸோ²ऽபி தத் || 18- 60||

கௌந்தேய = குந்தியின் மகனே!
யத் மோஹாத் கர்தும் ந இச்ச²ஸி = எந்த செயலை மயக்கத்தால் அதனைச் செய்ய விரும்பாயெனினும்
தத் அபி ஸ்வேந ஸ்வபா⁴வஜேந கர்மணா = அதையும் நீ உன்னுடைய இயல்பான கர்ம வினையால்
நிப³த்³த⁴: = கட்டப் பட்டு
அவஸ²: கரிஷ்யஸி = தன் வசமின்றியேனும் அதைச் செய்யலாவாய்

இயற்கையில் தோன்றிய ஸ்வகர்மத்தால் கட்டுண்டிருக்கும் நீ, மயக்கத்தால் அதனைச் செய்ய விரும்பாயெனினும், தன் வசமின்றியேனும் அதைச் செய்யலாவாய்.


ईश्वरः सर्वभूतानां हृद्देशेऽर्जुन तिष्ठति ।
भ्रामयन्सर्वभूतानि यन्त्रारूढानि मायया ॥१८- ६१॥

ஈஸ்²வர: ஸர்வபூ⁴தாநாம் ஹ்ருத்³தே³ஸே²ऽர்ஜுந திஷ்ட²தி |
ப்⁴ராமயந்ஸர்வபூ⁴தாநி யந்த்ராரூடா⁴நி மாயயா || 18- 61||

அர்ஜுந = அர்ஜுனா
யந்த்ராரூடா⁴நி ஸர்வபூ⁴தாநி = உடல் என்கிற எந்திரத்தில் ஏற்றி அனைத்து உயிர்களையும்
ஈஸ்²வர: = ஈசுவரன்
மாயயா ப்⁴ராமயந் = மாயையினால் சுழற்றிக் கொண்டு
ஸர்வபூ⁴தாநாம் ஹ்ருத்³தே³ஸே² = எல்லா உயிர்களின் உள்ளத்தில்
திஷ்ட²தி = நிற்கிறான்

அர்ஜுனா, எல்லா உயிர்களுக்கும் ஈசன் உள்ளத்தில் நிற்கிறான். மாயையால் அவன் எல்லா உயிர்களையும் சக்கரத்திலேற்றிச் சுழற்றுகிறான்.


तमेव शरणं गच्छ सर्वभावेन भारत ।
तत्प्रसादात्परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम् ॥१८- ६२॥

தமேவ ஸ²ரணம் க³ச்ச² ஸர்வபா⁴வேந பா⁴ரத |
தத்ப்ரஸாதா³த்பராம் ஸா²ந்திம் ஸ்தா²நம் ப்ராப்ஸ்யஸி ஸா²ஸ்²வதம் || 18- 62||

பா⁴ரத = பாரதா
ஸர்வபா⁴வேந = எல்லா வடிவங்களிலும்
தம் ஏவ ஸ²ரணம் க³ச்ச² = அவனையே சரணெய்து!
தத்ப்ரஸாதா³த் = அவனருளால்
பராம் ஸா²ந்திம் ஸா²ஸ்²வதம் ஸ்தா²நம் = பரம சாந்தியாகிய நித்திய ஸ்தானத்தை
ப்ராப்ஸ்யஸி = அடைவாய்

அர்ஜுனா, எல்லா வடிவங்களிலும் அவனையே சரணெய்து, அவனருளால் பரம சாந்தியாகிய நித்திய ஸ்தானத்தை எய்துவாய்.


इति ते ज्ञानमाख्यातं गुह्याद्‌गुह्यतरं मया ।
विमृश्यैतदशेषेण यथेच्छसि तथा कुरु ॥१८- ६३॥

இதி தே ஜ்ஞாநமாக்²யாதம் கு³ஹ்யாத்³கு³ஹ்யதரம் மயா |
விம்ருஸ்²யைதத³ஸே²ஷேண யதே²ச்ச²ஸி ததா² குரு || 18- 63||

இதி கு³ஹ்யாத் கு³ஹ்யதரம் ஜ்ஞாநம் = இங்ஙனம் ரகசியத்திலும் ரகசியமாகிய ஞானத்தை
மயா தே ஆக்²யாதம் = என்னால் உனக்கு கூறப்பட்டது
ஏதத் அஸே²ஷேண விம்ருஸ்²ய = இதனை முற்றிலும் ஆராய்ச்சி செய்து
யதா² இச்ச²ஸி ததா² குரு = எப்படி இஷ்டமோ அப்படிச் செய்

இங்ஙனம் ரகசியத்திலும் ரகசியமாகிய ஞானத்தை உனக்குரைத்தேன். இதனை முற்றிலும் ஆராய்ச்சி செய்து எப்படி இஷ்டமோ அப்படிச் செய்.


सर्वगुह्यतमं भूयः शृणु मे परमं वचः ।
इष्टोऽसि मे दृढमिति ततो वक्ष्यामि ते हितम् ॥१८- ६४॥

ஸர்வகு³ஹ்யதமம் பூ⁴ய: ஸ்²ருணு மே பரமம் வச: |
இஷ்டோऽஸி மே த்³ருட⁴மிதி ததோ வக்ஷ்யாமி தே ஹிதம் || 18- 64||

ஸர்வகு³ஹ்யதமம் = எல்லாவற்றிலும் ஆழ்ந்த ரகசியமாகிய
மே பரமம் வச: = என்னுடைய பரம வசனத்தை
பூ⁴ய: ஸ்²ருணு = மீட்டுமொருமுறை கேள்
மே த்³ருட⁴ம் இஷ்ட: அஸி = நீ திடமான நண்பன்
தத: ஹிதம் இதி தே வக்ஷ்யாமி = ஆதலால் நல்லது என்று உனக்கு சொல்லுகிறேன்

மீட்டுமொருமுறை எல்லாவற்றிலும் ஆழ்ந்த ரகசியமாகிய எனது பரம வசனத்தைக் கேள். நீ திடமான நண்பன். ஆதலால் உனக்கு ஹிதத்தைச் சொல்லுகிறேன்.


मन्मना भव मद्भक्तो मद्याजी मां नमस्कुरु ।
मामेवैष्यसि सत्यं ते प्रतिजाने प्रियोऽसि मे ॥१८- ६५॥

மந்மநா ப⁴வ மத்³ப⁴க்தோ மத்³யாஜீ மாம் நமஸ்குரு |
மாமேவைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜாநே ப்ரியோऽஸி மே || 18- 65||

மந்மநா ப⁴வ = உன் மனதை எனக்காக்குக
மத்³ப⁴க்த: = என் தொண்டனாகுக
மத்³யாஜீ = எனக்கென வேள்விசெய்க
மாம் நமஸ்குரு = என்னையே வணங்குக
மாமேவ ஏஷ்யஸி = என்னையெய்துவாய்
ஸத்யம் தே ப்ரதிஜாநே = உண்மை இஃதே, உனக்கிது சபதமுரைக்கிறேன்
மே ப்ரிய: அஸி = எனக்கு இனியவனாக இருக்கிறாய்.

உன் மனதை எனக்காக்குக. என் தொண்டனாகுக. எனக்கென வேள்விசெய்க. என்னையே வணங்குக. என்னையெய்துவாய், உண்மை இஃதே, உனக்கிது சபதமுரைக்கிறேன், நீ எனக்கினியை.


सर्वधर्मान्परित्यज्य मामेकं शरणं व्रज ।
अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः ॥१८- ६६॥

ஸர்வத⁴ர்மாந்பரித்யஜ்ய மாமேகம் ஸ²ரணம் வ்ரஜ |
அஹம் த்வாம் ஸர்வபாபேப்⁴யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸு²ச: || 18- 66||

ஸர்வத⁴ர்மாந் பரித்யஜ்ய = எல்லா அறங்களையும் விட்டு விட்டு
மாம் ஏகம் ஸ²ரணம் வ்ரஜ = என்னையே சரண் புகு
ஸர்வபாபேப்⁴ய: = எல்லாப் பாவங்களினின்றும்
அஹம் த்வாம் மோக்ஷயிஷ்யாமி = நான் உன்னை விடுவிக்கிறேன்
மா ஸு²ச: = துயரப்படாதே

எல்லா அறங்களையும் விட்டு விட்டு என்னையே சரண் புகு. எல்லாப் பாவங்களினின்றும் நான் உன்னை விடுவிக்கிறேன். துயரப்படாதே.


इदं ते नातपस्काय नाभक्ताय कदाचन ।
न चाशुश्रूषवे वाच्यं न च मां योऽभ्यसूयति ॥१८- ६७॥

இத³ம் தே நாதபஸ்காய நாப⁴க்தாய கதா³சந |
ந சாஸு²ஸ்²ரூஷவே வாச்யம் ந ச மாம் யோऽப்⁴யஸூயதி || 18- 67||

தே இத³ம் கதா³சந = உனக்கு (சொல்லப் பட்ட) இதை எப்போதும்
அதபஸ்காய = தவமிலாதோனுக்கும்
அப⁴க்தாய ச = பக்தியில்லாதோனுக்கும்
அஸு²ஸ்²ரூஷவே = கேட்க விரும்பாதோனுக்கும்
ய: மாம் அப்⁴யஸூயதி = என்பால் பொறாமையுடையோனுக்கும்
ந வாச்யம் = சொல்லாதே

இதை எப்போதும் தவமிலாதோனுக்கும், பக்தியில்லாதோனுக்கும், கேட்க விரும்பாதோனுக்கும் என்பால் பொறாமையுடையோனுக்கும் சொல்லாதே.


य इमं परमं गुह्यं मद्भक्तेष्वभिधास्यति ।
भक्तिं मयि परां कृत्वा मामेवैष्यत्यसंशयः ॥१८- ६८॥

ய இமம் பரமம் கு³ஹ்யம் மத்³ப⁴க்தேஷ்வபி⁴தா⁴ஸ்யதி |
ப⁴க்திம் மயி பராம் க்ருத்வா மாமேவைஷ்யத்யஸம்ஸ²ய: || 18- 68||

ய: மயி பராம் ப⁴க்திம் க்ருத்வா = எவன் என்னிடம் உயர்ந்த பக்தி செலுத்தி
இமம் பரமம் கு³ஹ்யம் = இந்தப் பரம ரகசியத்தை (கீதையை)
மத்³ப⁴க்தேஷு ய: அபி⁴தா⁴ஸ்யதி = என் பக்தர்களிடையே சொல்லுவோனோ
மாம் ஏவ ஏஷ்யதி = என்னையே எய்துவான்
அஸம்ஸ²ய: = ஐயமில்லை

இந்தப் பரம ரகசியத்தை என் பக்தர்களிடையே சொல்லுவோன், என்னிடத்தே பரம பக்தி செலுத்தி என்னையே எய்துவான். ஐயமில்லை.


न च तस्मान्मनुष्येषु कश्चिन्मे प्रियकृत्तमः ।
भविता न च मे तस्मादन्यः प्रियतरो भुवि ॥१८- ६९॥

ந ச தஸ்மாந்மநுஷ்யேஷு கஸ்²சிந்மே ப்ரியக்ருத்தம: |
ப⁴விதா ந ச மே தஸ்மாத³ந்ய: ப்ரியதரோ பு⁴வி || 18- 69||

தஸ்மாத் மே ப்ரியக்ருத்தம = அவனைக் காட்டிலும் எனக்கினிமை செய்வோன்
மநுஷ்யேஷு கஸ்²சித் ச ந = மானிடருள்ளே வேறில்லை
பு⁴வி தஸ்மாத் மே = உலகத்தில் அவனைக் காட்டிலும் எனக்கு
ப்ரியதர: அந்ய: = எனக்கு உகந்தவன் வேறு எவனும்
ந ப⁴விதா = ஆக மாட்டான்

மானிடருள்ளே அவனைக் காட்டிலும் எனக்கினிமை செய்வோன் வேறில்லை. உலகத்தில் அவனைக் காட்டிலும் எனக்கு உகந்தவன் வேறெவனுமாகான்.


अध्येष्यते च य इमं धर्म्यं संवादमावयोः ।
ज्ञानयज्ञेन तेनाहमिष्टः स्यामिति मे मतिः ॥१८- ७०॥

அத்⁴யேஷ்யதே ச ய இமம் த⁴ர்ம்யம் ஸம்வாத³மாவயோ: |
ஜ்ஞாநயஜ்ஞேந தேநாஹமிஷ்ட: ஸ்யாமிதி மே மதி: || 18- 70||

இமம் ஆவயோ: த⁴ர்ம்யம் ஸம்வாத³ம் = நம்மிருவருள் நடந்த இந்த தர்மமயமான சம்பாஷணையை
ய: அத்⁴யேஷ்யதே = எவன் கற்றறிகிறானோ
தேந ச அஹம் = அவனாலும் நான்
ஜ்ஞாநயஜ்ஞேந இஷ்ட: ஸ்யாம் = ஞான யக்ஞத்தால் திருப்தி பெற்றவனாவேன்
இதி மே மதி: = இஃதென் கொள்கை

நம்முடைய இந்தத் தர்மமயமான சம்பாஷணையை எவன் படிப்பானோ, அவன் செய்யும் அந்த ஞான யக்ஞத்தால் நான் திருப்தி பெறுவேன். இஃதென் கொள்கை.


श्रद्धावाननसूयश्च शृणुयादपि यो नरः ।
सोऽपि मुक्तः शुभाँल्लोकान्प्राप्नुयात्पुण्यकर्मणाम् ॥१८- ७१॥

ஸ்²ரத்³தா⁴வாநநஸூயஸ்²ச ஸ்²ருணுயாத³பி யோ நர: |
ஸோऽபி முக்த: ஸு²பா⁴ம்ல்லோகாந்ப்ராப்நுயாத்புண்யகர்மணாம் || 18- 71||

ய: நர: = எந்த மனிதன்
ஸ்²ரத்³தா⁴வாந் = நம்பிக்கை உடையவனாக
அநஸூய: ச = பொறாமை போக்கியவனாக
ஸ்²ருணுயாத் அபி = கேட்பது மட்டுமே செய்வானெனினும்
ஸ: அபி முக்த: = அவனும் பாவங்களில் இருந்து விடுபட்டு
புண்யகர்மணாம் ஸு²பா⁴ந் லோகாந் = புண்ணியம் செய்தவர்கள் அடையும் உலகங்களை
ப்ராப்நுயாத் = எய்துவான்

நம்புதல் கொண்டு, பொறாமை போக்கி இதனைக் கேட்பது மட்டுமே செய்வானெனினும், அவனும் விடுதலையடைவான், அப்பால் புண்ணியச் செயலினர் நண்ணு நல்லுலகங்களெய்துவான்.


कच्चिदेतच्छ्रुतं पार्थ त्वयैकाग्रेण चेतसा ।
कच्चिदज्ञानसंमोहः प्रनष्टस्ते धनंजय ॥१८- ७२॥

கச்சிதே³தச்ச்²ருதம் பார்த² த்வயைகாக்³ரேண சேதஸா |
கச்சித³ஜ்ஞாநஸம்மோஹ: ப்ரநஷ்டஸ்தே த⁴நஞ்ஜய || 18- 72||

பார்த² = பார்த்தா
ஏதத் த்வயா ஏகாக்³ரேண சேதஸா = உன்னால் ஒருமுகப் படுத்தப் பட்ட மனதோடு
கச்சித் ஸ்²ருதம் = கேட்கப் பட்டதா?
த⁴நஞ்ஜய! தே அஜ்ஞாநஸம்மோஹ: = தனஞ்ஜயா, உன் அஞ்ஞான மயக்கம்
கச்சித் ப்ரநஷ்ட: = அழிந்து விட்டதா?

பார்த்தா, சித்தத்தை ஏகாந்தமாக்கி இதை நீ கேட்டு வந்தனையா? தனஞ்ஜயா, உன் அஞ்ஞான மயக்கம் அழிந்ததா?


अर्जुन उवाच
नष्टो मोहः स्मृतिर्लब्धा त्वत्प्रसादान्मयाच्युत ।
स्थितोऽस्मि गतसन्देहः करिष्ये वचनं तव ॥१८- ७३॥

அர்ஜுந உவாச
நஷ்டோ மோஹ: ஸ்ம்ருதிர்லப்³தா⁴ த்வத்ப்ரஸாதா³ந்மயாச்யுத |
ஸ்தி²தோऽஸ்மி க³தஸந்தே³ஹ: கரிஷ்யே வசநம் தவ || 18- 73||

அர்ஜுந உவாச அச்யுத! = அர்ஜுனன் சொல்லுகிறான், அச்சுதா
த்வத்ப்ரஸாதா³த் மோஹ: நஷ்ட: = நின்னருளாலே மயக்கம் அழிந்தது
மயா ஸ்ம்ருதி: லப்³தா⁴ = நான் நினைவு அடைந்தேன்
க³தஸந்தே³ஹ: ஸ்தி²த: அஸ்மி = ஐயம் விலகி நிற்கிறேன்
தவ வசநம் கரிஷ்யே = நீ செய்யச் சொல்வது செய்வேன்

அர்ஜுனன் சொல்லுகிறான்: மயக்க மழிந்தது நின்னருளாலே, அச்சுதா, நான் நினைவு அடைந்தேன்; ஐயம் விலகி நிற்கிறேன்; நீ செய்யச் சொல்வது செய்வேன்.


संजय उवाच
इत्यहं वासुदेवस्य पार्थस्य च महात्मनः ।
संवादमिममश्रौषमद्भुतं रोमहर्षणम् ॥१८- ७४॥

ஸஞ்ஜய உவாச
இத்யஹம் வாஸுதே³வஸ்ய பார்த²ஸ்ய ச மஹாத்மந: |
ஸம்வாத³மிமமஸ்²ரௌஷமத்³பு⁴தம் ரோமஹர்ஷணம் || 18- 74||

ஸஞ்ஜய உவாச = சஞ்சயன் சொல்லுகிறான்
இதி அஹம் = இப்படி நான்
வாஸுதே³வஸ்ய மஹாத்மந: பார்த²ஸ்ய ச = வாசுதேவனுக்கும் மகாத்மாவாகிய பார்த்தனுக்கும்
இமம் அத்³பு⁴தம் ரோமஹர்ஷணம் = இந்த அற்புதமான, மயிர்கூச்செறியும்
ஸம்வாத³ம் அஸ்²ரௌஷம் = உரையாடலைக் கேட்டேன்

சஞ்சயன் சொல்லுகிறான்: இப்படி நான் வாசுதேவனுக்கும் மகாத்மாவாகிய பார்த்தனுக்கும் நிகழ்ந்த அற்புதமான – புளகந் தரக்கூடிய – அந்த சம்பாஷணையைக் கேட்டேன்.


व्यासप्रसादाच्छ्रुतवानेतद्गुह्यमहं परम् ।
योगं योगेश्वरात्कृष्णात्साक्षात्कथयतः स्वयम् ॥१८- ७५॥

வ்யாஸப்ரஸாதா³ச்ச்²ருதவாநேதத்³கு³ஹ்யமஹம் பரம் |
யோக³ம் யோகே³ஸ்²வராத்க்ருஷ்ணாத்ஸாக்ஷாத்கத²யத: ஸ்வயம் || 18- 75||

யோகே³ஸ்²வராத் க்ருஷ்ணாத் = யோகக் கடவுளாகிய கண்ணனிடமிருந்து
பரம் கு³ஹ்யம் = பரம ரகசியமான
ஏதத் யோக³ம் ஸ்வயம் = இந்த யோகத்தை தான்
ஸாக்ஷாத் கத²யத: = நேராகவே சொல்லும்போது
அஹம் வ்யாஸப்ரஸாதா³த் = நான் வியாசனருளால்
ஸ்²ருதவாந் = கேட்டேன்

யோகக் கடவுளாகிய கண்ணன் இந்தப் பரம ரகசியமான யோகத்தைத் தான் நேராகவே சொல்லும்போது நான் அதை வியாசனருளால் கேட்டேன்.


राजन्संस्मृत्य संस्मृत्य संवादमिममद्भुतम् ।
केशवार्जुनयोः पुण्यं हृष्यामि च मुहुर्मुहुः ॥१८- ७६॥

ராஜந்ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய ஸம்வாத³மிமமத்³பு⁴தம் |
கேஸ²வார்ஜுநயோ: புண்யம் ஹ்ருஷ்யாமி ச முஹுர்முஹு: || 18- 76||

ராஜந் = அரசனே
கேஸ²வார்ஜுநயோ: = கேசவ அர்ஜுனரின்
அத்³பு⁴தம் புண்யம் ச இமம் ஸம்வாத³ம் = வியப்புக்குரிய இந்த புண்ய சம்பாஷணையை
ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய = நினைத்து நினைத்து
முஹுர்முஹு: = மீண்டும் மீண்டும்
ஹ்ருஷ்யாமி = மகிழ்கிறேன்

அரசனே, கேசவார்ஜுனரின் வியப்புக்குரிய இந்த புண்ய சம்பாஷணையை நினைத்து நினைத்து நான், மீட்டு மீட்டும் களிப்பெய்துகிறேன்.


तच्च संस्मृत्य संस्मृत्य रूपमत्यद्भुतं हरेः ।
विस्मयो मे महान् राजन्हृष्यामि च पुनः पुनः ॥१८- ७७॥

தச்ச ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய ரூபமத்யத்³பு⁴தம் ஹரே: |
விஸ்மயோ மே மஹாந் ராஜந்ஹ்ருஷ்யாமி ச புந: புந: || 18- 77||

ராஜந் = அரசனே!
ஹரே: அதி அத்³பு⁴தம் = ஹரியின் மிகவும் அற்புதமான
தத் ரூபம் ச = அந்த ரூபத்தை
ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய = நினைத்து நினைத்து
மே மஹாந் விஸ்மய: = எனக்குப் பெரிய ஆச்சரியமுண்டாகிறது
ச புந: புந: ஹ்ருஷ்யாமி = மீட்டு மீட்டும் களிப்படைகிறேன்

அரசனே, ஹரியின் மிகவும் அற்புதமான அந்த ரூபத்தை நினைத்து நினைத்து எனக்குப் பெரிய ஆச்சரியமுண்டாகிறது; மீட்டு மீட்டும் களிப்படைகிறேன்.


यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः ।
तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम ॥१८- ७८॥

யத்ர யோகே³ஸ்²வர: க்ருஷ்ணோ யத்ர பார்தோ² த⁴நுர்த⁴ர: |
தத்ர ஸ்ரீர்விஜயோ பூ⁴திர்த்⁴ருவா நீதிர்மதிர்மம || 18- 78||

யத்ர யோகே³ஸ்²வர: க்ருஷ்ண: = எங்கு யோகக் கடவுள் கண்ணனும்
யத்ர த⁴நுர்த⁴ர: பார்த²: = எங்கு வில்லினை யேந்திய விஜயன் தன்னோடும் இருக்கிறார்களோ
தத்ர ஸ்ரீ: விஜய: பூ⁴தி: = அங்கு திருவும் ஆக்கமும் வெற்றியும் ஐஸ்வர்யமும்
த்⁴ருவா நீதி = நிலை தவறாத நீதியும் (இருக்கும்)
மம மதி: = என் உறுதியான கருத்து (இது)

கண்ணன் யோகக் கடவுள், எங்குளன், வில்லினை யேந்திய விஜயன் தன்னோடும்? அங்கு திருவும் ஆக்கமும் வெற்றியும் நிலை தவறாத நீதியும் நிற்கும்; இஃதென் மதம்.ॐ तत्सदिति श्रीमद् भगवद्गीतासूपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे
श्रिकृष्णार्जुन सम्वादे मोक्षसन्नियासयोगो नामष्टादशोऽध्याय: || 18 ||

ஓம் தத் ஸத் – பிரம்ம வித்யை, யோக சாஸ்திரம், உபநிஷத்து எனப்படும்
ஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த
உரையாடலில் ‘மோக்ஷ ஸந்நியாச யோகம்’ எனப் பெயர் படைத்த
பதினெட்டாம் அத்தியாயம் நிறைவுற்றது.