கடல் போன்ற காளிதாசன் புகழ்!

இந்நாட்டவரும் வெளிநாட்டவரும் என்றும் புகழும் இணையற்ற தேசிய கவிஞன் காளிதாசன். காளிதாசனின் கவிதைகளை புரிந்து கொண்டு படிக்க முடிவதே ஒரு பெரிய வரம் என்று கருதுவோர் என்றும் இருக்கிறார்கள். பழைய சம்ஸ்க்ருத நூல்களில் காளிதாசனின் கவிதைகள் குறித்து கூறும் சிலவற்றை பார்ப்போம்.

புரா கவீநாம்ʼ க³ணநா ப்ரஸங்கெ³
கநிஷ்டிகாதி⁴ஷ்டித காளிதா³ஸ |
அத்³யாபி தத்துல்ய கவேரபா⁴வாத்
அநாமிகா ஸார்த²வதீ ப³பூ⁴வ ||

पुरा कवीनां गणना प्रसंगॆ कनिष्टिकाधिष्टित काळिदास ।
अद्यापि तत्तुल्य कवॆरभावात् अनामिका सार्थवती बभूव ॥

முன்பு கவிஞர்களை எண்ணும் போது
காளிதாசன் பெயரைச்சொல்லி சிறுவிரல் மடங்கியது |
காளிதாசனுக்கு இணையாகச் சொல்லி
இன்று வரைக்கும் அடுத்த விரலுக்கு ஆள் கிடைக்காததால்
மோதிரவிரல் அநாமிகா – பெயரற்றவள் என்று ஆகி விட்டது ||

சம்ஸ்க்ருதத்தில் விரல்களுக்கு அங்குலி என்று பெயர். கை விரல்களுக்கு கநிஷ்டிகா (சிறிய விரல்), அநாமிகா (மோதிர விரல்), மத்யமா (நடுவிரல்), தர்ஜநீ (ஆள்காட்டி விரல்), அங்குஷ்ட: (கட்டை விரல்) என்று பெயர். கட்டை விரல் தவிர மற்ற பெயர்கள் எல்லாம் பெண்பால். இதில் மோதிரவிரலுக்கு மட்டும் ஏன் அநாமிகா (பெயரற்றவள்) என்று பெயர்? இதைத்தான் இந்த செய்யுள் வேடிக்கையாக காளிதாசனுடன் இணைத்துக் குறிப்பிடுகிறது.

வடமொழியில் ஐந்து பெரும் காவியங்களில் இரண்டு காளிதாசனுடையது. கவி என்றால் காளிதாசன் தான் வேறு எவரும் அவரை நெருங்க முடியாது. உயர்ந்த பொருட்களை எல்லாம் வரிசைப்படுத்தும் போது, கவி என்றால் காளிதாசனே என்று கூறும் இன்னொரு செய்யுள்:

புஷ்பேஷு ஜாதீ நக³ரீஷு காஞ்சீ
நாரீஷு ரம்பா⁴ புருஷேஷு விஷ்ணு:
நதீ³ஷு க³ங்கா³ க்ஷிதிபேஷு ராம:
காவ்யேஷு மாக⁴: கவிகாளிதா³ஸ:

पुष्पेषु जाती नगरीषु काञ्ची
नारीषु रम्भा पुरुषेषु विष्णु: |
नदीषु गङ्गा क्षितिपेषु राम:
काव्येषु माघ: कविकालिदास: ||

பூக்களில் மல்லி நகரங்களில் காஞ்சி
பெண்களில் ரம்பை ஆண்களில் விஷ்ணு |
நதிகளில் கங்கை அரசர்களில் ராமன்
காவியங்களில் மாக-காவியம் கவிகளில் காளிதாசன் |

மற்ற கவிஞர்களைப் புகழும் போதும், காளிதாசனை தவிர்த்து விட முடிவதில்லை:

உபமாகாளிதா³ஸஸ்ய , பா⁴ரவேரர்த²கௌ³ரவம்ʼ |
த³ண்டி³ன​: பத³லாளித்யம்ʼ , மாகே⁴ ஸந்தி த்ரயோ கு³ணா​: ||

उपमाकालिदासस्य , भारवेरर्थगौरवं |
दण्डिनः पदलालित्यं , माघे सन्ति त्रयो गुणाः ||

உவமையில் காளிதாசன் பொதிந்த பொருளில் பாரவி |
அழகிய சொற்களுக்கு தண்டி, மாகனிடம் மூன்றும் உண்டு ||

என்று உவமானங்களைச் சுட்டிக் காட்டுவதில் காளிதாசன் தனி இடம் பெற்றிருப்பதை இந்த செய்யுள் கூறுகிறது.

ஹர்ஷசரிதம் இயற்றிய பாணபட்டர் தன் காவியத்தின் துவக்கத்தில் காளிதாசனை இவ்வாறு குறிப்பிடுகிறார்:

நிர்க³தாஸு ந வா கஸ்ய காளிதா³ஸஸ்ய ஸூக்திஷு |
ப்ரீதிர்மது⁴ர ஸார்த்³ராஸு மஞ்ஜரீஷ்விவ ஜாயதே ||

निर्गतासु न वा कस्य कालिदासस्य सूक्तिषु |
प्रीतिर्मधुर सार्द्रासु मञ्जरीष्विव जायते ||

காளிதாசனின் இனிமையும் அன்பும் கொண்ட
மது நிரம்பிய பூக்களைப் போன்ற
வார்த்தைகளில்
மயங்காதவர் எவர்?

சம்ஸ்க்ருதத்தில் காவியங்களை இயற்றும் போது பல ஸ்டைல்கள் அல்லது பாணி உண்டு. இவற்றுக்கு சைலி என்று பெயர். பாஞ்சாலி, வைதர்பி, கௌடி போன்றவை சில பிரபலமான சைலி வகைகள். இவற்றில் வைதர்பி சைலி மிகவும் உயர்ந்தது என்று கூறுவர். காளிதாசனின் பாணி அதையும் விஞ்சியது.

वाल्मीकेरजनि प्रकाशसितगुणा व्यासेन लीलावती
वैदर्भि कविता स्वयं वृतवती श्रीकालिदासं वरं ||

வால்மீகேரஜனி ப்ரகாஸ²ஸிதகு³ணா வ்யாஸேன லீலாவதீ
வைத³ர்பி⁴ கவிதா ஸ்வயம்ʼ வ்ருʼதவதீ ஸ்ரீகாளிதா³ஸம்ʼ வரம்ʼ ||

வால்மீகியிடம் பிறந்த வைதர்பி
வ்யாஸனால் வளர்க்கப் பட்டவள் |
ஆனால் அவளோ காளிதாசனையல்லவா
கணவனாகக் கண்டடைந்தாள்!

காளிதானின் காவியங்களுக்கு உரை எழுதிய மல்லிநாதர் இவ்வாறு கூறுகிறார்:

காளிதா³ஸகி³ராம்ʼ ஸாரம்ʼ காளிதா³ஸ​: ஸரஸ்வதீ |
சதுர்முகோ²த²வா ஸாக்ஷாத்³விது³ர்னான்யே து மாத்³ருʼஶே ||

कालिदासगिरां सारं कालिदासः सरस्वती ।
चतुर्मुखोथवा साक्षाद्विदुर्नान्ये तु मादृशे ।।

காளிதாசனிடமிருந்து எழுந்த கவிதை
மூன்றே பேரால் தான் முழுவதும் ரசித்து முடிக்க முடியும்!
முதலில் காளிதாசனே தான்!
இரண்டாவது அவனுக்கு கல்வி கொடுத்த சரஸ்வதி!
மூன்றாவது அவனைப் படைத்த பிரமன்!
என் போன்றவர்கள் எக்காலத்தில்
அவன் கவிதையை முழுதும் உணரப் போகிறோம்!

கற்பது என்பது எளிதன்று. மிகவும் கடின முயற்சி தேவைப்படும் விஷயம் கல்வி கற்பது என்பது. ஆனால் கற்கும் போதே இரண்டு விஷயங்கள் மிகவும் இனிமை தரக்கூடியது என்கிறார் கவி கோவர்தனாசாரியர்….

ஸாகூதமது⁴ரகோமல விலாஸிநீகண்ட²கூஜிதப்ராயே |
ஶிக்ஷாஸமயே(அ)பி முதே³ ரதலீலாகாலீதா³ஸோக்தி ||

साकूतमधुरकोमल विलासिनीकण्ठकूजितप्राये |
शिक्षासमयेऽपि मुदे रतलीलाकालीदासोक्ति ||

கற்கும்போதே
இதயத்தில் இனிக்குமாம் இரு வித்தைகள்…
ஒன்று கலவி
மற்றொன்று காளிதாசனின் கவிதை….

இதே போல இன்னொரு கவிஞர் வேடிக்கையாகக் கூறுகிறார்:

காளிதா³ஸ கவிதா நவம்ʼ வய: மாஹிஷம்ʼ த³தி⁴ ஸஶர்கரம்ʼ பய:|
ஏணமாம்ʼஸமப³லா ஸுகோமலா ஸம்ப⁴வந்து மம ஜன்ம-ஜன்மனி||

कालिदास कविता नवं वय: माहिषं दधि सशर्करं पय:।
एणमांसमबला सुकोमला संभवन्तु मम जन्म-जन्मनि।।

காளிதாசனின் கவிதை
இளமையான வயது
கெட்டியான எருமைத் தயிர்
சர்க்கரை சேர்த்த பால்
மானின் மாமிசம்
அழகிய பெண் துணை
என் ஒவ்வொரு ஜன்மத்திலும்
இதெல்லாம் கிடைக்க வேண்டுமே!

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)