சங்கதம் (சமஸ்க்ருதம்) ஒரு மொழி மட்டும் அன்று. அது நமது பாரத நாடெங்கும் உணர்விலும், எல்லா மொழிகளின் பயன்பாட்டிலும் கலந்து இந்த நாட்டின் ஆன்மாவில் ஒரு பகுதியாக விளங்குகிறது. இந்த நாட்டின் பழமையையும், அதன் மாண்பையும், வரலாற்றையும், அழகியலையும், தத்துவ சிந்தனைகளையும் நேரடியாக தெரிந்து கொள்ள சங்கத அறிவு மிகவும் தேவை.
தேசத்தின் பண்பாட்டு ஒருமை சங்ககாலத்திலேயே உணரப்பட்டுவிட்ட ஒன்று. இன்று பாரதம் சின்னாபின்னப்பட்டு சிறுமைப்படாமலும், பல்வேறு இன மொழி மக்கள் ஒருவரை ஒருவர் கொலைவெறி கொண்டு அழிக்காமலும் இருக்க உதவுவது இந்த ஒற்றுமையே. இப்பண்பாட்டு ஒருமையின் வலிமையான நூலிழையாக நம் பன்மை வளங்களை அழியாது இணைக்கிறது சமஸ்கிருதம். வடமொழி என்பதனால் அதை அன்னிய மொழி – நமக்குரியதல்ல என நம் முன்னோர் கருதினர் என்பதற்கு எவ்வித வரலாற்றுச் சான்றுமில்லை.
– தேசத்தின் மொழி சம்ஸ்க்ருதம்
ஒரு மொழியாக கிட்டத்தட்ட ஐயாயிரம் ஆண்டுகளுக்கு (Vedic Period approximately, 3000 B.C) மேலாக சங்கதம் பாரத மண்ணில் மிகச் சிறந்த அறிவாளிகளை ஈர்த்து, அவர்களின் சிந்தனையை ஏந்தி வரும் வாகனமாக அமைந்து வந்திருக்கிறது. ஜெர்மானியரான Max Muller, இங்கிலாந்தின் Sir William Jones, நமது நாட்டில் நேரு, காந்தி, விவேகானந்தர் போன்ற அறிஞர்கள், ஞானிகள் எல்லோரும் அதனைப் போற்றி இருக்கிறார்கள்.
சங்கதம் என்பது…
ஆகமத்தொடு மந்திரங்க ளமைந்தசங்கத பங்கமாப்
பாகதத்தொ டிரைத்துரைத்த சனங்கள்வெட்குறு பக்கமா
மாகதக்கரி போற்றிரிந்து புரிந்துநின்றுணும் மாசுசேர்
ஆகதர்க்கெளி யேனலேன்திரு வாலவாயர னிற்கவே.
– சம்பந்தர் தேவாரம், திரு ஆலவாய் பதிகம்.சங்கதம் என்பது சம்ஸ்க்ருதம் என்பதன் தமிழ் உச்சரிப்பு. (ப்ராக்ருதம் என்பது பாகதம் ஆகிறது).
இது ஒரு வழக்கொழிந்த மொழியா என்ற கேள்வி எழுவது வாடிக்கை. நேரடியான வியாபார மொழியாக இல்லாமல் இருந்தாலும், இதன் பயன்பாடு இந்திய தேசமெங்கும் பேசும் மொழிகளில் பொதிந்துள்ளது. சங்கதம் தனக்கென்று ஒரு எழுத்துருவை கொண்டிருக்காமல், வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு எழுத்துருவில் எழுதப்பட்டு வந்திருக்கிறது. இந்த நெகிழ்வுத் தன்மையே, பல ஆயிரம் ஆண்டுகளை கடந்து உயிர்ப்புடன் விளங்கும் அதிசயத்தின் ரகசியம்.
சங்கதத்தில் ஆர்வம் கொண்டவர்களுக்காக அது குறித்த செய்திகளை தொகுத்து வழங்குவதும், கற்றுக்கொள்ள உதவுவதும், இதனைப் பற்றிய கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், சிறு குறிப்புகள் ஆகியவற்றை தமிழில் எளிமையாக வழங்குவதே இந்த வலைப் பதிவின் நோக்கம். இது தமிழில் ஒரு புதுமையான முயற்சி. இந்த முயற்சியில் பங்குகொள்ள விரும்பினால் என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
அன்புடன்
சங்கதம் பொறுப்பாசிரியர்