சங்கத கவிஞர்கள் போட்டிக்காக தமக்குள் ஒருவர் கவிதையின் ஒரு பகுதியை மட்டும் சொல்ல, மற்ற கவிஞர்கள் அந்த ஒரு பகுதியையும் சேர்த்துக் கொண்டு முழு கவிதையையும் இயற்றுவார்கள். பெரும்பாலும் போட்டிக்கு கொடுக்கப்படும் பகுதி கொஞ்சம் எடக்கு முடக்காக இருக்கும். இதற்கு வடமொழியில் சமஸ்யா பூர்த்தி (समस्या पूर्ति) என்று சொல்வார்கள்.
கெளரி மாட்டிறைச்சி சமைக்கிறாள் (गौरी पचति गोमांसम् ) என்கிற சொற்றொடரை எடுத்துக் கொண்டு இங்கே வடமொழியில் சமஸ்யா பூர்த்தி கவிதைகள் இயற்றி இருக்கிறார்கள். முதலில் கௌரி என்பது சிவனாரின் மனைவி பார்வதி தேவியின் பெயர் என்பது அனைவரும் அறிந்ததே. கௌரி மாட்டிறைச்சி சமைக்கிறாள் என்பது படிப்பதற்கு அதிர்ச்சியாக இருக்கும், ஆனால் கீழே கவிதைகளை படித்துப் பார்த்தால் இதில் உள்ள வார்த்தை விளையாட்டு புரிந்து விடும்,
पञ्चमो जारजो यत्र पौशासक् तत्र सर्वदा
गौरी पचति गोमांसम् गौरो भुङ्क्ते भुभुक्षितः
ஐந்தாம் ஜார்ஜ் மன்னன் ஆட்சி செய்த போது, வெள்ளை நிறமுடைய பெண் (गौरी) – அதாவது இங்கிலாந்து ராணி – மாட்டிறைச்சி சமைக்கிறாள். வெள்ளை நிறத்து பெண் சமைத்ததை வெள்ளையன் உண்கிறான்.
இன்னொருவர் முயற்சியில் இவ்வாறு கவிதை அமைந்தது,
गौडी तु पचति मीनम् द्राविडी पचति शाकम्
गौरी पचति गोमांसम् नूनं लोको भिन्नरुचिः
கௌட தேசத்து பெண் (இன்றைய வங்காளம்) மீனை சமைக்கிறாள். தென்னிந்திய பெண் காய்கறிகளை சமைக்கிறாள். வெள்ளை நிறமுடைய பெண்ணோ மாட்டிறைச்சி சமைக்கிறாள். உலகத்தின் ருசி பல விதம் என்பது உண்மைதான்.
கௌரி என்பதை வெள்ளை நிறமுடைய பெண் என்று எடுத்துக் கொண்டு ஒவ்வொருவரும் வித்தியாசமாக கவிதை எழுதி இருக்கிறார்கள்.
இன்னும் ஒன்று,
त्रिलोकजननी का भो? सूपक्ऱ्त् किम् करोति भो?
किम् खादन्ति तुरुष्काः भो? गौरी पचति गोमाम्सम् |
மூவுலகத்தின் தாய் யார்? சமையல்காரர்கள் என்ன செய்கிறார்கள்? இசுலாமியர்கள் என்ன உண்கிறார்கள்? இதற்கெல்லாம் விடை முறையே கௌரி, சமையல், மாட்டிறைச்சி.
கடைசியாக ஒன்று,
मम गेहसमीपस्थे मॆक्डॊनाल्ड् भोजनालये|
गौरी पचति गोमांसं कृष्णस्तं भक्षयिष्यति||
எனது வீட்டின் அருகில் இருக்கும் மேக் டொனால்ட்ஸ் கடையில், வெள்ளை நிறமுடைய பெண் மாட்டிறைச்சி சமைக்கிறாள், ஒரு கருப்பு மனிதன் அதை உண்கிறான். இதில் வெள்ளை நிறமுடைய பெண்ணை “கௌரி” என்றும் கருப்பு நிறமுடைய மனிதனை கிருஷ்ணன் என்றும் அமைத்திருப்பது கவிதையின் அழகு.
தமிழிலும் இது போல உண்டு. இதற்கு பிரபலமான உதாரணமாக காளமேகப் புலவரின் இந்த கவிதையை சொல்வர். காளமேகத்திடம் அவரை ஆதரித்து வந்த அரசர், ‘குடத்திலே கங்கை அடங்கும்’ என்ற பகுதியை கொடுத்து கவிதை இயற்றச் சொல்ல அவரும் இவ்வாறு இயற்றினார்,
‘விண்ணுக்கு அடங்காமல் வெற்புக்கு அடங்காமல்
மண்ணுக்கு அடங்காமல் வந்தாலும் – பெண்ணை
இடத்திலே வைத்த இறைவர் சடாம
குடத்திலே கங்கைஅடங் கும்.’
குடத்திலே கங்கை என்பதை ஈசனாரின் சடா மகுடத்திலே கங்கை அடங்கும் என்று இயல்பாக இயற்றி விட்டார். வடமொழியில் இது போல நிறைய உண்டு.
[நன்றி:ಅಲ್ಲಿದೆ ನಮ್ಮ ಮನೆ (allide namma mane)]
ரொம்ப நல்ல முயற்சி. வாழ்த்துக்கள். துடருங்கள். லோக நன்மை துடரட்டும் என்றும்,
ராமு.
அதிர்ச்சியூட்டும் தலைப்பளித்து சம நிலைக்குக் கொண்டுசெல்லும் பயிற்சிப்பாக்கள் மிக அருமை
very interesting.