குறையுள்ளவையா தமிழ் எழுத்துக்கள்?

தமிழ் எழுத்துக் குறிகள் மிகவும் குறையுடையன வென்பது அன்னியர்களுடைய அபிப்ராயம். க, ச, ட, த, ப இவ்வைந்து தமிழ் எழுத்துக் குறிகளும் முறையே क, ख, ग, घ, ह; च, छ, ज, झ, श, स; ट, ठ, ड, ढ; त, थ, द, ध; प, फ, ब, भ; இந்த இருபத்தி மூன்று வடமொழி எழுத்துக்களுக்குப் பதிலாக நிற்பது பெருங்குறை என்பார்கள். மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்த திராவிட பாஷைகளில் இவ்விருபத்து மூன்று எழுத்துக்களுக்கு இருபத்து மூன்று குறிகள் வழங்குகின்றன. ஆனால் தமிழில்,

க என்பது क, ख, ह என்ற மூன்று உச்சரிப்புகளையும் குறிக்கும்.
ச என்பது श, च, ज என்ற மூன்று சப்தங்களுக்கும் நிற்கும்.
ட என்பது ट, ड என்ற இரண்டு வகை உச்சரிப்பும் கொள்ளும்.
த என்பது त, द என்று இரண்டு வகையாகவும் உச்சரிக்கப் படும்.
ப என்பது प, ब என்று இரண்டு எழுத்துக்களுக்கும் குறியாகும்.

ஆக இந்த ஐந்து எழுத்துக்கள் பன்னிரண்டு உச்சரிப்பு கொள்ளும்.

மற்ற பதினோரு உச்சரிப்புகள் தமிழில் கிடையவே கிடையாது. தமிழில் இராத உச்சரிப்புகளுக்குத் தமிழில் குறிப்புகள் இல்லாதது ஒரு குறையாகாது. ஒப்புக் கொள்ளப் பட்ட குறையை மட்டில் ஆராய்வோம். உண்மையில் சரியாக ஆராய்ந்து பார்த்தால் இந்த குறை குறுகி குறுகி முற்றிலும் ஒரு விதிக்கு உட்பட்டுப் போவதைக் காண்போம். எவ்வாறென்பதைப் பார்க்கலாம்.

க என்பது மொழியின் முதலெழுத்தாக வந்தால் தான் क உச்சரிப்பு. மொழியின் இடையிலோ, ஈற்றிலோ வந்தால் ह – உச்சரிப்புக் கொள்ளும். உதாரணம்: களவு, கொடுமை, காடு, கிளி, குதிரை; பகுதி, தகுதி, விகுதி, வகை, ஆகாரம், அதிகம், ஆகும், வருக என்பன. மெல்லின எழுத்துடன் சேர்ந்து வந்தால் ग உச்சரிப்புக் கொள்ளும். பங்கு, தங்கம், வாங்கலாம் முதலியன. க இரட்டித்தால் சுத்த வல்லின ஓசை பெறும்; பக்கம், அக்கா, தக்கவன்.

ச என்பது மொழியின் முதலிலும் இடையிலும் ஈற்றிலும் श உச்சரிப்புத்தான் கொள்ளும்; செவ்வாய், சுவை, சும்மா, சாதல், பசி, மாசு, கொசு, தசை, ஆசான் முதலியவாறு.

இரட்டித்தால் தான் च, வல்லோசை பெறும். அச்சம், பச்சை, தச்சன், கச்சை, அச்சு, பிச்சை முதலியன. மெல்லினத்துடன் வந்தால் ज ஓசை பெறும். பஞ்சம், இஞ்சி, தஞ்சை முதலியன.

ட என்பது ड உச்சரிப்புத்தான். ट என்கிற உச்சரிப்பு இரட்டித்தால் தான் வரும். கட்டு, பட்டை, கட்டை, கட்டில், மட்டு, இடு, ஆடு, ஓடு, கடை, வடக்கு, தடை முதலியவைகளில் ட என்பது உச்சரிப்பே. மெல்லினத்துடன் ड என்றாகும் என்பது சொல்லாமலே விளங்கும். பண்டம், வண்டி, கூண்டு முதலியன.

த என்பது மொழியின் முதலில் त உச்சரிப்பு; இடையிலும் இறுதியிலும் द உச்சரிப்பு. தகப்பன், தாய், தித்திப்பு, தோல், துவையல், தையல்.

அது, இது, பொது, பாதி, பகுதி, காதம், கதை, மாதம், காதல். இரட்டித்தால் त உச்சரிப்பு பெறும். மெத்தை, கத்து, வாத்து, அத்தி முதலியன. மெல்லினத்துடன் வரின் द உச்சரிப்பு; வந்து, கந்தல், கூந்தல், மந்தி.

ப என்பது மொழியின் முதலில் प உச்சரிப்பு; பாலம், பசு, பொது, பூட்டு. இரட்டித்தாலும் प உச்சரிப்பு; அப்பம், கப்பல், தித்திப்பு. அப்போது இரட்டிக்காமல் இடையிலும் ஈற்றிலும் வந்தாலும், மெல்லினத்துடன் வந்தாலும் ब உச்சரிப்பு. கம்பம், வம்பு, அம்பு, செம்பு, உருபு, மரபு, திரிபு, மார்பு.

றகர ஒற்றுக்குப் பின்வரும் வல்லின எழுத்தை இரட்டித்ததாகவே கொள்ளவேண்டும்; ஆகையால் அது வல்லோசை பெறும். ஆகவே பொதுவாக வல்லின எழுத்துக்கள் மொழியின் முதலிலும், ற-கர ஒற்றுக்குப் பின் அல்லது இரட்டிக்கும்போதே வல்லோசை பெறும். மற்ற இடங்களில் உண்மையான வல்லோசை பெறாது. இடையிலும் ஈற்றிலும் க என்பது ஹ ஆகும். ச என்பது श எழுத்தே ஆகும். ற-கருத்திற்குப் பின் அல்லது இரட்டித்தால் தான் च ஆகும். ட என்பது ड
எழுத்தே ஆகும். இரட்டித்தால் தான் ट ஆகும்.

மெல்லினத்திற்கு அடுத்தாற்போல் எல்லா வல்லின எழுத்துக்களும் முறையே ग, ज, ड, द, ब ஆகும்.

வடமொழிச் சொற்களை தமிழில் கொள்ளும் போது, அவைகளின் சம்ஸ்க்ருத உச்சரிப்பை வைத்துச் சொல்ல வேண்டும் என்பது கூடாது. அது தமிழ் முறையாகாது. மணிப்பிரவாள மாகும். வருஷம் என்று தான் தமிழில் சொல்ல வேண்டும். வர்ஷம் என்பது தமிழல்ல. மாதம் என்று சொல்லுவது தான் சரி. மாஸம் என்பது சுத்த சம்ஸ்க்ருதமே ஆகும்; தமிழாகாது. அவ்வாறே, துவேஷம், மாமிசம், சீதை, அருச்சுனன் முதலியன.

புராதனமாகத் தமிழில் வழங்கும் வடமொழிச் சொற்களுக்குத் தமிழ் உச்சரிப்புக் கொடுத்துச் சொல்லுவதே முறையாகும். த்வேஷம், மாம்ஸம், ஸீதா, அர்ஜூனன் என்று உச்சரிப்பது தமிழல்ல.

இதை ஞாபகத்தில் வைத்தால் மேலே நான் குறிப்பிட்ட விதிகள் தமிழில் கலந்த வடமொழிச் சொற்களுக்கும் பொருந்தும் என்பது விளங்கும். சீதை என்பதை தமிழில் शीतै என்றுதான் சொல்லுகிறோம். सीता அல்லது सीतै என்பது தமிழர் முறையாகாது.

கதை என்பதை गदै என்று உச்சரிப்பதுதான் தமிழ் முறை. ‘அதை’, ‘கதை’, ‘விதை’, ‘மதி’, ‘அன்னையும் பிதாவும்’ இவைகளில் எல்லாம் தமிழர் த என்பதைத் தெரிந்தும் தெரியாமலும் द வாகத்தான் உச்சரிப்பார்கள். அவ்வாறு உச்சரிப்பது தமிழ் முறையில் சரியேயாகும். நான் கூறியிருப்பது வடமொழிப் பயிற்சி அடைந்தவர்களுக்கும் தெலுங்கு, கன்னடம் வழங்கும் பிரதேசங்களில் வசிக்கும் தமிழர்களுக்கும் சில விஷயங்களில் வித்தியாசமாகத் தோன்றலாம்.

தாகம், தசரதன், தமயந்தி, துரோணன் என்பவையில் மொழியில் முதலில் நிற்கும் த-கரத்தை தமிழர் त – ஆகவே உச்சரிப்பார்கள்; அவ்வாறு உச்சரிப்பதும் சரியேயாகும். द என்று உச்சரிப்பது வடமொழிப் பயிற்சியினால் ஏற்பட்ட வழக்காகும். தமிழில் நன்றாகப் பதியாத வடமொழிச் சொற்களின் உச்சரிப்பு சம்ஸ்க்ருதத்தை ஒட்டியே நிற்கும். அச்சொற்களுக்கு மேற்குறித்த விதிகள் பொருந்தா.

ஆகவே தமிழில் உள்ள உயிரெழுத்துக்களும் மெல்லின இடையின எழுத்துக்களும், குறைவின்றி இருக்கின்றன. வல்லின எழுத்துக்கள் மேற்கண்டவாறு சில விதிகளுக்குட்பட்டு, மாறுபாடு இல்லாமல் இடத்தை அனுசரித்து உச்சரிக்கப் பெறுவதால் அவ்வகையிலும் கூறப்படும் குறையானது உண்மையில் குறையாகாது.

தமிழ்ச் சொற்களுக்கும் தமிழருக்குமே தமிழ் எழுத்துக் குறிகள் உண்டாக்கப் பட்டவை. பிற பாஷைகளைத் தமிழ் எழுத்தைக் கொண்டு எழுதப் புகின் பல குறைகள் தோன்றும். அதைக் கொண்டு தமிழ் எழுத்துக்களை நாம் குறை கூறுவதோ இகழ்வதோ கூடாது.

நன்றி: திரு ரகுவீர தயாள் பகிர்ந்த பழைய கட்டுரை.

12 Comments குறையுள்ளவையா தமிழ் எழுத்துக்கள்?

 1. T.Mayoorakiri Sharma

  //ஆகவே தமிழில் உள்ள உயிரெழுத்துக்களும் மெல்லின இடையின எழுத்துக்களும், குறைவின்றி இருக்கின்றன. வல்லின எழுத்துக்கள் மேற்கண்டவாறு சில விதிகளுக்குட்பட்டு, மாறுபாடு இல்லாமல் இடத்தை அனுசரித்து உச்சரிக்கப் பெறுவதால் அவ்வகையிலும் கூறப்படும் குறையானது உண்மையில் குறையாகாது.

  தமிழ்ச் சொற்களுக்கும் தமிழருக்குமே தமிழ் எழுத்துக் குறிகள் உண்டாக்கப் பட்டவை. பிற பாஷைகளைத் தமிழ் எழுத்தைக் கொண்டு எழுதப் புகின் பல குறைகள் தோன்றும். அதைக் கொண்டு தமிழ் எழுத்துக்களை நாம் குறை கூறுவதோ இகழ்வதோ கூடாது.//

  எதாவது விபரீதமாக தமிழை கட்டுரை குறை சொல்கிறதா. என்று வாசித்தேன்.. கட்டுரை ஆசிரியர் இப்படி சொல்லி நிறைவு செய்தமை திருப்தியாக இருக்கிறது..

 2. பொன்னுசாமி

  நல்ல கட்டுரையை படித்த திருப்தி ஏற்பட்டது. கட்டுரையை எழுதிய நண்பருக்கும், அதனை பகிர்ந்த திரு ரகுவீர தயாளுக்கும் , இங்கு வெளியிட்ட சங்கதம் தளத்துக்கும் நன்றி. பல ஆண்டுகளுக்கு முன்பு திரு கிவாஜ ( கலைமகள் ஆசிரியர்) எழுதிய நூல் ஒன்றில் இந்த கருத்து அற்புதமாக அவரால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

  நிற்க , எவ்வளவு சிறப்பு உள்ள மொழியாக இருந்தாலும் அதனை மக்கள் பயன்படுத்தாமல் , இருந்தால் , ஒரு பயனும் இல்லாது போய்விடுகிறது. முக்கியமாக சமஸ்கிருதம் நம் நாட்டில் சேரிகளுக்கு போய்ச்சேர வேண்டும். சமஸ்கிருதம் பிராமணர்களின் மொழி என்று சொல்லி சிலர் செய்த பித்தலாட்ட பிரச்சாரம் காரணமாக , மக்கள் பல இழப்புக்களை சந்தித்துள்ளனர். சமஸ்கிருதம் பாரதம் முழுமைக்குமான இணைப்பு மொழி ஆகும். சமஸ்கிருதத்தினை முற்றிலுமாக அழித்துவிட்டால், இந்து கலாச்சாரத்தினை அழித்துவிடலாம் என்ற எண்ணத்திலும் சில மதமாற்ற சக்திகள் செயல்படுகின்றன. சிவபிரானின் உடுக்கை ஒலியில் இருந்து தோன்றியதே தமிழும், சமஸ்கிருதம் என்று இன்று வழங்கும் சந்தசும்.

  சமஸ்கிருதத்திலும் ஏராளமான நாத்திக கருத்துள்ள நூல்கள் உள்ளன என்பது , இன்று நாத்திகம் பேசிக்கொண்டிருக்கும் பல நண்பர்களுக்கு தெரியாது. சம்ஸ்கிருதத்தில் உள்ள வர்க்க எழுத்துக்களில் , மொத்தம் நாலில் இரண்டாவது மற்றும் நான்காவது எழுத்துக்களை உபயோகிக்காமலே , ( முதல் மற்றும் மூன்றாவது வர்க்க எழுத்துக்களை பயன்படுத்தி , ) அந்த மொழி சிறப்பாக இயங்க முடியும்., யார் சீர் திருத்துவது ?

 3. ganesh

  தமிழில் இரண்டு வகையான எழுத்து வடிவம்கள் உண்டு தமிழ் கிரந்த எழுத்தில் க 1- 4 வகை உண்டு
  நாம் இப்பொழுது எழுதும் வகை தமிழ் ப்ரஹ்மி வகை ஆகும்.
  (http://en.wikipedia.org/wiki/Grantha_alphabet) இந்த கிரந்த வகை எழுத்து சிங்கள , மலையாள , துளு மற்றும் பல கிழக்காசிய எழுத்து வடிவத்தின் முலம் . இதை பல்லவர்களின் க்ரந்தம் என்றும் சொல்லுவதுண்டு . எனவே தமிழ் க்ரந்தம் ஒரு முழுமையான வடிவம். நம்முடைய பல ஓலை சுவடிகள் கிரந்தத்தில் தான் உள்ளது .

 4. ஒரு அரிசோனன்

  அருமையான கட்டுரை. தமிழின் ஒலிகள் எப்படி ஒலிக்கும் என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டி உள்ளீர்கள். உதாரணமாக, தற்பொழுது சிவா என்ற சொல்லை ஷிவா என்று சொல்வதை ஒரு மேட்டிமைத் தனமாகக் கொண்டிருக்கிறார்கள். அது சமஸ்கிருத உச்சரிப்பும் அல்ல, தமிழ் உச்சரிப்பும் அல்ல. பிழையானதே. வடமொழி ஒலிகளை எப்படித் தமிழில் ஒழிக்கவேண்டும் என்ற இலக்கணமே இருக்கிறது.
  ஹ – அ ஆகும்.
  ஷ – ட ஆகும்
  ஜ, ஸ- ச ஆகும்
  நல்லதொரு கட்டுரையை வெள்ளியிட்டமைக்கு நன்றி.

 5. Raman

  If one goes through Tirumular’s Tirumantiram, verses 963 and 964 actually say that Tamil also had 51 bija aksharas like Sanskrit. However, I believe that during the Last Sangam Period, the square letters were replaced by round letters and at that time it was decided to jettison 21 bija aksharas. It is a pity that none of the present Tamil scholars wants to take this issue and pursue it. Unfortunately, many Tamilians (especially in Tamil TV channels by political parties which make money in the name of Tamil) pronounce Tamil very badly. They are unable to pronounce as per the rules given above and say ‘Gudirai’ for Kudirai, Badhma for Padma etc. Most people are unable to pronounce even Tamil’s special alphabet (Zha). As Tiru Ponnusami says that there is a bad campaign saying that Sankrit belongs to brahmins. I have been a loser because of that.
  Anyway, thanks for the above article. I am sorry, in this website, I am unable to type in Tamil. Do forgive me for this.

 6. Balasubramanian N.

  எளிய நடைக்கும் ஒரு ‘சமமான தொனி’ க்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் மேற்காணும் கட்டுரையில் முதல்முதற்கண் திருத்தத்துக்குகந்த விஷயத்தை மட்டும் இங்குக்குறிப்பிட விரும்புகிறேன்:- க -வின் ஓர் உச்சரிப்பக ஹ குறிப்பிடப்பட்டுள்ளதே, அது தவறு. ஹ என்பது தொண்டையின் ஒரு பகுதியும் ஒட்டுறாமல் நெஞ்சாங்குழியிலிருந்தே காற்று வெளிப்படும் ஒலி – வடக்கத்தியானின் .ह வேதான். ஆனால் க-வின் அந்த ஹ போல மயக்கும் மெல்லொலி எப்படிஎன்றால்:- க உச்சரிப்பதற்கான பாகங்கள் [அடி நாக்கு + அதற்கு நேர் மேலான மேலண்ணத்தின் பின்பக்கம்] இரண்டும் முழுதாக ஒட்டும்போது க உண்டாகிறதே அப்படியல்லாமல் அவை முழுதாக ஒட்டாமல் குறுகிய நிலையில் காற்று வெளியேற்றும்போது உண்டாகும் ஒலி. வேறு விதமாக விளக்கினால் :- ஹ அடித்தொண்டையிலிருந்து வருவது. ஆனால் க -வை முழுதும் அழுத்தாமல் [அடி நாக்கு+மேலண்ணம் குறுக்காமல்] சொல்லும்போது வருவது ராகம் / நாகம் / வேகம்/ சிறகு/ விறகு / படகோட்டி / வரகூர் / அழகோவியம் ….. எனப்பலபல எடுத்துக்காடுக்களில் காணும் க. குழந்தைகள் ‘ங்க்ஹ்’ என மழலும்போது வரும் ஒலி! இதெல்லாம் என் கண்டுபிடிப்போ [நிறையப்பேர் செய்வது போல் சுய [தான்-தோன்றி!] ஆராய்சசிப பிரகடனமோ அல்ல!

 7. விஷு

  அருமையான கட்டுரைகளுக்கு நன்றிகள்.
  தமிழ் எழுத்துக்கள் தமிழ்மொழி ஒலிவடிவங்களை வரிவடிவங்களில் ஏற்ற போதுமானவையே. மாற்றோலியன்கள் தமிழ்மொழிக்கு ஒரு தனித்துவம் என்றே கூறலாம்.
  ஆயினும் பலரும் பெயர்கள் போன்றவற்றை பிறமொழிகளில் எழுதும் போது அவற்றை எழுதும் முறை சற்று சிந்திக்க வேண்டியதே. உதாரணமாக “கந்தன் – kanthan (Kandan)”, “தனலக்ஷ்மி – Thanalakshmi (Dhanalakshmi)”, வீரபாத்திரன் – Veerapathiran (Veerabhatran) என பல கூறலாம். எனவே தத்சம ரூபங்களையும் அறிந்து வைத்துக்கொள்வோமே என்பது என் கருத்து.

 8. Taajudeen

  My little attempt to use our Tamil language on a global scale is a new Tamil book.
  Tamil letters 247 has been simplified to 24 characters in a new format.Could you kindly share your mail I’d…so that I could share the pdf.
  Contact U.Taajudeen cell:+91 9380212121

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)