காவிய அலங்காரம்

தமிழில் அணி இலக்கணம் போல, வடமொழியில் விரிவான அலங்கார இலக்கணம் உண்டு. அலங்காரம் (Figure of speech) சொல்ல வரும் செய்தியை மேலும் அழகுடனும், வலுவுடனும் வெளிப்படுத்தக் கூடியது. ஒரு காவியம் அல்லது கவிதையின் அழகை பன்மடங்கு அதிகரித்துக் காட்டக் கூடியது.

காவியங்களை இயற்றும் போது சில விதிகளை அனுசரித்தே ஆகவேண்டும். இவற்றை தொகுப்பாக அலங்காரம் (அணி இலக்கணம்) என்று அழைக்கின்றனர்.

இலக்கியம் அல்லது காவியம் என்பது எளிமையாகச் சொல்லப் போனால் சொற்களை, வாக்கியங்களை சரியான விதத்தில் பொருள் பொதிந்ததாக அமைப்பது என்று கருதலாம். இவ்வாறு உருவாகும் காவியங்கள் தமது கருப்பொருளாலும், அமைந்த விதத்தாலும் ஜீவனுள்ளவை ஆகின்றன. இவ்வாறான காவியங்களுக்கு மனிதர்களைப் போலவே உயிர் உண்டு. அங்கங்கள் உண்டு. பண்புகள் உண்டு. காவியத்திற்கு இனிமையே முதன்மையான பண்பு என்று சிலர் கூறுவர். மனிதர்கள் ஆபரணங்களை அணியும்போது அழகு மேலும் கூடித் தெரிவது போல அலங்காரங்கள் காவியத்தின் இனிமையை அழகை அதிகரிக்கிறது.

அலங்காரங்கள் இரண்டு வகைப்படும் – ஶப்³தா³லங்கார: (शब्दालङ्कार:) மற்றும் அர்தா²லங்கார: (अर्थालङ्कार: ) எனப்படும்.

ப்ராசம், அநுப்ராசம் (எதுகை, மோனை போன்றவை), யமகம் போன்ற செய்யுள் அமைப்புகள் ஶப்³தா³லங்கார வகுப்பில் சேரும். உபமா, ரூபகம், உத்ப்ரேக்ஷை ஆகியவை அர்தா²லங்கார: வகுப்பில் சேரும். அலங்காரம் என்பது ஒரு கவிஞன், காவியகர்த்தா தன் உள்ளத்தில் எழும் உணர்வுகளை மிக அழுத்தமாக பதிவு செய்ய உதவுகிறது எனலாம்.

உபமா அலங்காரம்

लक्षणं:

उपमा यत्र सादृश्यलक्ष्मीरुल्लसति द्वयो: |
– द्वयो समानसौन्दर्यं यत्र उल्लसति तत्र उपमालङ्कार:

இரு விஷயங்களிடையே பெருமளவிலான ஒற்றுமையை தெள்ளத் தெளிவாக எடுத்துரைப்பது உபமாலங்காரம். அதாவது ஒரே மாதிரியான இரண்டு விஷயங்களை ஒப்பிட்டு கூறுவது உபமாலங்காரம். உவமானத்தில் நான்கு அம்சங்கள் இருக்கும். உபமானம் (ஒப்புமை), உபமேயம் (விளக்கப் படும் பொருள்), ஸாதாரண தர்மம் (பொதுவான பண்பு), உபமாவாசக சப்தம் (இவ, ஸத்ருஸ போன்ற சொற்கள்). இவ்வாறு நான்கு அம்சங்களும் உள்ள அலங்கார அமைப்பு पूर्नोपमालङ्कार: எனப்படும்.

हंसीव कृष्ण ते कीर्ति: स्वर्गंगामवगाहते ||
ஹம்ʼஸீவ க்ருʼஷ்ண தே கீர்தி: ஹம்ʼஸீவ க்ருʼஷ்ண தே கீர்தி: ஸ்வர்க³ங்கா³மவகா³ஹதே ||

ஓ… கிருஷ்ணா! உன் பெருமை சுவர்க்கத்தில் உள்ள கங்கையில் நீந்தும் அன்னம் போல மிளிர்கிறது…

இதில்
உபமானம் – ஹம்ʼஸீ (हंसी)
உபமேயம் – கீர்தி (कीर्ति )
சாதாரண தர்மம் – மிளிர்தல்
உபமாவாசாக சப்தம் – இவ (इव )

இன்னொரு உதாரணம்

अम्भोरुहमिवाताम्रं मुग्धे करतलं तव

அம்போ⁴ருஹமிவாதாம்ரம்ʼ முக்³தே⁴ கரதலம்ʼ தவ

முத்தே! உன் கைகள் தாமரை ஒத்த சிவப்புடன் உள்ளன

உபமானம் – அம்போ⁴ருஹ (अम्भोरुह)
உபமேயம் – கரதலம்ʼ (करतलं )
சாதாரண தர்மம் – ஆதாம்ரம் (आताम्रम् )
உபமாவாசக சப்தம் – இவ (इव )

இந்த நான்கு அம்சங்களில் ஏதாவது இல்லாமல் இருந்தால் அது लुप्तोपमालङ्कार: எனப்படும்.

உதாரணம்:

अयं गज: इव दृश्यते
அயம்ʼ க³ஜ: இவ த்³ருʼஶ்யதே

अत्र स्थूल: इति अध्याहार: |
அத்ர ஸ்தூ²ல: இதி அத்⁴யாஹார: |

இங்கே யானையைப் போல இருக்கிறது என்பதோடு நிறுத்தப் பட்டு விட்டது. யானையைப் போல ஸ்தூலமாக (குண்டாக) இருக்கிறது என்ற அர்த்தத்தில் வரும் போது ஸ்தூலம் என்கிற சொல் வாக்கியத்தில் இல்லை. இது लुप्तोपमालङ्कार: ஆகும்.

***

ரூபகம்

ரூபகம் என்பது உருவகம் என்று தமிழில் சொல்லலாம். இது படிமம் (metaphor) அல்லது குறியீடு ஆகும்.

उपमान उपमेययो: अभेदवर्णनम् रूपकम्
உபமான உபமேயயோ: அபே⁴த³வர்ணனம் ரூபகம்

இவ்வமைப்பில் உபமேயம் என்பது உபமானத்துடனே இருக்கும் – அதே சமயம் உபமானம் தனது தனித்த அடையாளத்தை இழக்காமலும் இருக்கும். இந்த அமைப்பு ஆரோப (आरोप) என்று அழைக்கப் படுகிறது. ரூபகம் (உருவகம்) என்பது ஒரு பொருளைப் போல இன்னொன்று இருக்கிறது என்று கூறுவதில்லை. இரண்டு பொருட்களுமே ஒன்றில் ஒன்றானது என்று கூறுகிறது.
உதாரணம்:

मुकचन्द्रो विराजते
முகசந்த்³ரோ விராஜதே

இந்த வாக்கியத்தில் முகம் என்ற சொல்லும் சந்திரன் என்ற சொல்லும் குறிப்பவை வேறு வேறு அல்ல என்பது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. உண்மையில் முகம் நிலவாக இருக்க முடியாது. இதில் உட்பொருளாக முகம் நிலவைப்போல் உள்ளது என்று உருவகப்படுத்தப் படுகிறது. ஆனால் ஒப்புமை கூறுகிற சொற்கள் இல்லாமையால் உருவகம் என்பது உட்பொருளாக பொதிந்துள்ளது.

***

உத்ப்ரேக்ஷை

सम्भावना स्यादुत्प्रेक्षा
ஸம்பா⁴வனா ஸ்யாது³த்ப்ரேக்ஷா

உத்ப்ரேக்ஷை என்பது கவிஞரின் கற்பனை. அதாவது ஒரு சில ஒற்றுமையான அம்சங்களால் ஒரு பொருளை இன்னொன்றைப்போல இருப்பதாக கூறுவது உத்ப்ரேக்ஷை. பெரும்பாலும் உத்ப்ரேக்ஷை என்பது மிகைப் படுத்திய உதாரணமாக இருக்கும்.

உதாரணம்:

मुखं भूमिगतं चन्द्रं मन्ये
முக²ம்ʼ பூ⁴மிக³தம்ʼ சந்த்³ரம்ʼ மன்யே

(இவள்) முகமானது பூமியில் இறங்கி வந்த நிலவு என்று கருதுகிறேன்.
இந்த வாக்கியத்தில் கூறுவது போல பூமிக்கு நிலவு இறங்கி வரக்கூடிய வாய்ப்பில்லை. இது அழகிய முகம் என்கிற கருத்தைச் சொல்வதற்காக கூறப்படும் மிகைப்படுத்தப் பட்ட சொற்றொடர்.

लिम्पतीव तमोङ्गनि वर्षतीवाञ्जनं नभ:
லிம்பதீவ தமோங்க³னி வர்ஷதீவாஞ்ஜனம்ʼ நப⁴:

இருள் அங்கத்தின் மீதெல்லாம் தடவியது போல (இருந்தது); வானம் கறுப்பு மையை மழை போல பொழிவது போல (இருந்தது)

இருள் பரவி எல்லாவற்றின் மீதும் படர்ந்து எங்கும் கருமையாக தெரிகிறது. இருள் பரவுவதை அங்கத்தின் மீது இருள் பூசியதாகவும், வானத்தில் இருந்து இருள் மழை போல பொழிவதாகவும் கற்பனை செய்யப் படுகிறது.

***

அர்தா²ந்தரன்யாஸ: (अर्थान्तरन्यास:)

सामान्येन विशेषस्य समर्थनम्
ஸாமான்யேன விஶேஷஸ்ய ஸமர்த²னம்

ஒரு பொதுவான விஷயத்தையும் அதனுடன் ஒரு குறிப்பிட்ட விஷயத்தையும் ஒப்புமையாகக் கூறுவது अर्थान्तरन्यास: எனப்படும்.
உதாரணம்:

हनुमान् अब्धिं अतरत् दुष्करं किं महात्मानम्!
ஹனுமான் அப்³தி⁴ம்ʼ அதரத் து³ஷ்கரம்ʼ கிம்ʼ மஹாத்மானம்!

ஹனுமான் கடலை தாண்டினார். பெரியோர்களுக்கு எதுதான் இயலாத காரியம்?
இந்த வாக்கியத்தில் ஹனுமான் கடலைக் கடந்த ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை பொதுவான கருத்தாக செயல் திறன் மிக்க பெரியோர்களுக்கு எதுவும் இயலாத காரியம் அல்ல என்கிற கருத்துடன் சேர்த்து கூறப் படுகிறது.
மற்றொரு உதாரணம்:

गुणवज्जनसंसर्गात् याति स्वल्पोऽपि गौरवम् |
पुष्पमालानुषङ्गेण सूत्रं शिरशि धार्यते ||

கு³ணவஜ்ஜனஸம்ʼஸர்கா³த் யாதி ஸ்வல்போ(அ)பி கௌ³ரவம் |
புஷ்பமாலானுஷங்கே³ண ஸூத்ரம்ʼ ஶிரஶி தா⁴ர்யதே ||

எத்தகுதியும் இல்லாத (அற்பமான) ஒருவர் கூட பெருமை வாய்ந்த மக்களுடன் சேர்ந்திருக்கும் போது பெருமை அடைகிறார். மலர்களுடன் சேர்ந்திருப்பதால் அவற்றை கட்டிய நூலும் தலையில் சுமக்கப் படுகிறது. இதில் பொதுவான ஒரு கருத்தை முதல் பகுதியிலும், அதற்கு உவமையாக குறிப்பாக ஒரு கருத்தை இரண்டாவது பகுதியிலும் குறிப்பிட்டு இருப்பதால் இது அர்தா²ந்தரன்யாஸ:(अर्थान्तरन्यास:)

***

அனுப்ராஸ: (अनुप्रास:)
एकस्यैव व्यञ्जनस्य अनेकावृत्ति:
ஏகஸ்யைவ வ்யஞ்ஜனஸ்ய அனேகாவ்ருʼத்தி:

அநுப்ராஸம் என்பது ஒரிரு எழுத்துக்களை திரும்ப திரும்ப இடம் பெறச் செய்தல்.
உதாரணம்:
“दूरिकरोतु दुरितं गौरीचरणपङ्कजम्”
“தூ³ரிகரோது து³ரிதம்ʼ கௌ³ரீசரணபங்கஜம்”

– இதில் ர (र) என்கிற எழுத்து திரும்ப திரும்ப இடம் பெறுகிறது.
आनन्दस्यन्दि सुन्दरेन्दुमुखी – இதில் “ந்த” என்கிற எழுத்து திரும்ப திரும்ப வருகிறது.
ஆனந்த³ஸ்யந்தி³ ஸுந்த³ரேந்து³முகீ²

नतेतराति भीकरं नवोदितार्कभास्वरम् |
नमत्सुरारि निर्जरं नताधिकापदुद्धरम् ||

நதேதராதி பீ⁴கரம்ʼ நவோதி³தார்கபா⁴ஸ்வரம் |
நமத்ஸுராரி நிர்ஜரம்ʼ நதாதி⁴காபது³த்³த⁴ரம் ||

– இதில் ரம் என்கிற எழுத்து மறுபடி மறுபடி இடம்பெறுகிறது.

***

த்³ருʼஷ்டாந்த: (दृष्टान्त:)

“भिन्नधर्मिणो: उपमानोपमेयो:
बिम्बप्रतिबिम्बत्वम् दृष्टान्त:”

“பி⁴ன்னத⁴ர்மிணோ: உபமானோபமேயோ:
பி³ம்ப³ப்ரதிபி³ம்ப³த்வம் த்³ருʼஷ்டாந்த:

இரு வாக்கியங்களில் ஒன்று உபமானத்தையும் மற்றொரு வாக்கியம் உபமேயத்தையும், ஒருவர் கண்ணாடியில் உருவத்தைப் பார்க்கும் போது தெரியும் பிரதிபலிப்பு போல அமைந்தால் அது த்ருஷ்டாந்தம் எனப்படும்.

உதாரணம்:

त्वमेव कीर्तिमान् राजा
विधुरेव हि कान्तिमान्

த்வமேவ கீர்திமான் ராஜா
விது⁴ரேவ ஹி காந்திமான்

அரசே ! நீயே புகழ் வாய்ந்தவன்
சந்திரனே ஒளிமிகுந்தவன்

இந்த ஸ்லோகத்தில் புகழும், ஒளி மிகுந்த தன்மையும் சமமாக உள்ள பண்புகளாக காட்டப் பட்டுள்ளது. இது இந்த இரு வாக்கியங்களும் ஒன்றின் பிரதிபலிப்பாக மற்றொன்று இருப்பது போல அமைந்துள்ளது.

***

ஶ்லேஷ: (श्लेष:)

यत्र एकस्मिन् वाक्ये अनेकार्थ प्रतिपादका: शब्दा: भवन्ति तत्र श्लेष:
யத்ர ஏகஸ்மின் வாக்யே அனேகார்த² ப்ரதிபாத³கா: ஶப்³தா³: ப⁴வந்தி தத்ர ஶ்லேஷ:

ஒரு சொல் பல அர்த்தத்தில் உபயோகப் படுத்தப் பட்டால் அது சிலேடை (श्लेष:) ஆகும்.
உதாரணம்:
कादम्बरीरसज्ञानां आहारोऽपि न रोचते |
காத³ம்ப³ரீரஸஜ்ஞானாம்ʼ ஆஹாரோ(அ)பி ந ரோசதே |

காதம்பரி இருந்தால் வேறு ஆகாரம் வேண்டாம்.
இந்த உதாரணத்தில் காதம்பரி என்கிற சொல் இரண்டு அர்த்தத்தில் அமைந்துள்ளது. ஒன்று பாணர் இயற்றிய காதம்பரி காவியம். மற்றொரு அர்த்தம் கள் அல்லது மது ஆகும்.

माघे मेघे गतं वय:
மாகே⁴ மேகே⁴ க³தம்ʼ வய:

மாகம் என்பதற்கு ஒரு அர்த்தம் மாக மாதம்; மற்றொரு அர்த்தம் மாகர் என்கிற கவியின் பெயர்.
மேகே என்பது மேகத்திலே என்று ஒரு அர்த்தம்; மற்றொன்று மேகதூதம் என்கிற நூலின் பெயர்
வய: என்பது காலம் மற்றும் பறவை என்ற இரு பொருள் கொண்டது.

ஆக அர்த்தம் ஒன்று: மாக மாதத்திலே மேகத்தினூடே பறவை பறந்தது
அர்த்தம் இரண்டு: மாக காவியத்திலும் மேகதூத காவியத்திலும் காலம் கழிந்தது

***

அதிஶயோக்தி: (अतिशयोक्ति:)
अतिशयेन उक्ति: अतिशयोक्ति:
विवक्षा या विशेषस्य लोकसीमातिवर्तिनी

அதிஶயேன உக்தி: அதிஶயோக்தி:
விவக்ஷா யா விஶேஷஸ்ய லோகஸீமாதிவர்தினீ

ஒரு விஷயத்தில் அதன் பண்புகளை அளவுக்கு மீறிய வேறொரு விஷயமாக கூறுவது. மிகைப்படுத்திக் கூறுவதில் இது ஒரு வகை.
पश्य नीलोत्पलद्वन्द्वात् निस्सरन्ति शिता: शरा:
பஶ்ய நீலோத்பலத்³வந்த்³வாத் நிஸ்ஸரந்தி ஶிதா: ஶரா:

பார், இந்த கூறிய அம்புகள் இரு நீலத் தாமரைகளில் இருந்து புறப்படுவதை!

இங்கே இரு தாமரைகள் கண்களுக்கும், கடைக்கண் பார்வை கூறிய அம்புகளுக்கும் உதாரணமாக கூறப் பட்டாலும் அவை உபமானம் – உபமேயம் என்று தனித்தனியாக இல்லாமல் ஒன்றுடன் ஒன்றாக கலந்துள்ளன. கண்களும் பார்வையும் தாமரை மலருடனும் அம்புகளுடனும் ஒப்பிடப் பட்டுள்ளது அருமையான உவமை.

***

வ்யதிரேகாலங்கார: (व्यतिरेकालङ्कार:)

उपमान उपमेययो: सामान्यधर्मम् यदि कथ्यते तर्हि व्यतिरेक:
உபமான உபமேயயோ: ஸாமான்யத⁴ர்மம் யதி³ கத்²யதே தர்ஹி வ்யதிரேக:

உபமான உபமேயங்களின் நடுவே உள்ள வேறுபாட்டை சொல்லி உவமைப் படுத்துவது வ்யதிரேகம் எனப்படும்.

शैला इवोन्नता: सन्त: किन्तु प्रकृति कोमला:
ஶைலா இவோன்னதா: ஸந்த: கிந்து ப்ரக்ருʼதி கோமலா:

நன்மக்கள் மலை போல உயர்ந்தவர்கள்; ஆனால் சுபாவத்தில் மென்மையானவர்கள் என்பது இங்கே கொடுத்துள்ள உதாரணம். பெரியோர்களை அவர்கள் பெருந்தன்மையை மலையுடன் ஒப்பிட்டு கூறியபின், ஒரு வேறுபாடாக அவர்கள் சுபாவத்தில் உள்ள மென்மையை சுட்டப் படுகிறது.

***

ஸ்மரணாலங்கார: (स्मरणालङ्कार:)

सदृशस्मरणं स्मरणालङ्कार:
वस्तु विशेषं दृष्ट्वा तत्सदृशस्य स्मरणं

ஸத்³ருʼஶஸ்மரணம்ʼ ஸ்மரணாலங்கார:
வஸ்து விஶேஷம்ʼ த்³ருʼஷ்ட்வா தத்ஸத்³ருʼஶஸ்ய ஸ்மரணம்ʼ

ஒன்றை கண்ணால் காணும்போது அதைப் போன்ற வேறொன்றின் நினைவை ஏற்படுத்துவது ஸ்மரணாலங்காரம்.
உதாரணம்:
दृष्ट्वा एतद् बालशौण्डीर्यं सौभद्रस्य समराम्यहम्
घटोत्कचस्य शौर्यं दृष्ट्वा अभिमन्यो: स्मरणम्

த்³ருʼஷ்ட்வா ஏதத்³ பா³லஶௌண்டீ³ர்யம்ʼ ஸௌப⁴த்³ரஸ்ய ஸமராம்யஹம்
க⁴டோத்கசஸ்ய ஶௌர்யம்ʼ த்³ருʼஷ்ட்வா அபி⁴மன்யோ: ஸ்மரணம்

பீமன் தன் மகன் கடோத்கசனின் வீரத்தைப் பார்த்து அபிமன்யுவை நினைத்துக் கொள்கிறான்.

***

5 Comments காவிய அலங்காரம்

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)