(எழுதியவர்: பிரம்மஸ்ரீ. நீர்வை. தி. மயூரகிரி சர்மா)
சிலப்பதிகாரச் செல்வி! அற்புதங்களின் தாய்! கற்பிற்கரசி! தமிழர்களின் தனிப்பெரும் அடையாளம், பெருமை, பேரருளின் அம்மை, கண்ணகி வரலாறு பேசும் நவரத்ன மாலா புதிதாக இயற்றியது.. கண்ணகிக்கு ஈழத்தின் பல பாகங்களிலும் அநேக ஊர்களில் எல்லாம் பழங்காலம் தொட்டு ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றில் வற்றாப்பளை போன்றவை உலகப்புகழ் பெற்றவை.
இவ்வாறான பல ஊர்களில் கண்ணகிக்கு கோபுரம், ப்ரகாரங்களோடு ஆலயமிருக்கிறது. திருத்தேர் பவனியும் பல இடங்களில் உண்டு. ஆறுமுக நாவலர் போன்றவர்களின் ஆகம வழி அலையால் சிறுதெய்வம் என்று புறக்கணிக்கப்பட்டு பெயர் மாற்றம் – உரு மாற்றம் பெற்ற போதும் இன்றும் அவற்றை எல்லாம் தாண்டி நிமிர்ந்து நிற்கும் சிறப்புடைய கண்ணகி ஆலயங்கள் பல உண்டு.
வைகாசியில் விழாக் கோலம் காணும் இந்த ஆலயங்களை இன்றைக்கும் ஈழமெங்கும் காணலாம். இன்னும் இலங்கையில் வாழும் சிங்களவர்களும் பத்தினி தெய்யோ என்று போற்றும் படியாகவும் ஜாதி பேதமின்றி யாவரும் வணங்கும் நாயகியாகவும் கண்ணகா விளங்குகின்றாள்.
இவ்வாறு கண்ணகி ஆலயங்கள் நிமிர்ந்து நின்ற போதும், இன்றைக்கு ஆகம வழிப்பட்ட ஆராதனைகளும் உற்சங்களும் கண்ணகா பரமேஸ்வரிக்கு முன்னெடுக்கப்படும் போதும், சம்ஸ்கிருத வழி துதிப்பாக்கள் இந்த அன்னைக்கு இன்று வரை இல்லாதே இருக்கின்றன (அண்மையில் வெளியான அஷ்டோத்திரசதம் தவிர..) இந்நிலையில் இந் நவரத்னஸ்துதி அம்பிகை திருவடிகளில் சமர்ப்பிக்கின்றோம்..
ஸ்ரீ கண்ணகீ நவரத்ன மாலா
மாணிக்யஸி²ஞ்ஜினீஹஸ்தாம்ʼ **
மானாயகஸுதாம்ʼ வராம்|
மஹாஸத்த்வஸ்னுஷாம்ʼ த⁴ன்யாம்ʼ
மாதரம்ʼ கண்ணகீம்ʼ ப⁴ஜே ||
01
கனக விஜய சிரோத்ருத
கங்கா தீர்த்த அபிஷிக்தாம்
கஜபாஹ_ ராஜ சேவிதாம்
காளீம் ஸ்ரீ கண்ணகீம் நமாமி!
02
சோழ தேசோத்பவாம் தேவீம்
சேர வம்ச குல பூஜிதாம்
சுர ஸ்துத்யாம் ஆதிசக்தீம்
சௌந்தரீம் ஸ்ரீ கண்ணகீம் நமாமி!
03
மதுரா நகர தாஹினீம் சிவாம்
மாதர்யா: பரிபாலிதாம் குமாரீம்
கிராத நிர்மித ஸ்தல வாஸினீம்
மயூரீம் ஸ்ரீ கண்ணகீம் நமாமி!
04
செங்குட்டுவ ராஜ வந்த்யாம்
ஸர்வ ரோஹ நிவாரணீம்
கவுந்தீபாலிதாம் கருணா மயீம்
வீரபத்னீம் ஸ்ரீ கண்ணகீம் நமாமி!
05
பீஜக விருக்ஷ சாயாஸ்திதாம்
பராசக்திஸ்வரூப நாயகீம்
காவேரீ புஷ்ப நகரிணீம் தேவீம்
பகவதீம் ஸ்ரீ கண்ணகீம் நமாமி!
06
ஆகாச மார்க்க காமினீம்
ஆனந்த சாகர ஸ்வரூபிணீம்
ஆச்சர்ய சரித்திரமயீம் காமாக்ஷீம்
அம்பிகாம் ஸ்ரீ கண்ணகீம் நமாமி!
07
கோவல நாயகீம் தேவீம்
ஹம்ஸானந்தீம் சௌந்தரீம்
ஹிமாசல சிலோத்பூதாம்
கல்பனாம் ஸ்ரீ கண்ணகீம் நமாமி!
08
இந்திர வந்த்யாம் இஷ்டதாம்
இளங்கோ கவிராஜ வந்த்யாம்
சுந்தரீம் ஸர்வ சம்பத்ப்ரதாம்
சரஸ்வதீம் ஸ்ரீ கண்ணகீம் நமாமி!
09
ஸ்ரீ மாதா கண்ணகா நவரத்ன மாலா விளக்கவுரை
1. மாணிக்கச் சிலம்பு ஏந்திய திருக்கரங்களை உடையவளை (இணை அரிச் சிலம்பொன்று ஏந்திய கையள்), மாநாய்க்கன் என்ற வணிகர் தலைவனின் புதல்வி (மாநாய்கன் குலக் கொம்பர்), மாசாத்துவன் என்ற வணிகனின் புதல்வனான கோவலனின் மனைவியானவள் (மாசாத்து வணிகன் மகனேயாகி…. கோவலன் மனைவி), கல்யாண குணங்கள் நிரம்பப்பெற்றவள், இவ்வாறான அன்னை திருவுடை கண்ணகையை வணங்குகின்றோம்
2. கனகன், விஜயன் என்ற வடநாட்டு அரசர்கள் தங்கள் தலையில் சுமந்து வந்த தூயகங்கா நீரால் திருமுழுக்குச் செய்யப்பெற்ற சிறப்புடையவள் (அவர் முடித்தலை அணங்கு ஆகிய பேர் இமயக்கல் சுமத்தி.. கங்கைப் பேர் யாற்றிருந்து, நங்கை தன்னை நீர்ப்படுத்தி…) இலங்கை அரசனான கயவாகு என்பானால் வழிபடப்பெற்று இலங்கையிலும் பிரபல்யம் செய்யப்பெற்ற பெருமையினள் (கடல் சூழ் இலங்கைக் கயவாகு என்பான் நங்கைக்கு நாள்பலி- பீடிகைக் கோட்டம் முந்துறுத்து) காளியைப் போல கயமை களையும் பாங்கினள் (சூர் உடை கானகம் உகந்த காளி) இத்தகு அன்னை திருவுடை கண்ணகையை வணங்குகின்றோம்.
3. சோழ நாட்டில் அவதரித்தவள், சேரர்களால் பகவதி என்று புகழ்ந்து வழிபாடாற்றப்பட்டவள், தேவர்களால் போற்றப்படுபவள்.. ஆதிசக்தியான பார்வதியின் அம்சமானவள், அழகில் தன்னிகர் இல்லாதவள் (போதில் ஆர் திருவினாள், புகழ் உடை வடிவு என்றும், தீது இலாத வடமீனின் திறம் இவள் திறம் என்றும்) ஆகிய அன்னை திருமிகு கண்ணகியை வணங்குகின்றோம்
4. மதுரையை சினம் கொண்டு எரித்தவள், பரசிவனைப் போன்ற அன்னை, மாதரி என்பவளால் பாதுகாக்கப்பட்டவள்,(ஆயர் முதுமகள் மாதரி என்போள்.. தீதறு செய்தனள்) என்றும் குமரியாகத் திகழ்பவள், வேடர்களால் நிர்மாணிக்கப்பட்ட ஆலயத்தில் மகிழ்வோடு வசிப்பவள், (குன்றவரும் கண்டு நிற்ப கொழுநனொடு கொண்டு போயினார், இவள் போலும் நங்குலக்கோர் இருந் தெய்வம் இல்லை) மயிலைப் போல அழகு பொருந்தப் பெற்றவள் ஆகிய அன்னை திருமிகு கண்ணகியை வணங்குகின்றோம்.
மாமகளும் நாமகளும் மாமயிடன் செற்றுகந்த
கோமகளும் தாம் படைத்த கொற்றத்தாள்இ- நாம
முதிரா முலை குறைத்தாள், முன்னரே வந்தாள்
மதுரா பதி என்னும் மாது
5. செங்குட்டுவ அரசனால் வணங்கி வழிபடப்பெற்றவள், எல்லா நோய்களையும் துக்கங்களையும் நீக்க வல்ல தெய்வத்தன்மை பொருந்தப் பெற்றவள். கௌந்தியடிகளால் பாதுகாக்கப்பட்டவள். கருணைக்கடலாக நின்று நாம் செய்யும் குற்றங்களைப் பொறுத்தருள வல்லவள்… வீர பத்தினி என்று கொண்டாடப்படுபவள் (இலங்கையில் சிங்கள மொழி பேசும் பௌத்தர்கள் இவ்வன்னையை ‘பத்தினி தெய்யோ’ என்று பக்தியோடு பூஜிக்கிறார்கள்) அத்தகு அன்னை ஸ்ரீ கண்ணகியை வணங்குகின்றோம்..
6. வேங்கை மர நிழலில் பராசக்தி வடிவமாக.. தெய்வீக உருவெடுத்தவள், (பூத்த வெங்கைப் பூங்கற்கீழ்…. வான ஊர்தி ஏறினள் மாதோ- கானமர் புரி குழல் கண்ணகி –தான்- என்) காவிரிப் பூம்பட்டினத்தினை தன் சொந்த ஊராகக் கொண்டவள், (பெரும் பெயர்ப் புகார் என் பதியே) பகவதியாகிய அன்னை கண்ணகியை வணங்குகின்றோம்..
7. வானவழிச் சென்ற அன்னை, மகிழ்ச்சிக் கடலானவள், தன்னை வணங்குவொருக்கு சதா சந்தோஷம் தருபவள், ஆச்சர்யமான வரலாற்றைக் கொண்டவள் (ஒரு மார்பிழந்த திருமா பத்தினி) .. காமாக்ஷியாக விளங்குபவள்… (காமாக்ஷி என்றால் அன்பு பொருந்திய கண்களை கொண்டவள் என்பது பொருள்… கண்ணகை என்றாலும் இவ்வகைப் பொருள் கொள்ள வல்லதாயிருக்கிறமை கண்டனுபவிக்கத்தக்கது… சிலப்பதிகாரத்தில் காமகோட்டம் பேசப்பட்டிருப்பதும் சிந்திக்கத்தக்கது.) இவ்வாறான அன்னை கண்ணகியைப் போற்றுகின்றோம்.
8. கோவலனின் தர்மபத்தினி, அன்னம் போல விளங்குபவள் (அன்னப்பறவை பாலை எடுத்து நீரை விடுமாப் போல தன் அடியவர்களின் குறைகளை நீக்கி குணங் கொண்டு அருள்பவள்), பேரழகின் திருவுடையாள் இமயமலையில் சிலை உருவம் பெற்றவள்.. (செங்குட்டுவன் இமயமலையில் கல்லெடுத்துக் கண்ணகிக்கு சிலை அமைத்தான் என்பது வரலாறு)… கற்பகம் போல கருணை சுரப்பவள்.. இத்தகு அன்னை கண்ணகையைப் போற்றுகின்றோம்..
9. இந்திரனால் வணங்கப்பட்டவள் (அமரர்க்கு அரசன் தமர் வந்து ஏத்த) இளங்கோ என்ற கவியரசரால் சிலப்பதிகார காவியம் பாடிப் போற்றப்பட்டவள் (சிலப்பதிகாரம் என்னும் பெயரால் நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்.. என முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது அடிகள் நீரே அருளுக) எப்போதும் அழகு பொருந்தப்பெற்றவள், எல்லா வித இன்பங்களும் அளிப்பவள், சரஸ்வதி போல நின்று சர்வ கலை கல்வி ஞானம் கொடுப்பவள், இத்தகு திருமிகு அன்னை கண்ணகையைப் போற்றுகின்றோம்..
மண்ணக மாதர்க்கு அணியாய கண்ணகி
விண்ணக மாதர்க்கு விருந்து –சிலப்பதிகாரம்
குறிப்பு- இங்கே சிலப்பதிகாரப் பாடல் வரிகள் சில எடுத்தாளப்பட்டுள்ளதைக் காண்க.
எழுதியவர்:
பிரம்மஸ்ரீ. மயூரகிரி சர்மா
நீர்வேலி
யாழ்ப்பாணம்.
—-
குறிப்பு:
** இந்த சுலோகத்தை எழுதிய ஸ்ரீ. மயூரகிரி சர்மா அவர்களின் பாடம்:
மாணிக்க நூபுர ஹஸ்தாம்
மாநாய்க்க வைஸ்யராஜ கந்யாம்
மாசாத்வ சுத நாயகீம் கல்யாணீம்
மாதாம் ஸ்ரீ கண்ணகீம் நமாமி!
இதில் மாதாம் என்ற பிரயோகம் தவறென்று முனைவர். சங்கரநாராயணன் அவர்கள் திருத்திய வடிவத்தை மேலே கொடுத்துள்ளோம். அவரே தந்த இன்னொரு பாடம்:
மாணிக்யமஞ்ஜீரலஸத்கராட்⁴யாம்ʼ மானாயகப்ராணஸுதா⁴ம்ʼ வராங்கீ³ம்|
மாஸத்த்வபுத்ரப்ரியகல்பவல்லீம்ʼ ஸ்ரீகண்ணகீம்ʼ நௌமி க்ருʼபாம்பு³ராஸி²ம்||
மிகவும் சிறப்பு… நன்றிகள்.. நமது இலங்கையில் பல்வேறு பாகங்களிலும் கண்ணகை அன்னை ஆலயங்கள் சிறப்புற்று விளங்குகின்றன…
இவற்றில் தென்மராட்சி- சுட்டிபுரம் என்ற ஊரில் எழுந்தருளியுள்ள கண்ணகை பேரில் மஹா வித்வான் ந.வீரமணி ஐயர் அவர்கள் இற்றைக்கு ஐம்பதாண்டுகளுக்கு முன் பாடி இசையரசர் சீர்காழி. கோவிந்தராஜன் அவர்களால் பாடப்பெற்ற பாடலை இந்த யூரியூபில் பார்க்கலாம்..
இவர்கள் இருவரும் மேற்படி கோயிலுக்கு காரில் சென்று கொண்டிருந்த போது, வழியில் பசுக்கூட்டம் வழியை மறித்து மேய்ச்சலுக்கு பட்டியாகச் சென்று கொண்டிருந்ததாம்.. இதனால், வழியில் சில நிமிடங்கள் நிற்க நேரிட்ட போது வீரமணி ஐயர் இப்பாடலை எழுதினார் என்றும், ஆலயத்திற்குச் சென்ற உடன் அங்கே சீர்காழி இதனை இசையமைத்துப் பாடினார் என்றும் கூறுவர்..
http://www.youtube.com/watch?v=JSMt2elnx5k
இதே போல், மட்டுவில் என்ற பதியில் உள்ள பன்றித்தலைச்சி கண்ணகை ஆலய பங்குனித் திங்கள் பொங்கல் காட்சியை இங்கே காணலாம்..
http://www.youtube.com/watch?v=HtiYALhrFGA
கடும் சமர் நிகழ்ந்த முல்லைத்தீவு நந்திக்கரையோரம்.. இலட்சோப லட்சம் மக்கள் கூடி வழிபாடாற்றும் அற்புத தலம் வற்றாப்பளை கண்ணகை ஆலயம்.. இங்கே வைகாசி மாதத்தில் கடல் நீரில் விளக்கெரியும் அற்புதம் வருடாவருடம் நடக்கிறது..
கண்ணகை வழிபாடு தொடர்பான சம்பிரதாய வழிபாடுகளை இங்குள்ள காணொளிகளில் காணலாம்..
http://www.youtube.com/watch?v=_9ENYouEeVk
http://www.youtube.com/watch?v=pN4ZEvLqzg0&feature=related
இன்னொரு ஆலயத்தில் கண்ணகை அம்பாள் சைவாம பூஜையுடன், சர்வ ராஜ உபசாரங்களுடன் தேரேறும் காட்சி…
http://www.youtube.com/watch?v=PAPrGV7KzZk&feature=related
இன்னும் பல்வேறு ஆலயங்களில் மூலமூர்த்தியாக இருந்த கண்ணகையை பரிவாரமூர்த்தியாக வைத்து விட்டு பிற்காலத்தில் சிவகாமியம்பாளை மூலவராக பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள்.. அதற்கான காரணமாக, ஆகம வழிபட்ட மஹோத்ஸவாதிகளைச் செய்ய வேண்டியிருப்பதைச் சொல்கிறார்கள்…
உண்மையில் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது.. நமது தமிழகத்திலும் ஆங்காங்கே சிறு கிராமங்களில் இன்றைக்கும் கண்ணகி வழிபாடு இருக்கும் என நம்புகிறேன்… காஞ்சி காமாக்ஷி ஆலய கருவறையினுள் காலை தூக்கிய படி நிற்கும் தவக்கோல காமாக்ஷியை சிலர் கண்ணகி என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்..
இங்கே காட்டப்பட்டுள்ள படங்களில் கண்ணகி கோபமாக இல்லாமல் அழகாக இருக்கின்றமையைப் பார்க்கிற போது இலங்கையரின் வழிபாட்டில் ஏதும் மாற்றங்கள் இருக்கலாமோ..? என்றும் தோன்றுகிறது… இந்த ஸ்லோகமும் கண்ணகியை சௌந்தரீ, மயூரீ, ஹம்ஷானந்தீ (இந்த ராகம் என்ன கண்ணகிக்கு ப்ரியமா?) , சுந்தரீ, ஸர்வ சம்பத்ப்ரதாம், சரஸ்வதீ, என்று இனிமையான .. அழகுறு பெயர்களால் அழைக்கிறதே..?
இங்கே மெரீனா கடற்கரையில் வைத்து வைத்து எடுக்கப்படும் கண்ணகி அதனாலோ… என்னவோ கோபமாக நிற்கிறாளே…????????
சிலப்பதிகாரம் கற்றவர்கள்.. தமிழை வளர்ப்பதாகச் சொல்லிக் கொள்பவர்கள் தாம் இந்த தோத்திரத்தைப் படித்து கரக்டா இருக்கான்னு சொல்ல வேணும்… அவர்கள் இனியாவது, கண்ணகியை ஒரு கோயில் கட்டி வைத்து வழிபடட்டுமே…
இந்த ஸ்தோத்ரம் மிக அருமையாக இருக்கிறது. ஆனால் பல இடங்களில் சந்தஸ் பிழைக்கிறது. சில இடங்களில் வ்யாகரணம் பிழைக்கிறது. மாதாம் என்று ப்ரயோகமே இல்லை. மாதரம் என்றே ப்ரயோகிக்க வேண்டும். சற்று கவனத்தோடு யாத்திருந்தால் மிகவும் அழகாக இருந்திருக்கும்.
माणिक्यशिञ्जिनीहस्तां मानायकसुतां वराम्।
महासत्त्वस्नुषां धन्यां मातरं कण्णकीं भजे।।
என்பது போலவோ அல்லது
माणिक्यमञ्जीरलसत्कराढ्यां मानायकप्राणसुधां वराङ्गीम्।
मासत्त्वपुत्रप्रियकल्पवल्लीं श्रीकण्णकीं नौमि कृपाम्बुराशिम्।।
என்பது போலாவது செய்யுங்கள். இது கத்யமுமில்லை பத்யமுமில்லை என்று நிற்கிறது. தயவு செய்து தவறாக எண்ண வேண்டாம். இதை நீக்கி விட்டாவது சரி செய்து போடுங்கள்.
முனைவர். க.சங்கரநாராயணன்
ஸம்ஸ்க்ருதத் துறை
ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதீ விச்வமஹாவித்யாலயா
ஏனாத்தூர், காஞ்சீபுரம்
மரியாதைக்குரிய முனைவர். ஸ்ரீ க.சங்கரநாராயணன் அவர்களுக்கு,
விஸ்வ வித்யாலயத்தில் சம்ஸ்கிருத துறையில் போதிக்கும் தாங்கள் எழுதியவை சரி என்றே தோன்றுகின்றது… ஆயினும், இன்றைய சூழலில் சம்ஸ்கிருத வியாகரணம் அவ்வளவு தேவை என்று தோன்றவில்லை… தமிழில் நிறையப் புதுக்கவிதைகள் உருவாகின்றன… அவை தொல்காப்பியப்படியோ, நன்னூல் படியோ… அல்லது வேறு எந்த இலக்கணப்படியோ.. அமைய வில்லை.. அதனைப் போல இதனை எடுத்துக் கொள்ளலாமே…
ஆனால், சந்தம் எதற்கும் முக்கியம்… இன்றைக்கு தமிழில் புதுக்கவிதை என்று எழுதுபவர்கள் சந்தத்தையும் விட்டு விடுகிறார்கள்… ஆனால், இதனை எழுதிய சர்மா அவர்கள் ஓரளவு சந்தத்தை பேண முயன்றிருக்கிறார்கள்.. அவ்வளவில் பாராட்டலாம்.. ஆனால், சந்தம் தமிழில் சரி.. சம்ஸ்கிருததத்தில் சரி.. கட்டாயம் என்பதே எனது வாதம்..
நான் நினைக்கிறேன்.. சம்ஸ்கிருதம் கற்றும் இளம் மாணவரான இவரது முதல் முயற்சியாக இது இருக்க வேண்டும்… புதிதாக தான் அறிந்த வகையில் ஒன்றைச் செய்ய முயல்வது பாராட்டற்குரியது… அதுவும் சிலப்பதிகார செல்வி பேரில் …
கணேஷ்
எனது இந்த ஸ்தோத்திரத்தை பிரசுரித்த சங்கதம் ஆசிரியர் குழுமத்திற்கும் இங்கே பதிவிட்ட அனைவருக்கும் முதற்கண் நமஸ்காரங்களுடன் கூடிய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்..
இங்கே மரியாதைக்குரிய சம்ஸ்கிருதத்துறைப் பேராசான் முனைவர்.சங்கர நாராயணன் அவர்கள் காய்தல் உவத்தல் இன்றித் தமது கருத்தைப் பதிவிட்டிருப்பதும்… அவர் எனது பாடல்களைப் படித்திருக்கிறார் என்பதுமே எனக்குப் பெருமகிழ்ச்சியைக் கொடுக்கிறது.. நான் இதை எழுதியதன் நோக்கம் பூரணத்துவம் பெற்றதான ஒரு மகிழ்ச்சியை இது எனக்கு ஏற்படுத்தியிருக்கிறது..
உண்மையில், நான் சம்ஸ்கிருத மஹாசமுத்திரத்தைப் பார்த்து வியக்கும் இருபத்திரண்டே வயதான ஒரு சின்னஞ்சிறு மாணவன்..
சிறு வயதிலிருந்து பல்வேறு ஸ்தோத்திரங்களை படித்துப் பாடி வந்ததன் விளைவாய் ஏற்பட்ட அதீத ஆவலின் விளைவே இத்தோத்திரம்.. வியாகரண சுத்தம் இக்கவிதைகளில் சிறிதும் இல்லை என்பதை யான் அறிவேன்.. கவனம், அனுபவக் குறைவுகளாலேயே சந்தஸ் தவறுகள் ஏற்பட்டுள்ளது என்பதையும் பணிவோடு ஏற்றுக்கொள்கிறேன்..
கற்பின் நிலையமாக விளங்கும் கண்ணகித்தாயாரின் பேரில் எழுதிய இத்துதியில் உள்ள குறைகளை சுட்டி காட்டி திருத்தியமைக்கு நன்றியுடையேன்..
என்றும் தங்களின் ஆசிகளை வேண்டி நிற்கும்,
தி.மயூரகிரி சர்மா
நீர்வேலி
வணக்கத்திற்குரிய முனைவர் அவர்களுக்கு,
மாதாம் என்கிற சொல் பிரயோகத்தில் இல்லாததை இன்று வரை நான் அவதானிக்கவில்லை.. நீங்கள் காட்டிய பிறகு தான், அப்படி ஒரு சொல் எங்குமே படித்ததில்லை என்று தோன்றுகிறது. ஆனால், ஏன் அச்சொற்பாவனை இல்லாமல் போயிற்று..? என்று அறிய ஆவலாயுள்ளேன்.. வியாகரணரீதியான, காரணங்கள் ஏதும் உண்டா? சில வேளை இது ஏதும் அபஸ்வரத்தை உண்டாக்கும் என்று கருதி விட்டிருப்பார்களா? மாதா என்கிறோம்.. மாதரம் என்கிறோம்.. அவ்வாறாயின், ஏன் மாதாம் என்று பாவித்தல் ஆகாது..?
மாணிக்கவாசகர் திருவாசகத்தில் ஓரிடத்தில் ‘சிரிப்பார், ரசிப்பார், தேனிப்பார்..’ என்று பாடுகிறார். இதில், தேனிப்பார்’ என்ற சொல் அவருக்கு முன்னோ, பின்னோ வழக்கில் இருந்து வருவதில்லை. எவரும் அதனைப் பிரயோகம் செய்வதும் இல்லை. இலக்கணக்குறைவுடையதாகவே கருதப்படுகிறது. என்றாலும், அது அந்த நிலையில், மணிவாசகப் பெருமானின் உணர்வில் எழுந்த சிறப்புறு நிலையாகத் தமிழ் திருவாசக அபிமானிகள் கருதுகிறார்கள். இதனைச் சொல்வது, நான் எழுதியதை சரி என்று வாதிடுவதற்காக அல்ல என்பதைப் பணிவோடு, குறிப்பிட விரும்புகின்றேன். மாறாக, ஏன் மாதாம் போன்ற அல்லது இன்னும் இத்தகு சொற்களை புகுத்தக்கூடாது? என்று அறிவதற்காகவேயாம்.
மாதாம் என்ற சொல் தவறு. ராமனிடம் என்று சொல்வதை ராமன்டம் என்று சொன்னால் எப்படி இருக்கும் – அது போல் தான் இதுவும். அப்படி ஒரு வார்த்தை துஷ்பிரயோகம் – அவ்வளவு தான்.
சர்மா
முதல் முயற்சியான இது பாராட்டத்தக்கது. ஆனால் பாணினீய வ்யாகரணத்தை வழுவிய எல்லாச் சொற்களும் பிழையானவையே. ஆனாலும் பல மஹாகவிகள் பிறண்டு எழுதியுள்ளனர். அவர்களை வரையில் அதைச் சரி என்றே கொள்ள வேண்டும். ஆனால் நாம் மஹாகவிகள் அல்லோமல்லவா. ஆகையால் இலக்கணத்தைப் பிழைக்கலாகாது. அது பாபமும் கூட.
மாதா என்னும் சப்தத்தின் வேர்ச்சொல் மாத்ரு என்பதாகும். ஆகவே அது ருகாரத்தை இறுதியாகக் கொண்ட சொல். ஆகவே ரமா, லதா போன்ற ஆகாரத்தை இறுதியாகக் கொண்ட சொற்களினின்று மாத்ரு சப்தம் வேறானது. ஆகவே இரண்டாம் வேற்றுமையில் மாத்ரு அம் என்று சேரும்போது மாதரம் என்றே சொல் உருவாகும். ஆனால் ஆகாரத்தில் முடியும் ரமா, லதா போன்ற சொற்களில் ருகாரமின்மையால் ரமாம், லதாம் என்று இரண்டாம் வேற்றுமையில் இருக்கும்.
திரு கணேச சர்மா அவர்களுக்கு
தமிழைப்போலப் புதுகவிதையானால் அதைக் குறிப்பிட வேண்டும். அப்படியானாலும் பாடலைப்போல பாடவாவது வரவேண்டும். வடமொழியில் சந்தத்தை மீறி கவிதையாக அமைந்தாலும் கூட ஒருபோதும் இலக்கணவிதிகளை மீற முடியாது. மீறிய சொற்கள்தான் ப்ராக்ருதமாக தனி மொழியாகக் கொச்சைப்பட்டு போயின. ஆகவே ஸம்ஸ்க்ருதம் என்னும் பெயருக்கேற்றாற்போல கொச்சையோ இலக்கணப்பிழையோ இல்லாமல் பயன்படுத்தப்படுவதுதான் ஸம்ஸ்க்ருதம். ஆகவே இந்த விஷயத்தில் எந்த ஸமாதானமும் இல்லை.
நான் கூறிய கருத்துக்கள் தவறென்றால் மன்னிக்க.
தயவு செய்து இந்த ஸ்தோத்ரத்தை முழுவதும் மாற்றி வெளியிடுதல் நன்மை பயக்கும்.
மரியாதைக்கும் வணக்கத்திற்கும் உரிய முனைவர். சங்கர நாராயணன் அவர்களின் உடன் மறுமொழி மகிழ்ச்சியளிக்கிறது. அவர்களின் திருவடிகளுக்கு எனது நன்றி கலந்த நமஸ்காரங்களைச் சமர்ப்பிக்கிறேன்.
ஏறுக்கு மாறான எனது கேள்விக்குக் கூட பொறுமையாக, இலக்கண மரபைச் சுட்டிக் காட்டி அன்போடு பதில் தந்திருப்பதை எண்ணும் தோறும் உளமகிழ்வெய்துகின்றேன்.
இங்கே இக்கவிதையை மாற்றங்களைச் செய்து கொள்வதற்கோ, அல்லது திருத்தியமைப்பதற்கோ, சங்கதத்தளத்து ஆசிரியர் குழுமத்தினருக்கு எல்லா அதிகாரங்களும் இருக்கிறது என்றே கருதுகின்றேன்.
எனினும், இருப்பது அப்படியே இருக்க அதன் திருத்திய வடிவத்தை சேர்ப்பது சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
ஆனால், “சம்ஸ்கிருதம்” என்ற சொல்லைக் காட்டி அதில் இலக்கணவிதி சிறிதும் மீறக்கூடாது என்றும், அதில் புதுக்கவிதை, புத்தாக்கங்களுக்கு சிறிதும் இடமில்லை என்றும், சொல்வது என்னால் கொஞ்சமும் சகித்துக் கொள்ளக் கூடியதாக இல்லை.. இப்படிச் சொன்னால், நடைமுறை வாழ்வில் சிக்குண்டிருப்பவர்கள், இளைஞர்கள்; சம்ஸ்கிருதத்திற்கு அருகே நெருங்க இயலாத நிலை ஏற்படும்.
மீண்டும், இது பண்டிதர்களின் மொழி, தேவபாஷை, பிராஹ்மண பாஷை, வித்வான்களின் பாஷை, என்று சொல்லி பாமரர்களுக்கு, சிறுவர்களுக்கு, இன்றைய நவீன உலகில் பயணித்துக் கொண்டு நேரம் கிடைக்கிற போது இங்கு வருபவர்களுக்கு, சமானிய மனிதர்களுக்கு எல்லாம் சம்ஸ்கிருதத்தில் இடமில்லை என்று சொல்வது போல இருக்கிறது சம்ஸ்கிருதப் ப்ரியன் போன்றாரின் கருத்துக்கள். இவ்வாறு இங்கே குறிப்பிடுவதற்கு மன்னிக்க வேண்டும்.
இப்படியான நிலையிலிருந்தால் மொழி வளர்ச்சிக்கு இடம் ஏது? இந்த ஸ்தோத்திரத்தில் கண்ணகி என்ற தமிழ்ச் சொல்லைப் பாவிப்பதும் தவறல்லவா?
குற்றம் களைந்து குணம் கொள்ளப் ப்ரார்த்திக்கிறேன்.
பணிவுடன்,
தி.மயூரகிரி சர்மா
//
இப்படியான நிலையிலிருந்தால் மொழி வளர்ச்சிக்கு இடம் ஏது?
//
தவறாக மொழியை பேசுவது, சரியானபடி கற்றுக் கொள்ளாமல் இஷ்டத்துக்கு எழுதுவது போன்றவை மொழி வளர்ச்சி அல்ல.
வார்த்தைகளில் உள்ள தவறை சரிப்படுத்த சொல்வதை எப்படி இவ்வாறு “புதுக்கவிதை, புத்தாக்கங்களுக்கு சிறிதும் இடமில்லை” என்று புரிந்து கொள்கிறீர்களோ…
இங்கே யாரும் நீங்கள் தமிழ் சொற்களை கலந்து எழுதியதை குறை சொல்லவில்லை என்பதை கவனியுங்கள். அதற்கு இடம் உண்டு – அதே சமயம் சம்ஸ்க்ருத வார்த்தைகளை சுத்தமாக எழுத வேண்டும்… இங்கே இலக்கண விதி என்று மிக மிக மிக குறைந்த பட்ச விதிகளே சொல்லப் படுகிறது. அம்மாவிடம் (மாதரம்) என்று இருக்க வேண்டியதை அம்மாடம் (மாதாம்) என்பது போல பதமாக (!) ஆகாததை சுட்டிக் காட்டுகிறேன் அவ்வளவுதான்.
மேலும் எழுதுங்கள். முடிந்தவரை தவறுகளை களைந்து எழுதுங்கள். நிறைய எழுத எழுதத்தான் சரியான பிரயோகங்கள் பிடிபடும்.
நமஸ்காரத்திற்குரிய ஸம்ஸ்கிருத ப்ரிய அவர்களுக்கு,
தாங்கள் வருந்தும் வகையில் எழுதியதற்கு மன்னிக்க வேண்டுமாய் விண்ணப்பிக்கிறேன். தாங்கள், இவ்வாறு கூற வேண்டும் என்பதே எனது ஆவலாயிருந்தது.. இப்படிச் சொன்ன பிறகு வேறு என்ன ஊக்குவிப்பு வேண்டும்?
எனது கவலை எல்லாம் என்ன என்றால், ஆங்கிலத்தினை தட்டுத்தடுமாறி பேசிப் பழகினால் வரவேற்கிறார்கள்.. இப்படித் தான், எந்தப் பாஷையையும்.. அந்தப் பாஷையை பிழையோ, சரியோ பேசு என்று சொல்கிறார்கள்.. சம்ஸ்கிருதத்தை இப்படியே செய்யத் தொடங்கினால், உடனே “பாபம்” என்கிறார்களே.. தமிழை கொச்சையாக எழுதினால் எவராவது பாபம் என்று சொல்கிறார்களா?
இங்கே மீண்டும் ஒரு தியானம்..
த்யாயேத் தேவீம் த்ரிபங்கீம் கனக குசபராம்
சந்த்ர வக்த்ராம் த்வி நேத்ராம்
முக்தாமாலா விபூஷாம் கல்யாணகுணநிபாம்
தக்ஷிணே நூபுராங்கீம்
வாமே ஹஸ்தே ததானாம் விரசித மணினா
கந்துகம் ச்யாமளாங்கீம்
பாலாம் பாலேந்துமௌலீம் ஸர்வ சம்பத்பிரதாம்
கண்ணகீம் தாம் நமாமி
இங்கே படங்களில் காட்டப்பட்டுள்ளவாறாக, வலது திருகரத்தில் சிலம்பைத் தாங்கியவளாக கண்ணகியை த்யானிக்கும் முகமாக, எழுதியது இந்த த்யானம். இதனையும் இங்கே பதிவிடுவது குறித்த கலந்துரையாடலுக்கு பொருத்தமாக இருக்கும் என்று கருதுகின்றேன். இதனிடத்தும் குற்றமுண்டாயின் குறிப்பிட்டால் நன்றியுடையேன்.
தங்களுடன் விவாதிப்பதை கூட ஒரு பாக்யமாக கருதி மகிழ்கிறேன்..
என்றும் தங்கள் யாவரதும் ஆசிகளை நாடும்,
தி. மயூரகிரி சர்மா
Kannaki Navarathna Mala songs & Debate Good & sanskrit knowledge ideas.. Thanks for all
இலங்கையில் கண்ணகைக்காக எந்த ஸ்தோத்திரங்களும் எழுதப்படாதவிடத்தும் 1960களில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த வியாகரண சிரோமணி வேப்பத்தூர் பிரஹ்மஸ்ரீ. கி.சுப்பிரம்மண்ய சாஸ்திரிகளால் ஒரு தியானம் எழுதப்பட்டிருக்கிறமை முக்கியமானது. அதனை இப்போதும் சிலர் பாவித்து வருகின்றனர். அது வருமாறு,
த்விபுஜாம் த்விநேத்ராந்து கரண்ட மகுடாங்கிதாம்
லம்பகம் வாம ஹஸ்தந்து தக்ஷிணே சைவ நூபுரம்
மகுடஸ்தந பாரந்து முக்தா தாமைரலங்க்ருதாம்
ஸர்வாபரண சோபாட்யாம் சர்வ சோபாஸமங்கிதாம்
ஆனால், இங்கே ஏன் நூபுர என்ற சொல்லை எடுத்து விட்டு கவி எழுதுகிறார்கள்? (மாணிக்யஸி²ஞ்ஜினீஹஸ்தாம்) அழகர் கோயில் கங்கைக்கும் நூபுர கங்கை அல்லது சிலம்பாறு என்று தானே பெயர்?
நான் கூறிய கருத்துக்கள் தவறென்றால் மன்னிக்க.
அந்தக் காலத்திலேயே நிறைய ஸ்தோத்திரங்கள் கண்ணகிக்கு வந்திருக்கும். ஆனால், சைவித்தாந்திகள் இங்கே கண்ணகி சிறுதெய்வம் என்று பிரச்சாரம் செய்ததால் அதற்கு பயந்து ஒருவரும் எழுதவில்லை போலும்? ஆனால், இவர்கள் எவ்வளவு முயன்றும் கண்ணகி வழிபாட்டைத் தடுக்க முடியவில்லை..
யாவருக்கும் நன்றிகள்..
இங்கே கண்ணகி பற்றி சம்ஸ்கிருதம்- துதிப்பா என்பவற்றைத் தாண்டி சில விடயங்கள் சொல்ல வேண்டும் என்று நினைக்கின்றேன்.
சங்கத்தமிழ் நூலான நற்றிணையில் 219ஆவது பாடலில் ‘முலை குறைந்த திருமாவுண்ணி’ என்று ஓரடி உண்டு. அது கண்ணகியை குறிப்பதாக சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கேரளத்தில் ‘ஒற்றை முலைச்சி’ என்றொரு தெய்வம் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆக, மூன்று வடிவங்களை கண்ணகி வணக்கம் அடைவதாக இங்கே காட்டலாம்.
1. நற்றிணையில் வரும் வேங்கை மரத்தடியில் நின்ற திருமாவுண்ணி
2. சிலப்பதிகாரத்தில் வேங்கை மரத்தடியில் நின்ற கண்ணகி
3. கேரளத்தார் வணங்கும் பாலைமரத்தடியில் நிற்கும் ஒற்றைமுலைச்சி
இவைகள் யாவும் மரத்தடி தெய்வங்கள் (Tree Goddesses) என்ற அடையாளப்படுத்தலுடன், கண்ணகி வழிபாட்டுடன் தொடர்புடையனவாயுள்ளன. இவற்றோடு இலங்கையில் வேப்பமரமும் இவ்வன்னை வழிபாட்டில் தொடர்புறுகின்றது.
இவ்விடத்தில், வேங்கை என்பதற்கான சம்ஸ்கிருத சொல் தெரியாததால் அதனை ‘பந்தூக விருக்ஷம்’ என்று குறிப்பிட்ட போது மரியாதைக்குரிய எழுத்தாளர் ஸ்ரீமான். ஜடாயு அவர்கள் அதனை ‘பீஜகம்’என்று விளக்கம் செய்தார்கள்.
அவர்கள் குறிப்பிட்ட விஷயம் வருமாறு,
//பந்தூக விருக்ஷ சாயாயாம் //
“சாயாயாம்” என்ற பிரயோகம் தவறு. “சாயாஸ்திதாம்” – நிழலில் உறைபவள் என்ற பிரயோகம் இங்கு பொருந்தலாம்.
மேலும், பந்தூகம் என்றால் செம்பருத்தி,வேங்கை அல்ல.
வேங்கையின் தாவரவியல் பெயர் Pterocarpus marsupium. இதன் சம்ஸ்கிருத பெயர் பீஜகம் (Bijaka) அல்லது சாலகம் (shaalaka) – http://www.himalayahealthcare.com/herbfinder/h_pteroc.htm
இதனை இங்கு பதிவிடுவதன் மூலம் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகின்றேன்.
கேரளத்து விஷாரிக்காவில் பகவதி பேரில் பாடப்படும் பாடல்களில் கண்ணகை போற்றப்படுவதாகத் தெரிகிறது.
‘ஆதி முதல் காவேரிப் பூம்பட்டினத்தில்
ஆயிரவூர் வங்கிசத்தில்
அரிய கண்;ணகை அம்மன் ஆகவே தான்…..
…………………………………………….’
ஜைனர்களின் பத்மாவதி, பௌத்தர்களின் தாராதேவி ஆகியவற்றுடன் ஒப்பு நோக்கி ஆராய வேண்டியது இவ்வழிபாடு என்று கருதக்கிடக்கிறது.
நிறைவாக, இலங்கையில் கண்ணகை வழிபாடு ஆகம மயமாக்கலில் (அதாவது சைவ சித்தாந்த நெறிப்படுத்தலில்) சில சிக்கல்களை எதிர்கொண்டது உண்மையே, என்றாலும் அதனை வென்று வளர்ந்திருக்கிறது.
முக்கியமாக, கோப்பாய் என்ற ஊரில் 1960களில் நடந்த கிராமசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற கட்சி ஒன்றின் தேர்தலின் முக்கிய வாக்குறுதியாக ‘கண்ணகையை காப்பாற்றுதல்’ என்பது இருந்தமை வரலாற்றுப் பதிவாகியிருக்கிறது. இன்றைக்கும் இந்த ஊரில் மிகப்பெரிய கண்ணகை அம்மன் திருக்கோவில் காணப்படுகின்றது.
தி. மயூரகிரி சர்மா
”’1960களில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த வியாகரண சிரோமணி வேப்பத்தூர் பிரஹ்மஸ்ரீ. கி.சுப்பிரம்மண்ய சாஸ்திரிகளால் ஒரு தியானம் எழுதப்பட்டிருக்கிறமை முக்கியமானது”’
சிந்து S.Sinthu என்பவர் இப்படி பதிவிட்டிருக்கிறார். நானும் குறித்த சுப்பிரம்மண்ய சாஸ்திரிகளின் ஒரு புத்தகத்தைப் பார்க்கும் பேறு பெற்றவன்.. அது கும்பகோணம் ஸ்ரீ வித்யா பிரஸில் பதிப்பிக்கப்பட்ட ‘விநாயக மஹோத்ஸவ பத்ததி’ அது கிரந்தத்தில் இருந்ததால் படிக்க முடியவில்லை..
சாஸ்திரிகள் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கற்ற ‘நியாயசிரோமணி’ என்று அதில் இருந்ததாக ஞாபகம்.
”’நற்றிணையில் வரும் வேங்கை மரத்தடியில் நின்ற திருமாவுண்ணி””
Sharma,
நற்றிணைக்கு பிற்பட்ட காலத்தில் எழுந்தது சிலப்பதிகாரம்.
இந்த காவியத்தில் நடந்த சம்பவம், காவியம் எழுதிய காலம், காவியம் எழுதியவர் எல்லாம் ஒரே காலம் என்று கருதப்படுகிறது.. பின், எப்படி நற்றிணையில் இந்தக் கதை வரும்..? அவ்வாறு வந்தால் நற்றிணையில் இடைச் செருகல் நடந்ததா? (சம்ஸ்கிருதத் தளத்தில் தமிழ் பற்றி விவாதிப்பதற்கு மன்னிக்குக)
இங்கே ‘நியாயசிரோமணி’ பிரம்மஸ்ரீ.கி.சுப்பிரம்மண்ய சாஸ்திரிகள் பற்றிய பேச்சு வந்ததும் ஒரு வகையில் இறையருள் தான். அவர்களைப் போன்றவர்கள் இலங்கையில் வாழ்ந்ததும் பணி செய்ததும் இன்றைக்கு இலங்கையில் இருப்பவர்களுக்கே மறந்து போகிற நிலை ஆகி விட்டது.. அவர்களைப் பற்றிய ஒரு சிறிய குறிப்பு. (வேறு ஒரு இடத்திற்காக எழுதியது இங்கும் பதிவிடுகின்றேன்)
யாழ்ப்பாணம் ஒரு காலத்தில் வேத சம்ரக்ஷணைக்கு சிறப்புற்றிருந்திருக்கிறது. இன்றைய சூழல் அந்த நெறிமுறையில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. இதனால் இளையவர்களான நாம் அந்த சூழலை அனுபவிக்கும் வாய்ப்பை முழுமையாக, இழந்து விட்டோம்.
ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் இரண்டு சாஸ்திரிகள் பிரபலமாக இருந்தார்கள். ஒருவர் ‘வியாகரண சிரோமணி’ ஸ்ரீ.சீதாராமசாஸ்திரிகள். இவர்கள் பரமேஸ்வராக்கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டு வேதமும் படிப்பித்து வந்தார். பூர்வக்கிரியைகளேயன்றி அபரக்கிரியைகள் செய்து வைக்கமாட்டார்.
மற்றையவர், கோண்டாவிலிலிருந்த ஸ்ரீ. நாராயணசாஸ்திரிகள் இவர் பூர்வமாயினும் அபரமாயினும் கேட்டவுடன் உடன் வந்து செய்து உதவுவார். இதனால் ‘காக்காச்சாஸ்திரியார்’ என்றும் அன்போடு அழைப்பர்.
இவர்களுக்கு முன் 1950களில் கோப்பாயில் ஸ்ரீநிவாஸசாஸ்திரிகள் இன்னும் ஸ்ரீ.சிதம்பரசாஸ்திரிகள் என்றெல்லாமும் இருந்த போதும் அவர்கள் இவ்வளவு பிரபலமாயிருக்கவில்லை. அல்லது இவர்களிடம் படித்தவர்கள் இன்று இல்லை.
இவர்களை விட, இன்னொருவர் அவர் தான் ஸ்ரீ.சுப்பிரம்மண்ய சாஸ்திரிகள். இவர் 1925.ஆம் ஆண்டு தை மாத கார்த்திகை நக்ஷத்திரத்தில் தமிழ்நாட்டின் திருச்சி அருகிலுள்ள வேப்பத்தூரில் கிருஷ்ணையருக்கும் முத்துலக்ஷ்மி அம்மாளுக்கும் மகனாக,யஜூர்வேத,ஆபஸ்தம்ப, கௌண்டின்ய ஹோத்திரத்தில் பிறந்தவர்கள்.
திருவானைக்காவில் இருந்த சங்கரமடத்து வேதபாடசாலையில் எட்டாண்டுகள் கல்வி கற்ற இவர் (அக்காலத்தில் ஸ்ரீ ஜயேந்த்ரசரஸ்வதி சுவாமிகளும் தமது பூர்வாச்சிரமத்தில் இவருடன் ஒருநிரை மாணவராக கற்றாராம்) மேலும்,அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் நான்காண்டுகள் கற்று ‘நியாயசிரோமணி’ என்ற பட்டத்தையும் பெற்றார்.
அக்காலத்தில் யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீ கைலாசப்பிள்ளையார் ஆலய குருவாக இருந்த குருஸ்வாமிக்குருக்கள் சாஸ்திரிகளை இங்கு அழைத்து வந்து வேதம்போதிக்கச் செய்ததுடன் தமது மகளான கமலாதேவியையும் சாஸ்திரிகளுக்கு விவாகமும் செய்து கொடுத்தார்.
அதன் பின்-யாழ். சீதையம்மாள் அகத்திலும்-பின் நல்லூரிலேயும் வாழத் தொடங்கிய சாஸ்திரிகள் அங்கே கணபதீஸ்வர குருகுலம் ஸ்தாபித்து மாணவர்களுக்கு சம்ஸ்கிருதக்கல்வியை முறைப்படி போதித்து வந்தார்கள்.
சாஸ்திரிகள் வேதம் கற்பிக்கும் முறையும்-சம்ஹிதை-பதம்-கிரமம்-கனம்- ஜடை போன்றவற்றை புகட்டும் முறையும் ரகுவம்சம், இராமோதந்தம் போன்ற காவியங்கள் மற்றும் வியாகரணம் கற்பிக்கும் முறையும் தனித்தன்மை வாய்ந்தன.
மிகவும் கண்டிப்பும்- ஆசாரமும் கூடிய கற்பித்தலையும் வாழ்வியலையும் பின்பற்றிய சாஸ்திரிகள் அவர்கள் இல்வாழ்வின் பயனாக பத்துக்குழந்தைகளின் தந்தையானார். அவர்களில் எழுவர் பெண்கள். இருப்பினும்- தமது நிலையினின்று சிறிதும் வழுவாத திண்மை படைத்த வேதவித்வானாக விளங்கினார்.
சிவாமங்களிலும்- சிவாகம கிரியைகளிலும் கூட நல்லறிவு பொருந்தப்பெற்ற சாஸ்திரிகள் தமிழ்இ ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றவர்.
சீரிய வழிகாட்டியாகவும்- உபந்நியாசகராயும்- கோயிற்கிரியைகளை நெறிப்படுத்தும் ஸர்வ சாதகாச்சார்யராயும் விளங்கி அனைவரதும் வணக்கத்திற்குரியவராக விளங்கிய சாஸ்திரிகள் இல்லத்து பூர்வ- அபரக்கிரியைகளையும் சிறப்பாக நடத்திவைக்கும் வாத்தியாராகவும் விளங்கினார்.
15க்கு மேற்பட்ட நூல்களை எழுதியும், பதிப்பித்தும் வெளியிட்ட சாஸ்திரிகளின் பணி போற்றுதற்குரியதாகும். அந்நூல்கள் அவரின் பின்பும் பல பதிப்புக்களை கண்டுள்ளன.
14.08.1998 ஆடிப்பூர்வ சப்தமியில் சிவபதப்பேறெய்திய சாஸ்திரிகளின் பணி இன்றும் அவரது மாணவர்களால் போற்றப்பட்டு வருகின்றது. எனக்குத் தெரிய நான் மேற்குறிப்பிட்ட சாஸ்திரியார்களில் இவர் ஒருவரைத் தான் எனது ஏழாவது வயதில் அவர் சுகவீனராக இருந்த போது, அவர் அமரத்துவமடைவதற்கு சில நாட்கள் முன், கண்டிருக்கிறேன்..
ஆனால், இத்தகு மஹான்கள் வாழ்ந்து செய்த பணிகளால் தான், இவ்வளவு கஷ்ரங்கள், இடப்பெயர்வுகள், கடும் போர், உயிர்ச்சேதங்களுக்கு மத்தியிலும் இலங்கையில் ஏதோ கொஞ்சமாவது நமது பாரம்பரியம் நிலைத்து நிற்கிறது.
தி.மயூரகிரி சர்மா