சில வாராந்திர பத்திரிகைகளில் விடுகதை மாதிரியான புதிர் கேள்வி ஒரு பக்கத்தில் கொடுத்திருப்பார்கள். அதற்கான பதில் வேறொரு பக்கத்தில் இருப்பதாக தெரிவிக்கப் பட்டிருக்கும். விடை உடனே கண்ணுக்குத் தெரியாமல் இருப்பதற்காக இப்படி ஒரு ஏற்பாடு. விடை கண்டு பிடிக்க முயற்சிப்பவர்கள், அதைக் கண்டு பிடித்து விட்டால் சரி பார்த்துக் கொள்ளவும், தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளவும் அந்த விடை இருக்கும் பக்கத்தைத் தேடிப் போகவேண்டும்.
இது மாதிரியான ஒரு ஏற்பாட்டை ஏற்கனவே பழைய சம்ஸ்க்ருத கவிகளும் கடைபிடித்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. அதிலும் பல நூல்களைப் படைத்த கவிகள், ஒரு நூலில் உள்ள கவிதையின் பிரதிபலிப்பை வேறொரு நூலில் கொடுத்து இரண்டையும் படிப்பவர்களுக்கு ஆச்சரியம் கொடுப்பதாக அமைப்பது உண்டு. மேலும் தான் விரும்பும் மற்றொரு கவியின் கவிதையை அதன் நிழலாக, அதே வார்த்தைகள், கருத்து ஆகியவற்றைத் தக்க சமயத்தில் எடுத்தாண்டு அவர்களுக்கு மரியாதை செய்வதும் உண்டு.
அந்த வகையில் வைணவ சமயப் பெரியவரான வேதாந்த தேசிகனின் ஸ்லோகம் ஒன்றைப் பார்ப்போம். வேதாந்த தேசிகனின் சங்கல்ப சூர்யோதயம் நாடகம், பத்து அங்கங்களுடன் ஒரு மாபெரும் படைப்பு. தத்துவப் பின்னணி கொண்ட நாடகம். மனிதர்களின் குணங்களே பாத்திரங்களாக அமைந்த நாடகம். ஒரு காட்சியில் ரதியும், மன்மதனும், அவன் தோழன் வசந்தனும் வருகிறார்கள். அப்போது, உலகமும் முழுவதும் ஏன் பிரம்மா விஷ்ணு சிவன் முதலானவர்கள் கூட காமனுக்கு வசப்பட்டவர்கள் என்று தற்பெருமை பேசுவதாக கவி ஒரு ஸ்லோகத்தை அமைத்துள்ளார்.
वहति महिलामाद्यो वेधास्त्रयीमुखरैर्मुखै
वरतनुतया वामो भाग: शिवस्य विवर्तते |
तदपि परमं तत्त्वं गोपिजनस्य वशंवदं
मदनकदनैर्न क्लिश्यन्ते कथं न्वितरे जना: ||
வஹதி மஹிலாமாத்யோ வேதாஸ்த்ரயீமுகரைர்முகை
வரதனுதயா வாமோ பாக: ஶிவஸ்ய விவர்ததே |
ததபி பரமம் தத்த்வம் கோபிஜனஸ்ய வஶம்வதம்
மதனகதனைர்ன க்லிஶ்யந்தே கதம் ந்விதரே ஜனா: ||
வேதம் முழங்கும் தன் திருநாவில்
நான்முகன் தன் மனைவி கலைமகளைத் தாங்கினான்…
சிவனுக்கு ஒரு பாதி உடலே பெண்ணாக ஆனது…
இவர்களை விட கண்ணனென்னும் பெரிய தத்துவமோ
கோபிமார்களின் வசத்தில் ஆட்பட்டு கிடக்கிறான்…
மன்மதனிடம் போரிட்டு இவர்களே தோற்றார்கள் என்றால்
சாமான்ய மக்கள் என்ன ஆவரோ!
இவ்வாறு மூன்று பெரும் தெய்வங்களே மன்மதனிடம் ஆட்பட்டிருக்கும்போது, சாதாரணர்கள் என்ன ஆவார்கள் என்று இங்கே போட்ட விடுகதைக்கு இன்னொரு நூலில் விடை தருகிறார் கவிஞர்.
வேதாந்த தேசிகன் தன் முதன்மை குரு, ராமானுஜரின் பெயரில் எழுதிய இன்னொரு நூல், யதிராஜ சப்ததி. இதில் ராமானுஜரைப் பற்றி எழுபத்தி நான்கு பாக்கள் உள்ளன. இந்த நூலில் இதே கவிதையைக் கொடுத்து, கடைசி வரியை மட்டும் மாற்றி விடுகிறார்.
वहति महिलामाद्यो वेधास्त्रयीमुखरैर्मुखै
वरतनुतया वामो भाग: शिवस्य विवर्तते |
तदपि परमं तत्त्वं गोपिजनस्य वशंवदं
मदनकदनैर्न क्लिश्यन्ते यतीश्वर संश्रया: ||
வஹதி மஹிலாமாத்யோ வேதாஸ்த்ரயீமுகரைர்முகை
வரதனுதயா வாமோ பாக: ஶிவஸ்ய விவர்ததே |
ததபி பரமம் தத்த்வம் கோபிஜனஸ்ய வஶம்வதம்
மதனகதனைர்ன க்லிஶ்யந்தே யதீஶ்வர ஸம்ஶ்ரயா: ||
…
மன்மதனிடம் போரிட்டு
யதிகளின் அரசனை அண்டியவர்கள்
தோற்பதில்லை…
யதி என்பது துறவியைக் குறிக்கும். யதிகளின் அரசனாக ராமானுஜரைக் குறிப்பிடுகிறார். ராமானுஜரை அண்டியவர்கள் காமம் என்னும் சிற்றின்பத்துக்கு அடிமையாவதில்லை என்பது கருத்து.
இதில் சில சொல் விளையாட்டுக்களையும் கவி உள்நுழைத்து இருக்கிறார். ஆத்யோ வேதா: என்று பிரமன், ஒன்பது பிரஜாபதிகளில் முதன்மையானவன் என்றும், முதன்மையானவனே பெண்ணைத் தன் நாவில் தாங்குகிறான் என்றும் குறிப்பிடுகிறார். அடுத்து “சிவ”னென்னும் பெயர் தாங்கியவன், இடம் வலமாக மாறி “வசி” என்று வசப்பட்டவனாகி விட்டான் என்று குறிப்பிடுகிறார். அடுத்து கோபிகைகளைக் குறிப்பதற்கு, ஆண்பால் சொல்லான கோபி ஜன: என்று குறிப்பிட்டது, கோபிகைகள் “இடைப் பேச்சும் முடை நாற்றமுமாக” பார்ப்பதற்கு அப்படி ஒன்றும் அழகு என்று சொல்ல முடியாமல் இருந்ததை சூசகமாக சுட்டிக் காட்டி, அவர்கள் பார்வைக்காகவும் கண்ணன் காத்திருந்தான் என்று குறிப்பிடுகிறார்.
சங்கல்ப சூர்யோதயம் மற்றும் யதிராஜ சப்ததி இரண்டுமே வேதாந்த தேசிகனின் தலைசிறந்த படைப்புகள், அழகிய சொல் அலங்காரங்கள், ஆழ்ந்த கருத்துக்கள் கொண்டவை.