கதைகள் தேவை

கதை சொல்வதும், கேட்பதும், மனிதனை உருவாக்கும் ஒரு அறிவியலாகவே இந்திய கண்டத்தில் அமைந்துள்ளது. இந்தியர்களுக்கு குறிப்பாக இந்துக்களுக்கு கதைகள் இளம் வயதில் முக்கிய இடத்தை பெறுகின்றன என்பதை மறுக்க முடியாது. சம்ஸ்க்ருத மொழியில் கதை இலக்கியம் என்பது முக்கிய பங்கு வகிக்கிறது.  நீதி  குறித்த உணர்வு,  பொது வாழ்வுக்குரிய தத்துவங்கள் ஆகியவை குறித்த அறிமுகம் இக்கதைகளில் நிகழ்கிறது. நடைமுறை வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்கள், தீர்வுகள், மனிதர்களின் நடத்தை குறித்த விமர்சனம் போன்றவை இக்கதைகளில் முக்கியமாக  அமைந்துள்ளன. இதனால் குழந்தைகளுக்கான தர்மசாத்திர அறிமுகம் என்றே பழமையான பல சம்ஸ்க்ருத மொழிக் கதைகளை சொல்ல முடியும்.

சம்ஸ்க்ருத மொழியில் அமைந்த  பஞ்ச தந்திரம், புத்த ஜாதக கதைகள், ஹிதோபதேசம் போன்ற தொகுப்புகள் இன்றும் பிரபலமாக இருக்கின்றன; பல்வேறு இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டு வெளிவருகின்றன.  இதில் பஞ்சதந்திரம் இந்தியாவுக்கு வெளியேவும் பிரபலமாக பல வெளிநாடுகளிலும் அந்தந்த நாட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டு வெளிவந்துள்ளது. சொல்லப் போனால், கிறிஸ்தவ பைபிளுக்கு இணையாக பல்வேறு பதிப்புகள் வெளிவந்த புத்தகம் பஞ்சதந்திரம் என்று கூறுவர்.

சிறுவர்களுக்கான சில சிறுகதைகள் இங்கே

இந்த பிரபலமான நூல்கள்  தவிர புத்த ஜாதக கதைகள் (மூலம் பாலி மொழியில் அமைந்தவை), ப்ருஹத்கதா ஸ்லோக சங்கிரஹம், ப்ருஹத்கதா மஞ்சரி, கதாஸரித்ஸாகரம், கதாகௌதுகம், வேதாளபஞ்சவிம்சதி, புருஷப் பரிக்ஷா போன்ற பல நூல்கள் உண்டு. மனித மேம்பாட்டில் இவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. இத்தகைய சம்ஸ்க்ருத இலக்கியங்கள் உலக இலக்கியங்களுக்கு சற்றும் குறைந்ததல்ல.

आहार निद्रा भय मैथुनं च
सामान्यमेतत् पशुभिर्नराणाम् ।
धर्मो हि तेषामधिको विशेष:
धर्मेण हीनाः पशुभिः समानाः ॥

ஆஹார நித்³ரா ப⁴ய மைது²னம்ʼ ச
ஸாமான்யமேதத் பஸு²பி⁴ர்நராணாம் |
த⁴ர்மோ ஹி தேஷாமதி⁴கோ விஸே²ஷ:
த⁴ர்மேண ஹீனா​: பஸு²பி⁴​: ஸமானா​: ||
– ஹிதோபதேசம்

உணவு, உறக்கம்,
பயம், உடலுறவு
இவை ஒரே போல்தான்
மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும்…
தர்மமே இதில் சிறப்பு
தர்மத்தை அறியாத மனிதன்
விலங்குக்கு சமம்!

கதைகளில் பலவிதங்கள்

சமஸ்க்ருதத்தில் உரைநடை வடிவில் கதைகள் எழுதுவது வேதகாலத்தில் இருந்தே இருந்து வந்திருக்கிறது. பின்னர் பல நூறு, ஆயிரம் ஆண்டுகளில் பல்வேறு வடிவங்களையும், நடைகளையும் கொண்டு மாறுதல்கள் அடைந்தே வந்திருக்கிறது. முற்காலத்தில் ஆக்யானம்  அல்லது உபாக்யானம் (उपाख्यानम्) என்ற ஒரு வடிவம் இருந்தது. இதில் ஒருவர் முன் நடந்த ஒரு நிகழ்ச்சியை இன்னொருவருக்கு  கதையாக கூறுமாறு அமைந்திருக்கும். இது உண்மையாகவும் இருக்கலாம், கற்பனை கதையாகவும் இருக்கலாம். உதாரணமாக குசேல உபாக்யானம் என்பது குசேலரின் கதை. இந்த கதையை ஒருவர் இன்னொருவருக்கு சொன்னதாக இருக்கும். கேட்பவர் சில நேரங்களில் கதையில் சந்தேகங்கள் கேள்விகள் கூட கேட்பார். இது ஒரு வடிவம்.

மற்றொரு வடிவமாவது, நமக்கு பழக்கப் பட்ட இதிஹாச வடிவம். இது நிஜத்தில் நடந்த கதையை (இதி – ஹாசம் = இப்படி நடந்தது) கூறுவது. ஒரு வீர புருஷனின் வரலாற்றை முன்னால் வைத்து அதைச் சுற்றி பின்னி பின்னி பல சம்பவங்களுடன் கதை சொல்லும் முறை. இது செய்யுள் வடிவிலும் இருக்கலாம், உரைநடை (கத்யம்) வடிவிலும் இருக்கலாம். இதற்கு சில இலக்கண கட்டுப்பாடுகள் உண்டு.

இதிகாசங்களில் நாயகர்கள் ஒருவரோ பலரோ இருக்கலாம் என்பது குறித்து ஒரு ஸ்லோகம் இப்படிச் சொல்கிறது…

परिक्रिया पुराकल्प: इतिहास-गतिर्द्विधा
स्यादेकनायका पूर्वा द्वितीया बहुनायका।

பரிக்ரியா புராகல்ப: இதிஹாஸ-க³திர்த்³விதா⁴ |
ஸ்யாதே³கனாயகா பூர்வா த்³விதீயா ப³ஹுனாயகா||

இதிகாசங்களைப் போன்றே புராணங்களுக்கும் பல லக்ஷணங்கள் உண்டு. முக்கியமாக பஞ்ச லட்சணங்கள் என்று ஐந்து வகையான விஷயங்கள் புராணங்களில் இருக்க வேண்டும் என்று கீழ்கண்ட ஸ்லோகம் விளக்குகிறது.

सर्गश्च प्रतिसर्गश्च वंशो मन्वन्तराणि च।
वंशानुचरितञ्चैव पुराणं पञ्च लक्षणम्।

ஸர்க³ஸ்²ச ப்ரதிஸர்க³ஸ்²ச வம்ʼஸோ² மன்வந்தராணி ச|
வம்ʼஸா²னுசரிதஞ்சைவ புராணம்ʼ பஞ்ச லக்ஷணம்||

இதன் பொருளாவது புராணங்களில் ஐந்து வகை வர்ணனைகள் இருக்க வேண்டும். (1) உலகத்தின் சிருஷ்டி, (2) அதன் அழிவு மற்றும் மறு சிருஷ்டி (3) சிருஷ்டிக்குப் பின் வந்த வம்ச வரலாறுகள் (4) மன்வந்தரங்கள் என்னும் மனுவின் ஆட்சிக்குட்பட்ட காலம் (5) சந்திர சூர்ய வம்சத்து அரசர்களின் வரலாறு ஆகியவை புராணங்களின் ஐந்து அம்சங்கள் என்று இந்த ஸ்லோகம் கூறுகிறது. புராணங்களோ, இதிகாசங்களோ முழுக்கக் கற்பனை அல்ல.

கதைகளில் இன்னொரு வகை கல்பித கதா (कल्पित कथा). இது முற்றிலும் கற்பனை புனைவு அடிப்படையில் அமைந்திருக்கும். இதில் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையாகவும், சில சமயங்களில் நம்ப முடியாமல் கூட இருக்கும். இதிலிருந்து கதை இலக்கியம் வளர்ச்சி அடைந்து பொதுவாக கதா (कथा) என்று அழைக்கப் படும் முறை வந்தது. இதிலும் ஒரு கதை வரலாற்றுடன் தொடர்புடையதாக இருந்தால் ஆக்யாயிகா (आख्यायिका) என்று அழைக்கப் படுகிறது. இதில் ஒரு திட்டமிட்ட வடிவம் இருக்கும். துவக்கம், வீரம் செறிந்த நாயகன், அவன் குணநலன்கள், நாயகி, இதர மாந்தர், இவர்களுக்கு பிரச்னை, தீர்வு, சுபமான முடிவு   என்று இருக்கும். இதில் கவிதை வடிவிலும் இருக்கலாம், உரைநடையாகவும் இருக்கலாம். கதை எழுதுபவரின் சாமர்த்தியத்தை பொறுத்து கதை சிக்கலான நடையிலோ, அழகிய உவமான- உவமேயங்களுடன் கூடிய கவிதை வடிவிலோ இருக்கும்.

இதற்கடுத்து கண்டகதா (खण्डकथा) என்றவகை சிறுகதை என்று சொல்லலாம். இது லகு கதா (लघुकथा) என்றும் அழைக்கப் படுகிறது. அதிகச் சிக்கல்கள் இல்லாமல் ஒரே ஒரு விஷயத்தை எடுத்து பிரதானமாக வைத்து எழுதுவது கண்ட கதா. இதற்கு மாறாக ஒரு பிரச்சனையின் எல்லாக் கோணங்களையும், பாத்திரங்களையும் அலசுவது சகலகதா (सकल कथा) – இதனை நெடுங்கதை என்று சொல்லலாம். இது தவிர சம்கதா (संकथा) என்பது பேச்சு மொழியில் உள்ள கதை. இதெல்லாம் விட மிகச் சுருக்கமான கதை அமைப்பு கதானகா (कथानका) என்று அழைக்கப் படுகிறது. இதை தற்காலத்திய ஒரு பக்கக் கதைகளுடன் ஒப்பிடலாம்.

இவை மட்டும் அல்லாது, வேறு சில கதை வடிவங்களும் உண்டு, பரிகதா (परिकथा) என்று ஒரு அமைப்பு. இதில் பல உபகதைகளுடன் தர்மத்தை எடுத்துச் சொல்லும் நீதிக் கதையாக இருக்கும். தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் (அறம், பொருள், இன்பம், வீடு) என்னும் வாழ்வின் நான்கு  குறிக்கோள்களில் (சதுர்வித புருஷார்த்தங்கள்) ஒன்றை முக்கியமாக குறித்து நீதிக் கதையாக அமைந்திருக்கும். நமக்கு  இக்காலத்தில் பழகிய நாவல் வடிவத்தில் இது இருக்கும்.

ஆசார்யர் பாமஹர், காவ்யதர்ஸம் எழுதிய ஆசார்யர் தண்டி ஆகியோர் சிறு சிறு வேறுபாடுகளுடன் கதைகளை இவ்வாறு வகைப் படுத்தி உள்ளனர். பல்வேறு வடிவிலான சமஸ்க்ருத கதைகளை இக்காலத்தில் சாகித்ய அகாதமி போன்ற சில அமைப்புகள் வெளியிட்டு வருகின்றன. இன்றும் பல சமஸ்க்ருத எழுத்தாளர்கள் சமஸ்க்ருதத்தில் கதை எழுதி வருகிறார்கள். உதாரணமாக அம்பேத்கரின் கதையை பீமாயணம் என்று ஒரு சமஸ்க்ருத எழுத்தாளர் இதிகாசமாக எழுதி இருக்கிறார்.

பண்பாடு, கலாச்சார தொடர்ச்சிக்கு கதைகள் அவசியம்

பழங்காலக் கல்விமுறை, மனிதனுக்கு தேவையான வாழ்வியல் தேடல்களையும், செயல் முறைகளையும்; மனிதனுக்கே உரிய நடத்தை முறையையும் பயிற்றுவிப்பதே குறிக்கோளாகக் கொண்டிருந்தது. ஒரு மனிதனின் இயல்பையும், நடத்தையையும் சிறுவயதில் சொல்லிக் கொடுக்கப் படும் கல்வி தான் தீர்மானிக்கின்றது என்பது அனைவரும் அறிந்ததே. சம்ஸ்க்ருத இலக்கியங்களைப் போன்று உலகின் வேறு எந்த இலக்கியமும் இவ்வாறு கலாசார மதிப்பு கொண்டதாகத் தெரியவில்லை. இவ்விலக்கியங்களில் இருந்து பெறப்படும் அறிவின் ஆழமும், நீதி போதனையும், உலகளாவிய எண்ணமும்,  பரந்த பார்வையும் வியக்கத்தக்கவை. பரத கண்டத்தின் பண்பாடு என்பது  வேற்றுமையில் ஒற்றுமை என்ற உன்னத கொள்கையை தத்துவங்கள், மதங்கள், பழக்க வழக்கங்கள், கலாசாரம் என்று  எல்லா விதங்களிலும் வெளிப்படுத்துவதற்கு  சம்ஸ்க்ருத  கதை இலக்கியங்களில் அமைந்த நீதி போதனைகள் தான் இதற்கு காரணம் என்று கூற முடியும். தனித்தனியாக ஒவ்வொரு குழந்தையையும் நீதி போதனைகள் கற்பிக்கப் பட்டு, மனிதனாக வளரும்போது ஒவ்வொருவரும் காட்டும் பண்பாடே கூட்டாக தேசிய பண்பாடாக மலர்கிறது.

கல்லில் கதைகள் - போரபோதூர், ஜாவா கல்லில் கதைகள் - போரபோதூர், ஜாவா

ஒரு மனிதனுக்கு வாழ்வில் கடமை என்பது காலத்துக்கு தகுந்தவாறு மாறிவிடுகிறது. பழங்காலத்தில் ஒரு மனிதனின் கடமை ஆன்மீக ரீதியாக இருந்தது; இக்காலத்தில் உலகியல் விஷயங்களை சார்ந்து அமைகிறது. பழங்காலத்தில் இந்துக்களின் வாழ்வில் தர்மம் (அறம்), அர்த்தம் (பொருள்), காமம் (இன்பம்), மோட்சம் (வீடு பேறு) என்ற நான்கு வித குறிக்கோள்கள் (சதுர்வித புருஷார்த்தங்கள்) சார்ந்து அமைந்தது. இவற்றை அக்கால இலக்கியங்களும் பிரதிபலிக்கின்றன. சம்ஸ்க்ருத இலக்கியங்கள்,  மனிதனை இத்தகு குறிக்கோள்களை சொல்லிக் கொடுத்து உருவாக்குவதிலேயே கருத்தும் குறிக்கோளும் கொண்டிருந்தன.

பல சம்ஸ்க்ருத கதை இலக்கியங்களில் மிருகங்கள் பேசுவதாக வரும். பார்க்கப் போனால் அவை மிருகங்களே அல்ல, மிருகமாக முகமூடி அணிந்த மனிதனின் இயல்பே. பொதுவாக கதை இலக்கியங்களைப் பார்த்தால் மனிதர்கள் மிருக குணத்துடன் இருப்பதாகவே கதைகள் அமைந்திருக்கும். ஆனால் சம்ஸ்க்ருத கதை இலக்கியங்களிலோ நேர்மாறாக மிருகங்கள் மனித இயல்பைக் கொண்டிருக்கும். நரியைப் பற்றிய கதையில் நரியிடம் அக்குணம் கொண்ட மனிதனைக் காணமுடியும். வேறொரு கதையில் வீரம் நிறைந்த சிங்கம் அத்தகைய குணம் படைத்த மனிதனை மனக்கண்ணில் நிறுத்தும். சம்ஸ்க்ருத இலக்கியங்களில் இந்த அம்சத்தை பலவாறும் காணமுடியும்.

மகாபாரதத்தில் கூட ஒரு பூனை போலி சந்நியாசியாக வேடமிட்டு ஒரு காலைத் தூக்கி  தவம் செய்வதாக (ஊர்த்வ பாஹு) நடித்துக் கொண்டே மற்ற எலி, பறவைகளை பிடித்து தின்னக் காத்திருந்ததாக ஒரு கதை உண்டு. ஹிதோபதேச கதைகளில் கண் தெரியாத பறவை ஒன்றுக்கு வாய் ஓயாமல் உபதேசம் செய்யும் குணம்; அதனிடம் தர்மத்தை கற்றுக் கொள்ள ஆசைப் படுவதாக சொல்லிக் கொண்டு பூனை ஒன்று நெருங்கும். இது போன்ற சின்னச் சின்னக் கதைகளில் சமூக விமர்சனங்கள் உள்ளீடாக பொதிந்து இருக்கின்றன. ஆன்மீகப் போலித்தனம் குறித்த விமர்சனம், குறிப்பாக பிராமணர்கள் குறித்த விமர்சனம் பல கதைகளில் உண்டு. பிராமணர்கள் அளவற்ற அதிகாரம் அனுபவித்ததாக சொல்லப் படும் பழங்காலத்திலேயே இத்தகைய கதைகள் எழுதப் பட்டது குறிப்பிடத் தக்கது. இதனால் பிராமண எதிர்ப்பே முக்கியமாக அமைந்தது என்ற பொருள் அல்ல.

பாலியலும் வன்முறையும் ஊடகங்கள் வாயிலாக மிகுந்து பட்ட இக்காலத்தில், குழந்தைகளுக்கு வாழ்வியல் நற்பண்பாடுகளை  சொல்லித் தரக்கூடிய கதை இலக்கியங்கள், குறிப்பாக சம்ஸ்க்ருத கதை இலக்கியங்களின் பங்கு அவசியத் தேவையாக இருக்கிறது. இதற்கு உலகளாவிய முயற்சி தேவை. நல்லறிவையும், பண்பாட்டையும், சமூகக் கடமைகளையும், அடுத்த தலைமுறைக்கு சொல்லித் தரவேண்டிய நற்சிந்தனையையும் எடுத்துச் சொல்லும் பாரத கலாசாரம் சார்ந்த கதைகள் இன்றைய தேவை.

2 comments for “கதைகள் தேவை

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் கருத்து:

*