மந்திரங்கள் என்பவை நீண்ட நெடிய வாக்கியங்களோ கவிதைகளாகவோ இருக்க வேண்டியது இல்லை. ஓரிரு எழுத்துக்களிலேயே கூட மந்திரங்கள் உள்ளன. இவை பீஜ மந்திரங்கள் என்று அழைக்கப் படுகின்றன. அதாவது மனித முயற்சிக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியின் விதை இந்த ஓரிரு எழுத்துக்களில் அமைந்துள்ள மந்திரங்கள் ஆகும்.
உதாரணமாக இயற்கையில் ஒவ்வொரு சக்தியை குறிக்கவும் ஒரு சொல் அல்லது மந்திரம் உள்ளது. உதாரணமாக ஐம்பூதங்கள் ஒவ்வொன்றையும் குறிக்கும் மந்திரங்களைச் சொல்லலாம். ஹம் (ஆகாயம்), யம் (காற்று), நெருப்பு (ரம்), நீர் (வம்) மற்றும் லம் (நிலம்) ஆகியவை ஆகும். இது போல ஓரிரு எழுத்துக்களிலேயே ஏராளமான மந்திரங்கள் உண்டு. எல்லா மந்திரத்துக்கும் தாயாக கருதப்படும் மந்திரம் ஓம் என்னும் மந்திரம் ஒரே எழுத்தில் அமைந்ததே.
மநநாத் த்ராயதே இதி மந்த்ர: – மனனம் செய்வதால் காப்பாற்றுவதே மந்திரம் என்றொரு சொல்வழக்கு உண்டு. பீஜ மந்திரங்களை மனனம் செய்வதால் அந்தந்த மந்திரத்துக்குரிய சக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு தேவதைக்கும் ஒரு பீஜ மந்திரம் உண்டு, அல்லது ஒவ்வொரு பீஜ மந்திரத்துக்கும் ஒரு தேவதை உண்டு.
உதாரணமாக சக்திக்கு (மாயை) உரிய மந்திரம் ஹ்ரீம் ஆகும். ஹ்ரீம் என்பதையும் பிரித்தால் ஹ + ர + இ + ம என்று ஆகிறது. ஹ என்பது ஆகாயம் (ஹம்), ர என்பது நெருப்பு (ரம்), இ என்பது அர்த்தநாரீஸ்வரர், ம என்பது நாதபிந்து என்று ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு சக்தியைக் குறிக்க, அந்த சக்தியெல்லாம் திரண்டு இந்த மந்திரத்தில் இருப்பதாகக் கருதப் படுகிறது.
நான் என்ற சொல்லைக் குறிக்க சம்ஸ்க்ருதத்தில் அஹம் என்ற சொல்ல வேண்டும். அஹம் என்பதைப் பிரித்தால் அ என்பது ப்ரம்மத்தையும் ஹ என்பது மாயையும் குறிக்கும். ப்ரம்மமும் மாயையும் சேர்ந்ததுதான் நான் என்று ஆச்சரியமாக விளக்கம் கூறுவர். மந்திர சாதனை என்பது ஆன்மீகத்தில் தனி துறை ஆகும். இதில் ஈடுபடுவோர் சம்ஸ்க்ருத எழுத்துக்கள் உச்சரிப்புகள் ஆகியவற்றை தெளிவாக தெரிந்த பின்னரே ஈடுபட இயலும்.
மேற்கத்திய மொழிகளில் எழுத்து (alphabets), உச்சரிக்கும் ஒலி ஆகியவை முதிராத நிலையிலேயே பெரும்பாலும் மேற்கத்திய மொழிகள் உள்ளன. அதனால் அவற்றில் எழுத்துக்கும் ஒலிக்கும் தொடர்பு மிக நெருங்கியதாக இல்லை. ஆனால் கிழக்கத்திய நாட்டு மொழிகளில் குறிப்பாக இந்திய மொழிகள் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை. இவற்றில் எழுத்துக்கும் உச்சரிப்புக்கும் நெருங்கிய துல்லியமான தொடர்பு உள்ளது. அதனால் மந்திரங்கள் இயற்றுவது அவற்றை எழுதி உச்சரிப்பது சாத்தியம் ஆகிறது.
அதிலும் சம்ஸ்க்ருதத்தில் எழுத முடியாத உச்சரிப்பில் மட்டுமே உள்ள ஒலிகள் என்று எதுவும் இல்லை. எல்லா உச்சரிப்புகளுக்கும் சம்ஸ்க்ருதத்தில் அக்ஷரங்கள் அல்லது எழுத்துக்கள் உள்ளன. அதே சமயம் மந்திரங்களை எழுதி வைக்கும்போது, சம்ஸ்க்ருத எழுத்துக்களை எழுத ஏற்றதான தேவநாகரி, கிரந்தம், தெலுங்கு, கன்னடம் போன்ற ஏதாவது லிபியை தேர்ந்தெடுப்பது அவசியம். ஏனெனில் தமிழ் போன்ற ஏனைய மொழி லிபிகளில் சம்ஸ்க்ருத உச்சரிப்புகள் எல்லாவற்றையும் சரியான படி எழுத இயலாது.
மந்திரங்கள் உச்சரிக்கும்போது தவறு ஏற்படுவது குறித்து ராமாயணத்தில் சுவாரசியமான ஒரு கதை உள்ளது. பிரமனைக் குறித்து தவம் செய்த கும்பகர்ணன், அவர் தோன்றிய போது மரணமற்ற வாழ்வைக் குறிக்கும் சொல்லான நித்யத்வம் வேண்டும் என்று கேட்கும் வேளையில் வாய்குளறி நித்ரத்வம் வேண்டும் என்று தூக்கத்தை வரமாகக் கேட்டு விட்டானாம். அதனால் அவன் வாழ்நாளை தூக்கத்திலேயே கழித்தான். ஆகவே உச்சரிப்பு மிகவும் அவசியம்.
தற்காலத்தில் நிறைய தமிழ் பக்தி புத்தகங்களில் மந்திரங்களை வெளியிடுகிறார்கள். இவற்றில் தமிழ் லிபியில் சம்ஸ்க்ருத மந்திரங்களைத் தருகிறார்கள். இவ்வாறு தமிழில் சம்ஸ்க்ருத உச்சரிப்புகளை எழுதிப் படிப்பது சரியாக வராது. அதே போல தமிழ் மொழியில் உள்ள தேவாரம் திருவாசகம் போன்ற துதி நூல்களை நாகரி லிபியில் எழுதிப் படிப்பதுவும் கடினம். ஆகவே நேரடியாக மூல மொழியில் படிப்பதே நல்லது. இவற்றில் சில முக்கிய மந்திரங்கள் தகுந்த குருவிடம் கற்றபின் பல வருட ஆன்மீக சாதனைக்கு பின்னரே பலன் தரும். எந்த வித பயிற்சியும் இல்லாமல் மந்திரங்களை ஜபம் செய்வதால் பலன் இல்லை. சில சமயம் விபரீத பலன்கள் ஏற்படுவதைத் தவிர்க்க, புத்தகங்களில் அச்சிடும்போது வேண்டுமென்றே மந்திரங்களை சிறிது சுருக்கியும், முழுவதும் தராமலும் இருந்து விடுவது வழக்கமாம். ஆகவே, மந்திரங்களை மூல மொழியில் ஒரு குருவிடம் நேரடியாக சரியான உச்சரிப்புடன் கற்பதே சிறந்த வழி.