சோழர் காலத்திய சம்ஸ்க்ருத கவிதைகள்

[Ancient Tamil kings, the Chola dynasty patronized both Tamil and Sanskrit languages together. A number of inscriptions belonging to Chola period were found written in both Sanskrit and Tamil. In this article of some of the poems in praise of Chola kings written in Sanskrit are brought out]

தமிழகத்தின் பெருமை சோழ வம்சத்தினர். தமிழினத்தின் பெருமையை உலகுக்கு பறைசாற்றிய பெருவுடையார் (ப்ருஹதீஸ்வரர் கோவில்) கோவில் கண்ட ராஜராஜ சோழன் சோழ வம்சத்திலேயே தலைசிறந்த மன்னன். தமிழகம் மட்டும் அல்லாது இன்றைய மலேசியா, இந்தோனேசியா, இலங்கை என்று கடல்கடந்து சென்று வெற்றி வாகை சூடிய மன்னர்கள் சோழர்கள். இம்மன்னர்கள் ஆண்ட காலத்தில் தமிழைப் போலவே சம்ஸ்க்ருதமும் சிறந்து விளங்கிற்று.

இவ்வரசர்கள் தமிழைப் போல் சமஸ்க்ருதத்தையும் போற்றி வளர்த்தார்கள். தமது சாசனங்களை தமிழ் மொழி மட்டும் அல்லாது சமஸ்க்ருத மொழியிலும் பதிந்து வைத்துள்ளனர். சோழ சாம்ராஜ்ஜியம்  பற்றிய, மன்னர்களின் சாதனைகள், அரும்பெரும் செயல்கள் ஆகியவற்றைப் பற்றிக் கூறும் அறிமுக உரைகள் பெரும்பாலும் சம்ஸ்க்ருதத்திலேயே ப்ரஷஷ்டி என்ற பெயரில் அமைக்கப் பட்டு வந்திருக்கிறது!

கல்வெட்டுகள், செப்புப் பட்டையங்கள், ஓலைச்சுவடிகள் வாயிலாக இவை நமக்கு கிடைத்துள்ளன. சிதம்பரம், தஞ்சை, காஞ்சி போன்ற சரித்திர கால பெரு நகர்கள் மட்டும் அல்லாது, சிவகாசி, வேள்விக் குடி, சின்னமனூர், தளவாய்புறம் , ஸ்ரீவாரமங்கலம், கரந்தை, வேலாஞ்சேரி,  அன்பில், திருவாலங்காடு, கன்யாகுமரி இவ்வாறு எத்தனையோ ஊர்களில் ஏராளமான செப்புப் பட்டையங்களும், கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன. இன்னும் கிடைக்கக் கூடும்.

தமிழில் சங்க இலக்கியங்களில் காண்பது போல, சமஸ்க்ருதத்திலும் வெவ்வேறு வகையான அழகான செய்யுள், சந்த வகைகளில் சோழ மன்னர்கள் ஆட்சிமுறை, எதிரிகளை வென்ற சாதனைகள் ஆகியவற்றைப் பற்றிய கவிதைகள் இடம்பெற்று உள்ளது.  இவற்றில் கற்பனையும், கவித்துவமும், மொழியின் ஆழமும் கூட அருமையான முறையில் அமைந்துள்ளன.

சோழர்கள் சூரிய குலத்தை சேர்ந்த மன்னர்கள் என்று கூறப் படுகிறது. அதற்கேற்ப இந்த சம்ஸ்க்ருத கவிதைகளில்  பாடப் பெறும் மன்னனை சூரிய  வம்சத்தில் வந்தவனாக  குறிக்கப் பெறும். மகாபாரதம், ராமாயணம் போன்ற இதிகாச புராண நிகழ்ச்சிகளையும், வேத தர்ம சாத்திரங்களில் உள்ள செய்திகளும் குறிப்பிடப் படும். இக்கட்டுரையில்  சுவாரசியமான சோழர் காலத்திய செப்புப் பட்டயங்களில் கிடைத்த சம்ஸ்க்ருத கவிதைகள் சிலவற்றைக் காண்போம்:

முதலாம் ராஜராஜ சோழன் சாளுக்கிய மன்னனை வெற்றி கொள்ளல்

अश्वश्रेणि परंपरोर्मिवलयं मातङ्गनक्राकुलं
पट्टिव्रातविलोलवारिनिकरं प्रच्चन्नभूमण्डलं |
आदत्तासु जयश्रियं सहयशस् चान्द्रेण सत्याश्रय
आनीकाद्विं भूजमन्दरेण तरसा निर्मात्यवेगेन य: ||

அஸ்²வஸ்²ரேணி பரம்பரோர்மிவலயம்ʼ மாதங்க³நக்ராகுலம்ʼ
பட்டிவ்ராதவிலோலவாரிநிகரம்ʼ ப்ரச்சந்நபூ⁴மண்ட³லம்ʼ |
ஆத³த்தாஸு ஜயஸ்²ரியம்ʼ ஸஹயஸ²ஸ் சாந்த்³ரேண ஸத்யாஸ்²ரய
ஆநீகாத்³விம்ʼ பூ⁴ஜமந்த³ரேண தரஸா நிர்மாத்யவேகே³ந ய: ||

கடலென திரண்டு வந்துபூமியை முழுவதுமாக சூழ்ந்த
சத்தியாஸ்ரையனின் படைகள்…

அதில் அலைகளென வரிசை வரிசையாய்
குதிரைப் படைகள்…

நீந்தும் திமிங்கலங்கள்
போன்ற யானைப் படைகள்…

கடலின் பெருநீர் பரப்பு போல
ஆக்கிரமித்து எழும் காலாட்படைகள்…

இத்தகு படையினை மந்தர மாமலை நிகர்த்த
தடந்தோள்களால்வேகமும் வலிமையுமாக கடைந்து
சந்திரனையும் ஜய லட்சுமியையும்
ஒருங்கே அடைந்தான்!

தேவர்களும் அசுரர்களும் இணைந்து,  மலையை மத்தாக்கி பாம்பை கயிறாக்கி பாற்கடலை கடைய அதில் இருந்து மகாலட்சுமி, காமதேனு, கற்பக விருட்சம், இறுதியில் மரணத்தைப் போக்கும் அமுதமும் கிடைத்தது என்று நமது புராணங்களில் கூறப் படுகிறது. இதனை கவி அழகான உவமையாக பொருத்தியுள்ளார்.  சாளுக்கிய அரசன் சத்தியாஸ்ரைய புலகேசியை முதலாம் ராஜராஜ சோழன் பெருவெற்றி கண்டதை குறிக்கும் கவிதை இது. “சார்தூலவிக்ரீடித” சந்தத்தில் அமைந்த கவிதை. சாளுக்கிய மன்னனின் படைகளை பாற்கடலாகவும், யானைப்படைகளை கடல்வாழ் திமிங்கில – சுறா மீன்கள் போலவும், ராஜராஜன் அதில் மலை போன்று இறங்கி கடைந்து ஒரே சமயத்தில் ராஜ்யலக்ஷ்மி (அரசாட்சியை ஒரு லட்சுமியாக கொள்வது வழக்கம்), ஜய ஸ்ரீயை (வெற்றியையும் லட்சுமியாக கொள்வது உண்டு), பெற்றான். சந்திர வம்சத்து சாளுக்கியனை சூரிய வம்சத்து அரசனான சோழன் ராஜராஜன் வெற்றி கொண்டதால் சந்திரனையும் அடைந்ததாக கவி கூறுகிறார்.

சுந்தரசோழன் – வானவன்மாதேவி மறைவு

தஞ்சை பெரிய கோவில் கட்டிய ராஜராஜனின் தந்தை சுந்தர சோழர். இவர் காலத்தில் சோழ அரசு பேரரசாக இல்லாவிடினும் அதற்கான அடித்தளம் அமைக்கப் பட்டது இவர் ஆட்சியில் என்று சொல்லலாம். சுமார் பனிரெண்டு ஆண்டுகளே ஆட்சியில் இருந்த இவரின் மூத்த மகன் ஆதித்த கரிகாலன் படுகொலை செய்யப் பட்டவுடன் சில காலத்தில் சுந்தர சோழரும் மறைந்தார்.  பட்டத்து ராணி வானவன் மாதேவியும் உடன்கட்டை ஏறினாள். இதனை கல்வெட்டில் பதிந்து வைத்திருக்கிறார்கள்.

देवस्त्रिभिरलोभितो भवति मे यावत्पतिस्सुन्दर:
तावद्गन्तुमहं प्रवृत्तमितिरित्याख्यातवात्यादरात्
सार्द्धं तेन गता निशादिनमिव त्यक्त्वा स्वकीयञ्जनम्
देवी तस्य पतिव्रता गुणगुणैस्साक्षादरुन्धत्यसौ |

தே³வஸ்த்ரிபி⁴ரலோபி⁴தோ ப⁴வதி மே யாவத்பதிஸ்ஸுந்த³ர:
தாவத்³க³ந்துமஹம்ʼ ப்ரவ்ருʼத்தமிதிரித்யாக்²யாதவாத்யாத³ராத்
ஸார்த்³த⁴ம்ʼ தேந க³தா நிஸா²தி³நமிவ த்யக்த்வா ஸ்வகீயஞ்ஜநம்
தே³வீ தஸ்ய பதிவ்ரதா கு³ணகு³ணைஸ்ஸாக்ஷாத³ருந்த⁴த்யஸௌ |

தேவலோகப் பெண்கள் என் கணவன் சுந்தரனை
கவருமுன் நான் என்நாதனை தொடர்வேன் என்றுரைத்து
நற்குணங்கள் நிறைந்த அருந்ததி போன்ற வானவன்மாதேவி
தன் மக்களை விடுத்து பகலை இரவு தொடர்வது போல,
விண்ணுலக்கும் தொடர்ந்து சென்றாள்!

ராஜேந்திர சோழனின் புகழ்

அழகிய புஷ்பிதாக்ரா சந்தத்தில் ராஜேந்திர சோழனின் வெற்றி குறித்து கூறும் மற்றொரு கவிதை:

निशितशरनिकृत्तदण्डमस्तं युधिधवलातप वारणं पपात |
शशिकुलतिलकस्य तस्य राज्ञ: परिभवखिन्नतयेव चन्द्रबिम्बं ||

நிஸி²தஸ²ரநிக்ருʼத்தத³ண்ட³மஸ்தம்ʼ யுதி⁴த⁴வலாதப வாரணம்ʼ பபாத |
ஸ²ஸி²குலதிலகஸ்ய தஸ்ய ராஜ்ஞ: பரிப⁴வகி²ன்னதயேவ சந்த்³ரபி³ம்ப³ம்ʼ ||

போரில் தன் வம்சத்தவன் தழுவிய தோல்வியைக்
கண்டு நிலவே தன்னிலை நழுவி வீழ்ந்தது போல
கூரிய அம்புகள் தைக்க தாங்கிய தண்டம் உடைய  
தோற்ற மன்னவனின் வெண்கொற்றக் குடையும் சரிந்தது…!

ராஜேந்திர சோழன் சந்திரகுலத்தைச் சேர்ந்த (பாண்டியர்) வென்ற போது, அந்த மன்னனின் வெண்கொற்றக் குடை சரிந்ததை நிலவே சரிந்ததாக கவி உவமானம் கூறுகிறார்.

இந்த ராஜேந்திர சோழன் சிறு குழந்தையாக இருந்து தன் வளர்ப்புத் தாயின் கையைப் பிடித்துக் கொண்டு நடக்க கற்றுக் கொண்டதை இன்னொரு கவிஞர் கவிதையாக வடித்தது இவ்வாறு அமைந்துள்ளது:

शनैश्शनैर्भूमितले पदानि न्यदत्त धात्रीकर संगिहस्त: |
सोढुं किमीष्टे गरिमाणं उर्वी न वा  मां इत्येव संशयान: ||

ஸ²நைஸ்²ஸ²நைர்பூ⁴மிதலே பதா³நி ந்யத³த்த தா⁴த்ரீகர ஸங்கி³ஹஸ்த: |
ஸோடு⁴ம்ʼ கிமீஷ்டே க³ரிமாணம்ʼ உர்வீ ந வா மாம்ʼ இத்யேவ ஸம்ʼஸ²யான: ||

அம்மாவின் கரம்பிடித்து
அடியெடுத்து வைக்கும் போதிலே
தன் கனம் தாங்குமோ தரணி
யென்று
தயங்குகிறான்…!

சிறுகுழந்தை யோசித்து யோசித்து கால் பதித்ததை பூமி தாங்குமோ என்று யோசிப்பதாக எண்ணிப் பார்க்கிறார் கவி!

சிவபெருமான் – மகா விஷ்ணு

சோழர்கள் பெரும் சிவபக்தர்களாக இருந்திருக்கின்றனர். சிவபாதசேகரன் (சிவனின் பாதத்தை தலையில் சூடியவன்) என்றே ராஜராஜ சோழனுக்குப் பெயர். சோழ வமச்த்தில் பலரும் சிவபெருமானுக்கு கோவில்கள் எழுப்பி திருப்பணி செய்துள்ளனர். அதே சமயம் விஷ்ணு பக்தியும் அவர்களுக்கு உண்டு. கன்யாகுமரியில் கிடைத்த வீர ராஜேந்திர சோழனைக் குறித்த கல்வெட்டுகளில் சிவன் மற்றும் விஷ்ணு குறித்து சொல் அலங்காரம் மிக்க கவிதைகள் இரண்டு உள்ளன.

சிவபெருமானைக் குறித்து,

माया मायामिनीं यो वहति जगदिदं रञ्जयन्तीं जयन्तीं
ज्ञानाज्ञान प्रसूति सफूटरुचिवपुषा योगभाजागभाजा |
सत्वासत्वानुकम्पि हितमुदित महातापशूनां पशूनां
शम्भुनम्भुग्न पापव्यति कृति भवतस्सप्रपानात् प्रपातात् ||

மாயா மாயாமிநீம்ʼ யோ வஹதி ஜக³தி³த³ம்ʼ ரஞ்ஜயந்தீம்ʼ ஜயந்தீம்ʼ
ஜ்ஞாநாஜ்ஞாந ப்ரஸூதி ஸபூ²டருசிவபுஷா யோக³பா⁴ஜாக³பா⁴ஜா |
ஸத்வாஸத்வானுகம்பி ஹிதமுதி³த மஹாதாபஸூ²னாம்ʼ பஸூ²னாம்ʼ
ஸ²ம்பு⁴னம்பு⁴க்³ன பாபவ்யதி க்ருʼதி ப⁴வதஸ்ஸப்ரபானாத் ப்ரபாதாத் ||

சம்பு!
அசையும் அசையா பொருட்களுக்கு
கருணை காட்டுபவன்!
அழகிய சரீரத்துடன் மலையுச்சியில்
வாழ்பவன்!
அறிவையும் அஞ்ஞானத்தையும் அளிக்கும்
மாயையைக் கையிலேந்தியவன்!
மக்கள் மகிழ்வதில் உவகை கொள்பவன்
பாவச் செயல்களால் பாதாளம் நோக்கி விழுபவரை
காக்கட்டும் அவன்!

அதே கல்வெட்டில் மகாவிஷ்ணு குறித்தும் கவிதை ஒன்று இருக்கிறது.

चक्रे चक्रेण दैत्यप्रकारमतिबलं यस्समस्तं समस्तं
पाता पातालभूलाहित बलिरनिशं भासुराणां सुराणां |
सद्यस्सद्यत्वघं वो हरिरखिलजगद्रक्षणेन क्षणेन
स्वैरं स्वैरं सलेशैरिव धरणिगतै संभवद्भिर्भवद्भि: ||

சக்ரே சக்ரேண தை³த்யப்ரகாரமதிப³லம்ʼ யஸ்ஸமஸ்தம்ʼ ஸமஸ்தம்ʼ
பாதா பாதாலபூ⁴லாஹித ப³லிரனிஸ²ம்ʼ பா⁴ஸுராணாம்ʼ ஸுராணாம்ʼ |
ஸத்³யஸ்ஸத்³யத்வக⁴ம்ʼ வோ ஹரிரகி²லஜக³த்³ரக்ஷணேன க்ஷணேன
ஸ்வைரம்ʼ ஸ்வைரம்ʼ ஸலேஸை²ரிவ த⁴ரணிக³தை ஸம்ப⁴வத்³பி⁴ர்ப⁴வத்³பி⁴: ||

ஹரி!
தன் சக்கரப் படையால் தேவர்களைக் காத்து
அரக்கப் படை அழிய,
அசுரர்கரசனை அதலபாதாளத்துக்கு அனுப்பியவன்!
எதிர்ப்போர் இன்றி உலகைக்காக்க
தன் அவதாரமாகவே உன் பிறப்பெடுத்து வந்தவன்!
அவன் கணநேரத்தில் பாவங்களைப் போக்கட்டும்!

அரசனை விஷ்ணுவின் அவதாரமாக எண்ணுவது பண்டைய மரபு. இக்கவிதையில் அவ்வாறு கவி விஷ்ணுவின் பெருமைகளை புராண சம்பவங்களின் வாயிலாக கூறி, தம் அரசர் அந்த விஷ்ணுவின் அவதாரம் என்று கூறுகிறார்.

பராந்தகன் பிறப்பு

பராந்தக சோழன் பிறந்த செய்தியைச் சொல்லும் அழகிய கவிதை ஒன்று,

क्षीरार्णवादिव शशितुहिनाचलेन्द्रात्
गङ्गाप्रवाह: इव भानुरिवोष्णभाव: |
मेरोरिवाचलपते: महित: त्रिकूटत:
तस्मादजायत परान्तक नामधेय: ||

க்ஷீரார்ணவாதி³வ ஸ²ஸி²துஹிநாசலேந்த்³ராத்
க³ங்கா³ப்ரவாஹ: இவ பா⁴னுரிவோஷ்ணபா⁴வ: |
மேரோரிவாசலபதே: மஹித: த்ரிகூடத:
தஸ்மாத³ஜாயத பராந்தக நாமதே⁴ய: ||

பாற்கடலில் பால்நிலா எழுந்தது போல
மலைமுகட்டில் கங்கை எழுவது போல
மேருமலை உயர்ந்து காட்சி தருவது போல
கதிரவன் உதிக்கும் போது எழும் இளம்சூடு போல
பராந்தகன் பிறந்தான்!

குழந்தை பிறப்பதை உதிக்கும் சூரியனின் இளம் சூட்டுடன் ஒப்பிடுவது கவிஞரின் கற்பனை வளத்தின் உச்சம். வெற்றுச் சொற்களால் அரசனை புகழ்ந்து விட்டுப் போகாமல் உள்ளபடியே தம் கவித்திறனால் ஆயிரம் ஆண்டுகள் கழித்து படிக்கும் போதும் தன் உணர்ச்சியை நமக்குள் பதிந்து விடுகிறார் இந்த பெயர் தெரியாத கவிஞர். இக்கவிதையை படிக்கும் போதே கவிஞரின் உள்ளத்தில் குழந்தைக்காக எழும் வாஞ்சை உணர்வுகளை உணர முடியும்.

தமிழ் மன்னர்கள் சம்ஸ்க்ருத மொழியை வேற்று மொழியாக கருதவில்லை. தமது பெயரை பெருமையுடன் பதிந்து வைப்பதிலிருந்து, அரசாட்சியின் பல அங்கங்களிலும் பயன்படுத்தி வந்தனர் என்பது தெளிவு.இது போல ஆயிரக்கணக்கான அற்புதமான கல்வெட்டுகள், செப்புப் பட்டையங்கள் நமது தமிழ் மன்னர்கள் ஆண்ட பகுதிகள் எங்கும் உள்ளன. பெரும்பான்மையானவை தொல்பொருள் துறையினரால் பாதுகாக்கப் பட்டும் வருகின்றன.

தமிழில் எத்தனையோ செய்யுட்கள், பாடல்கள் அரசர்கள், அரசமுறை, காதல், களவு, ஈகை, போர் என்று பல செய்திகளையும் தருவது போல், தமிழகத்திலேயே ஏராளமான கல்வெட்டு, செப்புப் பட்டய சாசனங்களில் சம்ஸ்க்ருத மொழியிலும் செய்திகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. இவற்றை முறையாக தொகுத்து பிரபலப் படுத்துவது அவசியம்


குறிப்புகள்

  • Sanskrit Inscriptions Of Tamilnadu – A Literay Study By Charu Madhavan, ISBN – 8188934445

14 Comments சோழர் காலத்திய சம்ஸ்க்ருத கவிதைகள்

  1. sugumaran

    மிக அருமையானக் கட்டுரை .
    செய்திகளும் ,வருணனைகளும் மனத்தைக் கவருகின்றன .
    சந்திரனில் காணப்படும் களங்கம் போல் ஒரு சிறு தவறு ,
    களங்கம் களையப்படவேண்டும் எனக் கூறுகிறேன் .

    //தஞ்சை பெரிய கோவில் கட்டிய ராஜராஜனின் தந்தை சுந்தர சோழர். இவர் காலத்தில் சோழ அரசு பேரரசாக இல்லாவிடினும் அதற்கான அடித்தளம் அமைக்கப் பட்டது இவர் ஆட்சியில் என்று சொல்லலாம். சுமார் பனிரெண்டு ஆண்டுகளே ஆட்சியில் இருந்த இவரின் மூத்த மகன் கண்டராதித்த சோழன் படுகொலை செய்யப் பட்டவுடன் சில காலத்தில் சுந்தர சோழரும் மறைந்தார். பட்டத்து ராணி வானவன் மாதேவியும் உடன்கட்டை ஏறினாள். இதனை கல்வெட்டில் பதிந்து வைத்திருக்கிறார்கள்.

    அவருடைய மூத்தமகன் ஆதித்தக் கரிகாலன் என்று இருக்கவேண்டுமோ ?
    அன்புடன்
    அண்ணாமலை சுகுமாரன்

  2. dev

    ”தாளகோச சேகரர்” சுகுமாரன் அவர்கள் பாராட்டியதற்கு மேல்
    சொல்ல என்ன இருக்கிறது ? கற்பனை வளம் மிகுந்த சுலோகங்களைப்
    பலமுறை படித்து இன்புற்றேன்.

    ‘ப்ரஷஷ்டி’ (2ம் பத்தி) தவறு; ப்ரசஸ்தி (प्रशस्ति) என்று இருக்க வேண்டும்

    தேவ்

  3. krishnakumar

    தமிழ் ஹிந்து மூலம் தமிழ் வழி ஸம்ஸ்க்ருதத்திற்காக தனி இணையதளம் உள்ளதை அறிந்தேன். மகிழ்ச்சி.

    \\\\\\\\தமிழில் சங்க இலக்கியங்களில் காண்பது போல, சமஸ்க்ருதத்திலும் வெவ்வேறு வகையான அழகான செய்யுள், சந்த வகைகளில் சோழ மன்னர்கள் ஆட்சிமுறை, எதிரிகளை வென்ற சாதனைகள் ஆகியவற்றைப் பற்றிய கவிதைகள் இடம்பெற்று உள்ளது.\\\\\ மேற்கண்ட ச்லோகங்களும் விவிதமான வ்ருத்தங்களில் படிக்க மிக சுவையாக உள்ளது. ஒரு இருபது இருபத்தைந்து வருஷங்களாக புராண படனத்தினால் ஸம்ஸ்க்ருத பரிச்சயம் உள்ள எனக்கு முறையாக ஸம்ஸ்க்ருதம் கற்க இந்த தளம் நல்ல வரப்ரஸாதம்.

    “சங்கர” “शङ्कर” என்பதில் உள்ள “ச” என்ற அக்ஷரத்தை குறிக்கும் க்ரந்த எழுத்து பராஹா, அழகி மற்றெந்த எழுத்து வடிவங்களிலும் காணப்பெறேன். “श” வைக் குறிக்கும் தனி க்ரந்த எழுத்தை அதற்கான இடங்களில் உபயோகிப்பது நன்றாக இருக்குமே. स, श, ष மூன்றெழுத்துக்களும் தமிழில் எழுதுகையில் அததற்கான க்ரந்த எழுத்துக்களுடன் எழுதுவது சரியாக இருக்கும்.

  4. Sethu.Ramachandran

    அன்புடையீர்,
    வணக்கம். அற்புதமான் ஆழமான கருத்துக்கள்.
    வளரட்டும் உங்கள் தொண்டு. வாழ்த்துக்கள்.
    நன்றி,
    சேது.இராமச்சந்திரன்.

  5. அ.கேதீஸ்வரன்

    மிக அரிதாக இப்படியான வலைத்தலங்கள் பார்வைக்குக் கிடைத்துவிடுகின்றன. ‘சோழர் காலத்திய சம்ஸ்க்ருத கவிதைகள்’ என்னும் கட்டுரையை இன்று படித்தேன். தேடல்மிகுந்த உங்கள் முயற்சியைப் பாராட்டுகின்றேன். அதிலும் நீங்கள் பயன் படுத்தியிக்கும் படங்கள் கட்டுரையின் தரத்தை ஒரு படிஅதிகரிக்கச் செய்திருக்கின்றன. தொடர்ந்து உங்கள் மிகுதிப் படைப்புகளையும் படிக்கவுள்ளேன். அன்புடன் அ.கேதீஸ்வரன்.

  6. ganesan

    எனக்கு சமஸ்க்ரிதம் தெரியாது. என் தகப்பனாருக்கு சமஸ்க்ரிதம் நன்றாகத் தெரிந்தும், அவரிடமிருந்து கற்றுக்கொள்ளாமல் இருந்து விட்டேனே என்ற வருத்தம் எனக்கு எப்போதும் உண்டு. ஒவ்வொரு இந்தியனும் கண்டிப்பாக சமஸ்க்ரிதம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று மகாத்மா காந்தியே சொல்லியிருக்கிறார். என் தந்தை அவ்வப்போது சொல்லிய சமஸ்க்ரித ஸ்லோகங்களைக் கேட்டு மகிழ்ந்த எனக்கு இந்த வலை தளம் மேலும் சந்தோஷத்தைக் கொடுக்கிறது! தொடரட்டும் உங்கள் சீரிய பணி!!! வாழ்த்துக்கள்!!

  7. பச்சை தமிழன்

    ஒரு தமிழனாக இருக்க முழுத்தகுதி அவன் சமஸ்கிருதம் மறுக்க தெரிந்து இருக்க வேண்டும் அன்றில் அவன் தமிழனில்லை..

  8. Pingback: பாண்டியர் காலத்திய சம்ஸ்க்ருத கவிதைகள் | Sangatham

  9. G.parvathavardhini

    வணக்கம். ஸம்ஸ்க்ருதம் மற்றும் தமிழ் நூல்களுக்கு இடையேயான ஆய்வு செய்துவரும் எனக்கு உங்கள் இணையதளம் பேருதவியாக இருந்தது. நன்றி.உங்களை தொடர்பு கொள்ள ஏதேனும் மின்னஞ்சல் முகவரி உள்ளதா ?

  10. Nathan

    /////”ஒரு தமிழனாக இருக்க முழுத்தகுதி அவன் சமஸ்கிருதம் மறுக்க தெரிந்து இருக்க வேண்டும் அன்றில் அவன் தமிழனில்லை.. ” ////
    என்ன சொல்ல வருகிறீர்கள் பச்சை தமிழரே? சோழ மன்னர் தமிழர் இல்லை என்கிறீர்களா?

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)