ரகுவம்சம் – சில பாடல்கள்

(தொகுப்பு, மொழியாக்கம் : ஜடாயு)

ரகுவம்சம் சம்ஸ்க்ருத மகாகவி காளிதாசனின் தலைசிறந்த காவியங்களுள் முக்கியமானது. இது கேட்டு ரசிக்கத் தக்க வகையில் உள்ள ஸ்ரவ்ய காவ்ய வகுப்பைச் சேர்ந்தது. (சாகுந்தலம் போன்ற நாடகங்கள் த்ருச்ய காவியம் – பார்த்து ரசிக்கத் தக்கவை). அதோடு சம்ஸ்க்ருதத்தில் ஐம்பெருங்காவியங்களில் (பஞ்ச மகா காவியங்கள்) ஒன்று ரகுவம்சம்.

பல கதாநாயகர்களைக் கொண்ட இக்காவியம், திலீபன் முதலாக அக்நிவர்ணன் வரை இருபத்தி ஒன்பது அரசர்களைப் பற்றிய கதைகளை கூறுகிறது. இதில் முக்கியமாக திலீபன், ரகு, அஜன், தசரதன், ராமன் ஆகியோரின் கதையை பதினைந்து சர்க்கங்களில் கவி இயற்றி உள்ளார். மீதமுள்ள நான்கு சர்க்கங்களில் ஒரு சர்க்கம் ராமனுடைய மகன் குசனைப் பற்றியும், ராமனுடைய பேரன் அதிதி பற்றியும், ஒரே சர்க்கத்தில் இருபத்தியொரு மன்னர்களைப் பற்றியும் கடைசி சர்க்கம் அக்நிவர்ணனைப் பற்றியும் அமைந்துள்ளது.

பொதுவாக சம்ஸ்க்ருத காவியங்கள் சோகமுடிவுடன் (tragedy) இருப்பதில்லை. ஆனால் ரகுவம்சம் அக்னிவர்ணனின் மரண வர்ணனையில் முடிவதால் கவி இந்த காவியத்தை முடிக்கவில்லை என்று கருதுவோர் உண்டு. அல்லது எழுதிய பகுதி கிடைக்கவில்லை என்று கூறுபவர்களும் உள்ளனர்.

சிவனும் பார்வதியும்
தொடக்கம் (1.1-4)

वागर्थाविव संपृक्तौ वागर्थप्रतिपत्तये।
जगतः पितरौ वन्दे पार्वतीपरमेश्वरौ॥

வாக³ர்தா²விவ ஸம்ப்ருʼக்தௌ வாக³ர்த²ப்ரதிபத்தயே|
ஜக³த​: பிதரௌ வந்தே³ பார்வதீபரமேஸ்²வரௌ||

சொல்லும் பொருளும் என இணைந்த தொல்லுலகின் தாய் தந்தையரை, பார்வதி பரமேஸ்வரரை, சொல்லையும் பொருளையும் அறிந்திடவேண்டிப் பணிகிறேன்.

क्व सूर्यप्रभवो वंशः क्व चाल्पविषया मतिः।
तितीर्षुर्दुस्तरं मोहादुडुपेनास्मि सागरम्॥

க்வ ஸூர்யப்ரப⁴வோ வம்ʼஸ²​: க்வ சால்பவிஷயா மதி​:|
திதீர்ஷுர்து³ஸ்தரம்ʼ மோஹாது³டு³பேனாஸ்மி ஸாக³ரம்||

ஒளிமிகு சூரிய வம்சம் எங்கே? அற்பமான என் சிறுமதி எங்கே? கடந்திட முடியாக் கடலை சிறுபடகின் மூலம் கடக்க ஆசை கொண்டேன்.

मन्दः कवियशः प्रार्थी गमिष्याम्यपहास्यताम्।
प्रांशुलभ्ये फले लोभादुद्बाहुरिव वामनः॥

மந்த³​: கவியஸ²​: ப்ரார்தீ² க³மிஷ்யாம்யபஹாஸ்யதாம்|
ப்ராம்ʼஸு²லப்⁴யே ப²லே லோபா⁴து³த்³பா³ஹுரிவ வாமன​:||

கவிதைப் புகழ் விழைந்த இந்த சிற்றறிவாளன், உயர்ந்த மரத்தின் பழத்தை விரும்பிக் கைநீட்டும் குள்ளன் போல பரிகசிக்கப் படுவேன்.

अथवा कृतवाग्द्वारे वंशेऽस्मिन्पूर्वसूरिभिः।
मणौ वज्रसमुत्कीर्णे सूत्रस्येवास्ति मे गतिः॥

அத²வா க்ருʼதவாக்³த்³வாரே வம்ʼஸே²(அ)ஸ்மின்பூர்வஸூரிபி⁴​:|
மணௌ வஜ்ரஸமுத்கீர்ணே ஸூத்ரஸ்யேவாஸ்தி மே க³தி​:||

ஆயினும், முன்னிருந்த புலவோர் செய்த சொல்லெனும் துளையில் என் மொழி செல்லும், ரத்தினத்தை ஊடுருவி வைரம் இட்ட துளை வழியே நூல் செல்வது போல்.

[ரத்தினத்தை அணிவதற்கு ஏற்றதாக கோர்ப்பதற்கு நூல் பயன் படுவது போல, என் காவியம் எளிய நூலாக இருந்தாலும் இந்த ரத்தினம் போன்ற ரகுவம்ச கதையை அனைவரும் அறிந்து பயன் பெற உதவும்]


திலீபனின் மனைவி சுதட்சிணை கருவுற்று மகனைப் பெறுதல் (3.2-26)

शरीरसादादसमग्रभूषणा मुखेन सालक्ष्यत लोध्रपाण्डुना|
तनुप्रकाशेन विचेयतारका प्रभातकल्पा शशिनेव शर्वरी॥

ஸ²ரீரஸாதா³த³ஸமக்³ரபூ⁴ஷணா முகே²ன ஸாலக்ஷ்யத லோத்⁴ரபாண்டு³னா|
தனுப்ரகாஸே²ன விசேயதாரகா ப்ரபா⁴தகல்பா ஸ²ஸி²னேவ ஸ²ர்வரீ||

மங்கிய நிலவில், ஒரு சில நட்சத்திரங்களே சிதறிக் கிடக்கும் விடியும் தறுவாயிலுள்ள இரவு போல, உடல் மெலிவால் குறைந்த அணிகளை அணிந்து, லோத்ர மலர் போன்று வெளுத்த முகத்துடன் அவள் இருந்தாள்.

[அவள் உடல் மெலிந்து போனதால் ஆபரணங்கள் அதிகம் அணிய முடியவில்லை, மங்கலம் கருதி சிலவற்றையே அணிந்திருந்தாள்]

तदाननं मृत्सुरभि क्षितीश्वरो रहस्युपाघ्राय न तृप्तिमाययौ|
करीव सिक्तं पृषतैः पयोमुचां शुचिव्यपाये वनराजिपल्वलम्॥

ததா³னனம்ʼ ம்ருʼத்ஸுரபி⁴ க்ஷிதீஸ்²வரோ ரஹஸ்யுபாக்⁴ராய ந த்ருʼப்திமாயயௌ|
கரீவ ஸிக்தம்ʼ ப்ருʼஷதை​: பயோமுசாம்ʼ ஸு²சிவ்யபாயே வனராஜிபல்வலம்||

மண்முழுதாளும் அவ்வேந்தன் தனிமையில் மண்மணம் கமழும் அவளது முகத்தை மீண்டும் மீண்டும் முகர்ந்து மகிழ்ந்தான்; வேனிற்கால முடிவில், மேகம் சிந்திய சிறுதுளிகளால் நனைந்த காட்டு நீர்த் தடாகத்தில் திருப்தியடையாத யானை போல.

[கருவுற்ற பெண்கள், சாம்பல் மண் முதலியவற்றை உண்பது உண்டு. அவ்வாறு மண்ணை சிறிது உண்டு விட்டதால், அவள் வாயில் மண்வாசனை ஏற்பட்டது. இதனை மழை தூறல் விழும் போது எழும் மண்வாசனையுடன் ஒப்பிடுகிறார்]

दिवं मरुत्वानिव भोक्ष्यते भुवं दिगन्तविश्रान्तरथो हि तत्सुतः|
अतोऽभिलाषे प्रथमं तथाविधे मनो बबन्धान्यरसान्विलङ्घ्य सा॥

தி³வம்ʼ மருத்வானிவ போ⁴க்ஷ்யதே பு⁴வம்ʼ தி³க³ந்தவிஸ்²ராந்தரதோ² ஹி தத்ஸுத​:|
அதோ(அ)பி⁴லாஷே ப்ரத²மம்ʼ ததா²விதே⁴ மனோ ப³ப³ந்தா⁴ன்யரஸான்விலங்க்⁴ய ஸா||

வானாளும் இந்திரன் போல, அவள் மகன் திசைகளின் எல்லைவரை செல்லும் தேர்கொண்டு, மண்முழுதும் ஆண்டு களிப்பான். அது கருதியோ அவள் மற்ற சுவைகள் அனைத்தையும் உதறி மண்மீது ஆசை வைத்தாள்?

क्रमेण निस्तीर्य च दोहदव्यथां प्रचीयमानावयवा रराज सा|
पुराणपत्रापगमादनन्तरं लतेव संनद्धमनोज्ञपल्लवा॥

க்ரமேண நிஸ்தீர்ய ச தோ³ஹத³வ்யதா²ம்ʼ ப்ரசீயமானாவயவா ரராஜ ஸா|
புராணபத்ராபக³மாத³னந்தரம்ʼ லதேவ ஸம்ʼனத்³த⁴மனோஜ்ஞபல்லவா||

பழைய இலைகள் உதிர்ந்து மனம் கவரும் புது இளந்தளிர்கள் துளிர்க்கும் கொடிபோல, கருத் தாங்கும் சிரமங்கள் கடந்து அவளது அவயவங்கள் செழிப்புற்றன.

दिनेषु गच्छत्सु नितान्तपीवरं तदीयमानीलमुखं स्तनद्वयम् ।
तिरश्चकार भ्रमराभिनीलयोः सुजातयोः पङ्कजकोशयोः श्रियम् ॥

தி³னேஷு க³ச்ச²த்ஸு நிதாந்தபீவரம்ʼ ததீ³யமானீலமுக²ம்ʼ ஸ்தனத்³வயம் |
திரஸ்²சகார ப்⁴ரமராபி⁴னீலயோ​: ஸுஜாதயோ​: பங்கஜகோஸ²யோ​: ஸ்²ரியம் ||

நாட்கள் செல்லச் செல்ல, சற்றே கருத்த முகம்* கொண்ட, பருத்த, அவளது இணைமுலைகள், வண்டு வந்தமர்ந்த அழகிய தாமரை மொட்டுக்களின் அழகை வென்றன. (* முலைக்காம்புகளை அவற்றின் முகமாக கவி வர்ணிக்கிறார்).

निधानगर्भामिव सागराम्बरां शमीमिवाभ्यन्तरलीनपावकाम्|
नदीमिवान्तःसलिलां सरस्वतीं नृपः ससत्त्वां महिषीममन्यत॥

நிதா⁴னக³ர்பா⁴மிவ ஸாக³ராம்ப³ராம்ʼ ஸ²மீமிவாப்⁴யந்தரலீனபாவகாம்|
நதீ³மிவாந்த​:ஸலிலாம்ʼ ஸரஸ்வதீம்ʼ ந்ருʼப​: ஸஸத்த்வாம்ʼ மஹிஷீமமன்யத||

பெருநிதியைக் கருவில் சுமக்கும் கடலுடுத்த நிலமகளோ? கனலைத் தன்னுள் ஒளித்திருக்கும் வன்னி மரமோ? அல்லது உள்ளே நீரோடும் சரஸ்வதி நதியோ இவள்? எனத் தன் பட்டமகிஷியைக் கண்ட மன்னன் எண்ணினான்.

[வன்னி மரம் நெருப்பைத் தன்னுள்ளே அடக்கி இருப்பதாகவும், சரஸ்வதி நதி மண்ணுக்குள்ளே ஓடுவதாகவும் நம்பிக்கைகள் உண்டு]

सुरेन्द्रमात्राश्रितगर्भगौरवात्प्रयत्नमुक्तासनया गृहागतः|
तयोपचाराञ्जलिखिन्नहस्तया ननन्द पारिप्लवनेत्रया नृपः॥

ஸுரேந்த்³ரமாத்ராஸ்²ரிதக³ர்ப⁴கௌ³ரவாத்ப்ரயத்னமுக்தாஸனயா க்³ருʼஹாக³த​:|
தயோபசாராஞ்ஜலிகி²ன்னஹஸ்தயா நனந்த³ பாரிப்லவனேத்ரயா ந்ருʼப​:||

அரசன் தன்னைக் காண வரும்போது, மிக்க பிரயாசையுடன் இருக்கை விட்டெழுந்து, தளர்ந்த கைகளால் கூப்பி, சஞ்சலமடைந்த கண்களால் அவள் நோக்கினாள். உலகைத் தாங்கும் திக்பாலர்களின் அம்சம் கொண்ட கருவின் பெருமிதத்தால் அரசன் மகிழ்ந்தான்.

कुमारभृत्याकुशलैरनुष्ठिते भिषग्भिराप्तैरथ गर्भभर्मणि|
पतिः प्रतीतः प्रसवोन्मुखीं प्रियां ददर्श काले दिवमभ्रितामिव॥

குமாரப்⁴ருʼத்யாகுஸ²லைரனுஷ்டி²தே பி⁴ஷக்³பி⁴ராப்தைரத² க³ர்ப⁴ப⁴ர்மணி|
பதி​: ப்ரதீத​: ப்ரஸவோன்முகீ²ம்ʼ ப்ரியாம்ʼ த³த³ர்ஸ² காலே தி³வமப்⁴ரிதாமிவ||

குழந்தை வைத்தியத்தில் தேர்ந்த அரசனுக்கு உற்ற வைத்தியர்கள் கருவின் வளர்ச்சிக்குரிய சிகிச்சைகளை முறையாகச் செய்தனர். மேகங்கள் சூழ்ந்த வானத்தைப் பார்ப்பது போல, பிரசவ காலத்தை நெருங்கிய மனைவியை திலீபன் மகிழ்ச்சியுடன் பார்த்தான்.

ग्रहैस्ततः पञ्चभिरुच्चसंस्थितैरसूर्यगैः सूचितभाग्यसंपदम्|
असूत पुत्रं समये शचीसमा त्रिसाधना शक्तिरिवार्थमक्षयम्॥

க்³ரஹைஸ்தத​: பஞ்சபி⁴ருச்சஸம்ʼஸ்தி²தைரஸூர்யகை³​: ஸூசிதபா⁴க்³யஸம்பத³ம்|
அஸூத புத்ரம்ʼ ஸமயே ஸ²சீஸமா த்ரிஸாத⁴னா ஸ²க்திரிவார்த²மக்ஷயம்||

பிறகு, மூன்று சக்திகளும்* இணைந்து அழிவற்ற செல்வம் அளிப்பது போல, உரிய காலத்தில், சூரியனைச் சேராமல் உச்ச ஸ்தானத்தில் ஐந்து கிரகங்கள் சேர்ந்து நின்று அவனது பாக்கியமாகிய செல்வத்தை முன்னறிவிக்க, இந்திராணியை ஒத்த அவள் புதல்வனைப் பெற்றாள். (* மூன்று சக்திகள் – பிரபு சக்தி, மந்த்ர சக்தி, உத்ஸாஹ சக்தி)
[ஒரு அரசனுக்கு இந்த மூன்று சக்திகளும் அவசியம். செல்வத்தாலும், பெரும் படையாலும் கிடைப்பது பிரபு சக்தி; மந்திரிகளின் ஆலோசனையால் உண்டாவது மந்த்ர சக்தி; தனக்கே உரிய உடல்-உள்ள வலு, உற்சாகம், வெல்லவேண்டும் என்கிற எண்ணம் உத்ஸாஹ சக்தி; வால்மீகி ராமாயணத்தில் ராமர் பிறந்த போது இவ்வாறு ஐந்து கிரகங்கள் உச்சம் பெற்றன என்று குறிப்பிடப் பட்டுள்ளது.]

குழந்தை

दिशः प्रसेदुर्मरुतो ववुः सुखाः प्रदक्षिणार्चिर्हविरग्निराददे|
बभूव सर्वं शुभशंसि तत्क्षणं भवो हि लोकाभ्युदयाय तादृशाम्॥

தி³ஸ²​: ப்ரஸேது³ர்மருதோ வவு​: ஸுகா²​: ப்ரத³க்ஷிணார்சிர்ஹவிரக்³னிராத³தே³|
ப³பூ⁴வ ஸர்வம்ʼ ஸு²ப⁴ஸ²ம்ʼஸி தத்க்ஷணம்ʼ ப⁴வோ ஹி லோகாப்⁴யுத³யாய தாத்³ருʼஸா²ம்||\

அந்தக் கணம், திசைகள் தெளிந்தன. காற்று சுகமாக வீசியது. வேள்வித் தீச் சுடர் வலம் சுழித்து அவியை ஏற்றுக் கொண்டது. இவை அனைத்தும் சுப அடையாளங்களாகவே இருந்தன. உலகம் உய்யவன்றோ அத்தகையோர் பிறக்கின்றனர்!

अरिष्टशय्यां परितो विसारिणा सुजन्मनस्तस्य निजेन तेजसा|
निशीथदीपाः सहसा हतत्विषो बभूवुरालेख्यसमर्पिता इव॥

அரிஷ்டஸ²ய்யாம்ʼ பரிதோ விஸாரிணா ஸுஜன்மனஸ்தஸ்ய நிஜேன தேஜஸா|
நிஸீ²த²தீ³பா​: ஸஹஸா ஹதத்விஷோ ப³பூ⁴வுராலேக்²யஸமர்பிதா இவ||

அக்குழந்தையின் இயல்பான தேசுடைய ஒளி பிரசவ அறையின் படுக்கையைச் சுற்றிப் பரவியது. அங்கிருந்த நிசி தீபங்கள் ஒளியிழந்து சித்திரத்தில் எழுதப் பட்டவை போலாயின.

निवातपद्मस्तिमितेन चक्षुषा नृपस्य कान्तं पिबतः सुताननम्|
महोदधेः पूर इवेन्दुदर्शनाद्गुरुः प्रहर्षः प्रबभूव नात्मनि॥

நிவாதபத்³மஸ்திமிதேன சக்ஷுஷா ந்ருʼபஸ்ய காந்தம்ʼ பிப³த​: ஸுதானனம்|
மஹோத³தே⁴​: பூர இவேந்து³த³ர்ஸ²னாத்³கு³ரு​: ப்ரஹர்ஷ​: ப்ரப³பூ⁴வ நாத்மனி||

காற்றில்லாத மடுவில் பூத்த தாமரை போல அசையாத கண்களால் தன் மகனின் முக அழகைப் பருகினான் மன்னன். நிலவைக் கண்டு, தன்னுள் அடங்காமல் பொங்கும் பெருங்கடலின் நீர்த்திவலைகள் போலப் பொங்கியது அவனது மகிழ்ச்சி.

न संयतस्तस्य बभूव रक्षितुर्विसर्जयेद्यं सुतजन्महर्षितः|
ऋणाभिधानात्स्वयमेव केवलं तदा पितॄणां मुमुचे स बन्धनात्॥

ந ஸம்ʼயதஸ்தஸ்ய ப³பூ⁴வ ரக்ஷிதுர்விஸர்ஜயேத்³யம்ʼ ஸுதஜன்மஹர்ஷித​:|
ருʼணாபி⁴தா⁴னாத்ஸ்வயமேவ கேவலம்ʼ ததா³ பித்ரூʼணாம்ʼ முமுசே ஸ ப³ந்த⁴னாத்||

மகவு பிறந்த மகிழ்ச்சியில் கைதிகளை விடுதலை செய்யலாமென்றால், அக்காவலனின் அரசில் கைதிகள் என்று யாருமே இல்லை. மூதாதையரின் கடன் என்ற கட்டினின்று அவன் ஒருவன் மட்டும் விடுதலை பெற்றான்.

रथाङ्कनाम्नोरिव भावबन्धनं बभूव यत्प्रेम परस्पराश्रयम्|
विभक्तमप्येकसुतेन तत्तयोः परस्परस्योपरि पर्यचीयत॥

ரதா²ங்கனாம்னோரிவ பா⁴வப³ந்த⁴னம்ʼ ப³பூ⁴வ யத்ப்ரேம பரஸ்பராஸ்²ரயம்|
விப⁴க்தமப்யேகஸுதேன தத்தயோ​: பரஸ்பரஸ்யோபரி பர்யசீயத||

சக்ரவாகப் பட்சிகள் போன்ற அந்த தம்பதியரின் அன்பு, உணர்வில் பிணைந்தது, ஒருவரையொருவர் பற்றியது. ஒரே பிள்ளை பிறந்து, அதைப் பிரித்தது. ஆயினும் அவர்களுக்கிடையில் அது இன்னும் அதிகமாக வளர்ந்தது!

तमङ्कमारोप्य शरीरयोगजैः सुखैर्निषिञ्चन्तमिवामृतं त्वचि|
उपान्तसंमीलितलोचनो नृपश्चिरात्सुतस्पर्शरसज्ञतां ययौ॥

தமங்கமாரோப்ய ஸ²ரீரயோக³ஜை​: ஸுகை²ர்னிஷிஞ்சந்தமிவாம்ருʼதம்ʼ த்வசி|
உபாந்தஸம்ʼமீலிதலோசனோ ந்ருʼபஸ்²சிராத்ஸுதஸ்பர்ஸ²ரஸஜ்ஞதாம்ʼ யயௌ||

அப்புதல்வனின் மெல்லிய சருமத்தின் தீண்டல் அமுதம் பொழிந்தது. அவனை மடியில் ஏற்றிக் கடைக்கண்களை மூடிக் கொண்டான் அரசன். வெகுநாள் கழித்து மகனின் தொடுகையின் இன்பத்தை அறியும் தன்மையை அடைந்தான்.


ரகுவின் திக்விஜயம் (4.16 – 79)

वार्षिकं संजहारेन्द्रो धनुर्जैत्रं रघुर्ददौ|
प्रजार्थसाधने तौ हि पर्यायोद्यतकार्मुकौ॥

வார்ஷிகம்ʼ ஸஞ்ஜஹாரேந்த்³ரோ த⁴னுர்ஜைத்ரம்ʼ ரகு⁴ர்த³தௌ³|
ப்ரஜார்த²ஸாத⁴னே தௌ ஹி பர்யாயோத்³யதகார்முகௌ||

இந்திரன் வானவில்லைத் திரும்ப எடுத்துக் கொண்டான் (மழைக்காலம் முடிந்தது). ரகு தனது வெற்றி வில்லைக் கையில் எடுத்தான். இருவரும் மக்களின் நலனுக்காகவே மாறிமாறி வில்லெடுக்கின்றனர்.

[வானவில் மழைக்கு முன் தோன்றும். மழைக்காலம் முடிந்து விட்டால் வானவில் மறைந்து விடும். அதனை இந்திரன் நீக்கி விட்டதாக சொல்கிறார். மழைக்காலம் முடிந்த பின் ரகு வில்லைக் கையில் எடுத்தான். இந்திரனும் ரகுவும் ஒரே நோக்கத்துக்காக வில்லை கையில் எடுக்கின்றனர் – மக்களைக் காக்கவே! இந்திரன் மழை பெய்யச் செய்து மக்களைக் காக்கிறான்; ரகு தீயவர்களை அழித்து மக்களைக் காக்கிறான் என்கிறார் கவி]

हंसश्रेणीषु तारासु कुमुद्वत्सु च वारिषु|
विभूतयस्तदीयानां पर्यस्ता यशसामिव॥

ஹம்ʼஸஸ்²ரேணீஷு தாராஸு குமுத்³வத்ஸு ச வாரிஷு|
விபூ⁴தயஸ்ததீ³யானாம்ʼ பர்யஸ்தா யஸ²ஸாமிவ||

அன்னப் பறவைக் கூட்டங்களிலும், விண்மீன்களிலும், நீரில் மலர்ந்த ஆம்பல் பூக்களிலும் அவனுடைய புகழ்ச் செல்வமே பரவிக் கிடந்தது போலும்! (புகழை வெண்ணிறமுடையதாகக் கூறுவது கவி மரபு).

इक्षुच्छायनिषादिन्यस्तस्य गोप्तुर्गुणोदयम्|
आकुमारकथोद्धातं शालिगोप्यो जगुर्यशः॥

இக்ஷுச்சா²யனிஷாதி³ன்யஸ்தஸ்ய கோ³ப்துர்கு³ணோத³யம்|
ஆகுமாரகதோ²த்³தா⁴தம்ʼ ஸா²லிகோ³ப்யோ ஜகு³ர்யஸ²​:||

கரும்பின் அடர்ந்த நிழலில் அமர்ந்து நெற்பயிர் காக்கும் வேடுவப் பெண்கள், காவலனான ரகுவின் நற்புகழை குமரப் பருவம் தொடங்கிப் பாடினர்.

प्रससादोदयादम्भः कुम्भयोनेर्महौजसः|
रघोरभिभवाशङ्कि चुक्षुमे द्विषतां मनः॥

ப்ரஸஸாதோ³த³யாத³ம்ப⁴​: கும்ப⁴யோனேர்மஹௌஜஸ​:|
ரகோ⁴ரபி⁴ப⁴வாஸ²ங்கி சுக்ஷுமே த்³விஷதாம்ʼ மன​:||

ஒளிமிகும் அகஸ்திய நட்சத்திரத்தின் உதயத்தால் நீர் தெளிந்தது. ரகுவின் எழுச்சியால், அவமானத்தை எதிர்நோக்கிய எதிர்களின் மனம் கலங்கியது.

मदोदग्राः ककुद्मन्तः सरितां कूलमुद्रुजाः|
लीलाखेलमनुप्रापुर्महोक्षास्तस्य विक्रमम्॥

மதோ³த³க்³ரா​: ககுத்³மந்த​: ஸரிதாம்ʼ கூலமுத்³ருஜா​:|
லீலாகே²லமனுப்ராபுர்மஹோக்ஷாஸ்தஸ்ய விக்ரமம்||

மதங்கொண்டு, நதிக் கரைகளை முட்டி இடிக்கின்ற, பெருந்திமில் படைத்த காளைகள், ரகுவின் பராக்கிரமத்தையே அனுசரித்து அழகாக விளையாடிக் காட்டின.
[காளைகள் மண்மேடுகளை எப்படி உற்சாகத்துடன் மோதுகின்றனவோ அவ்வாறே பகைவருடன் மோதுவதில் ரகுவும் உற்சாகம் கொண்டவனாம்]

सरितः कुर्वती गाधाः पथश्चाश्यानकर्दमान्|
यात्रायै चोदयामास तं शक्तेः प्रथमं शरत्॥

ஸரித​: குர்வதீ கா³தா⁴​: பத²ஸ்²சாஸ்²யானகர்த³மான்|
யாத்ராயை சோத³யாமாஸ தம்ʼ ஸ²க்தே​: ப்ரத²மம்ʼ ஸ²ரத்||

நதிகளை ஆழமற்றதாக்கி, வழிகளின் சேற்றை உலர்த்தி, ரகுவின் உற்சாகத்திற்கும் முன்னாகச் சென்று அவனை யுத்த யாத்திரைக்குத் தூண்டியது போலும் சரத்காலம்!

तस्मै सम्यग्घुतो वह्निर्वाजिनीराजनाविधौ|
प्रदक्षिणार्चिर्व्याजेन हस्तेनेव जयं ददौ॥

தஸ்மை ஸம்யக்³கு⁴தோ வஹ்னிர்வாஜினீராஜனாவிதௌ⁴|
ப்ரத³க்ஷிணார்சிர்வ்யாஜேன ஹஸ்தேனேவ ஜயம்ʼ த³தௌ³||

வாஜி நீராஜனச் சடங்கில் (குதிரைகளுக்கு ஆரத்தி எடுத்தல்) மகிழ்ந்த அக்னி, வலப்புறம் சுழித்த சுடர்க்கையினால் அவனுக்கு வெற்றியை அருளினான் போலும்!

अवाकिरन्वयोवृद्धास्तं लाजैः पौरयोषितः|
पृषतैर्मन्दरोद्भूतैः क्षीरोर्मय इवाच्युतम्॥

அவாகிரன்வயோவ்ருʼத்³தா⁴ஸ்தம்ʼ லாஜை​: பௌரயோஷித​:|
ப்ருʼஷதைர்மந்த³ரோத்³பூ⁴தை​: க்ஷீரோர்மய இவாச்யுதம்||

மந்தர மலையை இட்டதால் பாற்கடலின் அலைகள் தளும்பித் தெளிப்பது போல, நகர மூதாட்டிகள் அவன் மீது பொரிகளைத் தூவினர்.
[இங்கே ரகு மகாவிஷ்ணுவுடன் உவமிக்கப் படுகிறார். பாற்கடல் கடைந்த போது மகாவிஷ்ணு லட்சுமியை அடைந்தது போல, ரகு வெற்றி என்னும் விஜய லட்சுமியை அடைவதாக உவமானம்]

रजोभिः स्यन्दनोद्धूतैर्गजैश्च घनसंनिभैः|
भुवस्तलमिव व्योम कुर्वन्व्योमेव भूतलम्॥

ரஜோபி⁴​: ஸ்யந்த³னோத்³தூ⁴தைர்க³ஜைஸ்²ச க⁴னஸம்ʼனிபை⁴​:|
பு⁴வஸ்தலமிவ வ்யோம குர்வன்வ்யோமேவ பூ⁴தலம்||

தேர்கள் கிளப்பிய புழுதியால் ஆகாயம் மண்ணாயிற்று. மேகங்களை ஒத்த யானைகள் மண்மீது நடந்து சென்று பூமியை ஆகாயமாக்கின.
[படையெடுப்பின் போது மண்துகள் நிறைந்ததால் ஆகாயம் பூமியைப் போல இருந்தது. பூமியோ பெரிய மேகங்களைப் போல யானைகள் நடந்து செல்ல, ஆகாயம் போல தோன்றியது]

स सेनां महतीं कर्षन्पूर्वसागरगामिनीम्|
बभौ हरजटाभ्रष्टां गङ्गामिव भगीरथः॥

ஸ ஸேனாம்ʼ மஹதீம்ʼ கர்ஷன்பூர்வஸாக³ரகா³மினீம்|
ப³பௌ⁴ ஹரஜடாப்⁴ரஷ்டாம்ʼ க³ங்கா³மிவ ப⁴கீ³ரத²​:||

சிவனாரின் செஞ்சடையினின்று நழுவும் கங்கை நதியை கீழ்க்கடலை நோக்கி அழைத்துச் செல்லும் பகீரதன் போல், ரகு தன் சேனைக் கடலைக் கிழக்கு நோக்கி அழைத்துச் சென்றான்.

त्याजितैः फलमुत्खातैर्भग्नैश्च बहुधा नृपैः|
तस्यासीदुल्बणो मार्गः पादपैरिव दन्तिनः॥

த்யாஜிதை​: ப²லமுத்கா²தைர்ப⁴க்³னைஸ்²ச ப³ஹுதா⁴ ந்ருʼபை​:|
தஸ்யாஸீது³ல்ப³ணோ மார்க³​: பாத³பைரிவ த³ந்தின​:||

செல்வம் துறந்த, பதவி இழந்த, தோல்வியடைந்த மன்னர்கள் நிரம்பிய ரகுவின் வழி, தெளிவானதாக இருந்தது – பழங்கள் உதிர்ந்து, வேர்கள் பறிக்கப் பட்டு, மரங்கள் முறிந்த யானையின் பாதை போல.

आपादपद्मप्रणताः कलमा इव ते रघुम्|
फलैः संवर्धयामासुरुत्खातप्रतिरोपिताः॥

ஆபாத³பத்³மப்ரணதா​: கலமா இவ தே ரகு⁴ம்|
ப²லை​: ஸம்ʼவர்த⁴யாமாஸுருத்கா²தப்ரதிரோபிதா​:||

நாற்றாங்காலில் பெயர்த்து நடப்பட்டு, தங்கள் வேரடியில் நிற்கும் தாமரை வரையில் வணங்கித் தாழும் நெற்கதிர்கள் போல, போரில் தோற்ற பின் தங்கள் அரசபதவிகளைப் பெற்ற வங்கதேச மன்னர்கள், ரகுவின் மலரடி வணங்கி அவனுக்கு செல்வமளித்து வளர்த்தனர்.

स प्रतापं महेन्द्रस्य मूर्ध्नि तीक्ष्णं न्यवेशयत्|
अङ्कुशं द्विरदस्येव यन्ता गम्भीरवेदिनः॥

ஸ ப்ரதாபம்ʼ மஹேந்த்³ரஸ்ய மூர்த்⁴னி தீக்ஷ்ணம்ʼ ந்யவேஸ²யத்|
அங்குஸ²ம்ʼ த்³விரத³ஸ்யேவ யந்தா க³ம்பீ⁴ரவேதி³ன​:||

கம்பீரவேதி என்ற யானையின் தலையில் பாகன் செலுத்திய கூரான அங்குசம் போல, மகேந்திர மலையின் சிகரத்தில் தனது தீட்சண்யமான பராக்கிரமத்தை ரகு நாட்டினான்.
[அடிபட்டும் தன்னைப் பற்றிய உணர்வில்லாது மதம் கொண்ட யானைக்கு கம்பீரவேதி என்று பெயர்]

गृहीतप्रतिमुक्तस्य स धर्मविजयी नृपः|
श्रियं महेन्द्रनाथस्य जहार न तु मेदिनीम्॥

க்³ருʼஹீதப்ரதிமுக்தஸ்ய ஸ த⁴ர்மவிஜயீ ந்ருʼப​:|
ஸ்²ரியம்ʼ மஹேந்த்³ரனாத²ஸ்ய ஜஹார ந து மேதி³னீம்||

தர்மவிஜயியான* அவ்வரசன், மகேந்திர மன்னனை சிறைப்பிடித்து, பின்னர் விடுவித்தான். அவனிடமிருந்த திருவை (செல்வத்தை) மட்டும் கவர்ந்து கொண்டான்; நிலமகளைத் (பூமியை) தொடவில்லை. (* வெற்றி கொள்ளும் அரசர் மூவகைப் படுவர் – தர்மவிஜயி, லோபவிஜயி, அசுரவிஜயி)

स सैन्यपरिभोगेण गजदानसुगन्धिना|
कावेरीं सरितां पत्युः शङ्कनीयामिवाकरोत्॥

ஸ ஸைன்யபரிபோ⁴கே³ண க³ஜதா³னஸுக³ந்தி⁴னா|
காவேரீம்ʼ ஸரிதாம்ʼ பத்யு​: ஸ²ங்கனீயாமிவாகரோத்||

யானையின் மதநீர் வாசனை பெருக, ரகுவின் சேனை களியாட்டமிட்ட காவேரி, கணவனான சமுத்திரராஜனின் சந்தேகத்திற்கு உள்ளானாள்.
[நதியை கடலின் மனைவியாக உவமை கூறுகிறார். ரகுவிடம் ஏராளமான யானைகள் இருந்தபடியால், அவற்றின் மதஜலம் நதிநீரில் கலந்து நதி முழுவதுமே மதநீர் மணம் வீசியது. அதோடு பல நாட்கள் காவிரி நதிக்கரையில் ரகு தன் படையுடன் தங்கி இருந்ததும் உணர்த்தப் படுகிறது]

बलैरध्युषितास्तस्य विजिगीषोर्गतध्वनः|
मारीचोद्भ्रान्तहारीता मलयाद्रेरुपत्यकाः॥

ப³லைரத்⁴யுஷிதாஸ்தஸ்ய விஜிகீ³ஷோர்க³தத்⁴வன​:|
மாரீசோத்³ப்⁴ராந்தஹாரீதா மலயாத்³ரேருபத்யகா​:||

வெகுதூரம் கடந்து வந்த அந்த வெற்றிவீரனின் சேனை, கிளிகள் திரியும் மிளகுக் காடுகள் கொண்ட மலயகிரியின் சரிவுகளில் தங்கிற்று.

ससञ्जुरश्वक्षुण्णानमेलानामुत्पतिष्णवः|
तुल्यगन्धिषु मत्तेभकटेषु फलरेणवः॥

ஸஸஞ்ஜுரஸ்²வக்ஷுண்ணானமேலானாமுத்பதிஷ்ணவ​:|
துல்யக³ந்தி⁴ஷு மத்தேப⁴கடேஷு ப²லரேணவ​:||

அங்கு, குதிரைகள் நசுக்கிய ஏலச்செடிகளின் காய்ந்த துகள்கள் மேலே கிளம்பி, ஒத்த மணங்கொண்ட மதநீர் சொரியும் யானைகளின் கன்னங்களில் சென்று படிந்தன.

भोगिवेष्टनमार्गेषु चन्दनानां समर्पितम्|
नास्रसत्करिणां ग्रैवं त्रिपदीच्छेदिनामपि॥

போ⁴கி³வேஷ்டனமார்கே³ஷு சந்த³னானாம்ʼ ஸமர்பிதம்|
நாஸ்ரஸத்கரிணாம்ʼ க்³ரைவம்ʼ த்ரிபதீ³ச்சே²தி³னாமபி||

கால் சங்கிலிகளை அறுக்கும் கம்பீரமான யானைகள், கட்டிய கயிற்றைக் கூட நழுவ விடாமல், சந்தன மரக் காட்டில் பாம்புகள் சுற்றிய பள்ளங்களில் நின்றன.

दिशि मन्दायते तेजो दक्षिणस्यां रवेरपि|
तस्यामेव रघोः पाण्ड्याः प्रतापं न विषेहिरे॥

தி³ஸி² மந்தா³யதே தேஜோ த³க்ஷிணஸ்யாம்ʼ ரவேரபி|
தஸ்யாமேவ ரகோ⁴​: பாண்ட்³யா​: ப்ரதாபம்ʼ ந விஷேஹிரே||

தெற்கு திசையில் செல்கையில் கதிரவனின் ஒளிகூட சற்று குறைந்து விடுகிறது. ஆனால் அத்திக்கிலும், ரகுவின் பிரதாபத்தை பாண்டியர்கள் தாங்கவில்லை.

[தக்ஷிணாயன காலத்தில் (ஆடி – தை வரை) தெற்கு திசையில் தோன்றும் சூரியன் சற்று ஒளி குன்றி இருப்பது இயல்பு. இங்கே கவி அதை சாதுர்யமாக, வீரம் மிகுந்த பாண்டியர்களுக்கு அஞ்சி சூரியனும் (பாண்டியர்கள் சந்திர குலம்), தன் ஒளியை குறைந்தவனாக இருக்கிறான்; ஆனால் அந்த பாண்டியரே ரகுவின் போர் திறனை தாங்கவில்லை என்கிறார்]

ताम्रपर्णीसमेतस्य मुक्तासारं महादधेः|
ते निपत्य ददुस्तस्मै यशः स्वमिव संचितम्॥

தாம்ரபர்ணீஸமேதஸ்ய முக்தாஸாரம்ʼ மஹாத³தே⁴​:|
தே நிபத்ய த³து³ஸ்தஸ்மை யஸ²​: ஸ்வமிவ ஸஞ்சிதம்||

தாங்கள் சேர்த்துவைத்த புகழைக் கொடுப்பது போல், தாமிரபர்ணி சேரும் கடல் தந்த முத்துக் குவியலை ரகுவின் அடிபணிந்து அவர்கள் அளித்தனர்.

भयोत्सृष्टविभूषाणां तेन केरलयोषिताम्|
अलकेषु चमूरेणुश्चूर्णप्रतिनिधीकृतः॥

ப⁴யோத்ஸ்ருʼஷ்டவிபூ⁴ஷாணாம்ʼ தேன கேரலயோஷிதாம்|
அலகேஷு சமூரேணுஸ்²சூர்ணப்ரதினிதீ⁴க்ருʼத​:||

ரகுவின் சேனை எழுப்பிய புழுதி, பயத்தினால் தங்கள் அணிகளைத் துறந்த கேரள நாட்டு மகளிரின் முன்னுச்சிக் கேசங்களுக்கு நறுமணப் பொடியாயிற்று.

मुरलामारुतोद्धूतमगमत्कैतकं रजः|
तद्योधवारबाणानामयत्नपटवासताम्॥

முரலாமாருதோத்³தூ⁴தமக³மத்கைதகம்ʼ ரஜ​:|
தத்³யோத⁴வாரபா³ணானாமயத்னபடவாஸதாம்||

முரளா நதியில் வீசிய காற்று கொணர்ந்த தாழம்பூவின் மகரந்தம் படைவீரர்களின் மேலுடையில் படிந்து முயற்சியின்றிக் கிடைத்த ஆடை-வாசனைப் பொடியாயிற்று.

अभ्यभूयत वाहानां चरतां गात्रशिञ्जितैः|
वर्मभिः पवनोद्धूतराजतालीवनध्वनिः॥

அப்⁴யபூ⁴யத வாஹானாம்ʼ சரதாம்ʼ கா³த்ரஸி²ஞ்ஜிதை​:|
வர்மபி⁴​: பவனோத்³தூ⁴தராஜதாலீவனத்⁴வனி​:||

கவசமணிந்த குதிரைகள் எழுப்பிய பேரொலி, அங்கு காற்றிலசையும் பெரும் பனங்காட்டு மரங்களின் சலசலப்பையும் தோற்கடிப்பதாயிருந்தது.

குதிரைகள்

यवनीमुखपद्मानां सेहे मधुमदं न सः|
बालातपमिवाब्जानामकालजलदोदयः ॥

யவனீமுக²பத்³மானாம்ʼ ஸேஹே மது⁴மத³ம்ʼ ந ஸ​:|
பா³லாதபமிவாப்³ஜானாமகாலஜலதோ³த³ய​: ||

அகாலத்தில் தோன்றும் மேகம் தாமரை மலர்கள் இளவெயிலில் களிப்பதை சகிக்காதது போல, யவன மகளிரின் முகத்தாமரைகளுக்கு உண்டாகும் மதுமயக்கத்தை ரகு சகிக்கவில்லை.

ततो गौरीगुरुं शैलमारुरोहाश्वसाधनः|
वर्धयन्निव तत्कूटानुद्धूतैर्धातुरेणुभिः॥

ததோ கௌ³ரீகு³ரும்ʼ ஸை²லமாருரோஹாஸ்²வஸாத⁴ன​:|
வர்த⁴யன்னிவ தத்கூடானுத்³தூ⁴தைர்தா⁴துரேணுபி⁴​:||

குதிரைகளை மட்டுமே கொண்டு ரகு இமய மலைமீது ஏறுகையில், அங்கு கிளம்பிய தாதுப் பொடிகளால் அந்தச் சிகரங்கள் வளர்வது போலத் தோன்றின.

सरलासक्तमातङ्गग्रैवेयस्फुरितत्विषः|
आसन्नोषधयो नेतुर्नक्तमस्नेहदीपिकाः॥

ஸரலாஸக்தமாதங்க³க்³ரைவேயஸ்பு²ரிதத்விஷ​:|
ஆஸன்னோஷத⁴யோ நேதுர்னக்தமஸ்னேஹதீ³பிகா​:||

சரள மரங்களில் கட்டிய யானைகளின் கழுத்துச் சங்கிலியில் பிரதிபலித்த ஒளிவீசும் செடிகள் தலைவனான ரகுவிற்கு இரவிலேயே எண்ணையில்லா விளக்குகளாக வழிகாட்டின.

परस्परेण विज्ञातस्तेषूपायनपाणिषु|
राज्ञा हिमवतः सारो राज्ञः सारो हिमाद्रिणा॥

பரஸ்பரேண விஜ்ஞாதஸ்தேஷூபாயனபாணிஷு|
ராஜ்ஞா ஹிமவத​: ஸாரோ ராஜ்ஞ​: ஸாரோ ஹிமாத்³ரிணா||

(இமயமலையில் வசித்த) அக்கூட்டத்தினர் கையில் காணிக்கைகளை ஏந்தியவராக நின்றனர். அரசன் இமயத்தின் செல்வத்தை அறிந்தான். இமயம் அரசனின் (வீரச்) செல்வத்தை அறிந்தது.


இந்துமதி இறந்ததும், அஜன் புலம்பல் (8.36 – 67)

[இந்துமதியும் அஜனும் சோலையில் இருக்கையில், வான்வழிச் செல்லும் நாரத முனிவரின் வீணையில் இருந்து உதிர்ந்த மாலை இந்துமதி மீது விழ, ஒரு சாபத்தின் காரணாக, உடனே அவள் இறந்து விடுகிறாள்].

अभिभूय विभूतिमार्तवीम् मधुगन्धातिशयेन वीरुधाम्|
नृपतेरमरस्रगाप सा दयितोरुस्तनकोटिसुस्थितीम्॥

அபி⁴பூ⁴ய விபூ⁴திமார்தவீம் மது⁴க³ந்தா⁴திஸ²யேன வீருதா⁴ம்|
ந்ருʼபதேரமரஸ்ரகா³ப ஸா த³யிதோருஸ்தனகோடிஸுஸ்தி²தீம்||

அந்த தெய்வ மாலை, தேனும் நறுமணமும் திகழும் சோலைக் கொடிகளில் மலர்ந்த வசந்தகாலப் பூக்களின் அழகை நிராகரித்து, மன்னனது மனைவியின் செழித்த முலைகளின் நுனியில் சென்று பொருந்தியது.

क्षणमात्रसखीम् सुजातयोः स्तनयोस्तामवलोक्य विह्वला|
निमिमील नरोत्तमप्रिया हृतचन्द्रा तमसेव कौमुदी॥

க்ஷணமாத்ரஸகீ²ம் ஸுஜாதயோ​: ஸ்தனயோஸ்தாமவலோக்ய விஹ்வலா|
நிமிமீல நரோத்தமப்ரியா ஹ்ருʼதசந்த்³ரா தமஸேவ கௌமுதீ³||

எழிலுற எழுந்த முலைகளுக்கு ஒரு கணம் முன்பு கிடைத்த தோழியான அவளை (மாலையை) பார்த்து தன்வசமிழந்தாள் இந்துமதி. ராகு கவர்ந்த சந்திரன் போல கண்மூடினாள்.

वपुषा करणोज्झितेन सा निपतन्ती पतिमप्यपातयत्|
ननु तैलनिषेकबिन्दुना सह दीपार्चिरुपैति मेदिनीम्॥

வபுஷா கரணோஜ்ஜி²தேன ஸா நிபதந்தீ பதிமப்யபாதயத்|
நனு தைலனிஷேகபி³ந்து³னா ஸஹ தீ³பார்சிருபைதி மேதி³னீம்||

உணர்வு நீங்கிய உடலுடன் கீழே விழுகின்ற அவள், கணவனையும் வீழ்த்தினாள்*. கீழே சிந்தும் எண்ணெய்த் துளியுடன் கூட, விளக்கின் சுடரும் மண்ணில் வீழுமன்றோ? (* அஜன் மயங்கி விழுந்தான்)

प्रतियोजयितव्यवल्लकीसमवस्थामथ सत्त्वविप्लवात्|
स निनाय नितान्तवत्सलः परिगृह्योचितमङ्कमङ्गनाम्॥

ப்ரதியோஜயிதவ்யவல்லகீஸமவஸ்தா²மத² ஸத்த்வவிப்லவாத்|
ஸ நினாய நிதாந்தவத்ஸல​: பரிக்³ருʼஹ்யோசிதமங்கமங்க³னாம்||

தந்தி தளர்ந்து அறுந்த வீணையைப் போலக் கிடந்த அழகியை, அளவற்ற அன்புகொண்ட அவன் எடுத்து அவள் பழகிய மடியில் வைத்துக் கொண்டான்.

विललाप स बाष्पगद्गदम् सहजामप्यपहाय धीरताम्|
अभितप्तमयोऽपि मार्दवम् भजते कैव कथा शरीरिषु॥

விலலாப ஸ பா³ஷ்பக³த்³க³த³ம் ஸஹஜாமப்யபஹாய தீ⁴ரதாம்|
அபி⁴தப்தமயோ(அ)பி மார்த³வம் ப⁴ஜதே கைவ கதா² ஸ²ரீரிஷு||

அவன் தனக்குரிய இயல்பான தீரத்தையும் விட்டு கண்ணீரினால் தழுதழுத்த குரலில், புலம்பலானான். நன்கு காய்ச்சிய இரும்பும் மென்மையை அடைகிறது. எனின், மனிதரைப் பற்றி என்ன சொல்வது?

कुसुमान्यपि गात्रसंगमात्प्रभवन्त्यायुरपोहितुम् यदि|
न भविष्यति हन्त साधनम् किमिवान्यत्प्रहरिष्यतो विधेः॥

குஸுமான்யபி கா³த்ரஸங்க³மாத்ப்ரப⁴வந்த்யாயுரபோஹிதும் யதி³|
ந ப⁴விஷ்யதி ஹந்த ஸாத⁴னம் கிமிவான்யத்ப்ரஹரிஷ்யதோ விதே⁴​:||

மலர்களும் கூட உடல்மீது விழுந்து உயிர் போகக் கூடுமோ? அந்தோ, அழிக்கத் துணிந்த விதிக்கு எப்பொருள் தான் கருவியாகாது?

अथवा मृदु वस्तु हिंसितुम् मृदुनैवारभते प्रजान्तकः|
हिमसेकविपत्तिरत्र मे नलिनी पूर्वनिदर्शनम् मता॥

அத²வா ம்ருʼது³ வஸ்து ஹிம்ʼஸிதும் ம்ருʼது³னைவாரப⁴தே ப்ரஜாந்தக​:|
ஹிமஸேகவிபத்திரத்ர மே நலினீ பூர்வனித³ர்ஸ²னம் மதா||

பனித்துளி வீழ்ந்ததும் தாமரை அழிகிறது. அந்தகன் மெல்லியலை மெல்லியலாலேயே கொல்லத் துணிந்தானோ?

स्रगियम् यदि जीवितापहा हृदये किम् निहिता न हन्ति माम्|
विषमप्यमृतम् क्वचिद्भवेदमृतम् वा विषमीश्वरेच्छया॥

ஸ்ரகி³யம் யதி³ ஜீவிதாபஹா ஹ்ருʼத³யே கிம் நிஹிதா ந ஹந்தி மாம்|
விஷமப்யம்ருʼதம் க்வசித்³ப⁴வேத³ம்ருʼதம் வா விஷமீஸ்²வரேச்ச²யா||

இந்த மாலை உயிரைக் கவரும் இயல்புடையதானால், இதனை மார்பில் சூடிக் கொண்டும் என்னை ஏன் கொல்லவில்லை? தெய்வத்தின் இச்சையால், சில போது விஷமும் அமுதமாகும். அமுதமும் விஷமாகுமோ?

अथवा मम भाग्यविप्लवादशनिः कल्पित एव वेधसा|
यदनेन तरुर्न पातितः क्षपिता तद्विटपाश्रिता लता॥

அத²வா மம பா⁴க்³யவிப்லவாத³ஸ²னி​: கல்பித ஏவ வேத⁴ஸா|
யத³னேன தருர்ன பாதித​: க்ஷபிதா தத்³விடபாஸ்²ரிதா லதா||

என்ன துர்ப்பாக்கியம்! இம்மாலையை தெய்வம் இடியாகக் கற்பித்து விட்டது. இந்த இடியால் மரம் வீழவில்லை, அதைச் சுற்றியிருந்த கொடி மட்டும் அழிந்து விட்டதே.

कुसुमोत्खचितान्वलीभृतश्चलयन्भृङ्गरुचस्तवालकान्|
करभोरु करोति मारुतस्त्वदुपावर्तनशङ्कि मे मनः॥

குஸுமோத்க²சிதான்வலீப்⁴ருʼதஸ்²சலயன்ப்⁴ருʼங்க³ருசஸ்தவாலகான்|
கரபோ⁴ரு கரோதி மாருதஸ்த்வது³பாவர்தனஸ²ங்கி மே மன​:||

அழகி, வண்டுகள் போன்று நிறமுடைய, மலர்கள் சூடிய, உன் சுருண்ட முன்னெற்றிக் கூந்தலைக் காற்று அசைக்கிறதே. நீ உயிரோடு எழுவாய் என்று எனக்கு அது நம்பிக்கை ஊட்டுகிறதோ?

इदमुच्छ्वसितालकम् मुखम् तव विश्रान्तकथम् दुनोति माम्|
निशि सुप्तमिवैकपङ्कजम् विरताभ्यन्तरषट्पदस्वनम्॥

இத³முச்ச்²வஸிதாலகம் முக²ம் தவ விஸ்²ராந்தகத²ம் து³னோதி மாம்|
நிஸி² ஸுப்தமிவைகபங்கஜம் விரதாப்⁴யந்தரஷட்பத³ஸ்வனம்||

அந்த ஒப்பற்ற ஒற்றைத் தாமரை இரவில் கூம்புகிறது. உள்ளே வண்டுகளின் ஒலி நின்று விட்டது. கலைந்த கூந்தலோடு, பேச்சடங்கிய உன் முகம்!

इयमप्रतिबोधशायिनीम् रशना त्वाम् प्रथमा रहःसखी|
गतिविभ्रमसादनीरवा न शुचा नानु मृतेव लक्ष्यते॥

இயமப்ரதிபோ³த⁴ஸா²யினீம் ரஸ²னா த்வாம் ப்ரத²மா ரஹ​:ஸகீ²|
க³திவிப்⁴ரமஸாத³னீரவா ந ஸு²சா நானு ம்ருʼதேவ லக்ஷ்யதே||

உனது முதல் அந்தரங்கத் தோழி இந்த மேகலை. அழகிய நடையழிந்து, ஒலி இழந்து போயிற்று. அதுவும் உன்னுடனே சோகத்தால் இறந்து விட்டதோ?

कुसुमम् कृतदोहदस्त्वया यदशोकोऽयमुदीरयिष्यति|
अलकाभरणम् कथम् नु तत्तव नेष्यामि निवापमाल्यताम्॥

குஸுமம் க்ருʼததோ³ஹத³ஸ்த்வயா யத³ஸோ²கோ(அ)யமுதீ³ரயிஷ்யதி|
அலகாப⁴ரணம் கத²ம் நு தத்தவ நேஷ்யாமி நிவாபமால்யதாம்||

நீ இந்த அசோகமரத்தை உன் மெல்லியகால்களால் உதைத்தாய். இது பூக்கப் போகிறது. உன் கூந்தலுக்கு அணிகலனாக வேண்டிய அம்மலரை, ஐயோ, எப்படி உனக்கு தர்ப்பண புஷ்பமாகத் தருவேன்?

गृहिणी सचिवः सखी मिथः प्रियशिष्या ललिते कलाविधौ|
करुणाविमुखेन मृत्युना हरता त्वाम् वद किम् न मे हृतम्॥

க்³ருʼஹிணீ ஸசிவ​: ஸகீ² மித²​: ப்ரியஸி²ஷ்யா லலிதே கலாவிதௌ⁴|
கருணாவிமுகே²ன ம்ருʼத்யுனா ஹரதா த்வாம் வத³ கிம் ந மே ஹ்ருʼதம்||

நீ எனக்கு மனைவியாக, மந்திரியாக இருந்தாய். தனிமையில் துணையாகவும், கலைகளைக் கற்கையில் அன்பான மாணவியாகவும் இருந்தாய். கருணையற்ற யமன் எனது எப்பொருளைத் தான் அபகரிக்கவில்லை?

मदिराक्षि मदाननार्पितम् मधु पीत्वा रसवत्कथम् नु मे|
अनुपास्यसि बाष्पदूषितम् परलोकोपनतम् जलाञ्जलिम्॥

மதி³ராக்ஷி மதா³னனார்பிதம் மது⁴ பீத்வா ரஸவத்கத²ம் நு மே|
அனுபாஸ்யஸி பா³ஷ்பதூ³ஷிதம் பரலோகோபனதம் ஜலாஞ்ஜலிம்||

நான் வாய்வழி தரும் இனிய மதுவையே பருகி மயக்கும் விழியாளே, என் கண்ணீரும் கலந்து நான் கைகளால் தரும் தர்ப்பண நீரை மறுவுலகில் எப்படிப் பருகுவாய்?

8 Comments ரகுவம்சம் – சில பாடல்கள்

 1. krishna kumar

  \\\\\\\\அகாலத்தில் தோன்றும் மேகம் தாமரை மலர்கள் இளவெயிலில் களிப்பதை சகிக்காதது போல, யவன மகளிரின் முகத்தாமரைகளுக்கு உண்டாகும் மதுமயக்கத்தை ரகு சகிக்கவில்லை.\\\\\\\

  இதில் யவன மகளிர் என்ற சொல் குழப்புகிறதே

 2. संस्कृतप्रिय:

  //இதில் யவன மகளிர் என்ற சொல் குழப்புகிறதே//

  ரகு பாரசீகத்தின் மீது படை எடுக்கிறார். அங்கே உள்ள பெண்களை கவி யவன மகளிர் என்றும் அவர் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் என்பதாலேயே ரகு அங்கே படைஎடுக்கிறார் என்றும் கவித்துவமாக கூறுகிறார்.

 3. ஜடாயு

  //இதில் யவன மகளிர் என்ற சொல் குழப்புகிறதே//

  ரகுவின் சரிதத்தை ராமாயணத்திலிருந்து எடுத்துக் கொண்டாலும், தனது சமகால வர்ணனைகளையும் சேர்த்து தான் காளிதாசர் எழுதியிருக்கிறார்.. இந்தியாவின் வடமேற்குப் பகுதி எல்லையில் வாழ்ந்த அனைத்து இனத்தினரையும் யவனர் என்றே குறிப்பிடும் வழக்கு அப்போது இருந்தது..

  // அவர் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் என்பதாலேயே ரகு அங்கே படைஎடுக்கிறார் என்றும் கவித்துவமாக கூறுகிறார்.//

  இல்லை, அதன் அர்த்தம் அதுவல்ல.

  ”அகாலத்தில் தோன்றும் மேகம் தாமரை மலர்கள் இளவெயிலில் களிப்பதை சகிக்காதது போல, யவன மகளிரின் முகத்தாமரைகளுக்கு உண்டாகும் மதுமயக்கத்தை ரகு சகிக்கவில்லை.”

  அதாவது, சாதாரண சமயங்களில் யவன மகளிர் மதுவுண்டு களிப்பில் ஆழ்ந்திருப்பார்கள்.. ரகுவின் படையெடுப்பினால், போர்க்காலத்தில் அவ்வாறு செய்ய முடியவில்லை.. இதைத் தான் ”அவர்களது மதுமயக்கத்தை ரகு சகிக்கவில்லை” என்று கவி கூறுகிறார்.

  மற்றபடி, மகளிர் மது அருந்திக் களிப்பதை ரகுவோ, அல்லது காளிதாசனோ ஒழுக்கப் பிரசினையாக கருதவில்லை.. நீங்கள் அப்படி எடுத்துக் கொள்வது போல தெரிகிற்து :))

  அஜன் புலம்பலில் கடைசி பாடலைப் பாருங்கள் – ”நான் வாய்வழி தரும் இனிய மதுவையே பருகி மயக்கும் விழியாளே”

 4. க்ருஷ்ணகுமார்

  “யவன” என்ற பதத்துடன் “ரகுவின் படையெடுப்பு” என்பதும் மேலே சில சம்சயங்களையெழுப்புகிறது

  \\\\\\\\இந்தியாவின் வடமேற்குப் பகுதி எல்லையில் வாழ்ந்த அனைத்து இனத்தினரையும் யவனர் என்றே குறிப்பிடும் வழக்கு அப்போது இருந்தது..\\\\\\

  இது இலக்கியக்குறிப்புகளின் ஆதாரத்திலமைந்த யூகமா?

  “ம்லேச்ச” என்ற பதத்திற்கு “யவன” என்ற பதம் ஸமானாந்தர பதமா?

  கண்ணனை யவனன் பின்தொடர்ந்ததும் பின் முசுகுந்தயோகியால் யவனன் பொசுக்கப்பட்டதும் பாகவத புராணம். இதில் “யவன” என்ற சொல்லால் குறிக்கப்படுபவன் யார்?

  புராணங்களில் சொல்லப்படும் ராஜவம்ச வர்ணனையின் ப்ரகாரம் அம்பரீஷ சக்ரவர்த்தியின் காலம் மற்றும் ரகுவின் காலம் முன்பின்னானதா. ஸ்ரீமத் பாகவதம் அம்பரீஷனைப் பற்றி குறிப்பிடுகையில்

  “அம்பரீஷோ மஹாபாக: ஸப்தத்வீபவதிம் மஹிம்
  அவ்யயஞ்ச ச்ரியம் லப்த்வா விபவஞ்ச அதுலம் புவி”

  ஆக முழு பூமண்டலத்திற்கும் ஏக சக்ரவர்த்தியாக அம்பரீஷன் சொல்லப்படுகிறான். ரகுவின் காலத்தில் இன்னொரு தேசத்தின் மீது (எக்காரணத்திற்க்காக இருப்பினும்) படையெடுக்கப்படுவது என்றால் ஏகசக்ராதிபத்யம் இல்லையென்றாகிறது.

 5. T.Venkatesa gurukkal

  பொக்கிஷமான தொடர்.பாராட்ட வார்த்தைகளே இல்லை.இதுபோல சம்பூராமாயணம்…போன்ற கத்ய நடையில் உள்ள காவ்யங்களையும் தமிழ் அன்வயத்துடன் விளக்கினால் எங்களுக்கு அம்ருதமாக இருக்கும்.எங்கள் அபிலாஷை பூர்த்தி ஆகுமா?

 6. ஜடாயு

  // “ம்லேச்ச” என்ற பதத்திற்கு “யவன” என்ற பதம் ஸமானாந்தர பதமா? //

  ம்லேச்ச என்ற பதம் பிற்காலத்தில் எல்லா அய்ல்நாட்டாரையும் குறித்தது – சகர்கள், ஹூணர்கள், டார்டார்கள், பலூச்சிகள், அரேபியர்கள்..

  கிரேக்கர்களை, பாரசீகர்களை பொதுவாக யவனர் என்ற சொல்லால் குறித்தார்கள் என்று கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.. பிற்கால வரையறைப் படி இவர்கள் மிலேச்சர்களே..

  காளிதாச காவியங்களில் மிலேச்ச என்ற பதம் இல்லை.

  // கண்ணனை யவனன் பின்தொடர்ந்ததும் பின் முசுகுந்தயோகியால் யவனன் பொசுக்கப்பட்டதும் பாகவத புராணம். இதில் “யவன” என்ற சொல்லால் குறிக்கப்படுபவன் யார்? //

  கால யவனன் அந்த அசுரன் பெயர்.. அது ஒரு பிற்காலப் புராணக் கதையாக இருக்கலாம் – அசுரனுக்கு யவன என்று பெயர் வைக்கப் பட்டிருக்கலாம்.

  // புராணங்களில் சொல்லப்படும் ராஜவம்ச வர்ணனையின் ப்ரகாரம் அம்பரீஷ சக்ரவர்த்தியின் காலம் மற்றும் ரகுவின் காலம் முன்பின்னானதா //

  புராணங்களின் கால வரையறை & வம்ச காதைகள் வரலாற்று ரீதியாக துல்லியமானவை அல்ல..
  அம்பரீஷன் பற்றி ரகுவம்சத்தில் வருகிறதா என்ன? நினைவில்லையே.

  // ரகுவின் காலத்தில் இன்னொரு தேசத்தின் மீது (எக்காரணத்திற்க்காக இருப்பினும்) படையெடுக்கப்படுவது என்றால் ஏகசக்ராதிபத்யம் இல்லையென்றாகிறது. //

  எல்லா சக்ரவர்த்திகளும் பூமண்டலம் முழுவதும் அரசாண்டதாக சமத்காரமாக கூறுவது புராண கவிமரபு,.
  திக்விஜயம் என்பதே ஒவ்வொரு தேசங்களாகச் சென்று வெற்றி கொள்வது தானே? ஆனால், இந்தப் படையெடுப்புகள் அழிவு சார்ந்தவை அல்ல..

  இதே தொகுப்பில் உள்ள ஒரு சுலோகத்தில் ரகு “தர்ம விஜயி” என்று குறிக்கப் படுவதை நோக்க வேண்டும்.
  தர்ம விஜயி – வெற்றி கொண்ட பின் அடையாளமாக சில பொருட்களை எடுத்துக் கொண்டு நாட்டையும் செல்வத்தையும் தோற்ற மன்னனுக்கே திருப்பித் தருவது
  லோப விஜயி – செல்வங்களை எடுத்துக் கொண்டு நாட்டை மட்டும் தோற்றவனுக்குத் தருவது
  அசுர விஜயி – எல்லாவற்றையும் அபகரித்துக் கொள்வது..

 7. anant kulkarni

  ಅನಂತ್ ಪಂಧರಿ ನಾಥ್ ಕುಲಕರ್ಣಿ ಅಣ್ಣ ಮಂದಿರ್ ಸೋಲಾಪುರ್
  అనంత పంధరినాథ్ కులకర్ణి అన్న మందిర్ సోలాపూర్
  అ ఆ ఐ ఈ ఉ ఎ ఐ ఓ ఔ ఆ అం ఆహ
  అది శంకరాచార్య

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)