பர்த்ருஹரியின் நன்மொழிகள் – 1

ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், இன்னா நாற்பது இனியவை நாற்பது, திருக்குறள் என்று தமிழில் ஏராளமாக நீதி நூல்கள் இருப்பது போல சம்ஸ்க்ருதத்திலும் சிந்தனையைத் தூண்டும் நூல்கள் பல உண்டு. அவற்றில் இளம்பருவத்தில் கல்வி கற்க துவங்கும் போது நீதி போதனையாக சிலவற்றை சொல்லித் தருவார்கள். இவை சுபாஷிதம் அல்லது நன்மொழிகள் எனப்படும். நமது பாரதீய கல்வியில் வாழ்க்கையை அர்த்தப் படுத்திக் கொள்ள நான்கு வித இலக்குகள் (புருஷார்த்தங்கள்) வைத்தனர். அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்பவையே அவை. தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்று வடமொழியில் இவை அழைக்கப் படுகின்றன. இவற்றை ஒவ்வொருவரும் தன வாழ்வில் கடந்து வந்தே தீரவேண்டும்.

இவற்றில் நல்ல விதமாக கடமையாற்றி வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்வதற்கு முன்னோர் அடைந்த அனுபவங்களை தெரிந்து கொள்வது அவசியம். அந்த வகையில் திருவள்ளுவர் எவ்வாறு தமிழில் திருக்குறளை அறத்துப்பால், பொருட் பால், இன்பத்துப் பால் என்று அமைத்தாரோ அதே போல வடமொழியில் பர்த்ருஹரி நீதி சதகம் (நீதி போதனை), ஸ்ருங்கார சதகம் (இன்பத்துப் பாலைப் போன்றது), வைராக்ய சதகம் (துறவறம்) என்று மூன்று விதமாக பிரித்து அமைத்துள்ளார். சுபாஷித த்ரிசதி அல்லது சதகத்ரயம் என்று அழைக்கப் படும் இந்த முன்னூறு ஸ்லோகங்கள் படிப்பதற்கு சுலபமான சம்ஸ்க்ருதத்தில் அமைக்கப் பட்டுள்ளன. இவற்றில் சில ஸ்லோகங்களை இளம் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுப்பது பழைய கால கல்வி முறை. இதன் மூலம் நீதி போதனையும், மொழியறிவும் பெற உதவும் என்பதே குறிக்கோள். ஆம்ராஸ்²ச ஸிக்தா​: பிதரஸ்²ச த்ருʼப்தா (आम्राश्च सिक्ताः पितरश्च तृप्ता) என்றொரு வழக்கு உண்டு. நீத்தார் கடன் செலுத்த நீர் விடும்போது அதை மாமரத்தின் அடியில் இட்டார்களாம். நீத்தார் கடன் செலுத்தியது போலவும் ஆயிற்று, மாமரத்துக்கு நீர் பாய்ச்சியது போலவும் ஆயிற்று என்று ஒரே செயலில் இரு நன்மைகள்.

பர்த்ருஹரி யார்?

பர்த்ருஹரி நமது சரித்திரத்தில் ஒரு அரசராகவும், கவிஞராகவும், துறவியாகவும் காணப்படுகிறார். இவர் உஜ்ஜயினியை தலைநகராகக் கொண்டு அரசாண்ட சக்கரவர்த்தி விக்கிரமாதித்தியனின் மூத்த சகோதரர். உண்மையில் இவரே அரசனாக முதலில் இருந்தார். அப்போது இவருடைய ராணி பிங்கலை என்பவளிடம் பேரன்பு கொண்டு அவளுடனேயே எப்போதும் பொழுதை செலவிட்டு வந்தார். இந்நிலையில் இவருக்கு அபூர்வமான பழம் ஒன்று கிடைக்க அதைத் தன் ஆசை மனைவியிடம் கொடுத்தார். அவளுக்கோ அரண்மனையில் குதிரை லாயத்தில் இருந்த ஒருவனிடம் ஆசை. அவள் அவனிடம் கொடுக்க, அவனுக்கு ஒரு வேசியிடம் இச்சை. அவன் பழத்தை அவளிடம் கொடுத்து விடுகிறான். அந்த வேசி பழத்தை அரசனுக்கே அற்பணிக்கிறாள். இறுதியில் உலகியலில் வெறுப்புற்று பர்த்ருஹரி மகாராஜன் தன் பதவியை துறந்து, தம்பிக்கு முடிசூட்டி விட்டு துறவியாகி விடுகிறார். இந்நிலையில் தன் கல்வி அறிவு அனுபவங்களை திரட்டி சில நூல்கள் இயற்றுகிறார். இவற்றில் ஒன்று தான் இந்த சதக த்ரயம் எனப்படும் சுபாஷிதங்கள்.

சதகத்ரய வியாக்யானம்

சம்ஸ்க்ருதத்தில் மூல நூல்களுக்கு பின் வந்த அறிஞர்கள் உரை எழுதுவது வழக்கம். இந்த சுபாஷிதங்களுக்கும் பிற்காலத்தில் ராமசந்திர புதேந்திரர் என்பார் விரிவான உரை எழுதியுள்ளார். இதில் பதங்களுக்கு அர்த்தம் சொல்வதோடு மட்டுமன்றி, அதற்கு தொடர்புடைய பல செய்திகளையும், இலக்கண விதிகள், ஒரு சொல்லுக்கு சமமான பல பர்யாய சப்தங்கள் (synonym words), வேத இதிகாச புராணங்களில் இருந்து ஆதாரங்கள்  போன்றவற்றை தொகுத்துத் இந்த உரையை எழுதி உள்ளார். இந்த தொடரில் பர்த்ருஹரியின் சுபாஷிதங்களுடன், ராமசந்திரரின் உரையில் முக்கிய அம்சங்களுடன் இணைத்து தரப்பட்டுள்ளது. இத்தொடர் சம்ஸ்க்ருதம் கற்றுக் கொள்ள முயற்சி செய்வோருக்கு பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறோம்.

மங்கள ஸ்லோகம்

சதகத்ரயம் என்று அழைக்கப் படும் முன்னூறு ஸ்லோகங்கள் அடங்கிய தொகுப்பில் ஆதியில் மங்கள ஸ்லோகமாக அமைந்துள்ளது. சம்ஸ்க்ருத காவியங்களில் முதல் ஸ்லோகத்தை மங்கள ஸ்லோகமாக அமைப்பது மரபு. தமிழில் இறைவணக்கம் செலுத்துவது போல.

பரிஸமாப்திகாமோ மங்க³லமாசரேத் (परिसमाप्तिकामो मङ्गलमाचरेत् ) என்பது மூத்தோர் வாக்கு. அதாவது நல்ல படியாக முடிய வேண்டும் என்று விரும்புவோர் மங்களமாக துவங்க வேண்டும்.

दिक्कालाद्यनवच्छिन्नानन्तचिन्मात्रमूर्तये |
स्वानुभूत्येकमानाय नम: शान्ताय तेजसे |

தி³க்காலாத்³யனவச்சி²ன்னானந்தசின்மாத்ரமூர்தயே |
ஸ்வானுபூ⁴த்யேகமானாய நம: ஸா²ந்தாய தேஜஸே |

பதச்சேதம்

தி³க்காலாதி³ அனவச்சி²ன்ன அனந்த சின்மாத்ர மூர்தயே |
ஸ்வானுபூ⁴தி ஏகமானாய நம: ஸா²ந்தாய தேஜஸே ||

அந்வயம்
திக் (दिक्) = திசை, கால (काल) = காலம், ஆதி = முதலியவை, அனவச்சி²ன்ன (अनवच्छिन्न) = பிரிக்கப் படாத, அனந்த (अनन्त) = முடிவற்ற, சின்மாத்ர (चिन्मात्र) = அறிவே வடிவான, மூர்த்தயே (मूर्तये) = மூர்த்திக்கு, ஸ்வானுபூ⁴த்யேகமானாய (स्वानुभूत्येकमानाय) = தன்னாலே மட்டுமே அறியக்கூடியவருக்கு, ஸா²ந்தாய (शान्ताय) = சாந்தமுடையவருக்கு, தேஜஸே (तेजसे) = ஒளி பொருந்தியவருக்கு நம: (नम:) = நமஸ்காரம்.

வியாக்கியானத்திலிருந்து…

दिश: प्राचि आदि दिक् प्रदेशा: – திசை என்பது கிழக்கு போன்றவை.

काला भूत भविष्यत् वर्तमान रूपा – காலம் என்பது கடந்த, நிகழ் எதிர்காலங்களை குறிப்பது.

तै: अनवच्छिन्ना अपरिक्लृप्ता – அதனால் உடைந்து போகாமல், பிரிக்கப் படாமல் இருப்பது

विभुत्वात् नित्यत्वात् एकत्वात् च देशत: कालत: वस्तुत: अपरिच्छिन्न: इति अर्थ: – எதையும் செய்ய முடிவது, omnipotence/omnipresense என்பது விபுத்வம், என்றும் இருப்பது நித்யத்வம், நிகரற்று இருப்பது ஏகத்வம், தே³ஸ²த: காலத: வஸ்துத: என்பது காலத்தால், இடத்தால், வடிவ-குணத்தால் அபரிச்சி²ன்ன: இதி அர்த²: பிரிக்கப் படாதது என்று அர்த்தம். ஒரு வார்த்தையில் த: என்பது சேர்ந்தால் அதிலிருந்து என்று அர்த்தம் வரும். இத: என்பது இங்கிருந்து, தத: என்பது அங்கிருந்து, மதுரைத: என்பது மதுரையிலிருந்து என்பது போல வார்த்தைகள் அமையும்.

अत एव अनन्ता अपरिमिता – அதனால் அனந்தா – எல்லையற்றது, அபரிமிதா – அளவற்றது

तथा च आनन्दमात्रा आनन्दमयी चिन्मात्रा ज्ञानघना च – ஆனந்தமயமானது, அறிவே ஆனது. க⁴ன என்பது solid, thick, hard என்ற அர்த்தத்தில் வருகிறது.

तादृशी मूर्ति यस्य तस्मै | “एतद् रूपाय” इति अर्थ: – தாத்³ருʼஸீ² என்பது அத்தகைய என்று அர்த்தம். அத்தகைய மூர்த்தி. அந்த வடிவானவருக்கு என்று அர்த்தம். தாத்³ருʼஸ² என்பது அதைப்போல, ஏதாத்³ருʼஸ² – இதைப்போல, ஸத்³ருʼஸ² = ஒரே போல, யாத்³ருʼஸ² = எதைப்போல.

இந்த இடத்தில் இறைவனைக் குறித்த சில வேத வாக்கியங்களை ஆதாரமாக உரையாசிரியர் கூறுகிறார்.

“सत्यं ज्ञानमनन्तं ब्रह्म”, “एकमेवाद्वितीयं ब्रह्म”, “आनन्दो ब्रह्मेति व्यजानात्” “आनन्दमयोऽभ्यासात्”, “सत्यं ज्ञानं अनन्तं यत्सानन्दं ब्रह्म केवलम्” इत्यादि श्रुति स्मृति कदम्बकम् अत्र प्रमाणम् इति भाव:
ஸத்யம்ʼ ஜ்ஞானமனந்தம்ʼ ப்³ரஹ்ம” (தைத்ரீய உபநிஷத்), “ஏகமேவாத்³விதீயம்ʼ ப்³ரஹ்ம” (சாந்தோக்ய உபநிஷத்), “ஆனந்தோ³ ப்³ரஹ்மேதி வ்யஜானாத்” (தைத்ரீய உபநிஷத்), “ஆனந்த³மயோ(அ)ப்⁴யாஸாத்” (பிரம்ம சூத்திரம்), “ஸத்யம்ʼ ஜ்ஞானம்ʼ அனந்தம்ʼ யத்ஸானந்த³ம்ʼ ப்³ரஹ்ம கேவலம்” (தைத்ரீய உபநிஷத்) இத்யாதி³ ஸ்²ருதி ஸ்ம்ருʼதி கத³ம்ப³கம் அத்ர ப்ரமாணம் இதி பா⁴வ: (அர்த்தம்)

तथा स्वानुभूति आत्मानुभव एव एकम् मुख्यम् अद्वितीयम् वा मानम् स्वप्रकाशसाधनम् यस्य तस्मै | – ஸ்வானுபூ⁴தி அல்லது ஆத்மானுப⁴வத்தைக் கொண்டே அளவிட முடியக்கூடியவர் எவரோ அவர்.

இங்கே வேறு எந்த பிரமாணமும் இல்லாமல் தன்னாலே அறியப்படுவது பிரம்மம் என்பதற்கு ஆதிசங்கரரின் ஆத்மபோதம் என்கிற தொகுப்பில் இருந்து ஆதாரம் காட்டுகிறார் உரையாசிரியர்.

स्वबोधे नान्यबोधेच्छा बोधरूपतयात्मनः।
न दीपस्यान्यदीपेच्छा यथा स्वात्मप्रकाशने॥२९॥
– आत्मबोध

ஸ்வபோ³தே⁴ நான்யபோ³தே⁴ச்சா² போ³த⁴ரூபதயாத்மன​:|
ந தீ³பஸ்யான்யதீ³பேச்சா² யதா² ஸ்வாத்மப்ரகாஸ²னே|| 29||
– ஆத்மா போதம்

ஏற்றப்பட்ட தீபம் ஒளிர, இன்னொரு தீபத்தின் உதவியை நாடுவதில்லை – அது போல ஆத்மாவுக்கு தன்னை உணர்ந்து கொள்ள இன்னொன்றின் உதவி தேவை இல்லை.

சொற்பிரயோகங்கள்:

இந்த ஸ்லோகத்தில் நான்காம் வேற்றுமை உருபை அதிகமாக உபயோகித்திருக்கிறார். மூர்த்தயே, ஸ்வானுபூ⁴த்யேகமானாய, ஸா²ந்தாய, தேஜஸே ஆகிய பதங்கள் நான்காம் வேற்றுமை உருபில் அமைந்துள்ளன. नम:, स्वस्ति, स्वाहा, स्वधा ஆகிய பதங்கள் சுட்டும் பொருள் (நமஸ்காரம் செய்யும் பொருள்) நான்காம் வேற்றுமையில் தான் இருக்கும் என்பது இலக்கண விதி.

திசை என்ற சொல்லுக்கு சம்ஸ்க்ருதத்தில் பல சொற்கள் உண்டு:

दिश: – திசை, சுட்டிக்காட்டப் படுவது,
ककुभ: – விரிவடைவது
काष्ठा – திசையின் எல்லை
आशा – நாற்புறமும் விரிவடைவது
हरित: – நிறமற்றது அல்லது பசுமையாகத் தோற்றம் அளிப்பது

இவை எல்லாமே பெண்பாற் பெயர்கள்.

அமரகோசத்தில் திசைகள் குறித்து:

प्राच्यवाचीप्रतीच्यस्ता: पूर्वदक्षिणपश्चिमा: |
उत्तरा दिगुदीची स्याद् दिशं तु त्रिषु दिग्भवे ||

ப்ராசீ அவாசீ ப்ரதீச்யஸ்தா: பூர்வ த³க்ஷிண பஸ்²சிமா: |
உத்தரா தி³க் உதீ³சீ ஸ்யாத்³ தி³ஸ²ம்ʼ து த்ரிஷு தி³க்³ப⁴வே ||
– அமரகோசம், திக்வர்க்கம் (146)

प्राची – முதலில் சூரியனால் அடையப் படுவது (கிழக்கு)
अवाची – கிழக்கு சூரியனை மத்தியில் வெளிப்படுத்துவது (நண்பகல்)
प्रतीची – மேற்கு, கிழக்குக்கு நேர் எதிரே அணிவது
पूर्वा – சூரிய உதயத்தில் முதலில் தோன்றும் திசை
दक्षिणा – கிழக்கு நோக்கி நின்றால் வலது புறத்தில் உள்ள திசை தெற்கு
उत्तरा – வலப்புறத்திற்கு நேர் எதிரே வடக்கு
पश्चिमा – கிழக்கு நோக்கி நின்றால் பின்புறம் உள்ளது – மேற்கு
उदीची – வடக்கு

திசையைக் குறிக்கும் இச்சொற்கள் ஆண்பால் மற்றும் பெண்பால் இரண்டிலும் இடம் பெரும். தக்ஷிண: என்பது ஆண்பால். தக்ஷிணா என்பது பெண்பால்.

இந்த மங்கள ஸ்லோகத்துடன் துவங்கும் நீதி சதகம் என்னும் நூறு செய்யுள்களில் (ஸ்லோகங்களில்) நீதி போதனையாக பல அறிவுரைகள் கூறப்படுகின்றன. இவை பல பத்ததிகளாக (வகுப்புகள்) பிரிக்கப் பட்டுள்ளன. முதல் வகுப்பாக மூர்க்க பத்ததி என்று மூடர்களைப் பற்றிச் சொல்லும் ஸ்லோகங்கள் வருகின்றன. இவற்றை அடுத்த பாகத்தில் பார்ப்போம்.
(தொடரும்)

8 Comments பர்த்ருஹரியின் நன்மொழிகள் – 1

  1. KSS Rajan

    இவற்றை அடுத்த பாகத்தில் பார்ப்போம்.
    (தொடரும்) Very eagerly waiting for nest part அந்த நாளும் வந்திடாதோ

  2. vasanthasyamalam

    कृपया अर्थं लिखतु||

    अगजाननं पद्मार्कं गजाननं अहर्निशम्
    अनेकदन्तं भक्तानां एकदन्तमुपास्महे|

  3. vasanthasyamalam

    संस्कृतभाषायां प्रहेलिकाः कुत्र प्राप्यन्ते| किस वेब साइट में?

  4. இன்னம்பூரான்

    ஒழுங்காக வால்மீகி ராமாயணமும், மஹாகவி பாரதியார் உரையுடன் கூடிய ப்கவத் கீதையும் படித்து வந்த நான், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தொடங்குகிறேன். இனி தினம் நீதி சதகமும் மற்றவையும் படிப்பதாக உத்தேசம்.

    யாவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.
    இன்னம்பூரான்

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)