மதனோற்சவம் – ஹோலிப்பண்டிகை குறித்து…

இப்போதெல்லாம் பண்டிகைகள் டீவி சானல்கள் அங்கீகரித்தால் தான் மக்களுக்கும் கொண்டாட ஒரு ஈர்ப்பு ஏற்படும் என்கிற நிலை ஏற்பட்டு விட்டது. மகளிர் தினம், அன்னையர் தினம், உழைப்பாளர் தினம் என்று சிறப்பு தினங்கள், சிறப்பு நிகழ்ச்சிகள் டீவி சானல்களில் வரும்போது, அதுவரை அதுகுறித்து எதுவும் தெரியாதவர் கூட கொண்டாட்ட மனநிலைக்கு வந்து விடுகிறார். பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும்போதும், அதனை சிறப்பு நிகழ்ச்சிகள் மூலம் மீடியாக்கள் பெரும்விழாவாகவே ஆக்கி விடுகின்றன. இது மட்டும் அல்லாது நண்பர்கள் தினம், காதலர் தினம் போன்ற தினங்களையும் புதிதாக டீவி சானல்கள் கொண்டு வந்து புழக்கத்தில் விட்டுவிடுகின்றன. நமக்கே உரிய பாரம்பரிய விழா நாட்கள் அவ்வளவாக மீடியாக்களால் கண்டுகொள்ளப் படுவதில்லை.

holi

நமது பண்பாட்டிலேயே காதலர் தினம் உண்டு, அது ஆயிரம் ஆண்டு பழமையானது என்றால் அது இங்கே பலருக்கு புதிதாக இருக்கும். வேறு எதுவும் அல்ல, ஹோலிப் பண்டிகை தான் அது. ஹோலி என்றால் அது எதோ வடமாநிலத்தவர் கொண்டாடுவது என்றும், சென்னையில் சௌகார்பேட்டை போன்ற ஒரு சில இடங்களில் கொண்டாடப் படும் விழா என்ற அளவிலேயே பலர் புரிந்து வைத்திருக்கிறார்கள். ஹோலிப் பண்டிகை பாரதத்தின் பல பகுதிகளிலும் கொண்டாடப் படுகிறது. தமிழகத்திலும் காமன் பண்டிகை என்ற பெயரில் கொண்டாடப் பட்டே வந்திருக்கிறது.

கணம் எனப்பட்ட குழுச் சமூக அமைப்பிலிருந்து முன்னேறிக் கணவன், மனைவி, வாரிசுகள் என்ற ஒரு தொகுதியை – அதாவது – குடும்பத்தை அடிப்படை அலகாகக் கொண்ட சமூக அமைப்பை நோக்கித் தமிழ்ச் சமூகம் நடைபோட்ட வரலாற்றின் எச்சங்கள் இலக்கியங்களில் பதிவாகியுள்ளன. இப்பதிவுகளெல்லாம் சம காலப் பதிவுகளாக இருக்கவேண்டுமென்ற கட்டாயமில்லை. தங்களுடைய சமூகத்தின் முந்து வடிவத்திலிருந்து எஞ்சி நிற்கும் சில கூறுகள் திரிந்த வடிவிலாகிலும் நீடித்து வருகின்ற ஒரு நிகழ்வின் பதிவாகவும் அது இருக்க முடியும். அப்படிப் பார்க்கும்போது, அகநானூற்றில் ”பங்குனி முயக்கம்”, “கொங்கர் மணி அரையாத்து மறுகின் ஆடும் உள்ளி விழவு” (பா 368) என்றும், கலித்தொகையில் ”மல்கிய துருத்தியுள் மகிழ் துணைப் புணர்ந்து… விளையாடும் வில்லவன் விழவு” (35:13-14) என்றும் குறிப்பிடப்படுகின்ற காமன் பண்டிகையே சங்ககாலக் காதலர் தினம் எனத் தெரியவருகிறது.

– சிஸ்ரி தளத்தில் “காமவேள் விழவு: சங்க காலத்தில் காதலர் தினம்” என்ற கட்டுரையிலிருந்து.

வடமொழி இலக்கியங்களில் மாமன்னன் ஹர்ஷவர்தனரின் ரத்னாவளி நாடகம் ஹோலி பண்டிகை காட்சிகளை கொண்டாதாக இருக்கிறது. ஹர்ஷவர்த்தனர் ஏழாம் நூற்றாண்டில் இன்றைய உத்தரப்பிரதேசத்தில் கன்னௌஜ் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு, பாரதத்தின் வடபகுதி முழுவதையும் ஆண்ட மன்னர். கவிதை இயற்றுவதிலும் சிறந்த தேர்ச்சி பெற்றவர். ரத்னாவளி, நாகனந்தா, ப்ரியதர்சிகா ஆகிய நாடகங்களை இயற்றியவர். ரத்னாவளி நாடகத்தில் ஹோலி பண்டிகையின் கொண்டாட்டக் காட்சி:

धारायन्त्रविमुक्तसन्ततपय: पूरप्लुते सर्वत: |
सद्य: सान्द्रविमर्दकर्दमकृतक्रीडे क्षणं प्राङ्गणे ||
उद्दामप्रमदाकपोलनिपतत्सिन्दूररागारुणै: |
सौन्दूरिक्रियते जनेन चरणन्यासै: पुर: कुट्टिमम् ||

தா⁴ராயந்த்ரவிமுக்தஸந்ததபய: பூரப்லுதே ஸர்வத: |
ஸத்³ய: ஸாந்த்³ரவிமர்த³கர்த³மக்ருʼதக்ரீடே³ க்ஷணம்ʼ ப்ராங்க³ணே ||
உத்³தா³மப்ரமதா³கபோலனிபதத்ஸிந்தூ³ரராகா³ருணை: |
ஸௌந்தூ³ரிக்ரியதே ஜனேன சரணன்யாஸை: புர: குட்டிமம் ||

நீரை வீசும் ஆண்களிடம் மிருந்து
தப்பித்து ஓடும்
பெருமைமிகு பெண்களின் பாதச்சுவடுகள்
அவர்கள் கன்னங்களில் இருந்து
விழும் சிந்துர துகள்கள்
நீரில் கலந்த வாசனைப் பொருட்கள் இவையெல்லாம்
வாசலெங்கும் வண்ணமயமான சேறாகி விட்டன!

ஸத்³ய: க்ஷணம்ʼ இந்தக்கணம் (பார்க்கும்போது), தா⁴ராயந்த்ர விமுக்த வஸந்தத: பய: நீரை வீசும் கருவியிலிருந்து இடைவிடாமல் வீசப்படும் நீர், க்ருʼதக்ரீடே³ அவர்களின் விளையாட்டில், உத்³தா³ம ப்ரமதா³ கபோல நிபதத் ஸிந்தூ³ர அங்குமிங்கும் (தப்பித்து) ஓடும் பெண்களின் கன்னத்தில் இருந்து விழும் சிந்துரம், ராகா³ருணை: சிவந்த பொடிகள், ஜனேன சரணன்யாஸை: ஆண்களின் பாதசுவடுகள், ஸாந்த்³ர விமர்த³ கர்த³ம மெல்லிய காலடி பதிப்புகளால் சேர்ந்த சேறு, புர: குட்டிமம் தரை மற்றும் சுற்றுப்புறம், ப்ராங்க³ணே பூர: ப்லுதே ஸர்வத: கூடும் அங்கணம் எங்கும் நிரம்பி ஸௌந்தூ³ரிக்ரியதே அழகூட்டுகிறது.

மேலே பார்த்தது வடநாட்டில் வாழ்ந்த அரசகவியின் ஹோலி பண்டிகையை விவரிக்கும் கவிதை. அடுத்து பதினான்காம் நூற்றாண்டில் தென்னாட்டில் வாழ்ந்த வைணவ சமயப் பெரியவரின் கவிதை மொழியில் ஹோலி பண்டிகை குறித்து பார்ப்போம்.

தென்னாட்டில் வாழ்ந்த வைணவ குருவான வேதாந்த தேசிகனின் “சங்கல்ப சூரியோதயம்” என்னும் நாடகத்தில் மதனோற்சவம் அல்லது காமன் பண்டிகை நடைபெறுவதாக ஒரு வருணனை, இடம்பெறுகிறது. வேதாந்த தேசிகன் நூற்றுக்கு மேற்பட்ட தத்துவ, கவிதை, நாடக நூல்கள் இயற்றி இருந்தாலும் ஒரு சமய குருவாக இருந்ததாலோ என்னவோ அவருடைய படைப்புகள் ஏனைய மற்ற வடமொழிக் கவிஞர்களைப் போல பிரபலம் அடையவில்லை. கவிதை இயற்றுவதில் காளிதாசன், பாரவி போன்ற பெறும் கவிஞர்களுக்கு சற்றும் குறைந்தவர் அல்ல இவர்.

சங்கல்ப சூரியோதயம் என்கிற இந்த நாடகமே ஒரு தத்துவப் பின்னணி கொண்ட நாடகம். அதில் மனிதனின் குணங்களே பாத்திரங்களாக கவி அமைத்துள்ளார். பத்து அங்கங்கள் கொண்ட இந்த மிகப்பெரிய நாடகத்தின் காட்சிகள் நடைபெறும் அரங்கம் ஸ்ரீரங்கம். அங்கே மருத்வ்ருதா நதிக்கரையில் காமன் பண்டிகை நடைபெறுகிறது.

மருத்வ்ருதா என்பது காவிரிதான். மருத் என்றால் காற்று. காற்றால் வளர்பவள் என்ற அர்த்தத்தில் காவிரிக்கு வடமொழியில் இந்த பெயர். அக்காலத்தில் சிறிது காற்றடித்தாலும் போதும் காவிரியில் வெள்ளம் வந்து விடும் என்று எண்ணி இந்தப் பெயர் வைத்திருக்கிறார்கள்.

சங்கல்ப சூர்யோதய நாடகத்தின் துவக்கத்தில் மன்மதனும் ரதியும் காமன் பண்டிகை நடைபெறும் இடத்துக்கு வருகிறார்கள். கூடவே வசந்தன் என்ற வசந்தகாலமும் மன்மதனுக்கு நண்பனாக வருகிறான். அங்கே காமன் பண்டிகை அழகிய சொல்லாட்சியுடன் கூடிய கவிதையாக கண்முன் விரிகிறது.

चूडा वेल्लित चारुहल्लक भरव्यालम्बि लोलम्बका:
क्रीडन्त्यत्र हिरण्मयानि दधत: शृङ्गाणि श्रुङ्गारिण: |
तन्वङ्गी करयन्त्र यन्त्रणकला तन्त्रक्षरद् भस्त्रिका
कस्तूरी परिवहमेदुर मिलज्जम्बाल लम्बालका: ||

சூடா³ வேல்லித சாருஹல்லக ப⁴ரவ்யாலம்பி³ லோலம்ப³கா:
க்ரீட³ந்த்யத்ர ஹிரண்மயானி த³த⁴த: ஶ்ருʼங்கா³ணி ஶ்ருங்கா³ரிண: |
தன்வங்கீ³ கரயந்த்ர யந்த்ரணகலா தந்த்ரக்ஷரத்³ ப⁴ஸ்த்ரிகா
கஸ்தூரீ பரிவஹமேது³ர மிலஜ்ஜம்பா³ல லம்பா³லகா: ||

வண்டுகள் சூழும்,
அழகிய செந்நிறப் பூக்கள் அள்ளி முடிந்த
கூந்தலைக் கொண்ட பெண்கள்
கஸ்தூரி முதலிய வாசனைப் பொருட்கள் கலந்த நீரை
தோற்பைகளில் அள்ளி தெளித்து,
அங்கே பொன்மையமான கொம்புகளில் நீரைத் தாங்கி வீசும்
அழகிய இளைஞர்களுடன் விளையாட
அவர்களின் தலை முழுவதும்
முடிக்கற்றைகள் சேறாகி துவளுகின்றன…

சூடா³ வேல்லித சாருஹல்லக ப⁴ர தலையில் கட்டப்பட்ட நல்ல சிவந்த ரோஜா மலர்கள், கூட்டமாகத் தாங்கிய, வ்யாலம்பி³ லோலம்ப³கா: சுற்றி வரக்கூடிய வண்டுகள், ஶ்ருங்கா³ரிண: அழகிய இளைஞர்கள், அத்ர க்ரீட³ந்தி அங்கே விளையாடுகிறார்கள், ஹிரண்மயானி ஶ்ருʼங்கா³ணி பொன்வண்ணமான கொம்புகளை, த³த⁴த: தாங்குகிறார்கள், தன்வங்கீ³ அழகிய பெண்கள், கரயந்த்ர கையிலிருக்கும் சிறு தோற்பையைக் கொண்டு யந்த்ரணகலா அடிக்கிறார்கள், தந்த்ரக்ஷரத்³ ப⁴ஸ்த்ரிகா அதிலிருந்து வெளிவரும், கஸ்தூரீ பரிவஹ மேது³ர மில கஸ்தூரி போன்ற வாசனை திரவியங்கள் கலந்த, ஜம்பா³ல சேறு போல செறிந்த நீரால், லம்ப அலகா: கற்றையாய் தொங்கும் குழலை, முடிக்கற்றை உடையவர்கள்.

காவிரிக் கரையில் மதனோற்சவம் நடைபெறுகிறது. அங்கே பெண்கள் கஸ்தூரி, சந்தனம் முதலான வாசனை திரவியங்கள் கலந்த நீரை தோற்பைகளில் அள்ளி, ஆண்கள் மீது வீசுகிறார்கள். ஆண்கள் தங்கள் பங்குக்கு, தங்க மயமான கொம்புகளில் நீரை நிரப்பி பெண்கள் மீது வீசி விளையாடுகிறார்கள்.

வசந்தத்தின் வருகையை, எங்கும் இயற்கை பூக்கத்துவங்கும் காலத்தில் காதலர் தினம் காமன் பண்டிகையாக கொண்டாடப் படுவது பொருத்தமே. வடநாடாக இருந்தாலும், தென்னாடாக இருந்தாலும் பாரதம் முழுவதும் ஒரே பண்பாடு தான் என்பதற்கு ஹோலிப்பண்டிகையும் ஒரு சான்று.

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)