வால்மீகி இராமாயணத்தின் உரைவளம்


கவிதை என்னும்
மரக்கிளைமேலேறி அமர்ந்து
ராம ராம என்று மதுரமொழியில்
கூவும் குயிலாம் வால்மீகியை
வணங்குகிறேன்!

சிங்க நிகர் முனிவராம் வால்மீகி
அவர் கவிதா வனத்தில்
கர்ஜித்த குரலை
ஒரே ஒரு முறை கேட்டாலும்
நற்கதி அடையாதவர் யார்?!

ராமகாதை என்னும்
அமுதக் கடலை அள்ளி அள்ளி
பருகியபின்னும் ஆசை தீராதவராம்
அப்பழுக்கற்ற கவி வால்மீகியை
வணங்குகிறேன்!!

कूजन्तं राम रामेति मधुरं मधुराक्षरम् |
आरुह्य कविता शाखां वन्दे वाल्मीकि कोकिलम् ||

वाल्मीकेर्मुनिसिंहस्य कवितावनचारिण: |
शृण्वन् रामकथानादम् को न याति पराङ्गतिम् ||

य: पिबन्तं सततं रामश्चरितामृतसागरम् |
अतृप्तस्तम् मुनिंवन्दे प्राचेतसमकल्मषम् ||

காவியங்களுக்கு எல்லாம் முதன்மையானதான ஆதிகாவியமாகிய வால்மீகி இராமாயணம் கடந்த பல ஆயிரம் ஆண்டுகளாக கவிஞர்கள், சிந்தனையாளர்கள், ஆன்மீக குருமார்கள் என்று இவர்கள் மட்டும் அல்லாது சாதாரண மக்களையும் கவர்ந்திழுக்கும் காவியம். வால்மீகிக்கு பின்னர் இராமாயண கதை பல நூறு விதங்களில் எழுதப் பட்டு வந்துள்ளது. ஹிந்து சனாதன தர்மத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் அல்லாது, பௌத்த ஜைன மதத்தைச் சேர்ந்தவர்களும் பாரத தேசத்துக்கு பல காத தூரம் தள்ளி இருக்கிற தேசத்திலும் கூட வெவ்வேறு விதமாக இராமாயண கதையை பகிர்ந்த வண்ணம் உள்ளனர்.

ராமாயணங்கள் பல
அறிஞர்கள் கேட்டுப் பகிர்ந்திருக்கிறார்கள்…
சீதையில்லாமல் ராமன் வனம் சென்றதாக
எங்கேனும் கேள்விப் பட்டதுண்டா…

रामायणानि बहुश: श्रुतानि बहुभिर्द्विजै: |
सीतां विना वनं रामो गत: किं कुत्रचिद्वद ||

[அத்யாத்ம ராமாயணத்திலிருந்து]

இப்படி பலவிதமாக பரவியுள்ள இராமாயண காவியத்தை அதன் மூல வடிவில் அறிய வேண்டும் என்றால் வால்மீகியைத் தான் நாடவேண்டும். காளிதாசன் போன்ற கவிஞர்கள் தாமே இராமாயண கதையை காவியமாக இயற்றினாலும் வால்மீகியை தமது வாழ்த்துப் பாவில் குறிப்பிடத் தவறுவதில்லை. அப்படிப் பட்ட வால்மீகி இராமாயணத்தை, அதை இயற்றிய கவியின் உள்ளத்தை சாதாரணர்கள் எளிதில் நெருங்க முடியுமா? ஆழ்ந்த உட்பொருள் பொதிந்த காவியமான வால்மீகி ராமாயணத்தை எல்லோரும் உணர்ந்து ரசிக்க முடியுமா?

இக்கேள்விகளுக்கு விடையாகத்தான் உரை நூல்கள் அமைகின்றன. கணக்கற்ற இராமாயணங்கள் இருப்பதைப் பார்க்கிறோம். அதே போல ஆதிகாலம் துவங்கி அண்மைக்காலம் வரை நூற்றுக்கணக்கான உரைகள் வால்மீகி ராமாயணத்துக்கு சம்ஸ்க்ருதத்திலேயே எழுதப்பட்ட வண்ணம் உள்ளன. சம்ஸ்க்ருதம் மட்டும் அல்லாது இந்தி, தமிழ் போன்ற ஏனைய பாரத மொழிகளின் உரைகளையும் சேர்த்தால் எண்ணிக்கை ஆயிரத்தைத் தொடக்கூடும். இக்கட்டுரையில் வால்மீகி இராமாயணத்துக்கு எழுதப்பட்ட சம்ஸ்க்ருத உரைகளைக் குறித்துக் காண்போம்.

ஒரு வகையில் மஹாபாரதம் கதைகளை பிரதானமாகக் கொண்டது; வால்மீகி இராமாயணம் கவித்துவத்தை பிரதானமாகக் கொண்டது என்றே சொல்லலாம். இராமாயணத்தில் வால்மீகி எடுத்தாண்டுள்ள நகர விவரணை, மாந்தரின் அழகியல், கால வருணனை, வனத்தின் எழில், போரின் கோரம் ஆகியவை மற்ற அதற்குப் பின்வந்த ஏராளமான கவிதைப் படைப்புகளுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது. காளிதாசன் துவக்கமாக ஏனைய எல்லா கவிஞர்களிடமும் வால்மீகியின் தாக்கம் உள்ளது என்றால் மிகையில்லை.

உரையாசிரியர்களுக்கும் இராமாயணத்திற்கு உரை எழுதுவதில் ஒரு பெரும் ஆனந்தம் இருந்திருக்க வேண்டும். சம்ஸ்க்ருதத்தில் எழுதப் பட்ட காவியத்துக்கு சம்ஸ்க்ருதத்திலேயே ஏராளமான உரைகள் இருப்பதே இதற்கு சான்று. மேலும் ஒவ்வொரு உரையிலும் ஒரு சிறப்பு. இவற்றில் பல பழைய உரைகள் அழிந்து விட்டன. பல உரைகள் இன்னமும் பதிப்பு செய்யப் படாமல் ஓலைச் சுவடிகளிலேயே உள்ளன. பல உரைகள் ஓரிரு பதிப்புடன் நின்று விட்டன. இன்றும் பிரபலமாக இணையத்திலும், புத்தகமாகவும் கிடைக்கும் உரைகளே பல உள்ளன.

வால்மீகியின் உள்ளத்தை பிரதிபலிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வால்மீகி இராமாயணத்தின் உட்பொருளை விளக்கும் பாரம்பரிய உரைகள் ஒரு பக்கம் என்றால், உரையாசிரியர்கள் தம் கருத்தை மூல நூலின் உட்பொருளாக ஏற்றி எழுதப் பட்ட உரைகளும் உண்டு. உதாரணமாக, இராமன் விஷ்ணுவின் அவதாரம் என்றே பெரும்பாலும் அறியப் படுகிறது; வால்மீகியும் அவ்வாறே கூறுகிறார். ஆனால் சென்ற நூற்றாண்டில் பொம்மகண்டி நரஸிம்ஹ சாஸ்திரியின் “கல்பவல்லிகா” என்னும் உரையில், சாக்த தர்சன அடிப்படையில், அம்பாள் திரிபுரசுந்தரியின் சங்கல்பமாக ராமாவதாரம் நிகழ்வதாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது.

வால்மீகி இராமாயணத்தின் பழமையான உரைகளில், இன்றும் பிரபலமாக ஏழு உரைகள் உள்ளன.
அவை கோவிந்தராஜரின் “பூஷணம்”, வரதராஜ உதாலியின் “விவேக திலகம்”, ராமானுஜனின் “ராமானுஜீயம்”, மாதவயோகியின் “அம்ருத கடகம்”, நாகேச பட்டனின் “ராமாயண திலகம்”, வம்சீதர சிவசஹாயனின் “ராமாயண சிரோமணி”, த்ரியம்பக மகியின் “தர்ம கூதம்” ஆகியவை ஆகும்.

கோவிந்தராஜரின் “பூஷணம்” – பதினாறாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்த உரை மிகப் பிரபலமானது. இதனை எழுதிய கோவிந்தராஜர், காஞ்சி புரத்தை சேர்ந்த வைணவர், கிருஷ்ண தேவராயர் காலத்தில் வாழ்ந்தவர் என்று கருதப் படுகிறது.

அஹோபலரின் “வால்மீகி ஹ்ருதயம்” – இதுவும் பதினாறாம் நூற்றாண்டில் எழுதப் பட்ட உரை. இவர் தமிழில் உள்ள திருவாய்மொழியில் வரும் இராமாயண குறிப்புகளை சம்ஸ்க்ருதத்தில் மொழி பெயர்த்ததாகவும் தெரிகிறது. த்ரியம்பக மகியின் “தர்ம கூதம்” – பதினேழாம் நூற்றாண்டில் தஞ்சையில் ஏகோஜி மன்னரின் காலத்தில் இயற்றப்பட்ட உரை இது. வேதங்களுக்கும் தர்ம சாத்திரங்களுக்கும் வால்மீகி இராமாயணத்துக்கும் உள்ள தொடர்பை வரிக்கு வரி உணர்த்தும் முக்கிய மான உரை, ஸ்ரீரங்கம் வாணி விலாஸ் பதிப்பகத்தால் வெளியிடப் பட்டது.

ரங்காசார்யாவின் “ராமாயணாந்வயி” – காஞ்சிபுரத்தில் வாழ்ந்த உரையாசிரியர் எழுதிய உரை இது. ப்ரபலமுகுந்த சூரியின் “ராமாயண பூஷணம்”, அபிநவ ராமபத்ராஸ்ரமாவின் “சுபோதினி”, ஹரிபண்டிதரின் “வால்மீகி பாவ பிரகாசிகா”, மகேஸ்வர தீர்த்தரின் “ராமாயண தத்வ தீபிகா”, வித்யாநாத தீக்ஷிதரின் “ராமாயண தீபிகா”, வெங்கடேஸ்வரரின் “சர்வார்த்த சார:”, சோழ பண்டித பிரம்மாதிராஜனின் “ராமாயண சார சங்கிரகம்”, ஸ்ரீனிவாச ராகவாச்சாரியாரின் “ராமாயண சார சந்திரிகா”, தேவராம பட்டரின் “ராமாயண விஷம பதார்த்த வியாக்யானம்”, பூர்ணம் ஹயக்ரீவ சாஸ்திரியின் “ராமாயண மகிமாதர்சம்” போன்ற பல உரைகள் கடந்த நூற்றாண்டு வரை புழக்கத்தில் இருந்தன.

இது தவிர பெரியவாச்சான் பிள்ளையின் “தனி ஸ்லோகி” என்னும் நூல், வால்மீகி இராமாயணத்தின் முக்கியமான ஸ்லோகங்களுக்கு உள்ள ஆழ்ந்த பொருளை விளக்குகிறது. இது சம்ஸ்க்ருதத்திலும் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. அப்பைய தீட்சிதர் “ராமாயண தாத்பர்ய நிர்ணயம்”, “ராமாயண சார சங்கிரகம்” ஆகிய நூல்களும் வால்மீகி இராமாயணத்தின் சுருக்கமான உரை நூல்களாக இயற்றி உள்ளார்.

இன்னும் கூட நிறைய பழைய புதிய உரைகள் இருக்கலாம். இராமாயணம் நமது பண்பாட்டின் உச்சத்தை எடுத்துக் காட்டும் நூலாக, நூற்றாண்டுகள் தோறும் புதிய தலைமுறைகளின் சிந்தனைக்கு தூண்டுகோலாக விளங்குகிறது என்று இதிலிருந்து தெரிகிறது.

சம்ஸ்க்ருதத்தில் காவியங்களுக்கு ஈடான மதிப்பு, அக்காவியங்களுக்கு எழுதப்படும் உரை நூல்களுக்கும் உண்டு. காவியத்தின் சுவை அனுபவம், மூல நூலை படிப்பதால் ஏற்படுவதை விட உரை நூல்களைப் படிப்பதால் பன்மடங்கு அதிகரிக்கிறது. அதுவும் ஒரு திறமையான உரையாசிரியன் காவியத்தின் நுட்பத்தை, அதனை இயற்றிய கவியின் உள்ளத்தை எடுத்துக் காட்டும்போது, நேரடிப் பொருளைவிட உள்ளுரைப் பொருளை புரியவைக்கும்போது தான் காவிய ரசனை மேம்படுகிறது. சம்ஸ்க்ருத காவியங்கள் கலாச்சார இழைகளை அடிநாதமாகக் கொண்டவை. வேதம், இதிகாசம், புராணம் முதற்கொண்டு ஆயுர்வேதம் முதலிய உலகியல் அறிவியல், இதர கவிகளின் கூற்றுகள், மற்ற காவியங்களின் ஒப்புமை ஆகியவற்றை ஒரு திறமையான உரையாசிரியன் நமக்கு ஒரே இடத்தில் தொகுத்து தருவதால் மூல நூலை விட உரைகள் நமக்கு முக்கியமாகின்றன என்றால் மிகையாகாது.

2 Comments வால்மீகி இராமாயணத்தின் உரைவளம்

  1. நிர்வாகி

    வாலமீகி ராமாயணத்தில் மாட்டிறைச்சி உண்பது பற்றி வருவதாக ஒரு கூற்று பரவலாக உள்ளதே, அது பற்றி தெளிவு படுத்த வேண்டுகிறேன்.

    நன்றி
    நிர்வாகி

  2. Nirmala subramanian

    நமஸ்காரம். கோவிந்தராஜரின் பூஷணம் வால்மீகி ராமாயண வ்யாக்யானம் உள்ளதா தங்களிடம் விற்பனைக்கு?

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)