ஜி ஷியான்லின் – சீனாவின் இந்தியவியலாளர்

கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி மாதம், பாரதத்தின் அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த பிரணவ் முகர்ஜி, சீனாவுக்கு சென்று அங்கே பீஜிங்கில் ஒரு இராணுவ மருத்துவமனையில் இருந்த தொண்ணூற்று ஏழு வயது சீன முதியவரின் கையில், இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை அளித்தார். பாரதத்தின் உயரிய இந்த விருது P.V. கானே அவர்களுக்கு பின்னர் ஒரு சம்ஸ்க்ருத அறிஞருக்குக் கிடைத்தது என்றால் அது இந்த சீனக் குடிமகனுக்குத் தான். அந்த முதியவரின் பெயர் ஜி ஷியான்லின் (Chinese: 季羨林; pinyin: Jì Xiànlín). ஜியின் சாதனைகள் அத்துணை பாராட்டத் தக்கது.. அவர் ஆங்கிலம், சம்ஸ்க்ருதம், பாலி, டோகாரியன், அரபி, ஜெர்மன், ஃப்ரெஞ்ச், ரஷ்யன், யூகோசிலாவிய மொழி என்று பல மொழிகளில் நிபுணத்துவம் பெற்றவர். வால்மீகி இராமாயணம் முழுவதையும், அதே கவிதை நடையில் சம்ஸ்க்ருதத்தில் இருந்து சீன மொழியில் மொழிபெயர்த்த பெருமை ஜி அவர்களைச் சேரும். ஜியின் வாழ்க்கை வரலாறு மிக சுவாரசியமானது. இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியிலும், கம்யூனிச புரட்சியின் போது சீனாவிலும், மாவோ-வின் அரசின் கீழும், பின்னர் பொ.பி. இரண்டாயிரம் ஆண்டுக்கு பின்னர் உலக மயமக்கப் பட்ட உலகிலும் வாழ்ந்த அறிவு ஜீவிகள் வெகு சிலரே அதில் இவரும் ஒருவர். சீன அதிபராக இருந்த வென் ஜியோபாவ் அவர்களுக்கு ஜி வழிகாட்டியாக இருந்தார் என்றும் கூறப் படுகிறது.

1911ம் ஆண்டு பிறந்த ஜி ஷியான்லின், கல்லூரிப் படிப்பில் ஆங்கிலம் கற்ற பின்னர், ஒரு மாணவ பரிமாற்ற முறையில், ஜெர்மனி சென்று அங்கே சம்ஸ்க்ருதம், பாலி ஆகிய மொழிகளைக் கற்றார். அவர் சென்ற ஜெர்மனி சென்ற போது தான் இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்தது! ஜெர்மனியில் ( University of Göttingen) பல்கலைக் கழகத்தில் தத்துவத்துறையில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் சீனா திரும்பிய ஜி, அங்கே பீஜிங் பல்கலைக் கழகத்தில் பல பதவிகளை வகித்தார். அவர் வாழ்ந்த காலகட்டம் சீனாவில் மிகவும் சோதனையான காலகட்டம், அரசியலில் சம்பந்தப் படாமல் நாம் உண்டு நம் வேலை உண்டு என்று சாதாரண மக்களே செயல் படமுடியாத நிலை. நன்கு படித்த அறிவாளிகளின் நிலையைக் கேட்கவே வேண்டாம். ஜி அவர்களும் பல சோதனைகளுக்கு உள்ளானார். ஆரம்பத்தில் மாவோ-வுக்கு ஆதரவாக இருந்த இவரை, சில கம்யூனிஸ்டுகள் சந்தேகப் பட்டு, அவர் வீடு புகுந்து பொருட்களை எல்லாம் உடைத்து, அவரையும் பொதுவில் துன்புறுத்தி சிறையில் அடைத்து வதைத்தனர். ஆனால் ஒரு போதும், ஜி தாய்நாட்டைப் பழித்ததில்லை, ஆட்சியாளர்களை வெறுத்ததில்லை. தன் மீதே குற்றத்தைச் சுமத்திக் கொண்டார். பல கஷ்டமான சோதனைக் காலங்களைக் கடந்து மீண்டு எழுந்து வந்து, எல்லோரும் பாராட்டும் வண்ணம் வாழ்ந்து காட்டியது அவரது தனிச்சிறப்பு.

கலாச்சார புரட்சி நடந்து கொண்டிருந்த 1966-1976 ஆகிய காலகட்டத்தில் தான் வால்மீகி இராமாயணத்தை கவிதை நடையில் சீன மொழியில் மொழி பெயர்த்தார் ஜி. இப்படி ஒரு முயற்சி நடப்பது அப்போதைய சீன ஆட்சியாளர்களுக்குத் தெரிய வந்தால் பெரும் துன்பத்துக்கு உள்ளாவோம் என்று தெரிந்தும் அறிவுத் தேடலில் அவருக்கிருந்த ஆர்வமே இம்முயற்சியில் அவரைச் செலுத்தியது. இராமாயணம் மட்டும் அல்ல, பௌத்த சமய நாடக நூலான மைத்ரேய சமிதி நாடகம் என்னும் சம்ஸ்க்ருத மூலம் கொண்ட நூலை டோகாரியன் என்ற வழக்கொழிந்த மொழியில் கிடைத்த சிதைந்த சுவடிகளிலிருந்து மொழி பெயர்த்தார். இந்தியாவைப் பற்றி சீனாவில் பலர் அறிந்து கொள்ள ஜி அவர்களின் இது போன்ற முயற்சிகளே உதவியாக இருந்துவருகிறது என்றால் மிகையில்லை.

சீனமொழி ஒரு கடினமான மொழி. இந்திய மொழிகளைப் போல அ, ஆ என்ற எழுத்துக்கள், வேர்சொற்கள் எல்லாம் சீனமொழியில் இல்லை. ஒவ்வொரு கருத்துக்கும் ஒரு குறியீடு, உச்சரிப்பு. சம்ஸ்க்ருதமும் ஆரம்பத்தில் சுலபமாக இருந்தாலும், அதன் இலக்கணம், சொல்வளம் ஆகியவை மலைப்பை ஏற்படுத்தும். புத்த மதம் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் ஒரு கலாச்சார பாலமாக அமைந்தது என்றாலும், பெரும்பாலான சீன மொழி பேசும் பவுத்தர்கள், தம் மத நூல்களை சீன மொழியில் படிக்கவே விரும்புவர். ஆனால், சீன மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ஜி, சம்ஸ்கிருதத்தை ஏன் கற்க ஆர்வம் கொண்டார் என்பது ஆச்சரியமான கேள்வி. இதற்கு ஜி சொன்ன பதில், அவரது சுயசரிதையில் இடம்பெற்றுள்ளது, “சீனக் கலாச்சாரம் இந்திய கலாச்சாரத்தின் பாதிப்புகளைப் பெரிதும் கொண்டது. இந்த இரண்டு நாட்டுக் கலாச்சார உறவுகளில் ஆய்வு செய்தால் பல புதிய கண்டுபிடிப்புகளை கண்டு பிடிக்க இயலும்”. சீன மொழியில் இராமாயணத்தைத் தவிர, இந்திய வரலாறு குறித்தும் நூல் ஒன்றை எழுதி உள்ளார். காகிதம், பட்டு போன்ற பொருட்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப் பட்டு வந்ததைக் குறித்தும் ஆய்வுகள் செய்து நூல்கள் எழுதி உள்ளார்.

உடல் நிலை சரியின்றி இருந்த ஜி 2009ம் ஆண்டு தனது 98ம் வயதில் காலமானார். ஆரோக்கியமான நீண்ட ஆயுள் குறித்து ஜி கூறும்போது, மூன்று விஷயங்களில் கட்டுப் பாடு தேவை. நேரத்தை வீணடிக்கக் கூடாது, உணவை தேடித் தேடித் தேர்ந்தெடுத்து உண்ணக் கூடாது, எதிலும் குறை சொல்லக் கூடாது. இம்மூன்றையும் கடைபிடித்தால், நீண்ட நாள் நிம்மதியாக வாழலாம் என்பது அவரது கருத்து.  ஜி அவர்கள் மொத்தம் ஏழு நூல்களையும் எண்ணற்ற கட்டுரைகளையும் எழுதி உள்ளார்.  இரு தேச கலாசார உறவுகளுக்கு இவரது பணி மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)