கிரந்தம் – நடப்பது என்ன?

அரசே ஒரு மொழியை/அறிவை பொதுமக்கள் கற்றுக் கொள்ள முடியாமல்  தடுப்பது சரியான நடவடிக்கை   அல்ல. ஆனால் துரதிருஷ்ட வசமாக சம்ஸ்க்ருதம், ஹிந்தி என்று மற்ற மொழிகளை தமிழர் தெரிந்து கொள்ளாமல் தடுப்பதே தமிழக அரசியலாக இருந்து வருகிறது. இப்போது கிரந்தம் ஒருங்குறியில் (Unicode) இணைப்பது குறித்து எழும் எதிர்ப்பிலும் இந்த வகை அரசியலே எதிரொலிக்கிறது.  மீடியாக்கள் முதல் தெருவில் இருக்கும் கடைகள் வரை கிரந்தம் இடம் பிடித்து விடும் – இதனால் தமிழ் அழியும் என்று கூட ஒருவர் தெரிவித்தார். இவ்வாறான அபத்தமான அச்சங்களுக்காக தமிழைத் தவிர மற்ற அறிவுச் செல்வங்கள் தமிழருக்கு தெரியாமல் போகும் அளவில்  தடுக்கப் படுகின்றன.

கிரந்தம் குறித்து தமிழக முதல்வர் கருணாநிதி அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். யூனிகோட் கன்சார்ட்டியம் என்று அழைக்கப்படும் ஒருங்குறியீட்டு கூட்டமைப்பில் வடமொழி மற்றும் கிரந்த எழுத்துக்களை இடம்பெறச் செய்வது தொடர்பான விவகாரத்தில் தமிழறிஞர்களுடன் கலந்து ஆலோசனை செய்த பின்னரே முடிவெடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த செய்தி பிரச்சனையை குழப்புவதாக உள்ளது. தமிழ் எழுத்துக்களுடன் கிரந்த எழுத்துக்களை சேர்க்கப் போகிறார்களா… அல்லது கிரந்தம் தனி எழுத்துருவாக ஒருங்குறியீட்டில் இணைக்கப் படப்போகிறதா என்பதைப் புரிந்து கொள்ளுவதில் தான் குழப்பம் இருப்பதாகத் தெரிகிறது.

அண்மையில் தமிழ்ஹிந்து வலைத்தளத்தில் கிரந்தம் குறித்த கட்டுரை ஒன்று வெளிவந்தது. அதில் கட்டுரை ஆசிரியர் திரு வினோத் ராஜன் கிரந்தம் குறித்த குழப்பங்களை இவ்வாறு தெளிவிக்கிறார்,

“தற்சமயத்தில் இணையம் எங்கும் தமிழ் யூனிகோடு கோடு சார்ட்டில் (Unicode Code Chart) தமிழில் கூடுதலாக 26 கிரந்த எழுத்துக்கள் சேர்க்கபப்டுவதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக சில தேவையற்ற குழப்பங்கள் நிலவி வருகின்றன. “விரிவாக்கப்பட்ட தமிழ்” என்பது ஒரு தனி விஷயம் இதற்கும் கிரந்தத்துக்கும் சம்பந்தமே இல்லை. இது போன்ற குழப்பங்களுக்கு, “விரிவாக்கப்பட்ட தமிழுக்கான” யூனிகோடு முன்மொழிவை திறந்து கூட பார்க்காதது தான் காரணம் என்று தெள்ளத்தெளிவாக தெரிகிறது. அதில் மிகத்தெளிவாகவே, முன்மொழியப்பட்ட “விரிவாக்கப்பட்ட தமிழ்” அட்டவணையில் துணைஎண்களுடன் கூடிய தமிழ் எழுத்துக்கள் தான் உள்ளன.”

“மற்ற இந்திய எழுத்துமுறைகளை போல் அல்லாது தமிழில் kha, gha, jha, dha, ba போன்ற எழுத்துக்களுக்கு வடிவமில்லை.  ஆகவே, தமிழில் சமஸ்கிருதம் உட்பட்ட பிற இந்திய மொழிகளை மூல உச்சரிப்பு மாறாமல் அச்சிட விரும்பியவர்கள், தமிழ் எழுத்துக்களுடன் 2,3,4 முதலிய எழுத்துக்களை சேர்த்து க² க⁴ ஜ² த⁴ ப³ என்றவாறு தமிழில் இல்லாத வர்க்க எழுத்துக்களை குறிக்க பயன்படுத்தினர்.”

“ஹிந்து சாத்திர, ஸ்தோத்திர நூல்களை அச்சிடுவோர் பல்லாண்டுகளாக பெரும்பாண்மையாக துணைஎண்களுடன் கூடிய எழுத்துக்களை பயனபடுத்துகின்றனர்.”

“இதன் அடிப்ப்டையில் தான், தமிழிலும் 2,3,4 ஆகிய துணைக்குறிகள் அடங்கிய எழுத்துக்களுக்கு தனி இடம் கேட்டு, “Extended Tamil” என்ற பகுதியை ஒதுக்கி, அதில் இவ்வெழுத்துக்களை சேர்க்க யூனிகோடு நிறுவனத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. எந்த இடத்திலும் கிரந்த எழுத்துக்களை இங்கு சேர்க்கவும் என்ற கேட்கப்படவில்லை “

இதிலிருந்து தெரிவது, தமிழில் ஏற்கனவே எண்களை இணைத்து எழுத்துக்களை பதிவது வழக்கத்தில் உள்ள முறைதான். ஸ்தோத்திர நூல்கள் தவிர்த்து மற்ற இடங்களில் இந்த பயன்பாடு கிட்டத்தட்ட இல்லவே இல்லை. ஏற்கனவே இருந்து வரும் வழக்கத்தால், தமிழ் எழுத்து முறை வளர்ச்சியோ தாழ்ச்சியோ அடையவில்லை. ஆகையால் இது குறித்த எதிர்ப்பு வெறும் அரசியலே தவிர வேறு எதுவும் இல்லை.

இவ்வாறு  எண்களை இணைத்து அச்சிடுவதால், வடமொழியை சரியாக தெரிந்து கொள்ள உதவும். அதோடு தத்துவங்கள், தோத்திரங்கள் ஆகியவற்றை சரியாக உச்சரிக்கவும், பயன்படுத்தவும் உதவும். வடமொழி மட்டும் அல்லாது மற்ற மொழிகளின் சொற்களும் பயன்படுத்துவது எளிமையாகும். இதனால் தமிழ் மொழியோ, அதன் எழுத்தமைப்போ மாறாது, அழியாது.

இன்னும் சொல்லப் போனால், பெரிதாக எந்த காரணமும் இல்லாமலே ஏற்கனவே தமிழ் எழுத்துமுறை மாற்றியமைக்கப் பட்டுள்ளது. தமிழில் னா, லை போன்ற எழுத்துக்கள் முன்பு கூட்டேழுத்துக்களாக அப்போதிருந்த அரசியல் நிலைக்கேற்ப மாற்றப் பட்டது.

கூட்டெழுத்தாக லை, னை போன்ற எழுத்துக்கள் அச்சிலும், பயன்பாட்டில் வீட்டு பட்டா பத்திரங்கள் போன்றவற்றிலும், பெருமளவில் பயன்பட்டு வந்த நிலையிலேயே திருத்தப் பட்டது. இதனை தமிழ் மொழி எழுத்து வளர்ச்சி என்றே கூறப் பட்டது. அரசியல் செல்வாக்கின் முன் மற்ற வாதங்கள் எடுபடாமல் போக இந்த சீரமைப்பு நிரந்தரமாகிவிட்டது. இதோடு ஒப்பிடும்போது விரிவாக்கப் பட்ட தமிழ் என்பது எழுத்தமைப்பில் பெரியதொரு மாற்றம் கூட இல்லை.

அடுத்து கிரந்தம் குறித்துப் பார்ப்போம். கிரந்தம் என்பது சம்ஸ்க்ருத மொழியை எழுத, உருவான ஒரு எழுத்தமைப்பு. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது. கல்வெட்டுகளிலும், ஓலைச்சுவடிகளிலும் மட்டும் அல்லது தற்காலத்தில் அச்சிலும் பயன்படுத்தப் பட்டு வருகிறது. சரஸ்வதி மகால் பதிப்பகம் மற்றும் சில வைணவ சமய பதிப்பகங்கள் கிரந்த லிபியில் புத்தகங்கள் அச்சிட்டு வருகிறார்கள். இப்போது கிரந்த எழுத்து முறை தமிழ் எழுத்து முறைக்கு சம்பந்தம் அற்ற வகையில் தனியாகத்தான் யூனிகோடில் இடம்பெறவிருக்கிறது. இதனால் தமிழ் எழுத்து முறைக்கு எந்த பாதிப்பும் இல்லை.

திரு வினோத் ராஜன் சொல்வது போல “எழுத்துமுறையும் மொழியும் ஒன்றல்ல. ஒரு மொழியானது பல்வேறு எழுத்துமுறைகளில் எழுதப்படலாம், அதே போல ஒரு எழுத்துமுறையானது பல்வேறு மொழிகளை எழுத பயன்படலாம். உதாரணமாக, செர்பிய மொழியானது இலத்தீன், சிரில்லிக் என்ற இரு எழுத்துமுறைகளிலும் எழுதப்படுகிறது. தேவநாகரி எழுத்துமுறையானது மராட்டி, ஹிந்தி, நேபாளம் முதலிய மொழிகளை குறிக்கப்பயன்படுகிறது.”.

கிரந்தம் எழுத்துமுறை ஒருங்குறியீட்டில் இடம் பெறுவதால், பல பழைய கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், புத்தகங்கள்  ஆகியவை அவற்றின் எழுத்து முறையிலேயே வலையேற்றப் படலாம். வலையில் நேரடியாக பழைய நூற் குறிப்புகளை தேட இயலும். ஆயுர்வேதம், யோகா ஆகிய நூல்கள், கலைகள் குறித்த பழைய இலக்கியங்களில் உள்ள குறிப்புகளை நேரடியாக தேடுவதும் சாத்தியமே. கிரந்தம் யூனிகோடில் இடம் பெறுவது நமது பாரம்பரிய அறிவை மீட்டெடுக்க உள்ள மிகச்சிறந்த வழி. இது அறிவு செல்வம் தங்கு தடையின்றி எந்த ஒரு குழுவினருக்கு மட்டுமானது என்று ஒளித்துவைக்கப் படாமல், எல்லோருக்குமாக சென்றடைய உதவும்.

5 Comments கிரந்தம் – நடப்பது என்ன?

  1. Raj

    This website seems to serve the purpose beyond dispute to prevent any political motives that intervene a common readers to exercise their right of choice of choose any language of their choice to learn and enjoy the true menings
    that can be brought out only by Sanscrit which is the mother of all langugages on earth.

  2. க்ருஷ்ணகுமார்

    நமோ நம:

    நமோ நம:

    இந்த ச்லாக்யமான ப்ரயத்னம் ஸபலமாக இறைவனை ப்ரார்த்திக்கிறேன்.

    தனித்தமிழ் மிகத்தூய்மையானது மனதிறிகும் ஹிதமளிப்பது. அது சிகரத்தில் மிளிரும். ஆனால் மற்ற பாரதீய பாஷைகள் தமிழுடன் கலப்பது காலத்தின் கட்டாயம். ஸம்ஸ்க்ருதம் தமிழுடன் கலப்பது ஸ்வாபாவிகமான மற்றும் பல நூற்றாண்டுகள் பழமையான ஒரு வழிமுறை. தமிழ் வழி ஸம்ஸ்க்ருதம் மிக நல்ல முயற்சி.

    தன்யோஸ்மி

  3. KSS Rajan

    என்னஒரு தீர்க்கமான ஆணித்தரமான் விள்க்கத்துடன் கூடிய கட்டுரை இதைப்படித்தேனும் அரசியல்வாதிகள் திருந்துவார்களா?

  4. விஷு

    சாலச்சிறந்த கருத்துக்கள்.ஆங்கிலம் தவிர்த்து வெறு ஒரு மொழியை கற்பது தமிழுக்கு ஆபத்து என தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் சிலர் ஏனோ பொய் நாடகம் ஆடுகிறார்கள். பாரத மக்களிடையே வெற்றுமையை வளர்ப்பதும் நமது ஹிந்து தருமத்தை சீர்குழைப்பதுமே இவர்களது மிக முக்கிய குறிக்கோள். தமிழ் மக்கள் இதை புரிந்துகொள்ள வெண்டும். திருக்கோபுரங்களின் தேசம் சிலுவைகளின் நகரமாகிவிடுமோ என்ற பயம் என்னுள் அடிக்கடி எழுகிறது.

    கிரந்தம் ஒரு அழகான எழுத்து முறைமை. கிரந்த எழுத்துக்கள் UNICODE செயல்முறையில் வந்துவிட்டதா? Font களும் மிகக் குறைவாகவே கிடைக்கின்றன

  5. அந்தோணி அசுரத்தமிழ்தேசத்தான்

    அவர் கூறுவது சரியாயினும், மக்கள் சிலர் அனைத்தையும் இந்து முஸ்லீம் கிறிஸ்துவர் என மதச்சாயம் பூச காத்திருப்பதால் தான் வடமொழிகளின் தாக்கத்தை தமிழர்களாகிய நாங்கள் விரும்புவதில்லை. மொழியையும் மதத்தையும் பிரிவினைகளையும் நீங்கள் பிரித்துப் பார்க்க கற்றுக்கொள்ளுங்கள். நாங்கள் தமிழில் மற்ற மொழிகளை கலப்பதை பற்றி யோசிக்கிறோம். நன்றி🙏

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)