கொங்குதேர் வாழ்க்கை முதலிய குறுந்தொகை பாடல்கள் சம்ஸ்க்ருதத்தில்!

தமிழ் சங்க நூல்களில் எட்டுத் தொகை என்னும் தொகுப்பில் உள்ள மிகப் பழமையான நூல் குறுந்தொகை. பல்வேறு உரையாசிரியர்களால் மேற்கோள் காட்டப்பட்ட நூலும் இதுவே. இயற்கையின் ஊடாக காதலை பொருத்தி அகத்திணையில் அமைந்துள்ள நானூறு பாடல்கள் கொண்ட நூல். இருநூறுக்கும் மேற்பட்ட புலவர்கள் எழுதிய செய்யுள்கள் இதில் உள்ளன. தமிழில் மிக முக்கியமான இலக்கியமான குறுந்தொகை சம்ஸ்க்ருதத்தில் ஸ்ருங்கார பத்யாவளி என்னும் பெயரில் வெளிவந்துள்ளது. சிருங்காரம் என்பது அழகியல், பத்யாவளி என்பது மாலையாக தொகுக்கப் பட்ட கவிதை தொகுப்பு என்று அர்த்தம். நூற்றி ஐம்பது ரூபாய் மதிப்புள்ள இந்நூல் சாஹித்ய அகாதமி வெளியீடு (ISBN 81-260-1788-0).

இம்மொழிபெயர்ப்பில் குறுந்தொகையில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட இருநூறு பாடல்கள் சம்ஸ்க்ருதத்திலும் ஆங்கிலத்திலும் அளிக்கப்பட்டுள்ளது. பலவகையான சந்த அமைப்பில் அழகழகான சம்ஸ்க்ருத கவிதைகளாக இதனை மொழி பெயர்த்தவர் திரு.ஏ.வி.சுப்ரமணியன் ஆவார். இவர் 1924ல் பிறந்தவர், முதலில் ரயில்வே துறையில் வேலை பார்த்த இவர், மதம், இலக்கியம், தத்துவம் என்ற பல துறைகளில் தேர்ச்சி பெற்றவர். உலக நாடுகள் பலவற்றுக்கும் பயணித்து, அங்கே உரைகள் ஆற்றியவர். எண்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் இயற்றியுள்ளார். இவற்றில் சுமார் முப்பது நூல்கள் கலை, இலக்கியம் சார்ந்தவை. தமிழக அரசால் விருது அளிக்கப்பட்டு கவுரவிக்கப் பட்டுள்ளார். இவரது சம்ஸ்க்ருத புலமை இந்நூலில் நன்கு வெளிப்படுகிறது.

இந்நூலில் இருந்து சில கவிதைகளைப் பார்ப்போம்.

யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.
-செம்புலப் பெயனீரார். (குறுந்தொகை – 40)

மிகவும் பிரபலமான இப்பாடல் சம்ஸ்க்ருதத்தில்,

क: सम्बन्धस्ते च मे मातुरस्ति किं बन्धुत्वं त्वत्पितुर्मत्पितुश्च।
प्रेम्ण: पूवं नावयो: संगलेश: एकीकुर्वन्प्रेमबन्धो युनक्ति॥
पर्जन्यरससंपृक्तरक्तमृत्कर्दमो यथा।
चेतसी चाक्योरद्य संयुक्ते समवायिनी॥

க: ஸம்ப³ந்த⁴ஸ்தே ச மே மாதுரஸ்தி கிம்ʼ ப³ந்து⁴த்வம்ʼ த்வத்பிதுர்மத்பிதுஶ்ச|
ப்ரேம்ண: பூவம்ʼ நாவயோ: ஸங்க³லேஶ: ஏகீகுர்வன்ப்ரேமப³ந்தோ⁴ யுனக்தி||
பர்ஜன்யரஸஸம்ப்ருʼக்தரக்தம்ருʼத்கர்த³மோ யதா²|
சேதஸீ சாக்யோரத்³ய ஸம்ʼயுக்தே ஸமவாயினீ||

பிரிவுக்கு அஞ்சி வருந்தும் தலைவியை தலைவன், எங்கோ பிறந்து வளர்ந்த நாம், மழை செம்மண்ணில் கலந்து பிரிக்க முடியாததாக ஆனது போல, கடவுள் அருளால் இணைந்துள்ளோம், அதனால் பிரிவு என்பது நமக்கு இல்லை என்று தேற்றுவதாக அமைந்த பாடல். மொழி பெயர்ப்பில் முதல் இரண்டு அடிகள் சாலினி விருத்தத்திலும் கடைசி இரண்டடிகள் அனுஷ்டுப் சந்தத்திலும் அமைந்துள்ளது.

மற்றொரு அழகிய பாடல்,

நோம்என் நெஞ்சே நோம்என் நெஞ்சே
இமைதீய்ப் பன்ன கண்ணீர் தாங்கி
அமைதற் கமைந்தநங் காதலர்
அமைவிலர் ஆகுதல் நோம்என் நெஞ்சே.
-காமஞ்சேர் குளத்தார். (குறுந்தொகை – 4)

क्लिष्टं चिरं दु:खघनं मनो मे यद्बाष्पमक्षिप्रतपन्तमेनम्।
न दैवक्लुप्त: परिमार्ष्टि भर्ता चिराय यातो दयितां विहाय॥

க்லிஷ்டம்ʼ சிரம்ʼ து³:க²க⁴னம்ʼ மனோ மே யத்³பா³ஷ்பமக்ஷிப்ரதபந்தமேனம்|
ந தை³வக்லுப்த: பரிமார்ஷ்டி ப⁴ர்தா சிராய யாதோ த³யிதாம்ʼ விஹாய||

தலைவனின் பிரிவால் கண்ணீர் பெருகி கன்னத்தில் தீயாக சுட்டு வழிந்தோட, அதை துடைத்து விடவேண்டியவனோ எங்கோ சென்றுவிட்டான் என்று தலைவனை நினைந்து ஏங்கும் மனதிடம் தலைவி பேசுவதாக இந்த பாடல் அமைந்துள்ளது. இதனை உபஜாதி சந்தத்தில் சம்ஸ்க்ருதத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

மற்றொரு பாடல், திருமணத்திற்கு காலம் கடத்தும் தலைவனை பழித்த தோழிக்கு தலைவி தன் காதலனை உயர்வாகக் கூறுகிறாள் (இதனை தலைவன் மறைந்திருந்து கேட்பதாகவும் கூறுவர்).

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.
-தேவகுலத்தார் (குறுந்தொகை – 3)

स्नेहो गिर्श्वरसुतेन महान्प्रुथिव्या: उच्चैर्दिवोऽपि गहनो जनधेर्नितान्तम्।
यस्य क्षमाधरतटेषु कुरिञ्जीपुष्पगुच्छस्रवन्मधुचयं कुरुतेऽलिवृन्द:॥

ஸ்நேஹோ கி³ர்ஶ்வரஸுதேன மஹான்ப்ருதி²வ்யா: உச்சைர்தி³வோ(அ)பி க³ஹனோ ஜனதே⁴ர்னிதாந்தம்|
யஸ்ய க்ஷமாத⁴ரதடேஷு குரிஞ்ஜீபுஷ்பகு³ச்ச²ஸ்ரவன்மது⁴சயம்ʼ குருதே(அ)லிவ்ருʼந்த³:||

பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூவின் தேன் போன்றது என் தலைவனுடனான நட்பு என்று தான் காத்திருப்பதில் அர்த்தம் இருக்கிறது என்று தலைவி உணர்த்துகிறாள்.

திருவிளையாடல் திரைப்படத்தின் மூலமாக பாமரர்களும் அறிந்த மிகப் பிரபலமான பாடல் இறையனாரின் கொங்குதேர் வாழ்க்கை…

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே.
-இறையனார் (குறுந்தொகை 2)

मधुकर सुमरेणुघ्राणकर्मप्रवीण छदयुगलयुत त्वं ब्रुहि सत्यं न काम्यम्।
चिरपरिचितगाढस्नेहवन्मञ्जुलाया: सुरभितरसुमं किं केशहस्तादिहास्ते॥

மது⁴கர ஸுமரேணுக்⁴ராணகர்மப்ரவீண ச²த³யுக³லயுத த்வம்ʼ ப்³ருஹி ஸத்யம்ʼ ந காம்யம்|
சிரபரிசிதகா³ட⁴ஸ்னேஹவன்மஞ்ஜுலாயா: ஸுரபி⁴தரஸுமம்ʼ கிம்ʼ கேஶஹஸ்தாதி³ஹாஸ்தே||

அழகிய மாலிநீ விருத்தத்தில் சம்ஸ்க்ருதத்தில் அமைந்துள்ளது.

kuruntogai

இன்னும் ஏராளமான அழகிய சந்தங்களில் அமைந்துள்ள பாடல்களைக் கொண்ட இந்நூல் மிகவும் முக்கியமானது. சம்ஸ்க்ருதத்தில் இது போல மொழி பெயர்க்க வேண்டிய அவசியம் என்ன? இக்காலத்தில் யார் சம்ஸ்க்ருதத்தில் குறுந்தொகை பாடல்களைப் படிக்கப் போகிறார்கள்? தேவை என்றால் ஆங்கிலத்தில் படித்துக் கொள்ளலாமே என்று சிலர் கேட்கக் கூடும். ஆனால் இது வெறும் குறுந்தொகை பாடல்களில் உள்ள கருத்துக்களை மட்டும் அறிய முற்படும் முயற்சிக்காக மட்டும் அன்று. படிப்பவரை மயக்கி உணர்வெழுச்சியை தரவல்ல அழகிய பாடல்களைக் கொண்ட குறுந்தொகையின் அனுபவம் சம்ஸ்க்ருத மொழிபெயர்ப்பில் மேலும் ஒளிருகிறது. வாசிப்பின்பத்தை தருகிறது. அந்த வகையில் இது போன்ற மொழிபெயர்ப்புகள் அவசியம்.

2 Comments கொங்குதேர் வாழ்க்கை முதலிய குறுந்தொகை பாடல்கள் சம்ஸ்க்ருதத்தில்!

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)