ஒரு சில மொழிகளை தவிர பெரும்பாலும் மொழிகளுக்கு ஒலி வடிவமும் – வரி அல்லது எழுத்து வடிவமும் நிச்சயம் இருக்கும். ஒலி வடிவம் கால ஓட்டத்தில் எத்தனை திரிந்து மாறிப் போனாலும், எழுத்து வடிவங்கள் ஒலி வடிவத்தை விட பல காலங்களுக்கு நிலைத்த தன்மையை ஒரு மொழிக்கு அளிக்கும். மொழியின் சிறந்த எந்த ஒரு படைப்பும் எழுதி [அல்லது கல்வெட்டில் பொறித்து] வைக்கப் படாமல் போனால் சில நூறு ஆண்டுகளில் மறைந்து போகும். நமது வேதங்கள் – சாத்திரங்கள் – பாரம்பரிய படைப்புகள் பெருமளவு இன்று மறைந்து போனதற்கு இவ்வாறு எழுதி வைக்கப் படாமல் வாயால் ஓதி மனதில் பதியவைத்து பிறகு அடுத்த தலை முறைக்கு சொல்லி கொடுத்தது ஒரு காரணமாக இருக்கலாம். சொல்லிக் கொடுப்பவருக்கும் – கேட்டு தெரிந்து கொள்பவருக்கு உள்ள நினைவாற்றலை பொறுத்தே இந்த ஞானம் நிலை பெற்று வந்திருக்கிறது.
பிற்கால நூல்கள் பலவும் ஓலை சுவடிகளில் எழுதி வைக்கப் பட்டு பாதுகாக்கப் பட்டு இன்று நமக்கு கிடைத்துள்ளன. இவ்வாறு ஒரு மொழிக்கும் அதன் படைப்புகளும் எழுதி பாதுகாக்கப் படுவது மிகவும் அவசியம். அதனாலேயே எழுத்துக்களுக்கு அக்ஷரம் என்று பெயர். க்ஷரம் என்றால் அழியக்கூடியது – அக்ஷரம் என்பது நிலையானது என்று புரிந்து கொள்ளலாம். இதை புரிந்து கொண்டுதான் நமது முன்னோர்கள் அக்ஷர அப்யாசம் என்கிற ஒரு வழக்கத்தை ஏற்படுத்தினார்கள். அக்ஷரமாகிய எழுத்துக்களை – அப்யாசம் – பயிற்சி செய்தல் என்று பொருள். [தேக அப்யாசம் – என்றால் உடல் பயிற்சி]. இதை ஒரு பண்டிகையாகவே ஒவ்வொரு வருடமும் – நவராத்திரி சமயத்தில் விஜய தசமி அன்றைக்கு குழந்தைகளை – பள்ளிக்கு [முன்னாட்களில் குருகுலத்திற்கு] அனுப்பி ஆசிரியர் உதவியுடன் நெல்லில் குழந்தைகளை மொழியின் முதல் எழுத்துக்களை எழுத செய்வார்கள்.
சமஸ்க்ருத மொழியை எப்படி எழுதுவது? இந்த மொழியில் என்னென்ன எழுத்துக்கள் உள்ளன என்பன போன்ற அடிப்படை அம்சங்களை இக்கட்டுரையில் காண்போம். வாருங்கள் – அக்ஷர அப்யாசம் செய்வோம்.
சம்ஸ்க்ருத மொழியை பொறுத்த வரை, அதற்கு மட்டுமே என்று எந்த ஒரு எழுத்து [லிபி] முறையும் இல்லை. கல்வெட்டுகளில் எழுதப்பட்ட பிராமி லிபி, தமிழில் கிரந்த லிபி, தேவநாகரி லிபி என்று பல்வேறு எழுத்து முறைகளிலும் எழுதப் பட்டு வந்திருக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருந்துதான் பெருமளவு தேவநாகரி முறையே சமஸ்க்ருத எழுத்துக்களை எழுத உபயோகப் படுத்தப் பட்டு வருகிறது.
தமிழும் தேவநாகரி எழுத்துக்களும் கலந்து எழுதினால் கருத்தை விட எழுத்து வித்தியாசங்கள் பெரிதாக தெரியும் – கிரந்த லிபி இதற்கு ஒரு தீர்வாக பண்டைய நாட்களில் உபயோகப் படுத்தி வந்தனர். இன்றும் மலையாளம், துளு ஆகிய மொழிகள் கிரந்த லிபியை சிறு மாற்றங்களுடன் கொண்டிருக்கின்றன. தேவநாகரி எழுத்துக்களில் சமஸ்க்ருதத்தின் ஒவ்வொரு ஒலிக்கும் எழுத்துக்கள் உள்ளன [கன்னட – தெலுங்கு – மலையாளம் போன்ற மொழிகளின் எழுத்துக்களிலும் சமஸ்க்ருதத்தின் எல்லா எழுத்தின்
ஒலிகளையும் எழுத இயலும்]. பெரும்பாலும் புழக்கத்தில் இருப்பதாலும், தட்டச்சு செய்ய யூனிகோடு அனுமதிப்பதாலும்,தேவநாகரி எழுத்துக்களையே இந்த தளத்தில் உபயோகப் படுத்துவோம் – அவ்வப்போது கிரந்த லிபியும் வரும்.
தேவநாகரி அக்ஷரங்கள் தெரியாதவர்கள் பயிற்சி செய்ய இந்த பக்கம் மிகவும் உதவும்.
மற்ற மொழிகள் போல அல்லாமல் சம்ஸ்க்ருத மொழியில் ஒலிக்கு அதிகம் முக்கியத்துவம் உண்டு என்று சொல்லலாம். சம்ஸ்க்ருத மொழியில் உள்ள ருக் வேதம் [ருக் வேத காலத்தில் சமஸ்க்ருதம் சந்தஸ் என்ற பெயரில் இருந்தது] இன்றைய நாளுக்கு ஐயாயிரம் ஆண்டுகள் முந்தையது என்று ஆராய்ச்சியாளர்களே கணக்கிடுகிறார்கள். இன்று வரை ரிக் வேதம் பாதுகாக்கப் பட்டு வந்ததற்கு சமஸ்க்ருத சொற்களின் ஒலிகளை சுத்தமாக பயின்று வந்ததே காரணம் என்று புரிந்து கொள்ளலாம். சமஸ்க்ருதத்தில் மொத்தம் ஐம்பத்தியொரு அக்ஷரங்கள் [ஒலிகள்] உள்ளன (अ முதல் अ: வரை 16 + க முதல் ம வரை 25 + य, र, ल, व, श, ष, स, ह 8 + क्ष க்ஷ மற்றும் ஓம் ॐ) – இந்த தொகுப்பே வர்ணமாலா என்று அழைக்கப் படுகிறது.
சமஸ்க்ருத மொழியில் உயிரெழுத்துக்களை ஸ்வரம் (स्वर:) என்றும், ஏனைய மெய் எழுத்துக்களை சுத்த வியஞ்ஜனம் (शुद्ध व्यंजन:) என்றும், உயிர்மெய் எழுத்துக்கள் வியஞ்ஜனம் (व्यंजन:) அழைக்கப் படுகிறது. சமஸ்க்ருத சொற்களை தேவநாகரியில் எழுதும்போது, ஹிந்தி மொழியைப் போல சொல்லின் கடைசி எழுத்தை மெய் எழுத்தாக படிக்கக் கூடாது. राम என்பதை ராம் என்று படிக்கக் கூடாது. ராம என்றே படிக்க வேண்டும்.
தமிழில் உள்ள உயிர் எழுத்துக்கள் எல்லாமே சமஸ்க்ருதத்திலும் உண்டு. இது தவிர சில எழுத்துக்களும் உள்ளன. சமஸ்க்ருத உயிர் எழுத்துக்கள்:
अ(அ), आ(ஆ), इ(இ), ई (ஈ), उ(உ), ऊ(ஊ), ऋ(ரி), ॠ(றி), ऌ, ॡ – (தமிழில் உச்சரிப்பு இல்லை), ए(எ), ऐ(ஐ), ओ(ஒ), औ(ஔ), अं(அம்), अः(அஹ) |
தமிழில் மெய் எழுத்துக்களை எழுத்துக்களின் மீது புள்ளி வைத்து குறிக்கிறோம் – தேவநாகரி முறையில் எழுத்தின் கீழே சிறு கோடு (क्,च्, प् etc) இழுக்கிறோம் – இந்த சிறு கோட்டுக்கு விராம (विराम:) அல்லது ஹலந்த (हलन्त:) என்று அழைக்கப்படுகிறது. இது தவிர உயிர்மெய் எழுத்துக்களில் சொல்லும் முறைக்கு தக்கபடி தொகுக்கப் பட்டுள்ளது. வல்லின எழுத்துக்களான க, ச, ட, த, ப ஆகியவை நான்கு விதமான அழுத்தங்களில் ஒலிக்கப் படுகிறது. அதோடு மட்டுமன்றி இந்த எழுத்துக்கள் ஒவ்வொன்றும் ஒலிக்கும் போது நாக்கு எங்கே இருக்குமோ அதற்கேற்றபடி மெல்லின எழுத்து அமைக்கப் பட்டுள்ளது – இந்த மெல்லின எழுத்தை அனுநாசிக (अनुनाशिक) என்று அழைக்கப் படுகிறது.
- कण्ठ्य – ஆங்கிலத்தில் velar consonants என்று அழைக்கிறார்கள். இது நாக்கின் தொடக்கத்திலிருந்து எழுப்பப்படும் ஓசை.
- तालव्य – இது palatal consonants என்று அழைக்கப் படுகிறது. இது நாக்கின் மேலே மேலண்ணத்தில் நாவால் தொட்டு எழுப்பப் படும் ஓசை.
- मूर्धन्य – இது retroflex அல்லது cerebral consonants என்று அழைக்கப்படுகிறது. இது பல்லின் பின்புறம் நாக்கால் தொட்டு எழுப்பப் படும் ஓசை.
- दन्त्य – இது dental அல்லது பல்லில் காற்றை படவைத்து எழுப்பப் படும் ஓசை.
- ओष्ठ्य – இது labial அல்லது உதடுகளால் எழுப்பப் படும் ஓசை.
இது தவிர ய நாக்கின் பின்புறத்திலிருந்தும், ர நாக்கின் மேலண்ணத்தில் இருந்தும், ல பல்லின் பின்புறம் இருந்தும், வ பல்லில் உதடுகளை வைத்து ஒலிக்கப் படுகிறது. இதே போலவே स, ष, श, ह எழுத்துக்கள் குரல்வளையிலேயே காற்றை தடுத்து ஒலிக்கப்படுகின்றன.
சம்ஸ்க்ருத அக்ஷரங்களை கற்றுக்கொள்ளும் பொது, தமிழ் போன்ற ஏனைய மொழிகளைப் போல், अ, आ, என்று ஆரம்பித்து अं, अ: என்று முடிப்பது ஒரு வகை. ஆனால் தமிழுக்கு தொல்காப்பியரைப் போல, சமஸ்க்ருதத்தில் இலக்கணம் வகுத்த பாணினி தனது அஷ்டாத்யாயி என்கிற வியாகரண – இலக்கண நூலை எழுதும்போது இந்த வகையை உபயோகிக்கவில்லை. அவர் உபயோகித்த அக்ஷர வரிசை கீழ்கண்ட வாறு உள்ளது.
சிவ சூத்திரங்கள் |
---|
१. अ इ उ ण् | २. ऋ ऌ क् | ३. ए ओ ङ् | ४. ऐ औ च् | ५. ह य व र ट् | ६. ल ण् | ७. ञ म ङ ण न म् | ८. झ भ ञ् | ९. घ ढ ध ष् | १०. ज ब ग ड द श् | ११. ख फ छ ठ थ च ट त व् | १२. क प य् | १३. श ष स र् | १४. ह ल् | |
இந்த வரிசையை சிவ சூத்திரங்கள் அல்லது மாஹேஸ்வர சூத்திரங்கள் (माहेश्वर सूत्राणि) என்று அழைக்கிறார்கள். இந்த ஒவ்வொரு வரிசையிலும் கடைசி எழுத்து அனுபந்தம் என்று பெயர். அது ஒரு வெற்று ஒலியாக மட்டுமே கொள்ளப் படுகிறது. பாணினியின் இலக்கண சூத்திரங்களில் இந்த எழுத்துக்களை தொகுப்பாகவே கொள்கிறார் – அதாவது अल् என்பது முதல் எழுத்தான அ முதல் கடைசி எழுத்தான ஹ வரை உள்ள எல்லா எழுத்துக்களையும் குறிக்கும். अण् என்றால் முதல் மூன்று எழுத்துக்களை குறிக்கும். இதை தெரிந்து கொள்வது பாணினியின் சூத்திரங்களை அறிந்து கொள்ள இது உதவும். இந்த எழுத்து வரிசைகளை சிவ பெருமானின் உடுக்கை ஒலியிலிருந்து பாணினி பெற்றதாக, இறைவன் வெளிப்படுத்தியதாக புராணங்கள் கூறுகின்றன.
தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிகளை நன்கு அறிந்தவர்களுக்கு சம்ஸ்க்ருதம் கற்க இந்த ஒலி அமைப்பு ஒரு மனத்தடையை ஏற்படுத்தக் கூடும். யோசித்து பார்த்தால் தமிழில் உள்ள எல்லா ஒலிகளுக்கும் எழுத்துக்கள் இல்லை என்பது விளங்கும் – உதாரணமாக பண்பு என்று எழுதியதை படிக்கும் பொது banbu என்றோ panpu என்றோ படிப்பதில்லை – panbu என்றே படிக்கிறோம் – இங்கே ஒரே எழுத்தே இரு வேறு அழுத்தத்தில் ஒலிக்கிறது; பற்று என்பதை parrru என்று படிப்பதில்லை – இவ்வாறு உள்ள அமைப்பை ஆராய்ந்து இன்ன எழுத்துக்கு பின் இன்ன எழுத்து வந்தால் அதற்கு இன்ன ஒலி என்று தகுந்த ஒலி இலக்கணம் வகுத்த தொல்காப்பியரை மாமேதை என்று தான் தலை வணங்க வேண்டும். தமிழ் தெரியாத வேற்று மொழி மனிதர் ஒருவர் இதை கற்பது மிகவும் கடினம். ஆங்கிலத்தைப் போல small – capital letters சமஸ்க்ருதத்தில் இல்லை. ஆக இந்த மொழிகளை விட சமஸ்க்ருதம் கற்பது ஒன்றும் கடினமல்ல.
[படம் – நன்றி தினமலர்]
Support and use/promote Grantha lipi instead of Devanagari.
//யோசித்து பார்த்தால் தமிழில் உள்ள எல்லா ஒலிகளுக்கும் எழுத்துக்கள் இல்லை என்பது விளங்கும் – உதாரணமாக பண்பு என்று எழுதியதை படிக்கும் பொது banbu என்றோ panpu என்றோ படிப்பதில்லை – panbu என்றே படிக்கிறோம் – இங்கே ஒரே எழுத்தே இரு வேறு அழுத்தத்தில் ஒலிக்கிறது;//
தமிழில் உள்ள விதி முறையானது. முதல் எழுத்தாக வந்தாலோ அல்லது வல்லின ஒற்று முன் வந்தாலோ மட்டுமே ஒரு வல்லின எழுத்து வலித்து ஒலிக்கும். மற்ற இடங்களில் மெலிந்தே ஒலிக்கும். எனவே இரண்டே இரண்டு சூழல்களில் மட்டும்தான் தமிழின் வல்லின எழுத்துகள் வலித்து ஒலிக்கும்.
//தமிழ் தெரியாத வேற்று மொழி மனிதர் ஒருவர் இதை கற்பது மிகவும் கடினம்//
ஒன்றும் கடினம் இல்லை. ஏனெனில், இது முறை சார்ந்தது, ஒழுங்குடன் அமைந்தது.
செல்வா
வாட்டர்லூ, கனடா
अण् என்பது முதல் மூன்று எழுத்துகளின் தொகையைச் சுட்டும் என்பது புரியும், ஆனால் 6 ஆவது சூத்திரத்திலே ल ण् என்று உள்ளதே, ஏன் अ வில் தொடங்கி ल வரையிலும் உள்ள எழுத்துகள் அடங்காது (இது பொருத்தமான தொகை இல்லை என்பதை உணர்கிறேன்)? அதே போல ஒரு வேளை हण् என்பது 5-6 ஆவது சூத்திரங்களில் உள்ள ह य व र ६. ल ஆகிய ஆறு எழுத்துகளைத் தொகையாகக் குறிக்குமா? தமிழில் இடையின எழுத்துகளான யரலவழள என்பன போல?
செல்வா
வாட்டர்லூ, கனடா
என் முன் மடலில் ह य व र ल ஆகிய ஐந்து எழுத்துகள் என்று படிக்கவும்.
இன்னொரு கேள்வி:
அட்சரம் என்பதற்கும் லிபி என்பதற்கும் என்ன வேறுபாடு?
லிபி என்பது ஒலியெழுத்தைக் குறிக்கும் வரிவடிவமா (இது வெவ்வேறாக இருக்கலாம். உரோமன் எழுத்தாகவும் இருக்கலாம்)?
என் வலைப்பதிவின் முகவரி தவறுதலாக இருந்தது. மன்னிக்கவும்.
Pingback: செயலில் இறங்குவோம் “க்ரியாபத3ம்” ! | Sangatham
http://www.youtube.com/watch?v=RTV0i5ODNAQ
Many young people in UK,USA,etc., are eager to learn sanskrit. To facilitate self-learning, lessons may be prepared and uploaded.
Samskrutha Bharathi is doing good service by conducting Samskrutham examinations. They teach the methods for spoken Samskrutham.
स्तुत्याः प्रयासाः। अभिनंदनं ।
I want to learn sanskrit.please guide me.
Everbody has known must this language. Therinthirukka vendum!
Nandri.
The great Samskrit language
Please read my blog:
https://lvnaga.wordpress.com/2015/10/14/phonetics-of-devanagari-and-tamil-scripts/
Nagarajan
ஸமஸ்க்ருத எழுத்து முறைமையை பற்றி பேசும் போது, எனக்கு ஒரு நீண்டநாள் ஐயம் உள்ளது. ஸமஸ்க்ருதம் முதலான பல பாரதீய பாஷைகளில் “க்ஷ” (क्ष) ஒரு ஸம்யுக்த அக்ஷரமாக இருப்பினும் ஒரு வ்யஞ்ஜனமாக ஏற்கப்படுவதன் காரணம் என்ன? 51 மாத்ருகா தேவியருள் “க்ஷ” ஈற்றில் இடம்பெற்று க்ஷகார தேவி க்ஷமாவதி, மாயாமாலினி, இந்த்ராக்ஷி என பொற்றாப்படுகிறாள். பல ஸம்யுக்த அக்ஷரங்கள் இருப்பினும் இந்த க்ஷ’கரத்தின் சிறப்புதான் என்ன.
தயைகூர்ந்து இதன் விளக்கத்தை எனக்கு கூறுவீர்களா?
Sir, Namskaram. I want to learn Sanskrit. I know Hindi, Tamil, English. I want to start Sanskrit from the beginning, children’s primary stage. Thanks and regards.