சொற்குற்றம், பொருட்குற்றம்…

எழுதியவர்: க்ருத்திவாசன்

சம்ஸ்க்ருதம் போன்ற மொழிகளில் மட்டுமே தான் ஒரே எழுத்துக்கு நான்கு வகையான ஒலிக் குறிப்புகள் (க, க) உள்ளன என்பது தவறு – தமிழிலும் உண்டு. காடு என்பதில் உள்ள டு உச்சரிப்பு காட்டு என்பதில் உள்ளதுடன் மாறுபடுவது போல. (மேலும் ட = படம், பட்டம், கி = முகில், மூங்கில்…) தமிழ் இலக்கணத்தில் நான்கு ஒலிகளுக்கு நான்கு எழுத்துக்கள் இடாமலே சாமர்த்தியமாக அமைத்திருக்கிறார்கள். மந்திரங்கள் என்று வரும் போது தமிழானாலும், சம்ஸ்க்ருதமானாலும் சரியான உச்சரிப்பு, பொருள் உணர்ந்து ஓதுவது ஆகியவை அவசியம்.

அண்மையில் தொலைக்காட்சியில் தினம் ஒரு மந்திரம் என்கிற ஆன்மீக நிகழ்ச்சியில் வேதாள ரூபிணி மந்திரம் என்று ஒன்றை ஒரு ஆன்மீகப் பெரியவர் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அதில் “மம வசம் குரு குரு…” என்ற வரி மந்திரத்தில் வரும் போது குரு என்பது (குழந்தை என்பது போல மெல்லொலியாக உச்சரித்தால் “என் வசம் வரச் செய்வாய்…” என்று அர்த்தம் வரும். ஆனால் இவர் உச்சரிக்கிற விதம் குரு (குகை என்பதில் வருகிற கு மாதிரி, குரு – ஆசிரியர்) என்கிற மாதிரி உச்சரிக்கிறார். இதனால் மந்திரம் அனர்த்தமாகி விடுகிறது. அவருக்கு சம்ஸ்க்ருதம் தெரியாதது பிரச்சனை இல்லை, ஆனால் மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வரும் போது சரியாக சொல்லித் தரவேண்டாமா?

மீமாம்சா சாத்திரங்களில் உச்சரிப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. உச்சரிப்பு பிறழ்ந்ததால் “நித்யத்வம்” என்று இறவா வாழ்க்கையை கேட்க நினைத்த கும்பகர்ணன் நா பிறழ்ந்து “நித்ரத்வம்” என்று உச்சரிப்பு மாறி தூக்கத்தை வரமாக பெற்ற கதை தெரிந்திருக்கும்.

சரியான உச்சரிப்பு சரியான அர்த்தத்தைத் தரும் என்ற வகையில் சாத்திரங்கள் சொன்னாலும், இக்காலத்தில் அர்த்தத்தை விட்டு விட்டு வாயால் ஓதுவதே போதும் என்று கூறுவோர் பலர் இருக்கிறார்கள். ஒரு மந்திரம் எவ்வளவுக்கெவ்வளவு புரியாமல் இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு அது சிறந்த புனிதமான மந்திரம் என்று கூட கருதத் துவங்கி விட்டனர். மந்திரங்களின் அர்த்தங்கள் வெகு சிலரே அர்த்தம் புரிந்து ஓத முடியும். பெரும்பாலும் புரோஹிதர்கள் அர்த்தம் தெரியாமல் மனப்பாடம் செய்த படியால் அப்படியே மனப்பாடம் செய்தவாறு ஓதுகிறார்கள். இதற்கு மந்திரம் ஓதுகிற சத்தத்தில் இருந்து வைப்ரேஷன் (மந்திர அதிர்வு) எழுகிறது – அது கும்பத்தில் இருக்கும் நீரில் தர்ப்பை புல்லின் வழியாகப் பாய்கிறது என்றெல்லாம் அறிவியல் ஆதாரமற்ற நம்பிக்கை கதைகள் பின்னப் பட்டு விட்டன. அதிர்ஷ்டக் கல் மோதிரம் போட்டால் அதன் ஒளிக்கதிர்கள் பட்டு அதிருஷ்டம் வரும் என்று சொல்வதைப் போன்றது தான் இது.

மஹா பாஷ்யத்தில் இலக்கணத்தை ஏன் நாம் கற்க வேண்டும் என்பதற்கு, பதஞ்சலி முனிவர்:

ऊहः खलु अपि। न सर्वैः लिङ्गैः न च सर्वाभिः विभक्तिभिः वेदे मन्त्राः
निगदिताः। ते च अवश्यं यज्ञगतेन यथायथं विपरिणमयितव्याः। तान्न अवैयाकरणः
शक्नोति यथायथं विपरिणमयितुम। तस्मादध्येयं व्याकरणम्।

ஊஹ​: க²லு அபி| ந ஸர்வை​: லிங்கை³​: ந ச ஸர்வாபி⁴​: விப⁴க்திபி⁴​: வேதே³ மந்த்ரா​:
நிக³தி³தா​:| தே ச அவஸ்²யம்ʼ யஜ்ஞக³தேன யதா²யத²ம்ʼ விபரிணமயிதவ்யா​:| தான்ன அவையாகரண​:
ஸ²க்னோதி யதா²யத²ம்ʼ விபரிணமயிதும| தஸ்மாத³த்⁴யேயம்ʼ வ்யாகரணம்|

வேத மந்திரங்களில் ஆண்பால் – பெண்பால் ஆகிய பாலினம், ஒருமை பன்மை என்று எல்லா சந்தர்ப்பங்களுக்கும் மந்திரங்கள் விதவிதமாக தரப் படவில்லை. ஒருமையோ, பன்மையா ஒரே வகை தான் தரப் பட்டுள்ளது, இலக்கணத்தைக் கற்காதவரால் அந்தந்த சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு மந்திரங்களை மாற்றி சரியான அர்த்தத்தில் பிரயோகிக்க முடியாது. ஆகவே வியாகரணத்தைக் கற்க வேண்டும் என்று கூறுகிறார். இதில் ஒரு வைதிகர் முதலில் வேத மந்திரங்களை மனப்பாடம் செய்ய வேண்டும், பின் இலக்கணத்தை அனுசரித்து அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு அதனை மாற்றி சொல்ல வேண்டும் என்பது நடைமுறையில் மிகவும் சிக்கலானது. பொதுவாக மந்திரங்களை மாற்றாமல் சொல்வதே புனிதமானது என்கிற எண்ணம் இருக்கிறது – மீமாம்சா சாத்திரங்களும் அப்படியே கூறுகின்றன.

எந்தெந்த சூழ்நிலைகளில் மந்திரங்களை மாற்ற வேண்டி இருக்கிறது…? ஒரு சில உதாரணங்களைப் பார்ப்போம்.

திருமண மந்திரங்களில் சிலவற்றில் இது போன்ற சூழல் எளிதாக ஏற்படும்.

वाचा दत्ता मया कन्या, पुत्रार्थं स्वीकृता त्वया ।

வாசா த³த்தா மயா கன்யா, புத்ரார்த²ம்ʼ ஸ்வீக்ருʼதா த்வயா |

“என் வார்த்தையால் (உறுதி செய்து) என்னுடைய மகளை தந்தேன். உங்களுடைய மகனுக்காக உங்களால் ஏற்றுக் கொள்ளப் படுகிறாள் அவள்”

இதுவே மாப்பிள்ளைக்கு அப்பா இல்லாமல் அவரது அண்ணனோ, இதர உறவினர்களோ கல்யாணம் செய்து வைப்பதாக இருந்தால் அதற்கு தகுந்தவாறு மந்திரத்தை மாற்ற வேண்டி இருக்கும். இது போல, திருமணம் ஆகிற பெண்ணின் வயதைக் கொண்டும் மந்திரங்கள் உள்ளன…

अष्ठवर्षा त्व इयं कन्या पुत्रवत् पालिता मया |
इदानीम् तव पुत्राय दत्ता स्नेहेन पालयताम् ||

அஷ்ட²வர்ஷா த்வ இயம்ʼ கன்யா புத்ரவத் பாலிதா மயா |
இதா³னீம் தவ புத்ராய த³த்தா ஸ்னேஹேன பாலயதாம் ||

“எட்டு வயதான இந்த பெண்ணை மகனைப் போல வளர்த்து விட்டேன். இப்போது உங்களுடைய மகனுக்காக தரப்படுகிறாள், அன்புடன் அவளைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறுகிறது இந்த மந்திரம். இப்போது பெண்ணுக்கு எட்டு வயது இல்லை என்றால் எந்த வயதோ அதற்கு தகுந்தவாறு மந்திரம் மாற்ற வேண்டும். அதே போல பையனுடைய அண்ணன் முன்னிலையில் கல்யாணம் நடந்தால் அதுவும் உங்கள் சகோதரனுக்கு என் பெண்ணை தருகிறேன் என்பது போல மாற்ற வேண்டும்.

ஒரு சந்தர்ப்பத்தில் ஒருவர் தன்னுடைய தங்கை மகனுக்கு திருமணம் செய்து வைத்துக் கொண்டிருந்தார். திருமணம் செய்து வைத்த புரோஹிதர் “தவ புத்ராய” என்று சொல்ல, கல்யாணம் பண்ணி வைக்கிற யஜமானர் (யக்ஞத்தை செய்து வைப்பவர்) இது என் பிள்ளை இல்லை என் தங்கை பிள்ளை என்று கூறுகிறார். இப்போது புரோஹிதர் சம்ஸ்க்ருத இலக்கணம் தெரியாதவர். அவர் வேறு எப்படி சொல்வது என்று தெரியாமல் “தவ பகிநிஸ்ய புத்ராய…” என்று சொல்லி தொடர்ந்தார். இது பகிந்யா: புத்ராய என்று இருக்க வேண்டும். ஆனால் திருமணம் செய்து கொள்பவர், புரோஹிதர் அங்குள்ளவர்கள் எவருக்கும் சம்ஸ்க்ருதம் தெரியாது – ஆனால் கல்யாண மந்திரம் சம்ஸ்க்ருதத்தில் இருக்க வேண்டும் என்று மட்டும் நினைக்கிறார்கள்.

ஸ்ரீ என்கிற சொல்லை மரியாதைக்குரிய, புனிதமான, லக்ஷ்மிகரமான, மங்கலமான என்ற அர்த்தத்தில் எல்லா இடத்திலும் உபயோகிக்கின்றனர். வேதத்தில் ஸ்ரீஇந்திரன், ஸ்ரீவருணன் என்று விளித்து மந்திரங்கள் இல்லை. ஆனால் தற்காலத்தில் ஸ்ரீ சனீஸ்வர சுவாமி திருக்கோயில் என்பது போல, ஸ்ரீ மன்மோகன் சிங் என்பது போல எல்லாவற்றுக்கும் முன்னால் ஸ்ரீ போடுகிற வழக்கம் நிறைந்து விட்டது. மந்திரங்களிலும் எக்ஸ்ட்ராவாக ஸ்ரீ சேர்த்து போடுவது வழக்கமாகி விட்டது. இதில் ஸ்ரீ என்பதை மற்ற எந்த வார்த்தைகளுடனும் சந்தி சேர்ப்பதே இல்லை. அது தனியாகவே இருக்கும் – ஏனெனில் மந்திரங்களைக் கேட்பவர்கள் தனியாக ஸ்ரீ என்று காதில் வாங்கினால் தான் அந்த மந்திரம் புனிதத்தன்மை உடையது என்று நினைக்கிறார்கள்.

सर्वविघ्नहरस्तस्मै श्रिगणाधिपतये नमः |

ஸர்வவிக்⁴னஹரஸ்தஸ்மை ஸ்ரீக³ணாதி⁴பதயே நம​: |

என்ற மந்திரத்தில் ஸ்ரீ என்பது பிற்சேர்க்கை. அந்த ஸ்ரீ இல்லாமலே எட்டு அக்ஷரங்கள் கொண்ட சந்த இலக்கணம் சரியாக இருக்கிறது. ஸ்ரீ சேர்ப்பதால் சந்தம் தவறி விடுகிறது. இருந்தாலும் ஸ்ரீ சேர்ப்பது புனிதமாக இருக்கும் என்று நினைப்பதால் அதை சேர்த்தே சொல்கிறார்கள்.

இது போல ஊர் பெயர்களையும் சம்ஸ்க்ருதப் படுத்தி கூறுவது வழக்கம். கிருபானந்த வாரியார் ஒரு கூட்டத்தில் சொன்னது “இந்த ஊருக்கு பெயர் பழமலை. பழமையான மலை என்று அர்த்தம். ஆனால் இதை சம்ஸ்க்ருதத்தில் மாற்றியவர் பழமை என்பதை முதுமை என்று எடுத்துக் கொண்டு வ்ருத்தாசலம் என்று கூறி விட்டார். இவ்வாறு பழமலை என்பது கிழமலை ஆகி விட்டது..” என்று நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார்.

வேத மந்திரங்களில் மட்டும் அல்லாது தினப்படி ஓதும் ஸ்தோத்திரங்களில் கூட எத்தனையோ விஷயங்கள், அழகான வாக்கிய அமைப்புகள், பொருள் பொதிந்த பிரயோகங்கள் இருக்கின்றன. இவற்றை சரியாக புரிந்து கொண்டு உபயோகிக்க அடிப்படை இலக்கணமாவது தெரிந்து கொள்வது அனைவருக்கும் அவசியம்.

குறிப்புகள்:

9 Comments சொற்குற்றம், பொருட்குற்றம்…

 1. कृष्णकुमार्

  மிக அவசியமான வ்யாசம் சமர்ப்பித்த ஸ்ரீ க்ருத்திவாசன் அவர்களுக்கு நன்றி.

  \\வேதத்தில் ஸ்ரீஇந்திரன், ஸ்ரீவருணன் என்று விளித்து மந்திரங்கள் இல்லை\\

  உபயுக்தமாகவே ஸூக்தாதிகள் அத்யயனம் செய்துள்ளபடியால் இதுபற்றி எனக்கு விபரம் தெரியாது.

  ச்லோகங்களில் உதாஹரணம் காண்பிக்க இயலுமே.

  ஆதிசங்கரரின் தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரத்தில் ப்ரதி ச்லோகத்தின் ஈற்றடி,

  तस्मै श्रीगुरुमूर्तये नम इदम् श्रीदक्षिणामूर्तये
  தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே

  என வரும். முறையே குருமூர்த்தி மற்றும் தக்ஷிணாமூர்த்தி இரண்டுக்கும் முன்னர் ஸ்ரீ சேர்த்து வரும்

  ஸ்ரீமத் பாகவதத்தில் குந்தி ஸ்துதி, (1 : 8 : 43)

  ஸ்ரீ க்ருஷ்ண க்ருஷ்ணஸக வ்ருஷ்ணி ருஷபாவநித்ருக்

  யோசித்தால் இன்னும் பல ச்லோகங்கள் நினைவில் வரலாம். வ்ருத்தம் சரியாக அமைவதற்காக மட்டும் இங்கெல்லாம் ஸ்ரீ சேர்க்கப்பட்டிருக்கிறதா அல்லது வ்யாக்யானங்களில் இதற்கு தனித்து முக்யத்துவம் உள்ளதா அறியேன்.

  பின்னும் வ்யவஹாரத்தில் புருஷர்கள் பெயர் முன் ஸ்ரீ என்றும் ஸ்த்ரீகளின் பெயர் முன்னர் ஸ்ரீமதி அல்லது குமாரி என சேர்ப்பதும் ஆஸேது ஹிமாசலம் ப்ரசலிதமாய் உள்ளதே.

  \\\सर्वविघ्नहरस्तस्मै श्रिगणाधिपतय नमः

  அந்த ஸ்ரீ இல்லாமலே எட்டு அடிகள் கொண்ட சந்த இலக்கணம் சரியாக இருக்கிறது.\\\

  க்ஷமிக்கவும். மேற்கண்ட வாக்யத்தில் எட்டு அக்ஷரங்கள் என இருந்தால் சரியாக இருக்கும் அல்லவா?

  எட்டும் எட்டும் பதினாறாக இருப்பதற்கு பதில் ஸ்ரீ சேர்த்து எட்டும் ஒன்பதும் பதினேழாக அதிகமாய் ஒரு அக்ஷரம்.

  \\\ இப்போது புரோஹிதர் சம்ஸ்க்ருத இலக்கணம் தெரியாதவர். அவர் வேறு எப்படி சொல்வது என்று தெரியாமல் “தவ பகிநிஸ்ய புத்ராய…” என்று சொல்லி தொடர்ந்தார்.\\\\

  ஆச்வலாயனம், ஆபஸ்தம்பம், போதாயனம், த்ராஹ்யாயணம் என நாலு ஸூத்ரங்களும் கற்பதில் ஆர்வமிருந்தும் ப்ருஹஸ்பதி வ்யாகரணம் சரியாக கற்கவில்லையெனில் ப்ரச்சினைகள் வரும் தான். ப்ருஹஸ்பதியை மட்டும் குறை சொல்வதில் ப்ரயோஜனமில்லை. யஜமானனின் ச்ரத்தை என்ன. மந்த்ரங்களை சரியாக ஸ்வரத்துடன் உள்வாங்கி திருப்பிச் சொல்வதற்கு( அதுவும் பதம் பதமாக ப்ருஹஸ்பதி பிரித்துச்சொல்லும் போது கூட) எத்தனை பேர் ச்ரத்தையெடுத்துக் கொள்கிறார்கள். இந்த அளவு ச்ரத்தை உள்ளவர்களே அடுத்த படியாக அர்த்தத்தை தெரிந்து கொள்வதில் நாட்டம் கொள்வர். இரண்டு கையும் சேர்ந்தாலே ஓசை வரும் அல்லவா?

  \\இதற்கு மந்திரம் ஓதுகிற சத்தத்தில் இருந்து வைப்ரேஷன் (மந்திர அதிர்வு) எழுகிறது – அது கும்பத்தில் இருக்கும் நீரில் தர்ப்பை புல்லின் வழியாகப் பாய்கிறது என்றெல்லாம் அறிவியல் ஆதாரமற்ற நம்பிக்கை கதைகள் பின்னப் பட்டு விட்டன. \\

  கேழ்க்க ஆளில்லாததால் யார் வேணுமானால் என்ன வேணுமானால் சொல்லலாம் என்ற நிலைமை. இது ஒருபுறமிருக்க ஆதாரமில்லாது ஸ்வயம் கல்பித பூஜா பத்ததிகளை பரப்புபவர்களைப் பற்றி என்ன சொல்வது.

  \\இக்காலத்தில் அர்த்தத்தை விட்டு விட்டு வாயால் ஓதுவதே போதும் என்று கூறுவோர் பலர் இருக்கிறார்கள்.\\

  நீங்கள் வேத மந்த்ரங்கள் பற்றி சொல்கிறீர்கள் என நினைக்கிறேன்.

  பஞ்சாக்ஷரி, அஷ்டாக்ஷரி போன்ற மந்த்ரங்களில் ப்ரணவம் மற்றும் நமவுடன் உபாஸ்ய தேவதாமூர்த்தியை ஸ்மரிக்கும் படி தானே உள்ளது. மேல் மூர்த்தியின் ஸ்வரூபத்தை த்யானிக்கலாம்.

  என் உத்தரத்தில் சொற்பிழைகள் இருப்பின் சுட்டினால் தன்யனாவேன்.

  மங்களானி பவந்து

 2. T.Mayoorakiri sharma

  இது மிகவும் சர்ச்சைக்குரிய விஷயம்.. ஒவ்வொரு, அர்ச்சகரும், சாஸ்திரிகளும் சம்ஸ்கிருத வியாகரணம் கற்றுத் தான் பூஜை, மற்றும் பூர்வ, அபர கிரியைகளைசெய்விக்க வேண்டுமென்றால், இப்போதிருப்பவர்களில் பலரும் தகுதியற்றவர்களாகத் தள்ளப்பட்டு விடுவார்கள்..

  ஆக, இதன் முடிவு உங்களின் தாய்மொழியாக இருந்து.. சாதாரணமாகவே உங்களால் ஓரளவு இலக்கண வழு இன்றி பாவிக்கக் கூடிய தமிழில் பூஜை செய்யுங்கள்.. திருமணம் போன்றவற்றையும் தமிழிலேயே செய்யுங்கள் என்று சொல்வதாகவே அமையும்..

  மந்திர அதிர்வுக்கு சக்தி இருக்கிறது என்று தான் காஞ்சி மஹா ஸ்வாமிகள் உள்ளிட்ட பல மஹான்களும் அறுதியிட்டுச் சொல்லி வந்திருக்கிறார்கள்.. அப்படி சக்தி இல்லை என்றால் வேதாத்யாயனம்செய்து ஏன் மக்களையும் குழப்பி நாமும் குழம்ப வேண்டும்.. தேவார திருவாசகங்களையும் திவ்ய பிரபந்தத்தையும் பாடலாமே.. ( உண்மையில், வேதம் சொல்லும் போது உள்ளம் கசிந்து பக்தியில் உருக முடியாது.. ஆனால் இந்த தமிழ்த்துதிப்பாக்கள் நம் உள்ளத்தை இறைவனிடம் இட்டுச் சென்று பக்தியின் உச்சத்துக்குக் கொண்டு செல்லும் ஆற்றல் பொருந்தியவை..)

  ஆக, இக்கட்டுரையில் ஓரிரு வார்த்தைகளில் சொல்லி வீண் குழப்பத்தை உண்டு பண்ணியுள்ள விஷயங்கள் குறித்து மரியாதைக்குரிய க்ருத்தி வாசன் அவர்கள் விரிவாக எழுத வேண்டுமாய் விண்ணப்பிக்கின்றேன்..

  ஏதும் தவறாய்ச் சொல்லியிருப்பின் பொறுத்தருள வேண்டுமாய்ப் பிரார்த்திக்கின்றேன்..

  பணிவன்புடன்,
  தி.மயூரகிரி சர்மா

 3. कृष्णकुमार्

  \\\இது மிகவும் சர்ச்சைக்குரிய விஷயம்.. ஒவ்வொரு, அர்ச்சகரும், சாஸ்திரிகளும் சம்ஸ்கிருத வியாகரணம் கற்றுத் தான் பூஜை, மற்றும் பூர்வ, அபர கிரியைகளைசெய்விக்க வேண்டுமென்றால், \\\

  ஸ்ரீ ஷர்மா மஹாசய, வ்யாகரணம் கற்ற பின் தான் ப்ரயோகத்தில் ஈடுபட வேண்டும் என்ற படியான கருத்து இவ்யாசத்தில் காணப்படவில்லையே. மாறாக வ்யாகரணத்தின் அவச்யமே வ்யாசத்தில் விளக்கப்பட்டுள்ளது. மந்த்ர / வ்யாகரண லோபத்தினால் ஏற்படும் ஹானிக்கும் வ்யாசத்தில் த்ருஷ்டாந்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

  எந்த வித்யையாகினும் கற்றுக்கரை தேர்ந்த பாராவாரபாரீணர் பூலோகத்தில் அபூர்வமாகவே இருப்பர். நாம் கற்றுக்கொண்ட, கற்றுக்கொள்ளும் எந்த ஒரு வித்யையிலும் நம்மால் எதிர்நோக்கப்படும் சம்சயங்கள் அல்லது பிழைகள் இவற்றை வரப்ரசாதமாகவே கருதவேண்டும் என்பது என் அபிப்ராயம் . ஏன்? சம்சயம் அல்லது பிழையை சரி செய்ய நமக்கும் நமக்கு இது விஷயமாக உபகாரம் செய்பவருக்கும் கிடைக்கும் வாய்ப்பு கற்ற வித்யையில் மேலும் தெளிவு நல்கும்.

  ப்ரயோகம் கற்றுக் கொள்பவர்கள் வ்யாகரணம் கற்றுக்கொள்ள ப்ரயாசிப்பது உத்தமம்.

  அடுத்த பக்ஷமாக, பொதுவான ப்ரயோக மந்த்ரங்கள் சில சூழ்நிலைகளில் மாறுபட இயலும் (விதிவிலக்குகளே) என்ற நிலை இருக்கையில் ப்ரயோகம் மட்டும் அறிந்த ப்ருஹஸ்பதி வ்யாகரணம் அறிந்தவர்களிடம் கலந்தாலோசிப்பது அவசியம். இது விஷயம் ச்ரத்தை உள்ள அன்பர்கள் ஸ்ம்ருதி முக்தா பலம் (வைத்யநாத தீக்ஷிதீயம்), நிர்ணய சிந்து போன்ற சம்பந்தப்பட்ட க்ரந்தங்களை வாசிக்கலாமே. மந்த்ரங்களின் அர்த்தத்தை கர்த்தாவும் ப்ருஹஸ்பதியும் அறிவதற்கு அவசியம் முயற்சிக்க வேண்டும்.

  ஸ்ரீ க்ருத்திவாச மஹாசயர் பதிவு செய்த த்ருஷ்டாந்தம் போலவே வ்ருத்ராசுர உபாக்யனமும் மந்த்ர உச்சரிப்பில் தெளிவு அவசியம் என்பதைச் சொல்கிறது. இந்த்ரனை வதம் செய்ய புத்ரனை வேண்டி மந்த்ரம் சொல்ல வேண்டியிருக்க மந்த்ரம் சொல்கையில் ஏற்பட்ட லோபத்தால் இந்த்ரனால் வதம் செய்யப்படத்தக்க புத்ரனை அடைய நேர்ந்தது.

  மந்த்ரங்களுக்கு உள்ள அனுக்ரஹ சக்தியை ஸ்ரீமான் கீர்த்தி மறுத்ததாகவோ பரிஹஸித்ததாகவோ தெரியவில்லையே. தேவையில்லாது இது போன்ற விஷயங்களில் விக்ஞானத்தை இழுத்து ஆதாரமில்லாத பரிஹஸிதமான வ்யாக்யானங்களை இஷ்டப்படி கொடுக்கும் போக்கையே அவர் விமர்சித்ததாகத் தெரிகிறது. அது போன்ற போக்கு தவறானதே.

  மாதாவும் பிதாமஹியும் ஜீவித்திருக்கையில் எனது மித்ரனின் பிதாவுக்கு வைகுண்டப்ராப்தி ஏற்பட்டது. தர்ப்பணாதிகளில் பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹ என்பதுடன் தாயார் வழியில் பித்ருவர்க்கத்தில் இருப்பவர்களுக்கு என்ன சொல்வது என்பதில் ப்ருஹஸ்பதிக்கு சம்சயமேற்பட்டது. சம்பந்தப்பட்ட ப்ருஹஸ்பதி இது சம்பந்தமாக கலந்தாலோசித்து பிதாமஹஸ்ய மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹி என்று இருக்க வேண்டும் என்று தெரிந்து பின் க்ரியைகளை நடத்தியதாக சொன்னார்.

  வ்யாகரணம் தெரியாதது அல்லது அதில் தெளிவில்லாதது தவறில்லை. எழும் சம்சயங்களை கலந்தாலோசிக்காது தவறான படி க்ரியைகள் செய்வது ப்ராயஸ்சித்தார்ஹமான தவறு.

 4. T.Mayoorakiri sharma

  //ஸ்ரீ ஷர்மா மஹாசய, வ்யாகரணம் கற்ற பின் தான் ப்ரயோகத்தில் ஈடுபட வேண்டும் என்ற படியான கருத்து இவ்யாசத்தில் காணப்படவில்லையே. மாறாக வ்யாகரணத்தின் அவச்யமே வ்யாசத்தில் விளக்கப்பட்டுள்ளது. மந்த்ர / வ்யாகரண லோபத்தினால் ஏற்படும் ஹானிக்கும் வ்யாசத்தில் த்ருஷ்டாந்தம் கொடுக்கப்பட்டுள்ளது…..//

  அதி வந்தனீய. ஸ்ரீமான். க்ருஷ்ணகுமார் அவர்களின் இந்த வ்யாசம் மகிழ்ச்சி தருகின்றது.. இவர்களின் விளக்கத்தின் வண்ணமாகவே இக்கட்டுரையாசிரியர் இந்தக் கட்டுரையை வடித்திருப்பாராயின், இக்கட்டுரை கூறும் விஷயங்களில் என்குப் பூரண த்ருப்தியும் சம்மதமுமே உண்டு என்பதை பணிவோடு தெரிவிக்க விரும்புகின்றேன்..

  எனினும், நான் இங்கே இவ்வாறு ‘சர்ச்சைக்குரிய கருத்து’ என்று பதிவு செய்ததால் அதனை எதிர்த்தும் ஆதரித்தும் க்ருஷ்ண குமார் போன்ற ஓரிரு பெரியவர்களாவது வாழ்வியல் உதாரணங்களைக் காட்டி விவாதிப்பார்கள் என்றும், அதன் மூலம் என்னைப் போன்றவர்கள் உபயோகமான விஷேஷமான பல விஷயங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கருதினேன்.. ஆனால், அவைகள் கிடையாமல் போனது தான் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது..

  க்ருத்திவாசன், க்ருஷ்ணகுமார் ஆகிய இருவருக்கும் எனது நமஸ்காரபூர்வமான நன்றிகள்..

 5. T.Mayoorakiri sharma

  நமது சம்ஸ்காரங்கள் ஒவ்வொன்றின் போதும், இவ்வாறான அநேக சந்தேகங்கள் உண்டாகின்றன… அவைகளில் பலவும் கண்டு கொள்ளப்படுவதில்லை..

  அவ்வாறு கண்டு கொள்ளப்பட்டாலும் துரிதமாக மறந்து போய் விடுகின்றன.. இவ்வாறான விஷயங்களை இது போலவே எடுத்துக் காட்டித் தொடர்ந்து கட்டுரைகளை வடித்து உதவ வேண்டுமாய் ஸ்ரீ க்ருத்திவாசன் அவர்களை பணிவோடு கேட்டுக் கொள்கிறோம்..

  அவ்வாறு செய்வீர்களாயின், தங்கள் பணி வைதீகதர்மவர்த்தனி ஆசிரியர் ஸ்ரீவத்ஸ. சோமதேவஸர்மா அவர்களின் தொண்டு போல நமது வைதீக உலகால் நிச்சயம் கொண்டாடப்படும்..

 6. Ganesh Sharma

  வியாகரணம் கற்பது தொடர்பிலும், அதனைப் பயன்படுத்துவது தொடர்பிலும் எனக்கு நிறைய கேள்விகள் இருந்தாலும் க்ருத்திவாசன் அவர்களது இந்தக் கட்டுரையை நான் ஆதரிக்கிறேன்.. அவர் இன்னும் இப்படியான கட்டுரைகள் நிறைய நிறைய எழுத வேண்டும்..

 7. dev

  தற்காலச் சூழலுக்குப் பொருந்து கட்டுரை.
  முதுகுன்றம் எனும் பெயர் இருப்பதாகத்
  தெரிகிறது; அதையொட்டி வ்ருத்தாசலம்
  என ஏற்பட்டிருக்கலாம் –

  மூடிய சோலை சூழ் முதுகுன்றத்து ஈசனை
  நாடிய ஞானசம்பந்தன்
  நாடிய ஞானசம்பந்தன் செந்தமிழ்
  பாடியஅவர் பழி இலரே.

  தேவ்

 8. LIC SUNDARA MURTHY

  இது நாள் வரை சமஸ்க்ருத கடலைப்பற்றி அறியாமல் இருந்து இன்று தான் ரசித்தேன் பார்த்தேன் மற்ற கருத்துகளை பின்னர் தெரியப்படுத்துகிறேன் தங்கள் பணி சிறக்க எனது வாழ்த்துக்கள்
  LIC SUNDARAMURTHY-licsundaramurthy@gmail.com-salemscooby.blogspot.in

 9. Nathan

  கீர்த்தி வாசனின் கட்டுரை நன்கு அமைந்துள்ளது. சமஸ்க்ரித மொழியறிவு இல்லாமல் புரோகிதராக இருப்போருக்கு ஏற்படும் தடுமாற்றங்களை தவறுகளை நன்கு சுட்டிக்காட்டியுள்ளார். வ்யாகரணம் கற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்தவே அப்படி சொல்லியிருக்கிறார் என்றே கொள்வோமாக.
  /////இதற்கு மந்திரம் ஓதுகிற சத்தத்தில் இருந்து வைப்ரேஷன் (மந்திர அதிர்வு) எழுகிறது – அது கும்பத்தில் இருக்கும் நீரில் தர்ப்பை புல்லின் வழியாகப் பாய்கிறது என்றெல்லாம் அறிவியல் ஆதாரமற்ற நம்பிக்கை கதைகள் பின்னப் பட்டு விட்டன. அதிர்ஷ்டக் கல் மோதிரம் போட்டால் அதன் ஒளிக்கதிர்கள் பட்டு அதிருஷ்டம் வரும் என்று சொல்வதைப் போன்றது தான் இது.//// வ்ருத்தாசலம் என்று ஏற்றுக்கொள்ள இயலாது. ஏனெனில் முதுமலைகாடுகள் என்று இன்றும் அழைக்கப்படும் இடமும் உள்ளதை கவனத்தில் கொள்க.
  வாஸக தோஷ: க்ஷந்தவ்ய:

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)