முருகன் தந்த வடமொழி இலக்கணம்

வியாகரணம் அல்லது இலக்கணம் என்பது ஒரு மொழிக்கு மிகவும் அவசியம். தமிழுக்கு நன்னூல், தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்கள் இருப்பது போல சம்ஸ்க்ருத மொழிக்கு முக்கியமாக ஒன்பது வகை இலக்கண நூல்கள் உள்ளன.  ராமாயணத்தில் அனுமன் இந்த ஒன்பது வகை வியாகரணங்களையும் சூரியனிடம் கற்றுத் தேர்ந்ததாக சொல்லப் படுகிறது. அதனால் அவருக்கு நவ வியாகரண பண்டிதன் என்று பெயர். சூரிய பகவான் உதித்ததில் இருந்து அவர் முன்னால் அமர்ந்து நாள் முழுவதும் சூரியனுடனேயே நகர்ந்து மாலையில் சூரியன் அஸ்தமனம் ஆவது வரை கல்வி கற்றதாக புராணங்களில் கூறப் படுகிறது. 

இவ்வாறு சொல்லப் படுகிற ஒன்பது வகை இலக்கண நூல்கள் எவை? 

ऐन्द्रं चान्द्रं काशाकृत्स्नम् कौमारं शाकटायनं |
सारस्वतम् चापिशलं शाकलं पाणिनीयकं ||

ஐந்த்³ரம்ʼ சாந்த்³ரம்ʼ காஸா²க்ருʼத்ஸ்னம் கௌமாரம்ʼ ஸா²கடாயனம்ʼ |
ஸாரஸ்வதம் சாபிஸ²லம்ʼ ஸா²கலம்ʼ பாணினீயகம்ʼ ||

இந்திர வியாகரணம், சந்திர வியாகரணம், காஸா²க்ருʼத்ஸ்னம் கௌமாரம்ʼ ஸா²கடாயனம்ʼ, ஸாரஸ்வதம் ஆபிஸ²லம்ʼ, ஸா²கலம்ʼ, பாணினீயம் ஆகியவையே அந்த ஒன்பது இலக்கணங்கள். (தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் இந்திர வியாகரணத்தை ஒட்டி எழுதப் பட்டது என்பதாக இளம்பூரணர் எழுதியுள்ள உரையில் “ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியம்” என்று தன் தொல்காப்பிய முன்னுரையில் குறிப்பிடுகிறார்.)  இவற்றில் பாணினியின் இலக்கணமே இன்றும் புழக்கத்தில் உள்ளது. இந்திர, சந்திர வியாகரணங்களைத் தவிர ஏனைய மற்ற இலக்கண நூல்கள் அதிகமாக புழக்கத்தில் இல்லாமல் போய்விட்டன. 

இதில் கௌமாரம் என்று அழைக்கப் படும் வியாகரணத்துக்கு,  கலாபம், கா-தந்திர  வியாகரணம் என்றும் இதர பெயர்கள் உண்டு. இந்த இலக்கண நூலின் பின்னணியில் ஒரு கதை உண்டு. 

வெகு காலம் முன்பு அரச மொழியாக சம்ஸ்க்ருதமே எங்கும் இருந்து வந்தது. அக்காலத்தில் இருந்த சாலிவாகனன் என்னும் மன்னனுக்கு சம்ஸ்க்ருத மொழி தெரியாது. அந்நிலையில் ஒரு நாள் சம்ஸ்க்ருத மொழியில் சொல்லப் பட்டதை தவறாகப் புரிந்து கொண்டு தன் மனைவியிடம் கேலிக்கு ஆளாகி (முழுக் கதையும் இங்கே), அதன் பின்னர் ஆறே மாத காலத்தில் சம்ஸ்க்ருதம் கற்க விரும்பினார். ஆறே மாதத்தில் சம்ஸ்க்ருதம் கற்க இயலாது என்று கற்றுக் கொடுக்க யாரும் முன்வராத போது சர்வ வர்மன் என்று ஒரு சம்ஸ்க்ருத மேதை தான் கற்றுக் கொடுப்பதாக முன்வந்தார்.

எனினும் ஆறேமாதத்தில் கற்கும் அளவுக்கு சம்ஸ்க்ருத இலக்கணத்தை சுருக்க வழி தெரியாமல் சிவ பெருமானை வழிபட, சிவனும் மனமிரங்கி எளிய இலக்கணம் ஒன்றை இயற்ற உதவுமாறு முருகப் பெருமானைப் பணித்தார். இவ்வாறு முருகனின் அருளால் கலாபம் அல்லது கௌமாரம் அல்லது கா-தந்திரம் என்று அழைக்கப் படும் இலக்கணம் தோன்றியது. இது பாணினியின் இலக்கணப்  பிரயோகங்களை பல வகையில் ஒத்து இருந்தாலும் பெருமளவு இலக்கண விதிகளின் அமைப்பை இந்நூல் மாற்றி அமைக்கிறது. இந்த கலாப இலக்கண நூலை அடிப்படையாக வைத்து பல இடங்களில் செம்மை செய்தே வியாகரண சித்தாந்த கௌமுதி இயற்றப் பட்டதாக கூறுவர்.

முருகனின் மயிலுக்கு சம்ஸ்க்ருதத்தில் கலாபம் என்று பெயர். அந்த பெயராலும் இந்த இலக்கணம் விளங்குகிறது. காஷ்மீரம், திபெத் பகுதிகளில் வாழ்ந்த சம்ஸ்க்ருத அறிஞர்கள் இதில் பெறும் தேர்ச்சி பெற்றிருந்தார்கள். தென்னாட்டவரின் இறைவன், பாரதத்தின் மணிமுடி வரை வாழ்ந்த அறிஞர்களுக்கு எல்லாம் இலக்கணம் தந்த கல்வித் தெய்வம் என்று எண்ணும் போது மனதில் பெருமை  ஏற்படுகிறது. ஆனால் கா-தந்திர வியாகரணம் தழைத்த திபெத்தும், காஷ்மீரமும் இன்றைக்கு கலைப்பயிர் விளைய முடியாத, வறண்ட பகுதியாகி விட்டதும் நினைவுக்கு வருகிறது. 

6 Comments முருகன் தந்த வடமொழி இலக்கணம்

  1. कृष्णकुमार्

    \\\\\\\\\ ஆனால் கா-தந்திர வியாகரணம் தழைத்த திபெத்தும், காஷ்மீரமும் இன்றைக்கு கலைப்பயிர் விளைய முடியாத, வறண்ட பகுதியாகி விட்டதும் நினைவுக்கு வருகிறது. \\\\\\\\\\\

    கவலை வேண்டா. கூர்வேலும் புன்சிரிப்பும் அபயஹஸ்தமும் பட்ட மரமும் தழைக்கும் என நீலக் கலாப மயிலேறும் ராவுத்தன் கூறுவது போல் இருக்கிறது. “லே” (லத்தாக்) நகருக்கு சற்று முன்னால் இருக்கும் “பத்தர் சாஹேப்” குருத்வாராவிற்கு சமீபத்தில் சென்றிருந்தேன். அங்குள்ள க்ரந்தி “குர்பாணி” (குருவாணி) பாராயாணம் செய்து முடித்ததும் பாரத சேனையைச் சார்ந்த பண்டிட் ஜி தர்ம சாஸ்த்ரங்களிலிருந்து குரு மஹிமையை ப்ரசங்கம் செய்ததைக் கேட்டேன். எப்படி குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்று பழமொழியோ அது போல் கொண்டாடுபவரிடையே இன்றும் ஸம்ஸ்க்ருதம் ப்ரகாசிக்கவே செய்கிறது என்று நினைத்துக் கொண்டேன். ஸம்ஸ்க்ருதத்தின் ஸுகந்தம் அமரத்வமுள்ளது.

  2. கார்த்திக் வைத்தியநாதன்

    சங்கதத்தின் எட்டு இலக்கணங்கள் என்பதை விட இந்த எட்டையும் நான் இலக்கண மரபுகளாகப் பார்க்கிறேன். இலக்கணம் என்பது ஒரு மொழியின் விதிகளை பார்க்கும் மரபு. மொழி என்றால் என்ன அது எப்படி செயல்படுகிறது என்பது பற்றிய நம் தத்துவ ரீதியான பார்வை, நாம் அதன் விதிகளை எப்படிப் பார்க்கிறோம் என்பதையும் நிர்ணயிக்கிறது.

    கிரேக்கர்கள் தங்கள் மொழியை ஒரு வித தத்துவப் பார்வையில் இயற்றினர். இதே பார்வையில் பிறகு ஐரோப்பிய மொழிகள் எல்லாவற்றிற்கும் இலக்கணங்கள் வந்தன. இது Greek Grammatical Tradition. இதே போல பாணினி ஒரு இலக்கண மரபில் வருகிறார். ஐந்திரம் என்பது இன்னொரு இலக்கண மரபு. இந்த மரபில் வடமொழிக்கும் இலக்கணம் இருந்திருக்கிறது. தமிழுக்கு இதே மரபில் இயற்றப்பட்ட இலக்கணம் தான் தொல்காப்பியம் என்பது என் கருத்து.

  3. அத்விகா

    மொழிகளின் பெயர்கள் வேறு வேறாக இருக்கலாம்.ஆனால், எல்லாமே அடிப்படையில் மனித இனத்துக்கு தேவைப்படுகிற கருவிகளே ஆகும். தமிழின் தொல்காப்பியம் ஐந்திரத்திலிருந்து வந்தது என்பதும் உண்மையே. ஆனால் தமிழில் தொல்காப்பியத்துக்கு வெகு காலம் முன்னரே அகத்தியம் இருந்தது. கபாடபுரத்தை கடல் கொண்டபோது, தமிழின் தொன்மையான இலக்கியங்களும், இலக்கண நூல்களும் அழிந்தன. தமிழும், சமஸ்கிருதமும் பழையவை மட்டுமல்ல, மிக மிக சிறந்தவையும் ஆகும்.

  4. மகாலிங்கம்

    வடமொழி இலக்கணத்தில் ஒரு பொருளை குறிக்கும் ஒரு சொல் ஆண்பாலாகவும் அதேபொருளைக்குறிக்கும் இன்னொரு சொல் பெண்பாலாகவும் இருக்கிறதே. இதனால் என்ன பயன். ஆனால் தமிழில் கிடையாது. தொல்காப்பியம் சிறந்ததாக இருக்கிறது.

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)