சந்தத்தில் மாறாத நடை!

தமிழ் இலக்கணத்தில் பலவகையான மரபுக்கவிதைகளின் ஓசையை அகவலோசை, செப்பலோசை, துள்ளலோசை என்றெல்லாம் வகைப்படுத்தியுள்ளனர். அதாவது ஒரு செய்யுளைப் படிக்கும் போதே தானதனத்தன தானதனத்தன என்பது மாதிரியான ஒரு சந்தம் அமைந்திருப்பதை உணர முடியும். இது இலக்கண விதிகளுக்கு உட்பட்டது. பழமையில் தமிழுக்கு இணையான சம்ஸ்க்ருதத்திலும் இது போன்ற ஓசை நயத்துக்கு – சந்தத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. வடமொழியில் எந்த செய்யுள் அமைப்பாக இருந்தாலும் சந்தத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும், ச²ந்தோ³ப⁴ங்க³தோ³ஷம் (छन्दोभङ्गदोष) ஏற்படக் கூடாது என்று அபி மாஷம்ʼ மஷம்ʼ குர்யாத் ச²ந்தோ³ப⁴ங்க³ம்ʼ ந காரயேத்| (अपि माषं मषं कुर्यात् छन्दोभङ्गं न कारयेत्। ) என்று கவிதையில் ஒரிரு எழுத்துக்களை வெட்டினாலும் பரவாயில்லை ச²ந்தோ³ப⁴ங்க³ம் செய்யாதே என்று வேடிக்கையாக சொல்வர். சந்தம் என்பது அவ்வளவு முக்கியம்.

அர்த்தத்தை விடுங்கள். வெறும் உச்சரிப்பிலேயே அனுபவத்தை ஏற்படுத்தும் தந்திரம் வடமொழி கவிதைகளின் சந்தங்களில் உண்டு.

तदुपगत समास सन्धियोगं सममधुरोपनतार्थ वाक्य बद्धम् ।
रघुवर चरितं मुनिप्रणीतं दशशिरसश्च वधं निशामयध्वम् ||

தது³பக³த ஸமாஸ ஸந்தி⁴யோக³ம்ʼ ஸமமது⁴ரோபனதார்த² வாக்ய ப³த்³த⁴ம் |
ரகு⁴வர சரிதம்ʼ முனிப்ரணீதம்ʼ த³ஶஶிரஸஶ்ச வத⁴ம்ʼ நிஶாமயத்⁴வம்

சரியான உச்சரிப்பில் இந்த ராமாயணச் செய்யுளை உச்சரிக்கும் போது, அர்த்தத்தை விடவும் அதன் ஓசை நயம் நம்மை கவர்ந்து விடுகிறது. இது போல ஒலி நயம் நிறைந்த செய்யுட்கள் சம்ஸ்க்ருதத்தில் ஏராளம். சப்தத்தில் மயங்கி அதிலேயே வாழ்நாளை செலவிட்டோர் பலர் வடமொழி உலகில் உண்டு. சப்தமே பிரம்மம் என்று கூட ஒரு மதம் இருந்திருக்கிறது.

சம்ஸ்க்ருதத்தில் செய்யுள் அமைப்பு குறித்த இலக்கண நூல் சந்தஸ் சாத்திரம் என்று அழைக்கப் படுகிறது. தமிழில் சந்தம் என்று சொல்கிறோமல்லவா! அதுவே தான். மேலே நாம் பார்த்த செய்யுள் புஷ்பிதாக்ர என்ற சந்தத்தில் அமைந்தது. இது போல சந்தஸ் சாத்திரத்தில் நூற்றுக்கணக்கான சந்தங்களுக்குரிய விதிகள் காணப்படுகின்றன.

நன்னெறி போதனை, ஆன்மீகம் போன்றவை மட்டும் அல்லாது, இலக்கணம், அறிவியல், கணிதம், வைத்தியம் என்று எதை எடுத்தாலும் வடமொழியில் செய்யுள்கள் (அல்லது ஸ்லோகங்கள்) தான். அதிலும் Technical treatises என்று சொல்லப் படுகிற நூல்களில் கூட அழகழகான சந்தங்களைக் கொண்ட கவிதைகள்.. செய்யுள்கள். சேர சோழ பாண்டிய மன்னர்களின் அரசாணை கூட சந்தம் நிறைந்த சம்ஸ்க்ருத கவிதைகளைக் கொண்டதாக இருக்கிறது. அந்த மரபில் இன்றும் கூட இறந்த பின் பத்தாம் நாள் இறந்தவரைப் பற்றி ஒரு நான்கு வரி சம்ஸ்க்ருத செய்யுள் (சரம ஸ்லோகம்) எழுதுவித்து படிக்கும் வழக்கம் சில வீடுகளில் உண்டு. ஏன் இவ்வாறு சந்தங்களை எடுத்தாண்டு செய்யுள்கள் இயற்றப் பட்டன?

ஒரு காரணம் இருக்கலாம் என்று தோன்றுகிறது.

முற்காலத்தில் செய்தித்தாள்கள், ஊடகங்கள் போன்றவை இல்லாத போது, ஒரு முக்கியமான விஷயத்தை பலருக்கும், சமயத்தில் பல தலைமுறைகளுக்கு கடத்த வேண்டும் என்றால் ஞாபக சக்தி ஒன்றே வழி. ஒரு விஷயத்தை ஞாபகத்தில் நிறுத்த அதில் சில குறிப்பிடத்தக்க அம்சங்கள் இருக்க வேண்டும். அதாவது எளிய மொழியில் கரடுமுரடான வார்த்தைகள் இன்றி இருக்க வேண்டும். இசைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். ஒரு கதையை சம்பவத்தை ரசிக்கத் தக்க ஒரு அம்சத்தை கொண்டிருக்க வேண்டும். பேச்சு மொழியில் இல்லாமல் வித்தியாசமாக இருக்க வேண்டும். இப்படி இருந்தால் ஞாபகத்தில் தக்க வைப்பதும் திரும்ப திரும்ப சலிப்படையாமல் சொல்லவும் ஏதுவாக இருக்கும். இதனாலேயே செய்யுளாக எழுதப் பட்டன.

காவியங்களில் அல்லது கல்வெட்டு போன்ற பதிவுகளில் நீண்ட செய்தியைச் சொல்லும் போது, நடு நடுவில் சந்தங்களை மாற்றி திடீர் திடீரென மாறுபட்ட நயத்தில் செய்யுட்கள் காணப்படும். இதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. இப்போது நாம் ஒரு விஷயத்தை எழுத்தில் எழுதும் போது ஒரு குறிப்பிட்ட பத்தியை, வாக்கியத்தை, சொல்லை சிறப்பித்துச் சொல்ல அடிக்கோடிடுகிறோம், கணினியில் எழுத்தின் நிறத்தை மாற்றுகிறோம், அளவை மாற்றுகிறோம் இல்லையா? வாய்மொழியாக செய்தியைக் கடத்தும் போது எப்படி Highlight செய்வது? இதனால் தான் ஒரு காவியத்தில் ஒரே சந்தத்தில் எழுதப்பட்டு வரும் ஒரு அத்தியாயத்தில் நடு நடுவே சில செய்திகளை சிறப்பித்துக் காட்டவோ, அல்லது தொடர்புடைய வேறொரு விஷயத்தை நடுவே புகுத்தவோ சந்தங்களை மாற்றி விடுகிறார்கள்.

சந்தங்களில் சில ஆச்சரியங்கள் உண்டு. சில சந்தங்கள் உணர்ச்சியை வெளிப்படுத்தும். சில சந்தங்கள் சொற்சிக்கனம், ரகசியப் பொருள் உள்ளதை உணர்த்துவதாக இருக்கும். அவ்வளவு ஏன், சில சந்தங்களின் ஓசை மிருங்களின் நடையை போன்றதாகக் கூட இருக்குமாம்… இந்த செய்யுளைப் பாருங்கள்.

रविसुता परिसरे विहरतो दृशि हरे: |
व्रजवधू गजगतिर् मुदमलं व्यतनूत ||

ரவிஸுதா பரிஸரே விஹரதோ த்³ருʼஶி ஹரே: |
வ்ரஜவதூ⁴ க³ஜக³திர் முத³மலம்ʼ வ்யதனூத ||

கஜகதி என்கிற சந்தத்தில் அமைந்த இந்த கவிதை யானை நடந்து வருவதைப் போன்ற சந்தத்தில் அமைந்தது.

பதுங்கிப் பதுங்கிப் பாயும் பாம்பின் நடையில்…

न तातो न माता न बन्धुर्न दाता
न पुत्रो न पुत्री न भृत्यो न भर्ता।
न जाया न विद्या न वृत्तिर्ममैव
गतिस्त्वं गतिस्त्वं त्वमेका भवानि ||

ந தாதோ ந மாதா ந ப³ந்து⁴ர்ன தா³தா
ந புத்ரோ ந புத்ரீ ந ப்⁴ருʼத்யோ ந ப⁴ர்தா|
ந ஜாயா ந வித்³யா ந வ்ருʼத்திர்மமைவ
க³திஸ்த்வம்ʼ க³திஸ்த்வம்ʼ த்வமேகா ப⁴வானி

இது புஜங்கப்ரயாதம் என்ற சந்தத்தில் அமைந்தது.

குலசேகரரின் முகுந்தமாலையில் பல ஓசை நயமிக்க ஸ்லோகங்கள் உண்டு. அவற்றில் ஒன்று

चिन्तयामि हरिमेव सन्ततं
मन्द मन्द हसिताननाम्बुजम् |
नन्दगोपतनयं परात्परं
नारदादिमुनिवृन्दवन्दितम् ||

சிந்தயாமி ஹரிமேவ ஸந்ததம்ʼ
மந்த³ மந்த³ ஹஸிதாநநாம்பு³ஜம் |
நந்த³கோ³பதநயம்ʼ பராத்பரம்ʼ
நாரதா³தி³முநிவ்ருʼந்த³வந்தி³தம் ||

தேர் அசைந்து வருவது போன்ற ஓசையில் அமைந்த செய்யுள் இது. இதே சந்தத்தில் அமைந்த மற்றொரு பிரபலமான ஸ்லோகம்:

आञ्जनेयमतिपाटलाननं काञ्चनाद्रिकमनीयविग्रहम् |
पारिजाततरुमूलवासिनं भावयामि पवमाननन्दनम् ||

ஆஞ்ஜனேயமதிபாடலானனம்ʼ காஞ்சநாத்³ரிகமநீயவிக்³ரஹம் |
பாரிஜாததருமூலவாஸிநம்ʼ பா⁴வயாமி பவமாநநந்த³நம் ||

தோடகம் என்ற சந்தம் பல கவிஞர்களால் எடுத்தாளப் பட்ட ஓசை நயமிகுந்த சந்தம். அதில் ஒரு ஸ்லோகம்:

अधरं मधुरं वदनं मधुरं
नयनं मधुरं हसितं मधुरम् |
हृदयं मधुरं गमनं मधुरं
मधुराधिपतेरखिलं मधुरं ||

அத⁴ரம்ʼ மது⁴ரம்ʼ வத³னம்ʼ மது⁴ரம்ʼ
நயனம்ʼ மது⁴ரம்ʼ ஹஸிதம்ʼ மது⁴ரம் |
ஹ்ருʼத³யம்ʼ மது⁴ரம்ʼ க³மனம்ʼ மது⁴ரம்ʼ
மது⁴ராதி⁴பதேரகி²லம்ʼ மது⁴ரம்ʼ ||

சந்த நயமுள்ள கவிதைகள் காப்பியங்கள், கல்வெட்டுகளில் மட்டும் இடம் பெறவில்லை. காலத்தால் முந்திய வேதத்திலேயே உண்டு. வேதத்தில் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு ரிஷி, ஒரு தேவதை, ஒரு சந்தம் என்று முதலிலேயே விளக்கப் பட்டிருக்கும்.

छन्दः पादौ तु वेदस्य हस्तौ कल्पोऽथ पठ्यते
ज्योतिषामयनं चक्षुर्निरुक्तं श्रोत्रमुच्यते।
शिक्षा घ्राणं तु वेदस्य मुखं व्याकरणं स्मृतम्
तस्मात्साङ्कमधीत्यैव ब्रह्मलोके महीयते।।

ச²ந்த³​: பாதௌ³ து வேத³ஸ்ய ஹஸ்தௌ கல்போ(அ)த² பட்²யதே
ஜ்யோதிஷாமயனம்ʼ சக்ஷுர்னிருக்தம்ʼ ஶ்ரோத்ரமுச்யதே|
ஶிக்ஷா க்⁴ராணம்ʼ து வேத³ஸ்ய முக²ம்ʼ வ்யாகரணம்ʼ ஸ்ம்ருʼதம்
தஸ்மாத்ஸாங்கமதீ⁴த்யைவ ப்³ரஹ்மலோகே மஹீயதே||

ச²ந்த³​: பாதௌ³ து வேத³ஸ்ய என்று இந்த ஸ்லோகம், வேதத்துக்கு சந்தமே கால்கள். வேதத்தின் நடை சிறப்பாக அமைய அதன் சந்தமே காரணம் என்று வியந்து கூறுகிறது. காயத்ரி, உஷ்ணிக், அனுஷ்டுப் என்று ஏழு வகைப்பட்ட சந்தங்கள் வேதத்தில் காணப்படுகின்றன. எழுதாக்கிளவி என்று பெயர் பெற்ற மறை (வேதம்), காலம் தோறும் எழுதப்படாமல் மனப்பாடமாகவே நூற்றுகணக்கான தலைமுறைகளைக் கடந்து இன்றும் நம்மிடம் நினைவில் விளங்குகிறது. அத்தகைய ஒரு மாபெரும் படைப்பு பலவகை ஒலி நயங்களைக் கொண்ட தொகுப்பாக இருப்பதில் வியப்பென்ன!

1 Comments சந்தத்தில் மாறாத நடை!

  1. பிரஹ்மண்யன்

    வேதமே சந்தத்திலேயே புனையப்பட்டதுதான். சம்ஸ்கிருதம் வெகுகாலத்திற்கப்பிரம் ஏற்பட்டது.

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)