காதல், காற்று, கவிதை…

(எழுதியவர்: ஜடாயு)

இந்தியாவின் பெரும்பகுதிகளில் வழக்கமான மழைக்காலம் முடிந்து குளிர்காலம் தொடங்கி விட்டது. வருடாவருடம் ஜூனில் தொடங்கி செப்டம்பர் வரையிலான தென்மேற்குப் பருவக் காற்றுக் காலம் இந்திய தீபகற்பத்தின் நெஞ்சை நிறைக்கும் சுவாசம் என்று சொன்னால் மிகையாகாது. இந்தியாவில் பெய்யும் மழையில் 80% தென்மேற்குப் பருவக் காற்று சுமந்து வரும் மேகங்களின் கொடையே ஆகும்.

கோடையில் வெந்து கொண்டிருக்கும் பிரதேசங்களைக் குளிர்விக்கிறது இந்தப் பருவக் காற்று. அந்தக் குளிர்ச்சியால் உண்டான வெப்பம் முழுவதும் இந்து மகா சமுத்திரத்தில் இறங்கி அதனால் உண்டாகும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அக்டோபர்-நவம்பரில் வடகிழக்குப் பருவக் காற்றை சூறாவளியாக உருவாக்குகிறது. தமிழகத்து மழையில் முக்கால்பங்கு இந்தப் பருவத்தில் தான் கொட்டித் தள்ளுகிறது.

தென்மேற்குப் பருவக் காற்றின் வருகையை இந்திய நிலப்பரப்பெங்கும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் பண்டைக் காலம் முதலே மக்கள் வரவேற்று வந்திருக்கின்றனர். தென்னாட்டின் மலைமுகடுகளை மலயகிரி என்றும் அதிலிருந்து வீசும் காற்றை மலய மாருதம் என்றும் சம்ஸ்கிருத நூல்கள் கொண்டாடுகின்றன (”மலய” என்ற சம்ஸ்கிருதச் சொல் மலை என்ற தமிழ்ச் சொல்லின் திரிபே என்று மொழியறிஞர்கள் கூறுகின்றனர்).

வால்மீகி, காளிதாசன் தொடங்கி அனேகமாக எல்லா சம்ஸ்கிருத கவிஞர்களும் பருவக் காற்றின் தண்மையையும், மென்மையையும் திகட்டத் திகட்ட வர்ணித்திருக்கின்றனர். பங்கிம் சந்திரரின் வந்தே மாதரம் பாடல் “மலயஜ சீதலாம்” என்று பருவக்காற்றை பாரத அன்னையின் பெருமிதங்களில் ஒன்றாகச் சுட்டுகிறது. தாகூரின் கீதாஞ்சலியிலும் ஒரு பாடல் தென் திசைக் காற்றை வாழ்த்துகிறது –

.. Only now and again a sadness fell upon me, and I started up from my dream and felt a sweet trace of a strange fragrance in the south wind.

That vague sweetness made my heart ache with longing and it seemed to me that is was the eager breath of the summer seeking for its completion..

சுபாஷித ரத்னகோசம் என்னும் சம்ஸ்கிருத நூலில் பருவக் காற்று குறித்த சில அழகிய பாடல்களைப் பார்த்தேன். 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நூலில் பல சம்ஸ்கிருத கவிஞர்களின் பாடல்கள் வித்யாதரர் என்பவரால் தொகுக்கப் பட்டுள்ளன.

பருவக் காற்று மண்ணின் நறுமணத்தையும்,மழைமேகத்தையும் மட்டுமல்ல, காதலையும் சேர்த்து சுமந்து வரும் போலும்! சிருங்கார ரசம் ததும்பும் இந்தப் பாடல்கள் அபாரமான சொல்லழகும் ஓசை நயமும் கொண்டவையும் கூட.

वाति-व्यस्त-लवंग-लोध्र-लवली-कुञ्ज:करञ्ज:द्रुमान्
आधुन्वन् उपभुक्त मुक्त मुरला तोयोर्मि-माला-जडः ।
स्वैरं दक्षिण-सिन्धु-कूल-कदली-कच्छोपकण्ठोद्भवः
कावेरी-तट-ताडि-ताडन-तटत्कारोत्तरो मारुतः ॥

அலைகடல் சூழ் முரளா தேசத்தை அனுபவித்ததும்
அதை விட்டு வந்த இந்தக் காற்று,
லவங்கமும் லோத்திரமும் தமரத்தையும் நெருங்கிய சிறுகாடுகளையும்
புங்கை மரங்களையும்
நிலைகுலைந்து ஆடச் செய்கிறது.
தென்கடற்புறத்தில்
வாழைக்குலைகள் தொங்கும் மலைச்சரிவுகளில்
பிறந்த இந்தக் காற்று,
தன்னிச்சைப் படி திரிந்து
காவிரிக் கரையோரத்துப் பனைமரங்கள் தடதடக்க
வீசுகிறது.

[லோத்திரம், தமரத்தை – வாசனை கொண்ட மூலிகை மரங்கள். முரளா-வடகேரள கடற்கரை. முசிறியின் சம்ஸ்கிருதப் பெயர் என்று கூறப்படுகிறது]
(கவி பெயர் தெரியவில்லை)

***

भुक्त्वा चिरं दक्षिणदिग्वधूम् इमां विहाय तस्या भयतः शनैः शनैः ।
सगन्ध सारादि कृतांग भूषणः प्रयात्युदीचीं दयिताम् इवानिलः ॥

தென்திசை மனையாளிடம்
நெடுங்காலம் துய்த்த இன்பத்தின் நறுமணத்தை
உடலெங்கும் அணிந்து
மெதுவெதுவாக அடிவைத்து
அவளை விட்டு விலகி
வடதிசைக் காதலியை நோக்கிப் போகிறது
இந்தக் காற்று.
(கவி பெயர் தெரியவில்லை)

***

आन्ध्री-नीरन्ध्र-पीन-स्तन-तट-लुठनायासमन्द-प्रचारा:
चारूनुल्लासयन्तो द्रविड-वर-वधू-हारि-धम्मिल्ल-भारान् ।
जिघ्रन्तः सिंहलीनां मुख-कमल-मलं केरलीनां कपोलं
चुंबन्तो वान्ति मन्दं मलय-परिमला वायवो दाक्षिणात्याः ॥

ஆந்திரச்சியின் இறுகிய பெருமுலைத் தடங்களில் மோதி
அயர்ச்சியில் கொஞ்சம் தளர்ந்து
அழகிய தமிழ்மகளின் பூச்சூடிய கூந்தலின் அடர்த்தியில்
களித்து விளையாடி
சிங்களத்தியின் தாமரையிதழ்ச் சுவையை முகர்ந்து
கேரளத்தியின் கன்னத்தை முத்தமிட்டு
மெதுமெதுவாக வீசிச் செல்கின்றன
மலயகிரியின் மணம் கமழும்
தென்திசைக் காற்றுகள்.
(வசுகல்பர்)

***

कान्ताकर्षणलोल केरल-वधू धम्मिल्ल-मल्ली-रज:
चौरा:चोड-नितम्बिनी-स्तन-तटे निष्पन्दताम् आगताः ।
रेवा-शीकर-धारिणोन्ध्र-मुरल-स्त्री-मान-मुद्राभिदः
वाता वान्ति नवीन-कोकिल-वधू-हुंकार वाचालिताः ॥

காதலனின் இழுப்பில் அவிழும் கேரள மங்கையின் கூந்தலில்
மல்லிகைப் பூந்துகள்களைத் திருடி
செழித்த பிருஷ்டங்களை உடைய சோழ நாட்டவளின்
முலைத் தடங்களில் மோதி ஸ்தம்பித்து நின்று
ரேவா நதியின் நீர்த்திவலைகளை அள்ளிக் கொண்டு
ஆந்திர கேரளப் பெண்டிரின் தீண்டலைச் சுமந்து
புதிய பெண்குயில் போல ஹூ என்று கூவிக் கொண்டு
வீசிச் செல்கிறது காற்று.
(ஸ்ரீகண்டசிவ கவி)

4 Comments காதல், காற்று, கவிதை…

  1. பவள சங்கரி.

    அருமை ஐயா. கணீர் என்ற குரலும், தெளிவான உச்சரிப்பும், அழகான தமிழாக்கமும் அனைத்தும் பாராட்டுதலுக்குரியது. வாழ்த்துகள்.

  2. மதுசூதனன்

    அன்புள்ள திரு. ஜடாயு – மிகவும் அருமை.

    ஒரு சந்தேகம்: ”southwest wind shlokas’ எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். ‘சுலோகங்கள்’ என்றால் வழிபாட்டுப் பாடல்களை மட்டுமல்லாமல் இத்தகைய கவிதைகளையும் குறிக்குமா ?

    நன்றி
    மது

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)