தமிழிலும் சம்ஸ்க்ருதத்திலும் விளி என்னும் அழைப்பு எட்டாம் வேற்றுமைப் பகுப்பில் வருகிறது.
எட்டன் உருபே எய்து பெயர் ஈற்றின்
திரிபு குன்றல் மிகுதல் இயல்பு அயல்
திரிபுமாம் : பொருள் படர்க்கை யோரைத்
தன்முகமாகத் தான்அழைப் பதுவே
(நன்னூல் : 303)
ஒருவரை அழைக்கையில் நீட்டி முழக்கி விளித்தால்தான் அவர் உடனே திரும்பிப் பார்ப்பார்; இறைவனையும் ‘சுவாமியே! சரணம் ஐயப்பா !!’ என்றுதான் விளிக்கிறோம்; ‘நாராயணா! ஓ மணிவண்ணா! நாகணையாய்!’ எனப் பெருங்குரலெடுத்துத்தான் பெருமாளை ஆழ்வார் விளிக்கிறார். ’பாசுபதா! பரஞ்சுடரே’ எனும் விளிகள் ஒரு பதிகம் முழுக்க மாசிலாமணீசுவரருக்கு அமைகிறது.
இதை வைத்துக்கொண்டு தமிழில் குறுவிளிகள் இல்லையென முடிவு கட்டிவிடக் கூடாது. அருணகிரிநாதர் ’நாகாசல வேலவ!’ எனும் குறில் விளியால் முருகனை விளிப்பார்; ‘ஐய, எனக்கொருகால் ஆடுக செங்கீரை’ எனக் கண்ணபிரானுக்குக் குறில்விளி நாலாயிரத்தில் உள்ளது; ‘ஆள’ எனவும் அச்சுதனை விளிக்கிறார் விஷ்ணு சித்தர், ஆளுமை நிறைந்தவன் என்று பொருளாம். ‘ஐய! என் செவியை மிகவும் அறுமுகன் கிள்ளினான்’ என ஆனைமுகன் கயிலைநாதரிடம் ஆறுமுகனைப் பற்றி ஆவலாதி சொல்லும் இனிய காட்சியையும் இலக்கியத்தில் காண்கிறோம்.
தமிழில் குறில், நெடில் விளிகள் இரண்டும் உள்ளன.
ஏ, டேய், எலேய் – பொது விளிகள்; நெருங்கிய நண்பர்கள் விலங்குகள் பெயராலும் ஒருவரை ஒருவர் அன்பொழுக அழைத்துக் கொள்வர். கன்னட நண்பர்கள் ‘கூபே’ என ஆந்தையின் பெயர்கூறி அழைத்துக்கொள்வர். இவ்வழக்கத்துக்கு இலக்கண- இலக்கிய ஆதாரங்கள் உண்டா தெரியாது.
தெலுங்கில் ‘ஓ ரங்கசாயி, ஓ ராம ஓ ராம’ என விளிப்பார் ஸத்குரு தியாகய்யா.
ஸம்ஸ்க்ருதத்தில் பெரும்பாலும் குறில் விளிகளே. பகவத் கீதை முழுவதும் கண்ணனும், அர்ஜுனனும்
ஒருவரையொருவர் குறுவிளிகளால் மட்டுமே [கேசவ, கேசிநிஷூதந, க்ருஷ்ண, பார்த்த, கௌந்தேய] அழைத்துக் கொள்கிறார்கள்.
இதை வைத்துக்கொண்டு வடமொழியில் நெடில் விளிகளே கிடையாது என முடிவு கட்டக்கூடாது. தொலைவில் இருப்போரை விளிக்க ப்லுதம் எனும் மும்மாத்திரை விளிகள் ஸம்ஸ்க்ருதத்தில் உண்டு – ஹே ராமா[3] எனும் ப்லுத ஸம்போதநம் அமைவதைக் காண்கிறோம். தமிழில் அளபெடைக் கணக்கில் மாத்திரை கூடுகிறது.
அகாரந்த ஆண்பாற் பெயர்களில் இரு மாத்திரை [ராமா, கேசவா] விளிகள் சங்கதத்தில் கிடையா. ‘ஹரே, ஸீதே, ராதே’ போன்றவை இரு மாத்திரை விளிகள். ‘சர்மந், ப்ரஹ்மந், ராஜந்’ போன்ற அரை மாத்திரை விளிகளும் உள்ளன.
பார்க்க ४९ दूराद्धूते च । ८ । २ । ८४ ॥ மற்றும் १०८ भो भगो अघो अपूर्वस्य यो ऽशि॥ ८ । ३ । १७॥
அரே, அயே, போ, ஹே போன்ற பொதுவிளிகள் சங்கதத்தில் உள. ’போ’ பேச்சுவழக்கிலும், ”அகோ, பகோ” இவை வேதத்திலும் இருப்பதாகப் பாணிநி தெரிவிக்கிறார். வைதிக அபிவாதநத்திலும் பெரியோரை வணங்குகையில் ‘அஸ்மி போ:’ எனக் கூறி முடிக்கிறோம்.
அரே, அயே, போ, ஹே போன்ற பொதுவிளிகள் சங்கதத்தில் உள. ’போ’ பேச்சுவழக்கிலும், ”அகோ, பகோ” இவை வேதத்திலும் இருப்பதாகப் பாணிநி தெரிவிக்கிறார். வைதிக அபிவாதநத்திலும் பெரியோரை வணங்குகையில் ‘அஸ்மி போ:’ எனக் கூறி முடிக்கிறோம்.
I think you want to say சம்ஸ்கிருதத்தில் instead of சங்கதத்தில்.