வடமொழியில் தலைசிறந்த ஐம்பெருங் காவியங்களில் ஒன்று நைஷதம். மகாபாரதத்தில் வரும் நிஷத நாட்டு மன்னன் நளன் மற்றும் தமயந்தி கதையை ஒரு மகா காவியமாக ஸ்ரீ ஹர்ஷர் என்ற கவிஞர் இயற்றி இருக்கிறார். “நைஷதம் வித்வத் ஔஷதம்” என்றொரு பழமொழி உண்டு. இருபத்தி இரண்டு அத்தியாயங்களுடன் கூடிய, பல முடிச்சுகள் நிறைந்த கடினமான காவியம் இது. இது தவிரவும் ஸ்ரீ ஹர்ஷர் அத்வைத தத்துவ சம்பந்தமாகவும் நூல்கள் எழுதி உள்ளார். இந்த மகா கவிஞனை ஜயந்த சந்திரன் என்ற மாமன்னன் ஆதரவளித்து தன் அவைப் புலவராக கொண்டான்.
இந்த மன்னனின் பரம்பரையில் சந்திரன் என்ற பெயர் கொள்ளும் வழக்கம் இருந்திருக்கிறது. யசோ விக்ரஹ மகி சந்திரன் – ஸ்ரீ சந்திரதேவன் – மதன பாலன் – கோவிந்த சந்திரன் – விஜய சந்திரன் – ஜெயந்த சந்திரன் என்று இவர்கள் வம்சாவளி. காவியம் படைப்பதிலும், தத்துவ நூல்கள் இயற்றுவதிலும் தேர்ந்தவராக இருந்ததால், மன்னன் ஜயந்த சந்திரன் தன் அவையில் ஸ்ரீஹர்ஷருக்கு இரண்டு ஆசனங்கள், இரண்டு தாம்பூல மரியாதைகள் கொடுத்தானாம்.
ஸ்ரீஹர்ஷரின் தந்தையும் அரசவைவைப்புலவர் தான். கவிதை எப்படி எழுத வேண்டும் என்ற “காவிய பிரகாசம்” என்னும் இலக்கணம் வகுத்த மம்மடர் ஸ்ரீஹர்ஷரின் தாய்மாமன் ஆவார். ஒரு சமயம் அரசவையில் ஏற்பட்ட சர்ச்சையில் தோற்று அவமானம் அடைந்த ஸ்ரீஹர்ஷரின் தந்தை, அவரைக் கூப்பிட்டு தன்னால் முடியாததை தன் மகன் சாதிக்க வேண்டும் என்று வாக்குறுதி வாங்கினார். அதன் பின் ஸ்ரீஹர்ஷர் பல இடங்களுக்கு சென்று கல்வி கற்று, ஒரு குருவிடம் சிந்தாமணி மந்திர உபதேசம் பெற்று அதன் மூலம் எவரையும் வெல்லும் தர்க்க வலிமையையும், இலக்கிய ஆளுமையும் பெற்று அதே அரசவையில் பெரும் மரியாதை பெற்றார். தந்தையின் அவமானத்தையும் துடைத்தார்.
இன்னொரு சுவாரசியமான விஷயம். தெய்வ அனுக்கிரகம் பெற்ற பின் அவர் அளவுக்கு மதியூகம் கொண்டவர்கள் எவரும் இல்லாமல் ஆகி விட்டார்கள். அவருடைய அதிபுத்திசாலித்தனமான பேச்சு யாருக்கும் புரியாமல் போய்விட்டது. இதனால் அவரது குருவிடம் முறையிட, அவரும் இரவு உளுந்தும் தயிரும் (தயிர்வடை ?) உட்கொண்டு, நள்ளிரவில் குளிர்ந்த நீரில் குளித்து விட்டு வருமாறு கூறினாராம். இதனால் கொஞ்சம் புத்தி கூர்மை குறைந்து மற்றவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்தது.
பிற்காலத்தில் நைஷதீய சரிதம் இயற்றி அரங்கேற்ற வந்த போது, அதை காஷ்மீரத்தில் உள்ள பாரதி தேவி (சரஸ்வதி) பீடத்தில் வைத்து அன்னை பாரதியின் அனுமதி பெற்று வருக, அதன் மூலம் இக்காவியம் பெரும் புகழ் அடையும் என்று மன்னன் ஜயந்த சந்திரன் கூற, அதன் படியே காஷ்மீரம் சென்றார்.
காஷ்மீரத்தில் பாரதி தேவி பீடத்தில் வைத்து அரங்கேற்றிய பின், காஷ்மீர மன்னனின் அவையில் இக்காவியத்தை அரங்கேற்ற வேண்டும் என்று ஸ்ரீஹர்ஷர் செய்த முயற்சி பலன் அளிக்கவில்லை. அங்கிருந்த வித்வான்கள் பொறாமையால் அவரை அவைக்குள்ளேயே விடவில்லை. இதனால் பல மாதங்கள் காஷ்மீரத்திலேயே தங்க நேரிட்டது. ஒரு நாள் அவர் ஒரு குளக்கரையில் மந்திர ஜபம் செய்து கொண்டிருந்த போது, அங்கே வந்த இரு பெண்களுக்குள் சண்டை அடிதடி ஏற்பட்டது, அதை விலக்க வந்த காவலாளிகள் எதனால் சண்டை ஏற்பட்டது, யார் என்ன சொன்னார் என்று உண்மையை தெரிந்து கொள்வதற்காக அருகே அமர்ந்திருந்த அவரையும் சாட்சியாக பிடித்து மன்னன் முன் நிறுத்தி விட்டனர். அப்போது ஸ்ரீஹர்ஷர் மன்னனிடம் சம்ஸ்க்ருதத்தில், தனக்கு காஷ்மீர மொழி தெரியாது என்றும் அவர்கள் பேசியதை தாம் கேட்டதாகவும், அந்த வார்த்தை சப்தங்களை அர்த்தம் புரியாவிட்டாலும் அப்படியே ஒப்பிக்க முடியும் என்றும் கூறினார். இவரது கிரகிக்கும் சக்தியைப் பார்த்து நீங்கள் யார் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்க விவரம் எல்லாவற்றையும் சொல்லி மன்னனின் பெரும் மதிப்பைப் பெற்று நைஷத காவியத்தையும் காஷ்மீர அவையில் அரங்கேற்றி பின் வெற்றியுடன் ஜயந்த சந்திரனின் அவைக்குத் திரும்பினார்.
ஜயந்த சந்திரனுக்கு சூஹவ தேவி என்றொரு மனைவி இருந்தாள். கல்வியில் சிறந்தவள் அவள். விதவையான அவளை ஜயந்த சந்திரன் அழகில் மயங்கி மனைவிகளில் ஒருவளாக ஏற்றுக் கொண்டான். மன்னனின் அவையில் அவளுக்கு கலா பாரதி என்றே புகழ். ஸ்ரீஹர்ஷருக்கோ நரபாரதி என்று பெயர். இப்படி பாரதி பட்டம் வைத்துக் கொண்டிருப்பதால் ஸ்ரீ ஹர்ஷன் மீது பொறாமைப் பட்டாள். ஸ்ரீஹர்ஷனைப் பார்த்து பெரிய கலா சர்வஞன் என்று கூறிக் கொள்கிறாயே ஒரு சக்கிலியன் தோல் உரித்து செய்யும் செருப்பு தைக்கத் தெரியுமா என்று பலர் முன் கேலி பேச, அதை சவாலாக கொண்ட ஸ்ரீ ஹர்ஷன் ஒரு கன்றுக் குட்டியின் தோலை உரித்து செருப்பு தைத்து அவளிடம் காட்டி தனக்கு அதுவும் தெரியும் என்று நிரூபித்தார். ஆனால் போட்டிக்காக தான் என்ன மாதிரியான செயலைச் செய்து விட்டோம் என்று எண்ணி வருந்தி அவையிலிருந்து வெளியேறினார். துறவு கொண்டு கங்கைக்கரையில் வாழ்ந்து மறைந்தார். அவர் மறைந்தாலும் நைஷதம் பண்டிதர்களின் நினைவில் வாழ்கிறது.
மாமன்னன் ஜயந்த சந்திரன் பின் என்ன ஆனான்? அவன் தான் அண்டை நாட்டு மன்னனும், சொந்த மாப்பிள்ளையுமான பிருதிவிராஜனுக்கு உதவாமல் இஸ்லாமியப் படையெடுப்புக்கு காவு கொடுத்து துரோகம் செய்து விட்டானே… தன் மகனை இளவரசாக்க எண்ணி அதற்கு ஜயந்த சந்திரன் ஒப்புக்கொள்ளாததால் சூஹவ தேவியே முன்னின்று முகமது கோரி படையை அழைத்து ஜயந்த சந்திரனின் கதையையும் முடித்து வைத்து விட்டாள்.