(எழுதியவர்: ஜடாயு)
ஐயப்பன் குறித்த சம்ஸ்கிருத புராணங்கள், தோத்திரங்கள்,ஐதிகங்கள் குறைந்தது 8-9 நூற்றாண்டுகளாவது பழையவை. பதினெட்டு புராணங்களில் ஒன்றான பிரம்மாண்ட புராணம் என்னும் புராணத்தில் பூதநாதோபாக்கியானம் என்னும் பகுதியில் இன்று கேரளத்திலும், தமிழகத்திலும் பிரபலமாக உள்ள ஐயப்பன் சரித்திரம் கூறப்படுகிறது. இது ஒரு தனி நூலாக இயற்றப்பட்டுப் பிறகு இந்தப் புராணத்தில் சேர்க்கப் பட்டிருக்கக் கூடும். சபரிமலை குறித்தும் இந்த நூல் கூறுகிறது. போரில் தோற்ற பிற்காலப் பாண்டியர்களிடமிருந்து கிளை பிரிந்ததே பந்தள ராஜவம்சம்; அந்தக் கிளையில் வந்த ராஜசேகர பாண்டியனே ஐயப்பனின் தந்தையாகச் சித்தரிக்கப் படுபவர் என்று சில வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கும் கருத்தும் இந்தக் காலகட்டத்துடன் (11,12ம் நூற்றாண்டு) பொருந்தி வருகிறது.
கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்த புராணத்தில் மகா சாத்தாப் படலம் என்ற பகுதி சாஸ்தா குறித்த புராணக் கதையை முழுவதுமாகச் சொல்லி விடுகிறது. கச்சியப்பரின் காலம் கி.பி 1400க்குச் சற்று முன் அமைந்தது. எனவே அதற்கு முன்பே சம்ஸ்கிருத புராண மரபில் சாஸ்தா/ஐயப்பன் உறுதியாக இடம்பெற்று விட்டார் என்பது தெளிவு.
அங்கண் மேவி அரிகரபுத்திரன்
சங்கையில் பெரும் சாரதர் தம்மொடும்
எங்குமாகி இருந்து எவ்வுலகையும்
கங்குலும் பகல் எல்லையும் காப்பனால்
என்று கந்தபுராணத்தில் வரும் பாடல் தான் “காசி ராமேஸ்வரம் பாண்டி மலையாளம் அடக்கியாளும் ஹரிஹரசுதன்” என்று ஐயப்ப பக்தர்கள் இன்றுவரை கூறும் சரண கோஷத்திற்கு அடிப்படையாக இருக்கிறது.
தமிழகத்தில் சாத்தா / ஐயனார் / கருப்பண்ண சாமி வழிபாடு பரவலானது. குறிப்பாக மதுரை மற்றும் அதன் அருகில் உள்ள ஊர்கள், சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் ஐயனார், கருப்பண்ணசாமி கோவில்கள் அதிகமாகக் காணலாம். அடைக்கலம் காத்த ஐயனார், சேவுகப்பெருமாள் ஐயனார், பொய்சொல்லாமெய்ய ஐயனார் போன்ற சாமிகள் கோவில் கொண்டிருக்கிறார்கள். கருப்பண்ண சாமிகளில் சங்கிலிக்கருப்பன், பெரிய கருப்பன், சின்னக்கருப்பன், முத்துக்கருப்பன், பதினெட்டாம்படி கருப்பன், கோட்டைக் கருப்பன், பலிக் கருப்பன், முப்பிலிக்கருப்பன், காட்டுக்கருப்பன் என்றும் பல வகையாக வழிபாடு நடைபெறுகிறது. இப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பலரும் கருப்பன், கருப்பசாமி என்று பெயர் வைத்துக் கொள்வது இவர்களின் குலதெய்வங்களின் பெயரால் தான்.
பல குலதெய்வங்கள், பரிவார தேவதைகளுக்கான சம்ஸ்கிருத துதிகள் இன்றும் எழுந்த படியே உள்ளன என்று ஜெயமோகன் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். கீழே உள்ள படங்களைப் பாருங்கள் – முதலில் உள்ளது ஸ்ரீ கருப்ப ஸ்வாமி அஷ்டோத்தர சத நாமாவளி , பிற்கு வருவது வீரனார் என்ற காவல் தெய்வம் குறித்த ஸ்ரீமஹாவீர அஷ்டோத்தர சத நாமாவளி.
(ஸ்ரீ மஹா சாஸ்தா விஜயம், வெளியீடு: மகா சாஸ்தா சேவா சங்கம், கோவை).
கறுப்பர் அஷ்டோத்திரத்தில் “வராஹ ரக்த ப்ரியாய நம:” [பன்றிக்குருதியை விரும்புபவனே வணக்கம்] “ அஜிபலி ப்ரியாய நம:” [ஆட்டு பலியை விரும்புபவனே வணக்கம் ] போன்ற நாமங்களும், ஸ்ரீம் / ஸௌம் / ஹம் ஆகிய பீஜாட்சரங்களுடன் இணைந்த நாமங்களும் கலந்தே உள்ளன.
எல்லா நாட்டாரியல் கோட்பாடுகளையும் கீழே போட்டு மிதிக்கிறது கருப்பசாமியின் குதிரை (அஸ்வாரூடாய நம:). விளாசுகிறது அவருடைய சாட்டை (கடி ஹஸ்தாய நம:) !
அற்புதம்… தொடர்ந்து அண்ணமார் போன்ற கடவுளருக்கும் அஷ்டோத்திரங்கள், துதிப்பாக்கள், புதிதாய்.. வரலாம்…;) அவை குறித்து ஸ்ரீ மான்..ஜடாயு அவர்கள் அறிந்திருந்தாலும் எழுதலாமே…புதிதாய் பீஜாக்ஷரங்களை கண்டு பிடிப்பவர்கள் யார்..?
மிக நல்லக்கட்டுரை. ஸ்ரீ ஜடாயு அவர்களுக்கு பாராட்டுக்கள். நம்முடைய சிறுதெய்வங்களும் பெருந்தெய்வங்களும் ஒன்றோடு ஒன்று சார்ந்தவையே. சிறுதெய்வங்கள் பெருந்தெய்வங்களுக்கு எதிரானவை என்ற மிசநரி நாட்டாரியல் கோட்பாட்டினை உடைத்தெரிகிறது இந்தக்கட்டுரை. இந்த நோக்கில் ஆய்வுகள் தொடரவேண்டும். தொடர்வோம்.
கருப்பண்ண சுவாமி வேறு சாஸ்தாவேறு தெய்வங்கள். இருவரும் ஒரே தலத்தில் வழிபடப்படுவதும் உண்டு. கருப்பசாமி கொங்கு மண்டலத்தில் கருப்பராயர் என்றும் வணங்கப்படுகிறார். அங்கே பெரும்பாலும் தனித்தே வழிபாடுகள் அவருக்கு நடக்கின்றன. கருப்பசாமி தனது தேவியுடன் வழிபடப்படுவது வெகு அரிதாகவே நடக்கிறது. மக்களைக்காக்க போரில் வீரமரணம் அடைந்த மாவீரர்களும் கருப்பர் வழிபாட்டில் இணைவதும் உண்டு. நீலகிரிப்பழங்குடி மக்களான இருளர்களிடையே கூட எனது களப்பணியின்போது கருப்பசாமியைப்பற்றி கேள்விப்பட்டு வியந்திருக்கிறேன்.
அருமையான
பதிவு ஆராய்ச்சி தொடர வாழ்த்துக்கள்