சீனமொழியும் சம்ஸ்க்ருத மொழியும் இந்த உலகின் மிகப் பழைய, பரவலான தாக்கத்தைக் கொண்ட செழுமையான மொழிகள். இவ்விரு மொழிகளுக்கும் பல ஒற்றுமை வேற்றுமைகள் உண்டு.
- இரண்டும் பல ஆயிரம் ஆண்டுகள் பழைய மொழிகள்
- சம்ஸ்க்ருதம் பல எழுத்து முறைகளில் எழுதப்பட்டது, ஆனால் ஒரே உச்சரிப்புடன் உள்ளது. சீனம் ஒரே எழுத்து முறையில் எழுதப் பட்டாலும், ஒரே எழுத்துக்கு நாட்டின் பல இடங்களில் பல உச்சரிப்புடன் உபயோகிக்கப் படுகிறது.
- பல ஆயிரம் ஆண்டுகளாக சீன எழுத்துமுறை வெகு குறைவான மாற்றங்களையே பெற்று வந்துள்ளது. சம்ஸ்க்ருதம் பல ஆயிரம் ஆண்டுகளாக ஒரே உச்சரிப்பு முறையை பாதுகாத்து வந்துள்ளது.
- வைதிக சம்ஸ்க்ருதத்திலிருந்து லௌகிக சம்ஸ்க்ருதம் பிறந்தது. அதிலிருந்து பல கிளை மொழிகள் தோன்றின. சீன மொழியும் ஆதி மொழியிலிருந்து பதினெட்டு விதமான கிளை மொழிகளை தோற்றுவித்து உள்ளது.
- சீன மொழியில் ஸ்வரங்கள் உள்ளது. மந்தாரின் நான்கு விதமான ஸ்வரங்களைக் கொண்டது. காண்டனீஸ் ஒன்பது விதமான ஸ்வரங்களைக் கொண்டது. வைதிக சம்ஸ்க்ருதமும் ஹரஸ்வம், தீர்க்கம், ப்லுதம், உதாத்தம், அனுதாத்தம், ஸ்வரிதம், அனுனாசிகம் என்று பல உச்சரிப்பு முறைகளைக் கொண்டது.
- சம்ஸ்க்ருதத்தில் வாய்மொழிக்கு முக்கியத்துவம் – ஆகையால் விரிவான இலக்கணம் உள்ளது. சீன மொழியில் எழுத்துக்கு முக்கியத்துவம், ஆகையால் வாய்மொழிக்கு (சொல்லிலக்கணம்) இல்லை (ஒருமை – பன்மை, நிகழ் இறந்த வருங்காலத்துக்கு சொல்லில் மாற்றமில்லை) .
- அரசமொழியாக இருந்த பழைய சீன மொழியில் இருந்து உருவான ஒரு பிராந்திய மொழிதான் இன்றைய அரச மொழியான மந்தாரின் (Mandarin). பழமையான அரச மொழியான சம்ஸ்க்ருத மொழியிலிருந்து தோன்றிய ஹிந்தி மொழி இன்றைய அரச மொழி.
- சம்ஸ்க்ருதத்துக்கும் ஜெர்மனிய மொழிகளுக்கும தொடர்பு உண்டு என்று கூறுவர், ஆனால் ஆதாரம் தீர்மானமாக இல்லை. சீன மொழிக்கும் ஜப்பானிய மொழிக்கும் தொடர்பு இருந்தாலும் அது தீர்மானமாக நிரூபிக்கப் படவில்லை.
- சீன மொழியில் பழைய எழுத்து முறைக்கு அரச ஆதரவு இல்லாமல் போக, புதிய எழுத்து முறை புகுத்தப் பட்டு அதுவே இன்று நூறு கோடி மக்கள் உபயோகிப்பதாக உள்ளது. சீன மொழியின் பழைய எழுத்து முறை இன்றும் தாய்வான், ஹாங்காங் ஆகிய பகுதிகளில் மட்டும் பரவலாக உள்ளது. சம்ஸ்க்ருதமும் இந்தியாவில் ஒரு சில இடங்களில் மட்டுமே பேச்சுமொழியாக இன்றும் உள்ளது.
- சீனமொழியில் தத்துவம், அறிவியல், மருத்துவம் போன்றவற்றுக்கு பல பழமையான நூல்கள் எழுதப் பட்டு வந்துள்ளன. புத்த மதத்தின் பல நூல்கள் மூலத்தில் சம்ஸ்க்ருதத்தில் எழுதப்பட்டு பின்னர் சீனத்தில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன. சம்ஸ்க்ருதமும் ஒரு தத்துவ, அறிவியல், அரச மொழியாக ஏராளமான நூல்களின் பொக்கிஷமாக விளங்குகிறது.
இவ்விரு மொழிகளும் மேலும் பல ஒற்றுமைகளும் உள்ளன. இவ்விரண்டு மொழிகளுமே மானுட இனத்தின் முக்கியமான மொழிகளாம்.
அன்பரே
தங்கள் தளம் மிக பயனுள்ளதாய், அருமையாய் உள்ளது. இங்கே தமிழில் டைப் செய்யும் உத்தியை எவ்விதம் கொணர்ந்தீர் தயை கூர்ந்து கூற முடியுமா?