தமிழ்ச் சைவமும் வடமொழி வேதமும்

இந்து சமயத்தின் ஒரு பகுதியே சைவம். வேதமே சைவத்துக்கு பிரமாணம். வேதம் என்றும் தமிழில் மறையென்றும் ஏத்தப் படும் நால்வேதங்கள், பாரத நாட்டின் புதல்வர்களான நமக்கே நமக்காகக் கிடைத்த சிந்தனைச் செல்வங்கள். “நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளர்ந்த மறைமொழி தானே மந்திரம் என்ப” என்கிறது தொல்காப்பியம். வேதத்தின் வழி வாழ்வும், வாழ்விற் பயனும், இம்மையும் மறுமையும், இறுதிப் பேருண்மையும் அறியலாம். நமது சைவ சமய நூல்கள் சிவமே வேதம் – வேதமே சிவம் என்று கூறுகின்றன.

சமயக் குரவர்களும் வேதமும்

வேதங்கள் வியாச முனிவரால் நான்கு பெரும் வகையாக, ரிக், யசுர், சாமம், அதர்வணம் என்று பிரிக்கப் பட்டு அவ்வாறே பயிலப் படுகிறது. நான்கு வேதங்களை சைவ நால்வரின் பதிகங்களுடன் ஒப்பிட்டு கூறுவதும் உண்டு. அதாவது சம்பந்தர் தேவாரம் ருக்வேத சாரம் என்பதை “சிவபத்தி ருக்கு ஐயம் போக உரைத்தோன்” என்று கந்தர் அந்தாதி ஞான சம்பந்தரை கூறுகிறது.

திருநாவுக்கரசரின் தேவாரம் யசுர் வேத சாரம். யசுர் வேதத்தின் நடுவில் நமச்சிவாய என்ற பதம் இருப்பது போல திருநாவுக்கரசரின் முன்னூற்றிரண்டு பதிகங்களில் நடுவில் நூற்றி ஐம்பத்தாறாவதாக “அல்லல் ஆக” எனத் தொடங்கும் பதிகத்தில் பஞ்சாக்கரம் வருகிறது.

சாம வேதம் போன்றது சுந்தரர் தேவாரம் என்று கொள்ளலாம். அதைக் கேட்டு மெய்மறந்த இறைவன் அசையாது நின்றுவிட்டதால் சிலம்பொலி கேட்க முடியாமல் சேரமான் பெருமாள் நாயனார் காத்திருக்க நேரிட்டது என்பது வரலாறு. விரும்பியதை அடையும் யாக மந்திரங்கள், தந்திரங்கள் ஆகியவை அடங்கிய அதர்வண வேதத்துக்கு சமம் தன்னை ஆராக்காதல் நங்கையாகவும், மீளா அடியனாகவும் பாடிய மாணிக்க வாசகப் பெருமானுடைய பாடல்கள்.

 

வேதத்தின் சிறப்பு

வேதத்தின் சிறப்பை சைவ திருமுறைகள் பதிகத்துக்கு பதிகம் பலகாலும் எடுத்துரைக்கின்றன. அவற்றில் சிலவற்றை இக்கட்டுரையில் காண்போம். திருமூலரின் திருமந்திரத்தில் வரும் இப்பாடல் வேதத்தின் சிறப்பை அழகாக எடுத்துரைக்கிறது.

வேதத்தை விட்ட அறமில்லை – வேதத்தில்
ஓதத்தகும் அறம் எல்லாம் உள – தருக்க
வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடுபெற்றார்களே! (திருமந்திரம் 51)

இப்பாடலில் வேதத்தை விஞ்சிய, வேதத்தில் இல்லாத, வேதத்துக்கு புறம்பான அறம் என்று எதுவும் இல்லை. வேதமே அறவடிவானது என்று எடுத்துரைக்கப் படுகிறது. வேதமும் ஆகமங்களும் சிவபெருமானால் அருளப் பட்டவை என்று நம் முன்னோர்கள் பலவிதங்களில் எடுத்தியம்புகிறார்கள். சைவ நெறியில் வேதாந்தம், சித்தாந்தம் என்று இருவழிகள் அல்ல, வேதமும் ஆகமும் சிவனிடமிருந்துதான் தோன்றின என்று உரைக்கும் மற்றொரு திருமந்திரம்

வேதமொ டாகமம் மெய்யாம் இறைவன்நூல்
ஓதும் பொதுவும் சிறப்பும் என்றுள்ளன
நாதன் உரைஅவை நாடில் இரண்டந்தம்
பேதம தென்னில் பெரியோர்க் கபேதமே. (திருமந்திரம் 2397)

நால்வகை வேதங்களைக் குறித்து பலவாறும் திருமறைகள், தேவாரம் திருவாசகம் ஆகியவற்றில் பாடப் பெறுகின்றன. உதாரணமாக திருவாசகத்தில் “இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்” என்றும் “சாந்தோக சாமம் ஓதும வாயானை” (தேவாரம்) என்றும் வேதம் பாடப்பெற்றுள்ளது. வேதத்திற்கு ஆறு அங்கங்கள் – இவற்றை வடமொழியில் ஷடங்கம் (ஷட் = ஆறு) என்பதைத்தான் தமிழில் சடங்கு என்று இன்றும் நாம் அழைக்கிறோம். “அங்கம் ஒராறும் அருமறை நான்கும் அருள் செய்து” என்றும் “வேதமோடாறங்க மாயினானை” என்றும் சிவ உருவே வேதம் என்பர்.

இன்னோரிடத்தில்

இருக்கின் மலிந்த விறைவ ரவர்போலாம்
அருப்பின் முலையாள் பங்கத் தையரே. (திருமுறை)

என்று இருக்கு வேதத்தில் நிறைந்துள்ள இறைவன் என்று இருக்கு வேதத்தின் புகழ் திருமுறையில் பாடப் படுகிறது. மேலும் மூவர் முதலிகளின் தேவாரத்தில் “வேதத்தின் பொருளானாய்” என்று அப்பரும், “மறையின் பொருளானவனே” என்று சுந்தரரும் வேதத்தின் விழுப்பொருளாக சிவப் பரம்பொருளைப் பாடுகின்றார். யசுர் வேதத்தின் திருவுருத்திரம் போன்ற பகுதிகள் சிவனை பாடுகின்றன. நமசிவாய என்றும் சிவதராய என்றும் யசுர் வேதத்தில் பாடுவதுடன், சிவாய நம, சிவலிங்காய நம என்று தைத்திரிய ஆரண்யகத்தில் போற்றப் படுகிறது. வேத புருடனுக்கு திருவுருத்திரம் கண்; பஞ்சாக்கரம் கண்மணி என்று ஆறுமுக நாவலர் கூறுவர்.

திருவுருத்திரத்தின் பெருமை

ஆய அந்தணர் அருமறை உருத்திரம் கொண்டு
மாயனார் அறியா மலர்ச் சேவடி வழுத்தும்
தூய அன்பொடு தொடர்பினில் இடையறாச் சுருதி
நேய நெஞ்சினர் ஆகி அத் தொழில் தலை நின்றார் (1038)

இவ்வாறு உருத்திர பசுபதி நாயனாரை சேக்கிழார் பாடுகிறார். இந்த உருத்திர பசுபதி நாயனார், திருவுருத்திரம் ஒதுவதைத் தன் முழுநேர வழிபாடாகக் கொண்டவர். இவரது நியம நிட்டைகளை இறைவனே உகந்து ஏற்றதை சேக்கிழார் இவ்வாறு கூறுகிறார்.

காதல் அன்பர் தம் அரும் தவப் பெருமையும் கலந்த
வேத மந்திர நியதியின் மிகுதியும் விரும்பி
ஆதி நாயகர் அமர்ந்து அருள் செய்ய மற்றவர் தாம்
தீது இலா நிலைச் சிவபுரி எல்லையில் சேர்ந்தார்!

வேத மந்திர நியதிப்படி வாழ்க்கையை நடாத்திச் செல்வது ஆதி நாயகனான சிவபெருமானுக்கு உகந்தது என்று அழகாக மேற்கண்ட பாடல் எடுத்துரைக்கிறது. வேதம் பல செய்திகள், நியதிகள், தத்துவங்கள், வழிகாட்டுதல்கள் நிறைந்த தொகுப்பு. வேதங்களை யாவரும் நெருங்கி பேச்சு வழக்கில் உள்ள தெய்வ மொழியில் – தமிழில் செய்ய ஏற்பட்ட இறைவனின் திருவுளமே சைவத் திருமுறைகள். அதனால் தான் தேவாரம் வேத சாரம் என்று புகழ் பெறுகிறது.

வேதம் ஓதுதல்

ஞான சம்பந்தப் பெருமான் உலகிற் உதித்தது “வேதநெறி தழைத்தோங்க…” என்ற காரணத் தின் பேரில் தான். சம்பந்தரின் தேவாரம் ஒன்றில் காணும் செய்தி மிகவும் ரசிக்கத் தக்கது. இப்பதிகத்தில் திருவீழிமிழலையில் கிளிகள் வேதங்களில் பொருளைக் கூறின என்கிறார்:

பாரிசையும் பண்டிதர்கள்
பன்னாளும் பயின்றோதும் ஓசைகேட்டு
வேரிமலி பொழில்கிள்ளை
வேதங்கள் பொருள் சொல்லும் மிழலைஆமே!

பண்டிதர்கள் பன்னாளும் பயின்றோதல் என்பது வேத விற்பன்னர்கள் பலமுறை ஓதி அத்யயனம் செய்தலைக் குறிக்கிறது. இவற்றைக் கேட்ட கிளி வேதம் மட்டும் “சொன்னதை சொல்வதாக” சொல்ல வில்லையாம். வேதத்தின் பொருளைச் சொல்லிற்றாம். அது எப்படி வேதத்தின் பொருள் கிளிக்குத் தெரிந்தது என்றால் அது அந்த தலத்தின் விசேடம். இதே போன்றதொரு நிகழ்ச்சியை வேறொரு இடத்திலும் சம்பந்தர் பாடுகிறார்.

சாலநல்லார் பயிலும் மறைகேட்டுப் பதங்களை
சோலை மேவும் கிளிதான் சொல்பயிலும் புகலியே!

சம்பந்தர் பாடல்களில் மற்றொரு சிறப்பு, சம்பந்தர் தம்மை “நான்மறை ஞான சம்பந்தன்” என்றும் இறைவனை “வேதியன்” என்றும் பல்வேறு பாடல்களில் வேதியர், வேள்வி போன்றவை குறித்தும் பாடியுள்ளமை தான். “கற்றாங்கு எரிஓம்பிக் கலியை வாராமே செற்றார்” என்று கலியின் கொடுமை நீங்க வேதமும் வேள்வியும்தான் வழி என்று தம் பதிகங்களில் ஞானசம்பந்தர் திட்ட வட்டமாகத் தெரிவிக்கிறார்.

வேதத்தை நிறைவாக ஓதி முடித்தவர்கள் மனது தாயைப் போல உலகத்தை நேசித்து அன்பு செலுத்தக் கூடியது என்பதை “தாய்என நிறைந்ததொரு தன்மையினார் நன்மையோடு வாழ்வு தூய மறையாளர் முறை ஓதி நிறை தோணிபுரம்” என்ற பதிகத்தில் குறிப்பிடுகிறார். முறை ஓதி நிறை என்ற பதங்கள் வேதம் ஓதும முறையில் ஒன்றான கிரம பாடம் என்று கூறுவர்.

வேத மலிந்தஒலி விழவின்னொலி வீணையொலி
கீத மலிந்துடனே கிளரத்திகழ் பௌவமறை
ஓத மலிந்துயர்வான் முகடேறவொண் மால்வரையான்
பேதை யொடும்மிருந்தான் பிரமாபுரம் பேணுமினே.

என்று வேத கோஷத்தை புகழ்ந்து வேதத்தின் ஒலி மங்கலமானது என்கிறார் சம்பந்தர். நான்கு வகை வேதமும் கற்ற சதுர்வேதி என்று அழைக்கப் படும் பண்டிதர்களைக் குறித்து ஒரு பதிகம்

நாலுவேதம் ஓதுவார்கள் நம்துணை என்றிரைஞ்ச
சேலு மேயும் கழனிசூழ்ந்த சிரபுரம் மேயவனே!

இன்னொரு பதிகத்தில் “சாகைஆயிரமும் சாமமும் ஒதுவதுடையர்” என்று வேதப் பிரிவுகளைக் குறித்து அழகாகப் பாடுகிறார்.

சைவம் வேறு வேதம் வேறு அல்ல

திருமுறைகள் பலவற்றிலும் வேத மந்திரங்களால் ஈசன் வழிபடப் பட்டதை “வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாக” என்றும் “மறையாயின சொல்லி ஒண்மலர் சாந்தவை கொண்டு முறையான் மிகுமுனிவர் தொழு முதுகுன்றடைவோமே” என்றும் வேத உபாசனை பாடப் பெற்றுள்ளது.
திருவாசகத்தில் “வேதங்கள் தெரிழுதேத்தும் விளங்கு தில்லைக் கண்டேனே” என்று தில்லையில் வேதங்களனைத்தும் சிவனை தொழுதவாறு உள்ளன என்று கூறப் படுகிறது. சம்பந்தரின் மற்றோர் தேவாரத்தில் “வேதங்கள் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே” என்று முடிந்த முடிவாகக் கூறுகிறார். சைவம் வேறு வேதம் வேறு அல்ல என்பதை “சைவநெறி வைதிகம் நிற்க” என்று கூறுகிறார் சேக்கிழார்.

வடமொழியின் தோற்றமே சிவத்தில் தான்

வடமொழி இலக்கண நூல்களுள் பாணினியின் இலக்கணமே முதன்மையானது. இவ்விலக்கண நூலைக் கற்கத் துவங்குகையில் முதற் செய்யுளாக சம்ஸ்க்ருத மொழியில் உள்ள எழுத்துக்களின் தோற்றம் குறித்து கீழ்க் காணும் வடமொழிச் செய்யுள் ஓதப் படும்.

ந்ருʼத்தாவஸானே நடராஜராஜோ நனாத³ ட⁴க்காம்ʼ நவபஞ்சவாரம்|
உத்³த⁴ர்த்துகாமோ ஸனகாதி³ஸித்³தா⁴தி³னேதத்³விமர்ஸே² ஸி²வஸூத்ரஜாலம்||

नृत्तावसाने नटराजराजो ननाद ढक्कां नवपञ्चवारम्।
उद्धर्त्तुकामो सनकादिसिद्धादिनेतद्विमर्शे शिवसूत्रजालम्॥

இச்செய்யுளின் பொருளாவது நடனமாடிய நடராஜ ராஜன், சனகர் முதலான முனிவர்களின் உகப்பிற்காக தன் உடுக்கை இசைக்கருவியை பதினான்கு முறை அசைக்க சிவ சூத்திரங்கள் பிறந்தன. “அஇஉண்” என்று துவங்கும் சிவ சூத்திரங்கள் என்பவை சம்ஸ்க்ருத மொழியின் உயிர், மெய் முதலான எழுத்துக்களின் தொகுப்பு ஆகும். இச்சிவ சூத்திரங்கள் தான் பாணினியின் இலக்கணத்திற்கு அடிப்படை. ஆக சம்ஸ்க்ருதம் சிவ பெருமானிடம் இருந்துதான் தோன்றியது என்பதே இச்செய்யுள் நமக்கு எடுத்துக் காட்டும் செய்தி.

இவ்வாறு சைவ நூற்கருத்தும், சமயப் பெரியோர் கருத்தும் வேதம் வடமொழியில் உள்ளது அதனால் அது வேறானது என்று பிரித்தரியாமல் இறைவனின் திருவுருவே வேதம் என்று கருதுகின்றன. வடமொழி நூலார் கருத்தும் சைவபரமாகவே உள்ளது. இதனால் வடமொழி கற்பதும், வேதம் ஓதுவதும் சிவனை அறிவதற்கு ஏதுவாகும் என்பதில் ஐயமில்லை.

குறிப்புகள்

 • சைவம் ஓர் அறிமுகம் – டாக்டர் ப. அருணாச்சலம்
 • என்றும் இருபது – புலவர், பேராசிரியர் ம.வே. பசுபதி

15 Comments தமிழ்ச் சைவமும் வடமொழி வேதமும்

 1. Dharma

  ஒரு அருமையான வலைத்தளம் கண்டு இன்பம் அடைந்தேன். தங்களின் சிவ பணி தொடர என் வாழ்த்துக்கள் …நன்றி

  அன்புடன்
  வேல்தர்மா
  ஜெர்மனி

  தேவாரம்,திருவாசகம்,திருமுறை பாடல்கள் முழுவதும் இணையத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய

  முகவரி:
  http://www.devarathirumurai.wordpress.com

  http://www.devarathirumurai.blogspot.com

  தேவாரம்,திருவாசகம்,மற்றும் திருமுறைகளை இலவசமாக இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம், சுமார் 5 GB அளவு பாடல்கள் உள்ளன , மேலும் 63 நாயன்மார்களின் வாழ்கை வரலாறு சித்திர வீடியோ (கார்ட்டூன்) வடிவில் உள்ளது.

 2. v subramanian

  இன்று தான் ஒரு இணைய தளத்தில் சிவன் சக்தி முதலான கடவுளர்கள் வேதத்தால் பாடப்பட்டவர்கள் அல்ல என்றும் நாராயணனே வேதக் கடவுள் என்றும் ஒரு வைணவர் எழுதியிருந்தார். அவரை நான் இப்போது இந்தக் கட்டுரையை படிக்க சொல்லப் போகிறேன். எவ்வளவு அருமையாக விளக்கி எழுதியுள்ளீர்கள்.

 3. Balu

  மாற்ற மனங்கழிய நின்ற மறையோனை
  நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனை காண
  இந்த பக்கத்தில் இருக்கும் வீடியோவை பாருங்கள்.
  ஐயா இரகசியங்களை தெளிவாக விளக்கி உள்ளார்.

  இங்கே சொடுக்கவும்

  ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்
  அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்

  அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
  தனிப் பெரும் கருணை அருட்பெரும் ஜோதி

 4. rajakantha pathmanatha sarma

  சிவம் தான் பிரம்மம் என்பது உணர்த்தப்பட்டுள்ளது. மிக்க மகிழ்ச்சி……..

  வாழ்த்துக்கள் .

 5. Geetha Sambasivam

  எதையோ தேடுகையில் தற்செயலாக இந்தத் தளத்தின் அறிமுகம் கிடைக்கப் பெற்றேன். அருமையான தளம். பகிர்வுக்கு நன்றி.

 6. கனகவேல் கள்ளக்குறிச்சி

  யதார்த்தமாக தேடலில் காணப்பட்ட வலைத்தளம்.
  எளிய தமிழில் அட்டகாசமான விளக்கம்.
  தங்கள் மேற்கொண்ட முயற்சி நல்லவிதம்.
  வாழ்த்துக்கள்

 7. கார்த்திக்

  नृत्तावसाने नटराजराजो ननाद ढक्कां नवपञ्चवारम्।
  उद्धर्त्तुकामो सनकादिसिद्धादिनेतद्विमर्शे शिवसूत्रजालम्॥

  இச்செய்யுளின் பொருளாவது நடனமாடிய நடராஜ ராஜன், சனகர் முதலான முனிவர்களின் உகப்பிற்காக தன் உடுக்கை இசைக்கருவியை பதினைந்து முறை அசைக்க சிவ சூத்திரங்கள் பிறந்தன//நவ+பஞ்ச = பதினான்கு….

 8. வீரமணி

  • உணற நின்றபோது ஊணம் போச்சு
  • தானற நின்றபோது சைவமாச்சு
  • சைவம் யாருக்கடி
  • தன்னையறிந்தவர்கே

  • இது இப்படி இருக்க
  புரியவில்லை தாயே
  நான் சைவனா அல்லது அசைவனா
  பிறந்த போது 5 பவுண்டு இருந்தேன்
  50 வயதில் 55 கிலோ உள்ளது
  அதிகமான எடை எப்படி
  வீரமணி

  மீன் இறைச்சி தின்றதில்லை
  அன்றும் இன்றும் வேதியர்
  மீன் இருக்கும் நீரல்லவோ
  குடிப்பதும் குளிப்பதுவும்

 9. எஸ்.சந்திரசேகர்

  அருமையான வலைதளம்… நான் பார்த்தவரை பலபேர் தேவாரத்தையும் வேதத்தையும் இகழ்வதன் காரணம் என்ன தெரியுமா? முன்தோன்றிய மூத்தகுடி மொழியாக தமிழ் இருந்தால், ஏன் வேதத்தை ஈசன் சமஸ்கிருதம் என்ற தேவ மொழியில் படைத்தான்? அவன் தென்னவனா, ஆரியனா? என்ற கோபமே அதிகம். எப்போது திராவிட தமிழ் ஆராய்ச்சி என்று ஒன்று வந்ததோ அப்போதே சிவ-வேத துவேஷங்களும் உள்ளே புகுந்துவிட்டது. தில்லையும் இல்லை கொல்லையும் இல்லை என்று இகழும் கூட்டத்தில் நாம் இன்று இருக்கிறோம். இப்படியான சமுதாயத்தில் இருந்தாலும் நாம் மாசடையவில்லை. அதுதான் நம் சைவ சமய சிறப்பு.

 10. அகஸ்தீன்

  • சைவம் யாருக்கடி
  • தன்னையறிந்தவர்கே

  கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று கூறுகின்றது அவருடைய பெயர் எங்கும் சொல்லபடவில்லை. ஆனால் நாம் இத்தனை பெயர்கள் எங்கே இருந்து வந்தது என்று யோசிக்கிறோமா.

  கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய முத்த குடி தமிழ் என்று வார்த்தையில் சொல்கிறோம் ஆனால் வேதம் என்று சொன்னதும் சம்ஸ்கிருதம் போய்விடுகிறோம்.

  நமது மொழியில் தரப்பட்ட வேதங்களை நாம் அறிந்து கொண்டோமா அந்த பரம்பொருளை வேதங்கள் வழியாக தேடுவோம் கண்டுகொள்ளலாம்

  நன்றி
  அகஸ்தீன்

 11. மாரி

  ரிக் வேதத்தில் அடிமுடி தேடிய சரிதை உள்ளதா?
  ஆம் எனில் எங்குள்ளதென்று தெரிவிக்க வேண்டுகிறேன்

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)