சிலப்பதிகாரத்தில் வடமொழி பஞ்சதந்திர கதைகள்

::தினமலர் செய்தி::
(செப். 25, 2012 அன்று வெளிவந்த செய்தி)

“”பஞ்ச தந்திர கதைகளில் உள்ள நீதிகளையும், செயல்பாடுகளையும், சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் அமைத்துள்ளார்,” என, தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் நாகசாமி தெரிவித்தார். பெசன்ட் நகர், “தமிழ் ஆர்ட்ஸ் அகடமி’ சார்பில், ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில், தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் நாகசாமி “சிலப்பதிகாரம் ஒரு புதிய நோக்கு’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையில் கூறியதாவது: ஐந்திணைகள்சிலப்பதிகாரத்தை நாடக காப்பியம் என்று, உரை ஆசிரியர் குறிக்கின்றார். கதைப் போக்கில் ஆங்காங்கே இசை பாக்களையும், பல்வகை கூத்துக்களையும் பொருத்தி, அதன் வாயிலாக முக்கிய நீதிகளை இளங்கோவடிகள் எடுத்துரைக்கிறார்.

எடுத்துக்காட்டாக, தமிழ் இலக்கண மரபுப்படி, ஐந்திணைகளை இந்நூலில் அமைத்து இயற்றி இருக்கிறார். சைவம், வைணவம், சாக்தம், பவுத்தம், சமணம், ஆசீவகம் ஆகிய சமய கருத்துகளையும் வெளிப்படுத்தி இருக்கிறார். அவரின் கதை அமைப்பில் ஏற்கனவே, வழக்கில் இருந்த பல கதைகளையும், நீதிகளையும் அடிப்படையாகக் கொண்டே, தன் இலக்கியத்தை அமைத்துள்ளார் என்பது தெளிவாகிறது. கீரிப்பிள்ளை கதை ஒரு இன்றியமையாத நீதியை, இளங்கோவடிகள் கோவலனுக்கு மாடலன் கூறியதாக அமைத்துள்ளார். அதில், ஒரு பெண், கீரிப்பிள்ளையைக் கொன்ற கதை வருகிறது. இந்த கதை, “பஞ்ச தந்திரம்’ எனும், சமஸ்கிருத நூலில் உள்ளது. அது, முதலாம் நூற்றாண்டைச் சார்ந்தது. இக்கதையை மேலும் விரித்து இளங்கோவடிகள் கூறியுள்ளார். அதை, “வடமொழி வாசகம் செய்த நல்லேடு கடன் அறி மாந்தர் கைநீ கொடுக்க’ என்று குறிக்கிறார். வட மொழி வாசகம் என்பது பற்றி, அரும்பத உரை ஆசிரியரும், அடியார்க்கு நல்லாரும் தமது உரையில் கூறும்போது, இது ஒரு “கிரந்தம்’ என்று குறித்து, அதை, “அபரீக்ஷ்ய ந கர்த்தவ்யம் கர்த்தவ்யம் ஸுபரீக்ஷ்ய ச |
ந சேத்₃ப₄வதி ஸந்தாபோ ப்₃ராஹ்மண்யா நகுலாத்₃யதா ||’ என, சமஸ்கிருத மொழியில் அப்படியே கொடுத்திருக்கின்றனர். இதை அடியார்க்கு நல்லார், “கவி’ என்றும் கூறுகிறார்.

ஆகவே, இவ்வடமொழி வாசகம் பஞ்ச தந்திரத்தில் உள்ள பாடல் என்பதில் ஐயமில்லை. இதன் கருத்து, எந்தவொரு செயலையும் பரிசீலிக்காமல், ஆழ்ந்து எண்ணாமல் செய்யக் கூடாது. அவ்வாறு செய்பவர்கள் மிகவும் கொடுமையானவர்கள். துன்பத்தில் ஆழ்வர் என்பது தான். சிற்பங்களாக… கோவலன், பாண்டிய மன்னன் யோசிக்காமல் செய்த செயல்களால் ஏற்பட்ட விளைவுகளை அடிப்படையாகக் கொண்டு, சிலப்பதிகாரத்தை இளங்கோ இயற்றினார். சிலம்பின் காலம், கி.பி., 3ம் நூற்றாண்டு என்பர். அக்காலத்தில், பஞ்ச தந்திர நீதிக்கதைகள் இந்தியா முழுவதும் புழக்கத்தில் இருந்தன. இந்த கதைகள், அரேபியம், பாரசீகம், ஹீப்ரு, செகோஸ்லோவேகியம், போலந்த், லத்தீன், கிரேக்கம், பிரெஞ்சு, ஆங்கிலம், ஜெர்மானியம், டேனிஷ் உள்ளிட்ட மொழிகளில், பதினாறாம் நூற்றாண்டில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்தியாவில் ஆறாம் நூற்றாண்டில் இருந்த சாளுக்கியர், இராட்டிர கூடர்கள் போன்ற கர்நாடகத்தை ஆண்ட மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவில்களில் சிற்பங்களாகவும், அந்த சிற்பங்களின் கீழ் பஞ்ச தந்திரக் கதையின் நீதி வாக்கியங்கள், சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டுள்ளன.

கொல்லன் கதை மற்றுமொரு பஞ்ச தந்திர கதையில், பாழ் கிணற்றில் வீழ்ந்த பொற்கொல்லன் ஒருவன், தன்னை காப்பாற்றியவனை அரசனிடத்தில் கள்வன் என, பொய் கூறி தண்டனை பெற்று தந்ததையும் குறிப்பிடுகிறது. அக்கதையை, இளங்கோவடிகள் அறிந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆகவே, அக்காலத்தில் வழக்கில் இருந்த நீதிகளை எடுத்து, தனது காப்பியத்தில் வைத்து, இளங்கோவடிகள் தந்துள்ளார். இவ்வாறு நாகசாமி கூறினார். இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு, தமிழ் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் அவ்வை நடராஜன் தலைமை தாங்கினார்.

1 Comment சிலப்பதிகாரத்தில் வடமொழி பஞ்சதந்திர கதைகள்

  1. தேவ்

    ச்லோகத்தின் சரியான வடிவம் –
    அபரீக்ஷ்ய ந கர்த்தவ்யம் கர்த்தவ்யம் ஸுபரீக்ஷ்ய ச |
    ந சேத்₃ப₄வதி ஸந்தாபோ ப்₃ராஹ்மண்யா நகுலாத்₃யதா ||

    தேவ்

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)