நமது வரலாற்றில் எந்த சம்பவமும், மனிதர்களும், இலக்கியங்களும், கட்டடங்களும் அவற்றின் காலம் குறித்து மிகச்சரியாக குழப்பம் இல்லாமல் கண்டறியப் படுவது மிகவும் அரிது. காளிதாசன் போன்ற இலக்கிய மேதைகள் வாழ்ந்த காலம் இன்றுவரை சரியாக உறுதி செய்யப் பட்டதே இல்லை. அதிலும் பாரத தேசமெங்கும் பல ஆயிரம் ஆண்டுகளாக ஒரே வகையான கலாசாரம் நிலவி வருவதால் ஒரு விஷயத்தைப் பற்றிய குறிப்புகள் தேசமெங்கும் பரவலாக கிடைத்து வருகின்றன. அதனால் இடத்தையும், காலத்தையும் அறுதியிட்டுக் கூறுவது கடினமே.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே ஏற்படுத்தப் பட்ட தொல்பொருள் துறை, பலகாலமாக கல்வெட்டுக்கள், செப்புப் பட்டயங்கள் ஆகியவற்றைக் கண்டுபிடித்து அவற்றின் மொழியை அறிந்து தொகுத்து வருகிறது. Epigraphia Indica, Epigraphica Carnatica போன்ற தொகுப்பு நூல்களாக பல வால்யூம்களில் இவை பதிப்பிக்கப் பட்டுள்ளன. கர்நாடக பிரதேசத்தில் கிடைத்த கல்வெட்டுகள் தொல்பொருள் குறித்த Epigraphica Carnatica தொகுப்பு மட்டும் பதினைந்து வால்யூம்கள். Epigraphia Indica தொகுப்பு நாற்பத்தி மூன்று வால்யூம்கள்!
கி.பி. 1886 ஆண்டு சமயத்தில் பெங்களூரில் உள்ள ஒரு பள்ளிக்கு தலைமை ஆசிரியராக பணிபுரிய வந்த பெஞ்சமின் லூயிஸ் ரைஸ் (B.L. Rice) என்கிற ஆங்கிலேயர் கர்நாடக பகுதியில் சுற்றி வரும் போது பல கல்வெட்டுகளை கண்டு ஆச்சரியமுற்று அவற்றை தொகுக்க துவங்கினார். இதன் தொடர்ச்சியாக அவரை தொல்பொருள் துறை தலைவராக ஆங்கிலேய அரசு நியமித்தது. இதற்குள் அவர் சுமார் ஒன்பதாயிரம் கல்வெட்டுகளை கண்டு பிடித்திருந்தார். பதவி ஏற்றதும் அவர் சுமார் பனிரெண்டு வால்யூம் கொண்ட தொகுப்பாக Epigraphica Carnatica என்ற பெயரில் தம் கண்டு பிடிப்புகளை வெளியிட்டார்.
இந்த தொகுப்புகளில் பல ஆச்சரியங்கள் உண்டு. உதாரணமாக காளிதாசன் குறித்த ஒரு கல்வெட்டு குறிப்பு மர்மத்தை அடக்கி உள்ளதாக, இன்றும் சம்ஸ்க்ருத வல்லுனர்களை வியப்பில் ஆழ்த்துகிற ஒன்றாக இருக்கிறது. கர்நாடகாவில் சித்ர துர்கா மாவட்டத்தில் மொலகல்முரு ஒரு சிறிய ஊரில் இந்த கல்வெட்டு கண்டறியப் பட்டுள்ளது. இவ்வூர் இன்றைக்கு பார்க்கும் போது சிறிய ஊராக இருந்தாலும் சக்கரவர்த்தி அசோகர், கடம்ப மன்னர்கள், விஜயநகர பேரரசு உள்ளிட்ட பல்வேறு மன்னர்கள் இந்த பகுதியை முக்கிய இடமாகவும் கோட்டையாகவும் கொண்டு ஆண்டு வந்திருக்கிறார்கள். இந்த ஊரை ஒட்டிய பிரம்மகிரி என்கிற கிராமம் சக்கரவர்த்தி அசோகனின் ஆட்சியில் இந்த பிரதேசத்தில் தலைநகராக விளங்கியிருக்கிறது.
கர்நாடகத்தில் சித்ரதுர்கா, ஹெங்கேல், ராம்புரா, பிரம்மகிரி உள்ளிட்ட இந்த பிரதேசமே பல்வேறு கல்வெட்டுகளும், பழைய கோவில்களும், அசோகர் காலத்து சரித்திர சான்றுகளும் நிறைந்து விளங்குகிறது. இந்த மொலகல்முருவின் அருகில் சுமார் நூறு கிலோ மீட்டருக்குள் உள்ள சித்ரதுர்கா கோட்டை சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்த்து வருகிறது. மொலகல்முருவின் அருகில் ராமகிரி என்ற ஒரு குன்று உள்ளது. இதன் மீது ராமேஸ்வர சுவாமி கோவில் ஒன்றும் உள்ளது. கி.பி பத்தாம் நூற்றாண்டில் இக்கோவில் கட்டப் பட்டிருக்கலாம். இதே போல ராமாயணத்துடன் சம்பந்தப்பட்ட இன்னொரு கிராமம் ராம்புரா என்ற பெயரில் இந்த ஊரின் அருகில் உள்ளது. அங்கே ஜடாங்கி ராமேஷ்வர கிரி என்ற குன்றின் மீது அமர்ந்து ராமர் சிவபூஜை செய்ததாக ஐதீகம் உள்ளது.
மொலகல்முருவின் வடக்கே ஒரு பெரிய ஏரி ஒன்று உள்ளது. இந்த பகுதியை ஆட்சி செய்த கடம்பர்கள் இந்த ஏரி அதன் அருகில் லங்கேய கோட்டே என்ற கிராமத்தையும் உருவாக்கி இருக்கக் கூடும் என்று தெரிகிறது. மொலகல்முருவில் கத்தும் கல் (shouting stone) – கன்னடத்தில் கூகுவா பெண்டே என்று அழைக்கப் படும் ஒரு கற்பாறைகள் உள்ளது. இப்பாறைகளின் அருகில் சென்று ஒலி எழுப்பினால் அவை எதிரொலி எழுப்பும். இந்த கற்பாறைகளின் அருகே இருக்கும் சிலைகளில் யானை சிலை ஒன்றும் உள்ளது. அதன் ஒரு காலில் காளிதாசன் பற்றிய குறிப்பு ஸ்லோக வடிவில் கன்னட லிபியில் பொறிக்கப் பட்டுள்ளது.
தேவநாகரியில்
कंजरं पुरतेद्रंचं महेन्दालिसदालिका
कालिदासलिदहेमा चन्द्रं तेरपुरञ्जकंதமிழில்,
கம்ஜரம் புரதேத்³ரம்சம் மஹேந்தா³ லிஸதா³லிகா
காலிதா³ஸ லித³ஹேமா சந்த்³ரம் தேரபுரஞ்ஜகம்
இது ஒரு யமகம். அதாவது இடம் வலதாகவும், வலது இடதாக படித்தாலும் ஒரு மாதிரி வரும் (ஆங்கிலத்தில் Palindrome என்று சொல்வர்). ஞான சம்பந்தரின் மாலைமாற்று பதிகம் போன்றது இது. இந்த வகை ஸ்லோகத்தை சம்ஸ்க்ருதத்தில் சித்ரகவி, விலோமம், க³த ப்ரத்யாக³தா என்றும் அழைக்கப் படுகிறது. இந்த ஸ்லோகத்தின் பொருளை ரைஸ் இவ்வாறு குறிப்பிடுகிறார், “மகிழ்வளிக்கும் காளிதாசா! ஆன்மாவை ஆனந்தப் படுத்தும் உன் கவிதைகளால் சந்தோஷம், வெற்றி, செல்வம் எல்லாம் எதிரிகளுக்குக் கூட கிடைத்து விடுகிறதே. உன்னுடைய கருணை இந்த நகரத்தில், கல்வியில் சிறந்த கவிஞர்கள் மத்தியில் மிக பெருமையுடையதும் பிரபலமானதும் கூட” என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது காளிதாசனின் கவித்துவத்தின் தாக்கம் அவனது எதிரிகளின் கவிதையில் கூட தொனிக்கிறது. அவன் படைப்பூக்கத்தின் தயவில் எதிரிகள் கூட பயன் பெறுகிறார் என்று பொருள் கொள்ளலாம்.
எனினும் சமஸ்க்ருத அறிஞர்கள் இந்த ஸ்லோகத்தின் பொருளை மேலும் ஆழம் கொண்டதாகக் கருதுகிறார்கள். இந்த வார்த்தைகளில் பிராகிருத மொழி கலப்பு இருக்கலாம் என்றும் கருதுவோர் உண்டு. இந்த ஸ்லோகத்தில் அவனது ஊர் (புரம்) குறித்த குறிப்பு இருக்கலாம் என்றும் எண்ணப் படுகிறது. காளிதாசனின் காலத்தை சரியாக கணக்கிட முடியாமல் இருக்கும் போது, இந்த ஸ்லோகம் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த பகுதியை கடம்பர்களுக்கு பிறகு விஜயநகர பேரரசும், அதற்கு பிறகு நாயக்க மன்னர்களிடமும், பின்னர் ஹைதர் அலியின் அரசாட்சியின் கீழும் அதன் பிறகு ஆங்கிலேய ஆட்சியிலும் இருந்திருக்கிறது. ரைஸ் பதவி ஒய்வு பெற்ற பின் ஆர். நரசிம்மாசார்யா மற்றும் எச்.எம். கிருஷ்ணா ஆகியோர் மேலும் சுமார் ஆறாயிரம் கல்வெட்டுகளை கண்டுபிடித்து பதிவு செய்திருக்கிறார்கள். இவை ரைஸ் தொகுத்த பனிரெண்டு வால்யூம்களுக்கு பிறகு, 13, 14, 15 ஆகிய வால்யூம்களாக பதிப்பிக்கப் பட்டது.
பின்னர் 1950 வாக்கில் இவை பதிப்பில் கிடைக்காமல் போக (out of print), 1972 ல் மைசூர் பல்கலைக் கழகம் மீண்டும் பதிப்பிக்க முயற்சி செய்தது. ஆனால் அவர்களால் ஆறு வால்யூம்களை மட்டுமே மீண்டும் பதிப்பிக்க முடிந்தது. அண்மையில் 2005 ம் ஆண்டு Indian Council of Historical Research (ICHR) அமைப்பு Epigraphica Carnatica வால்யூம்களை CD வடிவில் வெளியிட்டுள்ளது.
மதிப்பிற்குரிய ஸ்வாமிக்கு,
தமிழில் இத்தனை அழகாக ஒரு சம்ஸ்க்ருத இணைய தளம் பார்த்து வியந்து போனேன்.
மிக மிக அருமையான சேவை இது.
பெங்களூரில் இருக்கும் அக்ஷரம் என்ற அமைப்பின் மூலம் 10 நாட்களில் சம்ஸ்க்ருதம் பேச கற்றுக்கொண்டு (நேற்றுதான் 10 நாள் வகுப்பு முடிந்தது) எப்படி மேலும் மேலும் என் சம்ஸ்க்ருத அறிவை வளர்த்து கொள்ளலாம் என்று யோசனையுடன் இருந்த எனக்கு உங்கள் இணைய தளம் மிக பெரிய வரப் பிரசாதம். ப்ரவேஷ பரிட்சையும் எழுதலாம் என்று இருக்கிறேன். உங்கள் இணைய தளத்தின் உதவியினால் பரிட்சையும் நன்றாக எழுத முடியும் என்று நினைக்கிறேன்.மிக்க நன்றியுடன்,
ரஞ்சனி நாராயணன்
God article with nlots of infm
Naan eppadi sanskrit mollyyai kadrukolvathu?