நாகரீகமாக வாழ்ந்த சமூகங்களுள் கல்விக்கும் அறிவுக்கும் ஒப்பிடமுடியாத முக்கியத்துவம் தந்த மக்கள் பாரத நாட்டினரே என்றால் மிகையில்லை. நமது பண்பாட்டில் கல்விக்கென்று ஒரு கடவுள், கல்வியைத் தேடச்சொல்லும் கணக்கற்ற சாத்திரங்கள் என்றும், கல்லாமையை பழித்தும் எழுதப்பட்ட எழுத்துக்கள் எண்ணில் அடங்காதவை.
यद्यपि बहु नाधीषे तथापि पठ पुत्र व्याकरणम्।
स्वजनो श्वजनो माऽभूत्सकलं शकलं सकृत्शकृत्॥
யத்யபி பஹு நாதீஷே ததாபி பட புத்ர வ்யாகரணம்|
ஸ்வஜனோ ஶ்வஜனோ மா(அ)பூத்ஸகலம் ஶகலம் ஸக்ருத்ஶக்ருத்||
இது ஒரு தந்தை மகனுக்கு சொல்வதாக உள்ள செய்யுள். மகனே, நீ நிறைய படிக்கா விட்டாலும் பரவாயில்லை, கொஞ்சமாவது இலக்கணம் அவசியம் தெரிந்து கொள் என்கிறார். ஏனெனில், உன் பேச்சில் ஸ்வஜன (சொந்தக்காரர்கள்), ஶ்வஜன: (நாய்) ஆகி விடும். ஸகலம் (முழுமையானது), ஶகலம் (துண்டானது), ஸக்ருத் (ஒரு சமயம்), ஶக்ருத் (மாட்டுச்சாணம்) ஆகி விடும். வேடிக்கையான செய்யுள் இது. இங்கே இலக்கணம் (வ்யாகரணம்) என்று சொன்னது உச்சரிப்பையும் சேர்த்த மொழி இலக்கணம் (சிக்ஷை) தான்.
கல்வி மனதளவிலும் புற உலகிலும் தரும் மாற்றங்கள்,
विद्या ददाति विनयं विनयाद्याति पात्रतां |
पात्रत्वाद्दनमाप्नॊति धनाद्धर्मम् तत: सुखं ||
வித்யா ததாதி வினயம் வினயாத்யாதி பாத்ரதாம் |
பாத்ரத்வாத்தனமாப்நோதி தனாத்தர்மம் தத: ஸுகம் ||
கல்வி ஒருவனுக்குப் பணிவைத் தருகிறது. பணிவு ஒருவனுக்கு தகுதியை ஏற்படுத்துகிறது. தகுதியுள்ளவனிடம் செல்வத்தை அடைகிறான். அவனது செல்வத்தால் அறமும், நன்மையையும் விளைகின்றன.
சாணக்ய நீதியில் ஒரு ஸ்லோகம், கல்வியின் அவசியத்தை அழுத்தமாகச் சொல்கிறது:
शुन: पुच्छमिव व्यर्थं जीवितं विद्यया विना।
न गुह्यगोपने शतं न च दंशनिवारणे।।
ஶுன: புச்சமிவ வ்யர்தம் ஜீவிதம் வித்யயா வினா|
ந குஹ்யகோபனே ஶதம் ந ச தம்ஶனிவாரணே||
நாயின் வால் போன்றது கல்வி அறிவற்ற வாழ்க்கை. அது உறுப்புகளையும் மறைக்க உதவுவதில்லை. ஈக்களை விரட்டவும் உபயோகப் படுவதில்லை. அதுபோல கல்வி அறிவில்லாத வாழ்க்கை, கௌரவத்தையும் கொடுப்பதில்லை, ஆபத்து காலத்தில் ஆதரவில்லாமலும் அல்லலுற நேரிடுகிறது; வாழ்வு மொத்தமுமே அர்த்தமின்றி வியர்த்தமாகி விடுகிறது.
இப்படிப்பட்ட கல்வி எப்படி பெறுவது. எல்லாருக்கும் கல்வி உடனே கிடைத்து விடாது. அது கடவுளர்க்கே சாத்தியம். குமாரசம்பவத்தில் காளிதாசன், பார்வதி ஹிமவானுக்கு பெண்ணாக அவதரித்து, இளமையில் கல்வி கற்கச் சென்ற போது, “ஸ்திரோபதேஸாம் உபதேச காலே ப்ரபேதிரே ப்ராக்தன ஜன்ம வித்யா” என்று பூர்வ ஜன்மத்தில் (அவதாரத்துக்கு முன்பு) அவள் அனைத்தும் அறிந்தவளாக இருந்ததால், இப்போது கல்வி என்பது அவளுக்குப் புதியதாகவே இல்லை, ஏற்கனவே தெரிந்ததை நினைவு படுத்திக் கொள்வதாகவே இருந்தது என்கிறார்.
ஆனால் நமக்கு அப்படி அல்ல. நமக்கு ஶனைர் வித்யா என்கிறார்கள். கல்வி என்பது அவசரமாக முயற்சித்துப் பெறக்கூடியது அல்ல. உண்மையான கல்வி சிறிது சிறிதாகவே சேர்க்க இயலும்.
शनैरर्था शनैः पन्थाः शनैः पर्वतमारुहेत् ।
शनैर्विद्या च धर्मश्च व्यायामश्च शनैः शनैः ।।
ஶனைரர்தா ஶனை: பந்தா: ஶனை: பர்வதமாருஹேத் |
ஶனைர்வித்யா ச தர்மஶ்ச வ்யாயாமஶ்ச ஶனை: ஶனை: ||
செல்வத்தை சேர்ப்பது, பாதையில் செல்வது, மலை ஏறுவது, கல்வி கற்பது, அறத்தை தேடுவது, செல்வத்தை செலவிடுவது ஏதாகிலும் மெது மெதுவாக செய்க!
சரி அந்த கல்வி கற்றல் எப்படி நிகழ வேண்டும்? கல்வியை மனப்பாடம் செய்து மனதில் ஏற்றி வைத்துக் கொள்வதே சிறந்தது. மனதில் படியாத கல்வி பயன்படாத கல்வியே.
पुस्तकस्था तु या विद्या परहस्तगतं च धनम् |
कार्यकाले समुत्तपन्ने न सा विद्या न तद् धनम् ||
புஸ்தகஸ்தா து யா வித்யா பரஹஸ்தகதம் ச தனம் |
கார்யகாலே ஸமுத்பன்னே ந ஸா வித்யா ந தத் தனம் ||
புத்தகத்திலேயே தங்கி விட்ட கல்வியும் அடுத்தவர்களிடம் சென்றுவிட்ட செல்வமும் தேவைப்படும்போது கிடைப்பது ஏது!
இன்னொரு ஸ்லோகம்
कण्ठस्था या भवेद्विद्या सा प्रकाश्यः सदा बुधै |
या गुरौ पुस्तके विद्या तथा मूढः प्रतार्यते ||
கண்டஸ்தா யா பவேத்வித்யா ஸா ப்ரகாஶ்ய: ஸதா புதை |
யா குரௌ புஸ்தகே வித்யா ததா மூட: ப்ரதார்யதே ||
மனப்பாடமாக உள்ள கல்வி பண்டிதர்களால் பலரிடம் ஒளி போல பரவுகிறது. புத்தகத்திலும் குருவிடமும் விடப்பட்ட கல்வி மூடர்களால் முட்டாள் தனத்தை பரப்பவே பயன்படுகிறது. அதாவது மனப்பாடமாக இல்லாமல், அங்கொன்றும் இங்கொன்றுமாக அரைகுறையாக உள்ள கல்வி முட்டாள்தனத்தையே பெருக்கும் என்பது கருத்து.
ஒருவர் கல்வி அறிவு இல்லாமல் இருந்தால் அதற்கு அவரின் பெற்றோரே காரணம். கல்வி அறிவை தேட உதவாத பெற்றோர் ஒருவருக்கு எதிரிகளே ஆவர் என்கிறது இந்த ஸ்லோகம்.
माता पिता च वै शत्रुर्येन बालो न पाठ्यते |
सभामद्ये न शोभेत हंसमद्ये बको यथा ||
மாதா பிதா ச வை ஶத்ருர்யேன பாலோ ந பாட்யதே |
ஸபாமத்யே ந ஶோபேத ஹம்ஸமத்யே பகோ யதா ||
சிறுவயதில் படிக்க வைக்கத் தவறிய பெற்றோர்கள் ஒருவரின் எதிரிகளே ஆவர். கல்லாமை ஒருவருக்கு அன்னங்கள் நடுவே கொக்கு போல, கற்றோர் நிறைந்த அவையில் அவமானத்தைக் கொடுக்கும். (கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் அவை அல்ல நல்ல மரங்கள் – சபைநடுவே நீட்டோலை வாசியாநின்றான் குறிப்பறிய மாட்டாதவன் நல் மரம் என்னும் தமிழ் மூதுரை இங்கே ஒப்பு நோக்கத்தக்கது).
கல்வி என்பது ஏட்டுப் படிப்பு மட்டும் அல்ல. ஆசிரியர் கற்றுக் கொடுப்பது ஒருவரின் கல்வியில் கால்பங்கு தான்.
आचार्यात्पादमादत्ते पादं शिष्यः स्वमेधया ।
पादं सब्रह्मचारिभ्यः पादं कालक्रमेण च ॥
ஆசார்யாத்பாதமாதத்தே பாதம் ஶிஷ்ய: ஸ்வமேதயா |
பாதம் ஸப்ரஹ்மசாரிப்ய: பாதம் காலக்ரமேண ச ||
கால்பங்கு பள்ளியில் கல்வி. கால் பங்கு தானே தேடிப் பெறும் கல்வி. கால் பங்கு உடன் இருப்போர் தரும் ஞானம். மீதமுள்ள கால்பங்கு காலம் கற்றுக் கொடுக்கும்… Knowledge comes from learning, wisdom comes from living என்றொரு ஆங்கில வழக்கு இங்கே நினைவுக்கு வருகிறது.
கல்வியை கெளரவம் பார்க்காமல் வெட்கமின்றி வேண்டிப் பெற வேண்டும்.
धनधान्यप्रयोगेषु विद्वासंग्रहणे तथा।
आहारे व्यवहारे च त्यक्तलज्ज: सुखी भवेत्।।
தனதான்யப்ரயோகேஷு வித்வாஸங்க்ரஹணே ததா|
ஆஹாரே வ்யவஹாரே ச த்யக்தலஜ்ஜ: ஸுகீ பவேத்||
உணவு உண்பதற்கும், கடமையைச் செய்யும்போதும், கல்வி கற்கும்போது, செல்வத்தைத் தேடும்போதும் லஜ்ஜை கொள்ளக் கூடாது. துணிந்து யார் என்ன சொல்வார்களோ என்று அஞ்சாமல் ஈடுபடவேண்டும்.
கல்வியைக் குறித்து இன்னும் எத்தனையோ முன்னோர் மொழிகள் உள்ளன. காசுக்காக கல்வியை விற்கும் இக்காலத்தில், கல்வி கற்பிப்பதையும் கற்பதையும் ஒரு கலையாக கருதிய நம் முன்னோர்களின் மொழிகள் நமக்கு அந்நியமாகும் நாள் அதிக தூரத்தில் இல்லை. நால்வகையாக வாழ்வின் பயனை பெரியோர் கூறுவர், அறம், பொருள், இன்பம் மற்றும் வீடு பேறு ஆகிய அந்த நான்கு குறிக்கோளுக்கும் கல்வி அவசியம். வெறும் செல்வத்திற்காக மட்டும் அன்று என்று உணர்ந்தால் உண்மையான கல்வியை அடையலாம்.
உண்மையில் சம்ஸ்க்ருதம் என்பது படிக்க படிக் க ஆர்வம் ஊட்டும் வகயில் உள்ளது உங்கள எழுத்து நடை
யாவரும் புறிந்துொள்ளும் வகையில் நான் ஒரு சான்ஸக்ரிட் மாணவன் தான் இன்னும் ஆரம்பத்தில் இருந்து அ ஆ முதல் யாவருக்கும் கற்று தரும் கையில் பதிவிட்டால் பலருக்கு பாடம் எடுக்க ஏதுவாக இருக்கும்