எந்த வகை நீண்ட காவிய இலக்கியம் ஆனாலும், அதனுள் பல உட்பிரிவுகள் வைத்து பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பெயர் கொடுப்பது தொன்று தொட்ட வழக்கம். அதிகாரம், அத்தியாயம், சருக்கம், காண்டம், படலம், அங்கம் என்பன போன்ற பகுப்புகள் அல்லது பிரிவுகள் தமிழ், வடமொழி இலக்கியங்களில் உள்ளன. ‘அங்கம்’ பொதுவாக நாடக நூல்களில் அமைவது. தமிழில் பேராசிரியர் சுந்தரனாரின் மனோன்மணீய நாடகம் ஐந்து அங்கங்களோடு அமைந்துள்ளது; ஒவ்வோர் அங்கத்திலும் காட்சிகள் ‘களம்’ எனும் பெயரில் விரிகின்றன. மேற்கத்திய மரபை ஒட்டிய ஓரங்க நாடகங்களை [One-act play] நவீன இந்திய இலக்கியமும் வழங்கியுள்ளது.
திருக்குறள் மூன்று பால்களாகவும், அதிகார உட்பிரிவுகளோடும் அமைகிறது. சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களாகவும், காதை எனும் மேற்பகுப்புகளாலும் அமைந்துள்ளது; மணிமேகலையில் ‘காதை’ பகுப்பு. பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற் புராணம் மூன்று காண்டங்களாகவும், 64 படலங்களாகவும் அமைந்துள்ளது. சில காவியங்களில் இவ்வாறு பிரிவுகள் இல்லாமலும் இருப்பது அரிதாக அமைந்து விடுகிறது. கலித் தாழிசையாற் பாடப்பெற்ற கலிங்கத்துப் பரணியில் வெறும் 13 தலைப்புகள் மட்டுமே; காண்ட – அத்தியாயப் பகுப்புகள் இதில் இல்லை.
கம்பராமாயணத்தில் பால காண்டம் தொடங்கி யுத்த காண்டம் வரை ஆறு காண்டங்களாகவும், அதில் ஒவ்வொரு காண்டத்திலும் பல உட்பிரிவுகள் படலங்களாகவும் (ஆற்றுப் படலம், நாட்டுப் படலம் போன்றவை) பிரிக்கப் பட்டுள்ளன. பாரதியின் புகழ்பெற்ற காவியம் “பாஞ்சாலி சபதம்” சூழ்ச்சிச் கருக்கம், சூதாட்டச் சருக்கம் என்பன போன்ற சருக்கங்களைக் கொண்டுள்ளது.
இதில் சருக்கம், காண்டம் (सर्ग, काण्ड) போன்ற பெயர்கள் நேராக தமிழ் படுத்தப் பட்ட வடமொழிச் சொற்களாகும். ஸர்க்கம் என்பதற்கு பல அர்த்தம் உள்ளது. அமர கோசத்தில்,
सर्ग: स्वभावनिर्मोक्षनिश्चयाध्यायसृष्टिषु…
இதில் ஸர்க்கம் என்பது காவியங்களில் இடைவெளி அல்லது உட்பிரிவு (காவ்யாதி விராம ஸ்தானம்), அத்யாயம் போன்ற அர்த்தங்களை அமர கோசம் கூறுகிறது. மிகப் பழமையான புராண இலக்கியம் கூட தமக்குள் உட்பிரிவுகளைக் கொண்டதாகத்தான் உள்ளது. ஸர்க்கங்கள், உபஸர்க்கங்கள் கொண்டவையாக புராணங்கள் இருக்க வேண்டும் என்று அவற்றுக்குரிய இலக்கணமாகக் கூறும் ஒரு செய்யுள் உள்ளது:
सर्गश्च प्रतिसर्गश्च वंशो मन्वन्तराणि च ।
वंशानुचरितं चैव पुराणं पञ्चलक्षणम् ॥
சம்ஸ்க்ருதத்தில் பொதுவாக பெரிய காவியங்களில் ஒவ்வொரு அத்யாய/ஸர்க்கப் பிரிவுகளுக்கும் அழகான பெயர்களை கவிஞர்கள் சூட்டுவது வழக்கம்.
அவ்வாறு பயன்படுத்தப் படும் சில பெயர்கள்:
- அதிகார (अधिकार)
- அதிகரண (अधिकरण)
- அத்யாய (अध्याय)
- அங்க (अंक )
- ஆஶ்வாஸ (आश्वास)
- ஆனன (आनन)
- உல்லாஸ (उल्लास)
- உச்ச்வாஸ (उच्छ्वास)
- உத்யோக (उद्योग)
- த்யோத (उद्योत)
- கல்லோல (कल्लोल)
- காண்ட (काण्ड)
- கிரண (किरण)
- தரங்க (तरंग)
- பரிச்சேத (परिच्छेद)
- ப்ரகாச (प्रकाश)
- ப்ரகரண (प्रकरण)
- படல (पटल)
- பர்வ (पर्व)
- பாத (पाद)
- லம்பக (लंबक)
- ஸ்தபக (स्तबक)
- சர்க்க (सर्ग)
- ஸ்கந்த (स्कन्ध)
- விமர்ச (विमर्श)
கம்ப ராமாயணத்தின் மூல காவியமான வால்மீகி ராமாயணம் காண்டங்களாகவும், ஸர்க்கங்களாகவும் அமைந்தது; மஹாபாரதம் பர்வங்களாகவும் அத்யாயங்களாகவும் அமைந்தது. ஸ்ரீ விஷ்ணு புராணம் ‘அம்சம்’ எனும் பகுப்பிலும், ஸ்ரீமத் பாகவதம் ‘ஸ்கந்தம்’ எனும் பகுப்பிலும் அமைகின்றன, 12 ஸ்கந்தம் 335 அத்யாயங்கள்.
நூற்பாக்கள் [ஸூத்ராணி] என எடுத்துக் கொண்டால் வியாச முனிவரின் பிரம்ம சூத்திரம் நான்கு அத்யாயம் கொண்டதாகவும், அவை ஒவ்வொன்றும் நான்கு பாதங்களோடும், ஒவ்வொரு பாதத்திலும் ‘அதிகரணம்’ எனும் பகுப்பில் பல நூற்பாக்களாகவும் அமைந்துள்ளது. இந்திய மெய்யியலில் இப்பெருநூல் மிகுந்த மதிப்புள்ளது. பாதஞ்ஜல யோக சூத்திரங்கள் நான்கு பாதங்கள் கொண்ட தொகுப்பு. பாணிநி எட்டு அத்யாயங்களில் சுமார் 4000 இலக்கண சூத்திரங்களைத் தருகிறார். பிரம்ம சூத்திரத்தைப் போலவே இதிலும் ஒவ்வோர் அத்யாயத்துக்கும் நான்கு பாதங்கள்.
கதாஸரித் ஸாகரத்தின் ஒரு வடிவம் 18 ‘லம்பக’ பிரிவு கொண்டதாக அமைந்துள்ளது; ஒருவன் தன் தோள்வலிமை – நுண்கலைத் தேர்ச்சி – மொழிப்புலமைகளில் ஆற்றலை வெளிப்படுத்தி மகளிரை மணப்பது ‘லம்பகம்’ எனப்படும்; லம்பகம் தமிழில் ‘இலம்பகம்’ ஆகும். பேரிலக்கியமான சீவக சிந்தாமணி 10 இலம்பகமாக அமைந்துள்ளது. கதாநாயகன் சீவகன் பல மகளிரை மணந்து இன்பம் துய்ப்பது காட்டப்படுகிறது.
வைணவ மத குருவான வேதாந்த தேசிகன் பல நூல்களை இயற்றி உள்ளார். அதில் இறைவனின் பாதம் தாங்கும் பாதுகையைப் பற்றியே பாதுகா சகஸ்ரம் என்ற பெயரில் மிகப் பெரிய காவியத்தை இயற்றி உள்ளார். இதில் உட்பிரிவுகள் பத்ததி (पद्धति) என்ற பெயரில் பிரிக்கப் பட்டுள்ளது. பத்ததி என்றாலே வழி என்று அர்த்தம், இறைவனின் பாதுகைகள் நடக்கும் வழி அல்லது, அந்த பாதுகைகளை அடையும் வழி என்ற கவித்துவமான பொருளில் இந்நூலில் உட்பிரிவுகள் அமைக்கப் பட்டுள்ளன.
இவ்வாறு காவியங்களினுள் உள்ளடக்கத்தின் நயம் மட்டும் அல்லது அதனதன் உட்பிரிவுகளுக்கும் வித விதமான பெயர்களும் அமைந்திருப்பது அழகுக்கு அழகு சேர்ப்பதாகும்.
[எழுதியவர்: தேவராஜன்.ஆர். சென்னை – 4]
அற்புதம். இதற்கு முன்னர் இதே தளத்தில் இதே போன்ற பல கட்டுரைகளை படித்து மகிழ்ந்துள்ளேன். திரு தேவராஜன் அவர்களுக்கும் , இந்த பதிவை வெளியிட்ட சங்கதம் இணைய தளத்துக்கும் நன்றிகள் பல உரித்தாகுக .