சமஸ்கிருத நூல்களில் விவசாயமும் தாவரவியலும்

बीजस्य पुतिकां कृत्वा विधान्य तत्र शोदयेत्
बीजं विधान्यसंमिश्रं फलहानिकं परम्

தானிய விதைகளை சிறிதாக பிரித்து பதர்களை நீக்க வேண்டும். பதருடன் விதைத்தால் களைகள் தான் பெருகி வளரும்.

நமது பாரத தேசத்தில் முன் காலத்தில் சந்நியாசிகள் அவர்களது சீடர்கள் முற்றிலும் காட்டிலும், காடுசார்ந்த நிலப்பரப்பிலும் வாழ்ந்து வந்தார்கள். அரச குருமார்களாக இருந்து வந்த வசிஷ்டர், விசுவாமித்திரர் போன்ற ரிஷிகள் கூட காடுகளில் பர்ணசாலை என்கிற ஓலைக் குடிசை அமைத்து இயற்கையுடன் இயைந்து வாழ்ந்து வந்தது தெளிவாக புராண இதிகாசங்களில் தெளிவாக பதிவு செய்யப் பட்டுள்ளது.

அகழ்வாராய்ச்சி முறையிலும் கி.மு. 8000 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்ட விவசாயம் நடந்திருப்பதற்கு ஆதாரம் கிடைத்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் கலிபங்கன் என்ற இடத்தில் விவசாயம் நடந்ததற்கான மிகப் பழமையான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. கங்கைப் படுகையில் அத்ரஞ்சிகேரா என்கிற இடத்தில் கி.மு. 2000 ஆண்டுகளுக்கு முன் நெல் பயிரிட்ட ஆதாரங்கள் கண்டுபிடிக்கப் பட்டு ஆவணப் படுத்தப் பட்டுள்ளது.

காடுசார்ந்த வாழ்க்கையில்  உணவு, உடை ஆகியவற்றுக்காக பல்வேறு தாவரங்கள் பயிரிடும் முறைகள், அத்தாவரங்களுக்கேற்ற மண் குறித்த அறிவு, பயிரிடுவதற்கு ஏற்ற காலம் ஆகியவை குறித்து சோதனை அடிப்படையிலும், அனுபவ அடிப்படையிலும் எண்ணற்ற முறைகள் உருவாகின. ஆகவே நமது வேதங்களில் குறிப்பாக மிகப் பழமையான ரிக் வேதம், அதர்வண வேதம் ஆகியவற்றில் விவசாயம் குறித்து பெருமளவு குறிப்புகள் பதிவு செய்யப் பட்டு உள்ளன.

வேதமே போற்றும் விவசாயத் தொழில் மதிப்பு மிகுந்ததாகவே கருதப் படுகிறது. எருதுகள் குழுவாக 6, 8, அல்லது 12 ஆக சேர்க்கப் பட்டு உழுதல், திரும்ப திரும்ப நிலத்தை உழும் முறைகள் நடைபெற்று வந்துள்ளன. மாட்டுச் சாணம் அதிலும் உலர்ந்த சாணம் பயிருக்கேற்ற எருவாக பயன்படுத்த பட்டது. அறுவடை செய்ய அரிவாள் போன்ற கருவிகள் பயன்படுத்தப் பட்டது. மனிதன் பிள்ளை பெற்று சந்ததி வளர்ப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியமாக விவசாயம் கருதப் பட்டு வந்துள்ளது.

மண்ணின் வளம், விதைகளை தேர்வு செய்தல், பக்குவப் படுத்துதல், பயிரிடும் காலம், அறுவடை செய்தல், விவசாய சுழற்சி முறை, பல்வேறு பண்பாடு சார்ந்த முறைமைகள், உரமிடுதல், நீர்தேக்கும் முறைகள், அசாம சக்கரம் அல்லது அரஹத்த கதி யந்திரம் எனப்படும் ஏற்றம் அமைக்கும் முறை ஆகியவை பற்றி வேத இலக்கியங்களில் இருந்து நமக்கு கிடைக்கும் குறிப்புகள், அன்றைய நாளில் விவசாயிகள் இவற்றைக் குறித்து அறிந்து வைத்திருந்ததையே காட்டுகிறது.

கோடையில் அரிசி, மழைக்காலத்தில் ஏனைய மற்ற பயிர்கள் என்று ஒரே வருடத்தில் இரண்டு போகம் விதைத்தல் நடைபெற்று வந்துள்ளது. மேற்கத்திய உலகம் அறியாமை இருளில் மூழ்கி இருந்த போது இங்கே விவசாய அறிவு மிகவும் முன்னேறி இருந்துள்ளது.

கௌடில்யரின் அர்த்த சாத்திரம் (கி.மு. 322-186), பாணினியின் அஷ்டாத்யாயி, பதஞ்சலியின் மகாபாஷ்யம், பௌத்த மத இலக்கியங்கள் (கி.மு. 543 – 491), வரஹமிஹிரரின் பிருஹத் சம்ஹிதை, அமரகோசம் (கி.பி. நான்காம் நூற்றாண்டு), மேதடிதியின் அபிதான ரத்தின மாலா (கி.பி. 825-900) ஆகியவற்றில் விவசாயக் குறிப்புகள் உண்டு. பல்வேறு தாவரங்கள் குறித்து விஷ்ணு புராணம், பாகவத புராணம், மத்ஸ்ய புராணம், அக்னி புராணம், சரக – சுஸ்ருத சம்ஹிதை ஆகியவற்றில் குறிப்பிடப் பட்டுள்ளது. வாயு புராணம் பயிர்களை (1) வ்ருக்ஷம்/தரு/த்ருமா (மரம்) ,(2) குல்மம் (புதர்கள்/செடிகள்), (3) லதா/வல்லி (கொடி), (4) திருண ஜாதி (புற்கள்) என்று பயிர்கள் உலகத்தை பிரித்து வகுக்கிறது.

பராசரர் என்பார்  (கி.பி. 950 – 1100 AD) இயற்றிய  கிருஷி பராசரா (Majumdar and Banerji, Bibiliotheca Indica of Asiatic Society of Bengal) என்னும் நூல் விவசாயம் குறித்த உலகின் முதல் நூலாக கருதலாம். இது தவிர, பல்வேறு நூல்களில் இருந்து விவசாயம் குறித்து எடுத்து தொகுக்கப் பட்ட கிருஷி சாசனம், விவசாய முறையில் எந்தெந்த நேரத்தில் என்னென்ன செய்யவேண்டும் என்ற குறிப்புகள் அடங்கிய கிருஷி சாத்திரம் ஆகிய நூல்களும் உண்டு. பராசரர் விலங்குகள் வளர்த்தல், வானவியல் ஆகியவற்றில் மிகத் தேர்ச்சி பெற்றவராக வராகமிகிரர் குறிப்பிடுகிறார்.

கிருஷி பராசரா என்னும் நூலில் விவசாயம் மழையை மட்டுமே நம்பி செய்யப் படுவதாக குறிப்பிடப் பட்டுள்ளது. பெரு மழை பெற்று வந்த வங்காளம் மற்றும் சில வட இந்திய நிலப்பகுதியைக் குறிப்பிடுவதாக கருதுவோர் உண்டு. இந்த நூலில் 243 ஸ்லோகங்கள் உள்ளன. நெல் பயிரிடுவது மட்டும் அல்லாது பார்லி, எள் மற்றும் சில பயிர் வகைகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளது. இதில் நான்கு வகை மேகங்கள், அவற்றின் விளைவுகள், வருடாந்திர மழை குறித்து கண்டறிவது, போன்ற குறிப்புகள் உள்ளன.

இந்நூலில் குறிப்பிட்டுள்ள நான்கு வகை மேகங்கள் ஆவன: ஆவர்த்த (சிறு பகுதியில் பெய்யும் மழை), சம்வர்த்த (பரவலாக பெரு நிலப் பரப்பில் பெய்யும் மழை), புஷ்கர (வெறும் தூறல், கானல் போன்றது – இம்மேகம் பஞ்சத்தை ஏற்படுத்தும்), த்ரௌண (நிலப் பரப்பை நிறைவு செய்கிற நல்ல மழை). இந்நூலில் மேலும் எறும்புகள், தவளைகள் போன்ற சிறு உயிரினங்களில் நடவடிக்கைகளில் இருந்து உடனடியாக மழை வரப்போவது குறித்து அறிவது, சோதிடத்தின் மூலமாக கிரகங்களின் நிலையில் இருந்து மழை அளவு குறித்து முன்னறிவது போன்றவையும் உண்டு. பஞ்சம் ஏற்படும்போது விலங்குகள் பாதுகாப்பது அவசியம் என்றும் எடுத்துரைக்கிறது.

இது தவிர பசுக்களை போஷிப்பது, சாண எரு உருவாக்குதல் ஆகியவை குறித்தும் உண்டு. உழும் ஏரின் அமைப்பு குறித்தும் உழுக வேண்டிய காலக் குறிப்புகள் உள்ளது. ஒரே ஒரு ஏர் எப்போதும் உபயோகப் படுத்தப் பட்டதில்லை – ஒன்றுக்கு மேற்பட்ட ஏர்கலன்கள், எட்டு எருதுகள் பூட்டப் பட்டு உழும் முறை விளக்கப் படுகிறது. விதைகளை சேகரித்தல், பாதுகாத்தல், விதைத்தல் ஆகியவற்றைத் தொடர்ந்து நாற்றங்கால் பறித்து நடுதல், களையெடுத்தல், கிணற்று நீர் பாசனம், வயல்களில் நீர் பாதுகாப்பு ஆகிய குறிப்புகளும் உண்டு. நள ரோபணம் எனப்படுகிற வயலின் ஓரத்தில் பயிர்களின் வேர் பாதுகாப்புக்காக அமைக்கப் படும் பயிர் குறித்தும் குறிப்புகள் உள்ளன. இறுதியாக அறுவடை செய்து, கருக்கை நீக்கி நெல் தூற்றி, சேமிப்பது குறித்து குறிப்பிடப் படுகிறது.

இந்நூல் முடியும் போது, விவசாயம் என்பது நால் வருணத்தைச் சேர்ந்தவருக்குமான தொழில் என்று பராசரர் குறிப்பிடுகிறார். மாடு மேய்த்தல், வியாபாரம், அரசு தொழில் ஆகியவற்றை விட விவசாயமே சிறந்தது.

விவசாய அறிவியலில் மற்றொரு நூல் கிருஷி சூக்தி. இதனை இயற்றியவர் காச்யபர் என்று கூறப் படுகிறது. இவரும் வங்காளத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்று நம்பப் படுகிறது. இந்நூலில் ஈச்சமரம், தென்னை, பலா பற்றி கூட குறிப்பிடப் படுகிறது. நெல் பயிரிடுதலில் மிக சரியான முறையை கிருஷி சூக்தி கூறுகிறது. உழுது பின் தழைகளாலும், சாணத்தாலும் உரமிடப் பட்டு பக்குவப்படுத்தப் பட்ட நிலத்தில், நாற்றங்கால் நட்டு வளர்த்து பறித்து நடப்படுவதை இந்நூல் விளக்குகிறது.

மேலும் கிருஷி சூக்தியில், களை எடுத்தல், நீர் பாசனம், பூச்சி தாக்குதலிலிருந்து தடுப்பது, நெல்லை சேமித்து வைப்பது ஆகியவை பற்றியும் குறிப்புகள் உண்டு. எலிகள், பறவைகள், பூச்சிகள் மற்றும் ஏனைய சிறு உயிரினங்களிடமிருந்து பயிர் பாதுகாப்பு குறித்து விளக்கங்கள் உண்டு. அரச மரபினர் உட்பட பல சமூக பிரிவுகளும் விவசாயத்தில் ஈடுபடுவதால் தான் இத்தொழில் கஷ்டத்தையும் முக்கியத்தையும் உணர முடியும் என்று இந்நூல் கூறுகிறது.

வடமொழி அகராதியான அமரகோசத்தில் கூட விவசாயம் பற்றி குறிப்புகள் உண்டு. அமரகோசம் பனிரெண்டு விதமான நில அமைப்புகளை “பூமி வர்க்கம்” என்று குறிப்பிடுகிறது. ஒவ்வொரு வகை நிலத்துக்கும் ஒரு பெயர் குறிப்பிடப் பட்டுள்ளது. (1) ஊர்வர (செழிப்பான) (2) உசுர (விளைச்சலுக்கு தகுதி அற்ற) (3) மேரு (பாலை)  (4) அப்ரஹத (தரிசு)  (5) சத்வல (புல் அடைந்த) (6) பங்க்ல (புதர் அடைந்த)  (7) ஜலப்ராயமனுப (நீர் ஊறிய) (8) கச்ச (நீர் நிலைக்கு அடுத்த நிலம்) (9) சர்கர (கூழாங்கல் போன்ற கற்கள நிரம்பிய) (10) சர்கராவதி (மணல் நிரம்பிய) (11) மதிமாத்ருக (ஆற்று நீர் பாசனம் செய்யப் பட்ட) (12) தேவமாத்ருக (மழை நீர் பாசனம் செய்யப் பட்ட) என்று பனிரெண்டு வகை குறிப்பிடுகிறது. ஒரு போகம், இரு போகம், முப்போகம் விளையும் பூமிக்கும் அமரகோசம் தனித்தனி பெயர்களை தருகிறது.

ஆந்திராவில் அமைந்துள்ள ஆசிய விவசாய வரலாற்று நிறுவனம் (Asian Agro-history Foundation (AAF)) என்ற அமைப்பு பல பழைய விவசாய நூல்களை, ஓலைச்சுவடிகளை மீட்டு பதிப்பித்து வருகிறது. இதில் சுரபாலரின் வ்ருக்ஷாயூர்வேதம் என்கிற நூல் வெளிவந்துள்ளது. இதில் இந்த நூலின் மூல பதிப்பு ஓலைச்சுவடிகளாக இங்கிலாந்தில் இருந்ததை தருவிக்கப் பட்டு பதிக்கப் பட்டுள்ளது. இந்த நூல் தாவரங்கள் பற்றி சிறப்பான செய்திகளைக் கொண்டுள்ளது. இதே போல வராகமிகிரரின் பிருகத் சம்ஹிதையிலும் வ்ருக்ஷாயூர்வேதம் என்கிற பகுதி இடம் பெற்றுள்ளது – இதுவும் விவசாயம் பற்றியது தான்.

பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த சாரங்கதாரபத்ததி என்ற நூலில் உபவன வினோதம் என்கிற பகுதி சிறப்பாக தோட்டக் கலையைப் பற்றி கூறுகிறது. தாவரங்களைப் பயிரிடுதல், தாவரங்களைத் தாக்கும் நோய்கள், அவற்றுக்கு மருத்துவம், நிலத்தடி நீர் பற்றிய குறிப்புகள் தருகிறது.

இவ்வாறு இது வரை கண்டறியப் பட்டு, பதிக்கப் பட்டுள்ள நூல்களிலேயே பயிர்கள், விவசாயம் குறித்து நிறைய தகவல்கள், குறிப்புகள், முறைகள் நமக்கு கிடைத்துள்ளன. மத சம்பந்தமான நூல்களாக இருந்தாலும் வேதம், புராணம், இதிகாசம் ஆகிய நூல்களும் விவசாயம், பயிர்கள் குறித்து குறிப்புகளைக் கொண்டுள்ளன. மேலும் பல ஓலைச்சுவடிகள் ஆயிரக் கணக்கில் எடுத்து பதிப்பிக்கப் படாமலே இருந்து வருகிற நிலையில், இவற்றில் மேலும் பல பாரம்பரிய அனுபவ அறிவு செல்வங்கள் பொதிந்திருப்பது உறுதி.

Reference:

  • Arbori-Horticulture: as known in the Puranas [Link]
  • Productivity of Land and Water  By J. H. Patil [Link]

2 Comments சமஸ்கிருத நூல்களில் விவசாயமும் தாவரவியலும்

  1. சிவஸ்ரீ. விபூதிபூஷண்

    வேளாண்மை பற்றிய சமஸ்கிருத நூல்களை அறிமுகம் செய்வதாக இந்தக்கட்டுரை அமைந்துள்ளது. பாரம்பரிய வேளாண்மையை மீட்டு எடுக்கவேண்டும் என்ற எண்ணம் நாடுமுழுதும் அலையாய் எழுந்துள்ள காலக்கட்டத்தில் இந்த்க்கட்டுரை எழுதப்பட்டுள்ளது பொருத்தமானது. இந்தத்தகவல்கள் பாரம்பரிய வேளாண்மை யுக்திகளை தேடிக்கண்டடையப்பயன் படும். ஒரு முக்கிய மான நூல் இந்த தொகுப்பில் விடுபட்டுள்ளது. அது சுரபாலர் அருளிய விருக்ஷ ஆயுர்வேதம் எனும் நூல். அது ஸ்ரீ ஆர். எஸ் நாராயணன் அவர்களால் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு அனைவருக்கும் கிடைக்கிறது. சுரபாலர் நிலத்தில் வாத பித்த கப சமனிலை பாதிக்கபடுவதால் தாவரங்களுக்கும் நோய் உண்டாவதாக க்கூறி அந்த நோய்களை நிவர்த்தி செய்யும் வழிகளை இந்த நூலில் கூறுகிறார். இறந்த விலங்குகளின் உடல்கள் மாமிசம் ஆகியவற்றை எப்படி வேளாண்மையில் பயன் படுத்தலாம் என்பதையும் சுலோகங்களாக தனது நூலில் வடித்துள்ளார்.

  2. vasanthasyamalam

    சுரபாலர் அருளிய விருக்ஷ ஆயுர்வேதம் எனும் நூல். அது ஸ்ரீ ஆர். எஸ் நாராயணன் அவர்களால் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு அனைவருக்கும் கிடைக்கிறது. சுரபாலர் நிலத்தில் வாத பித்த கப சமனிலை பாதிக்கபடுவதால் தாவரங்களுக்கும் நோய் உண்டாவதாக க்கூறி அந்த நோய்களை நிவர்த்தி செய்யும் வழிகளை இந்த நூலில் கூறுகிறார். இறந்த விலங்குகளின் உடல்கள் மாமிசம் ஆகியவற்றை எப்படி வேளாண்மையில் பயன் படுத்தலாம் என்பதையும் சுலோகங்களாக தனது நூலில் வடித்துள்ளார்.

    I will be grateful to you if you quote few portions of this with tamil translation, here.

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)