கும்பகோணத்தில் ஒரு சம்ஸ்க்ருதப் பள்ளி

கோயில்களின் நகரம் கும்பகோணம். கலசங்களின் வரிசை என்று அதற்குப் பொருள் சொல்கிறார்கள். இந்த காவிரிக்கரை நகரின் பிரதான வீதியான பெரிய கடைத்தெருவில் கர்ணகொல்லை அக்ரஹாரத்தில் உள்ளடங்கி இருக்கிறது ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஓரியண்டல் மேல்நிலைப்பள்ளி. இங்கு 23 தலித் மாணவர்கள் உள்ளிட்ட 195 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் சமஸ்கிருதம் படிக்கிறார்கள். தமிழ், ஆங்கிலம்போல அதையும் ஒரு மொழியாக அம்மாணவர்கள் கற்கிறார்கள்.

பிராமணர்கள் மட்டுமே படிக்க முடியும் என்று இருந்து வந்த ‘தேவபாஷையை’ மிகவும் வறிய சூழலில் இருந்துவரும் அவர்கள் படிக்கிறார்கள். பிராமணர்களே இம்மொழியைப் படிக்காமல் கைவிட்ட காலத்தில் தலித் மாணவர்கள் ‘யாதாய சம்ப்ருதார்த்தாணாம்’ என்று காளிதாஸரின் ரகுவம்ச வரியை கேட்கும்போது காலம் நம்மை பின்னோக்கித் தள்ளுகிறது. “தந்தை பெரியார் பிராமணர்களின் ஆதிக்கத்தையும் அவர்கள் மதிக்கக்கூடிய சமஸ்கிருத மொழியையும் ஒருசேர எதிர்த்தார். தமி-ழகத்தில் இந்தி கட்டாயப் பாடமாக பள்ளிகளுக்கு வந்தபோது, 1937 இல் பெரும் இந்தி எதிர்ப்புப் போரை நடத்தியவர்கள் தமிழ் மாணவர்கள். திராவிட இயக்கத்தின் வரலாற்றை அறிந்தவர்கள் இந்தப் பள்ளியில் நடப்பது கண்டு வியப்பார்கள். சமஸ் கிருதத்தைக் காப்பாற்றுகிறவர்கள் பிராமணர்களாகத்தான் இருக்க வேண்டும் என்று அவசியம¤ல்லாமல் போய்விட்டது” என்கிறார் கலை விமர்சகர் தேனுகா.

1966 ஆம் ஆண்டு மகா பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் முயற்சியால் 10 மாணவர்களைக் கொண்ட திண்ணைப் பள்ளியாக இது தொடங்கப்பட்டது. முதலில் டவுன் ஹைஸ்கூலில் ஆரம்பித்து கோபால்ராவ் நூலகத்துக்கு மாறி இன்று சொந்த கட்டடத்தில் இப்பள்ளி இயங்குகிறது. 450 மாணவர்கள் படிக்கிறார்கள். முதலில் காஞ்சி மடத்தின் அத்வைத சபாதான் இப்பள்ளியை நிர்வகித்தது. இப்போது காஞ்சி மடத்தின் நேரடிப்பார்வையில் இயங்குகிறது.அதற்கு ஒரு சுவாரசியமான கதை உண்டு.

இப்பள்ளியை தொடர்ந்து நிர்வாகம் நடத்த முடியாத சூழல் வந்தபோது, இங்கு 92 ஆம் ஆண்டுவாக்கில் வருகைதந்தார் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். எப்போதும் ஆசி வழங்கிவிட்டு உடனே சென்றுவிடும் இவர், முதல்முறையாக மாணவர்களிடம் சமஸ்கிருத ஸ்லோகங்களைச் சொல்லச் சொல்லி கேட்டார். ஏழாம் வகுப்பு படித்த சுந்தரபாண்டியன் என்ற தலித் மாணவர், இவர் முன்நின்று சமஸ்கிருத ஸ்லோகங்களை சரளமாகச் சொல்லியிருக்கிறார். அதில் அசந்து போய் ஒரு மணிநேரம் பள்ளியிலேயே செலவழித்த அவர், உங்களுக்கு என்ன தேவை என பள்ளிச் செயலரிடம் கேட்டுள்ளார். அதன்பயனாகவே 60 லட்சம் ரூபாய் மதிப்பில் பள்ளிக் கட்டடங்கள் எழுந்துள்ளன.

ஆசிரியர்களின் ஊதியத்தை மாநில அரசு கவனித்துக்கொள்கிறது. மற்றச் செலவுகளை காஞ்சிமடம் பராமரிக்கிறது. “எங்கள் பள்ளி ரொம்பவும் நொடிந்துபோய் இருந்த நேரத்தில்தான் பெரியவர் ஜெயேந்திர சுவாமிகள் வந்தார். இந்த ஒரு சிறுவன்தான் எங்களைக் காப்பாற்றி னான¢. நாங்கள் அதிக பணம் வசூலிக்கக்கூடாது என்று பெரியவர் கட்டளையிட்டுள்ளார். பத்தாம் வகுப்பு வரை சமஸ்கிருதம் சொல்லிக் கொடுக்கிறோம். ஏழை எளிய மாணவர்கள்தான் ஆர்வத்துடன் அதிகம் படிக்கின்றனர். எந்தப் பள்ளியிலும் இடம்கிடைக்காமல் யார் இங்கு வந்தாலும் எல்லோரையும் சேர்த்துக்கொள்கிறோம். சமஸ்கிருதம் படிப்பதை யாரும் சுமையாக நினைக்க வில்லை. கம்ப்யூட்டர் கல்விக்கும் இந்தி படிக்கவும் சமஸ்கிருதம் பயன் படும் என்பதால் மற்றப் பாடங்களைவிட சமஸ்கிருதத்தை கூடுதல் நேரத்தில் சொல்லிக்கொடுக்கிறோம் என்கிறார் தலைமை ஆசிரியர் ஜெ.பாஸ்கரன்.

இங்கு பழம் பூ விற்பவர்கள், தட்டுவண்டி வியாபாரிகள், சுமை தூக்குவோர், கொத்தனார், தச்சுவேலை செய்வோர் என சாதாரண பின்னணியிலிருந்து வரும் குழந்தைகளே படிக்கிறார்கள். நாம் பள்ளியில் நுழைந்தபோது 6ம் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார் சமஸ்கிருத ஆசிரியர் திருமலை. இவர், சமஸ்கிருதத்தில் சிரோமணி, சாகித்ய சிரோமணி, சிக்ஷா சாஸ்திரி என எம்.ஏ., எம்.பில் வரை சமஸ்கிருதத்தைப் படித்துள்ளார். இப்பள்ளியின் முன்னாள் மாணவரான இந்த ஆசிரியர், “சமஸ்கிருதத்தில் அட்சராபியாசங்கள் முதல் சப்தங்கள், தாதுரூபங்கள் எனப்படும் இலக்கணம் வரை சொல்லித்தருகிறோம். ஏழாம் வகுப்பிலிருந்து ரகுவம்சம், குமாரசம்பவம், ஹர்ஷரின் ரத்னாவளி, கிராஜதாஜுன்யம், கௌமுதி, தர்க்கசங்கரகம், தசகுமார சரிதம், பிரதாப ருத்ரியம் என பிரபல சமஸ்கிருத இலக்கியங்களைச் சொல்லித் தருகிறோம். இசைமயமான இந்த மொழியை அந்தப் பிஞ்சுகளின் வாய்வழியாகக் கேட்பதில் ஓர் அலாதியான அனுபவம்” என்கிறார். இதுவரை இந்தப் பள்ளியில் யாரும் பொதுத்தேர்வில் தோல்வி அடைந்ததே இல்லையாம். சமஸ்கிருதம் படிக்கச் சிரமப்படும் குழந்தைகளுக்கு கூடுதல் கவனம் எடுத்துக்கொண்டு சிறப்புப் பயிற்சியும் தருகிறார்கள்.

ஏழாம் வகுப்பில் சமஸ்கிருத ஆசிரியர் இல்லாத குறையை தீர்த்துக் கொண்டிருந்தாள் மாணவி வைஷ்ணவி. தலித் சமூகத்தைச் சேர்ந்த இந்த மாணவி ரகுவம்சத்திலிருந்து ஒரு சில வரிகளை எடுத்துக்காட்டி, ரகுவம்சத்து மன்னர்கள் கொடுப்பதற்காகவே சம்பாதித்தார்கள் என்று விளக்கம் சொல்லிக்கொண்டிருந்தாள். இச்சிறுமியின் அப்பா பழக்கடை வைத்திருக்கிறார். சமஸ்கிருத ஆசிரியை எஸ். பத்மாவதி சொல்லித்தந்த பாடங்களை பயிற்சி செய்ய மாணவர்களுக்கு எழுதிக் காட்டுகிறாள். சமச்சீர் கல்விக்காக சமஸ்கிருத பாடத்தைத் தயார் செய்யும் பணிக்காக சென்னை சென்றுள்ளார் ஆசிரியை.

ஆறாம் வகுப்புப் படிக்கும் பிரவின்குமாரின் அப்பா தச்சுவேலை செய்கிறார். சமீபத்தில் நடந்த அரையாண்டுத் தேர்வில் சமஸ்கிருதத்தில் 72 மதிப்பெண் பெற்றிருக்கிறார் பிரவீன். தலித் மாணவியான வளர்மதியின் தந்தை மூட்டைதூக்குகிறார். பத்தாம் வகுப்புப் படிக்கும் சந்தியா, கட்டட வேலை செய்பவரின் மகள். இம்மாணவி கடந்த தேர்வில் சமஸ்கிருதத்தில் பெற்ற மதிப்பெண் 82. இப்பள்ளியின் செயலர் ஆடிட்டர் என். ராமகிருஷ்ணன் தசஇயிடம், “பொதுவாக சொல்லப் போனால் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் யாரும் சமஸ் கிருதம் படிக்க முன்வருவதில்லை. வேலை கிடைக்காது என்று ஒதுங்கி விட்டார்கள். ஏழை, எளிய மற்றும் தலித் மாணவர்கள் தான் ஆர்வத்துடன் வருகிறார்கள். இங்கு சாதி, மத வித்தியாசம் கிடையாது. சென்ற ஆண்டு ஒரு முஸ்லிம் மாணவன் சமஸ்கிருதத்தில் முதலிடம் பெற்றான். கடந்த மூன்றாண்டுகளாக எங்கள் மாணவர்கள் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுவருகிறார்கள்” என்கிறார்.

கும்பகோணத்தில் பழைமையான நான்கு வேத பாடசாலைகள் உள்ளன. முதல் சமஸ்கிருத அச்சகம் ஒன்றும் சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு இங்கு செயல்பட்டிருப்பதாகச் சொல் கிறார்கள். அந்தப் பழம்பெருமையை இன்னமும் இந்நகரம் தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. இறந்த மொழியாகக் கருதப்படும் சமஸ்கிருத மொழியை மீட்டெடுக்க பல முயற்சிகள் நடக் கின்றன. இந்தப் பள்ளி இந்த முயற்சியில் நாட்டுக்கு அமைதியாக ஒரு பாடத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறது.

[மூலம்: தி சண்டே இந்தியன் (Retrieved on 04 May 2011)]

12 Comments கும்பகோணத்தில் ஒரு சம்ஸ்க்ருதப் பள்ளி

  1. snkm

    தமிழகத்தின் எல்லா ஊர்களிலும் இத்தகைய பள்ளிகளை அமைக்க வேண்டும். திருநெல்வேலி மாவட்டத்தில் எங்கு உள்ளது. என்ன செய்ய வேண்டும். என்னால் முடிந்த விஷயங்களை செய்ய நினைக்கிறேன். நன்றி.

  2. S.Ramachandran

    கும்பகோணத்தில் ஒரு சமஸ்க்ருத பள்ளி என்ற கட்டுரையை இப்போதுதான்
    படிக்க நேர்ந்தது . மிக்க மகிழ்ச்சி இதே போல் காஞ்சிபுரத்திலும் ஸ்ரீ ஸ்ரீ மகாஸ்வமிகளால்
    50 வருடங்களுக்கு முன் துவக்கி வைக்கப்பட்ட ஓரியண்டல் பள்ளியில் 8௦ சதவிஹித
    மாணவர்கள் தலித் வகுப்பினரே . மொத்தம் 4௦௦ க்கு மேற்பட்ட மாணவர்கள் படிக்கும்
    இப்பள்ளியில் அனைவருமே சமஸ்க்ருத மொழியை நன்கு பேசவும் அம்மொழியிலேயே
    நாடகங்கள் நடிக்கவும் செய்கிறார்கள்.மேலும் விவரங்களுக்கு ஸ்ரீ தண்டபாணி ஓரியண்டல்
    ஸ்கூல் காஞ்சிபுரம் என்ற விலாசத்தில் தொடர்பு கொள்ளலாம்.
    சேது.ராமசந்திரன்.

  3. GIRAMANI THIYAGARAJAN

    எனக்கு அறுபது வயதாகிறது . சமஸ்க்ருதம் இளமையிலேயே கற்காதது எவ்வளவு தவறு என்று வேதனைப்படுகிறேன். தேவ பாஷை கற்கும் இளம் மாணவர்களுக்கு என் வாழ்த்துக்கள்

  4. Kumar

    நமஸ்காரம் ,

    சமஸ்க்ருதம் இளமையிலேயே கற்காதது எவ்வளவு தவறு என்று வேதனைப்படுகிறேன். எங்கள் ஊரிலும் இத்தகைய பள்ளிகளை அமைக்க வேண்டும் என்று ஆசை படுகிறோம் அதற்க்கு என்ன செய்யவேண்டும் என்ன தேவை யாரை தொடர்பு கொள்ள வேண்டும்

    எங்கள் E -மெயில் : aanmeegam @hotmail .com , kailairkumar @hotmail .com

    நன்றி

  5. sridhar

    இளமையில் சமஸ்க்ரிதம் படிக்காமல் காலத்தை வீண் செய்டு விட்டேன் .தேவ மொழி சமஸ்க்ரிதம் .

  6. நாகசுந்தரம்

    இவ்விவரம் கண்டு மகிழ்ந்தேன். தற்போது நான் மத்திய அரசு பணியில் தலை நகர் புது டில்லியில் உள்ளேன். நானும் இப்பள்ளியில்தான் எட்டாம் வகுப்பு படித்தேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

  7. Ramanathan

    I am also 61 now and learning samskrit now. Better late than never. Thanks for the website sangatham.com to give me an opportunity to learn samskrit thru Tamil.

    Regards.
    Ramanathan

  8. கோபிகிருஷ்ணன்

    நான் இந்த பள்ளியில் தான் 12 ம் வகுப்பு வரை படித்தேன். அதற்காக நான் இப்போதும் பெருமைப்படுகிறேன். இந்த பள்ளியையும் இதன் ஆசிரியர்களையும் என்றும் மறக்க முடியாது.

  9. S R Ramanujam

    I am also 61.I have attempted to learn Samskrutham in a variety of ways but not very successful.But now i am very happy to inform all of you that i am doimg Pravesa course in Samskrytha Bharati .

    Anyone can join them.

    Their link is https://www.samskritabharati.in

    Anyone can join them and become masters in Samskrutham.

    Sangatham is doing fantastic service.

    Salutations.

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)