ஒரீஇ – சில ஐயங்கள்

எழுதியவர்
– செ. அ. வீரபாண்டியன் (டாக்டர். வீ)

இசை அறிவியல் அடிப்படையில் நான் பழந்தமிழ் இலக்கியங்களை ஆராய்ச்சி செய்து அரிய இசையியல் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளேன். மூலங்களில் (Text) உள்ள பல இசையியல் தொடர்பான சொற்களுக்கு உரையாசிரியர்கள் சரியான விளக்கம் தரவில்லை என்பதையும் நான் வெளிப்படுத்தியுள்ளேன். இந்த ஆராய்ச்சியின் போது “ஒரீஇ’ என்ற, தொல்காப்பியத்தில் இடம் பெற்ற சொல் என் கவனத்தை ஈர்த்தது. பெரும்பாலான தமிழறிஞர்களின் உணர்வுமயமான உடைமையுணர்வுக்கு (possessiveness) ஆளாகியுள்ள சொல் இது என்பதால், மிகவும் கவனமாக இச்சொல் தொடர்பான எனது ஐயங்களை முன் வைக்கிறேன். இது தொடர்பான விவாதம் உணர்வுமயமாக இல்லாமல் அறிவுபூர்வமாக இருக்கவேண்டும் என்பதே என் விருப்பமாகும்.

வடசொல்லைத் தமிழில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதை விளக்க “ஒரீஇ’ என்ற சொல்லை தொல்காப்பியர் பயன்படுத்தியுள்ளார். வடசொல் என்பது சமஸ்கிருதத்தைக் குறிக்கும் என்ற கருத்து பரவலாக உள்ளது. பேரா.தொ.பொ.மீனாட்சிசுந்தரம் போன்றவர்கள் வடசொல் என்பது சமஸ்கிருதம் மட்டுமின்றி, பிராகிருதம் மற்றும் பாலி மொழிகளையும் குறிக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.(A History of Tamil Language -1965 – பக்கம் 171) இது தொடர்பாக பேரா. ந.சஞ்சீவி தனது “தமிழியல் கட்டுரைகள்’ நூலில், முனை.ம.இராசமாணிக்கனாரின் கீழ்வரும் கருத்தை மேற்கோள் காட்டியுள்ளார்.

“If grammarians before Tolkappiyar had given the rules for using Sanskrit words in Tamil language, Tolkappiyar would certainly have referred to these rules and end his sutras as “Enpa” (என்ப) ” Enmanar pulavar” (என்மனார் புலவர்) etc. Since he has not made any reference to such rules of grammar, it is evident that Tolkappiyar himself framed these rules. In his days some Sanskrit words might have penetrated into Tamil language and it was perhaps not possible to ignore or neglect the use of those words ; hence Tolkappiyar found it, as a necessity to frame rules to suit the genius of the language.”(“The date of Tolkappiam” in the Annals of Oriental research- vol XIX-part II).

வடசொல்லைத் தமிழில் பயன்படுத்துவது குறித்த தொல்காப்பியரின் நெறிமுறையில் “என்ப’ அல்லது “என்மனார் புலவர்’ என்று அவருக்கு முந்திய காலத்து சூத்திரங்கள் குறிப்பிடப்படவில்லை என்பதை இந்த மேற்கோள் தெரிவிக்கிறது. பேரா.இலக்குவனாரும் இதே கருத்தை வெளிப்படுத்தியுள்ளதாக அவரது மகன் பேரா.மறைமலை இலக்குவனார் என்னிடம் தெரிவித்தார். ஆனால் தொல்காப்பியம் மூலத்தைப் படிக்கும்போது இக்கருத்து தவறோ என்ற ஐயம் எழுகிறது.

முதல் ஐயம்

“இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல், என்று
அனைத்தே- செய்யுள் ஈட்டச் சொல்லே” (சொல் 9 : 1)

என்று குறிப்பிடும் தொல்காப்பியர், அந்த நான்கு பற்றியும் விளக்கிய பின்,

”அந்நாற் சொல்லும் தொடுக்கும் காலை,
வலிக்கும் வழி வலித்தலும், மெலிக்கும் வழி மெலித்தலும்,
விரிக்கும் வழி விரித்தலும், தொகுக்கும் வழி தொகுத்தலும்,
நீட்டும் வழி நீட்டலும், குறுக்கும் வழி குறுக்கலும்,
நாட்டல் வழி’ என்மனார் புலவர்.” (சொல்: 9 :7)

என்று தொல்காப்பியர் மேற்கோள் காட்டுகிறார்.

“அந்நாற் சொல்’ என்பது “இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்’ ஆகியவற்றைத் தானே குறிக்கும். பின் வடசொல் பற்றி “என்மனார் புலவர்’ என்ற சூத்திரத்தைத் தொல்காப்பியர் பயன்படுத்தவில்லை என்று கருத்து தெரிவிப்பது சரியாகுமா? தொல்காப்பியர் காலத்தில் தான் சமஸ்கிருதச் சொற்கள் தமிழில் நுழைந்ததாக முனை.ம.இராசமாணிக்கனார் குறிப்பிட்டது சரியா? இது “ஒரீஇ’ தொடர்பான எனது முதல் ஐயமாகும்.

***

இரண்டாவது ஐயம்

வடசொல்லைச் செய்யுளில் பயன்படுத்துவது பற்றி தொல்காப்பியர் குறிப்பிட்ட நெறிமுறை வருமாறு:

” வடசொல் கிளவி வடஎழுத்து ஒரீஇ,
எழுத்தொடு புணர்ந்த சொல் ஆகும்மே.
சிதைந்தன வரினும், இயைந்தன வரையார்” (சொல்: 5 :6)

இது தொடர்பாக பேரா. ந. சஞ்சீவி கீழ்வரும் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

“Since it is the earliest and most effective in the whole of Tamil literature, wherein a clear and crisp injunction is given, not to use Sanskrit sounds as such in Tamil.” ( தமிழியல் கட்டுரைகள், பக்கம் 85)

சமஸ்கிருத ஒலியைத் தமிழில் பயன்படுத்துவதை, மேலே சொன்ன தொல்காப்பியர் கூறும் நெறிமுறைத் தடை செய்கிறது என்று பேரா. ந. சஞ்சீவி கருத்து தெரிவித்துள்ளார்.

சொற்களில் வரும் எழுத்தின் ஒலி பற்றி மிகவும் கவனம் செலுத்திய தொல்காப்பியர் “இசை’ மற்றும் “ஓசை’ என்ற சொற்களைப் பல இடங்களில் பயன்படுத்தி யுள்ளார். மேலே சொன்ன நெறிமுறையில் வடஎழுத்தின் ஓலி பற்றி (குறிப்பாக அதைத் தடை செய்வது பற்றி) தொல்காப்பியர் எதும் சொன்னதாகத் தெரியவில்லை. அதாவது வடஎழுத்தின் ஓலிக்கு தொல்காப்பியர் தடை விதித்தார் என்றோ, தடை விதிக்கவில்லை என்றோ பொருள் கொள்வதற்கு இடம் இருக்கிறதா என்பது எனது இரண்டாவது ஐயம். வடசொல்லைத் தமிழில் எழுதும்போது, சில தமிழ் எழுத்துக்கள் வடஎழுத்தின் ஓலிக்கு ஒத்து வரலாம். ஒத்து வராமலும் இருக்கலாம். அவ்வாறு ஒத்து வராத நிலையில், என்ன செய்வது என்பது பற்றி தொல்காப்பியரின் நிலை என்ன என்பதும் இந்த ஐயத்தில் இடம் பெறுகிறது.

***

மூன்றாவது ஐயம்

‘ஒரீஇ’ என்ற சொல்லுக்கு “தவிர்த்து, நீக்கி’ என்று பொருள் கொண்டால், வட எழுத்தைத் தொல்காப்பியர் தவிர்க்கச் சொன்னார் என்று பொருளாகும். வட எழுத்தைத் தவிர்த்து விடுவதென்றால், அதன் ஒலியையும் சேர்த்துத் தானேத் தவிர்க்க வேண்டும். எனவே ‘ ஒரீஇ’ என்ற  சொல்லின் மூலம் வடஎழுத்தையும், அதன் ஒலியையும் தொல்காப்பியர் தவிர்க்கச் சொல்லியுள்ளார் என்ற முடிவைப் பெறலாம்.

“வடஎழுத்து ஒரீஇ’ என்று குறிப்பிட்ட தொல்காப்பியர், அடுத்து “எழுத்தொடு புணர்ந்த சொல் ஆகும்மே.’ என்று தெளிவுபடுத்தியுள்ளார்.”ஒரீஇ’ என்பதன் மூலம் வடஎழுத்தை நீக்கிவிட்டால், பின் எந்த “எழுத்தொடு புணர்ந்த சொல்’ வடசொல் ஆகும்?

“வடஎழுத்து ஒரீஇ’ என்பதைத் தொடர்ந்து “எழுத்தொடு புணர்ந்த சொல் ஆகும்மே.’ என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். வடஎழுத்தை நீக்கச் சொல்லிவிட்டு, வேறு எந்த எழுத்தைப் பற்றியும் குறிப்பிடாமல் “எழுத்தொடு புணர்ந்த சொல் ஆகும்மே.’ என்று தொல்காப்பியர் எழுதியிருப்பாரா? இது எனது மூன்றாவது ஐயம்.

***

நான்காவது ஐயம்

அதற்கு அடுத்து “சிதைந்தன வரினும், இயைந்தன வரையார்’ என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.
வடசொல்லில் “ஒரீஇ’ மூலம் வடஎழுத்தை நீக்கியபின், எதனை “சிதைந்தன வரினும்’ என்றும், “இயைந்தன வரையார்’ என்றும் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்? இது எனது நான்காவது ஐயம்.

***

எனது ஆர்வம்

‘ஒரீஇ’ என்ற சொல்லின் மீது எனக்கு ஏன் ஆர்வம் ஏற்பட்டது என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

தமிழ் இசையியலில் “வண்ணம்’ பற்றிய ஆய்விலும் நான் ஈடுபட்டுள்ளேன். தொல்காப்பியத்தில் 20 வகை வண்ணங்களை அவர் வரையறுத்துள்ளார். அதில் “ஒரூஉ வண்ணம்‘ என்பது ஒன்றாகும். “ஒரூஉ வண்ணம்’ பற்றி தொல்காப்பியர் கீழ்வரும் வரையறையைத் தெரிவித்துள்ளார்.

”ஒரூஉ வண்ணம் ஒரீஇத் தொடுக்கும் ”

எனவே ஒரீஇ என்ற சொல் பற்றிய தெளிவு “ஒரூஉ வண்ணம்’ பற்றிய தெளிவிற்கு அடிப்படையாகும். எனவே ஒரீஇ என்ற சொல் மீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. பண்ணின் இசையொலி அடிப்படையில் வண்ணங்கள் வகைப்படுத்தப் படுகின்றன. பண்ணின் இசையொலி என்பதில், பண்ணில் உள்ள சொற்களில் இடம் பெறும் எழுத்துக்களின் ஒலி முக்கியத்துவம் பெறுகிறது.

ஒரீஇ என்ற சொல்லிற்கு “நீக்கிய, தவிர்த்த’ என்று பொருள் கொண்டால், அவ்வாறு “நீக்கிய, தவிர்த்த’ எழுத்துக்களை அவற்றின் ஒலிகளுடன் சொற்களில் சேர்த்து இசைப்பது என்றாகிவிடும். வடசொல் பற்றிய வடஎழுத்தை வடஎழுத்தின் ஒலியை நீக்கும் இலக்கணத்திற்கு “ஒரூஉ வண்ணம்’ விதி விலக்காகிவிடாதா? இதற்கு விடை காண “ஒரூஉ வண்ணம்’ என்றால் என்ன என்று பார்ப்போம்.

இதற்கு சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட Tamil Lexicon(1982) கீழ்வரும் விளக்கத்தைத் தருகிறது.

“A rhythm of verse effected by composing it in the most straight forward order of construction, so that its flow is like the flow of a river. யாற்றொழுக்காகப் பொருள் கொண்டு செல்லுஞ் சந்தம். (தொல்.பொ.539)” 

மேற்சொன்ன விளக்கம் எந்த அடிப்படையில் பெறப்பட்டது என்பது தெரியவில்லை. “ஒரீஇ’ என்ற  சொல்லிற்கு “நீக்கிய, தவிர்த்த’ என்ற பொருள் சரியானால், இந்த விளக்கம் அதற்கு ஒத்து வராது.

தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் பழம் சுவடியிலிருந்து பதிப்பிக்கப் பெற்ற ‘”வண்ணத்திரட்டு’ என்ற நூல் “ஒரூஉ வண்ணம்’ என்பதற்கு கீழ்வரும் விளக்கத்தைத் தருகிறது.

“ஒரூஉ வண்ணம் என்பது அடியின் சீர்களிலுள்ள சொற்கள் பொருள் முற்றுதலால், பொருள் நிரம்புவதற்கு பிறவடிச் சொற்களை அவாவாது அமையும் அடியின் ஓசையாகும். (உம்)’ மறையல ராகி மன்றத் தஃதே’ என இடையடி பிறவடிச் சொற்களை அவாவாது தன் பொருள் நிரம்பி வருவது.”

இவ்விளக்கமும் ஆய்விற்குரியதாகும். இதிலும் “ஒரீஇ’ என்ற சொல்லிற்கு “நீக்கிய, தவிர்த்த’ என்ற பொருள் சரியானால், இந்த விளக்கம் அதற்கு ஒத்து வராது.

மேலும் தொல்காப்பியர் “நீக்கி, நீங்கி, வேண்டா, ஒழித்து, கொள்ளா, விலக்கலும்,’ என்ற சொற்களைப் பல இடங்களில் பயன்படுத்தியுள்ளார். அதைவிட முக்கியமாக, “ஒரால்’ என்ற சொல்லை (Withdrawing, receding, நீங்குகை’) (Tamil Lexicon) என்ற பொருளில் பயன்படுத்தியுள்ளார். (சொல்,9:47).”ஒரீஇ’ இதற்கு எதிரான பொருளில் தானே இருக்க முடியும். 

“ஒரித்தல்’ என்ற சொல்லிற்கு Tamil Lexicon தரும் விளக்கம் வருமாறு: “To be United, in harmony, ஒற்றுமையாயிருத்தல்” இது யாழ்ப்பாணத்து மானிப்பாயகராதியிலிருந்து (சந்திரசேகரப் புலவர் தொகுத்தது) பெறப்பட்ட விளக்கமாகும்.

இசையில் நிறுத்தல் என்பது நிறீஇ என்று அழைக்கப்பட்டதற்கான சான்று வருமாறு: “”பண்ணுமை
நிறீஇயோர் பாணி கீதம்” ( பெருங்கதை 14:245) 

“ஒரீஇ’ என்ற சொல் தொல்காப்பியத்தில் கீழ்வரும் இடத்திலும் வருகிறது.

“”வேந்துவினை இயற்கை வேந்தன் ஒரீஇய
ஏனோர் மருங்கினும் எய்து இடன் உடைத்தே” (பொருள்:1:34)

“ஒரீஇ’ என்ற சொல் கலித்தொகையில் கீழ்வரும் இடத்தில் வருகிறது.

‘நடுவு இகந்து ஒரீஇ நயன் இல்லான் வினை வாங்க
கொடிது ஓர்த்த மன்னவன் கோல் போல”(கலித்தொகை 8:1þ2)

இவற்றின் பொருள் பற்றி விளக்க முனைந்தால், அது நீண்ட கட்டுரையாகும் என்பதால், இங்கு அந்த
முயற்சி மேற்கொள்ளப்படவில்லை.

வடசொல்லைத் தமிழில் எழுதும்போது, சில தமிழ் எழுத்துக்கள் வடஎழுத்தின் ஓலிக்கு ஒத்து வரலாம். ஒத்து வராமலும் இருக்கலாம். அவ்வாறு ஒத்து வராத நிலையில், என்ன செய்வது என்பது பற்றி தொல்காப்பியரின் நிலை என்ன? இது ஏற்கனவே எழுப்பப்பட்ட கேள்வியாகும். அவ்வாறு ஒத்து வராத நிலையில் வடஎழுத்து ஒலிகளுக்கு ஒத்த “ஜ,ஸ’ போன்ற தமிழுக்கான வட எழுத்துக்களை உருவாக்கி பயன்படுத்தலாம். அவற்றையும் “ஜா, ஜை, ஸா, ஸை’ என தொல்காப்பியர் “என்மனார் புலவர்’ என்று மேற்கோளிட்டு பயன்படுத்திய

“வலிக்கும் வழி வலித்தலும், மெலிக்கும் வழி மெலித்தலும்,
விரிக்கும் வழி விரித்தலும், தொகுக்கும் வழி தொகுத்தலும்,
நீட்டும் வழி நீட்டலும், குறுக்கும் வழி குறுக்கலும்,’

என்ற சூத்திரப்படி பயன்படுத்தலாம். இத்தகைய தமிழுக்கான வடஎழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களிலிருந்து மாறுபட்டவையாகும். இவ்வாறு மாறுபட்ட எழுத்துக்களை தமிழில் சேர்த்து பயன்படுத்தலே “ஒரீஇ’ நிகழ்வாகும் (process). இத்தகைய “எழுத்தொடு புணர்ந்த சொல்”லே வடசொல்லாகும். இத்தகைய செயல்பாட்டில் “சிதைந்தன (Distortion) வரினும்’, தமிழ் எழுத்துக்கு (அல்லது சொல்லுக்கு) உள்ளதைப் போன்ற “இயைந்தன வரையார்’ என்பது தொல்காப்பியர் தெரிவித்த நெறிமுறையாக இருக்கலாம்.

இதுவரை கிடைத்துள்ள பழந்தமிழ் இலக்கியங்களில் “ஜ,ஸ’ போன்ற தமிழுக்கான வட எழுத்துக்கள்
பயன்படுத்தப்பட்டதாக எனக்கு தெரியவில்லை. 

இத்தகைய தமிழுக்கான வடஎழுத்துக்கள் இல்லாத நிலையில், வடஎழுத்து ஒலிக்கு ஓரளவு பொருத்தமான தமிழ் எழுத்தைப் பயன்படுத்தி அந்த எழுத்தொடு புணர்ந்த சொல்லை வடசொல்லாக  உருவாக்கலாம். இந்த செயல்பாட்டிலும் சிதைந்தன(distortion) வரினும்’, தமிழ் எழுத்துக்கு (அல்லது சொல்லுக்கு) உள்ளதைப் போன்று வடஎழுத்துக்கு(அல்லது வடசொல்லிற்கு) “இயைந்தன வரையார்’ என்பது தொல்காப்பியர் தெரிவித்த நெறிமுறையாக இருக்கலாம்.

மேற்சொன்ன விளக்கத்திற்கான உதாரணம் தொல்காப்பியத்திலேயே இருப்பதாகத் தெரிகிறது. தொல்காப்பியர் “சூத்திரம்’ (தொல்.பொருள்.8:161,162) என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். இது வடசொல் என்பது தமிழ் அறிஞர் திரு.முருகனின் கருத்தாகும்.(“மொழிப்பார்வைகள்’,பக்கம் 172). சம்பந்தப்பட்ட வடசொல்லின் ஒலிக்கு ஓரளவு பொருத்தமான ஒலியுடைய தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்தி வடசொல்லை மேற்சொன்ன விளக்கப்படி உருவாக்குவதற்கான உதாரணமாக இதனைக் கொள்ளலாம். சம்பந்தப்பட்ட சமஸ்கிருத சொல்லின் ஒலியைப் பின்பற்றி, சிறிய ஒலிச்சிதைவுடன் தொல்காப்பியர் “சூத்திரம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளது கவனிக்கத்தக்கதாகும்.

“ஒரீஇ’ என்பது தமிழ் எழுத்துக்களைப் போலன்றி, சற்று மாறுபட்டு தமிழில் பயன்படுத்தப்படும் வடசொல்லில் வரும் வடஎழுத்துக்களை மாற்றத்திற்கு உட்படுத்திப் பயன்படுத்துவதாக இருக்கக்கூடும். அவ்வாறு மாற்றத்திற்கு உட்படுத்திய “-ஒரீஇய-” எழுத்தொடு புணர்ந்த சொல் ஆகும்மே.’ என்று வடசொல் உருவாக்கத்தைப் பற்றி தொல்காப்பியர் விளக்கியுள்ளார். இத்தகைய  வடசொல் உருவாக்கத்தில் “சிதைந்தன வரினும்’ தமிழ்ச் சொல்லிற்கு உள்ளதைப்போல் “இயைந்தன  வரையார்’ என்று அவர் தெளிவுபடுத்துகிறார். அதன்பின் “இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்’ ஆகிய நாற்சொல்லுக்குமான “என்மனார் புலவர்” என்ற சூத்திரத்தை தொல்காப்பியர் தந்துள்ளார். எனவே தொல்காப்பியர் காலத்திற்கு முன்னரே வடசொல் தமிழில் இடம் பெற்றிருந்தது தெளிவாகிறது.  சமஸ்கிருதம், பிராகிருதம், பாலி உள்ளிட்ட வடமொழிகளிலிருந்த சொற்கள் தொல்காப்பியம் குறிப்பிடும் வடசொல் வரிசையில் இருக்கலாம்..

இவ்வாறு “ஒரீஇ’ நிகழ்வுக்கு (process) உட்படுத்தப்பட்ட எழுத்துக்களைக் கொண்ட சொற்களை இசை அழகுடன் பயன்படுத்தும் வண்ணம் “ஒரூஉ வண்ண”மாக இருக்கலாம். ‘ஜ,ஸ,ஷ’ போன்ற தமிழுக்கான வடஎழுத்துக்கள் பிற்காலத்தில் தோன்றியவையாக இருக்கலாம் என்பது என் கருத்து. ஆனால் அந்த வடஎழுத்துக்கள் தொல்காப்பியரின் மேலே சொன்ன  நெறிமுறைப்படி தான் தமிழில் பயன்படுத்தப்படுகின்றன என்று நான் கருதுகிறன். இத்தகைய  பயன்பட்டிற்கான தடையை (injunction), “ஓரீஇ’ ஏற்படுத்தவில்லை என்றும் நான் கருதுகிறன்.

தேவைகளுக்கு ஏற்ப உலகில் உள்ள மொழிகளில் இருக்கும் சொற்களைத் தமிழில் பயன்படுத்துவதற்கான இலக்கணத்தை “ஒரீஇ’ மூலம் தொல்காப்பியர் வழங்கியுள்ளதாக நான் கருதுகிறேன். “ஒரீஇ’ என்பதற்கு “தவிர்த்து, நீக்கி’ என்று பொருள் கொண்டு தமிழைத் “தூய்மைப்படுத்தும்’ முயற்சி தமிழுக்கு நிவர்த்தி செய்யமுடியாத பாதிப்பை (irreversible damage) ஏற்படுத்தும் என்பதும் என் கருத்தாகும்.

உதாரணமாக ‘Oxygen’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு தமிழில் “ஆக்ஸிஜன்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவது கல்விக்கும், அக்கல்வி அடிப்படையிலான பணிக்கும் எற்றதாக அமையும் என்பது என் கருத்து. வடசொல்லுக்கு தொல்காப்பியர் கூறிய நெறிமுறை இங்கு ஆங்கிலச் சொல்லுக்கு பயன்படுத்தப் பட்டுள்ளது. தமிழுக்கான வடஎழுத்துக்கள் இல்லாத நிலையில், (வடஎழுத்தின் ஒலிச்சிதைவின் அளவைப் பற்றிக் கவலைப்படாமல்) “ஆக்சிசன்’ என்று எழுதினால் கூட பரவாயில்லை. இதே முறையில் தான் தொல்காப்பியர் “சூத்திரம்’ என்ற வடசொல்லைப்  பயன்படுத்தியிருப்பதை முன்னர் பார்த்தோம்.

தனித்தமிழ் பற்றாளர்கள் ‘Oxygen’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு தமிழில் “தீயகம்’ என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள் (“மொழிப்பார்வைகள்’ பக்கம். 59). ஆக்ஸிஜனின் பல பண்புகளில் (எரிவது சம்பந்தப்பட்ட) ஒன்றை மட்டும் கருத்தில் கொண்டு “தீயகம்’ என்ற சொல்லை உருவாக்கி பயன்படுத்த இவர்கள் விரும்புகிறார்கள். ‘Oxygen’ என்ற ஆங்கிலச்சொல்லின் முதல் எழுத்தான ‘O’ அது சம்பந்தப்பட்ட சமன்பாடுகளில் குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது..

‘Oxygen’ என்ற ஆங்கில மொழி சொல்லுக்கு “தீயகம்’ என்று ஒரு சொல் உருவாக்க தொல்காப்பியத்தின் எந்த இலக்கண விதி பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது எனக்கு தெரியவில்லை. தொல்காப்பியர் பயன்படுத்திய “சூத்திரம்’ என்ற வடசொல்லானது, “தீயகம்’ உருவான முறையில் உருவாகவில்லை.

ஆனால் வடசொல் தொடர்பான தொல்காப்பியரின் இலக்கணத்தைப் பின்பற்றி ஆங்கிலச் சொல்லைத் தமிழில் பயன்படுத்த பின்வரும் சூத்திரத்தை நாம் உருவாக்கலாம்.

” ஆங்கிலச்சொல் – கிளவி ஆங்கில எழுத்து ஒரீஇ,
எழுத்தொடு புணர்ந்த சொல் ஆகும்மே.
சிதைந்தன வரினும், இயைந்தன வரையார்”

இதன்படி, ‘Oxygen’ என்ற ஆங்கிலச் சொல்லின் ஒலியில் சிறிய சிதைவுடன் ‘”ஆக்ஸிஜன்’ என்ற தமிழுக்கான ஆங்கிலச் சொல்லை உருவாக்கி தமிழில் பயன்படுத்தலாம். ‘Oxygen’ சம்பந்தப்பட்ட பல பண்புகளில் ஒன்றை மட்டும் முதன்மைப் படுத்தி, மாணவர்களுக்கு தவறுதலான புரிதலை ஏற்படுத்துவது, சமன்பாடு குறியீடுகளை விளங்கிக் கொள்வதில் சிரமப்படுவது போன்ற “தீயகம்’ என்ற சொல்லால் எற்படும் குறைபாடுகள் “ஆக்ஸிஜன்’ என்ற சொல்லால் எற்படாது என்பது என் கருத்தாகும்.

தொல்காப்பியரின் “சூத்திரம்’ என்ற சொல்லை முன்மாதிரியாகக் கொண்டால், ‘Physics’ என்ற ஆங்கிலச் சொல்லிற்கு “பிசிக்சு’ அல்லது “பிசிக்ஸ்’ என்று தமிழுக்கான ஆங்கிலச் சொல்லை அறிமுகப்படுத்தியிருக்கலாம். முதலில் அதற்கு “பௌதீகம்’ என்ற சொல் பல வருடங்கள் பயன்படுத்தப்பட்டது. பின்னர் அச்சொல் மாற்றப்பட்டு “இயற்பியல்’ என்ற சொல் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. தனித்தமிழ் அறிஞர் அருளி தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய காலத்தில், நான் அவரைச் சந்தித்தபோது, “இயற்பியல்’ என்பது தவறு என்றும், “பூதவியல்’ என்பதே சரியென்றும் அடித்துச் சொன்னார். அவர் ஆலோசனைப்படி நடக்கும் அரசு தமிழகத்தில் ஏற்படுமானால், “இயற்பியல்’ நீக்கப்பட்டு “பூதவியல்’ நடைமுறைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்.

“எது தமிழ்?’ என்பதற்கான சார்பற்ற அளவுகோல்(Objective Scale) நடைமுறையில் இல்லை என்பதை இது உணர்த்துகிறது.

அறிவியல் மட்டுமின்றி, சட்டம் உள்ளிட்ட பல துறைகளில் இத்தகைய சிக்கல்கள் உள்ளன.
உதாரணமாக நீதி மன்றத்தில் பயன்படுத்தப்படும் ‘Resjudicata’ என்ற ஆங்கிலச் சொல்லை, தொல்காப்பியரை(“சூத்திரம்’) முன்மாதிரியாகக் கொண்டு, “ரெச்சூடிகடா’ அல்லது “ரெஸ்ஜூடிகடா’ என்று தமிழுக்கான ஆங்கிலச் சொல்லை உருவாக்கிப் பயன்படுத்தலாம். “தீயகம்’ விரும்பும் தனித்தமிழ் அறிஞர்கள் இதனை எற்றுக் கொள்வது சந்தேகம் தான்.

வடஎழுத்தும், வடசொல்லும் அல்லது எந்த பிறமொழி எழுத்தும், பிறமொழிச் சொல்லும் தமிழின் தனித்தன்மைக்கு ஊறு விளைவிக்கும் அளவுக்கு அதீதமாகப் பயன்படுத்துவது தவறாகும். அதற்கு நேர் எதிராக பிறமொழி எழுத்தும், பிறமொழிச் சொல்லும் அறவே தவிர்க்கப்பட வேண்டும் என்று சொல்வது தமிழின் வளர்ச்சிக்கு பல வகைகளில் பாதகமாகவே அமையும் என்பது என் கருத்தாகும்.

தொல்காப்பியர் கூறும் “ஒரீஇ’ என்பது, பிறமொழி எழுத்தையும், பிறமொழிச் சொல்லையும் தேவைகளுக்கு ஏற்றார் போல் தமிழில் பயன்படுத்தி தமிழை வளர்ப்பதற்கான சார்பற்ற அளவுகோல் அடிப்படையிலான நெறிமுறையாகும் என்றே நான் கருதுகிறேன்.

6 Comments ஒரீஇ – சில ஐயங்கள்

 1. முரளீதரன்

  ஐயா,

  அருமையிலும் அருமை. தமிழ் ஆவலர்கள் என்று தங்களைக் காட்ட விழையும், பலரும் தமிழின் இயற்கையான வளர்ச்சிக்கு தடையாகவே நிற்கின்றனர். உலகின் மற்ற எல்லா மொழியும் கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்டது போல் பல்வேறு புது சொற்களைத் தடையின்றி அறிமுகம் செய்து அவர்கள் மொழி வளர வழி செய்வது மட்டுமின்றி, அம்மொழி பேசுவோர்க்கு மற்ற அரங்களில் நடக்கும் விஷயங்களுடன் உடனடி தொடர்பும் புரிதலும் வளர்ச்சியும் ஏற்படுகிறது.

  வணக்கம்.

 2. sayeeraaj

  தமிழும் சம்ஸ்க்ருதமும் ஒரே மொழி தான். தமிழ் தானாக உருவான மொழி. அனால் சமஸ்க்ரிதம் முன்னோர்களால் அரசர்களால் துறவிகளால் உருவாக்க பட்டது. அனைத்து பகுதிகளின் ஒலி, உச்சரிப்பு, எழுத்து – இவற்றை ஆராய்ந்து மித சிறப்பாக உருவாக்க பட்டது.

 3. வேந்தன் அரசு

  கம்பர் வள்ளுவர் இளங்கோ யாவரும் தொல்காப்பியத்தின் “ஒரீஇ” க்கு உங்கள் விளக்கம் அறியாது மாய்ந்தனர்.

 4. ஆவலன்

  வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
  எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே

  இந்நூற்பாவுக்கு நீங்கள் கொண்ட பொருள் தவறு.

  ஒரீஇ என்பது உயிர் அளபெடை பெற்று வருவது. அளபெடை இல்லாமல் வந்தால் ஒருவி என்று வரும். அதாவது ஒருவுதல், தவிர்த்தல், நீங்குதல் இவையாவும் ஒரே பொருளுடையன.

  மருவுக மாசற்றார் கேண்மை ஒன்றீத்தும்
  ஒருவுக ஒப்பில்லார் நட்பு

  திருவள்ளுவரும் மாசில்லாதவரின் நட்பை நாடிப் போற்ற வேண்டும் என்றும் நம் மடத்துக்குளம் பொருந்தாதவரின் நட்பை ஒருவுதல் அதாவது தவிர்த்திடல் வேண்டும் என்று கூறுவார். ஆக, அந்த வகையில் தொல்காப்பியர் சொல்வது வடவெழுத்தைத் தவிர்ப்பதையே என்று புரிந்துகொள்ளவேண்டும். எடுத்துக்காட்டுக்குக் கம்பர் வடசொல் பெயர்களைத் தமிழ்ப்படுத்தும் போது இலக்குவன், வீடணன், இராமன், சீதை, கோசலை இப்படி எத்தனையோ வடமொழிப் பெயர்களும் சொற்களும் சான்றாக இருக்கும்போது
  தொல்காப்பியர் நூற்பாவில் என்ன ஐயம் வேண்டியிருக்கிறது?

 5. செ.அ.வீரபாண்டியன்

  கட்டுரையில் தொல்காப்பியரின் ‘சூத்திரம்’ என்ற சொல் உதாரணமாக குறிப்பிடப்பட்டுள்ள‌தை கவனிக்கவும். இலக்குவன்,இராமன், சீதை போன்ற சொற்களும், அந்த வகையில் தொல்காப்பியம் குறிப்பிட்டுள்ளது போல, பிறமொழி சொற்களை இறக்குமதி செய்யும் மொழியின் எழுத்தோசைகளை பயன்படுத்தும் ‘ஃபோனெடிக்’ (Phonetic) மொழியியல் (Linguistics) முறையாகும். ஆனால் இன்று தனித்தமிழ் இயக்கத்தினர் முயல்வது, தொல்காப்பியம் ‘ஒரீஇ’ சூத்திரத்திற்கு முரணான ‘செமாண்டிக்’ (Semantic) மொழியியல் முறையாகும்.

 6. S.A.Veerapandian

  கட்டுரையில் தொல்காப்பியரின் ‘சூத்திரம்’ என்ற சொல் உதாரணமாக குறிப்பிடப்பட்டுள்ள‌தை கவனிக்கவும். இலக்குவன்,இராமன், சீதை போன்ற சொற்களும், அந்த வகையில் தொல்காப்பியம் குறிப்பிட்டுள்ளது போல, பிறமொழி சொற்களை இறக்குமதி செய்யும் மொழியின் எழுத்தோசைகளை பயன்படுத்தும் ‘ஃபோனெடிக்’ மொழியியல் முறையாகும். ஆனால் இன்று தனித்தமிழ் இயக்கத்தினர் முயல்வது, தொல்காப்பியம் ‘ஒரீஇ’ சூத்திரத்திற்கு முரணான ‘செமாண்டிக்’ மொழியியல் முறையாகும்.

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)