சம்ஸ்கிருதம் யாருடைய மொழி?

ஒரு விஷயத்துக்கு எதிர்வினையாற்றும்போது, அல்லது எதிர்க்கும்போது அதன் மீது வெறுப்பையும் கசப்பையும் வளர்த்துக் கொள்ளாமல் இருப்பதென்பது ஓர் முதிர்ச்சியான நிலை. தன் வாழ்நாள் முழுக்க நாராயண குரு கற்பித்தது அதைத்தான். நான் அந்த மரபைச் சேர்ந்தவனாக என்னை உணர்வதனாலேயே பல விஷயங்களில் எனக்கு தெளிவு கிடைத்தது.

ஆனால் பொதுவாக அரசியல் களங்களில் அது நிகழ்வதில்லை. வெறுப்பு மிக எளிதாக மக்களை இணைக்கிறது. எளிதாக அதை பரப்ப முடிகிறது. ஆகவே அது மிக முக்கியமான அரசியல் ஆயுதம். அதைத்தான் ஃபாஸிஸம் என்கிறோம்.

இவ்வாறு வெறுப்பை உருவாக்கும்போது நாம் எதிரீடுகளை உருவாக்குகிறோம். நம்முடையது முழுக்க முழுக்க சரி என்றும் எதிர் தரப்பு முழுக்க முழுக்க தவறு என்றும் நம்ப ஆரம்பிக்கிறோம். எதிர் தரப்பை குறுக்கி சுருக்கி எளிமையான ஒரு கருத்தாக ஆக்கிக் கொண்டு அதற்கேற்ப நம்மையும் ஓர் எளிய தரப்பாக ஆக்கிக் கொள்கிறோம். இதை தவிர்ப்பதற்கு இன்றியமையாத விவாதங்கள் எதுவுமே நிகழாமல் ஆகின்றன. எதிர் தரப்புடன் விவாதத்துக்கே இடமில்லாத நிலையை ஒரு கட்டத்தில் நாம் அடைகிறோம்.

தமிழில் மொழி சார்ந்த விவாதங்களில் இந்த நிலை உருவானது ஒரு துரதிருஷ்ட வசமான வரலாற்றுத் திருப்பம். நேற்று நான் பெர்க்கிலி பல்கலையில் பேரா ஜார்ஜ் எல் ட்டை சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். தமிழை ஆய்வுசெய்வதற்கு சம்ஸ்கிருதம் இன்றி இயலாது என்ற தன் தரப்பை மிக வலுவாக அவர் சொன்னார். தமிழ் மட்டுமே தெரிந்த தமிழாய்வாளன் தமிழின் பெரும்பகுதியை இழந்துவிடுகிறான். தமிழும் சம்ஸ்கிருதமும் நெடுங்காலம் ஒன்றை ஒன்று உண்டு வளர்ந்தவை. தமிழறிர்கஞளுக்கு இருக்கும் சம்ஸ்கிருத வெறுப்பு தமிழாய்வுகளை எப்படி முடக்கியிருக்கிறதோ அதேபோல இன்றைய சம்ஸ்கிருத அறிஞர்களுக்கு பிற மொழிகளைப்பற்றி ஏதும் தெரியாது என்பதும் பெரிய தேக்க நிலையை உருவாக்கி விட்டிருக்கிறது என்றார்.

அந்த நிலை எப்படி மாறியது? பிறரைப்போல நான் அதற்கு உடனே ஒரு சதிக்கோட்பாடைச் சொல்ல மாட்டேன். அதற்கு ஒரு வரலாற்றுப் பின்புலம் இருக்கிறது. பதினாறாம் நூற்றாண்டு வரை தமிழ் நாட்டில் சம்ஸ்கிருதமும் தமிழும் சீரான முறையில் உரையாடி வளர்ந்தன என்பதைக் காண்கிறோம். அப்போது தமிழுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் இடையே முரண்பாடும் இருக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் திராவிட சிசு தமிழ்ஞான சம்பந்தன் என்றுமே தமிழுக்கு அரணாக சம்ஸ்கிருதத்தை பார்ப்பவராகவே இருந்திருக்கிறார்.

ஆனால் பதிமூன்றாம் நூற்றாண்டின் தமிழகம் மீது மாலிக் காபூரின் படையெடுப்பு நிகழ்ந்தது. பேரரசுகள் சிதறின. அதன்பின் நூறுவருடம் உதிரி தளகர்த்தர்களின் அராஜக ஆட்சி. குமார கம்பணன் மதுரையை கைப்பற்றி மதுரை ஆலயத்தை திருப்பிக் கட்டி மீண்டும் ஒரு தொடக்கத்தை உருவாக்கினான். அதன்பின் மதுரை தஞ்சை செஞ்சியில் நாயக்கர் ஆட்சி. இக்காலகட்டத்தில் தென்னகத்தில் உள்ள எல்லா பேராலயங்களும் மீண்டும் கட்டி எழுப்பப்பட்டன. ஏராளமான ஏரிகள் வெட்டப்பட்டன. சந்தைகள் அமைந்தன.சாலைகள் நீண்டன. இன்றைய தமிழகம் உருவாகி வந்தது. ஆனால் இவர்கள் பெரும்பாலும் தமிழுக்கு எதுவும் செய்யவில்லை. அவர்களின் மொழி தெலுங்கு. அவர்கள் போற்றி வளர்த்தது சம்ஸ்கிருதத்தை. தமிழை நம்பி வாழ்ந்த கவிராயர் குலங்கள் மெல்ல மெல்ல அன்னியப்பட்டன. பேரிலக்கியங்கள் உருவாகாமலாயின. தமிழின் வளர்ச்சி தேங்கியது.

இதை ஒட்டி ஒரு வகை சம்ஸ்கிருத மேலாதிக்கம் உருவாகியது. பதினெட்டாம் நூற்றாண்டு ஆனபோது தமிழ் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருந்தது. சம்ஸ்கிருதம் பேணப்பட்டு அரசின், மதத்தின் மொழியாக விளங்கியது. தமிழை பழிக்கவும் சமஸ்கிருதத்தை போற்றவும் கூடிய மனநிலைகள் ஓங்கி இருந்தன. மேலும் நாயக்கர் காலமும் சரி , அதன் பின் வந்த ஆங்கில ஆட்சியும் சரி பிராமணர்களை பெரிதும் போற்றி வளர்த்தவை. பிராமணர்களில் ஆதிக்கவாதிகள் தங்கள் மொழியாக சம்ஸ்கிருதத்தை எண்ணினார்கள். தமிழை புறக்கணிக்கவும் எள்ளி நகையாடவும் அவர்களில் பலர் முயன்றார்கள்.

இந்த இழிநிலையில் இருந்து தமிழ் மீண்டது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில்தான். அதற்கு சைவ மடங்கள் முன்னோடி பங்களிப்பாற்றின. கிட்டத்தட்ட வழக்கொழிந்துபோன தமிழிலக்கியக் கல்வியை அவைதான் விடாப்பிடியாகப் பேணி வளர்த்தன. நூல்களை தக்கவைத்தன. அங்கிருந்து மீண்டும் தமிழ் முளைத்து எழுந்தது.

இக்காலகட்டத்தில் தமிழின் தனித்தன்மை, தொன்மை, இலக்கிய வளம் ஆகியவற்றை விவாதித்து நிறுவ வேண்டியிருந்தது. தமிழ் சம்ஸ்கிருதத்தைச் சாராமல் இயங்கக்கூடியது, அது சம்ஸ்கிருதத்தின் அடிமை அல்ல என்பதை பேசிப்பேசி நிலைநாட்ட வேண்டியிருந்தது. அந்த விவாதம் நூறாண்டு நீடித்தது. அதன் சம்ஸ்கிருத தரப்பாக இங்கே பேசியவர்கள் பெரும்பாலும் பிராமணர்கள். ஆகவேதான் பிராமண மொழி என்ற அடையாளம் தமிழ்நாட்டில் சம்ஸ்கிருதம் மேல் விழுந்தது.

இருநூறு வருட இடைவெளி என்பது எந்தப் பண்பாட்டுக்கும் மிகப்பெரிய சோதனைதான். தமிழ் வளர்ச்சியில் உருவான அந்த இடைவெளியால் தமிழ்நூல்கள் பல மறைந்தன. தமிழின் செவ்வியல் மரபு அறுபட்டது. தமிழ் மொழியில் அறிவுத்தள விவாதங்கள் நிகழாது போனமையால் மெல்லமெல்ல தமிழின் சொல்வளம் மறக்கப்பட்டு சம்ஸ்கிருதக் கலப்பு மிகுந்தது. அதன் விளைவே மணிப்பிரவாளம் போன்ற கலவை மொழி.

இந்த வீழ்ச்சியில் இருந்து தமிழை மீட்டது தமிழிய இயக்கம்தான். தமிழிய இயக்கம் என்று நாம் இன்று சொல்வது பலதளங்களில் நிகழ்ந்த ஒரு ஒட்டுமொத்த அறிவியக்கத்தைத்தான். கடந்த இருநூறு வருடங்களில் தமிழ்நாட்டில் நடந்த ஆகப்பெரிய அறிவியக்கம் என்பது தமிழிய இயக்கமே. தமிழின் தொல்நூல்களை பதிப்பித்தல் , அவற்றை ஆராய்ந்து தமிழின் தொல்மரபை நிலைநாட்டல், தமிழின் தனித்துவத்தை மறுபடியும் கண்டடைந்து நிலைநாட்டுதல் ஆகியவை ஒரு தளத்தில் நிகழ்ந்தன. இந்த இயக்கத்தை நாம் தனித்தமிழ் இயக்கம் என்று சொல்கிறோம்.

இரண்டாவதாக தமிழின் தொன்மையான இசைமரபை மீட்டுருவாக்கம் செய்தல் முக்கியமான கவனம் பெற்றது. அதை தமிழிசை இயக்கம் என்று சொல்கிறோம். மூன்றாவதாக தமிழை முறைப்படி கற்பதற்கான கல்விமுறைகளை உருவாக்குதல். அதை தமிழ்க்கல்வி இயக்கம் என்கிறோம். இம்மூன்றும் இணைந்ததே தமிழிய இயக்கம்.

இந்த தமிழிய இயக்கத்தில் பிராமணர்களின் பங்கை எவரும் மறுத்துவிட முடியாது. உ.வே.சாமிநாதய்யர் இல்லையேல் தமிழ் நூல்கள் அழிந்திருக்கும். அவரது மாணவர்களான அனந்தராம அய்யர், கி.வா.ஜகன்னாதன் போன்றவர்களின் பங்களிப்பும் சாதாரணமானதல்ல. பரிதிமாற்கலைஞர், பி.டி.ஸ்ரீனிவாசாச்சாரியார் போன்றவர்கள் இவ்வியக்கத்தில் பெரும் பணியாற்றியவர்கள்.

தமிழிய இயக்கம் தமிழை மீட்டமைக்கும் வேகத்தில் சம்ஸ்கிருதத்துக்கு எதிரானதாக ஆனது. நடைமுறையில் அதில் பிராமண எதிர்ப்பும் கலந்து கொண்டது. அதற்கான சமூகக் காரணங்கள் அன்று இருந்தன.

பிராமணர்கள் வெள்ளைய அரசில் எல்லா முக்கிய பதவிகளையும் வகித்த காலம் அது. ஒரு அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் எந்த குழுவும் செய்வதைப்போல அவர்கள் அந்த அதிகாரத்தை பிறர் எய்த அனுமதிக்கவில்லை. இதற்கு எதிராக முதல் கசப்பும் எதிர்ப்பும் கேரளத்தில் , இன்னும் சொல்லப்போனால் நாயர் சாதியில்தான், உருவாகியது. காரணம் கிறித்தவ இயக்கத்தின் கல்விப்பணியை பயன்படுத்திக்கொண்டு கல்விகற்று வந்த நாயர்கள் அரச பதவிகளை நாடி பிராமணர்களால் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருந்தார்கள்.

ஆரம்பகாலத்தில் இவ்வாறு பிராமணர்களால் வாய்ப்பு பறிக்கப்பட்டவர்கள் பிராமணரல்லாதோர் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினர். பின்னர் பிரிட்டிஷார் இந்தியர்களுக்கு தேர்தலில் வென்று வட்டார அரசுகளை அமைக்கும் வாய்ப்பை வழங்கியபோது அந்த அமைப்பு ஜஸ்டிஸ் கட்சி என்ற கட்சியாக ஆகியது. இந்த அமைப்புக்கும் தமிழிய இயக்கத்துக்கும் கொள்கை அளவில் எந்தத்தொடர்பும் இல்லை. ஆனால் இதன் ஆதரவாளர்களாக தமிழியக்கத்தினர் பலர் இருந்தார்கள்.

இக்காலத்தில் கால்டுவெல் முன்வைத்த திராவிடமொழிகொள்கை பெரிதாகப் பேசப்பட்டது. தென்னக மொழிகளை ஆராய்ந்த பிஷப் கால்டுவெல் அவற்றுக்கு ஒரு பொது இலக்கண அமைப்பு இருப்பதை உணர்ந்தார். தென்னகத்தைக் குறிக்க நம் சிற்ப- தாந்த்ரீக மரபில் பயன்படுத்தப்பட்ட திராவிட என்ற சொல்லை அவற்றைக் குறிக்க பயன்படுத்தினார். திராவிட என்பது ஒரு இனமாக இருக்கலாம் என்ற ஊகத்தை அவர் முன்வைத்தார். அந்த ஊகத்தை உடனடியாக ஒரு கோட்பாடாக ஆக்கிக் கொண்டு திராவிட இயக்கம் உருவானது.

இவ்வாறு திராவிட இயக்கம் உருவாவதற்குக் காரணமாக அமைந்தது பிராமண வெறுப்பே. இந்திய மக்களை திராவிடர் ஆரியர் எனப்பிரித்து திராவிடர் என்போர் தென்னகத்து பிராமணரல்லாதோர் என வகுத்து அவர்கள் தனி இனம் தனி நாடு என்று வாதிட ஆரம்பித்தார்கள். இக்காலகட்டத்தில் திராவிட இனம் என்பதை வரையறை செய்வதற்கான அறிவார்ந்த முயற்சி ஏதும் எடுக்கப்படவில்லை. ஊகங்கள் மட்டுமே முன்வைக்கப்பட்டு உடனடியாக அவை கோட்பாடுகளாக ஏற்கப்பட்டன.

சுதந்திரத்துக்குப் பின்னர் மொழிவழி மாநிலங்கள் அமைந்தபோது திராவிட இயக்கங்கள் திராவிடக்கருத்தியலை கைவிட்டன. அதற்கும் எந்த விவாதமும் நடத்தப்படவில்லை. திராவிட என்பது தமிழர்களை மட்டுமே குறிக்கும் சொல்லாக மருவியது. ஏனென்றால் திராவிடக்கருத்தாக்கம் கர்நாடகம் ஆந்திரா கேரளத்தில் எந்த சலனத்தையும் உருவாக்கவில்லை.

அக்காலத்தில் இந்தியாவெங்கும் உருவாகி வலுவடைந்த பிராமணமைய வாதம் தன்னை சம்ஸ்கிருதத்துடன் அடையாளப்படுத்திக் கொண்டது. இந்தியாவின் பண்பாடென்பது பிராமணப் பண்பாடாக முன்வைக்கப்பட்டது. அது சம்ஸ்கிருதத்தால் மட்டுமே அமைந்தது என வாதிடப்பட்டது. ஆங்கிலேய ஆட்சியால் புதுப்பணபலம் பெற்ற பிராமண சாதியின் ஒரு ஆதிக்க தந்திரம் அது.

அதற்கு எதிராக பிராமணரல்லாத சாதியினர் உருவாக்கிய பல கோட்பாடுகளை உருவாக்கினர். உதாரணமாக வேதங்களின் காலத்தை பிராமணர்கள் பல்லாயிரம் வருடங்களுக்குப் பின்னால் கொண்டு சென்றபோது தமிழிய இயக்கத்தினர் கடல்மூழ்கிய குமரிநில நீட்சியை ஒரு பெரும் கண்டமாக உருவகித்து அதுவே பிரம்மசமாஜத்தினர் சொல்லிய லெமூரியா என வாதிட்டு ஆதாரமேதும் இல்லாமலேயே அதை நம்பவும் ஆரம்பித்தார்கள்.

இவ்வாறு நம் சூழலில் புழங்கும் கருத்துக்கள் பெரும்பாலும் ஆதிக்க நோக்குடன் மிகைப்படுத்தப்பட்டவை. அதற்கு எதிரான கருத்து அதற்கேற்ப மிகைப்படுத்தப்பட்டது. இன்று ஒரு அறிவார்ந்த ஆய்வாளர் நடுநிலையான ஆய்வுகளை செய்யவேண்டியிருக்கிறது. அப்படிச் செய்தால் ஒரு அபாயம் உள்ளது. கருத்துநிலைபாட்டின் இரு தரப்புமே அவருக்கு எதிரிகள் ஆகிவிடுவார்கள். ஒன்று அவர் தமிழியராக இருக்க வேண்டும். அல்லது அவர் பிராமணியராக இருக்க வேண்டும். இரண்டுமே துறை வெற்றிகளை அளிக்கக் கூடியவை. நடுநிலையாளருக்கு இன்று தமிழ்ச் சூழலில் ஆளிருப்பதில்லை. ஆகவே மிகக் குறைவாகவே நடுநிலைக் குரல்கள் ஒலிக்கின்றன.

திராவிட இயக்கம் பிரபல அரசியலியக்கமாக ஆகியது. முதலில் பிராமணரல்லாத உயரசாதியினரின் குரலாக ஆரம்பித்தது பின்னர் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கான அரசியலியக்கமாக ஆகியது. இந்த பரிணாமத்தில் அது தமிழிய இயக்கம் உருவாக்கிய மனநிலைகளையும் கோஷங்களையும் பெரிது படுத்தி வெகுஜன நம்பிக்கைகளாக ஆக்கியது. தமிழிய இயக்கம் ஓர் அறிவார்ந்த இயக்கம். அதில் ஆய்வும் உண்டு, வெறுப்பின் அம்சமும் உண்டு. திராவிட இயக்கம் அதில் வெறுப்பை மட்டுமே எடுத்துக்கொண்டது.

பொருட்படுத்தும்படியான தமிழாய்வுகள் எதையுமே திராவிட இயக்கம் உருவாக்கவில்லை. தமிழின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க எந்த பங்களிப்பையும் அது ஆற்றவும் இல்லை. இது வரலாறு. ஏனெனில் அது பரப்பு இயக்கம், அறிவியக்கம் அல்ல. இன்று திராவிட இயக்கம் தன் சாதனைகளாகச் சொல்லிக் கொள்வதெல்லாமே தமிழிய இயக்கத்தின் பங்களிப்புகளையே. அவர்களில் பெரும்பாலானவர்கள் திராவிட இயக்க ஆதரவாளர்கள்கூட அல்ல.

இவ்வாறு ஒரு குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலில் அந்தக்கால கட்டாயங்களினால் உருவான கருத்துக்கள் பின்னர் வெகுஜனப்படுத்தப்பட்டு எளிய கோஷங்களாக மாறி நம் சூழலில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. இவற்றை எதிரொலிப்பவர்கள் அவற்றை நிறுவப்பட்ட உண்மைகளாகவே எண்ணுகிறார்கள். மத நம்பிக்கை போல ஆவேசமாக முன்வைக்கிறார்கள். ஆராயவோ விவாதிக்கவோ அவர்கள் தயாராக இருப்பதில்லை. எதிர் தரப்பை எதிரிகளாகவே நினைக்கிறார்கள். கருத்துக்கள் சார்ந்து முன்வைப்பதெல்லாமே மிகையுணர்சிக்களைத்தான். ஆகவே ஒரு விவாதமே சாத்தியமில்லாமல் போகிறது.

இந்துமதம் சார்ந்து, இந்திய சிந்தனை மரபு சார்ந்து, சாதியமைப்பின் உருவாக்கம் சார்ந்து, இந்திய தேசிய உருவகம் சார்ந்து, ஆரிய திராவிட இனப்பிரிவினை சார்ந்து இன்று தமிழ்ச் சூழலில் இவர்கள் முன்வைக்கும் கருத்துக்கள் முக்கால் நூற்றாண்டுக்கு முன்னர் எந்தவித ஆய்வு முறைமையும் இல்லாமல் அவசர நோக்கில் ஒரு சமூகத்தேவையின் பொருட்டு வடிவமைக்கப்பட்டவை. அவை கடந்த அரைநூற்றாண்டுக்கால சமூக அறிவியல்களின் கருவிகளால் மீள மீள மறுபரிசீலனை செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றை இவர்கள் சற்றும் அறிய மாட்டார்கள். அறியும் மனநிலையே இல்லாமல் மதநம்பிக்கை போல பற்றிக் கொண்டிருக்கிறார்கள். அக்கருவிகளை பயன்படுத்தி ஆராய்பவர்களை தமிழ்த்துரோகிகள் என்று நம்பத்தான் அவர்களின் மதச்சார்பு, இனச்சார்பு மனம் பயின்றிருக்கிறது.

சம்ஸ்கிருதம் சார்ந்து நம் சூழலில் உள்ள நம்பிக்கைகளும் இவ்வகைப்பட்டவையே. அந்த வெறுப்பாலும் புறக்கணிப்பாலும் தமிழின் அறிவு வளர்ச்சியே தேங்கிக் கிடக்கிறது. தமிழின் மாபெரும் இலக்கிய வளத்தை இந்தியச் சூழலில் பொருத்தி ஆராயும் ஆராய்ச்சிகளே நிகழ்வதில்லை. ஆகவே இங்குள்ள இலக்கியங்களில் பெரும் பகுதி அபத்தமான வாசிப்புக்கும் விளக்கத்துக்கும் உள்ளாகிறது. குறள் ஆனாலும் சரி, கம்பராமாயணம் ஆனாலும் சரி. பிற மொழிகளுடன் எந்த வகையான விவாதங்களும் நிகழ்வதில்லை. நமக்குள்ளே பழங்கதை பேசும் மூடக்கும்பலாக தமிழறிஞர்கள் உருவம் பெற்றிருக்கிறார்கள்.

தமிழில் சம்ஸ்கிருதம் குறித்து நிலவும் மூடநம்பிக்கைகள் பல.

  1. அது வடமொழி. அது உண்மை அல்ல. அந்த மொழியின் முதல் வடிவம் வடக்கே எங்காவது உருவாகியிருக்கலாம். ஆனால் அதன் வளர்ச்சி என்பது இந்திய நிலப்பகுதியில் உள்ள பலநூறு மொழிகளை தழுவியது. சம்ஸ்கிருதக் கல்வியும் சரி சம்ஸ்கிருத பங்களிப்பும் சரி தென்னகத்திலேயே ஒப்பு நோக்க அதிகம்.
  2. அது பிராமண மொழி. அதுவும் உண்மை அல்ல . மரபான சம்ஸ்கிருத நூல்களிலேயே பிராமணர் எழுதிய நூல்கள் குறைவு. வியாசனொ வான்மீகியோ உபநிடத ஆசிரியர்களோ காளிதாசனோ பாரவியோ எவருமே பிராமணர்கள் அல்ல.
  3. அது இந்து மதத்தின் மொழி. இது அபத்தமானது. அது இந்திய மதங்கள் அனைத்துக்கும் பொதுவான அறிவார்ந்த மொழி. சமணர்கள்தான் அதை இந்தியா முழுக்கக் கொண்டு சென்றவர்கள். அதற்கு லிபி [வரிவடிவம்] உருவாக்கியவர்கள். அது பிற்கால பௌத்தத்தின் மொழியும் கூட
  4. அதை இப்போது பிராமணர்களே ஆதரிக்கிறார்கள். தமிழகம் தவிர பிற பகுதிகளில் இது உண்மை அல்ல. உதாரணமாக கேரளத்தில் சிரியன் கிறித்தவர்களும் ஈழவர்களும்தான் பெரும் சம்ஸ்கிருத அறிஞர்கள்.
  5. சம்ஸ்கிருதம் செத்த மொழி. இது ஓர் அபத்தமான கூற்று. இன்றைய சம்ஸ்கிருதம் என்றுமே பேச்சு மொழி அல்ல. உரையாடலுக்கான மொழியே அல்ல அது.

இந்த நம்பிக்கைகள் நம் தமிழியர்களால் உருவாக்கப்பட்டு இன்று திராவிட வழிவந்தவர்களால் மதம்போல நம்பப்படுகின்றன. ஆனால் மறு தரப்பிலும் அதேபோல அபத்தமான நம்பிக்கைகள் உள்ளன

  1. சம்ஸ்கிருதம் தேவமொழி. அதில் இறைவழிபாட்டு மந்திரங்களும் நூல்களும் மட்டுமே உள்ளன. இது பொய். சம்ஸ்கிருதத்தில் ஏராளமான இறை மறுப்பு நூல்கள் உள்ளன. வேதங்களிலேயே பொருள்முதல்வாதம் பேசும் பாடல்கள் ஏராளமாக உள்ளன. வேத மறுப்பு மட்டுமல்ல வேத வெறுப்பும் சம்ஸ்கிருத நூல்களில் பேசப்படுகின்றன. சம்ஸ்கிருதம் அறிவார்ந்த விவாதங்களுக்கான மொழி. ஆகவே விவாதத்தின் எல்லா தரப்பும் அதில் பேசப்படுகிறது
  2. சம்ஸ்கிருதம் பிராமணர்களுக்கு முன்னுரிமை உள்ள மொழி. அது பிராமணர்களின் நம்பிக்கை. உண்மை அல்ல. சம்ஸ்கிருத நூல்களில் பிராமண மேன்மை பேசும் நூல்கள் பூர்வ மீமாம்சை என்ற வேத மைய தரிசனத்தின் தரப்பைச் சேர்ந்தவை மட்டுமே. அதை எதிர்க்கும் பல நூறு தரப்புகள் சம்ஸ்கிருதத்தில் உள்ளன. பகவத்கீதை கூட பூர்வமீமாம்சத்தை நிராகரிப்பதே

இந்த நம்பிக்கைகளை கைவிட்டுவிட்டு அறிவார்ந்த தர்க்கங்களுடன் சம்ஸ்கிருதத்தை அணுகக்கூடிய ஆராயக்கூடிய ஒரு தலைமுறை இனியாவது உருவாகி வரவேண்டும். அதன்பின்னர் மட்டுமே தமிழாய்வு அடுத்த கட்டத்துக்குச் செல்ல முடியும். அப்போது பல ஆச்சரியமளிக்கும் உண்மைகள் வெளிவரும் என நான் நினைக்கிறேன். அதில் முக்கியமானது, தமிழ் சம்ஸ்கிருதத்துக்கு எந்த அளவுக்குக் கடன்பட்டதோ அதை விட சமஸ்க்ருதம் தமிழுக்குக் கடன்பட்டது.

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் எழுதிய கட்டுரையின் மறுபதிப்பு

21 Comments சம்ஸ்கிருதம் யாருடைய மொழி?

  1. Balaji

    \*ஆகவே இங்குள்ள இலக்கியங்களில் பெரும் பகுதி அபத்தமான வாசிப்புக்கும் விளக்கத்துக்கும் உள்ளாகிறது. குறள் ஆனாலும் சரி, கம்பராமாயணம் ஆனாலும் சரி. பிற மொழிகளுடன் எந்த வகையான விவாதங்களும் நிகழ்வதில்லை. நமக்குள்ளே பழங்கதை பேசும் மூடக்கும்பலாக தமிழறிஞர்கள் உருவம் பெற்றிருக்கிறார்கள்.*/
    இங்கே விவாதங்கள் என்றால் என்ன? எந்த தளத்தில் அவ்வகையான விவாதங்கள் நடக்கும்? அந்த விவாதங்கள் எப்படி இருக்கும்? எனக்கு புரியவில்லை. தயவுசெய்து இதை விரிவாக சொல்வீர்களா ?

  2. Balaji

    /*ஆகவே இங்குள்ள இலக்கியங்களில் பெரும் பகுதி அபத்தமான வாசிப்புக்கும் விளக்கத்துக்கும் உள்ளாகிறது. குறள் ஆனாலும் சரி, கம்பராமாயணம் ஆனாலும் சரி. பிற மொழிகளுடன் எந்த வகையான விவாதங்களும் நிகழ்வதில்லை. நமக்குள்ளே பழங்கதை பேசும் மூடக்கும்பலாக தமிழறிஞர்கள் உருவம் பெற்றிருக்கிறார்கள்.*/

    இங்கே விவாதங்கள் என்றால் என்ன? எந்த தளத்தில் அவ்வகையான விவாதங்கள் நடக்கும்? அந்த விவாதங்கள் எப்படி இருக்கும்? எனக்கு புரியவில்லை. தயவுசெய்து இதை விரிவாக சொல்வீர்களா ?நன்றி

  3. srikanth

    //
    இங்கே விவாதங்கள் என்றால் என்ன?
    //
    பொதுவாக இந்திய துணைக்கண்டத்தில் பல மொழிகள் பேசினாலும் ஒன்றுக்கு ஒன்று கலாச்சார தொடர்பு இருக்கிறது. இந்த கலாச்சார தொடர்பை உணரமுடியாமல் யார் மொழி பழமையானது, எது உயர்ந்தது என்ற மொழிச்சன்டைகள் தடையாக இருக்கின்றன. சாதாரண மக்கள் முதல் மொழிஇயல் அறிஞர்கள் வரை யாருக்குமே ஏனைய மற்ற மொழிகளுடன் பரிச்சயம் இல்லை – அதனால் வெறுமனே மொழிச்சன்டையில் ஈடுபடுகிறார்கள் என்று ஜெயமோகன் சொல்வதாக புரிந்து கொள்கிறேன். விவாதம் என்பது ஒருவரை ஒருவர் மதித்து கருத்துப் பரிமாற்றம், கருத்தளவில் ஆராய்ச்சி, ஆகியவற்றை சொல்கிறார். இது எனக்கு புரிந்தது மட்டுமே. மேலும் உங்களுக்கு விவரங்கள் தேவை என்றால் எழுத்தாளர் ஜெயமோஹனை அவர் வலைத்தளத்திலேயே தொடர்பு கொள்ளலாம்.

  4. சிவசுப்பிரமணியன்

    சமஸ்கிருதம் பிரகிருதத்தினை செம்மைப்படுத்தி உருவாக்கப்பட்டதே ஆகும். உண்மையான வேத மொழி சந்தஸ் எனப்படும்.(தெய்வத்தின் குரல் பாகம் இரண்டை பார்க்கவும்) நல்ல கருத்துக்கள் எந்த மொழியில் இருந்தாலும் தேவ வாணி எனப்படும்.தீய கருத்துக்கள் எந்த மொழியில் இருந்தாலும் அசுர வாணி எனப்படும்.

    சமஸ்கிருதத்திலும் நல்ல மற்றும் சார்வாக கருத்துக்கள் உள்ளன. நாத்திக கருத்துக்கள் தீயவை என்று யாரும் கருதுவது கிடையாது. சார்வாகர்கள் ஆக்னேயர்கள் ஆவார்கள்.சார்வாகர்கள் நாத்திகர் அல்ல. கடவுள் இல்லை என்று சிலர் சொல்வதால் யாரும் வருத்தப்படுவது கிடையாது. ஆனால் கடவுளை நம்புபவன் முட்டாள் என்று சொல்லும் போது தான் ஆஸ்திகர்கள் மன வேதனை படுகிறார்கள்.

    நாத்திகர்களில் பலர் கடவுள் நம்பிக்கையை இழிவு படுத்தி பேசும்போது தான் , நாத்திகம் தடை செய்யப்படவேண்டிய ஒன்று ஆகிறது. ஆத்திகத்திலும் இழிபிறவிகள் ஏராளம் உள்ளன. தனது தெய்வ வடிவு மற்றும் தனது வழிபாட்டு முறை மட்டுமே உயர்வு என்றும் , பிற வழிபாட்டு முறைகள் மட்டம் என்று சொல்லும் பல காட்டுமிராண்டிகளை நான் பார்த்திருக்கிறேன். எனவே நாத்திகம், ஆத்திகம் இரண்டிலுமே அயோக்கியர்கள் இருக்கிறார்கள், நல்லவர்களும் இருக்கிறார்கள்.

  5. கதிரவன்

    உலக சமஸ்கிருத தினமான இன்று அனைவருக்கும் நமது வாழ்த்துக்கள்.

    சமஸ்கிருதம் பழமையான மொழிகளில் மிக சிறந்ததாக விளங்குகிறது.

    தமிழும், சமஸ்கிருதமும் மொழிக்குடும்பத்தில் இரு கண்கள் போன்றவை.

    இவ்விரு மொழிகளும் நாள் தோறும் மேலும் பல வளர்ச்சிகள் பெற்று மேம்பட , எல்லாம் வல்ல சேவற் கொடியோனை வணங்குகிறேன்.

  6. Palani

    சிந்திக்க வைக்ககூடிய கருத்துகள், நீண்ட காலமாக எனக்கு இந்த திராவிட ஆரிய குழப்பம் உள்ளது. வரலாற்றரினர்கள் நடுநிலையோடு விவாதிக்க வேண்டியது.

  7. அத்விகா

    சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி வளாகத்தில் உள்ள குப்புசாமி ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் போதிய நிதி வசதி இன்றி சிரமப்பட்டுக்கொண்டு உள்ளது. மாநில மற்றும் மத்திய அரசுகள் மூலம் கிடைக்கவேண்டிய மான்யம் மற்றும் நிதி உதவிகள் கிடைப்பதில் தேவையற்ற காலதாமதம் ஏற்படுவதால், அதன் ஆராய்ச்சிப்பணிகள் மிகவும் சிரமமாய் உள்ளன. எனவே, ஆர்வலர்கள் தங்களால் இயன்ற அளவு, ஆயுள்கால சந்தாதாரர்களை , இந்த ஆராய்ச்சி நிலையத்துக்கு சேர்த்துக் கொடுப்பதன் மூலம் அதற்கு சிறு உதவி செய்யலாம். ரூபாய் இரண்டாயிரம் மட்டும் செலுத்தி , ஆயுள் சந்தாதாரர் ஆகி, அவர்களின் வெளியீடுகளை சுமார் பத்துக்கும் மேற்பட்ட அருமையான புத்தகங்களை பெறலாம். அனைவரும் செய்யும் இந்த உதவி , நமக்கும் நம் முன்னோரால் வளர்க்கப்பட்ட இந்திய கலாசாரத்தையும் காக்கவும் , மேம்படுத்தவும் உதவும். இந்த ஆராய்ச்சி நிலையத்தை காப்பாற்றி , நம்மை நாமே காப்பாற்றி கொள்வோம்.

  8. hotman

    ‘சம்ஸ்கிருதம் அறிவார்ந்த விவாதங்களுக்கான மொழி, ஆகவே விவாதத்தின் எல்லா தரப்பும் அதில் பேசப்படுகிறது’ என்பதைப்போல பேத்தலை நான் கேட்டதில்லை. வளர்ச்சி பெற்ற எல்லா மொழிகளிலும் (இந்தி, தெலுங்கு முதல் ஆங்கிலம். ஃப்ரென்ச், ஸ்பானிஷ் வரை) அறிவார்ந்த விவாதம் நடத்தலாம் என்பது இவ்வளவு எழுதிய கட்டுரை ஆசிரியருக்கு ஏன் புரியவில்லை.

  9. hotman

    ‘தமிழ் சம்ஸ்கிருதத்துக்கு எந்த அளவுக்குக் கடன்பட்டதோ அதை விட சமஸ்க்ருதம் தமிழுக்குக் கடன்பட்டது’ என்று கட்டுரை ஆசிரியரும் ‘தமிழும், சமஸ்கிருதமும் மொழிக்குடும்பத்தில் இரு கண்கள் போன்றவை.இவ்விரு மொழிகளும் நாள் தோறும் மேலும் பல வளர்ச்சிகள் பெற்று மேம்படவேண்டும்’ என்று வாசகரும் கூறியுள்ளார்கள். இதை தமிழகம் தாண்டி எங்காவது சொல்லமுடியுமா? சொன்னால் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை, கருத்திலாவது கொள்வார்களா? இங்கு இதுதான் பிரச்சனை. சமஸ்கிருதத்தின் நிலைக்கு இந்தியா முழுமைக்கும் தகுதிக்கு மீறி(சமஸ்கிருதம் மாபெரும் தகுதியுள்ள மொழியென்றாலும், அதையும் மீறி) வரவேற்பு உள்ளது. ஆனால் தமிழை தமிழகம் தாண்டினால் சமஸ்கிருதத்துடன் ஒப்புநோக்கக் கூட எவருக்கும் மனம் இல்லை. ஆயிரம் இலக்கியங்களோடு, பல்கலை விற்பன்ன நூல்களோடு, சமஸ்க்ருதம் தனித்து ஓங்கி நின்றிருந்தாலும், பிற்காலத்தில் தாங்கள் சார்ந்த தத்துவ வியாக்கனங்களுக்காக நூலின் மூலக் கருத்தை திரித்து, சொற்களின், தொடரின், வாக்கியத்தின் பொருளையே பலவாறாக, பெரும் சமஸ்கிருத அறிஞர்களும் ரிஷிகளும் செய்ய முற்பட்டும், செய்தும், சமஸ்கிருத்தை சாமான்ய மக்களுக்கு குழப்பத்தை தரும் மொழியாக்கினார்கள். உதாரணமாக பாதராயணர் எழுதிய வேதாந்த சூத்திரத்துக்கு சங்கரர், ராமானுஜர் போன்ற பெரும் ஞானிகள் அவரவர் சார்ந்த அத்வைதம், வசிஷ்டாத்வைதம் போன்ற தத்துவங்களுக்கு ஏற்ப வியாக்யானம் எழுதினர். சம்ஸ்கிருத ஞானியான என் தந்தை ஆறுமுகசாஸ்திரிகள் வேடிக்கையாக கூறுவதுபோல, ஒரு அரசன் குற்றம் சாட்டப்பட்டவனை தண்டித்து ‘ அவனை பத்து கச்சை அடிகள் அடித்து தூக்கிலிடுங்கள்’ என்று சொன்னால், குற்றவாளி தனக்கு வேண்டியவனாக இருந்தால், தண்டனையை நிறைவேற்ற வேண்டிய சேனாதிபதி அவனுக்கு பத்து மாலைகள் போட்டு பல்லக்கில் அனுப்பிவிட்டு, பிறகு அரசன் கேட்டால் அரசன் ஆணைக்கு இதுதான் பொருள் என்று கூட விளக்கம் தரலாம் என்ற குழப்ப நிலை வந்தது. அதனால் ஏற்கனவே இத்தகைய குழப்பத்தால் சாமான்ய மக்களிடம் பேச்சு வழக்கை இழந்த சமஸ்கிருதம், அரசமொழி என்ற நிலையயும் கடந்தது. பிறகு எந்த விதத்திலும் பிரச்சனைக்கு இடம் இல்லாத கோயில் அர்ச்சனைகளில் மாத்திரம் நீடிக்கிறது. ஈடு இணை இல்லாத இதிகாசங்கள், இலக்கியங்கள், பற்பல துறை நூல்கள் என தளைத்து நின்ற சமஸ்கிருத்தை, இபபடி ஆளாளுக்கு பெரும் பெரும் ஞானிகள் தங்கள் இஷ்டத்துக்கு ஒரு நூலுக்கு பல வியாக்யானம் எழுதி (அவர்களின் தத்துவங்கள் மேலானவை என்பது வேறு விஷயம், அவர்கள் புதிதாக என்று சொல்லி தங்கள் க்ருத்தை, தத்துவத்தை சொல்லியிருந்தால் பிரச்சனை இருந்திருக்காது. ) மொழியை குழப்பி, இன்று சமஸ்கிருததை வழக்கிலில்லாத மொழியாக்கிவிட்டார்கள். இனி முயற்சி செய்து போராடி வழக்குக்கு கொண்டுவரலாம் என்பது வேறு விஷயம்.

  10. P.S. Raman

    Samskritam has some typical pronunciation and sound patterns , which is difficult for a commonor who knows ONLY Tamil and never had any initiation to other languages .
    Where as Telugu ,Kannda ,Malayalam, and Hindi (almost all other languages of India) have a varnamala similar to Samskritam
    So initiation is a bit difficult to a Tamil ONLY person.
    With perseverance this can be overcome.
    Many Muslim students are learning Sanskrit in North in dian Schools !!
    May be they want to explore the richness of the language.
    If only we learn the language we can appreciate it . It is easy to say it is a dead languge since it is not spoken by many . , but it is rising like a phenix again and all over the world there are people interested in it

  11. saami

    ஒவ்வொரு தமிழனும் சம்ஸ்கிருதமும் படித்தல் அவசியம். ஆதி தமிழின் குழந்தைகள் இன்றைய தமிழும் சம்ஸ்கிருதமும். இரண்டும் அவசியம்.
    சாமி

  12. Thusi

    சமஸ்கிருதம் எப்படி பிராமனர் மொழியானது?
    ஏன் பிராமனர் மந்திரத்தை சமஸ்கிருதத்தில் சொல்கிறார்கள் தமிழில் சொல்லலாமே?

  13. KANNIAPPAN SHANMUGAM

    பார்த்தனுக்கு அன்று பகவான் கண்ணன் செய்த கீதை உபதேசம், பாரில் உள்ள மக்களுக்கு எல்லாம் இன்று பயன்படுகிறது. தாங்கள் பலன் கருதாது திருப்பணி செய்யும் இந்நற்பணிபோல் பலன் கருதாது பணி செய்ய மனிதன் கற்றுக் கொள்ள வேண்டும்.

    கன்னியப்பன் சன்முகம்
    10.08.2020

  14. மவ

    தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் படிக்க படிக்க ஒற்றுமைகள் வேற்றுமைகள் தானே விளங்கும். பொய்கள் உடையும். ஆங்கிலத்துக்கு நெருக்கம் என ஆங்கிலேயர் தொகுக்குகின்றனர். தமிழரோ வேறு என அதே ஆங்கில காலனித்துவ கால பகுப்பை வழிமொழிகின்றனர். உண்மை என்னவென்றால் Triglossic வடிவ பரிணாமத்தில் மூன்றாவது செம்மை வடிவம்தான் என்ற அளவுக்கு ஒற்றுமைகள் உள்ளன. ஆழ அதிகம் படிக்க தானே நிறுவப்படும். இல்லாத து ஆச்சரியம். நான் படித்த அஅளவுக்குக்கூட எந்த மேதையும் படிக்கவில்லையா?

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)