தேசத்தின் மொழி – சமஸ்கிருதம்

‘கடவுள் நினைய கல் ஓங்கு நெடுவரை
வட திசை எல்லை இமயம் ஆக,
தென்அம் குமரியொடு ஆயிடை’

தேசத்தின் பண்பாட்டு ஒருமை சங்ககாலத்திலேயே உணரப்பட்டுவிட்ட ஒன்று. இன்று பாரதம் சின்னாபின்னப்பட்டு சிறுமைப்படாமலும், பல்வேறு இன மொழி மக்கள் ஒருவரை ஒருவர் கொலைவெறி கொண்டு அழிக்காமலும் இருக்க உதவுவது இந்த ஒற்றுமையே. இப்பண்பாட்டு ஒருமையின் வலிமையான நூலிழையாக நம் பன்மை வளங்களை அழியாது இணைக்கிறது சமஸ்கிருதம். வடமொழி என்பதனால் அதை அன்னிய மொழி – நமக்குரியதல்ல என நம் முன்னோர் கருதினர் என்பதற்கு எவ்வித வரலாற்றுச் சான்றுமில்லை.

எங்கெல்லாம் பாரதத்தில் இந்த அடிப்படை ஒருமை அழிக்கப்பட்டதோ, அங்கெல்லாம் இனவெறியும், இனங்களை அழித்தொழித்தலும் நடைபெறுவதை காணலாம். உதாரணமாக திரிபுராவினை எடுத்துக்கொள்வோம். அங்கு ஜமாத்தியாக்களும் வங்காளிகளும் பிற வனவாசிகளும் காலம்காலமாக வாழ்ந்து வந்துள்ள நிலைக்கும், இன்று ஜமாத்தியா வனவாசிகள் தங்கள் கிராமங்களை இழந்து சொந்த நாட்டில் அகதிகளாக இருப்பதற்கும் இடையே நடந்தது என்ன ? ஐரோப்பிய இனவாத அடிப்படையிலான அரசியல் கோட்பாடுகள் மிஷினரிகளால் பரப்பப்பட்டன. ஜமாத்தியாக்கள் தங்கள் இறுதிச்சடங்குகளை கூட செய்யக்கூடாதெனவும், பெண்கள் ‘ஆரியர்களால் ‘ புகுத்தப்பட்ட அடிமைச்சின்னங்களான திலகம், வளையல்கள், பூவைப்பது ஆகியவற்றை நிறுத்தவேண்டுமெனவும் பத்வாக்கள் NLFTயினரால் சுமத்தப்பட்டன.

மிஷினரிகள் ஆரிய இனவாதத்தை தமிழ்நாட்டிலும், பல வனவாசி பிரதேசங்களிலும், எவ்வாறு பயன்படுத்தியுள்ளனர் என்பதும் இதிலெல்லாம் அந்தணர்களை அல்லது ஏதாவது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரை இனரீதியில் ‘மற்றவராக ‘ எவ்வாறு மாற்றிக்காட்டினர் என்பதும் ஆய்ந்து பதிவு செய்யப் படவேண்டிய ஒன்று. இதில் ஒரு பாகம் தான் சமஸ்கிருதம் அன்னிய மொழி என்ற பிரச்சாரம்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கிராமத்து வைத்தியர் கற்கக்கூடிய அளவு இந்த நாட்டு பண்பாட்டோடு ஒன்றிப்போயிருந்த ஒரு மொழி நமக்கு அன்னியமாம். கரிகாலன் போன்ற தமிழ் மன்னர்களால் அவர்கள் குடும்பத்துடன் செய்யப்பட்ட வேத வேள்விகள் அன்னியமாம். ஆனால் வரலாற்றடிப்படையற்ற ஒரு இனவாத கோட்பாட்டின் அடிப்படையில் எழுப்பப்பட்ட போலி தனித்துவத்தை நம் வரலாறென்று நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமாம். சமஸ்கிருதம் அன்னியம் என்னும் எண்ணப்போக்குதான் அன்னியமே ஒழிய சமஸ்கிருதம் அன்னியமல்ல.

தமிழரின் தனிப்பெரும் தெய்வமான முருகப்பெருமானின் திருமுகமே ‘மந்திர விதியின் மரபுளி வழாஅ அந்தணர் வேள்வி ‘ ஏற்குமெனில் வடமொழி தமிழருக்கு அன்னியமானதல்ல என்பதற்கு வேறெந்தச் சான்றும் தேவை இல்லை.

தமிழர் பண்பாட்டில் சமயம் பண்டை காலம் முதல் முக்கிய பகுதி பெற்றிருந்ததல்லவா? அப்பகுதியில் சமஸ்கிருதத்தை அந்நியமாக தமிழ் என்றென்றும் கருதியதில்லை ஏனெனில் வேதநெறியும் சமஸ்கிருதமும் தமிழருடையது தமிழ் பண்பாட்டில் ஒரு பங்கு.

இதோ ஒரு புறப்பாடல்:

“நன்று ஆய்ந்த நீள்நிமிர்சடை
முதுமுதல்வன் வாய்போகாது,
ஒன்று புரிந்த ஈர்-இரண்டின்,
ஆறு உணர்ந்த ஒரு முதுநூல்
இகல் கண்டோர் மிகல் சாய்மார்,
மெய் அன்ன பொய் உணர்ந்து
பொய் ஓராது மெய் கொளீஇ
மூ-ஏழ் துறையும் முட்டு இன்று போகிய
உரைசால் சிறப்பின் உரவோர் மருக!” (புறம் 166:1-9)

வேதநெறிக்கு மாறுபட்டார் வலிமை குன்றும் படியாக, அவர்கள் மெய்போலக் கூறும் பொய் மொழி களை அடையாளம் கண்டு உண்மையை உணர்ந்து வேத வேள்வித்துறைகளில் சிறந்து விளங்கியதாக தமிழ் அரசனான பூஞ்சாற்றுர்க் கௌணியன் விண்ணந்தாயனை வியக்குகிறது புறநானூறு. இது ஆவூர் மூலங்கிழார் பாடல். ஆறு உணர்ந்த ஒரு முதுநூல் – ஆறு அங்கங்களோடு திகழும் நான்மறை என்பது இதன் பொருள். ( ‘அமர ஓர் அங்கம் ஆறும் வேதம் ஓர் நான்கும் ‘ என்பது ஆழ்வார் மொழி.)

யானையைப் பழக்கும் தமிழக பாகர் சமஸ்கிருத மொழியில் யானையைப் பழக்கியது குறித்து கூறுகிறது முல்லைப்பாட்டு.

தேம் படு கவுள சிறு கண் யானை
ஓங்கு நிலைக் கரும்பொடு, கதிர் மிடைந்து யாத்த,
வயல் விளை, இன் குளகு உண்ணாது, நுதல் துடைத்து,
அயில் நுனை மருப்பின் தம் கையிடைக் கொண்டென,
கவை முட் கருவியின், வடமொழி பயிற்றி… – முல்லைப்பாட்டு (35-36).

நமது ஆரிய-திராவிட இனவாதக் கோட்பாடு உண்மையாக இருப்பின் குதிரையைப் பயிற்றுவிப்பவர்கள் அல்லவா சமஸ்கிருத மொழி பயன்படுத்த வேண்டும்? இந்த மண்ணிற்கே உரிய யானையை அதுவும் தமிழ் மன்னர்களுக்கு மிகவும் போர்களத்தில் தேவைப்படும் ஒரு படையை பயிற்றுவிக்க அந்நிய மொழியையா பயன் படுத்துவார்கள்? செங்காட்டங்குடி கிராமத்து அந்தணனல்லாத இளைஞனுக்கும் சம்ஸ்கிருதம் பயில முடிந்திருக்கிறது. தமிழரசர்களின் யானைப் பாகர்களுக்கும் அவர்கள் தொழிலுக்கேற்ற அளவில் சம்ஸ்கிருதம் பயில முடிந்திருக்கிறது.

இராமாயணத்தை ‘தெரிந்து’ வைத்துக் கொள்ள செவிவழி அறிவு போதும் தான். ஆனால் கம்ப இராமாயணம் போன்ற காவியத்தை படைக்க சமஸ்கிருத மூலத்தை படிக்கவே செய்யாமல் செவிவழி இராமகாதை அறிவின் மூலம் முயற்சித்தார் என்று வாதத்திற்காக கூட கம்ப நாட்டாழ்வாரை கீழ்மைப்படுத்த வேண்டாமே.

பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் பாரதி ‘வருகின்ற ஹிந்துஸ்தான’த்தைப் பாடுவார்,

“மெய்மை கொண்ட நூலையே – அன்போடு
வேதமென்று போற்றுவாய் வா வா வா
பொய்மை கூறலஞ்சுவாய் வா வா வா
பொய்மை நூல்களெற்றுவாய் வா வா வா”

புறநானூறு முதல் பாரதி காலம் வரை எதை தமிழ் சமுதாயம் அந்நியமென உணர்ந்தது என்பது புரியும். யாரும் வணங்கிடும் தெய்வம் பொருள் யாவினும் நின்றிடும் தெய்வம் பாருக்குள்ளே தெய்வம் ஒன்று என பாரதி கூறும் சமய ஒருமை ‘ஏகம் சத் விப்ரா பகுதா வதந்தி ‘ எனும் வேத சிந்தனை மரபிலிருந்தே நம் அனைவருள்ளும் ஊறிப்போயிருக்கும் விஷயம்.

சமஸ்கிருதத்தில் உள்ள சில நூல்களின் அடிப்படையில் சாதியம் நிலைபெற்றிருக்கலாம். மேலும் சமஸ்கிருதத்தில் உள்ள சில நூல்கள் கூட சாதியத்தை உருவாக்கியிருக்கலாம். ஆனால் சமஸ்கிருத அறிவு கொண்டு சாதியம் வேரறுக்கப்பட முடியும் என்பதற்கான சிறந்த உதாரணங்களாக நம்முன் திகழ்பவர்கள் டாக்டர்.அம்பேத்காரும் ஸ்ரீ நாராயண குருவும், சுவாமி விவேகானந்தரும். மாறாக சமஸ்கிருத வெறுப்பை வைத்து சமுதாய முன்னேற்ற பாவ்லாக்கள் காட்டி பிழைப்பு நடத்தும் தெருக்கூத்து கும்பல்களால் ஏற்படும் இறுதிவிளைவு திண்ணிய நிகழ்வுகள்தான் என்பதும் உண்மை.

டாக்டர் அம்பேத்கர், சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ நாராயணகுரு ஆகிய மூவரும் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வந்தவர்கள். இவர்களில் டாக்டர் அம்பேத்கரும், ஸ்ரீ நாராயண குருவும் சாதியத்தின் விளைவுகளை மிகக்கடுமையாக தங்கள் வாழ்வில் அனுபவித்தவர்கள். இம்மூவருமே பாரத தத்துவ மரபுகளையும், வரலாற்றையும் நன்கு ஆராய்ந்தறிந்தவர்கள். இவர்களது பாரத சமுதாயம் மற்றும் மரபுகள் குறித்த ஆழ்ந்த அறிவின் அடிப்படையில் சமுதாய முன்னேற்றத்தில் இவர்கள் வடமொழிக்கு அளித்த ஏற்பு குறிப்பிடத்தக்க விஷயம்.

மிகத்தெளிவாகவே சுவாமி விவேகானந்தர், சமூக நீதிக்கான வழிமுறையாக சமஸ்கிருதம் படிப்பதை முன்வைக்கிறார். தாழ்த்தப்பட்ட அந்தணரல்லாதவர்களுக்கு அவர் கூறுகிறார், ‘சமஸ்கிருதத்தை நீங்கள் படியுங்கள் ; உங்களை யார் தடுப்பார்கள் ? அனைத்து சாதியினருக்கும் சமஸ்கிருதத்தை கற்றுக்கொடுங்கள். அதுவே நம் மக்களை உயர்த்துவதற்கான நிச்சயமான வழி. ‘

ஸ்ரீ நாராயணகுருவின் பிரத்யட்ச உதாரணம் நம்முன் உள்ளது. நினைத்துப்பாருங்கள். ஒரு மிகவும் தாழ்த்தப்பட்டு தம் சாதியின் பெயரால் மிகவும் அவமானப்படுத்தப்பட்ட ஒரு மேதை உள்ளம் டாக்டர்.அம்பேத்கரது. இந்த தேசத்தில் சமுதாய தாழ்விற்கான காரணங்களை அக்குவேறு ஆணிவேறாக ஆய்ந்தறிந்தவர் அவர். ஹிந்து மதத்தின் மீது மிகக்கடுமையான விமரிசனங்களை வைத்தவர் டாக்டர்.அம்பேத்கர். புராணங்களை மிகக் கேவலமானவையாக காட்டி அவர் எழுதிய எழுத்துக்களை நாம் அனைவரும் அறிவோம். அதே டாக்டர்.அம்பேத்கர் பாராளுமன்றத்தில் சட்ட அமைச்சராகவும், அதற்கு வெளியே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் போராளியாகவும் சமஸ்கிருதத்தை ஏன் ஆட்சிமொழியாக்க வேண்டுமென்றார் ?

அம்பேத்கர் சமஸ்கிருதம் பாரதத்தின் தேசியமொழியாக வேண்டுமென கூறியது பாரத பாராளுமன்றத்தில் ஆகும். அவர் மிகத்தெளிவாக சட்ட அமைச்சர் என்ற ரீதியில் நம் நாட்டின் சமூக வரலாற்று காரணிகளை கணக்கிலெடுத்துக் கொண்டு நம் சட்டப்பிரிவின் 310 A.(1) “இந்திய யூனியனின் தேசிய மொழியாக சமஸ்கிருதம் இருக்க வேண்டும்.” என அமைக்கப்பட வேண்டும், எனக் கூறினார். (சண்டே ஹிந்துஸ்தான் ஸ்டண்டர்ட் 11 செப்டம்பர் 1949 நியூ டெல்லி பதிப்பு – அம்பேத்கர் பேட்டியுடன்) இதற்கு முன்பாக இக்கருத்தையே அவர் 10-செப்டம்பர்-1949 இல் நடந்த அகில இந்திய ஷெட்யூல்ட் ஜாதி பெடரேஷனின் ‘எக்ஸிக்யூட்டிவ் கமிட்டி’ கூட்டத்திலும் வலியுறுத்தினார். ஆக பாரதத்தின் சட்ட அமைச்சர் என்ற முறையிலும், தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்கு உழைத்த சமுதாய சீரமைப்பாளர் மற்றும் போராளி என்ற முறையிலும் அவர் சமஸ்கிருதம் பாரதத்தின் தேசிய மொழியாக வேண்டும் எனக் கூறியுள்ளார்.

பாரத தேச ஒற்றுமையின் அடையாளமாகவும் அதன் உள்ளீடாகவும் சமஸ்கிருதம் விளங்குகிறது” என்று கூறிய K.R.நாராயணன் பிறப்பால் அந்தணரல்ல. அல்லது “சம்ஸ்கிருதம் ஒரு இனத்திற்கோ ஒரு பிராந்தியத்திற்கோ சொந்தமான மொழியல்ல மாறாக அனைத்து பாரதத்திற்கும் பொதுவான மொழி” என்று கூறிய பக்ருதீன் அலி அகமது நிச்சயமாக பிறப்பால் அந்தணரல்ல.

சமஸ்க்ருதத்தின் ஆதிகவி வேடரான வால்மீகி முனிவர். அதன் ஆகச்சிறந்த மகாகவி காளிதாசன் அந்தணன் அல்ல. மீனவப்பெண்ணின் மகனான வியாசபகவானே அம்மொழியில் மறைகளை தொகுத்தளித்தவர். சமஸ்கிருதம் இந்த தேசத்தின் மொழி. சமஸ்கிருதம் இந்த தேசத்தில் அனைவரும் சொந்தம் கொண்டாட முடிந்த ஆனால் ஒருவரும் ஏகபோக உரிமை கொண்டாட முடியாத ஒரு மொழி என்ற முறையில் அதன் கலாச்சார ஒருமைப்பாட்டு முக்கியத்துவம் புலப்படும்.

[நன்றி: அரவிந்தன் நீலகண்டன் அவர்கள் திண்ணை.காம் தளத்தில் எழுதியவற்றிலிருந்து தொகுக்கப் பட்டது]

19 Comments தேசத்தின் மொழி – சமஸ்கிருதம்

 1. snkm

  உண்மை! சம்ஸ்க்ருதம் பாரதத்தின் மொழி மட்டுமல்ல! உலகின் மொழி என சொல்ல தகுதி வாய்த்தது! இதை இந்தியர்கள் அனைவரும் உணர வேண்டும்!

 2. Amy

  உண்மை! சம்ஸ்க்ருதம் பாரதத்தின் மொழி மட்டுமல்ல! உலகின் மொழி என சொல்ல தகுதி வாய்த்தது! இதை இந்தியர்கள் அனைவரும் உணர வேண்டும்!

 3. Jeyananth

  சமஸ்கிருதத்தை நீங்கள் படியுங்கள் ; உங்களை யார் தடுப்பார்கள் ? அனைத்து சாதியினருக்கும் சமஸ்கிருதத்தை கற்றுக்கொடுங்கள். அதுவே நம் மக்களை உயர்த்துவதற்கான நிச்சயமான வழி.

 4. Jeyananth

  சமஸ்கிருதத்தை நீங்கள் படியுங்கள் ; உங்களை யார் தடுப்பார்கள் ? அனைத்து சாதியினருக்கும் சமஸ்கிருதத்தை கற்றுக்கொடுங்கள். அதுவே நம் மக்களை உயர்த்துவதற்கான நிச்சயமான வழி. ‘

 5. சு பாலச்சந்திரன்

  சு பாலச்சந்திரன்

  தேசத்தின் மொழி சம்ஸ்க்ருதம் என்ற இந்த கட்டுரை அற்புதம்.ஆனால் இணைப்பு மொழி என்பது என்றுமே கமர்ஷியல் வால்யு அதாவது வர்த்தக மதிப்பு உள்ள மொழியாக இருக்கவேண்டும். ஆனால் சம்ஸ்க்ருதம் என்பது இறைஅருள் பற்றிய விஷயங்களுக்கு மட்டுமே நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை அன்றாட வாழ்க்கையில் பிற மொழிகளுடன் கலந்து எல்லாத்துறைகளிலும் பயன் படுத்தலாமே தவிர இந்தி, மராட்டி, வங்காளி, தெலுங்கு, தமிழ் ஆகிய ஐந்து மொழிகளுமே இத்திரு நாட்டில் தொடர்புமொழியாக இருக்க பெருமளவு தகுதிகொண்டவை ஆகும். தொடர்பு மொழி என்பது ஒரே ஒரு மொழியாக இருக்கமுடியாது. சுமார் 600 மொழிகளுக்கு மேல் உள்ள நம் நாட்டில் அறுநூறு மொழிகளையும் தொடர்பு மொழியாக ஆக்குவது நடைமுறை சாத்தியமில்லாத விஷயம் ஆகும். எனவே அதிக மக்கள் பயன்படுத்தும் மேற்சொன்ன ஐந்து மொழிகளுடன் சமஸ்கிருதம் ஒரு அற்புதமான ஆறாவது இணைப்பு மொழியாக செயலாற்ற முடியும்.

  சமஸ்கிருதத்தில் உள்ள அளவு உண்மையான பகுத்தறிவு கருத்துக்கள் பகுத்தறிவு என்ற பெயரில் மோசடிவியாபாரம் செய்துவரும் நண்பர்களிடம் கூட கிடையாது என்பது பெருமதிப்பிற்குரிய சுப்பு அவர்கள் எழுதிய கட்டுரைகளில் மிக தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளது. ஆனால் சமஸ்கிருதத்தில் அன்றாட வாழ்வில் நாம் மிகவும் இன்று பயன்படுத்தும் கணக்கு, இயற்பியல் ( பிசிக்ஸ்), வேதியியல்( கெமிஸ்ட்ரி), வணிகவியல்(காமர்சு), கம்ப்யுட்டர் சயின்சு ( கணிப்பொறியியல்), உயிரியல்(பயாலஜி) ஆகிய முக்கிய துறைகளின் நூல்கள் சமஸ்கிருதத்தில் ஏராளம் எழுதப்படவேண்டும். பாஸ் கராச்சாரியார் எழுதிய புத்தகமும், ஆயுர்வேதம் தொடர்பான மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை நூல்களும் அந்தக்காலத்தில் சமஸ்கிருத மொழிக்கு பெருமை சேர்த்தன. அதே போன்று இப்போதும் பல்துறை நூல்களும் சமஸ்கிருதத்தில் அணிவகுக்க செய்தால் மொழிவளர்ச்சி மேலும் வலுப்பெறும். ஆனாலும் சமஸ்கிருதம் யாருக்கும் தாய் மொழியன்று. அது மிக பலம் பொருந்திய புனிதமான இணைப்பு மொழியாக செயலாற்றும் நாள் வெகு தொலைவில் இல்லை.

  சமஸ்கிருதம் யாருக்கும் தாய்மொழியாக இல்லாத போதிலும், துறை சொற்கள் ஏராளம் உள்ள சக்தி வாய்ந்த மொழியாகும்.காலத்தால் எது மூத்த மொழி என்று விவாதிப்பதில் ஒரு பலனும் இல்லை. சமஸ்கிருதத்தைவிட காலத்தால் மூத்த பிராகிருதம் இன்று உபயோகத்தில் இல்லை. பிராகிருதமே செம்மைப்படுத்தப்பட்டு சமஸ்கிருதம் ஆகியுள்ளது. எனவே கால ஆராய்ச்சியை விடுத்து, கருத்து ஆராய்ச்சியில் இறங்குவோமாக. நல்ல கருத்துக்களை எங்கிருந்து வந்தாலும் ஏற்போம். சமஸ்கிருத நூல்களில் ஏராளமான நல்ல கருத்துக்கள் உள்ளன. அவற்றை நாம் எல்லா மொழிகளிலும், மொழிமாற்றம் செய்வோம்.அவ்வாறுசெய்தால் நம் நாடும், மனித இனமும் நல்ல மலர்ச்சி பெரும், இது உறுதி.

 6. anant kulkarni

  इदं स्थलं संस्कृतस्य प्रचारार्थम अतीव उपयुक्तम अस्ति .निर्मातारः धन्यावादार्हा .
  अस्य प्रशंसा चा अनुकरनम भवतु . .

 7. ponnan s

  one language is not substitute other languages……. because your mother is not my mother……… most of them are learn their language through their mother…. so it is not possible to one language become world language

 8. vasnthan

  கடவுள் தந்த அமுத மொழி கடவுளுக்காக பயன்படுத்தகூட விடாமல் காட்டுமிராண்டிகள் கத்துகிறார்கள் விளங்கினால்தான் நல்லது.என்றால் மருத்துவரிடம் மருந்து எடுப்பவர் விளங்கியா மாத்திரை சாப்பிடுகிறார் மந்திரம் மருந்து போன்றது காதினால் சாப்பிட வேண்டியதுதான் நல்ல பலன் உண்டு.

 9. Arunmozhli

  மகாகவி பாரதியார் அவர்கள் காசியில் வேதம் கற்றவர்.அவர் சமஸ்க்ருதத்தை தமிழ் மொழியின் திரிபு என்றுதான் கூறி உள்ளார்.நன்கு ஆராய்ந்தால் இது உண்மை என்று தெரிய வரும் .நான் மொழி இயல் அறிஞர் அல்ல ஆனால் என் சிறிய அறிவுக்கு எட்டிய வரை சில எடுத்துக்காட்டுகளை கூற இயலும்.

  எ.கா வட மொழியில் கல்வி என்பதன் சொல் வித்யா என்று சொல்லபடுகிறது.ஆனால் இது வித்தை என்ற தமிழ் சொல்லின் மிகவும் மருவிய வடிவம் தான்.தமிழில் வித்தை என்பதன் பொருள் கலை அல்லது நுட்பம் அல்லது உத்தி என்று வழங்கப்படுகிறது.வித்தை என்ற சொல் தமிழ் நாட்டு கிராமங்களில் மிக இயல்பாக வழங்கப்படுகிற ஒரு சொல் ஆகும்.வித்தை கற்றவன்,வித்தை அறிந்தவன் வியனயதோடு இருக்க வேண்டும் என்று கூறுவார்கள்.தமிழில் கல்விக்கூடம் என்பதை வித்தை ஆலயம் என்றும் கூறலாம் அதுவே வட மொழியில் வித்யாலயா என்று மருவி கூறப்படுகிறது.
  பிரம்மம் என்ற வட சொல்லின் பொருள் பரவிய அல்லது வீங்கிய என்று கூறப்படுகிறது.இதுவும் தமிழின் மருவிய வடிவமே.தமிழில் விரவல் அல்லது விரவுதல் என்றால் பரவுதல் என்று பொருள்.கடவுள் மட்டுமே எல்லா இடங்களிலும் விரவி இருப்பார்.எனவே அவரை எங்கும் விரவியவன் என்ற பொருளில் விரமன் என்று
  கூறலாம்.இதுவே வட மொழியில் பிரம்மன் என்று கூறப்படுகிறது. தமிழில் வ என்ற எழுத்தில் துவங்கும் சொற்கள் வடக்கே செல்லும் போது மருவி ப வாக ஒலிக்கிறது .இது போல் பல சொற்கள் கூறமுடியும்

  பிரம்மன்ண்டம்-விரமாண்டம் -விரவிய அண்டம்.விரமனை உணர்ந்தவன் விரமனன்-பிராமனன்

  ஸ்ரீ என்ற வடமொழி சொல் செல்வம் என்று பொருள்.இது தமிழில் சீர் என்ற சொல்லின் மருவிய வடிவமே.

  சீர் என்றால் தமிழில் செல்வம் என்று பொருள். சீர் மல்கும் ஆய்பாடி செல்வசிருமீர்கள் என்பது திருப்பாவை
  இது போல் இன்னும் பல

 10. priyavarshini

  மிக மிக அருமை இக்கட்டுரையை தாங்கள் எல்லா மொழி நாளிதழ்களில் பிரசுரித்தால் அனனவரும் படிக்கும் வாய்ப்பு கிடைக்குமே சமஸ்கிருதத்தின் அருமை உணர்வார்களே

 11. priyavarshini

  தமிழ் போலவே சமஸ்கிருதமும் பண்பட்ட மொழி இந்தியாவின் பண்பட்ட தொன்மையான மொழிகள் தமிழும் சமஸ்கிருதமும்

 12. குமார்

  பாரதத்தின் மொழி சமஸ்கிருதம் என்றாலும் அது இணைப்புமொழியாக முடியாது

  மேலும் சமஸ்கிருதம் மக்கள் பேசும் மொழியல்ல என்பது என் கருத்து

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)