சம்ஸ்க்ருதம் சாமானியர்களால் பேசப் பட்டதா?

இந்தோ-ஆரிய மொழிக்குடும்பத்தில் லத்தீன், கிரேக்கம் ஆகிய மற்ற மொழிகள் பேச்சு மொழிகள் எனும் போது, சம்ஸ்க்ருதம் மட்டும் ஏன் பேச்சு மொழியாக இருக்காது என்று நினைக்க வேண்டும்? சம்ஸ்க்ருதம் ஒரு நாளும் பேச்சு மொழியாக இருந்ததில்லை எனில், மொழியியலாளர்கள் அதனை செயற்கை மொழி கூட்டத்துடன் சேர்த்திருப்பர். ஒரே ஒரு நபரின் முயற்சியில் ஒரு மொழி உருவாக்கப்பட்டால் தான் அது செயற்கை மொழி எனப்படும். எஸ்பெரன்டோ அப்படி ஒருவரின் முயற்சியில் உருவானது; சம்ஸ்க்ருதம் அப்படி அல்ல. சம்ஸ்க்ருத இலக்கியங்கள் அனைத்திலுமே அது ஒரே ஒரு மனிதரால் உருவாக்கப் பட்டது என்ற சிறு குறிப்பு கூட கிடையாது.

சம்ஸ்க்ருதத்துக்கு பேச்சுமொழியின் அத்தனை அம்சங்களும் உண்டு. எல்லா இயற்கையான மொழிகளிலும், வார்த்தை அமைப்புகளில் மாறுதல், சொற்களின் அர்த்தத்தில் வேறுபாடுகள், உச்சரிப்பில் மாறுதல், கால, தேச, சூழ்நிலைகளுக்கு ஏற்ப சொற்களின் பயன்பாட்டில் அர்த்தங்கள் மாறுபடுதல் ஆகியவை ஏற்படும். சம்ஸ்க்ருதமும் இந்த பொதுவான அம்சத்தில் இருந்து மாறுபட்டதல்ல. வேதத்தின் சம்ஸ்க்ருத மொழி மிகவும் பழமையானது. பிற்காலத்து வேத இலக்கியங்களில் – ப்ராம்மணம் என்று சொல்லக் கூடியவற்றில் சம்ஸ்க்ருத பாஷை ஒரு சில பழமையான சொல் வடிவங்களைத் தவிர்த்துப் பார்த்தால் முற்றிலும் மாறுபாடுகள் பலவற்றை அடைந்துள்ளது.

ராமாயணம் செவ்வியல் அல்லது ஒரு வித நவீன சம்ஸ்க்ருதத்தில் அமைந்துள்ளது. பாஸர் போன்ற மகாகவிகள் தமது படைப்பூக்கத்துக்கு ஏற்றவாறு இம்மொழியை கையாண்டிருக்கின்றனர். பாணினி தான் வாழ்ந்த காலத்தில் உள்ள சம்ஸ்க்ருத மொழியின் கூறுகளை பதிவு செய்துள்ளார். காலப்போக்கில் சில மாறுதல்களும் ஏற்பட்டுள்ளன. இவற்றை பாணினிக்குப் பின் வந்த காத்யாயனர் பதிவு செய்துள்ளார். அவை வார்த்திகம் என்று அழைக்கப்படுகின்றது. இவ்விருவரின் (பாணினி, காத்யாயனர்) அஷ்டாத்யாயி, வார்த்திகம் ஆகிய நூல்களின் ஆராய்ச்சியாளராகவும், விமர்சகராகவும் வந்த பதஞ்சலி, சம்ஸ்க்ருதம் தேசத்தின் வெவ்வேறு பகுதிகளில் கொண்டிருந்த பல்வேறு மாறுபாடுகளையும் கொண்டிருந்ததற்கு சான்றுகள் அளிக்கிறார்.

விவசாயம், தானியங்கள், மூலிகைகள், ஊர் நிர்வாகம், நம்பிக்கைகள், வாழும் உயிர்கள்/பறவைகள்/மனிதர்கள்/விலங்குகள், எலும்பு-மூட்டு, வாத்தியக் கருவிகள், நோய்கள், மருத்துவம், மரங்கள், புதர்கள், தாவரங்கள்,அன்றாட சமையல் பாத்திரங்கள், வீட்டு வேலை கருவிகள், போர்க் கருவிகள், பதவிகள், வியாபார கொடுக்கல் வாங்கலகள், மனித இயல்பைக் குறிக்கும் உரிச்சொற்கள் இப்படிப் பலவிதமான சம்ஸ்க்ருத சொற்கள், இம்மொழி  மக்களால் சரளமாக பேசப்பட்ட ஒரு மொழியாக இருந்ததற்கு சான்று பகர்கின்றன. ஆகையால் அறிஞர்கள் தமது ஆய்வறிக்கைகள் எழுத மட்டுமே சம்ஸ்க்ருதம் பயன்பட்டது என்று எண்ணுவது தவறு.

சம்ஸ்க்ருதத்தில் எத்தனையோ சாத்திரங்கள் இருப்பது, அம்மொழி பேச்சு மொழியாக இருந்ததை மறுதலிப்பது ஆகாது. தருக்கம், தத்துவம், இறையியல், அழகியல், இலக்கணமும் சேர்த்து பல துறைகளில் ஆங்கிலம் கூட ஆயிரம் ஆயிரம் புத்தகங்களை கொண்டிருக்கிறது. ஆகையால் தைரியமாக ஆங்கிலம் அறிவாளிகளின் மொழி, அது இலக்கியங்களுக்கான மொழி என்று கூறி விட முடியும். அப்படியானால் ஆங்கிலம் எப்போதும் பேச்சு மொழியாக இருந்ததில்லை. இப்படிச் சொல்வது எவ்வளவு முட்டாள்தனம்!

பாலி (பௌத்த மதத்தின் ஏறக்குறைய எல்லா நூல்களுமே இம்மொழியில் எழுதப் பட்டன), ப்ராக்ருதம் (ஜைன/சமண மத இலக்கியங்கள் இம்மொழியில் பெரும்பாலும் எழுதப் பட்டன) இவை இரண்டு மொழிகளிலும் ஏராளமான தத்துவ, தருக்க நூல்கள் உள்ளன. அதனால் பாலி, ப்ராக்ருதம் கூட பேச்சு மொழியில்லை என்று முடிவு கட்ட முடியுமா?

சம்ஸ்க்ருதத்தில் பிரபலமான கதைகள் ஆயிரக் கணக்கில் உள்ளன. சிறுவர்களுக்கான சம்ஸ்க்ருத மொழிக் கதைகள் என்ன சொல்கின்றன? குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் (டித்த (डित्थ) – யானை பொம்மை) பற்றிய பெயர்கள் ஏன் இருக்கவேண்டும்? நோய்கள், மருத்துவம், யானை, குதிரை போன்ற விலங்குகளுக்கான சிறப்பு மருத்துவம் ஆகியவை சம்ஸ்க்ருதத்தில் ஏன் எழுதப் படவேண்டும்? இயல், இசை, நாடக நுணுக்கங்கள், மல்யுத்தம், ஒவியம் வரைதல், சிற்பம், கட்டிடக் கலை ஆகியவை சமஸ்க்ருதத்தில் பெருமளவு இருக்கக் காரணம் என்ன? வீட்டிலேயே வாசனை திரவியங்கள் தயாரிப்பது ஏன் சமஸ்க்ருதத்தில் விவரிக்கப் பட வேண்டும்?

பார்க்கப் போனால், ராமாயண மகாபாரத இதிகாசங்களே கிராமிய கதை இலக்கியங்களில் இருந்து எழுந்தவைதான். ராமாயணத்திலே தெளிவாக இருக்கிறது – இரு பாடகர்கள் மக்களின் இன்பத்துக்காக ராமாயணத்தை பாடிச் சென்றார்கள் என்று. சாதாரண மக்களின் மொழியாக சம்ஸ்க்ருதம் இருந்தது என்பது தெளிவு.

தான தருமங்களை பதிவு சம்ஸ்க்ருதத்தில் செய்பவர்கள், இது போல எதிர்காலத்தில் சமஸ்க்ருதம் பேச்சு மொழியா என்ற கேள்வி எழும் என்றே ஐயம் கொள்ளவில்லை (சம்ஸ்க்ருதத்தில் தான் பதிவு செய்துள்ளனர்). நீதி மன்றங்களில், வாதி – பிரதிவாதிகளின் வழக்குகளை சம்ஸ்க்ருதத்தில் பதிவு செய்யும் போது, அந்நாளைய அதிகாரிகள் சமஸ்க்ருதம் பேச்சு மொழியா என்று கேள்வி எழுப்பவில்லை. தர்ம சாத்திரங்களில் தெளிவாகவே வழக்குப் பதிவில் இலக்கணப் பிழைகளை கருத்தில் கொள்ளக் கூடாது என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இது சாமானியர்களின் மொழியாக சம்ஸ்க்ருதம் பல்வேறு விதங்களில் இருந்தது, அவையெல்லாம் இலக்கணப் படி இருக்கவில்லை என்பதை தெரிவிக்கிறது. பழமொழிகள், சொற்றொடர்கள் பெரும் அளவில் இருப்பதே சம்ஸ்க்ருதம் ஒரு பேச்சு மொழி என்பதற்கு பெரிய ஆதாரம்.

அப்படியெனில் சம்ஸ்க்ருதம் இப்போது ஏனைய மற்ற இந்திய மொழிகள் போல ஏன் பேசப்படும் மொழியாக, வழக்கத்தில் உள்ள மொழியாக இல்லை?

பாணினி, பதஞ்சலி ஆகியோர் வாழ்ந்த காலத்துக்குப் பிறகு, நாளடைவில் சம்ஸ்க்ருத மொழியில் பல்வேறு பிராந்திய வேறுபாடுகள் எழுந்தன. கல்விமான்கள், அரச வம்சங்கள் ஆகியவை சம்ஸ்க்ருதத்தில் உரையாடி, புழங்கி வந்தாலும் சாமானிய மக்கள், தமது அன்றாட பேச்சில் வட்டார வழக்குகளை பயன்படுத்தினர்.

உதாரணமாக காளிதாசனின் குமாரசம்பவம் காவியத்தில், சிவபெருமான் – பார்வதி தேவி திருமணத்தின் போது, தேவர்களும், ரிஷிகளும் மணமகனை சம்ஸ்க்ருதத்தில் வாழ்த்துக்கள் கூறி வரவேற்றதாகவும், பணிப்பெண்கள் வட்டாரவழக்குகளில் பேசி மணப்பெண்ணை மகிழ்வித்ததாகவும் குறிப்பிடுகிறார். அதே போல சாகுந்தலம் நாடகத்தில், சகுந்தலை சுத்த சம்ஸ்க்ருதத்தில் பேசுவதில்லை – பிராக்ருதம் அல்லது அபப்ரம்சா மொழியில் பேசுவதாக அமைத்திருக்கிறார்.

நாளடைவில் வெவ்வேறு விதமான சம்ஸ்க்ருத/ப்ராக்ருத மொழிகளில் மாறுபாடுகள்/திரிபுகள் உருவாகின. இவற்றில் பலவும் தான் இன்று வடஇந்தியாவில் பல்வேறு மொழிகளாக இருந்து வருகின்றன. ஸ்வர்ணசேனியும் மஹாராஷ்ட்ரியும் சேர்ந்து இன்றைக்கு பேசப் படுகிற மராத்தி மொழியானது. மாகதி – அர்த்தமாகதி (Magadhi & Ardha-Magadhi) வழியாக ஒரியாவும், பெங்காலி மொழியும் தோன்றின. அவதி – மைதிலி (Avadhi & Mythili) ஆகிய மொழிகளில் இருந்து நேபாளி, தொடக்க கால ஹிந்தி மொழி தோன்றியது. கூர்ஜரியும், ஸௌராஷ்ட்ர மொழியும் சேர்ந்து குஜராத்தி மொழியானது.

இவ்வாறு பல்வேறு வட்டார மொழிகள் தோன்றிய பின்னால் சம்ஸ்க்ருதம் சாமான்யர்களால் பேசப் படுவது குறைந்து விட்டது. அதன் பின்னாலும் கூட பல காலம், கலை – இலக்கியம் – அறிவியல் ஆகியவற்றில் சம்ஸ்க்ருதம் முக்கிய இடம் வகித்தது. சம்ஸ்க்ருதத்தில் இருந்து வந்த சொற்கள் எல்லா இந்திய மொழிகளிலும் – திராவிட மொழிகளில் கூட – கலந்து விட்டன. சம்ஸ்க்ருத மொழியில் தோன்றிய பல  பழமொழிகள், சொலவடைகளை எல்லா இந்திய மொழிகளிலும் காண முடிகிறது. அந்த வகையில் சம்ஸ்க்ருதத்தின் பயன்பாடு இந்திய நாவிலிருந்து இன்னும் பிரிந்து விடவில்லை.

(நன்றி: திரு. ஜகன்னாதர்)

7 Comments சம்ஸ்க்ருதம் சாமானியர்களால் பேசப் பட்டதா?

 1. அத்விகா

  சமஸ்கிருதம் தொன்மையில் சிறப்பு பெறுவதைக்காட்டிலும், அதன் அமைப்பு ஒரு அற்புதம் என்பதால் , இந்த கணிப்பொறி யுகத்தில் , கணிப்பொறிக்கு மிக மிக ஏற்ற மொழி என்று தக்கோரால் சான்றளிக்கப்பட்டு சிறப்பிக்கப்படுகிறது. பள்ளியில் இந்தியும், ஆங்கிலமும், தமிழும் பயின்ற எனக்கு சமஸ்கிருதம் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் சுவாமி விவேகானந்தர் சமஸ்கிருதம் படிப்பதன் முக்கியத்துவத்தை பற்றி சொல்லியுள்ள கருத்தை, ராமகிருஷ்ண மடத்தின் வெளியீடுகள் வாயிலாக படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னரே சமஸ்கிருதம் பயின்றேன், ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தனி சிறப்பு உண்டு. ஆனால் சமஸ்கிருதம் அனைத்து மொழிகளிலும் உள்ள சிறப்பு அம்சங்களை இணைத்த இணைப்பு பாலமாக உள்ளது.
  தனித்து பேசும் மொழியாக சமஸ்கிருதம் என்றும் வர வாய்ப்பு இல்லை. ஆனால், சமஸ்கிருதம் பிற மொழிகள் வாயிலாக என்றுமே தன் தாக்கத்தை உணரச்செய்யும்.

  சமஸ்கிருதம் பிற மொழிகளிலிருந்து ஏராளம் பெற்றுக்கொண்டு தானும் வளர்ந்து, பிற மொழிக்குடும்பங்களுக்கும் மிக அதிகமாக வழங்கி , பிற மொழிகளையும் வளப்படுத்தி உள்ளது என்பதே உண்மை. இன்றைய இளைய தலைமுறைக்கு சமஸ்கிருத கல்வி இல்லை எனிலும், எதிர்காலத்தில் சமஸ்கிருத கல்வி பெறும் சூழ்நிலை உருவாகும். அனைவரும் சமஸ்கிருதம் படித்து மகிழ்வர். இது உறுதி.

 2. T.Mayoorakiri sharma

  வட்டார வழக்குகளுக்கும் கொச்சைக்கும் சம்ஸ்கிருதத்தில் இடமுண்டா? இல்லையா? சாமான்யர்களால் பேசப்பட்டது என்று நிறுவ வேண்டும் என்றால் இருக்கிறது என்று சொல்ல வேண்டும். ஆனால், அப்படி கொச்சைகள் உள்வாங்கப் பட்டால் அது சம்ஸ்கிருதமல்ல.. அப்படி உள் வந்து விட்டால் அது பிராகிருதம் அல்லது பாளி போல ஆகி விடும் என்றும் சொல்கிறார்களே?

  தொலைக் காட்சி, கணனி, மின்விளக்கு, மின் விசிறி, புகைவண்டி போன்ற நவீன கருவிகளுக்கு சம்ஸ்கிருத பதங்கள் உருவாக்கப்பட்டுள்ளனவா..? என்று அறியவும் ஆவலாயுள்ளேன்.. அவற்றை எங்கு அறியலாம்..தூர தர்ஸந ஸாதன அல்லது ரூபவாஹினி என்று தொலைக் காட்சியைச் சொல்லலாமா? அதே போல வாயு வாஹினி என்று மின் விசிறிக்கு பெயர் சொல்லலாமா?

 3. संस्कृतप्रिय:

  என்னுடைய அபிப்ராயம் இதில் என்னவெனில், இப்போது எப்படி பேச்சுத் தமிழ், எழுத்துத் தமிழ் என்று இரு வகை இருக்கிறதோ அதைப் போல சம்ஸ்க்ருதத்திலும் எழுத்து முறை கடுமையாக இலக்கண விதிகளை அனுசரித்தும், பேச்சு வழக்கு சற்றே நெகிழ்ந்தும் இருக்க வேண்டும் என்றே எண்ணுகிறேன்.

 4. sarang

  மயூரிகி ஷர்மா அவர்களே

  வட்டார எழுத்துக்களுக்கு நிச்சயமாக சமஸ்க்ருதத்தில் இடமுண்டு. வட்டார எழுத்தக்களின் பிரயோகத்தால் பாளி ஆகிவிடாது. இப்பொழுதே கூட வட நாட்டில் தொலைபேசியை குறிக்க தூர பாஷா என்றும் தென் பகுதியில் தூரவாணி என்று வழங்கப் படுகிறது.
  பண்டை காலத்திலேயே ஒவ்வொரு பிராந்தியத்திலும் வெவ்வேறு பேச்சு வழக்கு இருந்துள்ளது. வட மேற்குபகுதியில் செல்கிறான் (ஜச்சதி) என்பதை ஷவதி என்று சொல்லி வந்துள்ளார்கள்.

  //
  தொலைக் காட்சி, கணனி, மின்விளக்கு, மின் விசிறி, புகைவண்டி போன்ற நவீன கருவிகளுக்கு சம்ஸ்கிருத பதங்கள் உருவாக்கப்பட்டுள்ளனவா
  //

  உருவாக்கப் படவில்லை – இயல்பாகவே வந்துவிடும்

  தொலை காட்சி – தூர தர்ஷனம்
  கணினி – சங்கனகம்
  மின் விளக்கு – வித்யுத் தீப:
  மின் விசிறி – வ்யஜனம்
  புகை வண்டி – ரயில் யானம்

  பல நவீன கருவிகளின் ஆங்கில படங்கள் சமஸ்க்ருத மூலம் கொண்டவையே

  உதாரணம் – mixee . இது மிஷ்ர என்ற சமஸ்க்ருத பதத்திலிருந்து தான் வந்துள்ளது. ராகங்களில் கூட மிஷ்ர ராகம் என்று வழங்குவதுண்டு. அதாவது ஒரு ராகத்தின் ஸ்வரங்களில் அந்நிய ஸ்வரத்தை புகுத்துவது. மிஸ்ரா கமாஸ் என்ற ராகம் பதம் ஜவாளிகளில் பிரசித்தம். தீபவாளிக்கு நாம் சாப்பிடும் மிக்ஸ்சர் நிச்சயமாக சமஸ்க்ருத பண்டம் (பதம்) தான் 🙂

  காரணப் பெயர் கொண்ட எந்த நவீன கண்டுபிடிப்புகளுக்கும் சமக்ருத பெயர் எளிதில் வந்துவிடும்.

  தனித்து பேசும் மொழியாக சமஸ்க்ருதம் என்றும் வர வாய்ப்பில்லை என்று அத்விகா சொல்கிறார். பேசும் பத்து லட்சம் (உண்மையில் இதை விட மிக அதிகமாக உள்ளனர்) பேரை காட்டினால் என்ன செய்வார்?

 5. அத்விகா

  மரியாதைக்குரிய SARANG ,

  சமஸ்கிருதம் படிக்க எழுத மற்றும் பேச தெரிந்தவர்கள் கூட மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, தங்களுக்கு சமஸ்கிருதம் தெரியும் என்ற உண்மையை பதிவு செய்ய தவறிவிடுகிறார்கள் என்ற கூற்றில் உண்மை உள்ளது. சென்சஸ் 2011 விவரப்படி சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் என்பது ஒரு லட்சத்துக்கும் குறைவாக மட்டுமே காட்டுகிறது. பிளஸ் டூ வரை சமஸ்கிருதத்தை ஒரு பாடமாக எடுத்து பயின்ற மாணவ மாணவிகள் இந்தியா முழுவதும் 5000 பள்ளிகளில் தலா 100 பேர் வீதம் சுமார் ஐந்து லட்சம் பேருக்கு மேல் உள்ளனர். இவை தவிர முந்தைய தலைமுறையில் சமற்கிருதம் பயின்றோர் எண்ணிக்கை நாலு லட்சத்துக்கும் அதிகம். ஆக மொத்தம் ஒன்பது லட்சத்துக்கு மேல் சமஸ்கிருதம் அறிந்தோர் உள்ளனர். ஆனால் இவர்கள் தாங்கள் சமஸ்கிருதம் அறிந்தோர் என்பதை கணக்கெடுப்பின் போது பதிய தவறியதால், உண்மையான விவரம் கிடைக்க வில்லை. பழங்காலத்தில் சமஸ்கிருதம் பேச்சு மொழியாக பல அரங்குகளில் இருந்தது என்பதும் உண்மை, ஆனால் இன்று கர்நாடகத்தில் ஒரு கிராமத்தில் மட்டுமே அது பேச்சு மொழி. அந்த கிராமத்தின் மொத்த மக்கள் தொகை சுமார் 5000 மட்டுமே. எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை கூடும். சமஸ்கிருதத்தில் கடவுள் பற்றிய கருத்துக்கள் ஏராளம் இருப்பினும், நாத்திகம் பற்றியும் வண்டி வண்டியாக இருக்கிறது. நாத்திக பிரியர்கள் என்று வெளி வேஷமிடும் பரிசுத்த ஆவி எழுப்பும் கூட்டம் , சமஸ்கிருதத்தை முழுவதும் கற்று, அதில் எவ்வளவு நாத்திக கருத்துக்கள் பதிவாகி உள்ளன என்பதை அறியாமல், நுனிப்புல் மேய்ந்துவிட்டு,சமஸ்கிருதத்தை பற்றி தவறான பிரச்சாரம் செய்தனர். அவர்கள் திருந்தினால் நல்லது. இந்த நூற்றாண்டில் சமஸ்கிருதம் ஒரு மிக சிறந்த இணைப்பு மொழியாக செயல் பட எவ்வித தடையும் இல்லை. ஆனால் அது ஒரு பேச்சு மொழியாக வளர வாய்ப்புக்கள் குறைவு. சமஸ்கிருதமும், தமிழும் சிவபிரானாரின் உடுக்கை ஒலியிலிருந்து பிறந்ததாக தமிழ் மறைகள் சான்றளிக்கின்றன. ( வடமொழியும், செந்தமிழும் ஆயினான் என்கிறது தேவாரம் ) சமஸ்கிருதம் ஆதிக்க சாதியினரின் மொழி என்று பொய் பிரச்சாரம் செய்த பொய்யர்களால் சமுதாயத்தில் அதிக கெடுதல்களே நடந்துள்ளன.

  நமது கேள்வியெல்லாம் சமஸ்கிருதம் ஆதிக்க சாதியினரின் மொழி என்றால்,

  1. காட்டு வேடனாம் வால்மீகி எப்படி அந்த மொழியில் இராமாயணம் புனைந்திருக்க முடியும் ?

  2. மீனவ இனத்தை சேர்ந்த வியாசன் எப்படி சிறந்த சமஸ்கிருத இதிகாசமான மகாபாரதத்தை இயற்றியிருக்க முடியும் ?

  3. யாதவ இனத்தை சேர்ந்த மாடு மேய்க்கும் கண்ணப் பரம்பொருள் எப்படி இனிமையான பகவத் கீதையை சமஸ்கிருதத்தில் தந்திருக்க முடியும் ?

  4. புத்த மத கவிஞர் அஸ்வகோஷ் வஜ்ராகொபநிஷத்தை இயற்றியிருக்க முடியுமா ?

  5.ஆதிக்க சாதியை சேராத கவச ஐ லூசரும், வத்சரும் ரிக் வேத முனிவர்கள் ஆனது எப்படி ?

  6. தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாதங்கரும்,தந்தை பேரே அறியாத சத்யா காமன் ஜாபாலி மகரிஷியும், அடிமைப்பெண்ணின் மகன் விதுரரும் எப்படி சமஸ்கிருதம் பயன்படுத்தி உள்ளனர்.?

  மேலே கூறியவற்றிலிருந்து,

  1.சமஸ்கிருதம் நம் நாட்டில் எல்லா சாதி மக்களாலும் பேசப்பட்ட மொழியாக பல ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர் இருந்தது என்பதும்,

  2. இந்துக்களை தவிர பவுத்த மத அறிஞர்களும் சமஸ்கிருத நூல்களை எழுதியுள்ளனர் என்பதும்,

  3. ஆத்திகம் நீங்கலாக சாங்கியம் உள்ளிட்ட ஏராளமான நாத்திக இலக்கியம் சமஸ்கிருதத்தில் உள்ளது என்பதும் புலனாகிறது.

  எனவே, சமஸ்கிருதம் பற்றி நம் தமிழ் நாட்டில் உள்ள நம்பிக்கைகள் ஒட்டு மொத்த பொய்களே என்பது தெளிவாகிறது.

 6. Kondaa Senthilkumar Jabali

  ஸௌராஷ்ட்ர மொழி இன்றும் பேச்சிலும் தற்சமயம் பேச்சிலும் எழுத்திலும் உள்ளது. தமிழகத்தில் பல பகுதிகளில் ஸௌராஷ்ட்ரர்கள் வாழ்கின்றனர்

  Sanskrit and Saurashtram
  गुरुः guruH ꢔꢸꢬꢸ guru
  विद्वान् vidvaan ꢮꢶꢣ꣄ꢫꢵꢮꢶ vidyaavi
  बिराह्मणः braahmaNaH ꢩꢮ꣄ꢠꣂ bhavNO
  पुरोहितः purOhitaH ꢦꢸꢬꣂꢲꢶꢡꣁ purOhito
  ज्यौतिषिकः jyautiShikaH ꢙꣂꢱꢶ jOsi
  वैद्यः vaidyaH ꢮꣁꢫ꣄ꢣꢸ voydu
  वणिक् vaNik ꢮꢠꢶꢒ꣄ vaNik
  वाणिज्यं vaaNijyaM ꢮꢬꢾ vare
  नीवि niivii ꢥꢷꢮꢶ niivi
  वृद्धिः vruddhiH ꢮꢞ꣄ꢞꢶ/ꢮꢺꢣ꣄ꢤꢶ vaDDi/vruddhi
  मूल्यं muulyaM ꢪꣂꢭ꣄ mOl
  नाविकः naavikaH ꢥꢵꢮꢶ naavi
  गोपः gOpaH ꢔꢮ꣄ꢬꢸ gavru
  कुम्भकारः kumbhakaaraH ꢓꢸꢪ꣄ꢨꢵꢬ꣄ khumbaar
  वर्धकी vardhakii ꢲꣁꢞꣀ hoDai
  लोहकारः lOhakaaraH ꢓꢡꢶ khati
  लेपकः lOpakaH ꢭꣃꢬꢶ lauri
  सौचिकः sauchikaH ꢱꢶꢪ꣄ꢦꢶ simpi
  चर्मकारः charmakaaraH ꢣꢸꢬ꣄ꢔꢾ durge
  लुब्धकः lubdhakaH ꢭꢸꢨ꣄ꢣꣁ lubdo
  भॄतकः bhruutakaH ꢩꢾꢞꢾ bheDe

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)