வடமொழியும் தென்மொழியும்…

எழுதியவர்: திரு.சிவசேனானி நோரி (Sivasenani Nori)

தமிழில் உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள் என்று இருப்பது போல வடமொழியில் பாணினியின் ப்ரத்யாஹார முறைப்படி உயிர் எழுத்துக்கள் – அச் எழுத்துக்கள் என்றும் மெய் எழுத்துக்கள் ஹல் எழுத்துக்கள் அழைக்கப் படுகிறது. (பார்க்க: ப்ரத்யாஹாரம்). இது போன்ற ப்ரத்யாஹார முறை தமிழ் இலக்கணத்தில் அமைக்க முடியாது என்றாலும் தெலுகு, கன்னடம், மலையாளம் போன்ற தென்னக மொழிகள் அனைத்திலும் ப்ரத்யாஹார முறை உருவாக்க வழி உண்டு.

தெலுகு இலக்கணத்தில் பொதுவாக முதல் வேற்றுமை உருபு ஒட்டுகள் (ப்ரதமா விபக்தி பிரத்யயம்) டு, மு, வு, லு (డు, ము, వు, లు) ஆகும். இவை அச் (అచ్) மற்றும் ஹல் (హల్) ஆகியவற்றுடன் சேர்த்து அச்சுலு (అచ్చులు) என்றும் ஹல்லுலு (హల్లులు) என்றும் உருவாகின்றன. வரருசியின் ப்ராக்ருத இலக்கணத்தை பார்க்கும் ஒருவரை ஆச்சரியப் படுத்தும் விஷயம் என்னவெனில் அந்த நூல் விளக்கும் இலக்கணம் ப்ராக்ருதம் ஆனால் எழுதப் பட்ட மொழி சம்ஸ்க்ருதம். சற்றேறக் குறைய இதே போன்ற ஒரு நிலை தான் தெலுகு இலக்கணத்திலும் நிலவுகிறது. தெலுங்கு மொழியில் இலக்கணம் (బాలవ్యాకరణము – பாலவ்யாகரணமு) தெலுங்கு மொழியிலேயே இருந்தாலும், துமுனர்த²கமு (తుమునర్థకము), க்த்வாந்தமுலு (క్త్వాంతములు ) போன்ற இலக்கணப் பெயர்களில் சம்ஸ்க்ருதத்தின் இலக்கண நடை விரவி அமைந்துள்ளது கண்கூடு.

நான் பார்த்தவரை எல்லா தகவற்செறிவுள்ள நூல்களுமே தெலுங்கை ஒரு திராவிட மொழி என்றே கூறுகின்றன – ஆனால் தெலுங்கை தாய்மொழியாக பேசும் எனக்கு, தொண்ணூறு சதவீதம் தெலுங்கு வார்த்தைகள் சம்ஸ்க்ருத வேரில் இருந்து உருவானதாகவே தோன்றுகின்றன – இவ்வாறு இருக்கையில் “திராவிட மொழி” என்று கூறும் மொழியியலின் நிலைப்பாடு குறித்து என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. ராஜீவ் மல்ஹோத்ரா – அரவிந்தன் நீலகண்டன் ஆகியோரின் “உடையும் இந்தியா..?” என்கிற நூல் வேறு ஒரு காரணத்தைக் கூறுகிறது: ஆரிய – திராவிட பிளவு என்பது ஏகாதிபத்திய ஆட்சியாளர்களின் பிரித்தாளும் திட்டத்தினால் விளைந்த ஒன்று. வெறும் மொழியின் பயன்பாட்டை வைத்து மட்டும் அல்லாது பொது மரபின் வழியாகவும் மராட்டியர்கள் பஞ்சதிராவிடரில் (ஐந்து திராவிடர்கள்) ஒரு பிரிவினர் ஆவர் (உதா: பிரபல கிரிக்கட் வீரர் ராகுல் திராவிட் மராட்டியர் என்றாலும் அவர் பெயரிலேயே திராவிடர் என்று இருக்கிறது). குஜராத்திகள் தசதிராவிடரில் ஒருவர்.

மராத்தி, தெலுங்கு மொழிகளில் நிறைய ஒற்றுமைகள் உண்டு. இவ்வாறு இருந்தாலும் மராத்தி இந்தோ-ஆரிய மொழிக் குடும்பத்திலும், தெலுங்கு திராவிட மொழிக் குடும்பத்திலும் இருக்கிறது. இவ்வாறு ஏட்டளவில் இருக்கையில், தெலுங்கு கவிஞர்களில் பெரும்பான்மையானவர்கள் (பிரபந்தம் முதலியவை இயற்றிய கவிகள்) பதினேழாம் நூற்றாண்டு வரை (அவ்வளவு ஏன், இருபதாம் நூற்றாண்டில் கூட, விஸ்வநாத சத்யநாராயணா எழுதிய வரலாற்று நாவலில் ஹாஹா, ஹூஹூ என்கிற பாத்திரங்கள் ப்ராக்ருத மொழியில் பேசுகின்றன) தெலுங்கு, சம்ஸ்க்ருதம் மற்றும் ப்ராக்ருத மொழிகள் அறிந்திருந்தனர்.

ஒரு படைப்பாளியாக அவர்களுக்கு சம்ஸ்க்ருதம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய ஒரு மொழியாக மட்டும் இருக்கவில்லை. அவர்கள் எழுதிய பல கவிதைகள் சம்ஸ்க்ருத கவிதைகளாகவே கூட கருதக் கூடிய அளவில் இருந்தன. உதாரணமாக கஞ்சேர்ல கோபண்ணா (பக்த ராமதாசர்) இயற்றிய தாசரதி சதகத்தில் முதல் ஆறு பாடல்கள் சம்போதன ப்ரதமா விபக்தியில் (விளிச் சொற்களால்) அமைந்து இருப்பதால் சம்ஸ்க்ருத கவிதைகளாகவே கருத இடமுண்டு.

மேலும் ஸ்ரீநாதர் போன்ற தெலுங்கு கவிகள் சம்ஸ்க்ருதத்தில் கவிதையை எழுதிவிட்டு அதில் தெலுங்கு ஒட்டுக்களான டு, மு, வு, லு ஆகியவற்றை சேர்த்து தெலுங்கு கவிதை என்று கூறிவிடுகிறார்கள் என்று வேடிக்கை வழக்கு ஒன்று கூட உண்டு. சம்ஸ்க்ருத கவிதைகளின் எல்லா விருத்தங்களையும் தெலுங்கு கவிதைகளிலும் உபயோகிப்பது உண்டு; சில நேரங்களில் கூடுதலாக யதி, ப்ராஸ விதிகளுடன் இயற்றுவதும் உண்டு.

சம்ஸ்க்ருதத்தில் இல்லாத சில விருத்தங்கள் தெலுங்கில் உண்டு. ஆனால் பெருங்காவியங்களில் சம்ஸ்க்ருத விருத்தங்கள் பெரும்பாலும் ஏன் பாதிக்கும் மேல் மிகுந்து காணப் படுகின்றன. கவிதை இலக்கணம் என்று வரும்போது அல்லது அலங்கார சாத்திரம் என்றால் காவ்யபிரகாசம் முதலிடம் வகிக்கிறது. சாதாரணமாக, அலங்கார சாத்திரத்தின் சம்போக சிருங்கார பகுதிகளில் பல உதாரணங்கள் மராத்தியிலும், ஸௌரசேநியிலும் உள்ளவை. ஆகையால் சம்ஸ்க்ருத சாத்திரங்களின் பல கருத்துக்கள் இந்திய மொழிகள் பலவற்றிலும் பயன்பாடு கொண்டவை – மற்றொரு விதத்தில் பார்த்தால் இந்திய மொழிகள் பலவும் தங்களது படைப்புகளை சம்ஸ்க்ருத சாத்திரங்களின் வழி சரிபார்த்துக் கொள்ளுகின்றன.

அண்மையில் தெலுங்கு மொழியின் ஒரு வட்டார வழக்கில் (மதுரைத் தமிழ், கோவைத் தமிழ் போன்ற) எழுதப் பட்ட ஏங்கிபாடாலு என்கிற நூலைக் குறித்து படித்துக் கொண்டிருந்தேன். இந்த நூல் எழுதப்பட்டுள்ள மொழி வழக்குக்கும் “பொது” தெலுங்கு மொழிக்கும் உள்ள தொடர்பு ஸௌரசேநிக்கும் சம்ஸ்க்ருதத்துக்கும் உள்ள தொடர்பைப் போன்று த்வந்யாலோகத்தின் விதிகளுடன் பொருந்தி வருகிறது. தெலுங்கில் இரு வகையான சொற்கள் உண்டு: பிரக்ருதி மற்றும் விக்ருதி. உதாரணமாக கதா, கடா போன்ற சொற்கள். விக்ருதி சொற்கள் தெலுங்கு தான் என்றாலும் அவை பெரும்பாலும் கல்வி அறிவு குறைந்த பாமரர்களால் உபயோகிக்கப் படுபவை; மேலும் அச்சொற்களை உருவாக்க பல இலக்கண விதிகள் உபயோகித்தல் அவசியம் – சில நேரம் வரருசியின் ப்ராக்ருத இலக்கண முறைகளைக் கூட உபயோகிக்க வேண்டி வரும். இறுதியாக இதனால் எல்லாம் தெரிவது, இலக்கிய தெலுங்கு மொழியை சம்ஸ்க்ருத மொழியில் இருந்து வேறுபடுத்திப் பார்ப்பது இயலாத காரியம். 1

இருந்தும் ஒரு நூற்றாண்டுக்குள், பத்தொன்பதாம் நூற்றாண்டு துவக்கத்தில், நமக்கு திராவிட மொழிக் குடும்பம் என்ற பெயர் கிடைக்கிறது – சுமார் நூற்றைம்பது ஆண்டுகள் இதுவே திரும்ப திரும்பச் சொல்லப் பட்டு இப்போது படித்த (தென்னிந்திய மொழிகளில் எழுதப் படிக்க தெரிந்த) வட இந்திய மக்கள், “திராவிட” மொழிகளில் இத்தனை சம்ஸ்க்ருத வார்த்தைகளா என்று வியக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவில் மொழியியல் குறித்து கற்பிக்கும் முறை முற்றிலும் மாற்றி அமைக்கப் படவேண்டும் என்று எண்ணுகிறேன்.

திராவிட மொழிகள் என்று அழைக்கப் படுகிற தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகள் “கை” போன்ற திராவிட வேர்ச்சொற்களை கொண்டிருந்தாலும், இப்போது பொதுக் கருத்தில் உள்ளதை விட சம்ஸ்க்ருத மொழிக்கே மிகவும் நெருங்கியவை; மராத்தி, குஜராத்தி மொழிகளை விட சற்றே விலகியவை; ஆனால் மிகவும் விலகியவையும் அல்ல. இது வெறும் உண்மையை உள்ளவாறு சொல்லும் நிலை மட்டும் அல்ல, இதனால் நமது மக்கள் நமது நாட்டைக் குறித்தும், பண்பாடு குறித்தும் கொண்டுள்ள எண்ணத்தையே பாதிக்கக் கூடியது. ஆகவே, இந்திய மொழிகள் குறித்த மொழியியல் நூல்கள் புதுப்பிக்கப் படுதல் அவசியம்.

மொழியியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டு கொஞ்சம் பழையதாக ஆன போதும், கபில்தேவ் த்விவேதி எழுதிய பாஷா சாஸ்திரா (ஹிந்தி) நூல் போல ஒரு அருமையான மொழியியல் அறிமுக நூல். குறைந்த பட்சம் இது போன்ற நூல்களாவது பதிப்பிக்கப் பட்டு தென்னிந்திய மொழிகளுக்கும் சம்ஸ்க்ருதத்துக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்த வேண்டும்.

(படம் நன்றி: mana-samskruthi)

Notes:

 1. யயாதிசரித்ரம் போன்ற சில தெலுங்கு காவியங்கள் ஜானுதெனுகு (சுத்த தெலுங்கு) என்கிற நடையில் சம்ஸ்க்ருத மூலம் அற்ற சொற்களைக் கொண்டு இயற்றப் பட்டுள்ளன. ஆனால் இவை தெலுங்கு இலக்கியங்களில் மிகவும் சொற்பமானவை. இவற்றை தெலுங்கு மக்களாலேயே அகராதி போன்றவை இல்லாமல் எளிதில் புரிந்து கொண்டு விட முடியாது

11 Comments வடமொழியும் தென்மொழியும்…

 1. T.Mayoorakiri sharma

  இத்தகு கட்டுரையைத் தேடி எடுத்துப் பதிப்பித்தமைக்கு சங்கதம் தளத்தாருக்கு நன்றி கூற வேண்டும்..

  ஆனல், நிறைய சம்ஸ்கிருத சொற்கள் கலந்திருப்பதாலும், சம்ஸ்கிருத இலக்கண மரபுகள் தற்காலத்தில் அதிகம் பேணப்படுவதாலும், தெலுங்கு திராவிட மொழி அல்ல என்று இக்கட்டுரையாளர் கருதுவதை என்னால், முழுமையாக ஏற்றுக் கொள்ளமுடியவில்லை..

  எனினும், இத்தகு வித்தியாசமான.. வழமையாக நாம் சொல்லிக் கொள்வதற்கு மாறான.. ஆய்வுகள் நடைபெறுவதும், அவற்றை வளர்ச்சியடையச் செய்வதும்.. உண்மைகள் துலங்குவதற்கு வசதி செய்யும்..

  இப்படி தெலுங்கைச் சொன்னால், மலையாளம் கூட, சம்ஸ்கிருதச் சொற்களால் தான் வாழ்கிறது.. ஆனால், அதற்கு வரலாற்றுச் சான்று நிறையவே இருக்கிறது.. முடியுடை முத்தமிழ் வேந்தரில் சேரர் ஆண்ட நாடு.. எனவே, அங்கே பேசப்படுவது தமிழ் சார் பாஷையாக தான் இருக்க வேண்டும்..

  அண்மையில், ஒருவருடைய கட்டுரையைப் படித்தேன்.. அவர் சொல்கிறார்.. “தமிழ் திராவிட பாஷையல்ல.. தமிழ் வேறு திராவிடம் வேறு.. தமிழுக்கு மற்றைத் திராவிட மொழிகளிலிருந்து வேறுபட்ட பண்புகள் நிறைய இருக்கின்றன..”

  இப்படிப் பட்ட ஆய்வுகள் ஏற்றுக் கொளள்க் கூடியனவாக இருந்தாலும், இல்லாவிட்டாலும்.. அதிகம் வெளிவருவது மொழியியல் ஆய்வுகளுக்கு துணை செய்யும்..

  தி.மயூரகிரி சர்மா

 2. संस्कृतप्रिय:

  மதிப்பிற்குரிய சர்மா, நீங்கள் கட்டுரை எழுப்பும் கேள்வியைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.

  “தெலுங்கு திராவிட மொழி அல்ல” – என்று சொல்லும் போது திராவிடம் என்பது பிரதேசத்தைக் குறிப்பதாக கட்டுரையாளர் சொல்லவில்லை. இந்தோ-ஆரிய மொழிக்குடும்பம், திராவிட மொழிக்குடும்பம் என்று ஆங்கிலேயர் காலனிய அரசு காலத்திலேயே வகைப் படுத்தி விட்டனர். இந்த வகைப் படுத்தலில் கூறப்படும் “திராவிட மொழிக்” குடும்பத்தில் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் போன்ற தேசங்களில் பேசப் படும் மொழியும் திராவிட மொழிதான் என்கின்றனர். இதைத் தான் கட்டுரையாளர் கேள்வி எழுப்புகிறார்.

  இந்திய மொழிகள் தமிழ் உட்பட எல்லாவற்றிலுமே சம்ஸ்க்ருத மொழியின் தாக்கம் உண்டு எனும் போது இந்த வகை “திராவிட” மொழி, “இந்தோ-ஆரிய” மொழி ஆகிய வகைப் படுத்தல்கள், ஆரிய படையெடுப்பு கருத்தே தகர்ந்து கொண்டிருக்கிற இக்காலத்தில், செல்லுபடி ஆகுமா என்று கேள்வி கேட்கிறார்.

 3. ஓகை நடராஜன்

  இக்கட்டுரையாளரின் ஐயம் தெலுங்கில் இலக்கியத்திலும் பேச்சு வழக்கிலும் இருந்துகொண்டிருக்கும் ஏராளமான சங்கதச் சொற்களை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்டிருக்கிறது. தமிழில் எழுதப்பட்ட ஏராளமான மணிப்பிரவாள கட்டுரைகளையும் புராண/ இலக்கிய உரைகளையும் படித்தால் தமிழின் மீதும் அதே ஐயம் ஏற்படும். தமிழில் இப்போது சமய உரை நிகழ்த்தும் பலரின் பேச்சைக் கேட்டாலும் இதே ஐயம் ஏற்படும்.

  தெலுங்கு தெரியாத தமிழர் தெலுங்கு உரையாடல் ஒன்றைப் புரிந்துகொள்வதை விட, தெலுங்கு தெரியாத சங்கதம் அறிந்த ஒரு வட இந்திய மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர் புரிந்து கொள்வது அதிகமாக இருக்குமா?

 4. Vinodh Rajan

  Extensively borrowed lexicon doesn’t change the language family. Telugu, may have, a high number of imported lexicon from Sanskrit, but the syntax and the basic words are still are of Dravidian Family.

  Consider English, English has a huge influx of imported words primarily from French, Latin but also various other languages like Greek and what not. But it is still a Germanic language not a Romance language.

  Sanskrit established itself a standard reference language, hence Grammars for the vernacular languages were always modelled upon Sanskrit (if it didn’t perfect suit the native grammar). For Instance, the first grammar for Malyalam – Lilatilaka – was written in Sanskrit !

  IMHO The article is quite futile.

  V

 5. कृष्णकुमार्

  ஸ்ரீ சிவசேனானி நோரி அவர்களின் அத்வைத வேதாந்த விளக்கங்களை ஆங்க்லபாஷையில் வாசித்ததுண்டு. கூடவே தர்க்கம் சார்ந்த விளக்கங்களும் .

  \\ஆனால் தெலுங்கை தாய்மொழியாக பேசும் எனக்கு, தொண்ணூறு சதவீதம் தெலுங்கு வார்த்தைகள் சம்ஸ்க்ருத வேரில் இருந்து உருவானதாகவே தோன்றுகின்றன———-Telugu, may have, a high number of imported lexicon from Sanskrit, but the syntax and the basic words are still are of Dravidian Family———-இக்கட்டுரையாளரின் ஐயம் தெலுங்கில் இலக்கியத்திலும் பேச்சு வழக்கிலும் இருந்துகொண்டிருக்கும் ஏராளமான சங்கதச் சொற்களை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்டிருக்கிறது.\\\\\\\

  தமிழ், தெலுகு மற்றும் சம்ஸ்க்ருத பாஷை நன்றாக அறிந்த வித்பன்னர்கள் இதை துலக்க இயலும்.

  ஸ்ரீ நோரி அவர்கள் கருத்து தெலுகு பாஷையின் மிகப்பல வார்த்தைகளின் மூலம் சம்ஸ்க்ருத வேரை உடையது என்பது. இதை இல்லை என்று மறுதலிப்பவர்கள் சிலப்பல உதாரணங்களுடன் விளக்கலாமே.

 6. தேவ்

  >>>> பத்தொன்பதாம் நூற்றாண்டு துவக்கத்தில், நமக்கு திராவிட மொழிக் குடும்பம்
  என்ற பெயர் கிடைக்கிறது – சுமார் நூற்றைம்பது ஆண்டுகள் இதுவே திரும்ப திரும்பச்
  சொல்லப் பட்டு இப்போது படித்த (தென்னிந்திய மொழிகளில் எழுதப் படிக்க தெரிந்த)
  வட இந்திய மக்கள், “திராவிட” மொழிகளில் இத்தனை சம்ஸ்க்ருத வார்த்தைகளா
  என்று வியக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவில் மொழியியல் குறித்து
  கற்பிக்கும் முறை முற்றிலும் மாற்றி அமைக்கப் படவேண்டும் என்று எண்ணுகிறேன். <<<

  மிகவும் சரியான கருத்து; சிறந்த சிந்தனையைக்
  கவனப்படுத்தியதற்கு நன்றி

 7. hotman

  ‘தெலுங்கை தாய்மொழியாக பேசும் எனக்கு, தொண்ணூறு சதவீதம் தெலுங்கு வார்த்தைகள் சம்ஸ்க்ருத வேரில் இருந்து உருவானதாகவே தோன்றுகின்றன –இவ்வாறு இருக்கையில் “திராவிட மொழி” என்று கூறும் மொழியியலின் நிலைப்பாடு குறித்து என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.’ என்கிறார் கட்டுரை ஆசிரியர். அதனால் தெலுங்கை ஆர்ய மொழி என்று சொல்ல நினைக்கிறாரா? அப்படியானால் சரியாக சொல்லப்போனால் இன்று ஆந்திராவில் உள்ள பெருநகர இளைஞர்கள் தினசரி வாழ்க்கையில் சமஸ்கிருத வேர் தெலுங்கு வார்த்தைகளை விட ஆங்கில வார்த்தைகளை அதிகமாக பயன்படுத்துகிறார்கள், டிஃபன், ஹேர், வெஹிகில், ஸ்கூல்., புக்ஸ், பேப்பர், பேங்க், ரோட். மம்மி, டாடி …..எனறு நீண்டுகொண்டே போகும். இப்போது அல்ல, இது ஆரம்பித்து பல தலைமுறை ஆகிவிட்டது. என்னதான் கூப்பாடு போட்டு கத்தினாலும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த நிலை நாவல்களிலும் புத்தகங்களில் கதைகளிலும் திரைப்படங்களிலும் பரவிவிட்டது. அதனால் கட்டுரையாசிரியர் இதை உணரும்போது தெலுங்கை ஐரோப்பிய இன மொழி என்பாரா? ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் ஆங்கில ஆதிக்கம் வந்தது, தொடர்கிறது. அதே போல் சமஸ்க்ருத ஆதிக்கமும் ஒரு காலத்தில் இருந்தது, தொடர்கிறது. ஆங்கில ஆதிக்கம் ஆட்சியால் என்றால், சமஸ்கிருத ஆதிக்கம் வட இந்திய மத பரவலால், நான் இந்து மதத்தை மட்டும் சொல்லவில்லை, பௌத்த சமண மதங்களையும் மதநூல்களையும் சேர்த்துதான். தமிழிலிலும்தான் நிறைய சமஸ்கிருத வார்த்தைகள் கலந்தன. இப்போது அவற்றை வடித்து தனித்தமிழ் வளரவில்லையா? நான் 45 வருடங்களுக்கு முன் சிறுவயதில் படித்த தினமணிக்கும் இன்றைய தினமணிக்கும் எவ்வளவு வித்தியாசம்! நீங்கள் கூட இப்படி செய்வதை விட்டுவிட்டு தெலுங்கை திராவிட மொழி இல்லை என்கிறீர்களே, நல்லவேளை ஆங்கில வார்த்தைகளை 5 தலைமுறைகளாக பேசுவதால், இன்னும் அதிகமாக பேசப்போவதால் தெலுங்கை ஐரோப்பிய இன மொழி என்று சொல்லாமல் விட்டீர்களே?

 8. சத்தியமூர்த்தி

  தாரி(பொருள்:வழி ; இற்றைத்தமிழில் வழங்குவதில்லை; தெலுங்கு தமிழ் கன்னடம் ஆகிய மொழிகளில் ஒன்றே), ஆச நெரவேரிந்தி-ஆசை நிறைவேறியது, வங்கு (பொருள்:வளை,bend; வணங்கு- இதில் ணகரம் கெட்டது),கலிசி- கலந்து, சேரிந்தி- சேர்ந்தது, மற்றும் பல. இதுமட்டுமன்றி இலக்கண ஒற்றுமையும் உண்டு. ஆனால் அதைக்கூற இக்கருத்து இன்னும் நீண்டுபோகும். எனவே, அதை விடுத்து இயன்றவரை விளக்கம் தர முயல்கிறேன்.
  *hotman*
  ////தெலுங்கு வார்த்தைகளை விட ஆங்கில வார்த்தைகளை அதிகமாக பயன்படுத்துகிறார்கள், tiffin, hair, vehicle, school, books, paper, bank, road, mummy, daddy …..எனறு நீண்டுகொண்டே போகும். இப்போது அல்ல, இது ஆரம்பித்து பல தலைமுறை ஆகிவிட்டது. என்னதான் கூப்பாடு போட்டு கத்தினாலும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த நிலை நாவல்களிலும் புத்தகங்களில் கதைகளிலும் திரைப்படங்களிலும் பரவிவிட்டது. அதனால் கட்டுரையாசிரியர் இதை உணரும்போது தெலுங்கை ஐரோப்பிய இன மொழி என்பாரா? ////
  மேற்கூறியது எப்படி இப்போது நடக்கின்றதோ அங்ஙனமே அப்போது “தமிழின்” வட்டார வழக்காய் இருந்த வடுகம் ( இன்றைய சென்னைத்தமிழ் மதுரைத்தமிழ் போல) சமசுகிருதத்தோடு சேர்ந்து “திரிலிங்கம்” ஆனது. அதுவே “தெலுங்கம்” பின்னர் “தெலுகு” என் ஆனது.

 9. புருசோத்தம்

  தெலுங்கரின் மீது மீண்டும் மீண்டும் மொழியாக்க மற்றும் நேரடி இலக்கிய படைப்புகளின் வாயிலாகவும் வழிப்பாட்டு மொழி என்னும் பெயரிலும் சமஸ்கிருதம் சுமத்தப்பட்டு தெலுங்கும் ஆர்யா மொழி என்னும் மாயை உருவாகி உள்ளது. இன்று நவீன கால இளைஞர்கள் தூய தெலுங்கை கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பல தூய தெலுங்கு சொற்களை மக்களிடமிருந்து எடுத்துக்கொண்டு கதைகளை படைக்க தொடங்கி உள்ளனர். இந்த முயற்சி வெற்றி அடையும் பட்சத்தில் அடுத்த சில வருடங்களிலேயே தெலுங்கும் உயர்தனி திராவிட மொழி என்னும் சிறப்பை மீண்டும் பெற்றுவிடும்.

  சமீபத்தில் வெளிவந்த 1.மொரசுனாடு கதலு, 2.தொண்டநாடு கதலு, 3.கோபல்லே (கோபல்ல கிராமம் என்னும் தமிழ் நாவலின் தெலுங்கு மொழியாக்கம்) போன்ற தொகுப்புகளை படிப்பவர்கள் இதை உணரலாம்.

  தமிழ் பேசும் மக்களின் வடக்கு பகுதியில் இருந்ததாலேயே தெலுங்கர்கள் வடுகர் என்றும் அவர்களின் மொழி வடுகம் என்றும் அழைக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் தமிழைவிட நூறு ஆண்டுகளுக்கு முன்பே தெலுங்கில் கல்வெட்டுக்கள் பொறிக்கப் பட்டுள்ளது. எனவே, சத்தியமூர்த்தி அவர்கள் குறிப்பிட்டதை போல தெலுங்கு தமிழின் வட்டார வழக்காக இருந்தது என்பதை ஏற்பதற்கில்லை.

 10. R Gopu

  Vinodh Rajan சொல்லும் கருத்து சரியானது. தெலுங்கு கன்னடம் துளுவம் போன்றவை திராவிட மொழிகள் என நிரூபிக்க உதவியர் போமகொண்டி சங்கரையா என்ற தெலுங்கு பண்டிதர். 1818இல் சென்னை கலெக்டர் எல்லிஸ் முன்னுரையுடன், ஏ.டி.காம்ப்பெல் A Grammar of the Teloogoo Language (தெலுங்கு மொழி இலக்கணம்) என்ற நூலை வெளியிட்டார். அந்த முன்னுரையில் திராவிட மொழியினத்தின் சான்றை எல்லிஸ் நிரூபித்தார். பின்னர் எல்லிஸ் மறக்கப்பட்டு, ராபர்ட் கால்டுவெல்லுக்கு அந்த புகழ்ச் சென்றது. இவர்களை பற்றியது என் சமீப வலைப்பதிவு. http://varahamihiragopu.blogspot.com/2014/08/trautmann-on-francis-whyte-ellis.html

  இதை ஏற்க விரும்பாத தெலுங்கர் கன்னடர் பலருண்டு. அது அவர் விருப்பம்.

 11. V.Vaidyeshwaran

  //Extensively borrowed lexicon doesn’t change the language family. Telugu, may have, a high number of imported lexicon from Sanskrit, but the syntax and the basic words are still are of Dravidian Family.//
  As Shri.Vinod rajan rightly said imported lexicon will not decide the family of a language. The method of forming a sentence(syntax) and basic Grammer are the
  main features in deciding a family of a language.

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)