“‘இந்தி’யத் தேசியத்தின் தோல்வியும் பிஹார்களின் விழிப்பும்” என்ற தலைப்பில் அண்மையில் ஒரு கட்டுரை பார்வைக்கு கிடைத்தது. இது ஃபேஸ்புக்கில் எழுதப் பட்ட கட்டுரையாகையால் பேஸ்புக்கில் இணையாதவர்கள் பார்க்க முடியாது என்பதால் அந்த கட்டுரையின் சில பகுதிகள் இங்கே மீண்டும் பதிகிறோம்:
புது தில்லியிலுள்ள தீன் மூர்த்தி பவனில் கிட்டத்தட்ட தினசரி நடக்கும் நேரு நினைவுச் சொற்பொழிவுகள் நான் இங்கே வந்த்திலிருந்து செவிமடுக்கவிரும்பும் முக்கிய பேச்சுகளாக ஆகிவிட்டன. பத்து நாட்களுக்கு முன்பு, வளர்ச்சிப் பொருளாதார நிபுணரும் இடதுசாரி குடும்பம் ஒன்றில் பிறந்தவருமான பேராசிரியர் சைபால் குப்தாவின் பேச்சு ஒன்றைக் கேட்க நேர்ந்தது. The idea of Bihar என்கிற அவரது பேச்சு பிஹாரைப் பற்றிப் புரிந்துகொள்ள மிகவும் உதவியது.
…
இந்தியா சுதந்திரம் அடைந்த்திலிருந்து பிஹார், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களின் வளர்ச்சிப் பிரச்சனை குறித்து நாம் அறிவோம். இந்தி பெல்ட் அல்லது பிமாரு (BIMARU) என்ற பெயரில் சற்றே அவமானகரமான உள்ளர்த்தத்தோடு அடையாளப்படுத்தப்படும் இந்த மாநிலங்களில், பிஹார் ஒரு வித்தியாசமான மாநிலம் என்றார் குப்தா. சுமார் ஆயிரம் ஆண்டு காலம் இந்தியாவின் மையமாக இருந்து வந்தது பிஹார்தான் என்றும் பாடலிபுத்திரம்தான் ஒரு காலத்தில் இந்தியாவின் சிந்தனைப் போக்கை நிர்ணயித்தது என்றும் பெளத்தமும் சமணமும் உருவான பூமியான பிஹார் பிறகு தாழ்ந்துபோனது என்றும் அவர் விவரித்தார். ஆனால் 1950களுக்குப் பின் பிஹார் ஏன் ஒரு வளர்ந்த மாநிலமாக மாறவில்லை? இந்தியாவின் கனிம் வளங்களின் தலைமை பீடமாக இருந்துவந்த பிஹார் தொழிலுற்பத்தியில் ஏன் முன்னேறவில்லை?சாதியமும் நிலப்புரபுத்துவமும்தான் பிஹாரின் வளர்ச்சிக்கு எதிராக இருந்தன என்று குற்றம்சாட்டிய குப்தா மற்றுமொரு முக்கியமான வளர்ச்சிப் போக்கு பிஹாரில் நிகழாமல் போய்விட்டது என சுட்டிக்காட்டினார். முன்னிரு பிரச்சனைகள் பற்றி நிறைய ஆய்வாளர்கள் பேசியிருக்கிறார்கள். குப்தா பேசத் தொடங்கியிருக்கும் மூன்றாவது முக்கியமான பிரச்சனை பற்றி இப்போதுதான் பிஹார் பேச ஆரம்பித்திருக்கிறது.
தமிழ்நாட்டில் பார்ப்பன எதிர்ப்பியக்கம் பின்பு ஒரு துணைத்தேசிய இயக்கமாக மாறி தமிழக வளர்ச்சியின் அடிப்படையாக மாறியது என்றார் குப்தா. நாம் தேசிய அல்லது தேசியஇன அடையாளமாக பார்ப்பதை குப்தா துணைத்தேசிய அடையாளமாக பார்க்கிறார். (இது குறித்து தனியே வேறு ஒரு சமயம் விவாதிப்போம்). இத்தகைய துணைத்தேசிய அடையாளத்தை – பிஹாருக்கென்ற சொந்த தேசிய இன அடையாளத்தை – நோக்கி பிஹாரை அதன் தொடக்க்கால அரசியல் தலைவர்கள் அழைத்துச்செல்லாமல் போனதுதான் பிஹார் வளராமல் போனதற்குக் காரணம் என்று குப்தா கருதுகிறார்.
…
இந்திய தேசியம் மிகப்பெரிய துரோகத்தை வேறு யாருக்கும் இழைத்திருக்கவில்லை – இந்தி மாநிலங்களுக்கே இழைத்திருக்கின்றது.பிஹாரின் கதை மட்டுமல்ல, இந்தி மொழி பேசப்படும் மாநிலங்கள் அனைத்தின் கதையுமே சோக்க்கதைகள்தான்.
…
இந்தி மொழி என்பது ஒரு மொழியல்ல. தனித்தனி மொழிகளாகவும் துணைமொழிகளாகவும் பேச்சுவழக்குகளாகவும் இருந்த பல மொழிக் கலாச்சாரங்கள்மீது மேலிருந்து திணிக்கப்பட்ட ஒரு சர்காரி பாஷா அது. அதனூடாக அது வடக்கு, மத்திய இந்தியாவை ஓர் ஒற்றை இந்திப் பிரதேசமாக ஆக்கிமுயற்சி செய்திருக்கிறது. சுதந்திரப் போராட்டக்காலத்தில்கூட உயிரோடு இருந்த பல மொழிகளை சுதந்திர இந்தியா இந்தி என்ற ஒற்றை அடையாளத்தில் கரைத்து ஒழித்துக் கட்ட முயற்சிசெய்துவருகிறது. அந்த வேளை இந்நொடியும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. சமஸ்கிருத ஞானஸ்நானம் அளிக்கப்பட்ட ராஷ்ட்டிர பாஷா இந்தியை கட்டாயமொழியாக ஆக்கியபோது, பல கட்டங்களில் தமிழ்நாட்டில் நாம் எதிர்த்தோம். ஆனால் அதனால் பாதிப்பு தமிழ் போன்ற பிற மொழிகள் மீது மட்டும்தான் இருக்கும் என்று நாம் நினைக்கிறோம்.ஆனால் உண்மையில் இந்தியால் பாதிக்கப்பட்டவை வடக்கு, மத்திய இந்தியாவில் பேசப்பட்ட சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட மொழிகள்தான். இவற்றில் இந்தி-உருதுவை விட பல நூற்றூண்டுகால இலக்கிய பாரம்பரியம் உடையவை பல. அவதி, போஜ்புரி, பிரஜ் பாஷா, ஹரியான்வி, மாகதி, மைதிலி, பஹாரி, சாத்ரி என பல மொழிகளினிடத்தை இந்தி அபகரித்துக்கொண்டது.
வட இந்தியாவில் ஹிந்தியின் ஆதிக்கத்தால் அங்குள்ள பிராந்திய மொழிகளைச்சுற்றி வலுவான அடையாளங்கள் உருவாகவில்லை. அதுவும் அங்கு பொதுவான சமூக வளர்ச்சி குன்றிய நிலைக்குக் காரணம் என்றும் கூறுவது வரை உள்ள வாதம் புரிந்துகொள்ளக் கூடியதே.
எனினும் மத்திய அரசு அல்லது இந்திய தேசியம் – ஹிந்தியை திணித்து பிற மொழிகளை மேலுக்கு வர முடியாமல் தடுத்தது என்று கூறும் அந்த பார்வை சரியல்ல. மத்திய அரசு ஹிந்தியை வட இந்தியாவில் (முழு இந்தியாவிலும் தான்) திணிக்கவில்லை என்று நான் கருதுகிறேன். அதற்கான காரணங்களை கீழே குறிப்பிட்டுச் சொல்கிறேன்.
இந்தி எதிர்ப்பு தான் தமிழகத்தில் தமிழை ஓரளவு காப்பாற்றி இருக்கிறது என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் ஆங்கிலம் அதீத முக்கியத்துவத்தை அடைந்து தமிழ் சிதைந்து தமிங்க்லீஸ் ஆகி தாய் மொழியை ஒதுக்கும் நிலைக்கு வந்துவிட்டது; சக மாநிலங்களில் அவரவர் மொழி, பேச்சிலும் இலக்கியத்திலும் மிளிர்ந்துகொண்டிருக்கிறது; அங்கெல்லாம் ஹிந்தியை விரட்டவில்லை! இங்கே ஒண்ணாம் வகுப்பில்கூட தமிழ் இல்லை; அடுத்த தலைமுறை ‘அ’ வேண்டுமா என்று யோசிக்க ஆரம்பித்துவிடும்போல் இருக்கிறது. பொதுவாக, 12 ஆம் வகுப்பு முடித்தவர்களால் கூட ஆங்கிலத்திலோ தமிழிலோ ஒரு பக்கம் சரளமாக எழுதமுடியவில்லை. இது மிக அவலம்.
வடஇந்தியாவைப் பொறுத்த வரை, ஹிந்தியை மத்திய அரசு திணித்தது என்று கருதுவதற்கு இடமே இல்லை. ஹிந்தியை எதிர்த்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்த பொழுது மத்திய அரசு மொழிவாரியாக மாநில எல்லைகளை மாற்றியமைத்தது என்பது நம் எல்லோருக்கும் தெரிந்தது தான். அப்படி இருக்க வட இந்தியாவில் மட்டும் ஏன் இதை செய்யாமல் விடுவார்கள்? தென் இந்தியாவில் செய்ததை ஏன் வட இந்தியாவில் செய்யவில்லை என்ற கேள்விக்கான பதில், அன்றைய காலகட்டத்தில் வட இந்தியாவின் மொழிப் பிரக்ஞை அதற்கு ஏதுவாக இல்லை என்பதே ஆகும்.
ஹிந்தி/உருது என்று நாம் இன்று அழைக்கும் மொழி முதலில் அரபி எழுத்துகளில் எழுதப்பட்ட மொழி. பத்தொன்பதாம் நூற்றாண்டில், இஸ்லாமிய ஆட்சி முடிந்து ஆங்கிலேயர் ஆட்சி துவங்கியவுடன் மக்களிடையே அரபி எழுத்தை கைவிட்டு தேவநாகரி எழுத்துக்களை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. ஆனால் இதற்கு முஸ்லீம்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, தேவநாகரியில் எழுதப்படும் ஹிந்திய, அரபி எழுத்தில் எழுதப்படும் உருது என்று ஒரு மொழி இரண்டானது. ஹிந்துக்கள் ஹிந்தியுடன் தங்களை அடையாளத்தை பிணைத்துக் கொண்டார்கள். முஸ்லீம்கள் உருதுவுடன். இதன் காரணமாக வட இந்தியாவின் மொழி பிரக்ஞையில் குழப்பம் உருவாகி விட்டது. தத்தம் தாய்மொழிகளை கைவிட்டு மக்கள் எல்லாவற்றையும் ஹிந்தி/உருது என்று கருத ஆரம்பித்தனர். இது தான், வடஇந்தியாவில் மொழிவாரி மாநில எல்லை சீர்திருத்தம் நடக்காததற்கு முக்கிய காரணம். மக்களுக்கும் சரி, அந்த பகுதியைச் சேர்ந்த தலைவர்களுக்கும் சரி, தங்கள் மொழிகளுக்கு மாநிலம் அமைக்க வேண்டும், அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று தோன்றவேயில்லை என்பதே உண்மை. இதில் மத்திய அரசை குறை கூறுவதில் எந்த பயனும் இல்லை. மக்களாட்சி எனும் பொழுது மக்களின் முன்னுரிமைகள் (priorities) தான் அரசில் பிரதிபலிக்கும்.
இப்பொழுது முழு இந்தியாவிற்கு வருவோம். மத்திய அரசு ஹிந்தியை திணித்தது என்பதே நமக்கு பரிச்சயமான வாதம். ஆனால் என்னைக் கேட்டால் நாம் இன்னும் இதை புதுமையாகக் காண வேண்டும் என்று கூறுவேன். நமது சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் நமது தலைவர்கள் தேசம் என்ற கருத்தை ஐரோப்பாவிலிருந்து கற்றிருந்தனர். அங்கு தேசம் என்பது பெரும்பாலும் மொழிவாரியாக அமைந்ததே ஆகும். இதன் காரணமாக தேசம் என்றால் அதற்கு ஒரு தேசிய மொழி இருக்க வேண்டும் என்ற கருத்து நிலவியது (இன்று கூட நிறைய பேர் ஹிந்தியை தேசிய மொழி என்று கருதுவதற்கு வேர் அங்கு தான் இருக்கிறது).
விவேகாநந்தர் முதலியோர் நம்மிடையே வேற்றுமைகளுக்கு அப்பால் உள்ள கலாச்சார ஒற்றுமையை பறைசாற்றி, அது நமது தலைவர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது என்பது உண்மை தான் என்றாலும், இந்த தேசிய மொழிக் கொள்கை இருக்கவே செய்தது. இது தான் சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் ஹிந்தி தேசிய மொழி என்றும் பாக்கிஸ்தானில் உருது தேசிய மொழி என்றும் உருவாகக் காரணம். ஆனால் பாகிஸ்தானில் இது ஒரு முழுமையான மொழித்திணிப்பாக உருவெடுத்தது. ஜின்னா அவர்கள் டாக்கா சென்ற பொழுது, “நீங்கள் உருதுவை ஏற்றே தீர வேண்டும்” என்று பேசுகிறார். இது போன்ற திணிப்புகளால் வங்கத்தில் கிளர்ச்சி எழுகிறது. அங்கு மத்திய அரசில் பக்குவக்குறைவு காரணமாக, மொழிப்பிரச்சனை இனப்பிரச்சனையாக மாறி, இனப்படுகொலை ஏற்பட்டு நாடே இரண்டானது.
இந்தியாவில் நிலைமை வேறு விதமாக இருந்தது. இங்கும் தேசியத்தலைவர்களிடையே ஹிந்தி தேசிய மொழி என்ற ஒரு கற்பிதம் இருந்தது உண்மை தான் என்றாலும், கொஞ்சம் பக்குவமானவர்கள் என்பதாலோ, நம்மிடையே நிலவும் இயற்கையான ஹிந்துத்துவ மனப்பான்மையாலோ, சமரசம் (compromise) செய்து விட்டனர். இதன் காரணமாக தான் மாநில எல்லைகள் சீர்திருத்தப்பட்டது. இன்று நாம் ஓரளவிற்கு மொழிப்பிரச்சனை பெரிய அளவில் வெடிக்காமல், பாகிஸ்தான், இலங்கை போல் இனப்படுகொலை நடக்காமல் முன்னே செல்ல முடிந்ததற்கு இது தான் காரணம்.
திராவிட அரசியில்வாதிகள் மொழித்திணிப்பு என்று இதைக் காண்பதில் வியப்பு இல்லை. இது அவர்களுக்கு இயற்கையான பார்வை தான். காரணம், அவர்களும் இதே போல் தேசிய மொழி என்று ஐரோப்பாவில் நடந்த மொழி அழிப்பு இந்தியாவிலும் நிகழ்ந்துவிடும் என்று அஞ்சியே இருப்பார்கள். ஆனால் மத்திய அரசு நடந்து கொண்ட விதம் அது ஒரு திணிப்பு என்று நாம் கருத இடமளிக்கவில்லை என்றே நான் கருதுகிறேன். தேசம் என்றால் என்ன என்பதில் ஒரு தெளிவின்மை இருந்தததனால் ஏற்பட்ட தேசியமொழிக்கொள்கை, மக்களின் எதிர்ப்பை ஜனநாயக ரீதியாக ஏற்றுக் கொண்டு முதிர்ச்சியடைந்தது என்றே நாம் இன்று வரலாற்றை பார்க்க வேண்டும். இதுவே மத்திய அரசையும் ப்ராந்தியப் பார்வையையும் ஒற்றுமையோடு முன்னே எடுத்துச் செல்ல உதவும்.
நன்றி: திரு. கார்த்திக் வைத்யநாதன்
இந்தி மொழி சுமார் 90 வகை கிளை மொழிகளை உள்ளடக்கியது என்பது 1960-70 ஆண்டுகளிலேயே முன்னாள் அதிமுக அமைச்சர் மற்றும் தமிழ்நாடு முன்னாள் சட்டப்பேரவை தலைவரும் ஆகிய திரு கா காளிமுத்து அவர்கள் மேடை தோறும் முழங்கிய விஷயம் தான். இது ஒன்றும் புதியது அல்ல.பீகாரைப்பற்றி முழங்கிய அதாவது பீகாரின் கிளைமொழிகளைப்பற்றி முழங்கிய அன்பர் கீழ்க்கண்ட உண்மைகளை உணர வேண்டும்.
ஒவ்வொரு நாட்டிலும் ஒரு பெரிய மொழி ஆட்சி செய்யும் போது, பல கிளை மொழிகள் சேர்ந்து தான் , சிறு மாறுதல்களுடன் பெரிய மொழியே உருவாகிறது.இந்தியாவை பிரித்தாள விரும்பிய ஆங்கிலேயர்கள் குறுநில மன்னர்களிடையே சண்டையை உருவாக்கி , அவர்களில் ஒருவருக்கு தங்கள் உதவியை அதாவது ராணுவ உதவியை அளித்து, ஒரு குறுநில மன்னரை அழித்தவுடன் , யாருக்கு வெற்றி கிடைத்ததோ அவர்களிடம் சிறு திரை ( கப்பம்) வசூலித்து தான் தங்கள் ராஜ்யத்தை விரிவடைய செய்தனர். இப்போது நம் நாட்டில் இடது சாரியினர் என்று சொல்லிக்கொள்ளும் அன்பர்கள் அதே வேலையை செய்ய முயற்சிக்கின்றனர்.
சீனாவில் எவ்வளவோ கிளைமொழிகள் உள்ளன. அவற்றைப்பற்றி இங்குள்ள காம்ரேடுகளுக்கு ஏதாவது தெரியுமா ? முக்கியமாக சீன அரசு மந்தாரின் என்ற மொழியை கட்டாயப்படுத்தி தான் பொதுமொழி ஆக்கி உள்ளது. மந்தாரினுக்கு இணையான காண்டனீஸ் எனப்படும் மொழி இன்னமும் சீனாவில் உள்ளது. ஆனால் சீன அரசு காண்டநீசு மொழியையும், மந்தாரின் மொழியின் எழுத்துக்களிலேயே எழுதப்படவேண்டும் என்று சொல்லி, தனி எழுத்துக்களை பயன்படுத்த தடை விதித்து விட்டது.
ஆங்கிலம் என்று இன்று சொல்லப்படும் மொழி சுமார் 500 வருடங்களுக்கு முன்னர் கிடையாது. அன்றைய இங்கிலாந்தில் இருந்த பல கிளை மொழிகளை இணைத்து தான் ஆங்கிலம் உருவாக்கப்பட்டது. இந்த வரலாறு தெரியாத அன்பர் வீணாக புலம்பி இருக்கிறார். உதாரணமாக ஷேக்ஸ்பியர் எழுதிய ஆங்கிலம் இன்று இங்கிலாந்திலேயே இல்லை. ஷேக்ஸ்பியர் நாடகங்கள் புதிய ஆங்கிலத்தில் தான் ( modern english ) நடத்தப்படுகின்றன. மொழிகளின் நிலை அது தான். காலமாற்றத்தால், மொழி மாறுதல் அடைகிறது. சத்தீஷ்கர் மாநிலத்தில் சுமார் 3 கோடி பேர் பேசும் மொழியை , ஆட்சி மொழியாக அந்த மாநில அரசு தெரிந்தெடுத்துக் கொள்ளலாம். அதற்கு நமது அரசியல் சட்டத்தில் இடம் இருக்கிறது. அதை விட்டுவிட்டு, இந்தி மொழி மற்ற மொழிகளை அழித்துவிடும் என்று சொல்வது, தவறு. பிரிவினை சக்திகளின் கையில் இந்தியாவை சிக்க வைக்க மட்டுமே இந்த முயற்சி அழைத்து செல்லும். இந்திய ஆட்சி மொழியாக இந்தி ஏற்கப்பட்ட போதிலும் , மற்ற மாநில மொழிகளின் வளர்ச்சிக்கு என்று அப்போதைய நேரு தலைமையிலான மத்திய அரசு ஏராளம் நிதி ஒதுக்கியதுடன் , மாநில அரசுகளின் மொழிகளில் அனைத்து பாடப்புத்தகங்களும் அச்சிட தேவையான ஏராளம் மான்யமும் அளித்தது. தமிழ் நாட்டில் இருந்த கழக அரசுகள் அதனை பயன்படுத்திக்கொள்ளாமல் , ஒவ்வொரு வருடமும் மார்ச் 31- ஐ ஒட்டி, அந்த நிதியை மத்திய அரசுக்கே திருப்பி அளித்துள்ளன என்பது பற்றி , ஒரு விரிவான கட்டுரை துக்ளக் தமிழ் வாரம் இருமுறையில் வந்தது. மேலும் விவரம் வேண்டுவோர் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் மாநில அரசுகளின் அலுவலகங்களில் இருந்து , சமீப கால புள்ளி விவரங்களை பெற்று , மாநில மொழிகளின் வளர்ச்சிக்கு மத்திய அரசு எவ்வளவு நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் 1964-65 இல் ஏற்பட்ட இந்தி எதிர்ப்பு போராட்டம் வேறு. இன்றைய இந்தியா வேறு. அதே இந்தி எதிர்ப்பு என்பது, குறுகிய புத்தி படைத்த , தவறான வழி நடத்தி சென்ற சிலரால் ஏற்பட்டது. மாவோயிஸ்டுகள் தாங்கள் பரவியுள்ள இடங்களில் , மக்களும் அவர்களது மொழியும் புறக்கணிக்கப் படுவதாக சொல்லி பொய் பிரச்சாரம் செய்து, இந்தியாவில் மேலும் குழப்பங்களை விளைவிக்க திட்டமிட்டு செயல்படும் சீன ஏஜெண்டுகள் ஆவார்கள்.
இந்தி வேண்டாம் என்று சொல்லி, ஆங்கிலத்தை கெட்டியாக பிடித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி, ஆங்கிலம் கேடயம் என்று சொல்லிய தமிழக அரசியல்வாதிகள் , எங்கும் ஆங்கிலம் பரவி , தமிழை இன்று முற்றிலுமாக அழித்து விட்டனர் என்பதே உண்மை. இந்தி பிற மொழிகளை அழிக்கவில்லை. ஆங்கிலம்தான் இந்திய மொழிகளை அழித்தது. நம் நாட்டுக்கு ஒரு பொது மொழி இருப்பது சரியானதே. மொழிகள் ஒன்றுக்கு ஒன்று எதிரி அல்ல. அதை வைத்து அரசியல் செய்த மோசடிக்காரர்கள் விரைவில் அழிவார்கள். இந்தி இந்திய மொழி. பன்னாட்டு கம்பெனிகள் இந்தியாவின் தேசீயத்தை அழித்து, இந்தியாவை தங்களுக்கு மீண்டும் அடிமை ஆக்கும் முயற்சியில் , இது போன்ற விஷமிகளை வளர்த்து விட்டுள்ளனர். இதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ் நாட்டிலேயே 9 தமிழ் உள்ளது. உதாரணமாக திருநெல்வேலியிலே என்னலே வாலே போலே என்று பேசுவார்கள். தஞ்சாவூரில் எண்பது(80) என்பதை எம்ப்ளது, எம்ப்லத்து ஒன்னு, எம்ப்லத்து ரெண்டு, எம்ப்லத்து மூணு என்று ஆரம்பிப்பார்கள். கோவை தமிழ் சற்று இழுத்து இழுத்து பாக்கியராஜ் சினிமாவில் வருவது போல இருக்கும். நாஞ்சில் தமிழ் சிறிது மலையாளம் கலந்து இருக்கும். இவை எல்லாம் தமிழே. இதே போலத்தான் இந்தியில் உள்ள வட்டார வழக்குகளே இந்த கிளை மொழிகள். உதாரணமாக புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் சோற்றுக்கு தொட்டுக்கொள்ள உதவும் வற்றல் குழம்பு, மற்றும் சாம்பார் போன்றவற்றை வெஞ்சனம் என்று கூறுவார்கள். இது வட்டார வழக்கு ஆகும். வட்டார வழக்கு என்பது ஒரு தனி மொழி அல்ல. அது ஒரு கிளை மட்டுமே. வட்டார வழக்குகள் அழிவதில்லை சிறிது சிறிதாக மாறிக்கொண்டே இருக்கும். என் தந்தை பேசிய தமிழை நான் இன்று பேசினால் யாருக்கும் 20 சதவீதம் புரியாது. சாளரம் என்ற தமிழ் சொல் இன்று வழக்கில் இல்லை. எவ்வளவோ பழைய தமிழ் சொற்கள் இன்று வழக்கொழிந்து போய்விட்டன. பேஸ் புக் நண்பர் கூறிய இந்தியின் கிளை மொழிகளும் இப்படி ஒரு வட்டார வழக்கு வகையை சேர்ந்தவை தான். நம் மாநிலத்தில் ஒன்பது தமிழ் இருக்கு என்று சொல்லி , தமிழகத்தை ஒன்பதாக பிரிக்க வேண்டும் என்று சொல்லும் மூடர்களைப்போலத்தான், இந்தி பிற இந்திய மொழிகளை அழித்துவிடும் என்று சொல்பவர்களும். சீன ஏஜெண்டுகளிடம் எச்சரிக்கையாக இருப்போம்.
“வெள்ளைவாரணன்
November 19, 2013 at 4:21 pm “-
என்னுடைய மேற்சொன்ன கடிதத்தில் துக்ளக் வாரமிருமுறை என்பதை மாதம் இருமுறை ( fortnightly )என்று மாற்றி படிக்க வேண்டுகிறேன். தவறுக்கு வருந்துகிறேன். அப்போது , அதாவது 1970-80 களில் துக்ளக் மாதம் இருமுறையாக இருந்து பின்னர் தான் வாரப்பத்திரிக்கையாக மாற்றப்பட்டது.
மொழிகள் எல்லாமே பிற மனிதர்களுடன் தொடர்பு கொள்ள உதவும் கருவிகளே. பல மொழிகளில் குறைந்தது 200 வாக்கியங்களை ( அன்றாடம் பயன்படும்) பேச தெரிந்து கொண்டால், நம் அனைவருக்குமே நல்லது. எல்லா மொழிகளுக்குமே ஒரு மார்க்கெட் வால்யூ உள்ளது. ஒரு மொழி இன்னொரு மொழியை வளர்க்குமே தவிர , அழிக்காது . ஏனெனில் இரண்டும் மொழிகளே. தகவல்கள் பிறருக்கு சென்று அடையக்கூடாது என்று நினைக்கும் சர்வாதிகாரிகள் மட்டுமே தகவல் தொடர்பு சாதனமாகிய மொழிகளை அழிக்க விரும்புவர். ஏனெனில் தகவல்கள் செய்திகள் ரூபத்திலோ, புத்தக வடிவிலோ, வேறு எந்த வடிவிலோ பொது மக்களை சென்று அடைந்தால் , தன்னுடைய பதவிக்கு ஆபத்து வந்துவிடும் என்று சர்வாதிகாரிகள் அஞ்சுவார்கள். அதேபோல அரசியல்வாதிகளும் தங்களுக்கு எதிரான விஷயங்கள் மீடியாவில் வந்துவிடுமோ என்று அஞ்சி , தகவல் தொடர்பு சாதனங்களுக்கு தடை விதிப்பார்கள். ஒரு மொழி மட்டும் தெரிந்தவன் ஒரு மனிதனுக்கு சமம். ஐந்து மொழி கற்றவன் ஐந்து மனிதர்களுக்கு சமமான பலம் பெறுவான். இதுதான் உண்மை. ஒரு மொழி பேசும் சமுதாயம் சிறப்பாக வாழ்வதும், அல்லது அழிந்து போவதும், அந்த சமுதாயத்தின் கடும் உழைப்பு, பிறருடன் தொடர்பு கொண்டு , பிறரிடம் உள்ள நல்ல விஷயங்களை அறிந்து, தானும் பின்பற்றி உயரும் பாங்கு, இவற்றை பொருத்தது.
தேங்கிய நீர் விஷமாவது போல, பிறமொழிகளின் திசை சொற்களை ஏற்காத மொழிகளும் காலப்போக்கில் காணாமல் போகும். இன்று அதுதான் சில இந்திய மொழிகளுக்கு நேர்ந்து வருகிறது. அதற்கு பிற மொழிகளை குற்றம் சொல்வதைவிட, உண்மையான காரணம் அரசியல்வாதிகளின் தவறான கருத்துக்களே என்பதை நாம் உணரவேண்டும்.
பயன்பாட்டில் உள்ள மொழிகள் தான் மேலும் மேலும் வளரும். திசை சொற்களை ஏற்காத மொழிகள் விரைவில் பயன்பாட்டில் இருந்து மறையும். இந்த அடிப்படை உண்மையை ஆங்கிலம் பேசும் மக்கள் உணர்ந்து, அவர்களின் அகராதியில் ( அதாவது டிக்ஷனரியில்) லட்சக்கணக்கான திசை சொற்களை , பிற மொழிகளில் இருந்து சேர்த்துள்ளனர். நாமும் இதனை செய்யாவிட்டால், நம் மொழிகள் காணாமல் போகும் அபாயம் உள்ளது. பிறருடன் சேர்ந்து வாழ்பவன் நிம்மதியாக வாழ்வான். பிறரிடம் இருந்து ஒதுங்கி வாழ்பவன் , சிறிது காலத்துக்கு பின்னர் , யாருடைய தொடர்பும் இன்றி , தனித்து போய்விடுவான்.
I agree to the views expressed. Getting to know many languages opens the door for widening your experience and knowledge and personality.
No opportunity should be lost to learn a language when it comes to you.
A garden or a garland consist of many flowers /and trees and it only increases its beauty.
P.S.Raman
நண்பர் வெள்ளைவாரணன் மற்றும் பிரதாப் இருவரின் கருத்துமே பாராட்டுக்கு உரியது. தமிழகத்தில் 9 வட்டார வழக்குகள் மாத்திரம் இல்லை. பல உள்ளன.
1. திருநெல்வேலி : ஏலே அய்யா (அப்பா) என்ன சொன்னாரு? (Chonnaaru)
2. இராமனாதபுரம் 1 : அய்யா(அப்பா) என்ன சொன்னாரு? (sonnaaru)
3. கீழக்கரை : வாப்பா (அப்பா) எப்படி ஈக்காஹ…. (இருக்கிறார்)? சோமா ஈக்காஹலா (சுகமாக இருக்காரா)?
4. இராமநாதபுரம் 2 : மளுக்கா மளுக்கா திலும்ப ஏண்டா போரே?
(மறுபடி மறுபடி திரும்ப ஏன் போகிறாய்?)
5. இராமநாதபுரம் 3 : அங்ஙன என்னடா செய்யே? இங்கிட்டு வாடா? அப்பா என்ன சொல்லிச்சு?
6. காரைக்குடி: அப்புச்சி (அப்பா) என்ன சொன்னாரு?
7. இராமனாதபுரம் 4: எப்படிப்பு இருக்கீஹ?
8. மதுரை : மாயாண்டி வந்திருக்காஹ…., தம்பி மொக்கச்சாமி வந்திருக்காஹ…..
9. திருச்சி : ஆஞ்ஞா (அப்பா) என்ன சொன்னாரு?
10. தஞ்சை : ழகரத்தை அளவுக்கதிகமாக அழுத்தி இல்லாத இடங்களிலும் ழகரத்தை பயன் படுத்துவர்.
11. கோவை : அய்யன் (அப்பா) என்ன சொன்னாரு?
12. ப்ராமண தமிழ் : அன்னா (அப்பா) என்ன சொன்னார்?
13. சென்னை : இன்னா வாத்யாரே அப்பா இன்னா சொன்னாரு?
14. தெலுகு கலந்த தமிழ் : நைனா (அப்பா) என்ன சொன்னார்?
இப்படியாக நீண்டு கொண்டே போகும்.
தமிழகத்தை பொறுத்தவரை ஹிந்தி வேண்டாம் என்று என்று எதிர்த்த அரசியல்வாதிகள் தமிழையோ ஆங்கிலத்தையோ நன்றாக கற்றுக்கொடுக்க வில்லை. ஏன் எந்த ஒரு மொழியையுமே சரியாக கற்றுக்கொடுக்க வில்லை. பெயர் பலகையில் தமிழ் இருக்கவெண்டும் என்று சொல்பவர்கள் கடைகளில் கொடுக்கப்படும் Bill, பொருட்களின் மீது உள்ள Incredients , Manual தமிழில் தான் இருக்க வேண்டும் என கூற வில்லை. இன்று இந்தியா முழுவதும் எல்லா இடங்களிலும் கணினிமயமாகளால் ஆங்கிலத்தில்தான் பில் வழங்கப்படுகிறது. ஹிந்தியிலோ பிராந்திய மொழியிலோ இல்லை.
இப்படி ஆங்க்கிலத்தில் இருப்பவற்றை பெரும்பான்மை இந்தியர்களால் புரிந்துகொள்ள இயலாது.
நிலைமை இப்படி இருக்கையில் சென்ற மத்திய அரசு ஆங்கிலம் கலந்த ஹிந்தியை ஹிங்கிலீஷ் என்ரு அங்கீகரிப்பதாக அறிவித்தது ஒட்டு மொத்த இந்தியருக்கும் செய்த துரோகமாகும்.
மேலும் தேவனாகரியை அப்படியே எல்லோர் தலையிலும் சுமத்துவதும் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஏனெனில் அதில் உள்ள கூட்டெழுத்துக்கள் எழுதவும் வாசிக்கவும் சிக்கலானவை. ப்ரிண்ட் செய்யப்பட்ட தேவனாகரி கூட்டெழுத்துக்கள் கூட எளிதில் வாசிக்க கடினமானவை. தேவனாகரியில் இல்லாத சில குறில் நெடில் மற்றும் மெய்யெழுத்து வடிவங்களுக்கு இடமளித்து கூட்டெழுத்துக்கள் எளிமை படுத்தப்பட வேண்டும்.
ஆயினும் தேவனாகரி எழுத்துக்கள் கையெழுத்தாக எழுதுவதற்கு சிக்கலானவை.
இந்திய மொழிகள் அனைத்திற்கும் ஒரு எளிய அனைத்து உச்சரிப்புகளையும் எழுத வல்ல ஒரு பொதுவான எழுத்துரு அவசியம் தேவை.
கிரந்த எழுத்துக்கள் தென்னக மற்றும் வட இந்திய மொழிகளுக்கு இசைவான எழுத்துருவாக உள்ளதால் அதில் வேண்டிய மாறுதல்களை செய்து கூட்டெழுத்துக்களை நீக்கி மெய்யெழுத்து மற்றும் சில குறில் நெடில் சேர்த்து ஒத்த உருவங்கொண்ட எழுத்துக்களை மாற்றி சீரமைத்தால் முழு பாரதமும் ஏற்கத்தக்க ஒரு சிறப்பான எழுத்துரு கிடைக்கும்.
பொதுவான எளிய எழுத்துரு அனைவராலும் பயன்படுத்தப்பட்டால் பிற இந்திய மொழியை கற்பதும், தட்டச்சு செய்வதும் மிக எளிதாகிவிடும். ஊர்ப்பெயர்களை வெவ்வேறு எழுத்துருக்களில் எழுதவேண்டிய அவசியமும் இல்லாது போகும்.
இந்தியாவின் நாட்டுமொழி “இந்தி” அல்ல….
https://www.facebook.com/groups/PromoteLinguisticEquality/
All the higher education in india is in english, then why should you insist learn hindi, so it is better to learn english instead of hindi,if any one wants to learn Hindi, there is no objection