டாக்டர். பாபா சாகேப் அம்பேத்கர் அவர்கள் தேசிய சின்னங்கள் குறித்து ஆழ்ந்த புரிதல் கொண்டிருந்தார். சிறு வயதில் இருந்தே சம்ஸ்க்ருதத்தின் மீது மிகுந்த பற்று அவருக்கு இருந்தது. நமது புராணங்கள் உறையும் தங்கக் கருவூலம், இலக்கணம், அரசியல், தத்துவம், தருக்கம், நாடகங்கள், விமர்சனங்கள் ஆகியவற்றை சீராட்டி வளர்த்த தொட்டில் என்று சம்ஸ்க்ருத மொழியை அம்பேத்கர் கருதினார். 1 நமது பாரதத்தின் பண்பாட்டு கலாச்சார தொடர்பு மொழியாக சம்ஸ்க்ருதத்தின் மீது அவருக்கு எவ்வளவோ தணியாத ஆர்வம் இருந்தும் அம்மொழியை கற்க விடாமல் கொடுமையாக தடுக்க ஹிந்துப் பழமைவாதிகள் முயற்சித்திருக்கின்றனர். அப்படியான போதிலும் அட்டவணை வகுப்பினருக்கான அகில இந்தியப் பேரவையின் (Executive committee of All India Scheduled Caste Federation) செயற்குழுவில் செப்டெம்பர் 10, 1949ல் தேசிய மொழியாக சம்ஸ்க்ருதத்தை அறிவிக்கப் படவேண்டும் என்பது தமது தனிப்பட்ட விருப்பம் என்று அறிவித்தார். 2
அம்பேத்கர் என்ன சிக்கல்களை சந்தித்தாரோ தெரியவில்லை, இருந்தும் அவர் சம்ஸ்க்ருதத்தைக் கற்றுக் கொண்டிருக்க வேண்டும். தேசிய மொழி குறித்து சர்ச்சை நிகழ்ந்து வந்த காலகட்டத்தில், சம்ஸ்க்ருதம் தேசிய மொழியாக வேண்டும் என்று அவர் பண்டிட் லக்ஷ்மிகாந்த மைத்ரியிடம் அவர் விவாதித்துள்ளார். அதுவும் அவர் மைத்ரியிடம் சம்ஸ்க்ருதத்திலேயே இந்த விவாதத்தை நிகழ்த்தியதாக “ஆஜ்” என்கிற ஹிந்தி தினசரியில் “डा. अम्बेदकर का संस्कृत में वार्तालाप” என்ற தலைப்பில் செப்டெம்பர் 15, 1949ல் செய்தி வெளியானது. இதே செய்தி அந்த பத்திரிகை மட்டும் அல்ல The Leader என்கிற ஆங்கில பத்திரிக்கையிலும் செப்டெம்பர் 13, 1949ல், “THEY CONFER IN SANSKRIT” என்று தலைப்பிட்டு செய்தி வெளி வந்தது. 3
சம்ஸ்க்ருதம் ஒரு பார்ப்பனீய மொழி (Brahminical Language) என்று கடுமையாக பிரச்சாரம் செய்யப் பட்டு பெரும்பாலும் அதை மக்கள் நம்பவும் தொடங்கி விட்ட இக்காலத்தில் அம்பேத்கர் ஏன் அப்படி சொல்ல வேண்டும் என்று சிந்தித்துப் பார்த்தல் அவசியம். அம்பேத்கரைப் போன்ற ஒரு சமூக விடுதலை போராளி இன்னொருவர் இருக்க முடியாது. அதே சமயம் அவரது தேசிய நோக்கும், கொள்கைகளும் அனைவரும் அறிந்ததே.
ஹிந்து மதத்தின் பெரும்பான்மையான பழமையான சமய, கலாசார, கலை, இலக்கிய நூல்கள் சம்ஸ்க்ருதத்திலேயே உள்ளன. இவற்றில் பெருமளவு பிராமணர் அல்லாத இதர வகுப்பைச் சேர்ந்த ஞானிகளாலேயே இயற்றப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ராமாயணம் இயற்றிய வால்மீகியோ, மகாபாரதம் இயற்றிய வியாசனோ பிராமணர்கள் அல்லர். ஆக பிராமணர் மட்டும் அல்லாது எல்லாருக்குமாக இருந்த பண்பாட்டு சின்னமான சம்ஸ்க்ருதம் இன்று சாதியத்தால் மறுக்கப் படுவதை அம்பேத்கர் உணர்ந்திருக்க வேண்டும். உயர்சாதிக் காரர்களின் மேட்டிமைத்தனத்துக்கு சவால் விடுவதாக, சம்ஸ்க்ருத மொழி, அதன் வாயிலாக பெறப்படும் வேத, சாத்திர, இதிகாச, புராணங்களின் ஞானம் தலித் மக்கள் கையில் ஒரு சிறந்த ஆயுதமாக அமையும் என்று அவர் திட்ட வட்டமாக நம்பி இருக்க வேண்டும். இதுவே அவர் சம்ஸ்க்ருதம் தேசிய மொழியாக வேண்டும் என்று விரும்பியதற்கான முக்கிய காரணம் என்று புரிந்து கொள்ள முடிகிறது.

எம்.ஆர்.ஜம்புநாதன்
இந்த எண்ணம் அக்கால ஆரிய சமாஜத்தில் வேரூன்றி இருந்தது. சாதிய ஒழிப்பில் வேதம் எல்லா சாதி மக்களுக்கும் கொண்டு செல்லப் படுவது அவசியம் என்று ஆரிய சமாஜிகள் கருதினர். (ஏனெனில் வேதத்தில் ஒரு இடத்தில் கூட சாதி அடிப்படைக் கருத்துக்கள் இல்லை) இந்த சமயத்தில் ஒரு முக்கிய நிகழ்வாக ஆரிய சமாஜத்தின் தொடர்புடைய திரு ஜம்புநாதன் என்கிற அறிஞர் வேதத்தை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டதை குறிப்பிட வேண்டும்.
நான்கு வேதங்களையும் தமிழில் மொழிபெயர்த்துத் தந்த அறிஞர், மணக்கால் ராமசாமி ஜம்புநாதன் என்னும் எம்.ஆர்.ஜம்புநாதன் என்பவராவார். வேதங்களோடு கடோபநிஷத்தையும், உபநிடதக் கதைகளையும் தமிழில் தந்திருக்கிறார். அவர் தமது “சதபதபிராமணம்’ என்னும் யஜுர்வேத சதபத கதைகள் அடங்கிய மொழிபெயர்ப்பு நூலை, ஹரிஜனப் பெருமக்களின் பாதகமலங்களில் அர்ப்பணம் செய்திருக்கிறார்.
“ஹரிஜனங்களே, உங்களுக்கு நமஸ்காரம். நாங்கள் தலைமுறை தலைமுறையாகச் செய்த பாவங்களுக்குப் பச்சாதாபப்பட்டு பிராயஸ்சித்தம் செய்துகொள்ள விரும்புகிறோம் என வாக்குறுதி செய்து இவ்வேத நூலை உங்கள் பாதகமலங்களில் சமர்ப்பிக்கிறேன். நீங்கள்தான் இவ்வேதங்களைப் படித்து பாரதநாடு மாத்திரமில்லை, பூலோகமுழுவதும் பிரச்சாரம் செய்து மறுபடியும் தர்மஸ்தாபனம் செய்ய வேண்டும்……… இந்நாடு, பூலோகமுழுவதும் புனிதவேதம் விரிந்து தலையோங்க நீங்களே அதற்கேற்ற கங்கையைக் கொண்டுவர முடியுமென இதை நான் உங்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன்”
என்று குறிப்பிடுகிறார்.
இறுதியாக அண்மையில் சம்ஸ்க்ருத உலகம் செய்த மற்றொரு செயல் இங்கே நினைவு கூரத்தக்கது. டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறு அண்மையில் சம்ஸ்க்ருதத்தில் “பீமாயணம்” என்ற பெயரில் ஒரு வேத பண்டிதரால் இயற்றப் பட்டு சாரதா கௌரவ க்ரந்த மாலா நிறுவனத்தால் வெளியிடப் பட்டுள்ளது. பிரபாகர் ஜோஷி எனப்படும் எண்பத்தி நான்கு வயதான இந்த வேத பண்டிதர் இத்தகைய சாதனையை நிகழ்த்தியுள்ளார். 1577 சுலோகங்களில் 21 சர்க்கங்கள் கொண்ட இந்த நூலில் பாபாசாகேப் அம்பேத்கரை “மஹாமாநவன்” என்று குறிப்பிடுகிறார். 4
இது போன்ற முயற்சிகள் மென்மேலும் வளர வேண்டும். வெறும் துதி பாடல்கள் அடங்கிய சடங்கு மொழியாக மட்டும் சம்ஸ்க்ருதம் முடங்கி விடாமல் சமூக விடுதலை மொழியாகவும் ஆக வேண்டும் என்பதே சங்கதம் தளத்தின் அவா.
Notes:
- Dhananjay Kheer, Dr. Ambedkar: Life and Mission, Popular Prakashan, 1990, p.19 ↩
- Dr.Bhimrao Ramji Ambedkar interview in The Sunday Hindustan Standard dated 11-Sep-1949 ↩
- “भारतस्य राजभाषा संस्कृतं भवेत्” इति संविधानसभायां शोधप्रस्तावः आनीतः आसीत् यस्य प्रस्तावस्य कृते हस्ताक्षरकर्तृषु प्रस्तावमण्डयितॄषु च डा. अम्बेदकरः अपि अन्यतमः आसीत्। संविधानसभायां यदा राजभाषासम्बन्धे चर्चा प्रवर्तते स्म तदा डा. अम्बेदकरः किञ्च पण्डितलक्ष्मीकान्तमैत्रः व परस्परं संस्कृतेन वार्तालापः कृतवन्तौ। तत्सम्बन्धे “आज” इति हिन्दीदिनपत्रिकायां 15 सितम्बर 1949 तमे दिनाङ्के प्रकाशिते प्रकाशिता वार्ता – “डा. अम्बेदकर का संस्कृत में वार्तालाप” इति अस्ति। एषा एव वार्ता प्रयागतः प्रकाश्यायां THE LEADER इति आंग्लपत्रिकायां 13 सितम्बर 1949 तमे दिनाङ्के मुखपृष्ठे प्रकाशिता आसीत्। तस्याः शीर्षकम् आसीत् “THEY CONFER IN SANSKRIT” इति। देहल्यां राष्ट्रीये अभिलेखागारे शताधिकवर्षेभ्यः सर्वासां पत्रिकाणां समाचारपत्राणां च “मैक्रो फिल्म” कृत्वा संरक्षितवन्तः सन्ति। तानि सर्वाणि दृष्ट्वा अस्माभिः बहु अन्वेषणं,गवेषणं च कृत्वा एताः महत्त्वभूताः वार्ताः प्राप्ताः। – चमू कृष्ण शास्त्री, Sambhashana Sandesha, June 2003 ↩
- Ambedkar’s first biography in Sanskrit ↩
எல்லோரும் சமஸ்க்ருதம் கற்கவேண்டும் என்ற அண்ணல் அன்பேத்கரின் கனவை நனவாக்கும் சங்கதம் இணையதள நிறுவனர்கள், ஆசிரியர் குழு அனைவருக்கும் அடியேனின் பாராட்டுக்கள் நன்றிகள் வாழ்த்துக்கள்.
சிவஸ்ரீ.
இன்றுதான் இந்த வலைதளத்திற்குள் நுழைந்தேன். கீதையைக் கற்றுக் கொண்ட ஆசைப்பட்டேன். நல்ல தகவல்கள் நிறைய உள்ளன. தங்களுக்கு மிக்க நன்றி.தொடா்ந்து படிப்பேன்.
இன்றுதான் இத்தலத்தை பர்வைடேன் மிக அருமை எனக்கு கீதை படிக்கும் அவளை துண்டியது மிக்க நன்றி
அய்யா நமது கஷ்டங்கல்யோ அல்லது நம்வாழ்வில் ஏற்படும் அன்றாட பிரச்சினைகளை கீதைஇலுல்ல ஸ்லோகங்களை படிப்பதால் விலகும் என்று கூறுகிறார்களே அது உண்மைய நன் ஸ்லோகங்களை தமிழிலே படிக்கலாமா தயவு செய்து எனக்கு கூறுங்கள் நன்றி