பாண்டியர் காலத்திய சம்ஸ்க்ருத கவிதைகள்

சம்ஸ்க்ருதம் ஒரு வட இந்திய மொழி என்று பலர் நினைக்கிறார்கள். தமிழ் தேசத்தில் வடமொழி எவ்வாறு இருந்தது என்பது பலர் தெரிந்து கொள்ள முயற்சி செய்யாமலேயே தம் மனச்சாய்வுக்கு ஏற்ப இது போன்ற கருத்துக்களை நம்பி வருகின்றனர். உண்மையில் தமிழ்நாட்டு மன்னர்களான சோழ, பாண்டிய, சேர மன்னர்கள் சம்ஸ்க்ருத மொழியை பெரிதும் போற்றி வளர்த்திருக்கிறார்கள். சோழர் காலத்தில் சம்ஸ்க்ருத கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்களில் காணப்படும் அரசாணைகள், குறிப்புகள் ஆகியவற்றில் சம்ஸ்க்ருத மொழி பயன்படுத்தப் பட்டது குறித்து முன்பொரு கட்டுரை இந்த தளத்தில் வெளியானது. இக்கட்டுரையில் பாண்டியர் காலத்தில் சம்ஸ்க்ருத மொழியின் புழக்கத்தை குறித்து பார்க்கலாம்.

பாண்டிய மன்னர்களில் பெரும்பாலானவர் கல்வி செல்வம் நிறைந்தவர்கள், கவிஞர்களைப் போற்றியவர்கள். தமிழ் கவிஞர்களை மட்டுமல்ல, சம்ஸ்க்ருத கவிஞர்களையும் தான்! முதலாம் மாறவர்மன் ராஜசிம்ஹன் என்னும் பாண்டிய மன்னன், வித்யாசார விபூஷணன் அதாவது கல்விக்கு அணிசேர்ப்பவன் என்று பெயர் பெற்ற மன்னன்.

समस्त शास्त्रार्णव कर्णधारो यदुध्भव: सुन्दरपाण्ड्य नाम:
ஸமஸ்த ஶாஸ்த்ரார்ணவ கர்ணதா⁴ரோ யது³த்⁴ப⁴வ: ஸுந்த³ரபாண்ட்³ய நாம:

என்று சுந்தர பாண்டியன், கல்விக் கடலை கடக்கும் மாலுமியாக வர்ணிக்கப் படுகிறான்.

சம்ஸ்க்ருதத்தில் அமைந்த பாண்டியர் காலத்து கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்கள் பலவும் மதுரை, மதுரையடுத்த ஆனைமலை, சின்னமனூர், வேள்விக்குடி, திருப்பரங்குன்றம், ஸ்ரீரங்கம், சிவகாசி, தளவாய்புரம் என்று பல்வேறு இடங்களில் கிடைக்கின்றன. இவற்றில் செயற்கரிய செயல் புரிந்த மன்னனை புகழ்ந்து கூறும் ப்ரஷஸ்தி, மன்னர்கள் அளித்த கொடை, ஆணைகள் ஆகியவை சம்ஸ்க்ருத கவிதை வடிவில் அமைந்துள்ளன.

சம்ஸ்க்ருத செய்யுள் இலக்கண விதிகளுக்கேற்ப பலவகை அழகிய சந்த அமைப்புகளில் அமைந்தவை சிலவற்றைப் பார்ப்போம்.

வேள்விக்குடி செப்புப் பட்டயங்களில் கிடைத்த குறிப்புகளில் பாண்டியன் நெடுஞ்சடையன் என்னும் மன்னன் குறித்த ஒரு கவிதை…

नरो नु रक्षो नु हरो नु पूरुष: परो नु शक्रोनु सरोषमागत: |
इतिस्म मत्वा युधि यम्भयार्द्धित: पलायते पल्लवमल्ल भूपति: ||

நரோ நு ரக்ஷோ நு ஹரோ நு பூருஷ: பரோ நு ஶக்ரோனு ஸரோஷமாக³த: |
இதிஸ்ம மத்வா யுதி⁴ யம்ப⁴யார்த்³தி⁴த: பலாயதே பல்லவமல்ல பூ⁴பதி: ||

போர்களத்தில் இவனைக் கண்டு
சினத்துடன் வந்த சிவனோ, இவன் மனிதனோ!
என்று நினைத்து புறமுதுகிட்டு ஓடுகிறான் பல்லவமல்லன்!

பராந்தகன் வீர நாராயண பாண்டியன் குறித்து தளவாய்புரம் செப்பு தகடுகளில் காணப்படும் கவிதை ஒன்று

तस्यानुजो वह्निररिन्धनानां
श्रीवीरनारायण नामधेय: |
सोमोपमो मित्र कुमुद्वतीनां
नाथोऽभवद्वारिधि मेखलाया: ||

தஸ்யாநுஜோ வஹ்நிரரிந்த⁴னானாம்ʼ
ஸ்ரீவீரநாராயண நாமதே⁴ய: |
ஸோமோபமோ மித்ர குமுத்³வதீநாம்ʼ
நாதோ²(அ)ப⁴வத்³வாரிதி⁴ மேக²லாயா: ||

இந்திரவ்ரஜம் என்னும் சந்தத்தில் அமைந்த இக்கவிதை, “வரகுண பாண்டியனின் சகோதரன் வீரநாராயணன் என்னும் பெயருடைய இவன், மரங்கள் போன்ற எதிரிகளுக்கு தீயைப் போன்றவன், அல்லி மலர் போன்ற நண்பர்களுக்கு நிலவு போன்றவன், கடல் சூழ்ந்த இவ்வுலகுக்கு தலைவன் ஆனவன்” என்று கூறுகிறது.

பாண்டியன் உக்ர பெருவழுதி போரில் வெற்றி அடைந்தது குறித்து வீர ரசம் மிகுந்த கவிதை ஒன்று சின்னமனூர் செப்புத்தகடுகளில் காணப்படுகிறது:

खरगिरिमभित: करन्द्रियूथं रिपुनृप शोणित शोणिदन्तमाजौ |
करकलित कृपाण मात्र सैन्यस्सरभ समुग्रमुदग्रमहीत्य: ||

க²ரகி³ரிமபி⁴த: கரந்த்³ரியூத²ம்ʼ ரிபுன்ருʼப ஶோணித ஶோணித³ந்தமாஜௌ |
கரகலித க்ருʼபாண மாத்ர ஸைன்யஸ்ஸரப⁴ ஸமுக்³ரமுத³க்³ரமஹீத்ய: ||

கரகிரி என்கிற இடத்தில் நடைபெற்ற போரில், பலம் பொருந்திய உக்ரன் என்னும் பெயர்பெற்ற அரசன். அவன் பலம் எப்படிப்பட்டது என்றால் அவனது படைகள் அவன் கையிலிருக்கும் நீண்ட கூரிய வாளைப் போன்றவை! அவனிடம் உள்ள வலிவுமிக்க யானைகளோ எதிரி அரசர்களை கொன்றதால் சிவந்த தந்தங்களை உடையவை!

இன்னொரு கவிதையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் விஸ்வரூப தரிசனத்தை கவி நினைத்துப் பார்த்து, அந்த சமயத்தில் விஷ்ணுவுக்கு உணவளிக்க ஈரேழு பதினான்கு உலகாளும் இயலாது ஆனால் எங்கள் மன்னன் சுந்தர பாண்டியனால் மட்டுமே முடியும் என்கிறார்.

संपूर्णं विदधे गभीरमुदरंरंगेशितुशार्ङ्गिण: |
यस्याभूत् भुवनैश्चतुर्दशभिरप्यापूरणं दुर्लभम् ||

ஸம்பூர்ணம்ʼ வித³தே⁴ க³பீ⁴ரமுத³ரம்ʼரங்கே³ஶிதுஶார்ங்கி³ண: |
யஸ்யாபூ⁴த் பு⁴வனைஶ்சதுர்த³ஶபி⁴ரப்யாபூரணம்ʼ து³ர்லப⁴ம் ||

ஓசை நயமிக்க இது போன்ற பல ஸ்லோகங்கள் பாண்டியர்களின் கல்வெட்டுக்களில் காணக்கிடைக்கின்றன.

ஸ்ரீரங்கம் சம்பந்தமாக இன்னொரு கவிதையும் கிடைத்துள்ளது

चैत्रमासि चकार राजतपनो यात्रोत्सवं रङ्गिन:
श्लाघां कान्तिमयै: तथाद्भूतमयैस्संपन्मयै वासरै:
नन्दन्त्यैव हि तेन विस्मयपदं ये बिभ्रते चेतनां
अचैतन्यमृतोपि यत्र दधते वृक्षा विकासम्परम् ||

சைத்ரமாஸி சகார ராஜதபனோ யாத்ரோத்ஸவம்ʼ ரங்கி³ன:
ஶ்லாகா⁴ம்ʼ காந்திமயை: ததா²த்³பூ⁴தமயைஸ்ஸம்பன்மயை வாஸரை:
நந்த³ந்த்யைவ ஹி தேன விஸ்மயபத³ம்ʼ யே பி³ப்⁴ரதே சேதனாம்ʼ
அசைதன்யம்ருʼதோபி யத்ர த³த⁴தே வ்ருʼக்ஷா விகாஸம்பரம் ||

“சித்திரை மாதத்தில் அரசர்களில் சூரியன் போன்றவன், எங்கும் சுபிட்சமாக இருக்க, ரங்கநாதருக்கு பல்லக்கு உத்சவம் செய்விக்கிறான். இது கண்டு அறிவுடையோர் அகமகிழ்வது அதிசயமல்ல, மரங்களே மகிழ்ச்சியில் பூத்துக் குலுங்குகின்றனவே!” என்கிறது இந்த ஸ்லோகம்.

பாண்டியர்கள் வேத வழியில் நடந்தவர்கள். காரிக்கிழார் என்னும் சங்ககாலப் புலவர் “..அத்தை நின் குடையே முனிவர் முக்கட்செல்வர் நகர் வலம் செய்வதற்கே இறைஞ்சுக பெரும” என்று “அரசே! நினது முடி நான்கு வேதத்தினை உடைய முனிவர்கள் நின்னை நீடு வாழ்க என்று ஆசிர்வதிக்கும் கையின் முன்னே வணங்குக.” என்று கூறும் அளவிற்கு வேதத்தை மதித்து, சம்ஸ்க்ருத கல்வி பெற்ற சான்றோர்களை அரவணைத்து சென்றுள்ளனர்.

பாண்டியர்களுக்கும் அகஸ்திய முனிவருக்கும் உள்ள தொடர்பு பற்றி ஒரு ஸ்லோகம்;

अस्तम्भयत्क्षितिधरं प्रविजृम्भमाणं
अम्भसमस्तमपिबज्जलधेश्च यस्य |
कुम्भोद्भवो भवति यस्य मुनि: पुरोधसा
श्रीनिधिर्जयति पाण्ड्य नरेन्द्र वंश: ||

அஸ்தம்ப⁴யத்க்ஷிதித⁴ரம்ʼ ப்ரவிஜ்ருʼம்ப⁴மாணம்ʼ
அம்ப⁴ஸமஸ்தமபிப³ஜ்ஜலதே⁴ஶ்ச யஸ்ய |
கும்போ⁴த்³ப⁴வோ ப⁴வதி யஸ்ய முனி: புரோத⁴ஸா
ஶ்ரீநிதி⁴ர்ஜயதி பாண்ட்³ய நரேந்த்³ர வம்ʼஶ: ||

விந்திய மலை வளருவதைத் தடுத்து, கடலைத்தனையும் குடித்த, குடத்தில் பிறந்த குறுமுனி அகத்தியரைக் குலகுருவாகக் கொண்ட, மனிதர்களில் மாண்புடைய பாண்டிய மன்னர்கள் வாழ்க! செழுமையில் குறைவிலாத இவர் தம் வம்சம் வளர்க என்கிறது இந்த ஸ்லோகம்.

மகாபாரதம் முதல் காளிதாசனின் காவியங்கள் வரை பாண்டியர்கள் இடம்பெற்றுள்ளனர். பாண்டியர்கள் சமஸ்க்ருதத்தை வெறுத்ததில்லை. cote d’ivoire தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழுக்கு தொண்டு செய்த பாண்டியர்களே சம்ஸ்க்ருதத்தையும் போற்றி வந்துள்ளனர்.

குறிப்புகள்

  • Sanskrit Inscriptions Of Tamilnadu – A Literay Study By Charu Madhavan, ISBN – 8188934445

3 Comments பாண்டியர் காலத்திய சம்ஸ்க்ருத கவிதைகள்

  1. dev

    மிக அபூர்வமான தகவல்கள்;
    பாராட்டுக்குரிய கட்டுரை.

    तस्यानुजो वह्निररिन्धनानां
    श्रीवीरनारायण नामधेय: |
    सोमोपमो मित्र कुमुद्वतीनां
    नाथोऽभवद्वारिधि मेखलाया: ||

    சந்தஸின் பெயர் : இந்த்ர வஜ்ரா
    சரணத்துக்கு 11 வர்ணங்கள்

    தேவ்

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)