சம்ஸ்க்ருதம் தெரியாத மன்னன்

சாலிவாகனனின் நிஜப் பெயர் சதகர்ணி. இன்றைய ஆந்திர – ஒரிஸ்ஸா – மகாராஷ்டிரா எல்லைகளில் அமைந்த ஒரு குறு நில மன்னன். இவனது தாய் பெயர் கௌதமி. பின்னாளில் தன் பெயரை “கௌதமி புத்ர சதகர்ணி” என்று இம்மன்னன் பதிவு செய்து கொண்டான். தாய் மீது அவ்வளவு அன்பு. இளம் வயதில், அவனுக்கு ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி ஆளவேண்டும் என்ற கனவு உண்டு.

ஒரு சமயம் சுவர்ணன் என்கிற வியாபாரி பயணத்தின் போது, திருடர்களால் தாக்கப்பட சாலிவாகனன் சென்று அந்த வியாபாரியைக் காப்பாற்றுகிறான். இதனால் மகிழ்ந்த அந்த வியாபாரி, அந்த ஊரிலேயே தங்கி, சாலிவாகனனின் அரசுக்கு நிறைய பொருளுதவி செய்கிறான். அதனைக் கொண்டு சாலிவாகனன் மேலும் தன் படை பலத்தை விரிவு படுத்துகிறான்.

பயந்து தப்பித்து ஓடிய திருடர்கள், பக்கத்து நாடான பிரதிஷ்டானம் (மகாராஷ்டிரத்தில் ஒரு பகுதி) என்கிற தேசத்து மன்னன் மகாபானனை சந்தித்து சாலிவாகனன் அந்நாட்டின் மீது படையெடுத்து வருவதற்காக தயார் செய்து கொண்டிருப்பதாக சொல்கின்றனர். இதனால் கோபம் அடைந்த அம்மன்னன் அதற்கு முன் தானே சென்று சாலிவாகனனை அடக்குவதாக சபதம் எடுக்கிறான்.

இந்நிலையை உணர்ந்த சாலிவாகனன், முன்னெச்சரிக்கையாக மகாபானன் படைதிரட்டும் முன்பே, திடீரென்று தாக்கி அவனை தோற்கடித்து விடுகிறான். இவ்வாறு சாலிவாகனின் ஆட்சி மேலும் விரிவடைகிறது. மேலும் பல போர்களில் நாட்களை கழித்து விடுவதால் சாலிவாகனன் முறையாக கல்வி கற்க இயலவில்லை. தனக்கு அதிகம் படிப்பறிவின்மையால் அரசாட்சி புரிய சர்வவர்மன், குணாத்யா என்று இரு அறிஞர்களை அமைச்சர்களாக அமர்த்திக் கொண்டான்.

சிலகாலம் சென்றபின் நாகனிகை என்ற இளவரசியை மணந்து கொண்டான். அவள் மிகுந்த ஞானம் உடையவள். ஒரு முனிவரின் ஆசிரமத்தில் சிறுவயதிலிருந்து வளர்ந்தவள். அதனால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினாள். சம்ஸ்க்ருதத்தில் மிகுந்த புலமை உடையவள்.  அவள் சம்ஸ்க்ருதத்தில் பேசுவதை மிகவும் ரசித்தான் சாலிவாகனன். அந்நாட்களில் சம்ஸ்க்ருதமே அரசவை மொழியாக இருந்து வந்தது. சாலிவாகனனின்  அவையில் மட்டும் ப்ராக்ருத மொழி பயன்பட்டு வந்தது.  சம்ஸ்க்ருத மொழியின் அழகினை உணர்ந்து  இனி தன் அரசவையில் அனைவரும் சம்ஸ்க்ருதத்தில் தான் பேச வேண்டும் என்று உத்தரவிட்டான். தனக்கே சம்ஸ்க்ருதம் சரியாகத் தெரியாத போதும் இப்படி ஒரு உத்தரவு போட்டு விட்டான்.

இவ்வாறு சில நாட்கள் கழிந்தன. ஒரு நாள் அரண்மனை அந்தப்புரத்தில் உள்ள சிறு குளத்தில் அரசன் நீராடிக் கொண்டிருந்த போது அங்கே நாகனிகை வர நேர்ந்தது. அவளைக் கண்டு, கொஞ்சம் நீரை அள்ளி அவள் மீது வீசினான் மன்னன். அவள் சம்ஸ்க்ருதத்தில் தான் பேச வேண்டும் என்ற அரசாணையை உணர்ந்து கொண்டு அவனைப் பார்த்து சிரித்து, “மோதகை: ஸிஞ்ச மாம்!” (मोदकै: सिञ्च मां)”  என்று கூறினாள்.  இதைக் கேட்ட மன்னன் சேவகர்களை அழைத்து சமையல் அறையில் இருந்து இனிப்புகளை எடுத்து வந்து அரசியின் மீது தெளிக்கச் சொன்னான்.  இந்த ஆணையைக் கேட்டு நாகனிகை சிரித்து விட்டாள்.

அவள் சொன்னது “மா உதகை: ஸிஞ்ச மாம்!” (मा उदकै: सिञ्च मां ) – உதகம் என்றால் நீர். மா என்றால் வேண்டாம். ஸிஞ்ச என்றால் தெளிப்பது. என் மீது நீர் தெளிக்காதீர் என்று பொருள். ஆனால் மன்னன் புரிந்து கொண்டது மோதகம் என்றால் இனிப்பு. இனிப்பை என் மீது தெளி என்று சொல்வதாக தவறாக புரிந்து கொண்டான். அவள் சிரிக்கவும் வெட்கப் பட்டு அங்கிருந்து விலகினான்.

பின்னர் அரசவைக்கு வந்து சர்வவர்மா, குணாத்யா இருவரையும் அழைத்து தனக்கு விரைவாக சம்ஸ்க்ருதம் கற்றுக் கொடுக்க முடியுமா என்று கேட்டான். குணாத்யா அது மிகக் கடினம் – குறைந்தது பனிரெண்டு வருடங்களாவது ஆகும் என்று கூறிவிட்டார். அவ்வளவு காலம் செலவிட முடியாது என்று கூற, பதிலுக்கு சர்வ வர்மன் ஆறே மாதத்தில் கற்றுத் தருவதாக சபதமிட்டார். இது நடக்கவே நடக்காது, அவ்வாறு மட்டும் ஆறே மாதத்தில் மன்னன் சம்ஸ்க்ருதம் கற்றுக் கொண்டு விட்டால் தான் சம்ஸ்க்ருதத்தில் பேசுவதையே விட்டு விடுவதாக குணாத்யாவும் சபதம் இட்டார்.

சாலிவாகன மன்னனுக்காகவே சர்வவர்மா புதிதாக கா-தந்த்ர வ்யாகரணம் என்ற புதிய இலக்கண நூலை இயற்றி அந்நூலைக் கொண்டு ஆறே மாதத்தில் சம்ஸ்க்ருதம் கற்றுக் கொடுத்து விட்டார். பின்னர் அரசவைக்கு வந்த மன்னனை குணாத்யா ஒரு ஸ்லோக வடிவில் சம்ஸ்க்ருதத்தில் கேள்வி கேட்க, மன்னனும் பதிலை ஸ்லோகமாகவே சொல்லவும் அனைவரும் மகிழ்ந்தனர். சபதத்தில் தோற்ற குணாத்யா அரசவையை விட்டு விலகி கானகம் சென்றார்.

கானகம் சென்றவர் அங்கு வழக்கில் இருந்த பைசாசி மொழியில் ப்ருஹத் கதா என்ற நெடிய கதைகளை எழுதினார். அவர் திரும்ப அக்கதைகளை சாலிவாகனனின் அங்கீகாரம் வேண்டி எடுத்து வந்து அவனிடம் காண்பித்ததாகவும், பைசாசி மொழியை மன்னன் அங்கீகாரம் செய்யாததால், மனம் வெறுத்து அக்கதையில் தீயில் இடப் போக, மன்னனும் மனது மாறி, குணாத்யாவை தடுத்து அந்நூலை மீட்டார் என்றும் கூறப் படுகிறது. அக்கதைகள் பின்னர் ப்ருஹத் கதா மஞ்சரி என்ற பெயரில் க்ஷேமேந்திரரால் சம்ஸ்க்ருதத்தில் மொழிபெயர்க்கப் பட்டது.

இன்றைக்கு சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் முன்பு வாழ்ந்த சாலிவாகனன் பல வெற்றிகள் பெற்று பெரும் நிலப் பரப்பை ஆண்ட பேரரசன். அவன் தன் ஆட்சியில் ஏற்படுத்திய வருடக்கணக்கு இன்றும் ஆந்திர, கர்நாடகப் பகுதிகளில் உபயோகப் படுத்தப் பட்டு வருகிறது.

7 Comments சம்ஸ்க்ருதம் தெரியாத மன்னன்

  1. Pingback: முருகன் தந்த வடமொழி இலக்கணம் | Sangatham

  2. கனகராஜ் ஈஸ்வரன்

    நல்ல கதை. எனக்கு ஒரு சந்தேகம். விக்கிரமாதித்த்யனை வென்ற சாலிவாஹனனும் இந்தக்கதைக்குறிப்பிடும் சாலிவாஹனரும் ஒன்றாவேறா?
    இங்கே ஒரு சிறுதகவல். குணாத்தியர் பைசாசாச மொழியில் எழுதிய ப்ருஹத்கதா தமிழில் கொங்குவேளிர் என்ற புலவரால் பெருங்கதை என்ற காவியமாக வடிக்கப்பட்டுள்ளது. அந்த காவியம் முழுமையாகக்கிடைக்கவில்லை.
    மூன்றாவதாக ஒரு வினா சாலிவாஹணருக்குகாக சர்வசர்மா எழுதிய கா-தந்த்ர வ்யாகரணம் இன்னும் உள்ளதா? அது எல்லோருக்கும் சமஸ்கிருதத்தினை க்கற்பிக்கப்பயன்படுமே. தமிழ் உரையுடன் வெளியிட்டால் நல்லது.

  3. P.S. Raman

    Good one . Please keep adding a few. Chandamama Sanskrit stories if available with any one may I request them yo share through this site. If not some good translator can translate from English Or tamil archives of Chandamama.(Ambulimama in Tamil)
    P>s>raman

  4. Nathan

    அருமை ! அருமை !

    இந்திய அரசின் நாட்காட்டியான சக வருஷம் (ராஷ்ட்ரீய பஞ்சாங்கம்) இந்த சாலிவாகனனின் நினைவாக பெயரிடப்பட்டதா என்பதையும் சொல்லுங்கள்.

    சாலிவாகன சகாப்தம் என்பதை நமது பஞ்சாங்கங்களிலும் பார்த்திருக்கிறேன். அதுவும் இதே மன்னனால் ஏற்படுத்தப்பட்டதா?

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)