இந்த கட்டுரை 1934ம் வருடம் கலைமகள் பத்திரிகையில் வே. ராகவன் எம். எ. என்பவர் எழுதியது. சில சொற்கள் மாறுதல்களுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1929 ம் வருடம் சென்னை பல்கலைக்கழகத்தின் ஆதரவில் டாக்டர் உ.வே.சா அவர்கள் சங்ககாலத்தைப் பற்றி சில பேருரை ஆற்றினார்கள். அவை பிறகு தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்திருக்கிறது. அந்த நூலில் ஐந்தாவது அத்தியாயத்தில் காக்கை பாடினியார், நச்செள்ளையார், பொன்முடியார், பூதப் பாண்டியன் தேவியார், ஆதி மந்தியார், வெண்ணிக் குயத்தியார், பாரி மகளிர் முதலிய சங்ககாலத்துப் பெண்கவிஞர்களுடைய வரலாறுகள் காணப் படுகின்றன. பிற்காலத்தில் கடவுள் பால் அன்பு பூண்டு இனிய செய்யுட்களைப் பாடிய காரைக் காலம்மையார், ஆண்டாள் என்பவர்களைப் பற்றியும் வட இந்தியாவில் அங்ஙனம் இருந்த மீரா பாயைப் பற்றியும் நாம் கேட்டிருக்கிறோம்.
தெலுங்கு மொழியிலுள்ள பெண் கவிஞர்களைப் பற்றி “த்ரி வேணி” என்ற ஆங்கில இதழ் ஒன்றில் திரு பூஷன் என்பவர் முன்பு எழுதி இருந்தார். கன்னடத்திலும், மலையாளத்திலும், வட இந்திய மொழிகளிலும் பல பெண்கள் கவிஞர்களாக இருந்தது உண்டு. இவர்களில் பலரை “ஹெரிடேஜ் ஆப் இந்தியா சீரீஸ்” (Heritage of India series) என்ற நூல் தொகுப்பில் “இந்தியப் பெண் கவிகள்” என்னும் நூல் கூறுகிறது. இப்பொழுது இந்தியாவில் நாகரீக மொழியாக விளங்கி வரும் ஆங்கிலத்தில் கவிதைப் புகழ்பெற்ற பெண்மணிகளுள் முக்கியமானவர்கள்: காலஞ்சென்ற டோரு தத்தும், தேச சேவையில் ஈடுபட்டு உழைத்த சரோஜினி தேவியும் ஆவர்.
இக்காலத்தில் ஆங்கிலம் எந்த இடத்தை வகித்து வருகிறதோ, அந்த இடத்தை பண்டைக் காலத்தில் வகித்து வந்த வட மொழியில் பல பெண்கள் கவிஞர்களாக விளங்கினார்கள். பெண் கல்வி எங்கும் பரவி இருந்த பண்டைக் காலத்தில் ஆடவரைப் போலவே பல துறைகளில் பயின்று, கல்வி கற்று நூல்கள் இயற்றி வந்தனர். காம சூத்திரங்களை இயற்றி வந்த வாத்ஸ்யாயன மகரிஷி, தம் காலத்தில் சாத்திரங்களை ஆராய்ந்து நற்புலமை பெற்ற கணிகையர்களும், அரச குமாரிகளும் அமைச்சர் புதல்வியரும், பிற வேறு மகளிரும் இருந்தனர் என்று புலப் படுத்தி இருக்கிறார். மேலும் அம்முனிவர் மகளிர் கற்பது இன்றியமையாதது என்றும் அவர்களுக்குரிய அறுபத்தி நான்கு கலைகள் இன்னவை என்றும் கூறியிருக்கிறார்.
பௌத்த சமய நூலான ‘தேரிகதா‘ என்பதில் ஆசிரியர்களாக ஐம்பது மாதர் பெயர்கள் காணப் படுகின்றன. அவர்களுள் முப்பத்தி இரண்டு பேர் மணம் புரியாமலே வாழ்ந்து முக்தி பெற்றவர்கள். ஏனைய பதினெட்டு பேர்களும் இல்லறம் நடத்தியவர்கள். இவர்களுள் முன் சொன்ன கன்னியர்களில் சுமா (மங்கலமானவள்), அனுபமா (நிகற்றவள்), சுமேதா (நல்லறிவு உடையவள்) என்ற மூவர் பெரிய செல்வம் நிறைந்த குடியினர் என்றும், அவர்களை மணம் புரிந்து கொள்ள பெரும் பொருள் படைத்த வணிகர்களும், அரசிளம் குமாரர்களும் விரும்பினர் என்று தெரிகிறது. பண்டை இந்தியாவின் கல்வி முறையைப் பற்றித் தாம் எழுதி இருக்கும் ஒரு நூலில் டாக்டர் எ.எஸ். அல்டேகர் என்பவர், கி.பி. எட்டாவது நூற்றாண்டில் மருத்துவத்தைப் பற்றி இந்தியப் பெண் ஒருத்தி நூலொன்று எழுதினாள் என்றும் அதன் அருமையை அரபிய வைத்தியர்கள் உணர்ந்து அதனைத் தங்கள் மொழியில் பெயர்த்துக் கொண்டார்கள் என்றும், அரபி பாஷையில் அவள் பெயர் ரூசா என்று காணப் படுகிறது என்றும் எழுதி இருக்கிறார்.
இவ்வுலகத்தில் மிகப் பழமையான நூல் ரிக்வேதம் என்று நவீன ஆராய்ச்சியாளராகிய மேனாட்டு மொழியியலாளர்களின் கருத்து. வேத மந்திரங்களைத் திவ்ய ஞானம் பெற்ற மாமுனிவர்கள் பார்த்தனர் என்பது நம் கொள்கை. இங்ஙனம் வேதப் பாக்களைக் கண்டவர்களுள் சிலர் பெண்கள். அவர்கள் கோஷா, கோதா, விச்வவாரா, அபாலா, அகத்தியரின் சகோதரி, அகத்தியரின் மனைவியான லோபா முத்திரை, ரோமசா, சாச்வதீ என்னும் எட்டு பேர்கள். இவர்களைப் பற்றிய வரலாறுகள் ஆர்ஷானுக்ரமணீ, ப்ருஹத் தேவதா போன்ற வேத சம்பந்தமான நூல்களில் காணப் படுகின்றன. இவர்களைப் பற்றி சர் ஆசுதோஷ் முகர்ஜி நினைவு மலரில் (Sir Asutosh Mukherjee Memorial Volume) ஹரஸ் சந்திர சகல்தார் என்பவர் ஆங்கிலத்தில் எழுதி இருக்கிறார்.
பல காலத்துக்கு பிறகு, மகா காவியங்களின் காலத்தில் பல மகளிர் கவிஞர்களாக இருந்து புகழ் அடைந்திருக்கிறார்கள். இவர்கள் எழுதிய நூல்கள் முற்றும் நமக்கு கிடைக்க வில்லை. ஆயினும் இவர்கள் இயற்றிய சுலோகங்களில் சில நமக்கு கிடைத்திருக்கின்றன. கவிதை ரசிகர்கள் தாம் படித்து ரசித்த நல்ல சுலோகங்களைத் தொகுத்து ஒரு கோசமாக (கோப்பாக) வைப்பது வழக்கம். இத்தகைய கோசங்கள் சில சமஸ்க்ருதத்தில் இருக்கின்றன. இவற்றுள் முக்கிய மானவை, ஸ்ரீதர தாசன் தொகுத்த ஸதுக்திகர்ணாமிர்தம், வல்லப தேவர் தொகுத்த சுபாஷிதாவளி, சார்ங்க தரன் திரட்டிய பத்ததி, ஜல்ஹண கவி கூட்டிய சூக்தி முக்தாவளி என்பன. இவற்றை அன்றி பிராகிருத பாஷையில் ஹாலன் என்ற சாதவாகன மன்னனால் தொகுக்கப் பட்ட மிகப் பழைய கோசம் ஒன்று உண்டு. அதற்கு காதா சப்தசதீ என்று பெயர். அதிலுள்ள ஏழு நூறு சுலோகங்களில் சில, பெண்கள் இயற்றியனவாக குறிக்கப் பட்டுள்ளன. முன் சொன்ன சமஸ்க்ருத கொசங்களிலிருந்து தான் நமக்கு சமஸ்க்ருத பெண்கவிகளைப் பற்றிய செய்திகள் பெரும்பாலும் தெரிய வருகின்றன. இவற்றைத் தவிர, கி.பி. 880 – 920ல் புகழ் பெற்ற வடமொழி கவிஞனாய் விளங்கிய ராஜசேகரன் தனக்கு முன்னிருந்த கவிஞர்களைப் பற்றி குறிப்புகள் எழுதி இருக்கிறான். அந்த குறிப்புகளை சில, பெண் கவிஞர்களைப் பற்றியன. இம்மூன்று வகையில் நமக்கு தெரிய வரும் சமஸ்க்ருத பெண்கவிகளே இங்கே கூறப் படுபவர்கள்.
விஜ்ஜிகை
முற்காலத்தில் இருந்த வடமொழி பெண் கவிஞர்களில் இம்மெல்லியலையே முதல்வியாக சொல்ல வேண்டும். இவளுடைய பெயரோடு கூடிய சுலோகங்களே முற்கூறிய தொகை நூல்களில் மிகுதியாகக் காணப் படுகின்றன. இப்புலமை மிக்க மாதரசியினுடைய சுலோகங்களில் பல, பெரிய அலங்கார சாத்திரங்களில் மேற்கோள்களாகக் காட்டப் படுகின்றன. இவளுடைய செய்யுட்களைப் படிக்கும்போதே இவள் ஒரு மகாகவி என்பது நன்றாக புலப் படும். நல்ல பக்குவமான முறையில் சொல்லும் பொருளும் இயைந்து விஜ்ஜிகையின் சுலோகங்கள் இன்பமூட்டுகின்றன. இங்கும் அங்குமாக சிதறிக் கிடக்கும் அச் சுலோகங்களில் வருணிக்கப் பட்டிருப்பவற்றின் பேரழகைப் பார்த்தால், இவள் மகா காவியங்களில் சில எழுதி இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
நெல்லைக் குத்தும் இளம் பெண்களின் உலக்கைப் பாட்டைப் பற்றி இவள் கூறுவதைப் பாருங்கள்: தங்கள் நீண்ட கைகள் அழகாக உலக்கைகளை தூக்கிக் குத்த, கைவளைகள் ஒன்றோடு ஒன்று மோதி முழவு போல ஒலிக்க, குத்தும் சிரமத்தால் உண்டாகும் பெருமூச்சின் ஹுங்காரம் – கம்பிதம் முதலியன சங்கீத கமகங்களைப்போல ஒலி எழுப்ப, அவர்களிடத்திலிருந்து இன்னிசை எழுகின்றது. அந்த இன்னிசை விஜ்ஜிகையின் சுலோகத்தில் தொனிக்கின்றது.
வேறொரு சுலோகத்தில் ‘தோழி, துன்பமாகிய தண்டத்தைக் கொண்டு அடிமேலடியாய் அடித்து, என் மனத்தை மண்ணைப் போல பிசைந்து பிண்டமாய் பிடித்து, ஓயாமற் சுழலும் சிந்தைஎனும் சக்கரத்தில் வைத்து பெரிய குயவனைப் போல விதி சுழற்றுகிறானம்மா… என் செய்வேன்!” என்று முறையிடுகிறாள். தன் காதலன் தன் அங்கத்தைத் தொட்டதும் மெய் மறந்து விடுவதாக இன்னொரு சுலோகத்தில் சொல்கிறாள். கார்காலத்தைப் பற்றிய ஒரு செய்யுளில் மேகங்கள் திரள்வதையும் மழை பெய்து நிலம் மரகதமாய் புதுப் புற்களால் நிறம்புவதையும் அவ்வழகிய காலத்தில் கூடினவர்களது இன்பத்தையும் பிரிந்தவர் படும் பாட்டையும் இனிமையாக வருணித் திருக்கிறாள். கள்ளக் காதல் புரியும் ஒருத்தி தன் கணவனை வாக்குச் சாதுரியத்தால் ஏமாற்றி தன் கள்ளக் காதலனிடம் செல்லும் திருட்டுத் தனத்தை அழகாக ஒரு சுலோகத்தில் காட்டி இருக்கிறாள்.
விஜ்ஜிகை நீலோற்பலம் போன்ற கரிய மேனி உடையவள். அவள் தன்னைத்தானே “சரஸ்வதி” என்று புகழ்ந்து கொள்கிறாள். அதனைக் கவிகள் யாவரும் ஒப்புக் கொள்கிறார்கள் என்றால் அவளது கவித்திறனும், கல்வியறிவும் எவ்வளவு சிறந்திருக்க வேண்டும்? “ வெள்ளைத் திருமேனி கலைமகள் என்று சரஸ்வதியைப் புகழ்ந்த தண்டி என்ற மகாகவிக்கு கருமேனிக் கலைமகள் நான் இருக்கிறேன் என்று தெரியவில்லை” என்று இப்புலமை முற்றிய பூவையே சொல்லிக் கொள்கிறாள். விஜ்ஜிகையை “வித்யா” என்றே சில இடங்களில் குறிப்பிட்டிருக்கின்றனர். சரித்திர ஆராய்ச்சியாளர்கள் இவள் ஏழாவது நூற்றாண்டில் அரசு செலுத்திய இரண்டாம் புலிகேசியினுடைய புதல்வனான சந்திராதித்தியனென்னும் சாளுக்கிய வேந்தனுடைய மனைவியென்று தீர்மானித்திருக்கிறார்கள்.
விஜயா அல்லது விஜயாங்கா
ராஜ சேகர மகாகவி இந்த விஜயாங்கா என்கிற இந்த பெண் கவியை சிறந்த செய்யுள் நெறியாகிய வைதற்பமென்பதில் காளிதாசனுக்கு அடுத்தபடியாக தேர்ச்சி பெற்றவள் என்று வர்ணித்து இருக்கிறான். “கர்நாடக தேசத்திற்கே சரஸ்வதி” என்று இவளை அவன் புகழ்வதால் இவள் தென்னாட்டினள் என்று தெரிகிறது. ஒருக்கால் இவளேதான் விஜ்ஜிகையோ என்றும் என்ன வேண்டி இருக்கிறது. இவள் எழுதிய காவியம் எதுவம் நமக்கு கிடைக்கவில்லை. ஆனால் இவளது முக்கியமான சுலோகம் ஒன்று அகப்பட்டிருக்கிறது. அதில் இவள் தன்னை ஒரு கர்நாடக அரசனின் ராணியாக சொல்லிக் கொள்கிறாள். மேலும் தன் புலமையைப் பற்றித் தருக்குடன் தானே பாராட்டிக் கொள்கிறாள்.
“தாமரையில் தோன்றி வேதத்தை அளித்த நான்முகனும், புற்றில் தோன்றி இராமாயணத்தை அருளிய வால்மீகியும், மணற் குவியலில் தோன்றி பாரதம் தந்த வியாசருமாகிய இம்மூவரும் பெரியோர்; இவர்களை நாம் வணங்குவோம். பின்வந்த எவரேனும் கவி என்று சொல்லிச் சொற்களை முடைந்து கொண்டு இங்கே வந்தால் அவர்கள் தலையை இடது காலால் மிதிப்பேன்!” எனற விஜயாவிற்கு காளிதாச பவபூதிகளே கவிகளாக தோன்றவில்லை என்றால் இவளை ராஜசேகரன் கர்நாடக தேச சரஸ்வதி என்று சொல்வதில் என்ன பிழை இருக்கிறது?
விகட நிதம்பை
“விகட நிதம்பையின் சுலோகங்களை வாசித்தவர்களில் யார்தாம் தம் காதலியின் தேனினும் இனிய பேச்சுக்களையும் வெறுக்காதவர்கள்!” என்று ராஜசேகர கவி இந்த கவியரசியின் கவிதையைப் புகழ்ந்துள்ளான். மையிருட்டாயிருக்கும் இரவில் தன் காதலனைக் காணத் தனிமையில் செல்லத் துணிந்த ஒரு பெண்ணைப் பற்றி அவள் ஒரு சுலோகம் எழுதி இருக்கிறாள். அது,
“பெண்ணே.. இவ்விருட்டில் எங்கே புறப்பட்டாய்?” “என் உயிருக்கிறைவன், என் காதலன், இருக்குமிடத்திற்கு” “பெண்ணே! இப்படி தனியாக செல்ல உனக்கு பயமாக இல்லையா?” “வில்லும் அம்புமாய் மாறன் எனக்கு துணை இருக்கிறான்”
என்று உரையாடல் வடிவில் உள்ளது.
இப்பெரிய கவியரசியின் இல்லற வாழ்வு மிக துன்பகரமானது. இவளது கணவனுக்கு எழுத்துக்களைச் சரிவர உச்சரிக்கக் கூட தெரியாது. அது பற்றி விகட நிதம்பையின் தோழி சொல்லிய சுலோகம் ஒன்று நமக்கு கிடைத்திருக்கிறது.
“காலத்தைக் குறிக்கும் மாசத்தை மாஷம் என்பான்; உளுந்தைக் குறிக்கும் மாஷத்தை மாசம் என்பான். “ச” வுக்கும் “ஸ” வுக்கும் பேதம் தெரியாது; “உஷ்ட்ரம்” என்று சொல்லச் சொன்னால் “உஷ்டம்” என்றோ “உட்ரம்” என்றோதான் அவனால் சொல்ல முடியும். ஐயோ! அவனுக்கு விகட நிதம்பை வாழ்க்கைப் பட்டாளே!” என்பது அது.
விகட நிதம்பையின் உண்மையான பெயர் என்ன என்பது தெரியவில்லை. “விகட நிதம்பை” என்ற பதங்கள் அவளுடைய சுலோகம் ஒன்றில் அருமையாக அமைந்ததற்காக அவளுக்கு அப்பெயர் கொடுக்கப் பட்டது.
மோரிகை
இவளுடைய இரண்டு சுலோகங்கள் நமக்கு கிடைத்திருக்கின்றன. காதலர்களின் பாவங்களை இவள் அழகாக வருணித்திருக்கிறாள். தன் மனைவியைப் பொருள் வயிற் பிரியவிருக்கும் வணிக இளைஞன் ஒருவன் தன்னுள் அழுவதாக உள்ள ஒரு சுலோகத்தில்,
“போவேன் என்ற எண்ணம எப்படி மனத்தில் தோன்றும்? தோன்றினாலும் இரக்கமில்லாத நாம் அவ்வெண்ணத்தை எவ்விதம் தன் உயிர் போன்ற காதலிக்குச் சொல்லத் துணிவோம்? விஷயத்தைச் சொல்லி விட்டோம். கலகலவென்று கண்ணீரைக் கொட்டும் அவள் முகத்தைப் பார்த்துங் கூட அற்பப் பொருளை அடைய ஆசை கொண்டு நம்போன்ற ஆண்மக்கள் சென்று விடுகிறார்களே!” என்னும் விஷயம் காணப் படுகின்றது.
“நாயக உத்தமா! நீ அவளிடம் மிகவும் அன்பு கொண்டு இருக்கிறாய்; நீயே அவளை அடைய உரியவன். அவளும் உன்னிடம் சிறந்த அன்பை உடையவளாய் இருக்கிறாள். அவளே உன்னை அடைய உரியவள். சந்திரனில்லாமல் இரவு சோபிக்காது; இரவில்லாமல் சந்திரனும் சோபிக்க மாட்டான்!”
என்று ஒரு தாதி தலைவனுக்கு கூறுவதாக வேறொரு சுலோகம் காணப் படுகின்றது.
சிலாபட்டாரிகை
பட்டாரிகை என்பது மிகவும் கௌரவத்தைக் காட்டும் பட்டமாகையால், இப்பெண் கவி பெரிய பெருமை படைத்தவளாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. “சமஸ்க்ருத கவிதையின் பல சைலிகளில் “பாஞ்சாலீ” என்பதொன்று; அதில் சொல்லும் பொருளும், ஓசையும் பொருளும், தராசில் நிறுத்து வைத்தார்ப் போல இருக்கும். அதில் பாணன் என்ற கவி பெயர் போனவன். அவனுக்கு அடுத்த படியாய், சிலாபட்டாரிகை ஒருத்திதான் அதில் திறமை வாய்ந்தவள்” என்று ராஜசேகர கவியால் புகழப் பட்டிருக்கிறாள்.
பின்வரும் சுலோகங்கள் இவளது கவிநயத்தைக் காட்டும்:
தலைவனை அழைத்து வரும்படி தலைவி அனுப்பிய தாதி அவனுடன் கூடி விட்டு, தான் அவனுடன் கூடியிருந்த குறிகளுடன் தலைவியிடம் வரவே, நடந்ததை தலைவி உணர்ந்து கொண்டு அவளிடம் பின்வருமாறு உரையாடுவதாக ஒரு சுலோகம் உள்ளது:
“ஏனம்மா! உனக்கு மூச்சு வாங்குகிறது?” “உன்னிடம் விரைவில் வரவேண்டும் என்று ஓடோடி வந்தேன்!” “ஐயோ பாவம்! உன் உடம்பெல்லாம் மயிர் பொடித்திருக்கிறதே. அது ஏனோ?” “உன் காதலன் கோபத்தை விட்டு உன்னிடம் வருவதாக கூறவே, தூது சென்ற என்காரியம் முடிந்த ஆனந்தத்தால் மயிர் சிலிர்த்தது!” “சரிதான். முடிந்த கூந்தல் அவிழ்ந்து கிடப்பானேன்” “உனக்காக அவனிடம் விழுந்து விழுந்து பணிந்தேன்” “உன் உடை…?” “நடை விரைவானதால் அதுவும் நழுவி இருக்கிறது” “முகமெல்லாம் வியர்த்து வழிகிறதே” “என்ன வெயில் தெரியுமா?” “உன் முகம் சோர்ந்து போயிருக்கிறதே” “ஆமாம், அவனுடன் எவ்வளவோ பேசியதால்” “சரி சரி வதங்கிப் போய் தாமரை இதழ் போல ஆகிவிட்ட உன் இந்த அதரத்திற்கு என்ன சமாதானம் கூறப் போகிறாயோ”
தலைவியுடன் ஊடல் கொண்டு பிரிந்து தலைவனைத் தலைவியின் தாதி வேண்டிக் கொள்வதாக மற்றொரு சுலோகம் காணப் படுகிறது.
“பிரிவினால் மாறன் உடலை உருக்குகிறான்; எமன் ஒன்று இரண்டு என்று அவள் வாழ்நாட்களை எண்ணத் தொடங்கி விட்டான்; நீயோ கோபம் பிடிவாதம் என்ற நோயில் அகப்பட்டுக் கொண்டாய். தளிரிலும் மேன்மை வாய்ந்த பெண் எப்படி உயிர்த்திருக்கும்? நீ இதை யோசிக்க வேண்டும். நீ இதை சிறிது யோசிக்க வேண்டும்.” என்பது அது.
ஒரு இளைஞனும் யுவதியும் ஒரு நதிக்கரையிலுள்ள தோப்பில் நீண்ட நாளாய்ச் சந்தித்துச் சுகமே இருந்து வந்தார்கள். விரைவில் அவ்விருவருக்கும் மணம் நடைபெறுகிறது. ஆனால் பழைய இன்பம் எங்கேயோ போய்விட்டது. அச்சமயம் அந்த யுவதி தனக்குள் கூறிக் கொள்கிறாள்.
“என் கன்னிப் பருவத்தை நீக்கிய அவனே இப்பொழுது என் கணவன். அந்த வசந்த காலமே; அந்த நிலாவே தான். மாலைதீ புஷ்பங்களின் மணம் நிறைந்த பழைய தென்றலே. அப்பழையவனே தான். என்றாலும் மணம் மாத்திரம் அந்த ஆற்றங்கரையில் அந்த மரத்தடியின் சுவைக்கு ஏங்குகிறது.”
இவ்விதம் காணப் படுவது மற்றொரு சுலோகம்.
பல்குணஸ்தனி
இக்கவியரசியின் சுலோகங்களில் இரண்டு நமக்குக் கிடைத்துள்ளன. ஒன்றில் ஒட்டாம் பிறையைப் பற்றி அவள் வருணிக்கிறாள். மற்றொன்றில் விதியின் கொடுமையைப் பற்றி வருத்தப் பட்டு எழுதுகிறாள். அது வருமாறு:
“குணக் கடலாய், மனித ரத்தினமாய், உலக உபகாரியாய் ஒருவனை உண்டாக்கி; அவனை அற்ப ஆயுள் உள்ளவனாகவும் செய்வானானால் இந்த பிரம்ம தேவன் எவ்வளவு மூளையற்றவனாக இருக்க வேண்டும்?”
இந்து லேகை
இவள் இயற்றிய ஒரு கவிதைதான் கிடைத்துள்ளது. மாலைக் காலமும் நெருங்க நெருங்கப் பிரிந்திருக்கும் காதலர்கள் படும் துன்பத்தை அந்த சுலோகம் வருணிக்கிறது.
மாருளை
இவள் பெயரால் வழங்குவது ஒரே ஒரு சுலோகமே. இந்த ஒன்றிலிருந்தே இவளுடைய திறமை நன்கு புலப் படுகின்றது. ஒரு தலைவன் ஒழுக்கம் தவறி, தலைவியை நீங்கி சில நாட்கள் கழித்து பிறகு அவளிடம் வருகிறான். அவள் என்ன செய்வாள்? தலைவன் மீது கோபம் வருகிறது. ஆயினும் அவன் மீது அவளுக்கு அன்பு அதிகம். தான் செய்தது இன்னதென்று மாருளை இந்த சுலோகத்தில் தெரிவிக்கிறாள். இது கேள்வி பதிலாக இருக்கிறது.
“ஏன் இளைத்திருக்கிறாய்?” “என் உடல் இயல்பு அது.”
“ஏன் இப்படி அழுக்கடைந்து இருக்கிறாய்?” “வீட்டு வேலை”
“உனக்கு என் நினைவு இருக்கிறதா?” “இல்லை.. இல்லை.” என்று கூறி அவன் மார்பின் மேல் சாய்ந்து அழுதாள்.
தலைவி உண்மையில் தன் நாயகனின் பிரிவினால் இளைத்தும், குளித்து முடிக்காமல், உடல் அழுக்குற்றும் இருந்தாலும் அவனிடம் இருந்த கோபத்தால் வேறு காரணங்கள் கூறினாள். கடைசியில் தன் நினைவிருக்கிறதா என்று அவன் கேட்டதும் இல்லை என்று மறுமொழி கொடுத்தும் தனக்கு அவன் மீதுள்ள அன்பினாலும் தான் ஒன்றும் செய்ய இயலாததாலும் அவன் மார்பின் மேல் சாய்ந்து அழத் தொடங்கி விட்டாள்.
சுபத்திரை
இக்கவியரசியும் ராஜசேகரன் “தன் வாக்கின் சாதுரியத்தால் சுபத்திரை கவிகளின் மனதில் நிலையாக வாசம் கொண்டாள்!” என்று புகழ்ந்திருக்கிறான். உலகில் நல்லவர்களே சிரமப் படுத்தப் படுகிறார்கள என்ற பாவத்தை பின்வருமாறு பாலை உதாரணமாகக் காட்டி இவள் விளக்குகிறாள்.
“அது கரந்தேடுத்துக் காய்ச்சப் பட்டது. அதன் இனிமை எடுக்கப் பட்டது. கடையப் பட்டு அதன் சாரமாகிய வெண்ணையும் அபகரிக்கப் பட்டது. இவ்வளவு துன்பங்களுக்கும் பாலின் சுவையே காரணம்.”
பிரபுதேவி
தேவி என்ற பட்டப் பெயரிலிருந்து இவள் பட்டத்து ராணியாக இருந்தாள் என்று கருத இடம் இருக்கிறது. இவளுடைய சுலோகம் ஒன்றும் அகப்படவில்லை. ஆயினும் இவளைப் பற்றி ராஜசேகரன் எழுதி உள்ள சுலோகம் ஒன்று கிடைத்திருக்கிறது.
“கவி இயற்றுவதிலும், ஸ்ருங்காரத்திலும் மற்ற எல்லா கலைகளிலும் மிகப் பிரசித்தமானவள் பிரபு தேவி. அவள் இறந்தும் இன்றும் நம் உள்ளத்தில் உயிருடன் இருக்கிறாள்.” என்பது ராஜசேகரன் இவளைப் பற்றி எழுதி இருப்பது.
இவளுடைய தேசம் லாட தேசம்… என்று ராஜ சேகரனுடைய சுலோகத்திளிருந்து தெரிகிறது. லாட தேசம் என்பது கூர்ஜரம் (குஜராத்) என்பதைக் குறிக்கும் என்று சிலர் கூறுவர். வங்காளத்தில் ஒரு பகுதி லாடம் என்று பெயர் வழங்கி வந்ததுண்டு.
நாகம்மா
பிராசம் என்ற சொல் அலங்காரம் நன்கு அமைந்தது. உதயமாகும் சூரியனைக் குறித்து வணக்கமாக சொல்லப் பட்ட ஒரு சிறிய சுலோகம் ஒன்று நாகம்மாளின் பெயரில் வழங்கி வருகிறது.
மதாலசை
“அப்பா, காலையில் எழுந்திருந்து பரலோகத்திற்கு சாதகமானவற்றை தியானம் செய். இகலோகத்தில் ஆகவேண்டியதை உன் பூர்வ கர்ம பலனே கவனித்துக் கொள்ளும்.” என்ற ஒரு சுலோகம் மட்டும் மதாலசையினால் எழுதப் பட்டுள்ளதென்று குறிக்கப் பட்டுள்ளது.
இவளைப் பற்றி வேறு ஒன்றும் தெரியவில்லை.
சரஸ்வதீ குடும்பதுஹிதை
இவளுடைய பெயரின் பொருள் “சரஸ்வதி மயமான குடும்பத்தின் பெண்” என்பது. போஜராஜன் சபையில் ஒருநாள் ஒரு பிராம்மணன் தனது குடும்பத்துடன் வந்து சேர்ந்து அரசன் மேல் ஒரு சுலோகம் சொன்னான். அவனது குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு சுலோகம் போஜன் மேல் சொன்னார்கள். அவைகளில் இப்பெண் செய்த சுலோகம் ஒன்று.
பாவாக தேவி
இவளும் மகாராணியாக இருந்திருப்பாள் என்று “தேவி” என்ற பட்டத்தை வைத்துச் சொல்லலாம். பல சுலோகங்கள் இவள் செய்ததாக அகப் படுகின்றன.
திரிபுவன சரஸ்வதி
பாற்கடல் கடையப் பட்டு அதிலிருந்து லட்சுமி தோன்றும்போது திருமால் செய்தருளிய ஒரு லீலையைக் குறித்து அவருக்கு வாழ்த்தாக இவள் ஒரு சுலோகம் செய்திருக்கிறாள். இவளுடைய உண்மையான பெயர் என்னவென்று தெரியவில்லை. திரிபுவன சரஸ்வதி என்பது இவளது கவித்திறமைக்காக அளிக்கப் பட்ட பெயர். ராஜசேகர கவி தான் எழுதிய “கற்பூர மஞ்சரி” என்கிற பிராகிருத நாடகத்தில் கவனம் செய்யும் ஒருத்தியைப் புகழும் போது, “இவள் திரிபுவன சரஸ்வதியின் தங்கை” என்று சொல்லி இருப்பதால் ராஜசேகரன் காலத்துக்கு முன் இவள் மிகப் பிரசித்தி அடைந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.
ஜனக சபலை
இவள் எழுதிய ஒரு சுலோகத்தில் “ஜனக சபலா” என்ற ஒரு சொற்றொடர் காணப் படுகிறது. அத்தொடரினால் இவளுக்கு இந்த “பச்சைச் சிருங்காரமான” பெயர் கிடைத்திருக்க வேண்டும்.
இது காறும் கூறப்பட்ட பெண்கவிகளின் காலத்தை நோக்குவோம்: பல்கு ஹஸ்தினியின் காலம் கி.பி. எட்டாம் நூற்றாண்டுக்கு முன் என்பது தெளிவாகத் தெரிகிறது. ராஜசேகர கவியின் காலம் கி.பி. 880 – 920 ஆனதால், அவனால் புகழப் பட்ட விஜயாங்கை, விகட நிதம்பை, சீலா பட்டாரிகை, சுபத்திரை, பிரபுதேவி, திரிபுவன சரஸ்வதி என்றவர்கள் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முன் இருந்திருக்க வேண்டும். விஜ்ஜிகையின் காலம், தண்டி மகாகவியின் காலமாகிய கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்குப் பின்னும் பத்துப் பதினொன்றாம் நூற்றாண்டுக்கு முன்னும் என்று தெரிகிறது.
ரஜக சரஸ்வதி
சகம் 1127 (கி.பி. 1205) இல் ஸ்ரீதரதாச கவியினால் சேர்க்கப்பட்ட “ஸதுக்தி கர்ணாமிருதம்” என்ற நன்மொழிக்கொத்தில் ரஜக சரஸ்வதி என்ற பெண்மணியின் கவியொன்று காணப் படுகிறது. அக்கவியில் ஆண் சக்ரவாகப் பட்சி பெண் சக்ரவாகத்தை விட்டுப் பிரிந்திருக்க வேண்டுமென்ற எண்ணத்தினாலேயே படும் கஷ்டத்தை ரஜக சரஸ்வதி வர்ணித்திருக்கிறாள்.
சரஸ்வதி
இந்த பெண்கவியின் சுலோகங்களில் ஒன்று மேற்சொன்ன கோசத்திலிருந்து கிடைக்கிறது. அது தாழையைப் பற்றிய அந்யாபதேசம்; அதாவது தாழையையும், வண்டையும் கருத்தில் வைத்துக் கொண்டு, மனிதர்களின் குணாதிசயத்தை சொல்வது. கவி தாழையைப் பார்த்துச் சொல்கிறாள்: “தாழையே! ரம்பம் போலிருக்கின்றன உன் முள்ளிலைகள்; உன்னிடம் தேன் என்பது மருந்துக்கும் கிடையாது. உன் பூவிலுள்ள பொடிகளோ, காற்றடித்தால் கண்ணை அவித்துவிடும். ஆனாலும் உன்னை வண்டு அண்டுகிறதே! ஏன்? உன் பூவின் மணம் என்ற ஒரு குணத்தால், உன் குறைகளெல்லாம் மறைந்து போகின்றன!”
லக்ஷ்மி
சாரங்கதேவரின் கோசத்தில் லக்ஷ்மி என்ற பெண்கவியினுடையதாக ஒரு சிறு அந்யாபதேச சுலோகம் காணப் படுகிறது. உலகில் பல நல்ல விஷயங்கள் இருப்பினும், பலர் பெரியோராயிருப்பினும், சிலவற்றிற்கே, சிலருக்கே புகழும் பல ஜனங்களின் அபிமானமும் உண்டாகின்றன. நல்ல குணம் இருந்தாலும், புகழ் என்பது தெய்வச் செயல் என்பதை வண்டையும் பூக்களையும் உதாரணமாக வைத்துக் கொண்டு காட்டுகிறாள் “காடுகளில் புது மலர்கள் யாவற்றிலும் விழுந்து புரளும் வண்டு கந்தபலீ என்ற பூவை முகர்ந்து கூட பார்ப்பதில்லை. கந்தபலீ அழகாக இல்லையா? வந்துதான் ரசிகனில்லையா? கேவலம் விதியின் விருப்பம் அப்படி.”
சீதை
காவ்யானுசந்தானம் என்ற அலங்கார நூலெழுதிய வாக்படரென்ற கவி தம் நூலில் சீதை என்ற பெண் கவியால் எழுதப்பட்ட சுலோகம் ஒன்றை உதாரணமாக கொடுத்திருக்கிறார்.
அவந்தி சுந்தரி
இவள் ராஜசேகரன் என்ற கவியின் மனைவி. ஒரு புலவருக்கு அவரைப் போல் படித்த மனைவி ஒருத்தி வாய்த்துவிட்டால் அவருக்கு அதைவிட வேறு இன்பம் என்ன வேண்டும்? நாம் மேலே கூறிய ராஜசேகர கவிக்கு அந்த பாக்கியம் வாய்த்திருந்தது. ராஜசேகரன் பெரிய கவி. ‘மகா கவி’ என்றால் போதாது; ‘கவி ராஜன்’ என்று அவன் தன்னைக் கூறிக்கொள்கிறான். அவன் ‘ஹரவிலாசம்’ என்ற மகாகாவியத்தையும் ‘பால ராமாயணம்’, ‘பால பாரதம்’, ‘வித்தசால பஞ்சிகை’ என்று மூன்று சமஸ்க்ருத நாடகங்களையும், ‘கற்பூர மஞ்சரி’ என்கிற பிராகிருத நாடகம் ஒன்றையும் எழுதி இருக்கிறான். இவற்றைத் தவிர இலக்கியத்திலும் சில நூல்கள் செய்திருக்கிறான். அவற்றுள் முக்கியமானது ‘காவ்ய மீமாம்சா’ என்ற அலங்கார சாத்திரம் ஒன்று. இந்த அலங்கார நூலில் காவியம் கவிதை என்றாலென்ன; அவற்றின் அழகு யாது; அவ்வழகுக்குக் காரணமான அம்சங்கள் எவை என்பன போன்றவை ஆராயப் பட்டிருக்கின்றன. இந்நூலில் அவன் தன்னுடைய அபிப்ராயத்தையும் பிறருடைய அபிப்பிராயத்தையும் கூறும் இடங்களில், தன் மனைவி அவந்தி சுந்தரியின் அபிப்பிராயத்தையும் கூறுகிறான். இம்மாதிரி இவளுடைய அபிப்ராயம் மூன்று இடங்களில் இவனால் குறிக்கப் பட்டுள்ளது. காவிய தத்துவ சம்பந்தமாய் இவள் கொடுத்திருக்கும் அபிப்பிராயங்கள் சிறந்தனவாக இருக்கின்றன.
ராஜசேகரன் தனது கற்பூர மஞ்சரி நாடகத்தின் முன்னுரையில் அவந்தி சுந்தரி தன் மனைவி என்றும், அவளுடைய விருப்பத்தின் படி அந்த நாடகம் நடத்தப் பட்டதென்றும் கூறி இருக்கிறான். அவன் தனது காவிய மீமாம்சையில் “ஆண்மக்களைப் போலவே பெண்மக்களும் கவிகளாக இருக்கலாம்; பலரை நாம் கேள்வியுற்றும் பார்த்தும் இருக்கிறோம். அவர்களுள் பண்டிதைகளும் கவிகளும் இருக்கிறார்கள்.” என்று சொல்லியிருக்கிறான்.
கி.பி. 1600 –இல் வங்காளத்தில் பிரியம்வதை என்று ஒருத்தி இருந்தாள் என்றும், அவள் ஒரு வித்துவானுக்குப் பிறந்து மற்றொரு வித்துவானை மணந்தாளென்றும், கவிதை எழுதுவதில் அவளுக்குத் தன் கணவனும் பிதாவும் உதவி புரிந்து வந்தார்கள் என்றும் தெரிகிறது. இவளைத்தவிர மற்ற பிற்காலப் பெண்கவிகளெல்லாம் தென்னாட்டில் தொன்றினவர்களே. அவர்களிற் சிலரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
கங்காதேவி
கி.பி.1367ல் காஞ்சிபுரத்தில் வீரகம்பராயன், கம்பன், கம்பணன் என்ற விஜயநகரத்தைச் சேர்ந்த ஒரு அரசன் ஆண்டு வந்தான். அவனுக்கு கங்காதேவி என்று ஒரு மனைவி இருந்தாள். அவள் தன் கணவன் வீர கம்பணனின் வீரச்செயல்களைப் புகழ்ந்து சுமார் பத்து சர்க்கங்களில் “மதுரா விஜயம்” என்று ஒரு காவியம் எழுதி இருக்கிறாள். இதன் ஒன்பது சர்க்கங்களே இப்போது கிடைத்திருக்கின்றன. அவை அச்சிடப் பட்டிருக்கின்றன.
சம்பன் முதலியவர்கள் காஞ்சியைச் சுற்றிய துண்டீர மண்டலத்தில் அட்டூழியம் செய்து கொண்டு இருந்த போது அவர்களை ஒழிப்பதற்காக விஜய நகரத்தை ஆண்டு வந்த புக்கராயன் கம்பனை அனுப்பி வைத்தான். கம்பன் வெற்றியடைந்து துண்டீர மண்டலத்தில் (தொண்டை மண்டலம்) மரகதம் என்ற இடத்தில் முடிசூட்டிக் கொண்டான். அந்த சமயத்தில் தெற்கே மதுரை, ஸ்ரீரங்கம் முதலிய “தென்னாட்டு ராஜ்ய லக்ஷ்மி” ஒருநாள் இரவு கம்பனின் கனவில் தோன்றித் தன்னை “மிலேச்ச்சரின்” கொடுமையிலிருந்து விடுவிக்க வேண்டுமென்று வேண்டிக் கொண்டாள். அப்பொழுது கம்பனுக்குக் கீழ் செஞ்சிக் கோட்டையை ஆண்டுவந்த கோபண்ணாவும், ஸூலுவனென்ற வீரனும் கம்பனால் மதுரைக்கு அனுப்பப்பட்டார்கள். அவ்விருவரும் மகமதியரை முறியடித்து அவர்களிடம் அகப்பட்டிருந்த ஸ்ரீரங்க நாதர் விக்கிரகத்தைப் பிடுங்கி மறுபடியும் ஸ்ரீரங்கத்தில் ஸ்தாபித்தார்கள். இக்கதையைத்தான் கங்காதேவி காவியமாக ‘மதுரா விஜயம்’ என்று எழுதி இருக்கிறாள்.
கங்காதேவி காளிதாசனைப் பின்பற்றி எழுதுகிறாள். அவளுடைய சுலோகங்களில் தெளிவு என்ற குணம் நிரம்பி இருக்கிறது. பிற்கால கவிகள் போல அவள் வீண் சப்த ஆடம்பரங்கள் செய்வதில்லை.
திருமலாம்பா
இவள் ஆந்திர தேசத்தைச் சேர்ந்தவள். கி.பி. 1530 இல் விஜயநகரத்து அரசனான அச்சுதராயனின் ஆஸ்தானத்தில் இருந்தவள். இவள் எழுதிய காவியம் தஞ்சை அரண்மனைப் பழைய நூலகத்தில் இருக்கிறது. இது இன்னும் அச்சாகவில்லை. “சம்பூ” என்று சொல்லப் பட்ட , கத்யமும் – பத்யமுமாய் கலந்து எழுதப் பட்ட வகையைச் சேர்ந்தது அந்தக் காவியம். அதற்கு “வரதாம்பிகா பரிணயம்” என்று பெயர். அதில் அச்சுதராயன் வரதாம்பிகை என்பவளைத் திருமணம் செய்துகொண்ட கதை வர்ணிக்கப் பட்டிருக்கிறது. சொற்பொருள் அலங்காரங்கள் நிரம்பிய நடையில் இசைக்கப் பட்டிருக்கிறது அந்தக் காவியம்.
கதாநாயகனான அச்சுதராயனுக்கு முன்னால் ஆண்ட அரசர்கள் முதலில் வர்ணிக்கப் பட்டிருக்கிறார்கள்; பிறகு அச்சுதராயன் அவனுடைய குணங்கள், அவன் வரதாம்பிகையை மணந்து கொண்டது – இவை வர்ணிக்கப் பட்டிருக்கின்றன. முடிவில் அச்சுதராயனுக்குப் பிறந்த வேங்கடாத்ரியின் யுவராஜ பட்டாபிஷேகம் வர்ணிக்கப் பட்டிருக்கிறது.
இந்த நூலில் திருமலாம்பா தன் படிப்பைப் பற்றி சொல்லிக்கொள்கிறாள். அவள் அரசரின் போகப் பத்திநிகளில் ஒருத்தியாம். ஒரு முறை கேட்ட மாத்திரத்திலேயே அவள் இதிகாச புராண ஆகமங்களுடைய தத்துவங்களைத் தெரிந்து கொண்டாளாம். அவளுக்கு பல மொழிகளில் புலமை இருந்தது.
ரத்னகேட ஸ்ரீநிவாச தீக்ஷிதரின் மனைவி
இதற்கு சிறிது காலத்திற்கு பிறகு தொண்டை மண்டலத்திலுள்ள சத்திய மங்கலம் என்ற ஊரில் ஸ்ரீநிவாச தீக்ஷிதர் என்று ஒரு மகா பண்டிதர் இருந்தார். அவர் சுமார் நூறு நூல்கள் எழுதி இருக்கிறார். சாயங்காலத்தில் உள்ள சூரியனையும் சந்திரனையும் ரத்தினமயமான கேடயங்களாக அவர் வர்ணித்ததால் அவருக்கு ‘ரத்ன கேட’ தீக்ஷிதர் என்ற பெயரை அரசன் கொடுத்தான். அவருக்கு யானை முதலிய பெருமைகளும் அரசனால் வழங்கப் பட்டன.
அவருடைய புலமையைக் கேட்டு அவரை வாதித்து வெல்ல வேண்டுமென்று ஒருநாள் வடநாட்டிலிருந்து புலவர் ஒருவர் வந்தார். காலை வேளை; தீக்ஷிதரின் வீட்டு வாயிலில் அவர் மனைவி அழகாக கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். அப்பொழுது வடநாட்டுப் புலி வந்து வீட்டின் அருகில் அங்குமிங்கும் பார்த்துத் தயங்கிக் கொண்டிருந்தது. “இது வாதத்திற்கு தான் வந்திருக்கிறது. இதை நமது கணவர் வரைக்கும் அனுப்புவானேன்; நாமே இதை வெருட்டி விடலாம்” என்று விளையாட்டாய் ரத்னகேட ஸ்ரீநிவாச தீக்ஷிதருடைய மனைவி தன் கணவரின் படிப்பையும் அவர் வாதம் செய்யும் திறமையையும் பற்றி மிக அழகாய் ஒரு சுலோகம் அந்த கணமே சொன்னாள். சுலோகத்தைக் கேட்டதும் “ஏது, இவர் வீட்டில் உள்ள கன்றுக் குட்டியுடனும் கூட தம்மால் வாதம் செய்ய முடியாது!” என்று எண்ணி வடதேச வித்துவான் வந்த வழியே போய்விட்டார்.
தீக்ஷிதர் வாதம் செய்யப் போனால் அவ்விடம் தானும் செல்வது அவருடைய மனைவிக்கு வழக்கமாம். ஒருநாள் வாத மண்டபத்திற்கு அவள் காலதாமதமாய் வந்ததற்காக தீக்ஷிதர் “ப்ரியசகி, அலங்காரத்திற்கோ இவ்வளவு நாழிகை?” என்று விளையாட்டாய் கேட்க, அதியே முடிவாக வைத்துக் கொண்டு, அவள் “ஆம் அலங்காரத்திற்கு நாழிகை ஆயிற்று” என்று உடனே ஒரு சுலோகம் சொன்னாள்.
“தலைமயிரை சடையாக பின்னினேன். கருப்பு பாம்பு என்று எண்ணி மயில் ஒன்று அதைக் கோத்த வந்தது. உடனே பின்னலை பிரித்துத் தோகை போல விட்டேன்; நான் மற்றொரு மயிலென்று எண்ணி அம்மயில் சண்டைக்கு வந்தது. பின் கூந்தலைக் கட்டினேன். நீண்ட மேகமென நினைத்து அம்மயில் ஆனந்தமாய் ஆட ஆரம்பித்தது; அந்த ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டதால் அலங்காரத்திற்கு நாழியாய் விட்டது. “
ராமபத்ராம்பா
மேற்சொன்ன ரத்னா கேட ஸ்ரீநிவாச தீட்சிதருக்கு அவரைப்போல புலமை வாய்ந்து அவர் போலவே கணக்கிலா நூல்களை எழுதிய புதல்வர் ஒருவர் உண்டு. அவர் பெயர் ராஜ சூடாமணி தீக்ஷிதர். அவரை ஆதரித்து வந்த மன்னன தஞ்சையை ஆண்டு வந்த ரகுநாத பூபாலன். இந்த ரகுநாத பூபாலன் சங்கீத சாகித்தியங்களில் மிகவும் தேர்ச்சி அடைந்தவன். இவனது ஆஸ்தானத்திலும் சங்கீத சாகித்திய வித்வான்கள். நிறையப் பேர்கள் இருந்தார்கள். முக்கியமானவர், இவனுடைய தந்தையான அச்சுதராயன் காலம் முதல் தஞ்சையில் மந்திரியாக விளங்கி வந்த கோவிந்த தீட்சிதர். இவர் ரகுநாதன் பெயரால்
“சங்கீத சுதா” என்று ஒரு சங்கீத நூல் எழுதி இருக்கிறார். அதை சென்னை சங்கீத வித்வத் சபையார் (Madras Music Academy) தங்களது பத்திரிகையில் அச்சிட்டிருக்கிறார்கள்.
இந்த கோவிந்த தீட்சிதருக்கு யக்ஞ நாராயண தீக்ஷிதர் என்று ஒரு பிள்ளை. அவர் ரகுநாதனை நாயகனாக வைத்து காவியங்கள் இயற்றினார். அவற்றில் ஒன்று “சாகித்ய ரத்னாகரம்” – இது சென்னைப் பல்கலைக் கழக சமஸ்க்ருத தொடரில் டாக்டர் டி.ஆர். சிந்தாமணியால் வெளியிடப் பட்டிருக்கிறது. மற்றொரு பிள்ளை வேங்கடமகி என்கிற வெங்கடேஸ்வர தீக்ஷிதர். வேங்கடமகி என்கிறவர் மீமாம்சா சாத்திரத்தில் “வார்த்திகா பரணம்” என்கிற நூலை இயற்றினார். மிக அழகான காவியங்களையும் ஹாஸ்ய ரசம் நிரம்பிய சாகித்தியங்களையும் எழுதி பிற்கால சமஸ்க்ருத சாகித்தியத்தையே உயிர்பிக்க செய்த மதுரை நாயக்க அரசன் மந்திரியான நீலகண்ட தீக்ஷிதர் இந்த வேங்கட மகியின் சீடர். ரகுநாத பூபாலனின் மகனான விஜய ராகவ பூபாலனால் தூண்டப் பட்டு இந்த வேங்கட மகி “சதுரதண்டீ பிரகாசிகா” என்ற சங்கீத நூலை இயற்றினார். இதையும் சென்னை சங்கீத வித்வத் சபையார் அச்சிட்டிருக்கிறார்கள். இந்த புத்தகம் தான் தற்காலம் நமக்கு வழங்கி வரும் கர்நாடக சங்கீதத்திற்கு முதல் ஆதார நூல். இதில் தான் 72 மேள கர்த்தா ராகங்கள் என்று சொல்லப் பட்ட பிரிவுகள் கூறப் பட்டிருக்கின்றன. இன்னும் தெலுங்கிலும் வெகு அழகாய் பதங்களைப் பாடிய க்ஷேத்ரக்ஞ கவியும் ரகுநாதனை அண்டியவர். ரகுனாதனால் ஆதரிக்கப் பட்ட வித்வான்கள் கணக்கில்லை. இந்த ரகுநாத பூபாலன் 1614 ல் சிங்காதனம் ஏறியவன்.
ரகுநாதனுடைய ஆஸ்தானத்தில் விசேஷம் ஒன்று உண்டு; அதில் சங்கீத சாகித்திய பண்டிதைகளான பெண்கள் அனேகம பேர் இருந்தனர். ரகுநாதனின் போக பத்தினிகளில் ராமபத்ராம்பா என்று ஒருத்தி இருந்தாள். இவள் தன் நாயகனான ரகுநாதனைப் பற்றி “ரகுநாதாப்யுதயம்” என்று 12 சர்க்கங்கள் அடங்கிய காவியமொன்று செய்தாள். அதை சென்னைப் பல்கலைக் கழகத்தில் சமஸ்க்ருத ஆராய்ச்சி பிரிவில் டாக்டர். டி. ஆர். சிந்தாமணி அவர்கள் வெளியிட்டார். இந்த நூலில் சரித்திர சம்பந்தமான விஷயங்கள் இருக்கின்றன. ரகுநாதனின் தகப்பன் அச்சுதராயன். அவனுடைய வர்ணனையுடன் நூல் ஆரம்பிக்கிறது. பிறகு ரகுநாதனின் பிறப்பும், அவன் வளர்ந்து பெரிய பண்டிதனாவதும் வர்ணிக்கப் படுகிறது. பின் ரகுநாதனுக்கு யுவராஜா பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. தான் யுவராஜாவானதும் விஜயநகர அரசனுக்கு உதவி புரிந்து, மற்ற அரசர்களை அடக்குகிறான். அங்கே கிருஷ்ணப்பா என்கிற அரசனை சிறையிலிருந்து விடுவித்து, அவன் மகளைக் கல்யாணம் செய்து கொள்ளுகிறான். கி.பி. 1614 இல் தஞ்சைக்கு திரும்பி அரசனானான். போர்த்துகீசியரை எதிர்த்து ஜாப்னா மன்னனைக் காப்பாற்றினான். அக்காலத்தில் தென்னாட்டு ராவணனாக விளங்கிய சோலகன் என்றவனை ஒழித்தான். காவேரிக் கரையில் வெற்றித் தூண் ஒன்று நாட்டித் தஞ்சைக்கு திரும்பினான்.
இப்படி வெற்றியுடன் திரும்பினதும் தஞ்சையில் ஒரு பெரிய ஆஸ்தானம் கட்டினான். அவனுடைய கவிகளும் கலைஞர்களும் “லக்ஷ்மி விலாசம்” என்ற சபையில் கூடினர். அவர்களில் பெண்மணிகள் அனேகம். இந்த பெண்மணிகள் நான்கு விதமான கவிதையிலும், குறையான சுலோகங்களை நிரப்புவதிலும், ஓர் அடியைக் கொண்டு மற்ற அடிகளை எழுதுவதிலும், மணிக்கு நூறு சுலோகம் செய்வதிலும், திறமை வாய்ந்தவர்கள். சமஸ்க்ருதம், தெலுங்கு, ஆறு விதமான பிராகிருதங்கள், இந்த எட்டு பாஷைகளிலும் கவனம் செய்யக் கூடியவர்கள். காவிய நாடகங்களுக்கு அருமையாய் அர்த்தம் சொல்வார்கள்; கர்நாடகத்திலும் தேசியிலும் பாடுவதிலும், வாத்தியங்கள் இசைப்பதிலும், நடனமாடுவ்திலும் நிகரற்றவர்கள். இந்த பெண் புலவர்களை எல்லாம் ஆஸ்தானத்தில் பரிட்சித்து, அவர்களுக்கு ரகுநாதன் கனகாபிஷேகம் ஒன்று செய்தான். அக்கூட்டத்தில் முக்கியமானவள் மேற்சொன்ன ராமபத்ராம்பா. தான் ராமபிரானின் அருளால் கவியானதாகவும், தான் சாகித்திய சாம்ராஜ்ய பீடத்தை ஏறினவள் என்றும் இவள் தன்னைச் சொல்லிக் கொள்கிறாள்.
மதுரவாணி
ராமபத்ராம்பாளைப் போல புகழ்வாய்ந்த மற்றொரு கவியரசி ரகுநாதனின் ஆஸ்தானத்தில் இருந்தாள். இவளுடைய உண்மை பெயர் நமக்கு தெரியவில்லை. அவளுடைய கவிதையின் இனிமையால் அவள் “மதுரவாணி” என்ற பெயரை அடைந்தாள். ரகுநாத பூபாலன் தெலுங்கில் இயற்றிய “ஆந்திர ராமாயணத்தை” இந்த மதுரவாணி சமஸ்க்ருதத்தில் மொழி பெயர்த்தாள்.
ஸ்ரீஹர்ஷன் முதலியவர் இயற்றிய மகாகாவியங்களுக்கு அவள் “பதில் வெட்டுக்கள்” இயற்றினாள். அவளுடைய நூல்களில் ஒன்றும் நமக்கு கிடைக்கவில்லை. தஞ்சை அரண்மனை நூலகத்திலேயே அவை ஒன்றும் கிடைக்கவில்லை. அவள் சமஸ்க்ருதத்தில் செய்த ராமாயணம் மட்டும் இருப்பதாக தெரிகிறது.
சுந்தரியும் கமலாவும்
தஞ்சை நாயக்க அரசர்களுக்குப் பின் மராட்டிய அரசர்கள் ஆண்டனர். அவர்களில் கி.பி. 1728 – 1736 ல் துக்கோஜி என்பார் ஆண்டார். இவருக்கு துலஜாஜி என்று மற்றொரு பெயர். இவர் சமஸ்க்ருதத்தில் “சங்கீத சாராம்ருதம்” என்றொரு இசை நூல் இயற்றினார். இவருடைய ஆஸ்தானத்தில் கனச்யாமன் என்றொரு கவி இருந்தான். அவன் மிகவும் திமிர் பிடித்த கவிஞன். காளிதாசனுடைய நாடகம் ஒன்றுக்கு வியாக்யானம் செய்ய ஆரம்பித்தான்; அதில் ஐம்பது அறுபது நூல்கள் எழுதிய தன் கைக்கு ஐந்தாறு நூல்களே செய்த காளிதாசனுடைய நாடகத்துக்கு வியாக்யானம் செய்ய வெட்கமாக இருக்கிறது என்று எழுதத் துணிந்தான்.
“பன்றி குட்டிகளை வத வத என்று ஒரு நொடியில் போட்டு விடுகிறது. யானை இருந்திருந்து போடும் ஒரு குட்டி அரசர்களால் வளர்க்கப் படுகிறது” என்று வேதாந்த தேசிகர் சொன்ன சுலோகத்தின் முதல் அடி இந்த கனச்யாமனுக்கு பொருந்தும். தான் செய்த 64 நூல்களில் சிலவற்றை இவன் ஓரிரவிலேயே செய்தானாம். சிலவற்றை ஒரே மூச்சில் எழுதி முடித்தானாம்.
இச்சளைப் பில்லாத கனச்யாமனுக்கு சுந்தரி, கமலா என்று இரண்டு மனைவிகள். இவ்விருவரும் நன்கு படித்தவர்கள். ராஜசேகர கவி எழுதிய “வித்தசால பஞ்சிகை” என்ற நாடகத்திற்கு இவ்விருவருமாக சேர்ந்து “சமத்கார தரங்கிணி” என்றொரு வியாக்யானம் செய்திருக்கிறார்கள். இன்னும் அச்சாகவில்லை. அவ்விருவரும் படித்திருந்தது பெரிதல்ல. சக்களத்திகளாக இருந்து ஒத்துழைத்ததே பெரிது!
அருமையாக தகவலுடன் இன்றைய என் வாசிப்பை நிறைவு செய்தது உங்கள் பதிவு ………நன்றி
மிகச்சிறந்த கருத்துக்கள்.எனினும் சமஸ்கிருத சுலோகங்களையும் சேர்த்திருப்பின் அதிகூடிய பலன்களை வாசகர்களாகிய நாம் பெற்றிருக்கலாம்
Yes some slokas in devanagari with tamil meaning will enhance the value of this great article Great infm and very nice pictures. Can you give the source of these great paintings also ?
NALLAVA ILLEA
அரிய தகவல்கள் மிக்க நன்றி எஸ் வி ஆர் மூர்த்தி பெங்களூர்
20.08.2022