காலத்தை வென்ற கவிஞன் காளிதாசன்!

இளம்பிறை போல் வளைந்துள்ளன
மொட்டவிழாத சிவந்த பலாச மலர்கள்
வசந்தத்துடன் கூடிக் களித்த வனமகள் மேனி மீது
நகக் கீறல்களென.
தன் இணை பருகிய மலர்க்கலத்தில் எஞ்சிய தேனை
சுவைக்கிறது வண்டு.
தீண்டலின் சுகத்தில் கண்மூடிய பெண்மானைக்
கொம்புகளால் வருடுகிறது ஆண்மான்.
கமல மலரின் நறுமணம் ஊறும் நீரைக்
களிற்றுக்குத் துதிக்கையால் ஊட்டுகிறது பிடி
தாமரைக் குருத்தை நீட்டித்
தன்னவளை உபசரிக்கிறது சக்ரவாகம்.
பெருமரங்களின் திரண்ட கிளைகளைத்
தழுவுகின்றன
செறிந்த மலர்முலைக் கொத்துக்களும்
அசையும் தளிர் இதழ்களும் கொண்ட
பூங்கொடிகள்.
புஷ்பமதுவால் சுழலும் கண்களுடன்
வியர்வை துளிர்க்கப் பாடுகிறாள் அவள்.
பாட்டுகளுக்கு நடுவில் அவள் முகத்தை முத்தமிடுகிறான்
கிம்புருஷன்.
மாந்தளிரின் சுவையூறும் குரலில்
இனிதாகக் கூவுகிறது ஆண்குயில்
முகம் திருப்பிச் செல்லும் இவளது தற்செருக்கை உடைக்கும்
மன்மதனின் வசந்தகால ஆணை என.

( மகாகவி காளிதாசனின் குமாரசம்பவம், மொழியாக்கம் ஜடாயு)

காவியம் எதற்கு? காவியத்தைப் படைப்பதனாலோ படிப்பதனாலோ என்ன பயன்? இந்த கேள்விக்கு பழைய கவிஞர் ஒருவர் இவ்வாறு பதில் சொல்கிறார்.

காவ்யம்ʼ யஸ²ஸே அர்த²க்ருʼதே வ்யவஹாரவிதே³ ஸி²வேதர க்ஷதயே |
ஸத்³ய: பரநிவ்ருʼதயே காந்தாஸம்ʼமிததயா உபதே³ஸ²யுஜே ||

“காவியம் இயற்றுவதிலும் வாசிப்பதிலும் ஆறு நன்மைகள் உண்டு. காவியங்கள் இயற்றுவதாலும் படிப்பதாலும் புகழ் கிடைக்கும். செல்வம் சேரும். நடைமுறையில் எண்ணங்களை வலுவாக வெளிப்படுத்த இயலும். மங்கலம் உண்டாகும். அமங்கலம் விலகும். கவிதை இன்பத்தை அனுபவித்து மனமகிழ்வு அடையலாம். விடை தெரியாத சிக்கல் ஏற்படும்போது, உற்ற மனைவி சொல் போன்ற நல்லுரையைக் காவியத்திலிருந்து பெறலாம்” என்கிறார் கவிஞர். அறம், பொருள், காமம், வீடு பேறு என்று வாழ்க்கையில் அடையவேண்டியவையாக உள்ள நான்கிலும் உன்னதத்தை எடுத்துக் காட்டும் காவியங்களுக்கு நமது வரலாற்றில் குறைவில்லை. அவற்றில் முதன்மையானவை காளிதாசனின் காவியங்கள்.

புரா கவீநாம்ʼ க³ணநா ப்ரஸங்கெ³ கநிஷ்டிகாதி⁴ஷ்டித காளிதா³ஸ |
அத்³யாபி தத்துல்ய கவேரபா⁴வாத் அநாமிகா ஸார்த²வதீ ப³பூ⁴வ ||

முன்பொருமுறை கவிஞர்களை வரிசைப்படுத்த எண்ணி, சுண்டு விரலை நீட்டி காளிதாசன் என்ற பிறகு அவனுக்கு இணையாக அடுத்து யாரைச் சொல்வது என்று பார்த்தால் யாருமே கிடைக்க வில்லை. அதனால் மோதிரவிரல் அநாமிகா (பெயரற்றது) என்று பெயர் பெற்றது”.

சம்ஸ்க்ருதத்தில் மோதிர விரலுக்கு அநாமிகா என்று பெயர். அதை வைத்து சாமர்த்தியமாக புனையப் பட்ட கவிதை இது. காளிதாசன் காலத்தாலும் முற்பட்டவன், கவிதை புனையும் திறனிலும் ஈடு இணையற்றவன். வேதம், இதிகாசம், புராணம் இதர சாத்திரங்கள் அனைத்தும் கற்றவன் காளிதாசன். தான் கற்ற கல்வியின் சாரத்தை ஆழ்ந்த கவிதைகள் மூலம் வெளிப்படுத்தியவன்.

ஓ இணையற்ற கவியே!
அன்றொரு ஆடிமாதத்தின் அற்புத நாளில்
எப்போதென்று தெரியாத ஒரு வருடத்தில்,
நீ மேகதூதம் எழுதினாய்!
உன் கவிதை வரிகள் ஒவ்வொன்றுமே
கருமை பூசிய ஆழ்ந்த ஒலியுடைய மேகம் போல
பிரிய நேர்ந்த காதலரின் தாபங்களை
இடியோசையாய் எடுத்துரைக்கும்!

– காளிதாசனைக் குறித்து ரவீந்திரநாத் தாகூர்*

நம் காலத்துக்கு வெகு அருகில் வாழ்ந்து மறைந்த ரவீந்திரநாத் தாகூர் மட்டுமல்ல, நமது வரலாற்றில் புகழ் பெற்ற கவிஞர்கள் அனைவரிடமுமே காளிதாசனின் பாதிப்பு உண்டு. அதனால் தான் கவி குல குரு என்றே சம்ஸ்க்ருத மரபில் அவனை அழைக்கிறார்கள்.
இவ்வளவு பெருமை உள்ள கவியரசன் தன்னை எப்படி கருதிக் கொள்கிறான் தெரியுமா?

மந்த³: கவியஶ:ப்ரார்தீ² க³மிஷ்யாம்யுபஹாஸ்யதாம்|
ப்ராம்ʼஶுலப்⁴யே ப²லே லோபா⁴து³த்³ப³ஹுரிவ வாமன:||

கவிஞர்களுக்கே உரிய பெருமையை விரும்பி மந்தனான நானும், எட்டாத பழத்துக்கு ஆசைப்பட்டு துள்ளித் துள்ளிக் குதித்து ஏமாந்து நகைப்புக் கிடமாகும் குள்ளனின் நிலையை அடைவேனோ என்கிறான்.

உவமை என்றால் காளிதாசனின் உவமைகளே (உபமா காளிதாசஸ்ய) என்றொரு வழக்கு உண்டு. எத்தனை கோணத்திலிருந்து ஒப்பு நோக்கினாலும் பொருந்தக் கூடிய உவமைகள் அவை.

ரகுவம்சத்தின் முதல் கவிதை:

வாக³ர்தா²விவ ஸம்ப்ருக்தௌ வாக³ர்த²ப்ரதிபத்தயே |
ஜக³த: பிதரௌ வந்தே³ பார்வதீபரமேஶ்வரௌ ||

சொல்லும் பொருளும் என இணைந்த
தொல்லுலகின் தாய்தந்தையரை
பார்வதி பரமேஸ்வரரை
சொல்லையும் பொருளையும் அறிந்திட வேண்டிப்
பணிகிறேன்!

எத்தனை அழகிய உவமை! பார்வதி பரமேஸ்வர தம்பதியர் இருவர் மீதும் கவிஞருக்கு இணைபிரியாத பேதமற்ற பக்தி உண்டு என்பது இப்பாடலில் வெளிப்படுகிறது. காளிதாசன் என்ற பெயருக்கு காளியின் தாசன் என்று பொதுவாக அர்த்தம் சொல்வர். காலிந் என்றால் காலத்தை வென்றவன், சிவன் என்றும் பொருள். எனவே சிவபெருமானுக்கு தாசன் என்று இன்னொரு அர்த்தமும் உண்டு.

காளிதாசனின் கவித்திறன் சம்ஸ்க்ருதம் என்ற மொழிக்குள் அடைபட்டதன்று. ஏனெனில் அவனது கவிதைகளின் விழுப்பொருள் நமது பாரதப் பண்பாட்டில் ஊன்றித் திளைத்த ஒன்றாகவே இருக்கும். காளிதாசனின் முக்கியத்துவம் குறித்து மறைந்த சம்ஸ்க்ருத மேதை டாக்டர் V. ராகவன் கூறுகிறார் “Kalidasa represents the quintessence of Indian culture and heritage; and whether it is a native who wants to partake of it or an outsider who seeks an authentic message of it, to both of them Kalidasa is most satisfactory and at the same time the most attractive exponent of it”. தமிழ் உட்பட எல்லா பாரத மொழிகளிலும் அவனுக்குப் பின்வந்த கவிஞர்களிடம் காளிதாசனின் தாக்கம் காணக் கிடைக்கிறது என்று இந்திய இலக்கிய அறிஞர்கள் கருதுகிறார்கள்.

உதாரணமாக காளிதாசனின் குமாரசம்பவத்தில் ஒரு கவிதை:

ஸ்தி²தா: க்ஷணம்ʼ பக்ஷ்மாஸு தாடி³தாத⁴ரா:
பயோத⁴ரோத்ஸேத⁴நிபாதசூர்ணிதா:
வலீஷு தஸ்யா: ஸ்க²லிதா: ப்ரபேதி³ரே
சிரேண நாபி⁴ம்ʼ ப்ரத²மோத³பி³ந்த³வ:

மழையின் முதல் துளிகள் அவளின் கண் இமைகளில் சிறிது தங்கின… பின் அவள் மார்பகங்களில் சிதறின… இறங்கி அவள் வயிற்று சதைமடிப்பு வரிகளில் தயங்கின… வெகுநேரத்திற்கு பின் அவள் நாபிச் சுழியில் கலந்தன…

கம்பராமாயணம், அயோத்தியா காண்டம், நகர்நீங்குபடலம் 184ம் பாடல்

திடருடைக் குங்குமச் சேறும், சாந்தமும்
இடை இடை வண்டல் இட்டு ஆரம் ஈர்த்தன;
மிடை முலைக் குவடு ஓரீஇ, மேகலைத் தடங்
கடலிடைப் புகுந்த, கண் கலுழி ஆறு அரோ. (அயோத்தியா காண்டம், நகர்நீங்கு படலம்)

கண்களினின்று புறப்பட்ட கண்ணீர் ஆறு, மிகுதியான குங்குமக் குழம்பையும், சிவந்த சாந்தினையும் நடுநடுவே சேறாகப் பொருந்தப் பெற்று, மாதரின் முத்து மாலைகளை இழுத்தது, நெருங்கிய தனங்களில் விழுந்து நீங்கி மேகலை அணிந்த இடையில் சென்று சேர்ந்தது.

காளிதாசனுக்கு முன்பு மேகதூதம் போல காதல் தூது விடுவதை என்பதைக் கொண்ட காவியங்கள் வடமொழியில் இல்லை. ஆனால் தமிழில் சங்க இலக்கியங்களில் தூது விடும் பாடல்கள் உண்டு. ஒருவேளை காளிதாசனும் தமிழ் இலக்கியம் குறித்து அறிந்து அதிலிருந்து உந்துதல் பெற்றிருக்கக் கூடும் என்று தோன்றுகிறது. ரகுவம்சத்தில் பல இடங்களில் பாண்டியர்கள் பற்றிய குறிப்பு இடம்பெறுகிறது. அதிலொன்று இது:

தி³ஸி² மந்தா³யதே தேஜோ த³க்ஷிணஸ்யாம்ʼ ரவேரபி |
தஸ்யாம்ʼ ஏவ ரகோ⁴: பாண்ட்³யா: ப்ரதாபம்ʼ ந விஷேஹிரே ||

தக்ஷிணாயன காலம். சூரியன் தெற்கு திசையில் வருகிறான். அப்போது சூரிய ஒளி மங்கியதாக இருக்கிறது. இதற்கு சூரியன் பாண்டியர்க்கு அஞ்சி ஒளி குன்றியதாக கூறுகிறார். அவ்வளவு வீரம் செறிந்த பாண்டியர்களும் மாமன்னன் ரகுவுக்குப் பணிந்தனராம்.

காளிதாசனின் காவியங்களையும் தமிழ் இலக்கிய நூல்களையும் ஒப்பீடு செய்யும் ஆராய்ச்சி எதுவும் நடைபெற்றதாகத் தெரியவில்லை. நிச்சயம் காளிதாசனிடம் சங்க இலக்கிய மரபின் பாதிப்பு இருக்கக் கூடும், காளிதாசனின் பாதிப்பு தமிழ் கவிஞர்களிடமும் காணக்கூடும். தமிழ்மொழி, வடமொழி இரண்டிலும் வல்லவர்களே அத்தகைய ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட முடியும். அப்படி வடமொழி-தமிழ் இலக்கியங்களில் கூட்டாக ஆய்வு மேற்கொள்ளப் பட்டால் அது பல அதிசயங்களை வெளிக்கொணரும் என்பதில் ஐயமில்லை.

கவிஞர்கள் தாம் மதிக்கும் விரும்பி ரசிக்கும் முன்னோடிகளின் கருத்துக்களையும் வாசகங்களையும் தாமும் எடுத்தாண்டு அவர்களுக்கு மரியாதை செய்வது வழக்கம் தான். ஒரு சுவாரசியமான உவமையின் வாயிலாக இதைக் காளிதாசன் கூறுகிறான்:

அத² வா க்ருʼதவாக்³த்³வாரே வம்ʼஶே(அ)ஸ்மின்பூர்வஸூரிபி⁴: |
மணௌ வஜ்ரஸமுத்கீர்ணே ஸூத்ரஸ்யேவாஸ்தி மே க³தி: ||

ஆயினும், முன்னிருந்த புலவோர் செய்த
சொல்லெனும் துளையில் என் மொழி செல்லும்,
ரத்தினத்தை ஊடுருவி வைரம் இட்ட துளை வழியே
நூல் செல்வது போல.

அதாவது ரகு வம்சத்தில் ஒவ்வொரு அரசனின் வரலாறும் இணையற்ற இரத்தினமாக இருக்கிறது. என் முன்னிருந்த வால்மீகி போன்ற பெரியோர் அந்த இரத்தினங்களுக்கு அவர்களது வைரம் போன்ற படைப்புகளால், துளையிட்டு உள் நுழைந்து வெளிவந்தனர். அத்தகைய துளைகளுக்குள் நுழைந்து வெளிவந்து அவற்றை இணைக்கும் சரடு போன்றது தான் என் முயற்சி. பத்தொன்பது அத்தியாயங்களுடன், ஆயிரக்கணக்கான அழகழகான கவிதைகளுடன் ஒரு மகா காவியத்தைப் படைத்த கவியிடம் எத்தனை அடக்கம்!

ரகுவம்சத்தில் இந்துமதியின் சுயம்வரக் காட்சி. சுயவரத்துக்கு பல தேசத்து அரசர்களும் வந்து அமர்ந்திருக்கின்றனர். பாண்டிய மன்னனும் தான்! அவர்கள் ஒவ்வொருவரும் இந்துமதியின் அழகில் மயங்கி அவளை தன்னை நோக்கி ஏற்பதற்காக சில சைகைகளை செய்து கவனத்தை ஈர்க்கின்றனர். அப்போது இளவரசி ஒவ்வொருவராக பார்வை இடுகிறாள்.

ஸஞ்சாரிணீ தீ³பஶிகே²வ ராத்ரௌ யம்ʼ யம்ʼ வ்யதீயாய பதிம்ʼவரா ஸா |
நரேந்த்³ரமார்கா³ட்ட இவ ப்ரபேதே³ விவர்ணபா⁴வம்ʼ ஸ ஸ பூ⁴மிபால: ||

இந்துமதி ஒவ்வொரு அரசனையும் நெருங்கும்போது மகிழும் அவ்வரசன் அவள் அடுத்து நகர்ந்து விட, நமக்கு மாலையிடவில்லையே என்று வருந்தி களையிழந்து போகிறான். இக்காட்சி, இருபுறமும் அழகழகான மாளிகைகள் கொண்ட ராஜவீதியில் தீபம் ஒன்று எடுத்துச் செல்லப் படும்போது, ஒவ்வொரு மாளிகையும் பிரகாசம் அடைந்து, அந்த தீபம் நகர்ந்தபின் இருளடைவதைப் போல இருந்ததாம். இந்துமதியை தீபச்சுடராகவும், வந்திருக்கும் அரசர்களை அவள் வாசம் செய்யப்போகும் மாளிகையாகவும் ஒப்பிட்டது சிறந்த உவமையாக ரசிக்கப் படுகிறது.

இந்துமதி சுயம்வரத்தில் ரகுவின் புதல்வனான அஜனைத் தேர்ந்தெடுத்து மணம் புரிகிறாள். சிலகாலம் அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து தசரதனை மகனாக பெற்றெடுக்கிறார்கள். பின்பு ஒரு நாள் திடீரென்று இந்துமதி இறந்து விடுகிறாள். அந்த சந்தர்ப்பத்தில் வரும் கவிதைகள் தன் அன்புத் துணையை இழந்த காதலனின் ஆழ்ந்த சோகத்தை வெளிப்படுத்துவதில் இணையற்றவையாக கருதப் படுகின்றன.

அந்த ஒப்பற்ற ஒற்றைத் தாமரை இரவில் கூம்புகிறது. உள்ளே வண்டுகளின் ஒலி நின்றுவிட்டது. கலைந்த கூந்தலோடு பேச்சடங்கிய உன் முகம்!

நீ எனக்குத் மனைவியாக, மந்திரியாக இருந்தாய். தனிமையில் துணையாகவும், கலைகளைக் கற்பதில் அன்பான மாணவியாகவும் இருந்தாய். கருணையற்ற யமன் எனது எப்பொருளைத் தான் அபகரிக்க வில்லை?

நான் வாய்வழி தரும் இனிய மதுவையே பருகி மயக்கும் விழியாளே, என் கண்ணீரும் கலந்து நான் கைகளால் தரும் தர்ப்பண நீரை மறுவுலகில் எப்படிப் பருகுவாய்?
(ஜடாயுவின் மொழியாக்கத்திலிருந்து)

காளிதாசனின் படைப்புகளில் பெண் பாத்திரங்கள் வலிமையாகவே படைக்கப்பட்டுள்ளன. கல்வியில், அழகில், நிர்வாகத் திறனில் எதிலும் அபலைகளாக அப்பெண்கள் இல்லை. குறிப்பாக மாளவிகாக்நிமித்ரம் என்ற நாடகத்தில், கௌசிகியின் பாத்திரம். அவள் கணவனற்றவள், சகோதரனையும் பறிகொடுக்கிறாள், ஆனால் அறிவிற்சிறந்தவளான அவள் மனம் தளரவில்லை. எல்லா கலைகளிலும் கல்வியிலும் சிறந்தவளான அவள் தான் அரசவையில் முக்கிய இடம் பிடிக்கிறாள். கௌசிகியின் பாத்திரத்தை அறிமுகம் இவ்வாறு அமைகிறது:

மங்க³லாலங்க்ருʼதா பா⁴தி கௌஸி²க்யா யதிவேஷயா |
த்ரயீ விக்³ரஹவத்யேவ ஸமமத்⁴யாத்மவித்யயா || 13||

அழகிய ஆபரணங்களுடன் அரசியும் பின் தொடர்ந்து சந்நியாசினியான கௌசிகியும் வருவது, வேதத்தைத் தொடர்ந்து உபநிடதம் வருவதைப் போன்று இருந்தது.

காளிதாசனின் காலத்தில் ஆண்களுக்கு சமமாக பெண்களும் அரசில் பங்கு பெற்றார்கள், துறவறத்திலும் பங்கு பெற்றனர், விரும்பியதை அடைவதில் பாகுபாடு, வேறுபாடுகள் இல்லை. நடைமுறைக் கல்வியும், ஆன்மீகக் கல்வியும் பெண்களுக்கு தடை செய்யப் படவில்லை என்பதே இங்கு நமக்குக் கிடைக்கும் சித்திரம். இன்னொரு குறிப்பிடத் தக்க அம்சம், எந்த பெண்ணுக்கும் ஜாதி, வர்ண வேறுபாடுகள் ஏற்றத்தாழ்வுகள் காளிதாசனின் காவியங்களில் கூறப்படவில்லை. இளவரசியான மாளவிகா, பணிப்பெண்ணாகவும் இருக்கிறாள். அதனை அவள் கீழ்மையாகக் கருதவில்லை. சகுந்தலா துஷ்யந்தனின் அவையில், இன்னொரு பெண்ணால் தூஷிக்கப்படுவதை எதிர்த்து சுயமரியாதையுடன் வாதிடுகிறாள். காளிதாசன் நமக்குக் காட்டும் பெண் பாத்திரங்கள், நமது இன்றைய பல முன்முடிவுகளைத் தகர்ப்பதாகவே அமைந்துள்ளன.

காளிதாசன் உஜ்ஜைனி பட்டணத்தில் விக்கிரமாதித்தன் அவையில் வீற்றிருந்தான் அல்லது தாரா நகரத்தில் போஜராஜன் அவையில் இருந்தான் என்பன போன்ற கதைகள் பல உண்டு. காளிதாசன் எந்த அரசனின் காலத்தில் இருந்தான் என்பது யாருக்கும் தீர்மானமாகத் தெரியாது. அகச்சான்றுகளும் இல்லை. எப்படியாயினும் மன்னரைப் பாடிப் பரிசு பெரும் கூட்டத்தைச் சேர்ந்த புலவனல்ல அவன். அவன் வாழ்ந்த காலம் பாரதத்தின் பொற்காலமாக இருந்திருக்க வேண்டும். அப்போதும் பாரதப் பண்பாடு துறவறத்தையே உயர்வாக எண்ணிக் கொண்டாடியது. ஆடம்பரத்தையும், செல்வச் செழிப்பையும் பெரிதாக எண்ணி அதனை தேடி ஓயாமல் ஓடுவதை நம் பண்பாடு ஊக்குவிக்க வில்லை. காளிதாசனின் கவிதைகளில் இத்தகைய விழுமியங்களை தொடர்ச்சியாகக் காணலாம்.

சாகுந்தலத்தில் துஷ்யந்தனின் ராஜ போக வாழ்க்கையை விட காட்டில் முனிவர்கள் வாழும் சூழலும் அழகியலுமே அதிகம் இடம் பிடிக்கிறது. குமார சம்பவமும் காடு, இயற்கை சூழ்நிலையில் நிகழ்வதே. ரிது சம்ஹாரம் இயற்கையைக் கொண்டாடுவதே. ரகு வம்சத்தில் தேவருலகம் வரை ரதத்தில் சென்று வரக்கூடிய அரசனாக இருந்தும், திலீபன் காட்டில் முனிவரின் குடிலில் உள்ள காமதேனுவுக்கு பணிவிடை செய்ய நேரிடுகிறது. ராமனின் வரலாறும் அரச போகம் துறந்து காட்டில் வாழ்வதில் தான் பெரும்பகுதி செல்கிறது. எத்தனையோ மகாராஜர்கள் பராக்கிரமசாலிகள் பேசப் படும்போதெல்லாம், தவ வலிமையும் எளிமையும் உள்ள முனிவர்களும் முன்னிறுத்தப் படுகிறார்கள். இத்தகைய சூழ்நிலைகள் திரும்ப திரும்ப வருவதன் பின்னால் உள்ள சிந்தனை கவனத்திற்குரியது.

காளிதாசன் வானவில்லின் ஏழு வண்ணங்களைப் போல் ஏழு சிறந்த படைப்புகளை நமக்கு படைத்து அளித்திருக்கிறான். மூன்று நாடகங்கள், இரண்டு சிறு காவியங்கள், இரண்டு பெருங்காப்பியங்கள். காளிதாசனின் கவிதை அத்தனை எளிமையானது, புரிந்து கொள்ளக் கூடியது அதே சமயம் ஆழ்ந்த பொருள் உள்ளது.


பத³வீம்ʼ காளிதா³ஸஸ்ய
லலிதாம்ʼ ம்ருʼது³லை: பதை³: |
ந ஶக்னுவந்த்யஹோ!
க³ந்தும்ʼ பஶ்யந்தொ(அ)பி கவீஶ்வரா: ||

கண்ணெதிரே காளிதாசன் கடந்து சென்ற பாதை வெகு எளிதாகத் தெரிந்தும் அஹோ! கவியரசர்களால் அப்பதம் அடைய முடியாமல் இருக்கிறதே!

இதில் பதம் என்பது காலடி, உயர்ந்த நிலை (பதவி), சொல் ஆகிய மூன்று அர்த்தங்களையும் தரும். காளிதாசனின் பதத்தை அடைவது அரிது என்று கவிஞர் கூறுகிறார். இந்த கூற்று முற்றிலும் உண்மையானது.

– பெங்களூரு ஸ்ரீகாந்த்.
(வலம் இதழில் வெளிவந்த கட்டுரை)

1 Comments காலத்தை வென்ற கவிஞன் காளிதாசன்!

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)