வடமொழியில் ஐம்பெருங் காவியங்கள்

தமிழில் சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி என்னும் ஐந்து நூல்கள் ஐம்பெரும் காப்பியங்கள் என்று பெருமையுடன் அழைக்கப் படுகிறன. வடமொழியிலும் இதைப் போல  முக்கியமாக பஞ்ச மகா காவியங்கள் என்று ஐந்து பெருங்காவியங்களை சொல்வர்.

குமாரசம்பவம், ரகுவம்சம் ஆகிய காளிதாசனின் படைப்புகள், பாரவியின் கிராதார்ஜுநீயம், மாகரின் சிசுபாலவதம், ஸ்ரீஹர்ஷரின் நைஷதசரிதம் ஆகியவையே அந்த ஐம்பெருங்காப்பியங்கள். சமஸ்க்ருதம் கற்கும்பொழுது மேலே குறிப்பிட்ட காவியங்களை இதே வரிசையில் பயில சொல்வார்கள்.

இந்த பஞ்ச மகா காவியங்கள் குறித்து ஸ்லோகம ஒன்றும் உண்டு…

द्वे कृती प्रकृतेः पुंसो द्वे चैकमुभयोरपि।
पञ्चस्वेतेषु पाण्डित्यं पुरुषार्थो हि पञ्चमः।।

த்³வே க்ருதீ ப்ரக்ருதே​: பும்ஸோ த்³வே சைகமுப⁴யோரபி|
பஞ்சஸ்வேதேஷு பாண்டி³த்யம் புருஷார்தோ² ஹி பஞ்சம​:||

த்³வே க்ருதீ ப்ரக்ருதே – இரண்டு மகாகாவியங்கள் (ரகுவம்சம், குமாரசம்பவம்) பிரகிருதி தத்துவத்துக்கானது

த்³வே பும்சா: – இரண்டு மகாகாவியங்கள் (கிராதார்ஜுநீயம், சிசுபாலவதம்) புருஷ தத்துவத்துக்கானது

ஏகம் ச உப⁴யோரபி – ஒரு மகா காவியம் இரண்டு தத்துவங்களுக்குமானது

இவ்வைந்தையும் கற்றுக் கொள்வதால் பெறும் அறிவு வாழ்வின் பொருளான அறம், பொருள், இன்பம், வீடு என்கிற நான்குக்கு ஈடான ஒரு பொருளை ஐந்தாவதாக கண்டு அடைந்ததாக ஆகும் என்பதே இந்த ஸ்லோகத்தின் சாராம்சம்.

நைஷதசரிதம் வரை கற்ற ஒருவரை மகாமகோபாத்யாயர் என்ற விருதினை பெறுவதற்கு தகுதியானவராக கருதுவர். இந்த காவியங்களை விட மிகவும் கடுமையான எளிதில் புரிந்து கொள்ள முடியாத காவியங்களும் சமஸ்க்ருதத்தில் இருந்தாலும் பஞ்ச மாகா காவியங்கள் என்று இவற்றை சொல்வது ஏன் என்று பார்ப்போம்.

ஒரு காவியத்தை மகா காவியம் என்று சொல்வதற்கு உரிய இலக்கணத்தை அலங்கார சாத்திரம் என்கிற நூல் வகுக்கிறது. அலங்கார சாத்திரத்தில் சமஸ்க்ருத காவியங்களை பொதுவாக இரண்டு பெரும் வகைகளாக பிரிக்கப்படுகிறது. அவையாவன, ஸ்ரவ்ய காவியங்கள் (கேட்டு ஆனந்தப் படக்கூடியவை), திருஸ்ய காவியங்கள் (நாடகமாக பார்த்து ரசிக்கத் தக்கவை).

ஸ்ரவ்ய காவியங்களை மேலும் மூன்று பிரிவாக பிரிக்கப் படுகிறது. அவையாவன கத்ய காவியங்கள் (உரை நடை வடிவில் உள்ளவை), பத்ய காவியங்கள் (கவிதைகள்), சம்பு காவியங்கள் (கவிதைகளும் உரைநடையும் இணைந்தவை).

இவற்றில் பத்ய காவியங்கள் மேலும் பல வகையாக பிரிக்கப் படுகின்றன. அவையாவன மகா காவியங்கள், கண்ட காவியங்கள், லகு காவியங்கள் ஆகும். ஆகவே மகா காவியங்கள் என்று சொல்லப் படுபவை கவிதை வடிவில் பத்ய காவியங்களாக இருக்கும். மகா காவியங்கள் எப்படி இருக்கும்? அவற்றின் லக்ஷணங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

  • ஒரு மகாகாவியம் பல சர்க்கம் (அத்தியாயம்) கொண்டதாக பிரிக்கப் பட்டிருக்க வேண்டும்.
  • அப்பெருங்காவியத்தின் தலைவன் பெரும் வீரனாக அதாவது தெய்வமாகவோ, வீரம் செறிந்த க்ஷத்ரீயனாகவோ இருக்க வேண்டும். சில சமயங்களில் சங்கிலி தொடராக பல அரசர்கள் ரகு வம்சம் போன்ற காவியங்களில் பாடப் படுவதும் உண்டு.
  • ஒவ்வொரு சர்க்கத்திலும் கவிதையின் சந்தம் வெவ்வேறு விதமாக மாற்றப் படுவது சிறப்பு.
  • நவரசங்களில் சொல்லப் படும் காதல் (சிருங்காரம்), வீரம் ஆகியவையே பெரும்பாலும் மகா காவியங்களில் முக்கியமானதாக இடம்பெற வேண்டும். புத்த சரிதம் போன்ற மகாகாவியங்களில் சாந்த ரசமும் இடம் பெறுவது உண்டு.
  • சந்திரன் அல்லது சூரிய உதயம், இரவு, மாலை, படையெடுப்பு போன்ற பதினெட்டு வகையான காட்சிகள் இடம் பெறுவது சிறப்பு.
  • இப்பெருங்காவியங்களின் பாடுபொருள் இதிகாசங்களான ராமாயணம் அல்லது மகா பாரதத்திலிருந்தோ அல்லது பெருஞ்செயல் புரிந்த மாமனிதனின் கதையாகவோ இருப்பது சிறப்பு.

இவ்வாறு குறிப்பிடப்படும் இலக்கணத்தின் அனைத்து அம்சங்களையும் முன் சொன்ன ஐம்பெருங் காப்பியங்கள் சிறப்பாக தன்னிடத்தே கொண்டுள்ளன. ஆகையால் தான் அவை பஞ்ச மகா காவியங்கள் என்று அழைக்கப் படுகின்றன.

[நன்றி: பாரதீய வித்வத் பரிஷத் குழுமம்]

6 Comments வடமொழியில் ஐம்பெருங் காவியங்கள்

  1. Vasu

    While Sisupalavadha is a fantastic work by its own right, there is an interesting story that points out a problem with Sisupalavadha with respect to “maha kavya” category.

    Once ( I guess 16th century) a sanskrita patashala in Pune declared Sisupalavadha as the best of all works since it contains every lakshana of poetry and it was honored by carrying on an elephant. But Vadiraja Tirtha asked that the magha kavya be judged after comparing it with one another composition – Rukminisha Vijaya. He wrote each canto every day, totalling 19. The pundits scrutinized it and declared Rukminisha Vijaya as a better kavya in terms of poetry and for the fact that it has an “auspicious” title, as opposed to “vadha” which is inauspicious and honored Vadiraja Tirtha with the title “Kavi kula tilaka”. The point being that one of the lakshanas of a mahakavya is it should have a “mangala” title as opposed to “amangala” title.

    There is also a work by Madhvacharya called “kAvya lakshana” which says how a kavya must be written.

  2. Pingback: ரகுவம்சம் – சில பாடல்கள் | Sangatham

  3. Ganesh Sharma

    தமிழில் ஐயம்பெருங்காவியங்களில் சிலப்பதிகாரம், மணிமேகலை, என்னும் இரண்டையும் தவிர பிறவற்றைக் காண்பதே கடினம். அவற்றைத் தமிழ் கற்கும் மாணவர்கள் கற்பதும் இல்லை.. ஆனால், சம்ஸ்கிருதத்தில் இந்த ஐந்து காவியங்களும் இருப்பதும் அவற்றை சம்ஸ்கிருதம் கற்கும் மாணவர்கள் கற்பதும் கவனத்திற்குரியது..

  4. Pingback: கடல் போன்ற காளிதாசன் புகழ்! | Sangatham

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)