ஆதிகவியின் முதல் கவிதை

கவிஞன் என்பவன் ஆன்மாவின் வழியாகவோ, உணர்வுகளின் வழியாகவோ காணும் காட்சியுடன் ஒன்றிவிடுகிறான். போர்க்களத்தில் முன்னால் சீறிப்பாயும் வீரனும் அவன் தான்; சடலங்களுக்கு நடுவில் கண்ணீர் விடும் தாயும் அவன் தான்; புயலில் அலைவுறும் மரமும் அவன்தான்; சூரியக் கதிர்கள் வெதுவெதுப்பாக நுழையும் பூவிதழ்களும் அவன்தான்; காணும் உலகத்துடன் ஒன்றி அதுவாகவே ஆகி விடுவதால் தான், அவனுக்கு அவை புலப்படுகின்றன. பகுத்துப் பார்க்கும் அறிவின் கண்ணால் காணாமல், ஆன்மாவின் வழியாக அறிவதால்தான் அவனால் அவற்றை சொற்களில் வெளிப்படுத்த முடிகிறது. காணும் காட்சியில் உள்ள வலியும், இன்பமும், அவற்றில் உள்ள நல்வினையும் தீவினையும் அவன் உணர்வதால் தான் அவற்றின் பலன்களையும் அவனால் அனுபவிக்க முடிகிறது. அதனால் தான், அறிவைக் கொண்டு எழுதும் கவிதைகளை விட, ஆன்மாவிலிருந்து பிறக்கும் கவிதைகள் மேம்பட்டவையாக இருக்கின்றன என்கிறார் ஸ்ரீஅரவிந்தர்.

கவிதை புனைவது இருக்கட்டும். கவிதையை படித்து உணருவதற்கே எதையும் தூலமாக அறியும் தட்டையான பகுத்தறிவு உதவாது. சொல்லப் போனால் தடையாக இருக்கும். எத்தனையோ விசித்திரங்களை, அழகுகளை, அவலங்களை அது தரும் மனவெழுச்சிகளைக் கண்டுணரும்போது, இறைத்தன்மையை உணருகிறோம். அதை உணர்ச்சிகளின்றி தருக்கம் தரும் அறிவால் மட்டும் காணும்போது வெறுமையே எஞ்சுகிறது. இவ்வுலகைப் படைத்த பிரம்மனே ஒரு மகாகவிஞன் தான். இவ்வுலகெங்கும் மலைகளாகவும், கடல்களாகவும், மரங்களாகவும், செடி கொடி தாவரங்களாகவும், புழு பூச்சிகள் முதல் குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என உயிரினங்களாகவும் இவ்வளவையும் படைத்த அந்த ஆதி மனம் எத்தனை கவித்துவமானதாக இருக்க வேண்டும்!

நமது புராண இலக்கியங்களை ஆழ்ந்து படிக்கும்போது இது புரியும். ஸ்ரீமத் பாகவதத்தின் முதல் பாடலே பிரமனை ஆதி கவிஞனாக உருவகப் படுத்துகிறது.

ஜன்மாத்³யஸ்ய யதோ²(அ)ந்வயாத்³ இதரதஶ்சார்தே²ஷு அபி⁴ஜ்ஞ: ஸ்வராட்
தேனே ப்³ரஹ்ம ஹ்ருʼதா³ ய ஆதி³கவயே முஹ்யந்தி யத்ஸூரய: |
(பாகவதம் 1-1-1)

அத்தகைய மகா கவிஞனான பிரம்மன் ஒரு மனிதனைச் சந்திக்க வருகிறான். சந்திக்க வரும் மனிதனும் சாதாரணமானவன் அல்ல. அவனும் இறைநிலை எய்தியவன் தான். ஒரு சிறு பூச்சியின் கண்களுக்கு யானை தெரிவதில்லை. உயிரினங்கள் அதனதன் பார்வைக்குத் தக்கவாறே மற்ற உயிரினங்களை உணரக் கூடும். மனிதன் இறைத்தன்மையை அடையும் சில தருணங்களில் தான் மனிதனால் இறைவனைச் சந்திக்க முடிகிறது. பிரம்மனே இறங்கி வந்து சந்தித்த அந்த தருணத்தில் தான் அந்த மனிதன் தானே புதியதாக ஒன்றை பிறப்பித்திருக்கிறான். அது என்ன என்று அவனுக்கே இன்னும் சரிவர தெரியவில்லை. கிமிதம் வ்யாஹ்ருதம் மயா? என்று என்ன செய்திருக்கிறேன் நான் என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டிருக்கிறான்.

There is pleasure in poetic pains which only poets know என்று வேர்ட்ஸ்வொர்த் என்கிற ஆங்கிலக் கவிஞன் சொன்னது போல, வால்மீகி என்னும் அந்த மனிதனை பிரம்மன் கண்ட தருணத்தில் இருவரும் ஒன்றிப் போனார்கள். ஒருவர் தூலமான உலகைப் படைப்பவர். இன்னொருவர் நுண்ணிய மன உணர்வுகளைப் உருவாக்கும் கவிதை உலகைக் படைப்பவர். இவ்விருவரும் சந்திப்பதே ஒரு கவித்துவமான நிகழ்வுதான்.

***

வால்மீகி முனிவர் பிரசேதஸ் என்பவரின் பத்தாவது பிள்ளை. சில புராண கதைகளின்படி காட்டில் வேடனாகவும், திருடனாகவும் இருந்தவர். பின்னர் ஒரு காலகட்டத்தில் மனம் மாறுதல் அடைந்து துறவு கொண்டு, நீண்ட நெடிய காலம் தவம் மேற்கொள்கிறார். தவத்தின் பலனாக அவர் இவ்வுலகில் இன்பமோ, வேறொரு உலகத்தில் சுகமோ தேடியதாகத் தெரியவில்லை. மிகவும் அடிமட்ட நிலையில் இருந்து எழுந்து வந்த அவரது வாழ்வில், தேடல் என்பது மனித வாழ்க்கையின் உன்னதத்தைப் பற்றியதாகவே இருக்கிறது. காட்டில் வாழ்ந்தாலும் கற்க வேண்டிய கல்வி எல்லாம் கற்று, அவற்றைக் கடைப்பிடித்து, பிரம்ம ரிஷி ஆகிறார். ஆனாலும் மனித வாழ்க்கையில் அவருக்கு தணியாத ஆவல். வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்கள், அவற்றுக்கு காரணமாக அமையும் நல்வினை தீவினை ஆகியவற்றை அறிந்து கொள்ள அவர் மனம் ஏங்குகிறது.

ஒரு நாள் நாரதரைச் சந்திக்கிறார். நாரதர் பிரம்மனின் பிள்ளை என்று புராணங்கள் கூறுவது இங்கே நினைவு கூறத்தக்கது. நாரதரிடம் வால்மீகி கேட்கும் சில கேள்விகளே நமக்கு அவரது தேடலை உணர்த்துகின்றன. இவ்வுலகில் தற்சமயம் வாழும் உன்னதமான மனிதன் யார்? நல்ல குணம் பொருந்தியவனாகவும், வீரம் உள்ளவனாகவும், தருமம் மிகுந்தவனாகவும், உண்மையும் உறுதியும் உள்ளவனாகவும், நல்ல செயல்கள் செய்தவனாகவும், எல்லா உயிர்களுக்கும் நன்மை செய்பவனாகவும், கல்விமானாகவும், ஏற்றத்தாழ்வு பாராமல் எல்லோரையும் ஒன்றாக எண்ணக் கூடியவனாகவும், தன்னை வென்றவனாகவும், கோபத்தை அடக்கியவனாகவும், வானுறையும் தேவரும் போர் புரிய அஞ்சுபவனாகவும் இருப்பவன் யார்? இவ்விதம் உள்ள மனிதன் குறித்து அறிந்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்கிறார் வால்மீகி.

இப்படி ஒரு மனிதன் இருக்க முடியுமா? என்றால் இறைவனே மனிதனாக வந்தால் தான் உண்டு. அப்படி இறைவன் மனிதனாக வந்து வாழ்ந்த கதையைத் தான் சுருக்கமாக நாரதர் வால்மீகிக்குச் சொல்கிறார். தான் கேட்ட ராமனின் வாழ்க்கைச் சம்பவங்களை எண்ணிய படியே வால்மீகி தன் சீடன் ஒருவனுடன் தமஸா என்னும் நதியின் கரையில் நடந்து செல்கிறார். அப்போது ஒன்றுடன் ஒன்று கூடிக் களித்துக் கொண்டிருக்கும் இரு புறாக்களைக் காண்கிறார். அன்பின், ஆசையின், இன்பத் தேடலின், அறத்தின் இணைநிலை அது. அந்நிலையில் சட்டென ஆண் புறா அம்பு தைக்கப் பட்டு இறந்து விழுகிறது. ஒரு வேடன் இணைந்திருந்த அந்த பறவைகளில் ஒன்றை நோக்கி அம்பெய்தி இருப்பதை வால்மீகி காண்கிறார். தன் இணை இறந்து வீழ்ந்ததை எண்ணி கதறி புலம்புகிறது. வால்மீகியின் மனதில் அப்போது தான் அவர் கேட்டு விட்டு வந்த, சீதையைப் பிரிந்து ராமன் பட்ட துயரமும், கண்ணெதிரே பறவை அரற்றும் ஒலியும் இணைந்து இம்சிக்கிறது.

மா நிஷாத³ ப்ரதிஷ்டா²ம்ʼ த்வமக³ம: ஶாஶ்வதீ: ஸமா: |
யத்க்ரௌஞ்ச மிது²நாதே³கமவதீ⁴ காமமோஹிதம் ||

வேடனே! இணையான கிரௌஞ்ச பறவைகளில் ஒன்றை நீ கொன்றதால்,
இனி எக்காலத்திலும் நீ நிலையாக இருக்க மாட்டாய் (மரணம் அடைவாய்)!

வால்மீகியின் எண்ணமும் காட்சியும் இணைந்து மிகுந்த சோகத்தில், வால்மீகியின் நாவிலிருந்து எழுந்த இந்த கவிதையே ஆதி முதல் கவிதை என்று கருதப் படுகிறது..
ராமாயணம் கருணா சோக ரசத்தை பிரதானமாகக் கொண்ட காவியம் என்பதற்கு இந்த கவிதை வித்தாக அமைகிறது. இணையான இரு பறவைகளில் ஒன்று கொல்லப்பட்டது என்பதில் இருக்கும் தொனி தான் இந்த கவிதையை முக்கியத்துவப் படுத்துகிறது.

பெரும் அநியாயம் ஒன்றை அடிப்படையாக வைத்து, மனித மனத்தை உலுக்கி அதன் அபத்தங்களைக் காட்டும் காவியங்கள் ராமாயணத்துக்குப் பின்னர் ஏராளமாக இயற்றப்பட்டுள்ளன. ஆனாலும் ராமாயணமே அவற்றுக்கு முன்னோடியாக உள்ளது. மற்ற காவியங்கள் எதுவும் செய்யத் துணியாத ஒன்று உண்டென்றால் தருமமே வடிவாக ராமன் உருவத்தில் ஒரு பாத்திரத்தைக் கொண்டிருப்பதுதான் ராமாயணத்தின் சிறப்பு. அதுவே ராமாயணத்தின் மீதான விமர்சனமாகவும் அமைந்து விட்டது.

***

வால்மீகிக்கு முன்பே வேத இலக்கியங்களில் சந்தங்கள் (சந்தஸ்) இருந்தாலும், அனுஷ்டுப் சந்தஸாக இருந்த இலக்கணம் அனுஷ்டுப் ஸ்லோகமாக மாறியது வால்மீகியிடம் தான். மேலும் எழுத்தில் வடிக்க முடியாத சுவரங்கள் உள்ள வேத கவிதைகளில் இருந்து மாறுபட்டு, சுவரங்கள் இல்லாமல் இலக்கியங்கள் உருவாக்கப் பட முன்னோடியாக அமைந்ததும் வால்மீகியின் ராமாயணம் தான். தமிழில் மரபுக் கட்டிலிருந்து விடுபட்டு சுதந்திரமாக புதுக்கவிதை பிறந்ததைப் போன்ற ஒரு உருவாக்கம் தான் இது. பின்னாளில் ராமாயணத்தை ஒற்றியே, வேத இலக்கணத்தின் சந்தங்கள் யாவும் கவிதைக்கு உகந்த சந்தங்களாக மாறின. இத்தகைய கவிதைகள் ஸ்லோகம் என்ற பெயரைப் பெற்றதும் அப்போதுதான். வால்மீகியின் சோகத்திலிருந்து பிறந்து தான் ஸ்லோகம்.

ஶோகார்தஸ்ய ப்ரவ்ருʼத்தோ மே ஶ்லோகோ ப⁴வது நான்யதா²|
(பாலகாண்டம் 1-2-18)

சோகத்தினால் பிறந்தது ஸ்லோகம் ஆகட்டும்.

ஸ: அனுவ்யாஹரணாத் பூ⁴ய: ஶோக: ஶ்லோகத்வம் ஆக³த: |
(பாலகாண்டம் 1-2-40)

அதனைத் திரும்ப திரும்ப இசைத்ததால் சோகம் ஸ்லோகம் ஆனது.

வால்மீகியின் காலம் வரை வேதத்தின் சந்தங்கள் ஒரே போல அமைந்தது இல்லை. ஆர்ஷப் ப்ரயோகம் அல்லது ரிஷியின் பயன்பாடு என்று சமாதானத்துடன் அவை இலக்கண ஒழுங்குகளை மீறுவதாகவே இருந்தன. ஆனால் வால்மீகியின் ராமாயணத்திலிருந்து தான் காவியங்கள் சந்த ஒழுங்கு பெறுகின்றன. வெவ்வேறு சந்தங்களைக் கொண்டு உருவாகும் மஹா காவியத்துக்கு உரிய இலக்கணம் பிறக்கிறது.

வால்மீகியின் அந்த முதல் கவிதைக்கு இலக்கணப் படி சந்தி பிரித்து, நேரடி அர்த்தம் பார்க்கும்போது இவ்வாறு அமைகிறது: ஏ திருவற்ற வேடனே (ஹே அம நிஷாத³), தன் இணையுடன் காமத்தில் மூழ்கி இருந்த புறாக்களில் ஒன்றை வீழ்த்திக் (காமமோஹிதம் க்ரௌஞ்ச மிது²நாத் ஏகம்), கொன்றாய் (அவதீ⁴). ஆகையால், நீ (த்வம்) பல ஆண்டுகள் நிலைத்த நிலையை (ஶாஶ்வதீ: ஸமா: ப்ரதிஷ்டா²ம்ʼ) மா க³ம: (அடையமாட்டாய்) என்று இதற்கு நேரடி அர்த்தம் சொல்லப் படுகிறது. அதாவது ஜோடிப்புறாவில் ஒன்றைக் கொன்ற வேடனை நீ நீண்ட நாட்கள் இருக்க மாட்டாய் என்று சபிப்பதாக அமைந்துள்ளது.

த்வமக³ம என்பதை து + அம + க³ம என்று பிரித்து, அம என்பது திருவற்றவனே (மா என்பது லக்ஷ்மியைக் குறிக்கும், அமா என்பது திருவற்ற தன்மை) என்று “நிஷாத” பதத்துக்கு விசேஷணமாக (adjective) எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஸமா: என்பது ஸம்வத்ஸரம் அல்லது வருடம் என்ற சொல்லுக்கு சமமான பொருள் கொண்டது.

இங்கே சற்று யோசிக்க வேண்டும்.

வால்மீகி போன்ற ஒரு மாமுனிவருக்கு வேட்டையாடுதல் பற்றி தெரியாதா? வேடன் தன் தொழிலைச் செய்ததற்கு மரணத்தையே சாபமாக கொடுப்பது ஏன்? இதனால் அந்த தவறு சரி செய்யப் பட்டு விடுகிறதா? அவ்வளவு ஏன் ராமாயணத்தில் ராமனே வேட்டையாடி இருக்கிறார். மாமிசம் உண்டிருக்கிறார். வாலியிடம் உன்னைக் கொன்றது வேட்டையாடுவது போலதான் என்று வாதிட்டிருக்கிறார்.

கிஷ்கிந்தா காண்டத்தில் வாலி வாதத்தின் போது இவ்வாறு சொல்வதாக ஒரு கவிதை வருகிறது:

ப்ரமத்தானப்ரமத்தான்வா நரா மாம்ʼஸார்தி²னோ ப்⁴ருʼஶம்|
வித்⁴யந்தி விமுகா²ம்ʼஶ்சாபி ந ச தோ³ஷோ(அ)த்ர வித்³யதே ||
(கிஷ்கிந்தா காண்டம் 4.18.38)

“மாம்ʼஸார்தி²ன: நரா:” மாமிசத்தை விரும்பக்கூடிய மனிதர்கள், “ப்ரமத்தான் அப்ரமத்தான் வா” கவனமுடைய/கவனமில்லாத மிருகங்களை “விமுகா²ன் ச அபி” வேறு பக்கம் நோக்கிக் கொண்டிருந்தாலும், “வித்⁴யந்தி” கொல்கிறார்கள், “ந ச தோ³ஷோ(அ)த்ர வித்³யதே” இதில் தோஷம் இருப்பதாகத் தெரியவில்லை.

ஆகவே வேடன் ஒரு பறவையைக் கொன்றதற்காக மட்டும் வால்மீகி மகரிஷி சாபம் இட்டிருக்க முடியாது. இங்கே தான் காம மோஹிதம் என்ற சொல் முக்கியத்துவம் பெறுகிறது. தன் இணையுடன் சேர்ந்து இருக்கும் நிலையில் காமத்தில் மூழ்கி உள்ள நிலையில் என்று கூறும் போது, மரணத்தை விட கொடுமையான துன்பத்தை, அந்த இணைப் பெண் பறவைக்குக் கொடுத்ததற்காகவே சபிப்பதாகத்தான் எடுத்துக் கொள்ளவேண்டும். பெண்ணாகிய சீதையின் துன்பமே ராமாயண கதையாக உருவாகி உள்ளது. வால்மீகியும் சீதா சரித்திரம், பௌலஸ்த்ய வதம் என்றெல்லாம் சீதையைப் பிரதானமாக வைத்து தான் ராமாயண காவியத்துக்கு பெயரிடுகிறார். சீதையைப் போலவே அந்த பறவை துன்பப்படுவதை அவர் உணர்ந்ததாலேயே வேடனுக்குச் சாபம் அளித்திருக்கக் கூடும்.

ஒப்பு நோக்கில், மஹாபாரதத்திலும் இத்தகைய ஒரு சந்தர்ப்பம் ஏற்படுகிறது.

காட்டில் வேட்டைக்குச் சென்ற பாண்டு, இரண்டு மான்கள் கூடி இருக்கும் நிலையில் ஒரு மானை அம்பால் அடித்து விடுகிறான். உண்மையில் ஒரு ரிஷி குமாரன் மான் உருக்கொண்டு தன் இணையுடன் சேர்ந்து இருந்த நிலை அது. இறக்கும் தருவாயில் தன் மனித உருப்பெற்ற ரிஷி குமாரன், சபிக்கிறான்.

ம்ருʼக³ரூபத⁴ரம்ʼ ஹத்வா மாம் ஏவம்ʼ காமமொஹிதம |
அஸ்ய து த்வம்ʼ ப²லம்ʼ மூட⁴ ப்ராப்ஸ்யஸீத்³ருʼஶம ஏவ ஹி ||
(மஹாபா⁴ரதம்ʼ ஆதி³பர்வம்ʼ)

“ஹே மூட⁴” மூடனே, “காமமொஹிதம் அஸ்ய ம்ருʼக³ரூபத⁴ரம்ʼ மாம்” காம மோகத்தில் இந்த மிருகத்தினுடைய உருத்தரித்த என்னை, “ஹத்வா” கொன்று, ஈத்³ருʼஶம ஏவ ப²லம்ʼ – இதே போன்ற என் நிலையை (மரணத்தை) “த்வம் ப்ராப்ஸ்யஸி” நீயும் அடைவாய் என்று சபித்து விடுகிறான். அதனாலேயே பாண்டு பின்னொருநாள் மனைவியுடன் கூடும் சமயத்தில் இறக்க நேரிடுகிறது. அக்காலத்தில் காட்டில் வேட்டையாடும் போது, இணையாக சேர்ந்து இருக்கும் மிருகங்களை கொல்லக் கூடாது என்ற தர்மம் இருந்திருக்கிறது.

***

ஆன்மீக இலக்கியமாகக் காணும் பாரம்பரிய உரையாசிரியர்கள், இந்த முதல் கவிதைக்கு வேறு பலவிதமாக அர்த்தங்களை விவரித்திருக்கிறார்கள். ராம காவியத்தின் துவக்கமாக வரும் இந்த ஸ்லோகம், வால்மீகியின் சோகத்தில் எழுந்த சாபமாக அமைந்தது அவர்களுக்கு உவப்பாக இல்லை. ஆகவே சொற்களைப் பிரித்து அர்த்தம் கூறும் தொழில் நுட்பத்தில் தேர்ந்த அவர்கள் கூறும் அர்த்தங்களும் சுவாரசியமாகவே இருக்கிறது.

மா என்பது லக்ஷ்மி. நிஷீத³ந்தி அஸ்மின் இதி நிஷாதோ³ நிவாஸ: (निषीदन्ति अस्मिन् इति निषादो निवास:) வசிப்பிடமாக இருப்பவர். மா என்னும் லக்ஷ்மியின் நிவாச: வசிப்பிடமாக இருப்பவர், மகாவிஷ்ணு. ஸ்ரீ நிவாஸ: என்றாலும் இதே அர்த்தம் தான்.

ஹே மாநிஷாத³ த்வம் ஶாஶ்வதீ: ஸமா: ப்ரதிஷ்டா²ம்ʼ க³ம:
ஹே ஸ்ரீ நிவாசா, நீ பல்லாண்டு நீடித்த நிலையை அடைவாய்.

யத் காமமோஹிதம் க்ரௌஞ்ச மிது²நாத் ஏகம் அவதீ⁴
ஏனெனில் காமத்தால் மதியிழந்த (சீதையை அபகரித்த) இரட்டையரில் (ராவணன் – மந்தோதரி) ஒருவரைக் கொன்றாய்.

ராவணனைக் கொன்று மூவுலகையும் காத்ததால் என்றென்றும் நிலைபெற்ற தன்மையை அடைவாய் என்று மங்கள வாழ்த்துச் சொல்வதாக கோவிந்தராஜரின் உரை கூறுகிறது.

மற்றொரு உரையில் இந்த ஒரு ஸ்லோகத்திலிருந்தே ராமாயணத்தின் ஏழு காண்டங்களில் உள்ள உட்பொருளும் உரைக்கப் பட்டதாக கூறப்படுகிறது. அதாவது மா நிஷாத³ என்பது ராமனுக்கும் சீதைக்கும் திருமணம் நிகழ்ந்த பால காண்டத்தையும், ப்ரதிஷ்டா²மக³ம: ஶாஶ்வதீ: ஸமா: என்ற சொற்களில் ராமன் பெற்றோர் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அரச போகத்தை தியாகம் செய்து பெரும்புகழ் அடைந்த அயோத்யா காண்டத்தையும், க்ரௌஞ்ச மிது²நாத் ஏகம் அவதீ⁴ என்ற சொற்களில், ஆரண்யகாண்டத்தில் ராமனும் சீதையும் பிரிந்ததையும், கிஷ்கிந்தா காண்டத்தில் வாலி – தாரை இணைகளில் வாலியின் வதமும், ராமனும் சீதையும் பிரிவுத் துயர் படும் சுந்தர காண்டமும், ராவணன் – மந்தோதரி இணையில் ராவண வதம் நிகழும் யுத்த காண்டமும், ராமனை சீதை நிரந்தரமாக பிரியும் உத்தர காண்டமும் குறிப்பால் உணர்த்தப் படுவதாக கூறப் படுகிறது.

வேறொரு உரையில் இந்த சம்பவங்களில் நவரசங்களும் இருப்பதாகக் கூறுகிறது. ஆரம்பிக்கும்போது, காட்டு வர்ணனையில் சாந்த ரசமும், கிரௌஞ்ச பறவைகளின் களிப்பில் சிருங்கார ரசமும், ரௌத்திரம், பயானகம் ஆகிய ரசங்கள் வேடன் ஆண் பறவையை அடித்துக் கொன்ற நிகழ்விலும், இணையை இழந்து கதறும் பறவையின் ஓலத்தில் பீபத்ஸ ரசமும், தன் இணையை பிரிந்தது குறித்த சோகத்தில் கருணா ரசமும், இதையெல்லாம் கண்டு அதிசயிக்கும் கவி, அவரைக் காண படைப்பின் கடவுளின் வருகை ஆகியவற்றில் அத்புத ரசமும் வெளிப்படுவதாகக் கூறுகிறது.

***

ஆதி கவி முதல் கவிதை சமைத்த அந்த தருணத்திற்காக முதலில் பிரமனின் பிள்ளையான நாரதர் வருகிறார். பின்னர் பிரமனின் மனைவி சரஸ்வதி ஸ்லோக ரூபமாக வால்மீகியின் நாவில் வருகிறாள். பின்னர், இணையற்ற ஒரு காவியத்தை உலகுக்கு தருமாறு கேட்க பிரம்ம தேவனே வருகிறார். அப்படிப் பிறந்த காவியத்துக்கு இன்றளவும் மனித மனத்தைத் தொடும் மகத்தான ஆற்றல் இருப்பதில் வியப்பில்லை.

ஆதி சங்கரர் கவி என்கிற சொல்லுக்கு க்ராந்த தர்சி என்று விளக்கம் கூறுகிறார். அதாவது மற்றவர்களைக் காட்டிலும் வாழ்வை ஆழமாகவும் அகலமாகவும் உணரக்கூடியவரையே கவி என்று கூறுகிறார். அப்படி வாழ்க்கையை அதன் உன்னதங்களையும் அதற்கு நேரெதிரான கீழ்மையையும் ஒரு சேர தொட்டுச் செல்லும் வெகுசில காவியங்களுள் ராமாயணம் சிறந்து விளங்குகிறது. அதனால் தான் பிரம்ம தேவன், மலைகள் ஆறுகள், கடல்கள் எத்தனை காலம் இருக்குமோ, அத்தனை காலம் இந்த உலகில் உன் ராமாயண கவிதைகள் வாழும் என்று வால்மீகியை வாழ்த்துகிறார்.

“ராமாயணக் கதையின் உட்கருத்தில் அதன் ஆன்மாவில் எல்லோராலும் நுழைந்து விட முடிவதில்லை. ஆனால் அப்படி நுழைந்தவர்கள் அதற்குப் பின்னால் இந்த உலகின் எந்த காவியத்தையும் ராமாயணத்துக்கு மிஞ்சியதாக ஏற்றுக் கொள்ளமாட்டார்” என்று ஸ்ரீஅரவிந்தர் கூறியதை இங்கே நினைவு கூறலாம்.

இவ்வாறு மாபெரும் காவியங்களை சொத்தாகக் கொண்ட நமது பாரம்பரியம் இன்று அடைந்துள்ள நிலையையும் அரவிந்தர் விசனப்படவும் செய்கிறார். “வரலாற்றின் கண்களுக்கு மட்டுமே தெரிந்த மக்களைக் கொண்ட இறந்த காலத்தின் முடிவற்ற அமைதியிலிருந்து, அந்த கால கட்டத்தை உணர்த்தவும், மறைந்து விட்ட மாந்தர்களின் ஜீவத்தன்மையை வெளிப்படுத்தவும் ஒரு சில குரல்கள் மட்டுமே எழுகின்றன. இக்குரல்களுக்குச் சொந்தக்காரர்கள் தான் கவிஞர்கள். எது நேரடியாக உபயோகப் படுத்த முடிகிறதோ, நுகர்வின்பத்திற்கும், அதிகார பலத்திற்கும் எது இட்டுச் செல்கிறதோ அதற்கே மனிதர்கள் மதிப்பளிக்கும் இக்காலத்தில், நுகர்வுக் கலாசாரமும், அறிவியல் சிந்தனைகளும் நமது ஆன்மாவை வற்ற வைத்து விட்ட நிலையில், கவிதை என்பதையே ஒதுக்கி வைத்து அலட்சியப் படுத்தும் நிலையை அடைந்து கொண்டிருக்கிறோம். ஓவியம், சிற்பம் போன்ற பழங்கால கலைகளை நம்மால் தற்காலத்தில் எப்படி ஒருகாலும் அதே சிறப்புடன் உருவாக்க முடியாதோ அதே போல கவிதை எழுதும் மகத்தான கலையும் அழிந்து கொண்டிருக்கிறது. ஏனெனில் இச்சமூகம் கவிஞர்களின் உபயோகத்தை மறந்து விட்டது”. கவிதை என்னும் மகத்தான கலையின் மறைதலை உணர்ந்த அரவிந்தரின் வார்த்தைகளாவது நமக்கு விழிப்புணர்வைக் கொடுக்கட்டும்.

– பெங்களூரு ஸ்ரீகாந்த்.
(வலம் இதழில் வெளிவந்த கட்டுரை)

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)