அடர்ந்த இருளடைந்த அந்த காட்டின் நடுவே ஒரு குரல்…
“என் ஆசை என்றுமே நிறைவேறாதா…!”
பதிலில்லை… மௌனம்.. அமைதி…
மீண்டும் குரல் “என் ஆசை என்றுமே நிறைவேறாதா…!”
அமைதி. அமைதி. அமைதி.
மீண்டும் குரல். அதே கேள்வி.
இம்முறை பதில் வந்தது… “நீ பதிலுக்கு என்ன தருவாய்?”
“என் உயிரைத் தருகிறேன். என் எல்லாவற்றையும்…”
“உயிர் அற்பமானது. யார் வேண்டுமாலும் உயிரை தரக்கூடும்”
“வேறு என்ன இருக்கிறது? வேறு எது என்னால் தரமுடியும்?”
“அர்பணிப்பு”
***
இது நடந்தது கி.பி 1770. வங்காளம். இன்னும் ஆங்கிலேயர் கையில் முழுவதுமாக உட்படவில்லை. இஸ்லாமிய ஆட்சி.
மழையில்லை. வறட்சி. ஊரெங்கும் பஞ்சம். அரசாங்கம் கடுமையாக வரி வசூலித்தது.
முதலில் மக்கள் ஒருவேளை சாப்பாட்டை நிறுத்தினார்கள். நாளடைவில் ஒரு வேளை மட்டுமே உண்டார்கள்.
அரசனிடம் நற்பெயர் பெற, அதிகாரி மேலும் வரியை உயர்த்தினான். வீட்டிலிருப்பதையும் பிடுங்கிக் கொண்டு சென்றார்கள் சேவகர்கள்.
மக்கள் ஆட்டை, மாட்டை ஏன் மனிதர்களையே விற்க தயாரானார்கள். எல்லாரும் எதையாவது விற்க முயற்சித்தனர். உணவுக்காக.
வாங்கத்தான் ஆளில்லை. பஞ்சம். பிச்சை எடுத்தார்கள். கொடுக்க யாரிடமும் எதுவும் மிச்சம் இருக்கவில்லை.
அடுத்து கொள்ளை நோய்கள். அம்மை, காசநோய், காலரா…
ஊரை விட்டு மக்கள் ஓட ஆரம்பித்தனர். நோய்வாய்ப் பட்டவர்களை உதறி விட்டு ஓடினார்கள்.
அரசன் கவலையற்று இருந்தான். வரி வசூலிப்பு மட்டும் கிழக்கிந்தியக் கம்பெனி வசம்.
கடுமையான வரிவசூலுக்குப் பின் வண்டிகளில் அரிசி முதலான இந்திய சிப்பாய்கள் காவலுடன் கம்பெனியின் கருவூலத்துக்கு போகும்.
அரசனுக்கு கம்பெனி ரசீது கொடுக்கும்.
ஒரு பக்கம் கம்பெனியும், அரசனும் சுரண்டினர் என்றால் மறுபக்கம் திருடர்கள். வீடு வாசலற்று பஞ்சத்தில் சிக்கிய மக்களில் சிலர் திருடர்களாக
மாறினர். அவர்கள் அரசாங்கத்திடமும் திருடினர். மக்களிடமும் திருடினர்.
இந்நிலையை தடுத்து நிறுத்த யாருமே இல்லையா…? ஒரு தேசமே நோய்வாய்ப்பட்டு அனாதரவாக கிடக்கிறது. சுரண்டலை தடுத்து மக்கள் நலனுக்காக
போராட வீரபுருஷர்கள் யாருமே இல்லையா? இந்த தேசத்தின் பிள்ளைகள் உணவுக்குப் பிச்சையெடுக்க தேசம் அந்நிய சக்திகளால் சுரண்டப் பட்டு
இதன் செல்வங்கள் கப்பல் கப்பலாக தூர தேசங்களுக்கு கொண்டு செல்லப் பட்டன. யார் தடுத்து நிறுத்துவார்?
இந்த தேசத்தின் ஆன்மா வேறொரு விதத்தில் பதில் சொல்லத் தயாராகியது.
கடுமையான சுரண்டலுக்கும், பஞ்சத்துக்கும், நோய்களுக்கும், கொடுமைகளுக்கும் ஆளான மக்களுக்கு தீர்வு காண அவர்கள் எழுந்தனர்.
அவர்களிடம் இழக்க எதுவும் இல்லை. முதுகெலும்பும் மனசாட்சியும் தேசபக்தியும் மட்டும் இருந்தது.
அவர்கள்.. துறவிகள்!
***
அது இரவு. வரிசையாக வண்டிகள் சென்று கொண்டிருந்தன. வரி வசூலித்துவிட்டு கம்பெனியின் கருவூலத்துக்கு உணவுப் பொருட்கள் அவற்றில் சென்றுகொண்டிருந்தது.
முன்னால் வெள்ளை துரை உட்கார்ந்திருந்த வண்டி. பின்னால் நூறு காவலாளிகள். சென்று கொண்டிருந்தார்கள்.
வெள்ளை துரைக்கு வெயில் இல்லாத நேரம் தான் பயணிக்க முடியும்.
எதிரே இருளில் இருந்து ஒரு உருவம் நிலா வெளிச்சத்துக்கு வந்தது.
“ஹே ஹரி… முரனைக் வென்றவனே! மது, கைடபர்களை அசுரர்களை அழித்தவனே!”
“டேய் பரதேசி… திருட்டுப் பயல் தானே நீ?” குரல் கொடுத்தான் சிப்பாய்…
துறவி, “நண்பா… என்ன இது?”
“நீ கொள்ளையன் என்று எனக்குத் தெரியும்”
“என்னை பார். துறவிகள் அணியும் காவியுடை அணித்திருக்கிறேன். இதை பார்த்துமா திருடன் என்கிறாய்?”
“உன்னை மாதிரி பல சாமியார் பயல்கள் திருடர்கள் ஆகி விட்டார்கள்.”… சிப்பாய் நெருங்கி கழுத்தில் கை வைத்து அந்த துறவியைத் தள்ளினான்…
“சரி தலைவா, நீ சொல்வதை கேட்கிறேன். விடு.” என்றார் துறவி.
“அப்படிவா வழிக்கு. இதை தூக்கு..” துறவியின் தலையில் ஒரு சுமையைத் தூக்கி வைத்தான்.
***
சட்டென்று வெடித்தது. முன்னால் போய்க் கொண்டிருந்த தலைமை சிப்பாய் சுருண்டு விழுந்தான். துப்பாக்கிச் சூடு.
“ஹே ஹரி… முரனைக் வென்றவனே! மது, கைடபர்களை அசுரர்களை அழித்தவனே!”
குரல் ஒலித்தது. குரல்கள் ஒலித்தன. நூற்றுக்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திய சந்நியாசிகள்… சூழ்ந்தார்கள் வண்டிகளை.
சிப்பாய்கள் திகைத்தனர். தங்கள் தலைவன் வெள்ளையன் உத்தரவுக்குக் காத்திருந்தனர்.
அப்போது, சுமையுடன் நின்றுகொண்டிருந்த துறவி, சுமையை வீசி எரிந்து வெள்ளையன் மேல் பாய்ந்தார்.
மதுவின் மயக்கத்தில் உட்கார்ந்திருந்த வெள்ளையனின் வாளை பிடுங்கி அவன் தலையை ஒரே சீவு..
ஆணை தர, தலைவனுக்கு தலை இல்லை என்று உணர்ந்த சிப்பாய்கள் சிதறினர்…
***
பாவாநந்தர் மகேந்திரனுடன் நிலவொளியில் வெட்ட வெளியில் நடந்து கொண்டிருந்தார்.
அவர்கள் இருவரும் அமைதியாக இருந்தனர். அவர் இப்போது பார்க்க
சற்றுமுன் போர் வீரனாக வாளை உருவி தலையை கொய்த மனிதனாகவே தெரியவில்லை, இப்போது அவர் வேறு மனிதராகி இருந்தார்…
வெட்ட வெளியும், பால் நிலவும், அமைதியான காடும், மலையும் அவரை சாந்தப் படுத்தி இருக்க வேண்டும்.
அவர் மகேந்திரனுடன் பேச முயற்சித்தார். மகேந்திரன் பேசும் நிலையில் இல்லை. பிறகு மிருதுவாக தனக்குள் பாட ஆரம்பித்தார்.
வந்தே³ மாதரம்
ஸுஜலாம் ஸுப²லாம்
மலயஜஸீ²தலாம்
ஸ²ஸ்யஸா²மலாம் மாதரம்
வந்தே³ மாதரம்!
தாயே வணங்குகிறோம்
இனிய நீர்
இன்சுவைக்கனிகள்
தென்திசைக் காற்றின் தெள்ளிய தண்மை
மரகதப் பச்சை வயல்களின் மாட்சிமை
எங்கள் தாய்
தாயே வணங்குகிறோம்!
மகேந்திரனுக்குப் புரியவில்லை. யார் இந்தத் தாய்? “இனிய நீர்.. இன்சுவைக்கனிகள்… தென்திசைக் காற்றின் தெள்ளிய தண்மை…”
“யார் இந்த தாய்?” பாவாநந்தரைக் கேட்டான்.
பதில் சொல்லாமல் மேலும் பாடினார்…
ஸு²ப்⁴ரஜ்யோத்ஸ்னாபுலகிதயாமினீம்ʼ
பு²ல்லகுஸுமிதத்³ருமத³லஸோ²பி⁴னீம்ʼ
ஸுஹாஸினீம்ʼ ஸுமது⁴ர பா⁴ஷிணீம்ʼ
ஸுக²தா³ம்ʼ வரதா³ம்ʼ மாதரம் || 1 || வந்தே³ மாதரம் |
வெண்ணிலவின் ஒளியில் பூரித்திடும் இரவுகள்
இதழ் விரித்தெழும் நறுமலர்கள் சொரியும் மரக்கூட்டங்கள்
எழில்மிகு புன்னகை
இனிமை ததும்பும் ஏற்றமிகு மொழிகள்
எங்கள் தாய்
சுகமளிப்பவளே
வரமருள்பவளே
தாயே வணங்குகிறோம்!
“இது நமது பூமி அல்லவா… தாய் அல்லவே!” என்றான் மகேந்திரன்.
பாவாநந்தர், “நாம் வேறு எந்த தாயையும் தேட வேண்டியதில்லை. பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் வானுலகையும் விட பெரிது! ஆனால் நாம் பிறந்த நாட்டையே தாய் என்கிறோம்.
நமக்கு தாய், தந்தை, சகோதரர்கள், நண்பர்கள், மனைவியர், மக்கள், வீடுகள், செல்வம் எதுவும் இல்லை. நம்மிடம் இருப்பதெல்லாம் அவள்…
இனிய நீர்.. இன்சுவைக்கனிகள்… தென்திசைக் காற்றின் தெள்ளிய தண்மை… மரகதப் பச்சை வயல்களின் மாட்சிமை… ”
“அப்படியானால் மேலும் பாடுங்கள்” என்றான் மகேந்திரன்.
வந்தே³ மாதரம்
ஸுஜலாம் ஸுப²லாம்
மலயஜஸீ²தலாம்
ஸ²ஸ்யஸா²மலாம் மாதரம்
வந்தே³ மாதரம்!
தாயே வணங்குகிறோம்!
இனிய நீர்
இன்சுவைக்கனிகள்
தென்திசைக் காற்றின் தெள்ளிய தண்மை
மரகதப் பச்சை வயல்களின் மாட்சிமை
எங்கள் தாய்
தாயே வணங்குகிறோம்!
ஸு²ப்⁴ரஜ்யோத்ஸ்னாபுலகிதயாமினீம்ʼ
பு²ல்லகுஸுமிதத்³ருமத³லஸோ²பி⁴னீம்ʼ
ஸுஹாஸினீம்ʼ ஸுமது⁴ர பா⁴ஷிணீம்ʼ
ஸுக²தா³ம்ʼ வரதா³ம்ʼ மாதரம் || 1 || வந்தே³ மாதரம் |
வெண்ணிலவின் ஒளியில் பூரித்திடும் இரவுகள்
இதழ் விரித்தெழும் நறுமலர்கள் சொரியும் மரக்கூட்டங்கள்
எழில்மிகு புன்னகை
இனிமை ததும்பும் ஏற்றமிகு மொழிகள்
எங்கள் தாய்
சுகமளிப்பவளே
வரமருள்பவளே
தாயே வணங்குகிறோம்!
கோடி-கோடி-கண்ட²-கல-கல-நினாத³-கராலே
கோடி-கோடி-பு⁴ஜைர்த்⁴ருʼத-க²ரகரவாலே,
அப³லா கேன மா ஏத ப³லே |
ப³ஹுப³லதா⁴ரிணீம்ʼ நமாமி தாரிணீம்ʼ
ரிபுத³லவாரிணீம்ʼ மாதரம் || 2 || வந்தே³ மாதரம் |
கோடிக் கோடிக் குரல்கள்
உன் திருப்பெயர் முழங்கவும்
கோடிக் கோடிக் கரங்கள்
உன் காலடிக்கீழ் வாளேந்தி நிற்கவும்
அம்மா ! ‘அபலா’ * என்று உன்னை அழைப்பவர் எவர் ?
பேராற்றல் பெற்றவள்
பேறு தருபவள்
பகைவர் படைகளைப் பொசுக்கி அழிப்பவள்
எங்கள் தாய்
தாயே வணங்குகிறோம்!
துமி வித்³யா, துமி த⁴ர்ம
துமி ஹ்ருʼதி³, துமி மர்ம
த்வம்ʼ ஹி ப்ராணா: ஸ²ரீரே
பா³ஹுதே துமி மா ஸ²க்தி,
ஹ்ருʼத³யே துமி மா ப⁴க்தி,
தோமாரஈ ப்ரதிமா க³டி³
மந்தி³ரே-மந்தி³ரே மாதரம் || 3 || வந்தே³ மாதரம் |
அறிவு நீ அறம் நீ
இதயம் நீ உணர்வும் நீ
உடலில் உறையும் உயிரும் நீ.
எம் தோள்களில் பொங்கும் சக்தி நீ
எம் உள்ளத்தில் தங்கும் பக்தி நீ
எம் ஆலயம் எங்கும் ஆராதனை பெறும்
தெய்வச் சிலைகளில் திகழும் ஒளி நீ
தாயே வணங்குகிறோம்!
த்வம்ʼ ஹி து³ர்கா³ த³ஸ²ப்ரஹரணதா⁴ரிணீ
கமலா கமலத³லவிஹாரிணீ
வாணீ வித்³யாதா³யினீ, நமாமி த்வாம்
நமாமி கமலாம்ʼ அமலாம்ʼ அதுலாம்ʼ
ஸுஜலாம்ʼ ஸுப²லாம்ʼ மாதரம் || 4 || வந்தே³ மாதரம் |
ஆயுதப் படைகள் கரங்களில் அணிசெய்யும்
அன்னை துர்க்கை நீயே
செங்கமல மலர் இதழ்களில் உறையும்
செல்வத் திருமகள் நீயே
கல்வித் திறம் அருள் கலைமகளும் நீயே
திருமகளே
மாசற்ற பண்புகளின் மனையகமே
ஒப்புயர்வற்ற எம் தாயகமே
இனிய நீரும் இன்சுவைக் கனிகளும் நிறையும் எம் அகமே
தாயே வணங்குகிறோம்!
ஸ்²யாமலாம்ʼ ஸரலாம்ʼ
ஸுஸ்மிதாம்ʼ பூ⁴ஷிதாம்ʼ
த⁴ரணீம்ʼ ப⁴ரணீம்ʼ மாதரம் || 5 ||
வந்தே³ மாதரம் ||
கருமை அழகியே
எளிமை இலங்கும் ஏந்திழையே
புன்முறுவல் பூத்தவளே
பொன் அணிகள் பூண்டவளே
பெற்று வளர்த்தவளே
பெருமைகள் அனைத்தும் அளித்தவளே
தாயே வணங்குகிறோம்!
பாடிக் கொண்டிருக்கும் போதே கண்களில் கண்ணீர். மகேந்திரன் வியப்புடன், “யார் ஐயா நீங்கள் எல்லாரும்…” என்றான்.
“நாங்கள் குழந்தைகள்!”
“குழந்தைகளா… அப்படி என்றால்..? யாருடைய குழந்தைகள்?”
“பாரதத் தாயின் குழந்தைகள்”
“திருட்டும் கொள்ளையும் அடிப்பவர்களா குழந்தைகள்? இதனால் அந்த தாய்க்கு என்ன பெருமை? இது என்னவகை தாய்ப்பாசம்?”
“நாங்கள் திருடவும் இல்லை, கொள்ளை அடிக்கவும் இல்லை’
“இப்போதுதானே பார்த்தேன், அரசரின் வரி வசூலை கொள்ளை அடிப்பதை..”
“அரசருக்கு இதில் என்ன உரிமை இருக்கிறது? மக்களை ஆதரிக்காத மன்னன் ஒரு மன்னனே அல்ல.”
“அதற்காக வன்முறையை கையில் எடுப்பதா…”
“ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வழிமுறை. தரையில் புழு போல சுருளும் பாம்பை மிதித்துப் பார்… தன் தலையை நிமிர்த்தி படமெடுத்து ஆடும்.
நடப்பு நிகழ்ச்சிகளால் உனக்கு சற்றும் உணர்ச்சி எழவில்லையா… நமது வாழ்க்கை முறையை தொலைத்தோம். கலாசாரத்தை இழந்தோம்… நமக்கு
இன்னும் ஏதும் அடையாளம் மிச்சம் இருக்கிறதா?”
“எதிர்க்க நமக்கு சக்தி எது?”
மறுபடி பாடினார்…
அம்மா ! ‘அபலா’ * என்று உன்னை அழைப்பவர் எவர் ?
பேராற்றல் பெற்றவள்
பேறு தருபவள்
பகைவர் படைகளைப் பொசுக்கி அழிப்பவள்
எங்கள் தாய்
தாயே வணங்குகிறோம்!
குறிப்புகள்
- மேலே பக்கிம் சந்திரரின் ‘ஆனந்த மடம்’ நாவலில் சில அத்தியாயங்கள் சேர்த்து தமிழில் கொடுக்கப் பட்டுள்ளது.
- தமிழில் புதுக்கவிதை வடிவ மொழிபெயர்ப்பு “பண்பாட்டைப் பேசுதல்” – திரு.ஜடாயு அவர்கள்
- தேவநாகரியில் வந்தே மாதரம்:
वन्दे मातरम्
सुजलां सुफलां मलयजशीतलाम्
शस्यशामलां मातरम् ।
शुभ्रज्योत्स्नापुलकितयामिनीं
फुल्लकुसुमितद्रुमदलशोभिनीं
सुहासिनीं सुमधुर भाषिणीं
सुखदां वरदां मातरम् ।। १ ।। वन्दे मातरम् ।कोटि-कोटि-कण्ठ-कल-कल-निनाद-कराले
कोटि-कोटि-भुजैर्धृत-खरकरवाले,
अबला केन मा एत बले ।
बहुबलधारिणीं नमामि तारिणीं
रिपुदलवारिणीं मातरम् ।। २ ।। वन्दे मातरम् ।तुमि विद्या, तुमि धर्म
तुमि हृदि, तुमि मर्म
त्वं हि प्राणा: शरीरे
बाहुते तुमि मा शक्ति,
हृदये तुमि मा भक्ति,
तोमारई प्रतिमा गडि
मन्दिरे-मन्दिरे मातरम् ।। ३ ।। वन्दे मातरम् ।त्वं हि दुर्गा दशप्रहरणधारिणी
कमला कमलदलविहारिणी
वाणी विद्यादायिनी, नमामि त्वाम्
नमामि कमलां अमलां अतुलां
सुजलां सुफलां मातरम् ।। ४ ।। वन्दे मातरम् ।श्यामलां सरलां सुस्मितां भूषितां
धरणीं भरणीं मातरम् ।। ५ ।। वन्दे मातरम् ।। - பாரதியாரின் இரு வேறு விதங்களில் ‘வந்தே மாதரம்’ பாடலை மொழிபெயர்த்துள்ளார்.
முதல் வடிவம்:
1.
இனிய நீர்ப் பெருக்கினை!இன்கனி வளத்தினை!
தனிநறு மலயத் தண்காற் சிறப்பினை!
பைந்நிறப் பழனம் பரவிய வடிவினை! (வந்தே)
2.
வெண்ணிலாக் கதிர்மகிழ் விரித்திடும் இரவினை!
மலர் மணிப் பூத்திகழ் மரன்பல செறிந்தனை!
குறுநகை யின்சொலார் குலவிய மாண்பினை!
நல்வகை இன்பம், வரம்பல நல்குவை! (வந்தே)
3.
முப்பது கோடிவாய் நின்னிசை முழங்கவும்
அறுபது கோடிதோ ளுயர்ந்துனக் காற்றவும்
திறனிலாள் என் றுனை யாவனே செப்புவன்?
அருந்திற லுடையாய்!அருளினை போற்றி?
பொருந்தலர் படைபுறத் தொழித்திடும் பொற்பினை! (வந்தே)
4.
நீயே வித்தை, நீயே தருமம்!
நீயே இதயம், நீயே மருமம்!
உடலகத் திருக்கும் உயிருமன் நீயே! (வந்தே)
5.
தடந்தோ ளகலாச் சக்திநீ அம்மே!
சித்தம்நீங் காதுறு பக்தியும் நீயே!
ஆலயந் தோறும் அணிபெற விளங்கும்
தெய்விக வடிவமும் தேவிஇங் குனதே! (வந்தே)
6.
ஒருபது படைகொளும் உமையவள் நீயே!
கமலமெல் லிதழ்களிற் களித்திடுங் கமலை நீ!
வித்தைநன் கருளும் வெண்மலர்த் தேவி நீ! (வந்தே)
7.
போற்றி வான்செல்வீ! புரையிலை, நிகரிலை!
இனிய நீர்ப் பெருக்கினை, இன்கனி வளத்தினை!
சாமள நிறத்தினை, சரளமாந் தகையினை!
இனியபுன் முறுவலாய்! இலங்குநல் லணியினை!
தரித்தெமைக் காப்பாய், தாயே! போற்றி! (வந்தே) - மற்றொரு வடிவம்:
1.
நளிர்மணி நீரும், நயம்படு கனிகளும்
குளிர்பூந் தென்றலும் கொழும்பொழிற் பசுமையும்
வாய்ந்துநன் கிலகுவை வாழிய அன்னை! (வந்தே)
2.
தெண்ணில வதனிற் சிலிர்த்திடும் இரவும்
தண்ணியல் விரிமலர் தாங்கிய தருக்களம்
புன்னகை ஒளியும் தேமொழிப் பொலிவும்
வாய்ந்தனை, இன்பமும் வரங்களும் நல்குவை, (வந்தே)
3.
கோடி கோடி குரல்கள் ஒலிக்கவும்
கோடி கோடி புயத்துணை கொற்றமார்
நீடு பல்படை தாங்கிமுன் நிற்கவும்
கூடு திண்மை குறைந்தனை’என்பதென்?
ஆற்றலின் மிகுந்தனை,அரும்பதங் கூட்டுவை
மாற்றலர் கொணர்ந்த வன்படை யோட்டுவை (வந்தே)
4.
அறிவுநீ,தருமம்நீ, உள்ளம்நீ, அதனிடை
மருமம்நீ,உடற்கண் வாழ்ந்திடும் உயிர்நீ;
தோளிடை வன்புநீ நெஞ்சகத்து அன்புநீ
ஆலயந் தோறும் அணிபெற விளங்கும்
தெய்வச் சிலையெலாம்,தேவி,இங்குனதே. (வந்தே)
5.
பத்துப் படைகொளும் பார்வதி தேவியும்
கமலத் திகழ்களிற் களித்திடும் கமலையும்
அறிவினை யருளும் வாணியும் அன்னை நீ! (வந்தே)
6.
திருநி றைந்தனை, தன்னிக ரொன்றிலை!
தீது தீர்ந்தனை, நீர்வளஞ் சார்ந்தனை;
மருவு செய்களின் நற்பயன் மல்குவை,
வளனின் வந்ததோர் பைந்நிறம் வாய்ந்தனை
பெருகு மின்ப முடையை குறுநகை
பெற்றொ ளிர்ந்தனை, பல்பணி பூண்டனை;
இருநி லத்துவந் தெம்முயிர் தாங்குவை,
எங்கள் தாய்நின் பதங்கள் இறைஞ்சுவாம்! (வந்தே)
அருமை!
மீண்டும் வந்தே பாரத மாதரம் என்று உண்மையான தேச பக்தர்கள் பாடும் காலம் தான் இப்போது. நன்றி.
Excellent! Jai Hind.
தங்களிடம் ஸ்ரீ சிருங்கேரி ஸ்ரீஸ்ரீ ஸ்வாமிகள் அருளிய விருஷ்டி ஷட்கம் ஸ்லோகத்தின் தமிழாக்கமான “செல்வத் திறவு கோல்” எனும் நூலும்,மழைமாலை எனும் நூலும் கிடைக்குமா? தங்களிடம் இல்லை எனில், எங்கு தொடர்பு கொண்டால் எனக்கு அந்த நூல்கள் கிடைக்கும் எனத்தெரிவித்தால், நான் வாங்கிக் கொள்கிறேன். எனக்கு சரியான தொடர்பு முகவரியையும் பெயர்,தொலைபேசி எணணையும் கொடுத்து உதவ முடியுமா?
நன்றியுடன் ஆவலுடன் தங்கள் மின்-அஞ்சலுக்குக் காத்துள்ளேன்.
அன்புடன்: எல்.கே.மதி,
நவம்பர் 01, 2012.
எத்தனை பேருக்கு தெரியும் இந்த கவிதை இன்றைக்கு இளய தலை முறைக்கு இந்த பாடல் த்தான் வீடுதலைக்கு முன் நமக்கு வீரம் கொடுத்த பாடல் என்றது
வந்தேமாதரம் மட்டுமே நமது உண்மையான தேசிய கீதம் ஆகும். இதன் பொருள் அனைவரும் உணரும் வண்ணம் வெளியிட்டமைக்கு எங்களது மனங்கனிந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.